வாழ்க்கை என்பது வயதிலில்லை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 20, 2022
பார்வையிட்டோர்: 5,243 
 
 

முகேஷின் வருகை தணிகாசலத்தைச் சங்கடப்படுத்தியது. அவன் காலடி எடுத்து இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே அவர் புழுவாக நெளிய ஆரம்பித்தார். மனம் எதையெதையோ நினைத்து ஒதுக்கினாலும் கடைசியில் நினைத்த இடத்திற்கே வந்து நிலையாக நின்றது.

‘நாம் தவறு செய்துவிட்டோமோ….?!’ என்று எண்ண ஆரம்பித்தார்.

இந்த வயதில் இது தேவைதானா..? நினைத்தார்.

நிச்சயமாக இது விதியாகத்தானிருக்க வேண்டும்..! இல்லையென்றால் 64 கிற்கும் 27 கிற்கும் திருமணம் நடக்குமென்று அவர் கனவில்கூட நினைக்கவில்லையே..!

அவனது வரவில் மனைவி சுசித்ரா பொங்கி பூரித்திருப்பது நன்றாகவே அவர் கண்களுக்குத் தெரிகின்றது.

ஏன்…???! இளரத்தமும் இளரத்தமும் இனம் கண்டுகொண்ட சந்தோசம் போல. இருக்காதா .பின்னே..?!..?

வருகை தந்திருப்பது அவளது சொந்த அத்தைப் பிள்ளை.. மெடிக்கல் ரெப்ரெசென்டேடிவ்.! பெங்களூருவில் தோல் பையும், கையுமாக அலைந்து கொண்டிருந்தவனை… இவரும் சுசித்திராவும் உல்லாசமாக கப்பன் பூங்காவிற்குச் சென்றபோது வழியில் இனங்கண்டு அவருக்கு அறிமுகப்படுத்தி அழைத்து வந்துவிட்டாள்.

சத்தியமாக இவருக்கு அவளின் அத்தைப் பையனோ, மாமன் பையனோ தெரியாது. மனைவி சொல்லுக்கு இவர் மறுப்பு சொல்லவில்லை. அவ்வளவுதான்!!

இவருக்கும் சுசித்திராவிற்கும் திருமணம் முடிந்து ஆறு மாதங்கள்தான் ஆகின்றது. அவளது பெற்றோர்கள் உடன் பிறந்த இரு தங்கைகள் தவிர இவருக்கு வேறு யாரையும் இவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம், விருப்பம், அதற்கான வாய்ப்பு வசதிகளும் இல்லை. இளவயது மாப்பிள்ளையா உறவுகள் தேடி, ஒட்டி உறவாட..? இவருக்குள்ளும் அப்படியான ஒரு சங்கட மனநிலை..?

இவரைப் பொருத்தவரையில்… நேற்று வரையில் வாழ்க்கை நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. சுசித்திராவும் கிழவனைக் கட்டிக்கொண்டோமே என்கிற உறுத்தலில்லாமல் மிகவும் சந்தோசமாகத்தானிருந்தாள்.

ஆனால் அப்போதெல்லாம்தமிருந்த மகிழ்ச்சியைவிட இப்போது அவள் உள்ள மலர்ச்சி இன்னும் கூடுதல் மகிழ்ச்சியில் இருப்பது அவருக்குத் துல்லியமாகத் தெரிந்தது.

இதுவரையில் அவள் சந்தோசமாக இருப்பதாக நடித்திருப்பாளோ..? – இப்போது அவரையும் அறியாமல் சந்தேகம் துளிர்த்தது.

அவருடைய சம்மதமில்லாமலேயே அவரது உள்மனது அவளை வேவு பார்க்கச் சொன்னது.

முகேஷின் பிரவேசத்தினால் சுசித்திராவின் போக்கில் நிறைய மாற்றமும் மாறுதலுமிருந்தது. அவனை, அவள் விழுந்து விழுந்து உபசரித்தாள். தாங்கள் சிறுவயதிலிருந்தபோது நடந்தவைகளை நினைவு கூர்ந்தாள். கொஞ்சி கொஞ்சிப் பேசினாள். இதையெல்லாம் பார்க்கும்போது அவருக்கு எரிச்சலாக இருந்தது. தனக்கு முன்னாலேயே இப்படியென்றால்… இல்லாதபோது…? மனம் அவரை முடிக்கியது.

அவருக்குத் தெரியாது என்கிற நினைப்பில் அவனது பார்வை அவளின் மீது மேய்கையில் இவர் மனம் குமுறும்.

முகேஷ் ஒரு நாள் குளித்துவிட்டு ஈரத்துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்தபோது அவருக்குப் பொறாமையாக இருந்தது. படர்ந்த நெஞ்சு. மார்பு நிறைய முசுமுசுவென்று அடர்த்தியான ரோமக்காடுகள். உருண்டு திரண்ட தோள்கள். அழகான முகம். புஷ்ட்டியான கன்னங்கள். உடம்பை கட்டுக்குலையாமல் என்னமாய் வைத்திருக்கிறான்..?! ஆணான தனக்கே அந்த இளமை முறுக்கைப் பார்க்கையில் கிறக்கமாக இருக்கும்போது… சுசித்திராவிற்கு..?!

அந்த நிலையில் அவனுக்கு இவள் காபி கொடுத்தாள் . அவன் அவளின் கையைத் தொட்டு வாங்கினான்.

ஈஸிசேரில் அமர்ந்திருந்த இவர் அதைக் கவனித்தார்.

நெஞ்சம் பதறியது.

இவனாகத் தொட்டானா..? அவளாகத் தொட்டாளா..? அவன் கை பட்டபோது சிலிர்த்திருக்குமோ..?! இருக்கலாம்.! நான் தொடுவதற்கு அவன் தொடுவதற்கு வித்தியாசம் இருக்காதா..? – அவருக்குள் மனம் இப்படியெல்லாம் ஓடியது

அப்புறம் அவன் ஷு போட்டுக்கொண்டு, கழுத்தில்’ டை’ கட்டிக்கொண்டு அழகாய், கம்பீரமாய் வெளியே போகும்போது சுசித்திரா அவனையே கண்கொட்டாமல் பார்த்தாள். அந்த பார்வையில்தான் எத்தனை ஏக்கத்தாக்கங்கள்..?!

‘ஐயோ..! பெண்ணே..! வறுமைக்குப் பயந்து வயதானவனுக்கு வாழ்க்கைப்பட்டு..??. ஓ…..! உன் மனதில் எப்படி எப்படியெல்லாம் சஞ்சலங்கள்..?! இவர் உள்ளுக்குள் மருகிப் போனார்.

மாலை ஆறுமணிக்கு அவன் வந்ததும் வராததுமாக வழக்கத்தை விட அழகாய் உடுத்திக்கொண்டு கடைக்குப் போய்விட்டு வருகிறேன் என்று கூறினாள்.

அவர்களை ஒட்டவிடலாமா.? என்கிற எண்ணத்தில்…

“நானும் வருகின்றேனே.. !” என்று கிளம்பினார்.

“நீங்க இப்பத்தான் வாக்கிங் போயிட்டு வந்து களைப்பாய் இருக்கீங்க. பிரஷர் வேற. ஏன் அலையனும்..?”என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

ஒருவேளை தான் பிடிவாதமாகக் கிளம்பிவிட்டால் மறுக்க முடியாதே என்பதால் அப்படி ஒப்புக்குச் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டாளோ..?! இவருக்குப் பட்டது.

‘இளவட்டங்களை வேலையில் வைத்திருந்தால் ஒரு சில வேளைகளில் மனம் அலைபாயும் !’ என்கிற எண்ணத்தில் திருமணம் முடித்த முதல் வாரத்திலேயே வாலிப வயது கார் ஓட்டுபவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டார். சிறிது காலம் அவரே ஓட்டி. அப்படியே சுசித்திராவிற்கும் கற்றுக் கொடுத்தார். அப்படிக் கற்றுக்கொடுத்தது இப்போது தவறாகிவிட்டது. அவனைப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு இவள் சென்றுவிட்டாள்.

‘வரட்டும் ! இன்று தற்கொரு முற்றுப்புள்ளி வைத்து விடுவோம் !’ என்று தீர்மானித்துக் கொண்டார்.

இரவு 8.00 மணிக்கு மேல் கலகலவென்று வந்தார்கள்.

இந்த வரவுக்காகவே காத்திருந்த இவர்….

“சுசித்திரா ! என்னோட நண்பனுக்கு ரொம்ப முடியலைன்னு போன். நான் போய் என்னன்னு கவனிச்சு வர்றேன். நான் வர ரொம்ப நேரமாகும். ஒரு வேளை 12.00 மணிக்கு மேல ஆகலாம். வர்றேன். பத்திரமா இருங்க.”சொல்லி கிளம்பினார்.

அப்படியே முகேஷ் முகத்தில் தோன்றி மறையும் மின்னலையும் அவர் கவனிக்கத் தவறவில்லை.

காரில் வந்தால் திருட்டுத்தனம் தெரிந்துவிடும் என்பதற்காக அந்தப் பிரம்மாண்டமான ஓட்டலில் தன் காரை நிறுத்திவிட்டு.. பத்து மணிக்கு மேல் வாடகை கார் பிடித்து பங்களாவிற்கு வர….கதவு சாத்தி இருந்தது.

நோட்டமிட்டபோது தனது மனைவி அறையில் விளக்கு எரிவது தெரிந்தது.

மெல்ல நடந்து சென்று அந்த அறையின் ஜன்னல் ஓரம் நின்று கொண்டு கொஞ்சமாய் திறந்திருந்த கதவு வழியே உள்ள கவனித்தார்.

“பொறுக்கி நாயே..!” என்கிற கூச்சலைத் தொடர்ந்து பளார் அறை. அதனைத் தொடர்ந்து..

“உனக்கு என்ன தைரியமிருந்தா என் கையைப் பிடிப்பே..? கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டவள்தானே கையைப் பிடிச்சா படிஞ்சிடுவாள்ன்னு நினைச்சியா..? அவரால் என்ன இளமைக்கு ஈடுகொடுக்க முடியாது என்பது உண்மைதான். அதனால உன் இச்சைக்கு நான் கட்டுப்படுவேன்னு நினைச்சியா..? உங்களைப்போல் படிச்ச வாலிபப் பசங்களெல்லாம் பெத்தவங்களுக்குப் பின்னால ஒளிஞ்சிகிட்டு, வாழறதுக்கு வரதட்சணைக் கேக்குறீங்களே… உங்களுக்கு வெட்கமா இல்லே..? ஒரு பொண்டாட்டிக்கு உழைச்சிப் போட உங்க உடம்புல தெம்பு இல்லே..? ஏன் நீங்களெல்லாம் ஆம்பளை இல்லே..? உங்களைப் போல கோழைகளாலும், வரதட்சணைக் கொடுமையாலும் முப்பது வயசிலும் முப்பத்தஞ்சு வயசிலும் எத்தனை முதிர் கன்னிகள் இருக்காங்க .தெரியுமா..?

நான் ஏன் இவரைக் கலியாணம் பண்ணிக்கிட்டேன் தெரியுமா….? உன்னைப் போல வாலிபன்கிட்ட பணத்தைக் காட்டிக் கொடுத்து, வாழ்க்கையும், சுகத்தையும் அனுபவிக்கிறதை விட… ஒரு வயசானவருக்கு பணிவிடை செய்து வாழறது என்கிறது எவ்வளவோ மேல் என்கிற முடிவுதான். வாழ்க்கை என்பது வெறும் சொத்து சுகம், காசு பணம் உடல் பசி மட்டுமில்லே. அதையெல்லாம் தாண்டி ஒருத்தர் மேல் ஒருத்தர் காதல் அன்பு, பாசம், அக்கறை, நேசம், ஆதரவு அனைத்தும். இதுதாண்டா வாழ்க்கை. இது மொத்தமா நானும் என் கணவருக்குத் தர்றேன். அவரும் எனக்குத் தர்றார்.

நீ எனக்கு உறவுக்காரன்னு சொன்னவுடனே உனக்கு முழு சுதந்திரம் கொடுத்து என்னோடும் இந்த வீட்டிலும் பழவிட்டாரே. அவரோட பெருந்தன்மையை கொஞ்சமாவது நீ நினைச்சுப் பார்த்தியா..?

நான் உனக்குக் காபி கொடுத்தபோது கையைத் தொட்டு வாங்கினீயே… அன்னைக்கே நான் உன்னைக் கண்டிச்சிருக்கனும். சின்ன வயசுல ஒன்னாப் பழகினோம் என்கிறதுக்காக அதைப் பெரிசா எடுத்துக்காம பேசாம இருந்ததால் இன்னைக்குத் துணிஞ்சி என் கையைத் தொட்டுட்டே. இதுக்கு மேலும் நீ இங்கே தங்கி இருக்கிறது அவ்வளவு நல்லதில்லே. வெளியே போ முதல்ல. அவர் வந்ததும் உன்னைக் காணோம்ன்னு கேட்டால்… அவசர வேலையாய் ஊருக்குப் போய்ட்டேன்னு சொல்றேன். போ. ! .”கத்தி கூச்சல் போட……

ஐந்தாவது நிமிடம்… முகேஷ் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினான்.

‘சே! வாழ்க்கை என்பது வயதில்லை என்பதை என்ன அற்புதமாக சொல்லி விட்டாள்!’ வாலிபனுக்கு வாழ்க்கைப்பட்டாலும், வயதானவர்களுக்கு வாழ்க்கைப்பட்டாலும் திருட்டு சுகத்திற்கு ஆசைப்பட்டு கள்ள உறவு வைத்துக்கொண்டு அவஸ்தைப் படுபவர்கள் மத்தியில் இந்த சுசித்திரா…!’ மனைவி மேல் மதிப்பும் மரியாதையும் கூடுவதை உணர்ந்த தணிகாசலம்….

எந்த வித அரவமும் காட்டாமல் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *