வித்தும் வேரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 3,054 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரமணியின் நிர்த்தூளி நாலு நாளாய்த் தாங்க முடிய வில்லை. ஏற்கெனவே துருதுரு. அதுவும் நாலு நாளாய் வீடு த்வம்ஸம். சுவாமி விளையாட்டாம். எதிர் , அண்டைவீட்டு வாண்டுகளை ஜமா சேர்த்துக்கொண்டு ஜாலரா கொட்டுவ தும் எட்டுக் குரலில் பஜனை பண்ணுவதும், மரப்பாச்சியைச் சப்பரம் கட்டித் தூக்குவதும், அவன் அத்தை என் வேட்டி யைப் பட்டை தீட்டி. ஆசையாய் அவனுக்குப் பஞ்சக்கச்சம் வைத்துக் கட்டி, விபூதியைக் கட்டுக் கட்டாய் இட்டு, அவன் உத்ஸவரின் அர்ச்சகனாய், வீட்டுக்கு வீடு தன் படை யைப் பல்லக்குடன் நிறுத்தி, கற்பூரத்தைக் கட்டாயமாய் வாங்கிக் கொளுத்தி. தன்னைக் கொளுத்திக்காமல் இருக் கணுமேன்னு அவன் பாட்டி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு கத்தி (இரு பாட்டி! போ, பாட்டி!!) மாலை நான் வந்ததும் என்னிடம் கேஸ் ( இன்னிக்கு உன் பிள்ளை என்ன பண்ணினான்னு கேள், அவனையே கேள்! இவன் காலை முறிச்சிப் போட்டால் தான் கழுத்து மிஞ்சும். அலாதி யாய் உனக்குன்னு வீடு அகப்பட்டு, எங்களைக் கொண்டு வந்து வெச்சிருக்கையே இந்த அத்வானத்திலே! ஒரு கருவேப்பலைக் கொத்துக்கு சைக்கிளைப் போட்டுண்டு ஓட வேண்டியிருக்கு. ஆனால் லாரியும் மோட்டாரும் நிமிஷத் துக் கொண்ணா திக்குத் திக்கு – என் வயிறு திக்திக் – பறக்கற துலே குறைச்சலில்லே. ஏண்டா உனக்கெங்கேடா இப்படி நின்னவிடத்தில் நிக்காமல் தேளாய் பிறந்தது?” ‘உனக்’ கை அழுத்தி அதில் எனக்கு ஒரு ஷொட்டு,] நான் காரணம்.

வாங்கிக்கொள்ளாமலே என் ஆத்திரங்களை எத்தனை எத் தனையோ அத்தனைக்கும் வடிகாலாய் அவனை மொத்தி, அவன் வலிமீறிய ரோசத்தில் வீடு கிடுகிடுக்கப் பாட்டு வைத்து. அடுத்த நிமிடமே, கன்னத்தில் கண்ணீர் கறை காயுமுன்னரே. அலமாரியில் தொத்தி ஏறி. மேல் தட்டில் பம்பரம் தேடி , என் ப்ளாஸ்கை’ இடறி ப்ளாஸ்கு’ டூமீல் –

“ஏண்டா பாவி ஏற்கெனவே ஆறாம் வயசு மிலாறாய்ப் போயாச்சு. அத்தோடு வரவா போறவா எல்லார் வாயிலும் புகுந்து புறப்பட்டு தேஞ்சு மாஞ்சு சாகறே? என் வயிறு கொதிக்கறதே சண்டாளா!”

“ஏன் நீ மாத்திரம் அடிக்கல்லியோ ! இப்பக்கூட சாப்பிடறப்போ தண்ணியைக் கொட்டினேன்னு முதுகிலே வெச்சயே!

“பாவி! அவள் இடது கை வாகை குழந்தை முதுகிலும் காட்டினாளா? இங்கே வாடி என் செல்வமே – ஐயோ அஞ்சு விரல் கிண்டும் அறுத்துத்தான் எடுக்கணும் போல் எழும்பிப் போச்சே! நானும் என் பிள்ளையும் உன் அம்மாவுக்கு வரவா போற வாடா!”

“இல்லே பாட்டி நீ எங்க பாட்டி! அப்பா எங்கப்பா!!”

“சொல்லு சொல்லு இன்னொரு தடவை, என் வயிறு குளிரச் சொல்லு! என்னதான் தயிராத் திரிச்சாலும் பேசறது இன்னி ரத்தமா நேற்றைய ரத்தமா? தலைமுறை ரத்தம்னா பேசறது?”

கழுத்தைக் கட்டிக்கொண்டு, சிறிதும் வெட்கமற்று கன்னங்களில் மாறி மாறி முத்தமிடுகையில், நெஞ்சில் மூச்சு பந்து பந்தாய் அடைக்கிறது.

“ஏண்டா, இப்போதானே என் கிட்ட அடி தின்னே, ஏன் என்னைக் கட்டிக்கறே?”

“அடே போப்பா நீ – அது அத்தோடு போச்சு.”

“நீ ஏன் என்மேல் பிரியமாயிருக்கே?”

“எனக்கே தெரியல்லியே, ஆசையா வரதேப்பா!”

என்னை மீறி எழும் கேவலின் குமுறலில், என் உடல் அதிர்கையில், என் காலடியில் என் பூமி கிடுகிடுக்கிறது.

இப்போது மாடி அறையிலிருந்து நான் கவனிக்கையில் கீழே, எதிர் சாரி வீடுகளின் சுவரோரமாய், குனி முகத்தில், தன் யோசனையில் தன்னையிழந்து தத்தித் தத்தி அவன் ஓடி வருகையில் (அல்ல போகையிலா?) அந்தச் சிறு கூடான உடம்பு, மேயும் கீரிப் பிள்ளையை நினைவூட்டுகிறது.

அவனே தன்னுள் ஏதோ பாவனையில் தானிருக்கிறான்.

பின்னால் பெருமூச்சுக் கேட்டுத் திரும்புகிறேன். கையைப் பிசைந்து கொண்டு ஸைந்தவி நிற்கிறாள்.

ஸைந்தவி என்று ராகத்தின் பேராமே? யாருக்குத் தெரியும்? யார் கேட்கிறார்கள்? யார் பாடு கிறார்கள்?

பாடினால் தானே கேட்க முடியும்?

ஸைந்தவிக்கே தெரியாது.

ஸைந்தவி, ஸைந்தவி பாடுவது இருக்கட்டும். லைந்த விக்குப் பாட்டே சுட்டுப் போட்டாலும் வராது.

இத்தனைக்கும் அவள் தகப்பனார் பாட்டு வாத்தியார். அவர் பெண்கள் அத்தனை பேருக்கும் ராகங்களின் பெயர் தான்.

“இந்தப் பேர் என்று ஒன்று இருக்கிறதேப்பா அது பொல்லாத போலியப்பா!”

அம்மாவின் உடுக்கடி பாஷை ஒரு சமயம் சிரிப்பு வந்தா லும் ஒரு சமயம் ‘சுருக்’.

ஸைந்தவி கண்களினின்று புலுபுலுவென உதிர்வன அத்தனையும் முத்தானால், அதுவும் அவள் தொட்டால் சிணுங்கியாயிருப்பதற்கு, இந்த வீட்டில் புகுந்ததிலிருந்து இதுவரை அவள் அழுதிருக்கும் அழுகைகளுக்கு நான் எவ் வளவோ பணக்காரனாயிருப்பேன். எங்கள் வீட்டுக் கொல்லைக் கதவிற்குத் தங்கத் தாழ்ப்பாளே பிணைத்திருப் போம், வாடகை வீடானாலும். ஸைந்தவிக்குச் சிரிக்கவே இடம் கொடுத்திருக்க மாட்டோம்.

[“இங்கே நான் சிரிக்கறேனா? சிரிப்பான்னா சிரிக்கறேன்!’]

இதோ இப்பவே அவள் விழிகள் அழத் தயாராயிருக் கின்றன. விழிமேட்டில் செந்நரம்புக் கொடிகளின் முறுக் கோட்டம் என் கழுத்தைப் பின்னி லேசாய் மூச்சுக் குழாயை யிறுத்துகிறது.

என் விழிகளின் வினாவிற்குப் பதிலான மறுப்பில் தலையை ஆட்டுகிறாள். கீழுதடு பிதுங்குகிறது.

அவளைப் பிரிந்த பெருமூச்சு என்னைத் தொத்திக் கொள்கிறது. ஆனால் என்னிலும் தங்க இடமிலாது என்னின்று எழுகையில், அதன் எரிபாதையில் என் எண்ணங் கள், ஆசைகள், எதிர்காலத் திட்டங்கள் யாவும் கருகுவதை உணர்கிறேன்.

“என்ன சிரிக்கிறேள்?” அவள் புருவங்கள் நெரிகின்றன. “சிரித்தேனா என்ன?” எனக்கே தெரியவில்லை, ஆனால் ஸைந்தவி, உன் கோபம் உனக்கு நகை போட்டாற் போலிருக்கிறது.”

“வேறென்ன நகை போடுவேள் நீங்கள்!” இப்போது எனக்குத் தெரிந்தே எனக்குச் சிரிப்பு வருகிறது.

“உங்களுக்கு எல்லாம் சிரிப்புத்தான். உங்களுக்கென்ன ?”

ஆமாம் எனக்கென்ன? ஒரு குறைச்சலுமில்லை. ஆபீஸில் என்னவோ அள்ளித்தான் கொடுக்கிறான். ஆனால் விரலிடுக்கில் அத்தனையும் எப்படி வழிந்து போகிறது?

வாங்குகையிலேயே எத்தனையோ பிடிப்புகள்.

வரும் வழியிலேயே அதற்குமேல் பட்டுவாடா.

அத்தோடு, தங்கை கலியாணத்துக்கு வாங்கின கடனுக்கு வட்டியைச் செலுத்திவிட்டு – கடனடையு முன்னரே தங்கை வீடு திரும்பியாச்சு – மிச்சத்தை அம்மா விடம் கொண்டு போய்க் கொடுத்தால், “நீயே வெச்சுண்டு இந்த மாசம் நடத்து, எனக்கென்னடா, ஒரு வேளை சோறு. கிருத்திகையும் ஏகாதசியும் வந்தால் அதுவும் போச்சு!” எள்கிறாள்.

ஜயராமின் படிப்பு, முக்கியமாய் கணக்கு — எப்பவும் அவசர சிகிச்சையிலேயே நிற்கிறது. டியூஷன் வாத்தியார் சொல்கிறார் : ‘ நான் வெளிச்சமாகவே சொல்கிறேன். இந்த வருஷம் கேள்வித்தாளைக் குறிக்கும் சான்ஸ் எனக்கு வந்தால் உங்கள் பையனுக்கு மாத்திரம் ‘அவுட்’ பண்ணி விடுகிறேன். ஆனால் அப்படியாவது அவன் எழுதுவானோ? எனக்கே கேள்வியாயிருக்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்?”

இந்து (ஓ Sorry, மிஸ் இந்துமதி) கான்வெண்டில் படிக் கிறாள். வகுப்பு என்னவோ சின்னது தான். ஆனால், மாதம் ஒரு உடை, உடைக்கேற்றபடி செருப்பு மாறிக் கொண்டேயிருக்கிறது. பள்ளிவிட்டு ‘டக்டக்’ கென்று மாடியேறி வரும் சப்தம் கேட்கப் பெருமையாத்தானிருக்கிறது.

ஆனால் கட்டுபடிதான் ஆகவில்லை. ரமணி ஒரு நோஞ்சான்.

போன வருடம் சங்கராந்தியன்று இஸபெல்லா ஆஸ்பத் திரியில் மூக்கில் குழாயுடன் படுத்திருக்கிறான். ஸிஸ்டர் தெரிஸ்ஸா, கரண்டியில் மருந்தைக் கரைத்துக் குழந்தைக்கு ஊட்டுகிறாள்.

“My darling!”

அவள் விழிகள் வழிகின்றன. தலையிலிருந்து கால்வரை மூடித் தரை புரளும் அவ்வெண் ஆடையினின்று அவளுடைய தெனத் தெரிவன அவள் முகமும் கைகளும் தான். பீங்கான் பொம்மை போன்ற அக் கன்னங்களின் வழுவழுப்பைத் தொட்டுப் பார்த்தால் எப்படியிருக்கும்?

எங்கள் மேல் நிமிர்ந்த முகம் கடுகடுக்கின்றது.

“படித்த மனுசனாம்! படித்த மனுசன்!!”

தமிழில் தான் சொல்கிறாள்.

நான் என்ன கண்டேன்? சித்தரத்தையிலும் அதிமதுரத் திலும், அம்மாவின் கைராசியிலும் சளி கரைந்து விடாதா என்று தான் நினைத்தேன். ஏழைக்கபம், எங்கள் கபம் எல்லாம் அப்படித்தானே கரைந்தது? ஸைந்தவியின் கழுத்துச் சங்கிலியை வாங்கிக் கொண்டு அத்தோடுதான் கரையும் என்றா கண்டோம்?

அதற்கு முந்திய வருடக் கணக்குக் கக்குவான். ‘புக் புக்’ என்று புகைந்த மூச்சு தொப்புள் வரை யிறங்கி, இன்னும் தாழ என்று உண்டானால் அங்கும் ‘லொக்கு லொக்கிக் கொண்டே முழங்குகையில் , அத்துடன் நானும் என் நெஞ்சின் பாதாளத்தின் இருள் கிடங்குகளில் மூழ்குகிறேன். என் மேல் இருள் அலைகள் இடிந்து சரி கின்றன. ஆனால் இன்னமும் அதன் தரை தட்டாது சுழன்று கொண்டே செல்லும் குழந்தையின் மூச்சில் தொத்திக் கொண்டு, அந்தரத்தில், மையிருளில் தொங்குகிறேன். நூல் அறுந்தால் நான் கோவிந்தா’. ஆனால் நூல் அறவில்லை. தனி சீற்றத்துடன், தாங்காமல் சேத்துப்பட்டைத் தாண்டிச் செல்லும் புகைவண்டியின் ஊதல் போல், பூமியின் அடி வயிற்றினின்று, அதன் வேர்களைப் பிடுங்கிக்கொண்டு மேனோக்கி, என் நெஞ்சை ஆணியால் கிழித்துக் கொண்டே எழும்பிவரும் மூச்சின் க்றீச்சைத் தாங்கமுடியாமல் செவி களைப் பொத்திக் கொள்கிறேன். சதையின் கீழ் வெடித்து விடும் போல் உப்பும் குழந்தை முகத்தைக் காணச் சகிக்காது, என் கண்கள் தாமே மூடிக்கொள்கின்றன.

கண்ணைத் திறந்தால் டாக்டரின் பையன் கிங்கரன். எதிரே நிற்கிறான். (அவன் பெயர் சங்கரன்.)

டாக்டரின் பையன் – அவனே தான் அவருடைய பையன்.

க்ளீனர்;
தோட்டக்காரன்;
கம்பவுண்டர்;
பில் கலெக்டர்.
டாக்டர் நல்லவர்.
பையன் பொல்லாதவன்.

அதனால் தான் டாக்டர் பையனை அனுப்புகிறார்.

பாக்கியைக் கேட்பவன் பொல்லாதவனானால், டாக்ட ரின் பையன் ரொம்ப ரொம்பப் பொல்லாதவன். –

ஏனெனில் நான் ரொம்ப ரொம்ப ரொம்பப் பாக்கி! ரமணியைப் பெற்ற பாக்கியை அவர் பையன் மூலம் கேட்டுக் கேட்டு விட்டொழித்தாரே ஒழிய, நான் கொடுத்து ஒழிக்கவில்லை.

ரமணியைப் பெற்றபோது ஸைந்தவி புதுப் பிறப்பாய்த் தான் மீண்டாள். சமயத்தில் ஏதேதோ கோளாறு.

ஆஸ்பத்திரியில் மறுநாள் தான் என்னைப் பார்க்கவிட் டார்கள். குஹை விழுந்து சப்பிப்போன அவ்வுடலையும், மூடிய இமைகளின் மேல் பஞ்சு படர்ந்திருந்த லோக அசதி யையும் பார்க்கப் பகீரென்றது.

“ஸைந்தவீ!” (என் குரல் தானா?) இளைத்து. சீவனற்று. போர்வைக்கு வெளியே கிடந்த கைமேல் என் கையைப் பொத்தினேன்.

கண் திறக்கவில்லை. இரு கண்ணீர்த்துளிகள் விழி யோரங்களில் நடுங்கின.

“ஸைந்தவீ. என்னை மன்னித்துவிடு!”

வெளுத்த உதடுகள் லேசாய் நடுங்கி, பிறகு புன்னகை யில் இளகிச் சிவப்பு கட்டின, காய்மீது படரும் தளிரொளி போல், கண்ணைத் திறவாமலே , கால்மாட்டில் கட்டிலோடு கட்டிய தொட்டிலைச் சுட்டிக் காட்டினாள்.

அப்போது குழந்தையை நான் பார்க்கவில்லை. அது பிறந்தது என் தவறு. உறங்கட்டும். என் தவறைத் தட்டி யெழுப்ப வேண்டாம்.

ரமணி எங்கள் தவறு என இருவரும் ஒரு மனதாய் நிச்ச யித்தோம்; ஒரு மனதாய் நேர்ந்தவனை.

ஆனால் அப்படி நாங்கள் நினைத்தது தவறு என்று எங்களுக்கு உறுத்துவது போன்று, பரம்பரையின் வாக்காய் அவ்வப்போது அவனின்று வெளிப்படும் பேச்சாலும் செய்கை யாலும் எங்கள் இருண்ட நேரங்களைத் திடீர் திடீரென ஒளிமயமாக்குகிறான்.

“அப்பா! அப்பா!” இதோ மேலே ஓடி வருகிறான்.

அவனுக்கு மூச்சு இறைக்கிறது. எங்களை மாறி மாறிப் பார்க்கிறான். மூக்கு நுனியில் திட்டாய் அழுக்கு.

“அப்பா! இன்னிக்கு ஒரு புது ‘ப்ரண்டு’ புடிச்சிருக்கேன்!”

“உனக்கென்னப்பா குறைச்சல்?”

“புது ‘ப்ரண்டு’ன்னால் புது வால் அவன் அம்மை முகம் சுளிக்கிறாள். ‘குப்பையும் கோஷ்டமும் இன்னும் ஒரு பங்கு கூட!”

“இந்த வால் என் வால் இல்லேம்மா! நிஜ வால்!”

“உன்னதெல்லாம் பின்னே என்ன பொய் வாலா?”

“இல்லேம்மா இது அப்பாவின் தர்மா ப்ளாக்கின் ‘ப்ரஷ்’ மாதிரி.

“என்னடா உளர்றே?”

“அணில்ப்பா அணில்!”

“காதண்டை வந்து கத்தாதே நான் செவிடில்லை.”

“சொல்றது புரியாட்டா, புரிஞ்சுக்கற வரைக்கும் புரிஞ்சுக்காதவாள் கூட செவிடுதான்”

இதற்குப் பதில் என்னிடம் இல்லை .

இதற்குப் பதில் உண்டோ ?

அவன் விழிகள் பளீரிடுகின்றன.

“நீ கூட கதை சொன்னையே, ராமர் தடவிக் கொடுத் தார்னு அதே அணில்ப்பா . முதுகிலே நாமம் பளிச்சினு ! இன்னும் கொஞ்ச நாளில் என்னைத் தொடவிடும். இப்பவே ரொம்பக் கிட்ட வரது. வேர்க்கடலையை என் கையிலிருந்து வாங்கிண்டி தப்பா! நிஜம்மா! சத்தியமா!”

“சீ-!”

“சரி இனிமேல்லேப்பா! பின்னே நீ நம்பமாட்டேன் கிறியே? ஒரு நாளைக்குப் பாரு , என் நிஜார்ப் பையிலேயே போட்டுண்டு வரேன். அப்பத்தான் நம்புவே. என் தட்டி லிருந்தே சாதம் எடுத்துக் கொடுப்பேன், தின்கறதா இல்லையா பாரு!”

“சீ! கண்றாவி அதையெல்லாம் வீட்டுக்குள்ளே கொண்டு வந்தையோ கொலை பண்ணிடுவேன் ஜாக்கிரதை!”

“சே இதென்னப்பா அம்மா இப்படி அசிங்கப்படறா? ராமரே தடவிக் கொடுத்தாரே. நம்ம தொடக்கூடாதா? அப்பா , அணிலுக்குள்ளே ராமர் இருக்காரோன்னா?”

“….. “

“ஏம்பா முழிக்கறே? ராமர் கதைக்கு முன்னால் ப்ரகலாதன் கதை சொன்னையே, சாமி தூணிலும் இருக் கார் துரும்பிலும் இருக்கார்னு . ப்ரஹ்லாதன் சாமியும் விஷ்ணு, ராமரும் விஷ்ணுதானே! அப்போ ராமர்கிட்ட விஷ்ணு இருந்தால் , அணிலில் ராமர் இருக்கமாட்டாரா? இல்லாட்டா அந்த விஷ்ணு நாமம் எப்படி அதன் முதுகில் அப்படி விழும். அப்புறம் பிட்டுக்கு சாமி மண் சுமந்தப்போ அவர்மேல்பட்ட அடி, உலகத்தின் முதுகிலேயே விழுந்த துன்னையே? அப்புறம் அரியும் சிவனும் ஒண்ணு அறியா தவர் வாயிலே மண்ணுன்னே! எல்லாம் நீயே சொல்லிட்டு நீயே முழிக்கறையேப்பா!”

நல்லவேளை என் பதிலுக்கு அவன் காத்திருக்கவில்லை. “நான் போறேம்பா, என் ப்ரண்டைப் பார்க்கணும்னு ஆசை வந்துடுத்து!!”

கூவிக்கொண்டே கீழே ஓடிப்போய் விட்டான்.

ஸைந்தவி, தான் வாய்விட்டுக் கேளாத கேள்விக்கு, என் னிடம் இல்லாத பதிலுக்குக் காத்திருக்கிறாள். அவள் கண்கள் குற்றம் சிந்துகின்றன. கண்கள் கேட்கின்றன.

ஜாக்கிரதை, ஜாக்கிரதை என்றீர்களே, அன்னிக்கு மன்னிச்சுக்கோ என்றீர்களே, உங்கள் ஜாக்கிரதையும் கேட்ட மன்னிப்பும் என்னவாச்சு? நீங்கள் மன்னிப்பு கேட்டு நான் மன்னித்து விட்டதோடு தீர்ந்து போச்சா?

ஸைந்தவீ , மன்னிப்பு என்பது ஒரு புழுகு ; மறதியை வளர்க்க மனம் கண்ட மார்க்கம். சுரணையை ஒடுக்கி, ஒரு வேதனையிலிருந்து இன்னொரு வேதனைக்கு நழுவி உழலும் வழி”-

என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் நாவில் எழுவது?

“ஸைந்தவி என்னை மன்னித்து விடு!”

ஆனால் அதையும் நான் சொல்லவில்லை. விழுங்கி விடுகிறேன். சொல்லி ஆவது என்ன? பொய்யைத்தான் மறுபடியும் நிறுவுகிறேன், என் வித்தை மறுக்கிறேன்.

ஸைந்த வீ, உனக்குப் பதில் என்னிடம் இல்லை என்னை கையும் களவுமாய்ப் பிடிபட்ட குற்றவாளியாக்கப் பார்க்கிறாய். நான் குற்றவாளியில்லை. ஆனால் மன்னிப்புக் கேட்கிறேன், நான் குற்றவாளியில்லையென்று உன்னிடம் நேருக்கு நேர் சொல்வதால், சொல்வது சமாதானமாகி விடுகிறது. என்னிடம் சமாதானம் இல்லை. சொன்னால் சமாதானம், சொல்லாமல் உள்ளுக்கே இருந்தால் உண்மை. உண்மையின் தன்மைக்கு நான் என்ன செய்ய?

ஆனால், வெளியிட முடியாவிட்டாலும், மனதிலாயி னும் உனக்கு நாவில் வராத பாஷையில் நான் தெரிவித்தாகனும்.

நான் குற்றவாளியில்லை.
நான் களவாடவில்லை.
நான் களவு போனேன்.

அன்று மாலை, ஆபீஸிலிருந்து வந்ததும் நேரே மாடி யேறி கட்டிலில் வீழ்ந்தபோது, நான் வேலையால் மாத் திரம் களைத்திருக்கவில்லை; துரையிடம் சொல்லடிப்பட்டு சோர்ந்திருந்தேன்.

அப்போது, என்னைத் தேடி நீ வருகையில், படிக்குப் படி கேட்ட மெட்டியில், நான் உணர்ந்தது. என் மனதின் நோவிற்கு மனதின் மேல் ஒலியின் ஒத்தடம்.

குறிப்பிட்ட வேளையில், அலை முகட்டிற்கு வந்து, வாய் திறந்து மழைத் துளிக்குக் காத்திருக்கும் சிப்பிகள் அதே போல் இன்னொரு வேளையில் ஒன்றன் பின் ஒன்றாய் தாமே தம் வயிறு திறந்து கொண்டாற் போல், ஓசை பங்கு பிரிந்து, ஒவ்வொரு ஸ்வரமும் தன்னிடத்தில் தான் மலர்ந்தாற்போல் –

“ணக் ணக் ணக்.”

என் நெஞ்சில் தெறித்தது வேளையின் முத்து.

என் மேல் கமழ்ந்தது வேளையின் மலர்ச்சி.

இது என் பாஷையில்லை. எனக்கே தெரிகின்றது. ஆனால் கவிதையே வேளை தன் முழுமை கண்டதன் விளைவு தானே!

வந்து என் நெற்றிமேல் கைவைத்தாய்.

மாலையின் மங்கலில், தோரணம் தோரணமாய் இறங் கும் இரவின் நிழலில், கண் திறந்ததும் தெரிந்தது உன் நெற்றி மையத்தினின்று சரிந்த இருள் வீழ்ச்சிகள், சட்ட மிட்ட முகத்தில் ஏற்றிவைத்த சிமிழ் விளக்குகள் . உன் விழி களின் ஒளியில், உன் நெற்றியில், உன் வெற்றியின் வர்ணக் கொடி போல், ஒன்றன் கீழ் ஒன்றாய், தகடு தகடாய்.

குங்குமம்
விபூதி
மை

என் முகத்தில் உன் மூச்சு.

“மை நன்னாயிருக்கா? ஒத்தருக்கும் தெரியாமல் புதுசா வெச்சேன்”.

(அப்போ கள்ளி நீயா நானா?)

தந்திகளின் தன் மீட்டல் போலும் உன் வார்த்தைகள் இருளில் எங்கிருந்தோ மிதந்து வந்தன.

உன் குங்குமத்தின் சிவப்பில் தழலானேன்.

உதிரி விபூதியின் வெண்மையில் நீறானேன்.

உன் மை வைத்த இருளுடன் இரவின் கலவையில் இரு வரும் நம்மையிழந்தோம். வேளையின் புன்னகையில், சமயத்தின் சிறப்பிற்கு இருவரும் சரணமானோம்.

இத்தனையும் உன்னிடம் சொல்லப் போனால் உனக்கு எவ்வளவு புரியும்? எனக்கேதான் எவ்வளவு புரியும்? நாமே புரியவா இருக்கிறோம்? புரிந்துவிட்டால் பிறகு சொல்லவே தான் என்ன இருக்கிறது? சொன்னால், சொல்லின் சிதைவு பட்டு, உண்மை பொய்யாகி விடுகிறது. ஆகையால், புரிந்த துடன் புரியாததையும் ஏற்றுக்கொண்டு, அத்தனையும் உள் ளேயே வைத்துக்கொண்டு எல்லோரிடமும் இடிபட்டுக் –

திடீரென ப்ரேக்குகளின் க்றீச்’ முரட்டுத்தனமாய் என் சிந்தனையினின்று என்னை உலுப்பிற்று. தெருவில் ஒரே ஆரவாரம்.

“D—n”யார் பையன் இது?”

எங்கள் இருவருக்கும் ஒரே சமயத்தில் எழுந்த ஒரே எண்ணம் பொரிந்த ஒரே அலறலாய் இருவரும் ஒரு வாயில்:

“ரமணீ”

எனக்கு உடல் வெலவெலத்துவிட்டது. நாற்காலியி லிருந்து நான் எழ எழத் திரும்பத் திரும்பக் கீழே தள்ளிற்று, கண்கள் இருண்டுவிட்டன.

மாடிப்படியில் திடுதிடு.

“அப்பா ! அப்பா !”

என் மடியில் பொத்தென்று ஏதோ விழுந்தது. பிறகு தான் உடலில் சுரணை மீண்டது. இன்னும் முற்றிலும் தெளியாத பார்வையில், என் கைகள் அவன் உடலில் இடமெல்லாம் தொட்டுத் தேடித் தவித்தன.

“அப்பா !”

மாரே வெடித்து விடும் போல் குழந்தை விக்கி அழுகிறான்.

“ஐயோ ஐயோ! இதோ பாருங்களேன்! “

அவள் குரல் திடீரென ஏறிவிட்ட உச்சத்தில் தவித்து நூறு சுக்கல்களாய் உடைந்தது . ரமணியின் நிஜாரில் பட்டை பட்டையாய் ரத்தக் கறை. இன்னும் காயக்கூட இல்லை. நிஜார்ப் பையிலிருந்து தர்மாஸ ப்ளாஸ்க் ப்ரஷ் அடர்த்தியாய், ஒரு வால் எட்டிப் பார்த்தது.

“ஐயோ ! அம்மாடி!”

இடுப்பைப் பிடித்துக் கொண்டு, குன்றினாற்போல் தரையில் உட்கார்ந்துவிட்டாள். அவள் விழிகள் பிதுங்கி, ஒரேயடியாய் விரிந்தன. முகத்தில் வேர்வை கொட்டிற்று.

சுடரின் சீறல்போல் , வலியில் புத்தொளி பெற்றுப் பொலிந்தாள்.

அம்மாவின் குரல் கீழிருந்து மேலே எட்டிற்று. பாவம்! அசதி, நேற்றுப் பிற்பகல் கெடுபிடியிலிருந்து அவளுக்கு ஓயாத அலைச்சல், கவலை, காரியம்.

ரமணி தன் நினைவிலாது படுக்கையில் ஓயாமல் புரள் கிறான். ஜ்வரத்தில் குழந்தை நெருப்பாய் ஜ்வலிக்கிறான். இப்போது தான் சற்று நேரமாய் அயட்டல் சற்று அடங்கியிருக்கிறது.

ஒரு இலைகூட அசையவில்லை. எனக்கு முச்சு திணறிற்று, மூச்சுக்குக்கூடக் காற்று இல்லை. எழுந்து கென்று அறைக்குப் பின் இருக்கும் மொட்டை மாடியில் நின்றேன். பக்கத்துக் கொல்லையிலிருந்து. எங்கள் வீட்டுப் பக்கமாய்ச் சாய்ந்த தென்னையில் மட்டைகள், இரைக்குக் காத்திருக்கும் ஒரு ராக்ஷஸ எட்டுக்கால் அல்ல எத்தனையோ கால் பூச்சிபோல் கவிந்தன.

தூக்கமில் மாமல் எனக்குக் கண்கள், மிளகாய் இழைத் தாற்போல் எரிந்தன. இமைகள் தாமே மூடிக்கொண்டன.

ஸைந்தவி ஆஸ்பத்திரியிலிருந்து வர இன்னும் மூணு நாள் செல்லும், பிறகு உடம்பு உடம்பாவதற்கு ஒரு மாதமேனும் ஆகும்.

[டாக்டர் : ‘ அந்த மட்டுக்கும் போச்சேன்னு கட வுளுக்கு வந்தனம் செலுத்துங்கோ சார் , அவங்களுக்குத் திடீர்னு ‘ஷாக்’ கில், வேறே ‘ காம்ப்ளிகேஷன்’ இல்லாமல்!”]

“அப்பா!”

அவன் குரலின் அமைதியே குடலைக் குழப்புகின்றது. விழுந்தடித்துக் கொண்டு உள்ளே நுழைகிறேன்.

“அப்பா!”

“என்னடா கண்ணு?”

மலா மலர விழிக்கிறான். ஆனால் இப்போது ஜ்வரத்தினால் அல்ல.

“அப்பா, சாமி இருக்காரா அப்பா?”

“ஏன் அப்படிக் கேட்கிறாய்?”

“சாமியிருந்தால் என் அணிலைச் செத்துப்போக விட்டிருப்பாரா?”

நான் குனிகிறேன்.

அவன் விழிகளின் புழுக்கம் என்னென்று புரிகின்றது. குழந்தையின் முதல் துயரத்தில் நம்பிக்கை தன் வேர்கள் கழன்று, ஆட்டம் கொடுத்துவிட்ட கிடுகிடுப்பு.

“துரும்பிலு மிருப்பார்னு சொன்னையேப்பா, சொல்லேன்”

என்னிடம் பதில் இல்லை .

மொட்டை மாடியில் தென்னை மட்டையில் ஏதோ ‘கொல்’லென்று அலறிற்று.

அந்தப் பிரம்மாண்டமான எத்தனையோ கால் பூச்சி யிடம் அகப்பட்டுக்கொண்ட இரையா? இல்லை, நடுநிசி யில் உலகம் தன் தனிமையைக் கண்டு தானே மிரண்ட வீறலா?

– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *