வாடகைத் தாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 7,856 
 
 

அன்று காலை செய்தித்தாளின் முதல் பக்கத்தில், ‘காதம்பரி இன்டஸ்ட்றீஸ் சேர்மேன் அன்ட் மானேஜிங் டைரக்டர் சுகுமார் மாரடைப்பால் மரணம்’ என்ற செய்தியைப் படித்த டாக்டர் வத்சலா அதிர்ந்து போனாள். உடம்பு பதறியது. சுகன்யாவின் நிலமையை எண்ணி கலக்கமுற்றாள்.

சுகன்யா…

டாக்டர் வத்சலாவின் க்ளினிக் பெங்களூரில் மிகவும் புகழ் பெற்றது. பெண்கள் சம்பந்தப்பட்ட தாய்மைக் குறைகள் அனைத்தையும் அலசி களைந்து தீர்வு காண்பதில் மிகப் பிரபலம். கடந்த பதினைந்து வருடங்களில் டாக்டர் வத்சலாவின் திறமையினால் மருத்துவப் பிரச்னைகளைத் தாண்டி ந்ல்ல முறையில் குழந்தைப் பேறு பெற்றவர்கள் ஏராளம்.

அந்த வகையில் சுகன்யா-சுகுமார் தம்பதியினர் இரண்டு வருடங்களுக்கு முன்னால் டாக்டர் வத்சலாவிடம் அறிமுகமானார்கள். திருமணமாகி ஆறு வருடங்களாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்தார்கள். அவர்கள் இரண்டு போ¢டமும் செய்யப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, ஒரு நல்ல வாடகைத் தாயை ஏற்பாடு செய்வதுதான் சரியான அணுகுமுறையாகப் பட்டது.

டாக்டர் வத்சலா தன்னிடமிருந்த பட்டியலில் இருந்து மாயாவை வாடகைத் தாயாக பரிந்துரை செய்தாள். மாயாவுக்கு வயது இருபத்தியெட்டு. கணவனையும் குழந்தையையும் ஒரு பெரிய தீ விபத்தில் பறி கொடுத்தவள். படித்தவள். பார்க்க மிகவும் கண்ணியமாக காணப்பட்டாள். சுகன்யாவுக்கு மாயாவை மிகவும் பிடித்துப் போனது.

மாயாவுக்கு வைரஸ். பாக்டீரியா போன்ற தேவையான அனைத்து மருத்துவ சோதனைகளும் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் சுகுமாரின் ஆரோக்கியமான விந்தணுக்களை, மாயாவின் சினை முட்டைகளுடன் நேரடியாகச் செலுத்தியதில் மாயா வாடகைத்தாயாக தயார் செய்யப் பட்டாள்.

கவனமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் போடப்பட்டு சுகுமாரும் மாயாவும் கையெழுத்திட, சுகன்யாவும் டாக்டர் வத்சலாவும் சாட்சிகளாயினர். அப்போது சுகுமார், “இந்த ஒப்பந்தம் சட்டப்படி செல்லுமா டாக்டர்?” என்று கேட்டது டாக்டர் வத்சலாவுக்கு இப்போது நினைவுக்கு வந்தது.

“இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி இந்த மாதிரியான ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லாது, எனினும் ஒரு பாதுகாப்பு கருதிதான் இம்மாதிரியான ஒப்பந்தங்கள் போடப் படுகின்றன. இவை நீதி மன்றத்தில் செல்லுபடியாகாது. இது குறித்து தற்போது நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பட், நீங்க இதுல பயப்படறத்துக்கு ஒன்றுமில்லை” என்று டாக்டர் சொன்னதும் சுகுமார் நிம்மதியானான்.

டாக்டர் வத்சலாவின் தனிப்பட்ட கவனிப்பில் க்ளினிக்கை ஒட்டியிருந்த விடுதியில் மாயா தங்க வைக்கப்பட்ட அடுத்த பத்து மாதங்களில் ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்று சுகன்யாவிடம் ஒப்படைத்தபோது, சுகன்யா மாயாவை கட்டிப் பிடித்து கண்களில் நீர் மல்க நன்றி சொன்னாள். விடுதி செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, தவிர மாயாவுக்கு நான்கு லட்சம் பணம் கொடுத்தாள். சுகுமார் மிகப் பெருந்தன்மையுடன் டாக்டர் வத்சலாவின் க்ளினிக்கின் வள்ர்ச்சிக்காக இன்னொரு நான்கு லட்சம் கொடுத்தபோது டாக்டர் வத்சலா நெகிழ்ந்து போனாள். சுகுமார் இப்போது உயிருடன் இல்லை என்பதை நினைத்தபோது டாக்டர் வத்சலாவின் கண்களில் நீர் முட்டியது.

டக்டர் வத்சலா ஹாஸ்பிடலுக்கு போன் செய்து அன்றைய காலை அப்பாயின்மென்ட்களை கேன்சல் செய்தாள். சுகன்யாவை நேரில் பார்த்து ஆறுதல்சொல்லக் கிளம்பினாள். காரில் ஏறி அமர்ந்தபோது, மொபைல் சிணுங்கியது. மாயாவின் பெயருடன் ஒளிர்ந்தது.

“சொல்லு மாயா..”

குரலில் சோகத்துடன், “டாக்டர் இன்னிக்கு பேப்பர்ல சுகுமார் சார் ஹார்ட் அட்டாக்கில் இற்ந்துட்டார்னு பார்த்தேன்” என்றாள்.

டாக்டர் சற்று சுதாரித்துக் கொண்டு, “ஆமா நானும் பார்த்த்தேன், அதுக்கு இப்ப என்ன?” என்றாள்.

“இல்ல டாக்டர் என் மனசுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கு, நீங்க சுகன்யா மேடம் அட்ரஸ் கொடுத்தீங்கன்னா…”

“மாயா தெரியும் நீ இப்படி ஏதாவது ஆரம்பிப்பேன்னு… ஒப்பந்தப்படி குழந்தை பிறந்த பிறகு உனக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,உன் கடமை குழந்தை பெற்றுக் கொடுத்ததுடன் முடிந்தது… உன் செட்டில்மென்டும் ஆச்சு.. நீ அமைதியாக இருந்தாலே சுகன்யா மேடத்துக்கு நீ செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.. புரியுதா? ” என்று குரலில் கடுமை காட்டினாள்.

அழுகையினூடே “சாரி டாக்டர் மேடம்” என்று சொல்லி மொபைலை துண்டித்தாள்.

சுகன்யாவின் பெரிய வீட்டைச் சுற்றி ஏகப்பட்ட கூட்டம். உள்ளே சென்ற டாக்டர் வத்சலாவை சுகன்யா கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள். குழந்தை வருண் விவரம் புரியாது அம்மாவின் கால்களை கட்டிக்கொண்டு அழுதான்.

இரண்டு மாதங்கள் சென்றன. சுகுமாரின் மறைவுக்குப் பிறகு, சுகன்யா காதம்பரி இண்டஸ்றீஸ் பொறுப்புகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டதை பேப்பரில் பார்த்து தெரிந்து கொண்டாள்.

அன்று ஒரு சனிக்கிழமை மதியம்…

டாக்டர் வத்சலாவின் செல்•போன் சிணுங்கியது.

“ஹலோ.”

டாக்டர், சுகன்யா ஹியர், உங்களை நான் நேரில் பார்த்து பர்சனலா நிறைய பேசணும், இன்னிக்கு டின்னருக்கு கோல்டன் பாம்ஸ் வர முடியுமா?”

“கண்டிப்பா வரேன் சுகன்யா.”

அன்று இரவு சென்றாள்.

சுகன்யா மிகவும் சோர்ந்து இருந்தாள். வளப்பமாக இருந்தவள் வதங்கி காணப்பட்டாள். குழந்தை வருண் அவள் மடியில் தூங்கிக் கொண்டிருந்தான்.

டின்னர் முடிந்து டெஸர்ட் ஆர்டர் செய்துவிட்டு, சுகன்யா விஷயத்துக்கு வந்தாள்.

“டாக்டர் என்னை உங்களுக்கு நன்றாகத் தெரியும்.. பலமுறை யோசித்த பிறகுதான் நான் உங்களிடம் இதைப் பேசுகிறேன். சுகுமாரின் மறைவுக்குப் பிறகு எனக்கு பொறுப்புகளும் சுமைகளும் அதிகமாகிவிட்டன. வருண்தான் எனக்கு மிகப் பெரிய ஆறுதல்… அவரை அப்படியே உரிச்சு வச்சிருக்கான்.அவனுடைய ஒவ்வொரு அசைவும் எனக்கு அவரைத்தான் ஞாபகப் படுத்துகின்றன.

“என்னுடைய பணிச்சுமையின் காரணமாக என்னால் அவனை சரிவர கவனிக்க முடியவில்லை. அவருடைய ம்றைவுக்குப் பிறகு என்னுடன் இருந்த சில உறவினர்களும் ஊருக்கு கிளம்பிச் சென்று விட்டனர். நானும் வருணும் இப்போது தனித்து விடப்பட்டிருக்கிறோம், அதனால…

“சொல்லு சுகன்யா”

“டாக்டர் உங்கள் உதவியுடன் மாயாவை நான் நேரில் பார்த்துப் பேசி, அவளை என்னுடனேயே இருக்கச் சொல்ல வேண்டும்… எனக்கும் வருணுக்கும் இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என நான் நம்புகிறேன். மாயாவின் அருகாமை எனக்கு யானை பலம். அவள் என் குழந்தையை மிக நன்றாக கவனித்துக் கொள்வாள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

“…..”

“ப்ளீஸ் டாக்டர், ஒப்பந்தம் அது இது என என்னிடம் பேசி என் மனதை மாற்ற முயலாதீர்கள். அந்த ஒப்பந்தம் என்னுடைய பாதுகாப்பிற்காகத்தானேபோடப் பட்டது? அதை மீறுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் டாக்டர்.” கெஞ்சும் குரலில் கேட்டாள்.

டாக்டர் வத்சலாவுக்கு பரிதாபமாக இருந்தது. சுகுமார் இல்லாத நிலையில் சுகன்யாவின் கோரிக்கையில் நியாயம் இருப்பதாகப் பட்டது.

“எனக்கு மாயா மீது நம்பிக்கை இருக்கிறது. படித்தவள், பண்பு தெரிந்தவள். நாளைக்கே நாம் அவளை நேரில் சந்தித்துப் பேசலாம்…இன்•பாக்ட் சுகுமார் மறைந்த தினத்தன்று அவள் எனக்கு •போன் செய்து உன் முகவரியைக் கேட்டாள். நான் தரவில்லை. ஒப்பந்தத்தை
நினைவு படுத்தி அவ்ளை ஒதுங்கி இருக்கச் சொன்னேன்.”

உடனே தன்னுடைய செல்•போனை எடுத்து அதில் மாயாவைத் தொடர்பு கொண்டு பேசினாள்.

“நாளை காலை பத்து மணிக்கு வரச் சொன்னாள். நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை.. நீ என் வீட்டிற்கு வந்து விடு, நாம் ஒரே காரில் என் டிரைவருடன் சென்று மாயாவை நேரில் பார்த்து பேசி முடித்து விடலாம்.”

மறு நாள்.

மாயாவின் வீட்டை தேடிச் சென்றார்கள். டிரைவருக்கு அந்த ஏரியா நன்றாகத் தெரிந்ததினால் வீட்டைக் கண்டு பிடிப்பது சுலபமாக இருந்தது.

மாயா ஒரு சிறிய அடுக்கு மாடியின் இரண்டாவது தளத்தில் குடியிருந்தாள். வீட்டை சுத்தமாக வைத்திருந்தாள். பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அகிலாண்டேஸ்வரி படம் மையமாக மாட்டியிருக்க மற்ற அம்மன்கள் சுற்றிலும் தொங்கினர். ஊதுபத்தியின் மணம் கமழ்ந்தது.

“எப்படி இருக்கீங்க மேடம், நான் சார் தவறிப்போனதை பேப்பரில் பார்த்தவுடன் உடனே டாக்டர் மேடத்துக்கு •போன் பண்ணேன்…உங்களைப் பார்த்து ஆறுதல் சொல்ல உங்க முகவரி கேட்டேன். அவங்க தரலை. ஒப்பந்தப்படி, நான் உங்களைப் பார்க்க முயற்சி செய்வதோ,
தொடர்பு கொள்வதோ கூடாது என்பதால் டாக்டர் என்னை அமைதியாக இருக்கச் சொன்னாங்க.”

“எனக்குப் புரியுது மாயா, நீ ரொம்ப டீஸன்டானவ.. படிச்சவ, பண்பானவ எனக்கு இப்ப நீ ஒரு பெரிய உதவி செய்யணும், செய்வியா?”

“கண்டிப்பா மேடம், என்ன செய்யணும் சொல்லுங்க.”

டாக்டர் வத்சலா, ” மாயா, சுகன்யா மேடம் இப்ப தனியா குழந்தையோட இருக்காங்க. நீ பெற்றெடுத்த குழந்தை… சாரி நீ பெற்றுக் கொடுத்த குழந்தை. மேடம் கம்பெனி சம்பந்தப்பட்ட வேலைகளில் அதிக நேரம் செலவழிப்பதால், குழந்தையை சரிவர கவனிக்க முடியவில்லை…
நீ அவங்களோட இருந்து, குழந்தையை நன்றாக கவனிச்சுக்கணும்னு விருப்பப் படறாங்க..” என்றாள்.

“…….”

சுகன்யா, “நீ யோசிச்சு ரெண்டு நாள்ல டாக்டர்கிட்ட சொன்னாப் போதும். நானே இங்க வந்து உன்னை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன், நீ என் சிஸ்டர் மாதிரி மாயா… உனக்கு எல்லா மா¢யாதைகளும் நம்ம வீட்டில் கிடைக்கும்.” என்றாள்.

மாயா தயக்கத்துடன்,”என்ன மேடம் இப்படி திடீர்னு… நான் கொஞ்சம்கூட இதையெல்லாம் எதிர்பார்க்கல,என்னால இதுக்கு சம்மதிக்க முடியாது. ரொம்ப வருத்தமா இருக்கு” என்றாள்.

“மாயா நீ படிச்சவ, உன் தயக்கம் எனக்குப் புரியுது… திடீர்னு உன் சுதந்திரத்தை இழந்துட்டு இன்னொருத்தர் வீட்டில் எப்படிப் போய் இருப்பது…நாளைக்கே பிடிக்கலைன்னு சொன்னா நம்மால் என்ன செய்ய முடியும்னு நீ நெனக்கிற… நியாயம்தான். அதனால உன் பாதுகாப்பு கருதி நாளைக்கே உன் பெயர்ல நீ எவ்வளவு பணம் கேட்டாலும் நான் டெபாசிட் செய்கிறேன்..தவிர நீ என்ன வேணும்னாலும் எங்கிட்ட கேளு.. ஆனா நீ வரமாட்டேன்னு மட்டும் சொல்லாத மாயா..” குரல் உடைந்தது.

“ஐயோ மேடம் எனக்கு உங்க பணம் தேவையில்லை, நீங்க எவ்வளவு நல்லவங்கன்னு நான் அனுபவபூர்வமா உணர்ந்திருக்கிறேன். உங்க அன்பும்,பாசமும் எனக்குத் தெரியும். உங்க வீட்ல நான் தங்கி குழந்தையைப் பார்த்துக் கொள்வது என்னுடைய பாக்கியம்… எனக்கு கொடுத்து வைக்கலை அவ்வளவுதான்… என்னால வர முடியாது மேடம், ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க…”

” அது தான் ஏன் மாயா? ”

“ஏன்னா இப்ப நான் இன்னொருத்தர் குழந்தைக்கு வாடகைத் தாய்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *