வளையல் துண்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 5,828 
 
 

தொட்டதெல்லாம் தங்கமாகும் என்கிறார்களே, அந்த ஜாதி பரமசிவம் பிள்ளை. வாழ்க்கையின் மேடு பள்ளங்கள் யாவும் அவருக்குப் பொன் விளையும் பூமி என்றால் பொய்யல்ல. அவர் மன்னிக்க முடியாத தவறுகள் செய்த இடங்களில் கூட அவருடைய குற்றம் பாவிக்கப்படாமல் அவர் தப்பித்துக்கொள்கிறார்.

நாங்களிருவரும் போன பத்து வருஷங்களாக நண்பர்கள். இருவர் குடும்பத்தினரும் ரொம்ப அன்னியோன்னியமாக அளவளாவிக் குலவுகிறோம். அதனால் எனக்கு அவருடைய வாழ்க்கையைப் பற்றி ரொம்ப அந்தரங்கமாக அறியச் சந்தர்ப்பங்கள் கிடைத்தன.

முதல் முதலாக அவருடன் எனக்கு அறிமுகமேற்பட்டு நான் அவரது அதிர்ஷ்ட ஜன்மத்தைப்பற்றி அறிந்த நிமிஷ முதல், அவரிடம் எனக்கு அசைக்கமுடியாத ஒருமதிப்பு ஏற்பட்டு விட்டது. அவருக்கு வாய்த்தமனைவிதானென்ன!எல்லாம் வரப்பிரசாதமாகக்கிடைத்தவர் கள் போல.

சாதாரணமாக என்னைப்போல வாழ்க்கையின் கசப்புகளை அதிகமாக அனுபவித்துள்ள ஒருவனிடம், அவரது கலப்பற்ற சந்தோஷ சம்சாரம் பொறாமையைத்தான் எழுப்பும். ஆனால் நான் ஆதிமுதல் இன்றுவரை அவரிடம் கொஞ்சம் கூட பொறாமைப்பட்டது கிடையாது. அதற்கு என் மனப் பரிசுத்தம் – அத்தகைய இழி குணத்திற்கு இடமே கொடாத என் மேன்மைக்குணம் தான் காரணமென்று யாரும் கருதிவிடக்கூடாது.

பரமசிவத்தின் சுபாவம், அவருடைய குடும்பத்தினரின் அந்தப் பொறுமைக்குணம்தான் அதற்குக் காரணம்.

முதல் முதலாக நாங்களிருவரும் அக்கம்பக்கத்து வீட்டுக் காரர்கள் என்ற முறையில்தான் அறிமுகமானோம். சிறிது நாட்களில் ஒருவர் வீட்டுக்கு மற்றவர்போக ஆரம்பித்தோம். முதல் நாள் நான் அவர் வீட்டிற்குப் போனபோது கண்ட காட்சி இன்னும் என் உள்ளத்தில் தளிராக இருக்கிறது. “ஸார்” என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தேன். நடையைத் தாண்டி கூடத்தில் நுழைந்தேன். அங்கே பிரஸன்னமான காட்சியைக் கண்டவுடன் பேசாமல் நின்றுவிட்டேன்.

பரமசிவம் பிள்ளையின் மனைவி குஞ்சம்மாள் ஒரு ஜரிகை வேஷ்டியை முண்டாசு கட்டிக்கொண்டு, புடவையை இழுத்து ஸைக்கிள் கட்டாகக் கட்டிக்கொண்டு “உஷார்” (Attention) நிலைமை யில் நின்றிருந்தாள். அவள் எதிரில் மூன்று சிறுவர்கள், அவளைப் போலவே உஷார் ஆகின்றனர்.

குஞ்சம்மாள் உத்தரவு கொடுத்தாள்: “ரைட் டேர்ன்” பிள்ளைகள் வலது பக்கம் திரும்பினார்கள். “எபவுட் டேர்ன்” பிள்ளைகள் வலது புறமாகச் சுற்றித் திரும்பினார்கள். “ரைட் டேர்ன்!” மறுபடி பிள்ளைகள் நேர் எதிரே திரும்பினார்கள்.

“டிஸ்மிஸ்”

குழந்தைகள் மூவரும் ஓரெட்டு முன்னால் எடுத்து வைத்து நின்று சிப்பாய்கள் தோரணையில் சலாம் செய்து விட்டுக் கலைந்தார்கள். மூவரில் நடுவில் நின்றிருந்த சிறுவன் (அவன்தான் பரமசிவத்தின் மகன்) எட்டு வயதிருக்கும் – சிரித்துக்கொண்டே முன்னால் பாய்ந்தான்.

குஞ்சம்மாள் அவனை ஆவலோடு இழுத்துக் கட்டித் தழுவினாள். ஆனால் அவனை அவள் முத்தமிட முயன்ற சமயம், அவன், எதிரில் நின்ற என்னைப் பார்த்துவிட்டான். அவனுடைய கண்களில் தோன்றிய மாறுதலைக் கண்டவுடன், குஞ்சம்மாள் திடுக்கிட்டுத் திரும்பி என்னைப்பார்த்து விட்டாள்.

அவ்வளவுதான். அவள் முகத்தில் தோன்றிய குளறலை ஊகித்துக் கொள்ளலாம். குழந்தையை அணைத்திருந்த கைகள், மின்சார விசையைத் தட்டினவுடன் துடிக்கும் இயந்திரம் போலத் தலை முண்டாசைக் குலைத்து இழுத்தன. ஒரே பாய்ச்சலில் பக்கத்திலிருந்த அறைக்குள் நுழைந்து விட்டாள்.

சிறுவர்கள் மூவரும் தடுமாறிய சிந்தனையுடன் என்னைப் பார்த்து கொண்டு நின்றார்கள்,

“பாலு! அப்பா இருக்காரா?”

பாலு பதில் சொல்லவில்லை. “அப்பா! அடுத்த வீட்டு மாமா வந்திருக்காங்க” என்று கூவிக்கொண்டே குஞ்சம்மாளின் பின்னா லேயே ஓடினான்.

அடுத்த நிமிஷம் பரமசிவம் பிள்ளை முகத்தில் புன்னகை யுடன் வெளியே வந்தார். “வாருங்கள், வாருங்கள்; இப்படி உள்ளே வாருங்கள்” என்று உபசரித்து என்னை அறைக்குள் அழைத்துக் கொண்டு போனார்.

நான் அறையினுள் நுழைந்தவுடன் குஞ்சம்மாள் வெளியே போய்விட்டாள். பரமசிவம் பிள்ளை என்னை அறையில் உட்கார வைத்தபின்னர் “பார்த்தீர்களல்லவா,அமர்க்களத்தை? என்மனைவி ஆண்பிள்ளையாகப் பிறந்திருந்தால் ரொம்பப் பிரசித்தி பெற்றிருப் பாள். இப்பவும்தான் என்ன? அவள் ஆளப்பிறந்தவள், ஆனால் கொஞ்சம் அளவுக்கு மிஞ்சிப் பெண்மை கலந்துவிட்டது” என்றார்.

கொஞ்சநேரம் வரை பேசிக்கொண்டிருந்தோம். தரையில் என் காலடியில் கிடந்த ஒரு உடைந்த வளையல் துண்டைத் தற்செயலாகப் பார்த்தேன். அதையெடுக்கக் குனிந்தேன். நான் குனிந்ததைக் கண்ட வுடன், அவருடைய பார்வையும் தேடிச் சென்று வளையல் துண்டையடைந்தது.

அதைக்கையில் எடுத்துக்கொண்டு “பார்த்தீர்களா? இப்படி நடுவீட்டில் கிடக்கிறது. யாருடைய காலிலாவது குத்திவிட்டால் என்ன செய்வது?” என்றேன்.

பரமசிவம்பிள்ளைகையை நீட்டி அதை வாங்கிக் கொண்டார். இருவிரல்களால் அதைத் தூக்கிப் பிடித்து, இரண்டொரு தடவைகள் நிதானமாக அதைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். பிறகு என்னைப்பார்த்துப் புன்னகை செய்தார். “உங்களுக்கு அவசரமாகப் போகவேண்டிய வேலையிருக்கிறதோ? இல்லையே. ஆனால் கொஞ்சம் சாவகாசமாக இருந்துவிட்டுப் போகலாம். இந்த வளையல் துண்டைப் பார்த்தவுடன் எனக்கு பழைய சம்பவ மொன்று ஞாபகம் வருகிறது. அது நான் மறந்து விட்ட ஒரு சம்பவ மன்று. ஆனாலும் இந்த வளையல் சில்லு என் ஞாபகத்தில் அந்த விஷயத்தை அதிகப் பசுமையாக ஆக்கிவிட்டது” என்று சொல்லி விட்டுக் குழந்தைகளை கவனித்தார்.

அவர்கள் மூவரும் அறையின் மறு கோடியில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு ஏதோ ஆலோசனையில் மூழ்கியிருந்தனர்.

பரமசிவம் பிள்ளை “பார்த்தீர்களா? ஏதோ “கான்ஸ்பிரஸி” (சதியாலோசனை) நடக்கிறது.இவள் அந்தப்பயலுக்கு என்னவெல்லா மோ விளையாட்டுகள் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாள். அந்த அக்கிரமம் சகிக்க முடியவேயில்லை சார்! அன்றொரு நாள் இந்தப் பயல்கள் மூன்றுபேரும் சேர்ந்து, சிவாஜியும் அவனுடைய இரண்டு தளகர்த்தர்களும் ஆகிவிட்டார்கள். நான் ஒரு நவாபின் தளகர்த்தன். என்னைக் கைதியாக்கி, ஜீஜாபாயிடம் (சிவாஜியின் அன்னை ) கொண்டு போனார்கள். அந்த “அம்மா”ள் தயவால் எனக்கு விடுதலை கிடைத்தது.

மகனிடம் “தம்பீ! நீங்கள் மூன்று பேரும் அப்படிக் கூடத்தில் போய் விளையாடுங்கள். நானும் மாமாவும் பேசப் போகிறோம். இப்போ தொந்தரவு செய்யக் கூடாது” என்றார்.

பையன் ரொம்ப ஆலோசனையால் மருண்ட பார்வையுடன் அவரைப் பார்த்தான். அடுத்த நிமிஷம் தோழர்களுடன் வெளியே போய்விட்டான்.

பரமசிவம் பிள்ளை அவர்கள் வெளியே போகும்வரை அவர் சளையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டுத்திரும்பினார். அவர்களிரு வரும் என் மைத்துனரின் குழந்தைகள்” என்று ஆரம்பித்தார். “மூன்று பேரும் சேர்ந்துவிட்டால் போதும்; வீடு ஹதம். அதோடு, இவளும் சேர்ந்துகொண்டால் சொல்லவே வேண்டிய தில்லை.”

“அது கிடக்கட்டும். நான் சொல்லவந்த சங்கதியைச் சொல்லி விடுகிறேன். இன்று காலையில் என்மைத்துனர் மகள் வந்திருந்தாள். அவள் கை வளையல்தான் இது என்று நினைக்கிறேன். விளை யாடும் போது எதிலாவது பட்டு உடைந்திருக்கும். இதைப் பார்த்த வுடன் எனக்கு அந்தப் பழைய விஷயம், அதன் முழுவேகத்துடனும் நினைவிற்கு வருகிறது.

“அப்போது நாங்கள் புனாவிலிருந்தோம். நான் மிலிட்டரி டிபார்ட்மெண்டில் (ராணுவ இலாகாவில்) வேலைக்குச் சேர்ந்து ஒரு வருஷமிருக்கும். புனாவில் வேலை ஒப்புக்கொண்ட ஆறாம் மாதம், என் மனைவியையும் உடன் அழைத்துக்கொண்டு போய் வைத்துக் கொண்டேன். அப்போது அவளுக்குப் பத்தொன்பது வயது.

“புனாவில் நான் குடியிருந்தவீட்டுக்குப் பக்கத்து வீட்டில் நம்ம பக்கத்து மனிதர் ஒருவர் குடும்பத்துடன் குடியிருந்தார். அவருக்குப் புனாவில் எங்கேயோ வேலை அவர்கள் வீட்டில், அவரது தூர பந்துவான ஒரு பாலிய விதவையும் இருந்தாள். அந்தப் பெண்ணுக்கு அப்போது இருபது வயதிற்குள்தான் இருக்கும். நல்ல கட்டழகி தலைநிறையக் கூந்தல் ஸ்நானம் செய்து, அவள் கூந்தலை உலர்த்தும் போதும், பிறகு அதை அள்ளி முடிந்துவிட்டிருந்தாலும், பார்த்தால் அது அவளுடைய மேனியழகையும், முக விலாசத்தையும் ஆயிரம் மடங்கு அதிகமாக எடுத்துக் காட்டும்.

– “நான் புனாவில் தனியாக இருந்த ஆறு மாதத்தில் என் மனம் அந்த விதவைப் பெண்ணை நாடியது. முதலில் நான் அந்த எண்ணத்தைச் சுலபமாக அடக்கிவிட்டேன் ஆனால், நாளாக ஆக, அதன் தீவிரம் என் சக்தியை மீறிவிட்டது. எனவே, நான் அந்தப் பெண்ணின் கவனத்தைக் கவரவேண்டிய முயற்சிகள் எடுத்தேன்.”

ஒரு நிமிஷம் வரை பரமசிவம் பிள்ளை மௌனமாக இருந்தார். அவர் முகத்தில், நிலவொளி நிறைந்த வானத்தில் ஒரு மேகத்திரை தோன்றி சந்திரனை மறைத்துவிட்டுச் சற்றுநேரத்தில் விலகிப் போவது போன்ற ஒரு காட்சி தோன்றியது.

மறுபடி பேச ஆரம்பித்தார்.

“அந்தக் காலத்தில், நான் செய்த பைத்தியக்காரத்தனமான காரியங்களை இப்பொழுது நினைத்தாலும் என்மனம் கூசுகிறது, ஒரு ஆண் பிள்ளை இந்தமாதிரி விஷயங்களில் எவ்வளவு அர்த்தமற்ற, அசட்டுத்தனமான காரியங்களெல்லாம் செய்துவிடு கிறான்!

“எப்படியோ, அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டு விட்டது. அவள் கள்ளங் கபடமற்ற ஒரு வெகுளி. என்னுடைய “சத்தாய்ப்பை ” அவளால் எதிர்த்து நிற்க முடியவில்லை . இருவருக்கும் கள்ள நட்பு ஏற்பட்டது. அவள் என்னைப் பூரணமாக நம்பிவிட்டாள். மூன்று மாதங்கள் கழிந்தன.

“என் மனைவி புனாவுக்கு வரப்போகிறாள் என்ற தகவலை அவளுக்கு ஒரு நாள் தெரிவித்தேன். அவள் மனம் கலங்கியது. ஆனால் அவள் ரொம்பப் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டாள்.

“எனக்கு இது முதலிலேயே தெரியும்; நீங்கள் என்னுடைய உடைமையல்லவென்று. ஆனாலும் மனசு கஷ்டப்படுகிறது. அந்தப் பாக்கியவதியின் சொத்தை நான் எப்படிப் பிடுங்கிக் கொள்ள முயலலாம்? இருந்தாலும்… என்னைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். எனக்குக் கவலையே இராதென்று சொல்லமாட்டேன். ஆனாலும் உங்கள் க்ஷேமத்தைக் கருதி சமாதானம் செய்துகொண்டு விடுவேன்” என்றாள்.

“என் மனைவி புனாவுக்குவந்த இரண்டு வாரங்களுக்குப்பிறகு, ஒருநாள் அந்த விதவைப் பெண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் வந்த சமயம் என் மனைவி பின்புறத்தில் குளித்துக் கொண்டிருந்தாள். அந்த சமயத்தின் நிலைமை என்னை முட்டா ளாக்கிவிட்டது. அந்தப் பெண்ணுடன் சரஸமாட ஆரம்பித்தேன்.

“என்னவென்றாலும் அவள் பெண்ணல்லவா? ஆகையால் அவள் என்னுடன் பேசக்கூடமாட்டேன் என்று மௌனம் சாதித்து விட்டாள். கடைசியாக நான் அவள் கையைப் பிடித்து பலவந்தமாக அணைக்க இழுத்தேன். அவள் கையிலிருந்த ஒரு கண்ணாடி வளை நெருங்கிக் கீழே விழுந்துவிட்டது. அதேசமயம் என் மனைவி வரும் அரவம் கேட்டதால் அவள் என்னிடமிருந்து திமிறி விடுபட்டு ஓடிவிட்டாள். நான் ஒன்றுமறியாத சாதுபோல ஏதோ ஒரு புஸ்தகத்தை எடுத்துப்படிக்க ஆரம்பித்தேன்.

“மேலும் ஒரு மாதம் கழிந்தது. அந்த விதவைப் பெண் தேக அசௌக்யமடைந்தாள் அது நாளடைவில் அதிகரித்து ரொம்ப அபாயகரமான நிலைமைக்கு வளர்ந்துவிட்டது. அதனால் அவளை இங்கே தமிழ்நாட்டில் அவர்கள் ஊருக்கு அனுப்பிவிடத் தீர்மானித் தார்கள்.

“இங்கிருந்து யாரோ ஒருவர் அவளை அழைத்துக் கொண்டு போக வந்திருந்தார். அன்று அவள் ரயிலுக்குப் புறப்பட்டபோது, என் மனைவி அவர்கள் வீட்டுக்குப் போய் வழி அனுப்பிவிட்டு வந்தாள்.

“அதற்கடுத்த நாள் என் பெட்டியில் வைத்திருந்த நூறு ரூபாய் நோட்டைக் காணவில்லை. என்னால் ஆனவரை தேடிப் பார்த்துவிட்டு இவளை அழைத்து “குஞ்சு! பெட்டியிலிருந்த ஒரு நூறு ரூபாய் நோட்டைக் காணவில்லையே” என்றேன்.

“நான்தான் எடுத்தேன்” என்றாள்.

“எதற்கு?”

“நேற்று ஊருக்குப்போன செம்பகத்துக்குக் கொடுத்தேன். நோயாளி, ஏதாவது செலவுக்கு ஆகும். மறுபடி ஏதாவது பணம் வேண்டியிருந்தாலும் எனக்கு எழுதச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் அவளுக்கு ஒன்றும் கொடுத்ததில்லையல்லவா?” என்றாள் குஞ்சு.

என் மனோநிலைமையை நீங்களே யூகித்துக்கொள்ளலாம். ஆயினும் நான் விட்டுக்கொடுக்காமல், “அவளுக்கு நான் ஏன் பணம் கொடுக்கவேண்டும்? என்றேன்.

“குஞ்சுவின் முகத்தைப் பார்த்திருக்க வேண்டுமே! அந்த அழகுக் காட்சியை நான் மறுபடி இந்த ஜன்மத்தில்காணமுடியாது. கால் நாழிகை கழித்துத்தான் பேசினாள். ஆனால் இரண்டே வார்த்தைகள் தான். பக்கத்திலிருந்த ஒரு அலமாரியைத் திறந்து அதிலிருந்த ஒரு காகிதப் பொட்டலத்தையெடுத்து என்னிடம் கொடுத்துவிட்டுநின்றாள்.

வியப்புடன் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தேன். அதில் மூன்று உடைந்துபோன வளையலின் துண்டுகள் இருந்தன. நான் பேசவில்லை. குஞ்சு என் முகத்தைப் பார்த்தாள். அவள் கண்கள் கலங்கின. கீழ் உதடுகளில் ஒரு கோணல் தோன்றியது. “நானும் ஸ்திரீ தானே?” என்றாள். அடுத்த வினாடி அவள் என் அரவணைப்பில் இருந்தாள்” என்று முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *