வினோதன் மாவெட்டையில் உள்ள தங்கள் வயலை நோக்கி அவசரமாகச் சென்றான். தப்பு ஆர்வக் கோளாற்றில் அதை நோக்கி ஓடினான். வாய்க்காலில் நீர் கரை புரண்டு கடல் நோக்கித் தீரக்காதலில் மூர்க்கமாக ஓடியது. வெள்ளை கடற்கரை, மேற்கு கடற்கரையென மழைநீரில் கொள்ளை ஆசையோடு வாயைத் திறந்த இரு கடல்கள். எவ்வளவு சென்றாலும் குடித்து ஏப்பம்விட்டு அலைகளாகக் கூத்தாடும் கோலம். உப்பு நீரோடு நன்னீரும் கலந்து உப்பாகும் உவர்க்கும் உண்மை. கரைகளில் நிற்கும் தென்னைகளும் பனைகளும் அலைகளின் அதிகாரத்திற்குப் பயந்து தலையாட்டும் வாலாயம். இந்த வெள்ளம் கடலுக்குப் போக வேண்டியதே என்பதாக வினோதன் எண்ணினான். வயல் தடவி வந்த காற்று வினோதனுக்குக் கூதல் தந்தது ரோமம் குச்செறியச் செய்தது. வரம்பில் கிடந்த சாரைப் பாம்பு வயலில் இறங்கி நீந்தியது. நாகப் பாம்பும் உலவும். தவளை, எலி பிடித்துத் தின்னும். தவளைகள் சிலவேளை காலில் மிதிபடும். வினோதன் மேலில் சட்டையில்லாது சென்றான். அவதியில் அதை மறந்துவிட்டான். கூதல் கண்ட அவன் உடம்பு நடுங்கியது. மாவெட்டையில் பயிர் மழையில் படுத்தது விட்டது. கூதலில் மனிதனின் மயிர் குற்றிட்டது.
பருவம் தப்பிய மழை இது. பொன்னாய் விளைந்து குலுங்கிய நெற் கதிர்கள் இப்போது பூமியோடு சாய்ந்த வேதனை. ஐப்பசியில் விதைத்த நாள் தொடக்கம் ஒவ்வொரு நாளும் வந்து வயலைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் போவது அவன் வழக்கம். நெல்லில் இருந்து முளை வந்து, அது சிறு பயிராகி, மழை பெய்து, அதில் அது நீந்திப் பிழைத்து, பசளை இட்டுப், பச்சையாகி, உயர்ந்து வளர்ந்து, குடலைப் பிடித்து, கதிர்கள் தள்ளி, அதில் பால் பிடித்து, பால் முற்றி, நெல்லாகி, அந்த நெல்லின் வாசம் குதுகலம் தரும் வரையும், ஒவ்வொரு நாளும் அவன் தனது பிள்ளைகளைக் காண்பது போல, வாஞ்சையோடு, ஓடி ஓடி வந்து அவற்றைப் பார்த்து இன்பம் கொள்வான். தை பூசத்திற்குப் பிள்ளையாரும் வந்து பார்த்துவிட்டுப் போனார். அவருக்குச் சக்தியில்லை? அல்லது புக்கையில் விருப்பமில்லை? இனிப் பீச்சா கேட்டாலும் கேட்பாரோ?
இன்னும் சிலநாட்களில் அருவி வெட்டுவதாய்த் திட்டம். அதற்கிடையில் வங்கத்தில் சூல் கொண்ட சூறாவளி, கடலை உறிஞ்சிக் கார்மேகங்களாகி, காற்றோடு ஈழம் வந்து, காலம் தவறிய மழையை வானம் திறந்து ஊற்றி விட்டது. எங்கும் வெள்ளக்காடு. சீனாவின் மஞ்சள் நதி திடீரென எங்கள் தீவில் மூர்க்கமாக ஓடியது.
தலைக் கனத்தில் பெண் போல தகதகக்கும் பொன் நிறத்தில், குனிந்த பயிர் இயற்கையின் கோரம் தாங்காது மண்ணோடு மண்ணாகப் படுத்துவிட்டன. அதன் மேல் வெள்ளம் பாய்கிறது. வினோதனுக்குத் தங்கள் வயலில் சிலவேளை வெள்ளம் நிற்காதோ என்கின்ற நப்பாசை. அவன் அவசர அவசரமாக வயலை நோக்கி நடந்தான். இல்லை. முடியவில்லை. ஓடினான். முடியும்வரை, மூச்சு இரைக்க, கால்கள் சறுக்கச் சறுக்க, பாம்புகளை, தவளைகளைப் பார்க்க அவகாசம் இல்லாதவனாய், மாவெட்டையை நோக்கி ஓடினான். எங்கும் மஞ்சள். வெள்ளமும் பயிரும் மஞ்சள். மஞ்சள் நதியல்ல மஞ்சள் கடலான மாவெட்டை. அதில் தங்கமான நெல்மணிகள் அடித்துச் செல்லப்டுமோ என்கின்ற அலமலக்கம்.
வினோதன் பள்ள வயலை வந்து பார்த்தான். வெள்ளம் கண்ணுக்குத் தெரிந்தவரை மஞ்சள் கடலாக நின்றது. மனது சோர்ந்து போயிற்று. விளைந்த குலுங்கிய வயல் இன்று ஆழியான காட்சி. ஏக்கத்தோடு மேட்டு வயலை நோக்கி ஓடினான். முழுமையாக ஆக்கிரமிப்பு செய்ய முடியாத வெள்ளத்தின் தோல்வி.
வினோதன் வீட்டிற்குத் திரும்பி ஓடி வந்தான். வேலைக்காரர்களைப் பிடிக்க அவர்கள் குடியிருப்பு நோக்கி ஓடினான். அவர்கள் அவனைப் பார்த்துச் சிரித்தனர். கோமாளியே அவர்கள் குடியிருப்புத் தேடி வந்ததாகக் குமுறிக் குமுறிச் சிரித்தனர். பின்பு வேலைக்காரர்கள் கூதல் என்றுவிட்டு கொட்டிலுக்குள் புகுந்தனர். கருப்பட்டியும் தேயிலையும் மட்டும் போதும் என்றனர். அருவி வெட்ட யாரும் வரவில்லை. அநியாயம் உப்பட்டி. அவன் மனது துவண்டது. இம்முறை சூடு மிதிப்பு இல்லை. செத்தல் மிளகாய் பொரித்துத் தேங்காய்ப் பாலில் கரைத்துவரும் கஞ்சி குடிக்கும் பாக்கியம் இல்லை. கள் வாங்கலும் இல்லை. சரி போகட்டும். வினோதன் சோரவில்லை. அண்ணனோடு மீண்டும் வயலுக்கு வந்தான். வெள்ளத்தில் அருவி வெட்டும் வேடிக்கை தொடங்கினான். வெட்டியதை வரப்பில் தண்ணி படிய வைத்தார்கள். மஞ்சள் ஆற்றில் வண்டில்விட முடியாது. உப்பட்டியைச் சிறு சிறு கட்டுகளாய் கட்டித் தலையில் சுமந்து சென்றார்கள்.
நாச்சியார் வீடா? நாற்சுவர் வீடா? நான்கு விறாந்தை. நடுவில் சீமேந்து முற்றம். நெல்லுப் போடத் தாராளமான இடம். எலிகள் வளையில் சேர்ப்பதான இவர்கள் போராட்டம். வீட்டில் போரடித்து நெல்லுக் காயப் பண்ணியது அவர்கள் கெட்டித்தனம். வினோதனுக்கு அம்மா கஞ்சி கரைத்துக் கொடுத்தா. ஆனால் மாட்டிற்கு மாத்திரம் வீட்டிற்குள் வருவதற்கு அனுமதியில்லை. கோமயம் பருவாய் இல்லை. கோசலத்தைத் தாங்க முடியாது. அம்முறை சூடு மிதிக்க முடியாது போனமை அவனுக்கு வருத்தம்தான்.
இப்போது வினோதனுக்கு நாற்பத்து மூன்று முடிகிறது. விகரனுக்கு பதின்நான்கு தொடங்குகிறது. விகரன் இங்கே (ஐரோப்பாவில்) பிறந்து, இங்கே வளர்ந்து, தரம் பார்த்து, பெயர் பார்த்து, விலை பார்க்காது, ஆடைகளும், காலணிகளும், கணினிகளும், அலைபேசிகளும், அவர்களின் வளையா முதுகுகளும்…
குளிர்காலம் முடிந்து கோடை காலம் பிறந்தது. கார்களும் தங்கள் காலணிகளை மாற்றிவிடச் சொன்னது. வினோதன் மகனைப்பார்த்து,
‘அந்த ரயர்களை எடுத்து வந்து தா விகரா. நான் அதை மாத்தோணும்.’ என்றான்.
‘இங்க பிள்ளையள் அப்பா அம்மாவுக்கு ரயர் மாத்தவெல்லாம் உதவி செய்யிறேல்ல. உது பெரியாட்களின்ர வேலை. உங்களுக்கு இதுவும் தெரியாதே? நீங்களே அதை மாத்துங்கோ. நான் இப்ப அலுவலா இருக்கிறன்.’ என்றான் விகரன்.
வினோதனை அம்மா வயலைப் போய் பார்த்துவா என்று சொன்னதாக அவனுக்கு ஞாபகம் இல்லை.