கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 6,393 
 
 

(இதற்கு முந்தைய ‘இசக்கியும் ஜோசியரும்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)

இசக்கி அண்ணாச்சியின் மனசுக்குள் ஏதோ ஒண்ணு புன்னகை செஞ்சது. ஆனால் என்ன சொல்வது என்று பேசாமல் இருந்தார்.

“ஒங்க சம்சாரத்துக்கு என்ன வயசாகுது அண்ணாச்சி?” சிநேகிதர் கேட்டார்.

“அவளுக்கும் நாப்பத்தி நாலு, நாப்பத்தஞ்சு இருக்கும்.”

“ஒங்களுக்கு இந்த சம்சாரத்தின் மூலமாகத்தான் வாரிசு வரணும்னு கட்டாயம் எதுவும் கிடையாது. ஒங்க ஜாதகத்ல ரெண்டுதார யோகம் இருக்கு. அதை மறந்துராதீங்க…”

“என்ன ஜோசியரைய்யா என்ன இப்படி குண்டு குண்டா தூக்கிப் போட்டுக்கிட்டே இருக்கீங்க ஒண்ணு மாத்தி ஒண்ணா?”

“நானா என் ஆசைக்குச் சொல்றேன்… உங்க ஜாதகம் சொல்லுதுங்க அண்ணாச்சி.”

“கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பின கதையா இல்ல இருக்கு” என்று இசக்கி அண்ணாச்சி மனச் சங்கடத்துடன் எழுந்துகொண்டார்.

“ஒங்களுக்கு இன்னொரு சம்சாரம் வரப்போகுது. அந்த சம்சாரத்தின் மூலமா வாரிசுகளும் வரப்போகுது. இதெல்லாம் நடக்குதா இல்லையான்னு பாருங்க. நடந்த அப்புறம் வந்து என்கிட்ட ஜோசியம் பாத்ததுக்கான துட்டைக் குடுங்க… அப்ப வாங்கிக்கிறேன். இப்பத் தராதீங்க. நான் சொன்னது பலிக்காம ஒரு சல்லி வாங்கமாட்டேன்.”

இதென்னடா இவரோட பெரிய வம்பாப்போச்சின்னு நினைத்துக்கொண்ட இசக்கி அண்ணாச்சி எழுந்து நடையைக்கட்டினார். காவலூர் ஜோதிடர் சொன்ன எதையும் கோமதியிடம் சொல்லவில்லை. ‘கப்சிப்’னு இருந்துவிட்டார். ஆனால் அவருடைய மனசு அமைதியாக இல்லை. ஜோசியர் அவர் மனசில் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டிருந்தார். கிணற்றில் விழுந்த கல்லாக அந்த விசயம் மனசுக்குள் அப்படியே மறைந்து கிடந்தது. இசக்கி அதையே யோசித்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

அன்று இரவுச் சாப்பாட்டின்போது “ஒரு வாரமாவே பாக்குறேன், என்னவோ யோசனையிலேயே இருக்கீகளே?” கோமதி கேட்டாள்.

“ஒண்ணுமில்லீயே”

“சாப்பாடு கூடச் சரியா சாப்பிடற மாதிரி தெரியலை.”

“நீதேன் சொல்ற. நா எப்பவும் போல சாப்பிட்டுக்கிட்டுதேன் இருக்கேன்.”

கோமதி என்னத்துக்கு அப்படி ஒரு பார்வை பார்த்தாள்னு இசக்கிக்குத் தெரியலை. வேகமாகப் போய் சோற்றுப் பானையை எடுத்து வந்து அவருடைய முகத்துக்கு நேரா தூக்கிக் காட்டின பிறகுதான் அவள் பார்வைக்கு அர்த்தம் என்னவென்று புரிந்தது. ஆக்கி வடித்த சோறு பானையில் அப்படியே இருந்தது. இசக்கி அந்த லட்சணத்தில் சாப்பிட்டிருக்கிறார்! சட்டுனு மூஞ்சியை திருப்பிக்கிட்டு மச்சிப் படியேறி மாடியறைக்கு போய்விட்டார். மனசுக்குள் ‘மாட்டிக்கிட்டோமோ’ என்ற சந்தேகம் வந்தது. அட மாட்டிக்கிட்டாதான் இப்ப என்ன? என்கிற ஆத்திரமும் கூடவே சுருக்குனு ஏற்பட்டது. மூஞ்சியில் துண்டைப் போட்டுக்கொண்டு வெறும் பாயில் அப்படியே படுத்து விட்டார்.

கோமதிக்கு இதெல்லாம் ரொம்ப அதிசயமாக இருந்தது. தனியாய் ஒருநாளும் மச்சியில் போய் இப்படிப் படுத்துக்கொள்கிற மனுசன் இல்லையே… எது எப்படி இருந்தாலும் ராத்திரி உறங்குவதற்கு முன்னால் அவருக்கு ‘அது’ வேணும். அதுக்குப்பிறகுதான் உறக்கமே வரும். அவருக்கு இன்னிக்கி அதுகூட வேண்டாம் போலிருக்கு! ‘அப்படியா விசயம்’னு கோமதியும் சேலையை நல்லா இழுத்து மூடிக்கிட்டு பாய்கூட விரித்துக் கொள்ளாமல் படுத்துக்கொண்டாள். ஆனால் ஒண்ணு, புருசன் பெண்டாட்டி ரெண்டு பேருக்குமே அன்னைக்கி ராத்திரி உறக்கமே வரவில்லை.

இசக்கி அண்ணாச்சிக்கு ஏன் உறக்கம் வரவில்லை அப்படி? இப்ப என்ன நடந்துவிட்டது இப்படி மாடியில் போய் உறங்காமல் கிடக்க? காவலூர் ஜோசியன் ஏதோ சொன்னான். அவ்வளவுதானே? வேற ஒண்ணும் நடந்து விடலையே இப்ப? அதற்குள் ஏன் இசக்கி அண்ணாச்சிக்கு ராத்திரி சோறுகூட சாப்பிட முடியாமல் மனசுக்குள் சொணக்கம்? ராத்திரியாக இருந்தாலும், மத்யானமாக இருந்தாலும் சாப்பாட்டு விசயத்தில் எப்போதுமே ஒரு கை பார்ப்பவர் ஆச்சே! அப்படின்னா என்னவோ ஆகிவிட்டது!

தோள் துண்டை எடுத்து எடுத்து முகத்தை சும்மா துடைத்துக்கொண்டே இருந்தார். மர்பி ரேடியோவின் காலண்டரில் இருந்த பேபியையே அவரின் கண்கள் ரொம்பப் பிரியத்துடன் பார்த்துக்கொண்டே இருந்தன. இந்த மாதிரி ஒரேயொரு பிள்ளை இருந்தால்கூடப் போதுமே..! ஆஸ்தியையே கொடுக்கலாமே! இப்ப ஆஸ்தி மட்டும்தான் இருக்கு! என்ன பண்றது…

ஒருநாள் அதுவும் தோன்றிவிட்டது…

காவலூர் ஜோசியர் சொன்னபடி இன்னொரு தாரம் ஏற்படுத்திக் கொண்டாலென்ன? அதுவும் வாரிசுக்காக. வேற எதுக்காகவும் கிடையாது! வாரிசுக்காக இன்னொரு கல்யாணம் செய்துதான் பார்ப்போமே என்ற முடிவான தீர்மானத்திற்கு இசக்கி வந்து விடவில்லை. ஆனால் அந்த ஆசைக்கு உள்ளாகிவிட்டார். ஜோசியர் அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாரே!

இசக்கி தன்னுடைய ஆசையை அஞ்சாறு மாசம் பேசாமல் மனசுக்குள்ளேயே வைத்திருந்தார். கடைசியில் வாரிசுக்காக இன்னொரு கல்யாணம் செய்துக்கலாம் என்ற தீர்மானத்திற்கும் வந்து சேர்ந்துவிட்டார். தோதான நேரம் பார்த்து கோமதியிடம் பேச்சை ரொம்பக் கெட்டிக்காரத்தனமாக ஆரம்பித்தார்.

“எதிர்த்த வீட்ல பேரப் புள்ளைங்கள் எல்லாம் கமுதியிலிருந்து வந்திருக்குங்க போலிருக்கு…”

“ஆமாம். பரிட்சை முடிந்து லீவுக்கு வந்திருக்குங்க.”

“நமக்கும் அந்தக் காலத்திலேயே பிள்ளை குட்டின்னு பெறந்திருந்தா இப்படித்தேன் பேரப்புள்ளைங்க இருந்து வெளையாடும் இல்ல?”

கோமதி பேசாமல் இருந்தாள்.

“அதுக்கு குடுத்து வைக்கலை” ஏக்கமாகச் சொன்னார்.

சிறிது நேரம் வெத்தலையில் ஆள்காட்டி விரலால் வாசனைச் சுண்ணாம்பை தடவிக்கொண்டே இருந்தார். அவருடைய மனசு மாதிரியே அந்த ஆள்காட்டி விரலும் ரொம்ப உஷாராய் நிதானமாய் இயங்கிக் கொண்டிருதது.

“இத்தனைக்கும் பாரு, எதிர்த்த வீட்டுக்காரன் என்னைவிட நாலு வயசு சின்னவன். அவனுக்கு பேரன் பேத்திகள் பள்ளியூடத்துக்கே போகுதுங்க… தமாசா இல்ல?”

இதற்கும் கோமதி ஒண்ணும் சொல்லாமல் மெளனமாக இருந்தாள். அவளுக்கு ஒன்று மட்டும் மனசுக்குப் புரிந்தது. அவள் புருசன் எதையோ சொல்ல வந்துவிட்டு வேறு எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார்! ஏன்னா வழக்கமா வெத்தலை போடும்போது அவருடைய ஆள்காட்டி விரல் இவ்வளவு சுண்ணாம்பைத் தடவவே தடவாது…!

“ஒங்க பரம்பரையில் ஒன்னை மாதிரி வேற யாராவது இந்தமாதிரி பிள்ளை இல்லாம இருந்திருக்காகளா?”

“இல்ல..”

“அப்ப நீ ஒருத்திதேன்!”

சிறிதுநேரம் வெத்தலையை மென்று கொண்டிருந்து விட்டு இசக்கி சொன்னார். “இதுல ஒரு விசயம் பாரு, நம்ம ரேடியோ கம்பெனிக்காரன் நமக்குன்னு பாத்து அழகா பாப்பா படம் வரைஞ்ச காலண்டர் போட்டிருக்கான் பாரு! அவனை என்ன பண்ண?”

ஆனால் இசக்கி அண்ணாச்சிக்கே புரிந்துவிட்டது. ‘இதுக்கு மேலும் சுத்தி வளைத்துக் கொண்டிருக்க முடியாது! வெற்றிலைச்சாறை எழுந்துபோய் துப்பிவிட்டு விசயத்துக்கு வந்துவிட்டார்.

“ஒனக்கொரு விசயம் சொல்றதுக்கு மறந்தே போயிருச்சு கோமதி. அஞ்சாறு மாசம் இருக்கலாம். சரியா ஞாபகம் இல்லை. ஒருநா நம்ம கோட்டைச்சாமி அண்ணாச்சி அவுகளுக்கு எதோ சாதகம் பாக்கணும்னு காவலூர் வரைக்கும் போயிட்டு வந்துறலாம்னு சொல்லி என்னையும் கூப்பிட்டாக. நானும் அவுகளுக்குத் தொணையா போலாம்னு போனேன். அந்த ஜோசியர் பெரிய கில்லாடி போலிருக்கு… என்னைப் பாத்ததும், அண்ணாச்சி நீங்க சிம்ம லக்னந்தானேன்னு கேட்டார். நா அப்படியே அசந்திட்டேன்!. இத்தனைக்கும் நா என் சாதகத்தைக்கூட எடுத்திட்டுப் போகலை! பாரு எப்படி அச்சடிச்ச மாதிரி என் லக்னம் என்னன்னு சொல்லிப்புட்டாரு… பெறகுதேன் நானும் என் சாதகத்தை ஆயுள் பலம் எப்படி இருக்குன்னு கேக்கலாமேன்னு எடுத்திட்டுப் போனேன். போனா நா எதிரே பாக்கலை. காவலூர் ஜோசியன் பெரிய குண்டை தூக்கிப் போட்டுட்டான்.”

இசக்கி இடைவெளி விட்டுத் தொடர்ந்தார். “அண்ணாச்சி, ஒங்களுக்கு நீங்க வேணாம் வேணாம்னு சொன்னாலும் இன்னொரு தாரம் வந்தே தீர வேண்டிய யோகம் ஒங்க சாதகத்துல இருக்கு. அது மட்டுமில்லை. அந்தத் தாரத்தின் மூலம் ஒங்களுக்கு வாரிசுகளும் வந்தே ஆகணும்னு அடிச்சிச் சொல்லி எங்கிட்ட பந்தயமே கட்டியிருக்கான். அடப்போடா கோட்டிக்காரா, ஒனக்குத் தலைக் கிறுக்குத்தேன் பிடிச்சிருக்குன்னு சொல்லி சிரிச்சுக்கிட்டே எந்திரிச்சி வந்திட்டேன். பாரேன் அவனை, விட்டா எனக்கு அவனே கல்யாணத்தையே பண்ணி வச்சிருவான் போல! நல்ல கூத்து…!

புகையிலை விரிந்து விட்டது…! இனி?

இசக்கி வெத்தலை போட்டுக்கொண்டே உட்கார்ந்திருந்தார். கோமதி தலையை வாரிமுடித்து மூஞ்சியைக் கழுவக் கொல்லைப்புறம் போனாள். அஞ்சு நிமிசம் கழித்து இசக்கி தலையைத் திருப்பி கொல்லைப்புறத்துப் பக்கம் ஒருமுறை நோட்டம் விட்டுவிட்டு மறுபடியும் திரும்பிக் கொண்டார். அவரின் மனசின் பின்னால் இருக்கும் எண்ணம் கோமதிக்கு தெரியாமலா இருக்கும்?

இசக்கி மெளனமாக உட்கார்ந்திருந்தார். சமையலறையில் அரவம் கேட்டது.

“கோமதி… ராத்திரிக்கு குச்சிக் கருவாட்டு கொழம்பு பண்ணேன். சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி… நா அதுக்குள்ளே கடை வரைக்கும் போயிட்டு வந்திர்றேன்.”

சுத்தியும் கிள்ளி எறியப்பட்ட வெத்தலைக் காம்புகள் சிதறிக் கிடக்க, இசக்கி சட்டுனு செருப்பை மாட்டிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *