பொன்னையனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
மனைவி ஆபரேஷனுக்கு ஒரு லக்ஷம் ரூபாய் வரை செலவாகும் என்று டாக்டர் சொன்னார். கையில் உள்ள நகை நட்டெல்லாம் விற்றாலும் ஒரு இருவதினாயிரம் இடிக்கும் போலத் தெரிந்தது. வேறு கையிருப்பும் இல்லை. அவரை நம்பி பணம் கொடுப்பாரும் இல்லை.
அவருக்குத் தெரிந்த ஒரே தொழில் சாமி சிலைகள் செய்வது. அந்தத் தொழிலிலும் சரிவர நடக்கவில்லை. நடக்கவில்லை என்று சொல்வதை விட அவரால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை என்று சொல்லலாம். பாவம் மனுஷன் என்ன செய்வார் சொல்லுங்கள், சீக்காளியான மனைவியை கவனிப்பாரா இல்லை தொழிலைக் கவனிப்பாரா? கையில் இருந்த கொஞ்சநஞ்ச பணமும் மருந்துக்கும் வீட்டுச் செலவுக்கும் செலவழிந்து கொண்டிருந்தது.
இன்னும் ஒரு வாரத்துக்கே பணம் சரியாய் போகும் என்ற நிலையில் அவர் கலவரமானார். அந்த பயத்தை முகத்தில் காட்டினால் எங்கே மனைவி புரிந்து கொண்டு வருத்தப்படுவாளோ என்று வளைய வந்து கொண்டு இருந்தார். இருந்தும் அவர் மனைவி பாக்கியம் பெண்களுக்கே உரிய மோப்ப சக்தி கொண்டு அவர் கலவரத்தை தெரிந்துக் கொண்டுவிட்டாள். அவள் நிமித்தமாகத் தான் அவருக்கு இந்த நிலைமை என்று ஒரு பாட்டம் அழது தீர்த்து விட்டாள். அவளை ஒருவாறு சமாதானப்படுத்தினார் பொன்னையன்.
மறுநாள் தெருவோர டீக்கடையில் டீ சாப்பிட உட்கார்ந்திருந்த அவரை நோக்கி மூன்று பேர் வந்தார்கள். “சார் நீங்க தான் பொன்னையனா?” என்ற அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் பக்கத்து ஏரியாவிலிருந்து வந்தவர்கள் என்று தெரிந்துகொண்டார். ” ஆமாம்” என்று சொன்ன அவரிடம் அவர்கள் சொன்ன விஷயத்தை கேட்டு அவருக்கு சந்தோஷம் வருத்தம் என்று இரு வேறு உணர்வுகள் ஒன்றாக தோன்றின.
அவர்கள் பக்கத்து ஏரியாவை சேர்ந்தவர்கள். இந்த வருடம் முதன் முறையாக விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாட இருக்கிறார்களாம். அதற்காக ஒரு பெரிய சைஸ் பிள்ளையார் சிலை செய்துக் கொடுக்க வேண்டி இவரிடம் வந்திருக்கிறார்கள். மொத்தம் ஆறு சிலைகள் வேண்டுமாம். ரூபாய் ஐம்பதினாயிரம் வரை செலவு செய்ய ரெடியாம். மொத்த பணத்தையும் அட்வான்சாக கொடுக்கவும் ரெடியாம். எப்படியும் ஒரு 25 ஆயிரம் லாபம் நிற்கும் என்று பொன்னையன் மனக்கணக்கு போட்டார். உடனே ஒப்பு கொண்டும் விட்டார்.
பணம் கையில் வந்த உடனே மனைவிக்கு ஆபரேஷன் ஏற்பாடு செய்தார். ஆபரேஷன் நல்ல விதமாக முடிந்து பாக்யமும் வீட்டிற்கு திரும்பி வந்தாள். ஒரு மாதம் நல்ல ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டார்.
அடுத்த ஒரு மாதம் பொன்னையன் பிசியானார். ஓடைக்கல் மாவும், காகிதக் கூழும், மூங்கில் சவுக்கும், பிசினும் அவர் வாழ்க்கை ஆனது. விநாயகர் அவர் கனவையும் நினைவையும் ஆக்கிரமித்தார். ஒரு தவம் போல அவர் செய்த உழைப்பின் பயனாக ஆறு அழகான பிள்ளையார்கள் அவர் இல்லத்தை அலங்கரித்தார்கள்.
மாத முடிவிலே ஆர்டர் கொடுத்தவர்கள் டெலிவரி எடுக்க வந்தார்கள். சிலைகளின் அழகு அவர்களை ஊமையாக்கியது. இனி பொன்னையன் தான் அவர்களுக்கு வருடாவருடம் பிள்ளையார் சிலை செய்து தர வேண்டும் என்று அன்பான வேண்டுகோள் விடுத்தார்கள். பொன்னையன் சந்தோஷம் எல்லா கடந்தது. போகும்போது அவர் கையில் பத்தாயிரம் ரூபாய் கூடுதலாக கொடுத்து குடும்பத்தோடு விசர்ஜனத்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்கள்.
அன்றிலிருந்து சரியாக ஒரு வாரம் கழித்து விசர்ஜனம், தான் மட்டும் கிளம்பினார் பொன்னையன். விழாப்பந்தலில் இவர்க் கண்டதும் விழா அமைப்பாளர்கள் சந்தோஷத்துடன் ஓடி வந்து கையை பிடித்து குலுக்கினார்கள். இவர்தான் அந்தப் பிள்ளையார் சிலைகளின் ஸ்ருஷ்டிகர்த்தா என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்கள்.
பின்னர் விசர்ஜன பூஜை ஆரம்பித்தது. வெகு விமரிசையாக விதிவத்தாக நடந்தது. ஒரு மணி நேர பூஜை முடிந்து சிலைகளை லாரிகளில் ஏற்றினார்கள். இவரும் ஏறிக்கொண்டார். சற்று நேரத்தில் கடற்கரை சென்றடைந்தனர். மிகுந்த ஆரவாரத்துடன் பிள்ளையாரை கடலில் நடுவில் சென்று இறக்கினர்.
பார்த்துக் கொண்டிருந்த பொன்னையன் மனதில் இனம் புரியாத கலவரம். பிள்ளையார் தன்னை கெஞ்சலாக பார்ப்பது போல ஒரு பிரமை. “வேண்டாம் பிள்ளையார தண்ணில விடாதீங்க பாவம் அவர்’ என்று கதற வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நாக்கு வறண்டு போல் மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு விட்டது. வாயிலிருந்து வெறும் காற்று தான் வந்தது.
பிள்ளையார் மெதுவாக முழுகிக் கொண்டிருந்தார், கழுத்து தும்பிக்கை காது கண் என்று கிரமப்படி தண்ணீர் அவரை விழுங்கிகொண்டிருந்தது. முழுவதும் முழுகும் முன் அவர் தும்பிக்கை அசைந்தது. ஏதோ பேசுவது போல இருந்தது,
பொன்னையன் கூர்ந்து கேட்டார். “ டேய் பொன்னையா! உன் பொண்டாட்டி பொழைக்க காரணமாயிருந்த என்னையே தண்ணில தள்ளிட்டியே, நியாயமாடா?” என்று பிள்ளையார் கதறினார். இல்லை அது பொன்னையனின் மனப்பிரமையா?
எதுவாயினும் திடீரென்று தன் மாரை அடைப்பதைப் போல உணர்ந்தார்.
– செப்டம்பர் 2015