விதியோ விதி!

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 5,590 
 
 

மதிய சாப்பாட்டிற்கு பின் வெற்றிலை பாக்கை வாயில் மென்றவாறு வாசலில் வந்தமர்ந்த சுந்தரேசன், வீதியின் இருபுறமும் நோட்டமிட்டார். பின்பு வீட்டிற்குள் இருந்த சுவர் கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார். அருகில் வந்து நின்ற மனைவி திலகவதியிடம் “என்ன இன்னும் நம்ம ஜோசியரை காணலியே?” என்றார்.

“அவர் கிராமத்து பக்கம் கொஞ்சம் மழை பெய்யுது போல இருக்கு பாருங்க…. கொஞ்ச நேரம் கழிச்சு வருவார்…. நீங்க உள்ளே வந்து கொஞ்ச நாழி தூங்குங்க” என்றாள் திலகவதி.

வீட்டிற்குள் நுழைந்தவர், இருபது வயதைத் தொட்டு கல்யாண கோலத்தில் தயாராகி நின்ற மகள் பிரேமாவைப் பார்த்தார்… இவளின் கல்யாண பேச்சை ஆரம்பிக்கத் தான் தன் குடும்பத்து ஜோசியரை இன்று மதியம் வரச் சொல்லியிருந்தார். சுந்தரேசன் திலகவதி தம்பதிக்கு ஒரே மகள் ஒரே வாரிசு இந்த பிரேமா தான். அவளின் திருமணத்தை இனிதே நடத்தி வைத்து, பேரப்பிள்ளைகளை கையில் எடுத்து கொஞ்சும் நாட்களை தம்பதியினர் வெகு நாட்களாகவே எதிர்நோக்கி கனவு கண்டு கொண்டிருந்தனர். கனவை நிஜமாக்கிக் கொள்ள இன்றுதான் முதற்கட்ட முயற்சி.

ஒரு மணி நேரம் கழித்து குடையை மடக்கியவாறு நலன் விசாரித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் ஜோசியர்.

“அங்கிருந்து கிளம்பறச்ச, இந்த பக்கம் பார்த்தா மழை இல்லை… ஆனா இங்க வந்து இறங்கியதும் இங்க மழை ஆனா அந்தப் பக்கம் இல்லை… ஆக இன்னிக்கு மழை என்னை துரத்தணம்னு முடிவோடதான் பெய்யுது போங்க” என்று கலகலவென்று சிரித்தவர் மற்றவர்களையும் சிரிக்க வைத்தார். மற்றவர்களை எப்படியேனும் சிரிக்க வைப்பதை ஒரு கலையாகக் கொண்டிருந்தார்.

சில நிமிடங்கள் கழித்து பிரேமாவின் கல்யாண விஷயத்திற்கு வந்தனர். ஜோசியர் பிரேமாவின் ஜாதகத்தை ஆராய ஆரம்பித்தார்… அவர் முகத்தில் பல கோடுகள் அவ்வப்பொழுது தோன்றி மறைந்தன… கையில் கொண்டு வந்திருந்த பல புத்தகங்களை புரட்டிப் படித்தார்… பிரேமாவின் கை ரேகையையும் சில நிமிடங்கள் ஆராய்ந்தார்….

அவர் முகம் வியர்த்துக் கொண்டு வருவதை கவனித்த சுந்தரேசன் ஜோசியரின் கைகளைப் பற்றிக்கொண்டு “என்னாச்சு?” என்று வினவினார்.

ஜோசியர் பிரேமாவை பார்த்து “கொஞ்சம் மோர் கொண்டு வருவியா?” என்று கேட்டவாறு அவளை உள்ளே அனுப்பிவிட்டு, சுந்தரேசனிடம் “எனக்கே இவ்வளவு சங்கடமா இருக்கு…. உங்களை நினைச்சா?!” என்று வார்த்தைகளை முடிக்காமல் பேசினார்.

சுந்தரேசனக்கும் திலகவதிக்கும் கதி கலங்கியது…. நரம்புகள் உடலை அதிரவைத்த ஆரம்பித்தது. “சொல்லுங்க ஜோசியர் ஐயா…. அவ ஜாதகத்துல என்ன இருக்கு?”

“பிரேமாவுக்கு…. கல்யாணம் நடக்காது…. நடக்க சாத்தியமே இல்லை… அதோட அவளுக்கு ஒரு மரண கண்டம் ஒன்னும் நெருங்கிடுச்சி…. நிவர்த்தி கூட செய்ய முடியாது என்று நினைக்கறச்ச தான் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…. உங்கள் குலதெய்வத்தை நீங்க வேடண்டிக்குங்க… அதைவிட வேறு வழி எதுவும் இருக்கிறதா எனக்கு படலை…. என்னை மன்னிச்சிடுங்க… நான் வரேன்” பிரேமா மோர்கொண்டு வருவதற்குள் அவள் முகத்தை பார்க்கக் கூட பயந்தவராக அவசரம் அவசரமாக வெளியேறிப் போனார் ஜோசியர்…. தன் தொழிலில் ஒரு தவறு நிகழ்ந்துவிட்டதாக அவர் மனம் அவரை குற்றம்சாட்டியது.

கையில் மோருடன் திரும்பிய பிரேமா ஜோசியர் காணாததையும், பேயறைந்தாற் போல் நின்றிருந்த பெற்றோர்களையும் கண்டு புரியாமல் முழித்தாள். அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பெற்றோர்கள் சங்கடப்பட்டனர்.

சுந்தரேசன் மனதில் ஏற்பட்ட கலக்கங்களை ஒரு புறம் தள்ளிவிட்டு நடக்க வேண்டியது என்ன என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார். அன்று மாலையே கொஞ்ச தூரத்தில் இருந்த டவுனில் பிரசித்திபெற்ற ஒரு மலையாள ஜோசியரிடம் பிரேமாவின் ஜாதகத்தை காட்டினார்… அந்த மலையாள ஜோசியரும் அதேபோல் சொன்னதும் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல் அவர் மனம் மேலும் பதறியது.

அன்றைய தினம் தான் என் “ஆத்தா” என் மனக்கண் முன் தோன்றி நான் பிரேமா என்பவளை கொல்ல வேண்டும் என்று கூறி பிரேமாவின் உருவத்தையும் “ஆத்தா”விடம் இருந்த பாக்கெட் டிவியில் எனக்கு காண்பித்தாள்.

வெகு நாட்களாக யாரையும் பதம் பார்க்காமல்…. கொல்லாமல் மறைவிடத்தில் வாழ்ந்து வந்த எனக்கு தீனி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளலானேன்… பிரேமாவின் உருவத்தை என் உடலுக்குள் இருந்த கணினியில் பதிவு செய்துகொண்டு அவளை வேட்டையாட… இதோ கிளம்பி விட்டேன்!)

இரண்டு நாட்கள் கழிந்திருக்கும்…. சுந்தரேசன் ஒரு முடிவுக்கு வந்தவர் பிரேமாவை அழைத்துக்கொண்டு பட்டணத்துக்கு விரைந்தார். அங்கு ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் அவளை காட்டி உடலில் என்ன கோளாறு இருக்கிறது, இனி என்னென்ன கோளாறுகள் வர வாய்ப்பு இருக்கிறது என்று கண்டு அறிவிக்கும்படி டாக்டரிடம் கேட்டுக் கொண்டார். டாக்டரும் பிரேமாவை முழுவதுமாக பரிசோதித்து மூன்று தினங்கள் கழித்து அவளுக்கு எந்த கோளாறும் இல்லை என்று கூறினார்.

சரி இனி விபத்துக்கள் மூலம் அவளுக்கு ஏதாவது வருமோ என்று பயந்து பிரேமாவை வெகு ஜாக்கிரதையுடன் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார்…. அவரும் திலகவதியும் மாறி மாறி பிரேமாவை 24 மணி நேரமும் ஒரு கைக்குழந்தையை பார்த்துக் கொள்வது போல் பார்த்துக்கொண்டனர். குலதெய்வத்தையும் வேண்டிக்கொள்ள அன்று பக்கத்து ஊருக்கு சென்று…. எல்லாம் முடிந்து பஸ்ஸில் திரும்புகையில்…..

(‘எங்கே அவள்?…. எங்கே அவள்??’ என்று அலைந்து திரிந்து தேடிக் கொண்டிருந்த எனக்கு…. இதோ அவள் என் கண்ணில் பட்டுவிட்டாள்… அவளை பார்த்த மட்டிலேயே எனக்குள் இருந்த நாடி நரம்புகள் அவளை தீர்த்துக் கட்டிவிட துடிதுடித்து ஆயத்தமானது.., யார் கண்களிலும் படாதவாறு அதிவிரைவில் ஓடி அவளை நெருங்குகையில்….)

பஸ்ஸில் ஏறி அமர்ந்த சுந்தரேசன் குடும்பத்தாரை நோக்கி ஒரு அழகான வாலிபன் வந்தான். முதலில் பிரேமாவை பார்த்து லேசாக புன்னகைத்து, பிறகு சுந்தரேசனை பார்த்து அதே புன்னகையுடன் கை கூப்பி நமஸ்கரித்து அவர் கால்களைத் தொட்டு வணங்கி நிமிர்ந்தான்.

‘யார் இவன்?’ என்று திருதிருவென முழித்தார் சுந்தரேசன்.

“நான் தான் மாமா…. பாபு… பாபு ஞாபகம் இல்லையா?… பத்து வருஷத்துக்கு முன்னால ஒரு விபத்துல என் அம்மா அப்பா செத்தப் புறம் நான் என் சொந்தக் கால்ல நின்னு முயற்சிக்கிறேன் என்று ஊரைவிட்டுப் போய்….”

சுந்தரேசன் கண்களில் நீர் மல்க கடந்ததை ஞாபகத்துக்கு கொண்டுவர…

“அட… அந்த பாபுவா நீ?” என்று திலகவதியும் வாய் பிளந்தாள். சுந்தரேசன் அருகில் அமர்ந்த பாபு, “மாமா… நான் உங்கள பார்க்கத்தான் வந்துக்கிட்டு இருக்கேன்… நான் இப்போ லட்சாதிபதி ஆகிவிட்டேன்… நான் உங்கக்கிட்ட தனியா பேசணும்… உங்க வீட்ல வந்து பேசறேன்” என்றான்.

“சரி அப்படியே செய்யலாம்”

“நான் உங்க வீட்டில தங்கலாமா? எனக்கு இப்போ யாரும் இல்லைன்னு உங்களுக்கு தெரியும்… என்ன சொல்றீங்க?… ஓகே தானே?” என்றான் பாபு.

“கவலைப்படாதே பாபு… உனக்கு இனி நாங்க இருக்கோம்” அதைக்கேட்ட பாபுவின் கண்களிலிருந்து நீர் சுரப்பதை சுந்தரேசன் அதிசயமாக பார்த்தார் ‘இது என்ன தொட்டகுறை விட்ட குறையோ?!’ என்று ஆண்டவனை எண்ணினார்.

(நானும் சுதாரித்துக்கொண்டு அவர்களுடன் பஸ்ஸில் பிரயாணம் செய்தேன்… யாரும் அறியாதவாறு என் விஷ ஊசியை அவள் உடலில் ஏற்ற பலமுறை முயன்று தோல்வி அடைந்தேன்… அதற்குள் ஊர் வந்து சேர… பஸ்ஸை விட்டு இறங்க வேண்டியதாயிற்று…. சரி இனி அவளை அவள் வீட்டிலேயே கவனித்துக் கொள்வோம் என்று என் வெறியை அடக்கிக்கொண்டேன்… என் ‘ஆத்தா’வும் என் மனக்கண் முன் தோன்றி “நீ அவளை எப்படியும் கொல்வாய்….. கவலைப்படாதே!” என்றது)

வீட்டை அடைந்ததும் பாபு தன் கடந்த பத்து வருட கால வாழ்க்கையைப் பற்றி விவரமாக பேச ஆரம்பித்தான். தற்பொழுது அவன் சிங்கப்பூரில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பதாக கூறினான்.

சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்திருந்த ஒரு சின்ன விளையாட்டு ரோபோட்டை இயக்கி வைத்து அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தான்.

“சரி, இப்போ என்ன விஷயமா இந்தியாவுக்கு வந்து இருக்க?” சுந்தரேசனின் மனதில் ஏற்கனவே ஒரு நப்பாசை துளிர் விட்டிருந்தது… ‘இவன் எனக்கு மருமகன் ஆவானா?’ என்று.

“அதைப் பத்தி தான் உங்க கிட்ட தனியா பேசணும்னு சொன்னேன்” பாபு பிரேமாவை பார்த்தவாறு பேசினான்.

சுந்தரேசன் கண் அசைக்க, பிரேமா உள்ளே போனாள்.

“மாமா, நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ… சின்ன வயசில இருந்து பிரேமாகிட்ட எனக்கு ஒரு.. ஒரு…. அதான் காதல்!… ஆனா யார்கிட்டயும் சொல்லிக்கிட்டதில்லை… என் நண்பர்கள்கிட்ட கூட சொல்லவில்லை…. ஆனால் என் காதலை நானே நிறைவேற்றிக்கணும்னு எனக்கு ஒரு வெறித்தனமான ஆசை…. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையோடு தான் நல்லா படிச்சு வேலைக்கு போய் இப்போ கை நிறைய சம்பாதிக்கிறேன். என் ஆசையை இப்போ நீங்கதான் நிறைவேற்றுணும்” பாபு தடாலென்று சுந்தரேசன் கால்களில் விழுந்தான்.

ஆனந்தக் கண்ணீர் என்பார்களே அது சுந்தரேசனின் கண்களிலிருந்து தாரை தாரையாக வழிந்து ஓடியது…. பாபுவை தூக்கி அணைத்துக் கொண்டார்.

‘இப்பொழுதுதான் குலதெய்வத்தை வணங்கிவிட்டு வந்தோம்…. அதற்குள் இப்படி ஒரு நல்வழியைக் காட்டியுள்ளானேஆண்டவன்!’ என்று நினைத்து பனிபோல் உருகிப் போனார்.

உடனேயே ஜோசியரை வரவழைத்தார் “உங்க ஜோசியத்துக்கு இந்த கல்யாணம் ஒரு சவால்…. சொல்லுங்க… இப்போ உடனேயே என்னிக்கு நல்ல முகூர்த்தம் இருக்குன்னு பார்த்து சொல்லுங்க” என்று விறுவிறுப்புக்கு மாறியிருந்தார் சுந்தரேசன்.

பஞ்சாங்கத்தைப் பார்த்து விட்டு சுந்தரேசனை முறைத்தார் ஜோசியர்.. “நாளைக்கே நல்ல முகூர்த்தம் இருக்கு… அதை விட்டா அடுத்த மாதம் தான்” என்றார்.

“அப்போ நாளைக்கே என் பொண்ணுக்கும் பாபுவுக்கும் கல்யாணம்…. ஒரு வண்டியை வெச்சு முக்கியமானவங்களுக்கு எல்லாம் நானே போய் சொல்லிவிட்டு வருகிறேன்…. திலகா….நீ போய்… பர்வதம், குப்புசாமி, கணேஷ்…. இன்னும் யார் யார் கிட்ட என்னென்ன பொறுப்பை ஒப்படைக்கணுமோ…. சொல்லிவிடு” சுந்தரேசன் இறக்கை இல்லாத குறையாக பறக்க ஆரம்பித்தார்.

ஜோசியத்தை பொய்யாக்கப் போகும் திமிர் அவரை ஆட்கொண்டது!!.

(மறுபடியும் ‘ஆத்தா’ தோன்றி “பிரேமாவை நீ கொல்வது என்பது சுலபமான விஷயம் தான்… ஆனால் அதை அவளுக்கு கல்யாணம் ஆகும் முன்பே செய்ய வேண்டும்… போ புறப்படு” என்றதும்….. நான் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்ததும்…. பிரேமா வீட்டில் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்து விட்டது…. கூட்டம் என்றாலே எனக்கு பயங்கர அலர்ஜி… அப்படியும் பிரேமாவை அவ்வப்பொழுது நெருங்கிக் கொண்டே இருந்தேன்… அவளோ கல்யாண கொண்டாட்டத்தில் மான் போல் துள்ளித்துள்ளி ஓடிக்கொண்டிருந்தாள்…. எனக்கு எரிச்சல் அதிகரித்துக் கொண்டே வந்தது!)

மறுநாள்… கல்யாண நாள்…

சுந்தரேசனின் வீடு ஒரே நாளில் கல்யாண மண்டபமாக மாறி இருந்தது. அவர் தன் பணப் பலத்தை எல்லாம் உபயோகித்து அந்த கிராமத்தையே அமர்க்களப்படுத்தி இருந்தார்.

சிங்கப்பூரில் இருந்து வாங்கி வந்திருந்த ரிமோட் கண்ட்ரோல் கார் மற்றும் சில விளையாட்டு பொம்மைகளை இயக்கி அந்த கிராம மக்கள் அனைவரையும் அசத்திக் கொண்டிருந்தான் பாபு.

அவன் கல்யாண மேடையில் அமர வேண்டிய நேரம் வந்ததும் அவைகளை ஒருவனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றான்.

காலை மணி 9க்குள் முகூர்த்தம்… சுந்தரேசன் தன் கனவு நிஜமாக கொண்டு வருவதையும்…. ஜோசியம் பொய்யாகிக் கொண்டு வருவதையும் எண்ணி எண்ணி சந்தோஷப்பட்டார்.

நேரம் இப்பொழுது முகூர்த்தத்தை நெருங்கிக்கொண்டிருந்தது… மணமேடையில் பாபுவின் அருகே வந்து அமர்ந்தாள் பிரேமா…அவளுக்கு பின்னால் அவள் அருகில் அமர்ந்த ஒரு சிறுமி பிரேமாவின் இடுப்பில் கிள்ளிக் கிள்ளி விளையாட ஆரம்பித்தாள்….அவள் இடுப்பு அழகு அச்சிறுமியை ஏதோ செய்யத் தூண்டியது!.

(ஆஹா!….இது தான் தக்க சமயம்… கஜகஜவென்றிருந்த அந்தக் கூட்டத்திலும் நான் பிரேமாவை நோக்கி நகர ஆரம்பித்தேன்… ‘உன் உயிரைக் குடிக்காமல் என் ஜீவன் அடங்காது’ என்று வெறித்தனமாய் பாடிக் கொண்டே அவளை கொஞ்சம் கொஞ்சமாக அடைந்து விட்டேன்… இனி அவள் உடலில் எங்கே என் விஷ ஊசியை ஏற்றுவது என்று ஆராய்ந்தேன்… எனக்கு வசதியாக இருக்கும்படியாக…. யார் கண்ணிலும் படாதபடியாக…. அவளின் கீழ் முதுகுத் தண்டு எனக்கு தகுந்த இடம் என்று பட்டது…. பிரேமாவை கிள்ளிக் கொண்டிருந்த அந்த சிறுமியின் பக்கம் வந்து…. இதோ…ப்ப்ப்ஸ்ஸ்ஸ்க்க்க்!!!)

“அம்மா!…” என்று பிரேமா கொஞ்சம் சத்தத்தை அடக்கி அலறிவிட்டாள். பாபு அவளை பார்த்து புன்னகைத்தான்… ‘என்ன?’ என்பது போல் கண்களால் வினவினான். திலகவதியும் அருகில் வந்து “என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

“இவதான்… அப்போ இருந்து இடுப்பில் கிள்ளிக்கிட்டே இருக்கா… இப்போ எதவெச்சு குத்தினாளோ தெரியல…. ரொம்ப வலிக்குது” பிரேமா லேசாக கண் கலங்கினாள். திலகவதி அந்தச் சிறுமியை அங்கிருந்து அகற்றினாள்.

தாலி கட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் கிள்ளிய இடத்தை பார்க்கக் கூட நேரமில்லை… பிரேமாவும் வலியை அடக்கிக் கொண்டிருந்தாள்…. ஆனால் அவள் முதுகுத் தண்டில் இருந்து தலையை நோக்கி…. என்னோவோ சுர்ரென்று….

“கெட்டி மேளம்….. கெட்டி மேளம்…”

பாபு தாலியுடன் பிரேமாவின் கழுத்தை நெருங்க… வாயில் நுரை ததும்ப சாய்ந்தாள் பிரேமா. பதட்டமடைந்த கும்பல் கல்யாண மண்டபத்தை அதிர வைத்தது. “என்னாச்சு?… எப்படி ஆச்சு?” என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருக்கையில்…

“அதோ ஒரு விஷத் தேள்” என்று ஒரு குரல் கத்தியது.

(பிரேமாவை கொட்டி விட்டுத் தப்பித்துக் கொண்டிருந்த என்னை யாரோ பார்த்துவிட்டு அலற…. இன்னொருவர் தன் காலணியுடன் என்னை துரத்தினார்…என்னைக் கண்டு பயந்து நிறைய பேர் வழி விட்டாலும்… திடீரென்று என் மேல் ஒரு அடி விழ நான் துடிதுடித்து…..’ஐயோ ஆத்தா’ என்று கத்தி…. செத்துப் போ….. செத்துப் போ….. செத்துப் போ…..)

முதுகுத் தண்டிலிருந்து விஷம் ஏறி இருந்ததாலும் அது கொடிய விஷம் என்பதாலும் பிரேமாவின் உயிர் சில நிமிடங்களிலேயே மணமேடையில் பிரிந்தது.

“விதியோ விதி!” என்று அனைவரும் தலைமேல் கை வைத்துக்கொண்டு முணுமுணுத்தனர்.

வந்திருந்த ஜோசியர் மண்டையில் அடித்துக் கொண்டவாறு சுந்தரேசனை பார்த்தார்….

Print Friendly, PDF & Email

3 thoughts on “விதியோ விதி!

  1. Interesting story flow… nice story but can change the end and make prema to survive with treatment (with Kuladeivam grace).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *