வல்லை வெளி தாண்டி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2019
பார்வையிட்டோர்: 6,568 
 

காற்று வெளியூடாய், கணவருடன் மோட்டார் சைக்கிளில் ‘டபிள்’ போவது எவ்வளவு சுகமான அனுபவம்! திருமணமான புதிதில் தொல்லைகளேது மற்ற சுதந்திர நினைவுகளோடு சோடியாய்ச் சுற்றித் திரியும் சுகம் எத்தனை இனிமையானது?!

அக்காற்றுவெளி ‘வல்லை வெளி’யாய் இருக்க வேண்டும்! அந்த நேரம் வானில் ‘ஹெலி’களே இல்லாத, மழையும் தூறாத, கோடைக்காலத்து மாலை நேரமாய் இருக்க வேண்டும்! வீசிவரும் காற்று, காதோடு கதை சொன்னவாறே கூந்தலையும் சேலையையும் வருடித் தவிக்க வைக்க வேண்டும்! சின்ன புள்ளினங்கள் மேலும் கீழுமாய்ச் சிறகடித்துப் பறக்க வேண்டும்! எல்லையற்ற வானில் ஏகாந்தமாய் வெண்முகில்கள் அலைந்து திரிய வேண்டும்! வல்லை வெளிப்பிள்ளையாரை நெஞ்சுருக வணங்கி, விடை பெற வசதி அமைய வேண்டும்!

அப்படியரு அழகான வேளையில்தான் நாம் வல்லைவெளி தாண்டிப் போய்க்கொண்டிருந்தோம். மோட்டார் சைக்கிளின் இயந்திர ஓசை காற்று வெளிக்கப்பாலுள்ள பனங் கூடலுக்குள் புகுந்து மோதி விட்டு வருமோசை எங்கோ தொலைவில் கேட்பதாய் எம்மை வியக்கவைக்கும்!

தொண்டைமானாற்றின் திசை காட்டும் காற்றாடி தூரத்தில் நின்றவாறே சுற்றிச் சுழன்று சமிக்ஞை செய்யும். பாலத்தைத் தாண்டி, ஓரமாய் நிற்கும் முட்புதர்களிடை சின்னச் சின்ன குருவிகள் ஓடித் திரியும்! பூவரசங் கிளைகளில் ஏராளம் அணில்கள் குறுக்கும் மறுக்குமாய்த் தாவித் திரியும்!

வல்லைவெளி தாண்டி வரும், வடமராட்சி முடக்கில், பிலாக்கொட்டைக் குருவிகள் நீர்க் குளத்தைச் சுற்றி நின்று, வாலைப் பிளந்து பிளந்து கத்தும்.

தூரத்தில் பனங்கூடலின் சலசலப்பு, எம்மருகே வந்து வந்து போகும். குடிமனைகள் தொடங்க, புகையிலைத் தோட்டங்களும் முந்திரிகைக் காடுகளும் ‘விசுக் விசுக்’கென்று கடந்து போகும்.

துன்னாலைச் சந்தியில் பச்சை ‘ஹெல்மெட்கள்’ தெரிகிற போதுதான் நான் எப்பவும் நிஜத்திற்கு வருவேன். மோட்டார் சைக்கிளின் வேகம் குறையும். கால்கள் என்னையும் மீறி
நடுக்கமெடுக்கும்! தொண்டை வற்றிப் போகும்! ‘செக்கப்’ என்ற பெயரில் சிங்களத்தில் தேவையற்ற பேச்சு வாங்க, கணவர் கசக்கிப் பிழியப்படும் வேதனையில் கடவுளை மன்றாடி,
அடையாள அட்டைகள் உருட்டியுருட்டிப் பரிசீலிக்கப்பட, வதை நேரம் மிகநீளமாய் வாட்டியெடுக்க, முடிவில் பெரு மூச்சுடன் பயணம் தொடரும். ஒரு மைல் தூரம் வரை திரும்பிப் பார்க்க விரும்பாமலே பயணம் தொடரும். இருவரும் ஒருவர்க்கொருவர் கதைபரிமாற முடியாமல் நாக்குளறும்! முதுகு கூசும்! கரவெட்டி கடந்து, நெல்லியடிச் சந்தியில் மீளவும் இறங்கி, சிங்களக் கண்களால் துளைத்தெடுக்கப்பட்ட பின் மீண்டும் ஏற, புகையிலைக் கன்றுகள் கதை பேசியவாறே எம்மோடு சேர்ந்து நகரும்!

மாலுச் சந்தியில் இடிந்துபோன கட்டிடங்களெல்லாம் மனத்தைத் தொடாமல் மறைந்து போக, நினைவுகள் ஊர் மண்ணைத் தொட்டு நிற்கும்!

புலோலியை வேகமாய்க் கடந்து, ஓராங்கட்டைச் சந்தியில் நிதானமாய் வேகம் குறைந்து, தம்பசெட்டிப் பக்கமாய்த் திரும்பும்போதுதான் ஒரு இயல்பான மூச்சு மீளும்! புன்னகை
அரும்பும்! நமக்குள் பேச்சு எழும்! புதிதாய் முகங்கள் மலரும்!

பிள்ளையார் கோவில் சந்தியில் திரும்பும்போதே, அரசிலைகள் ஆரவாரத்துடன் வீதிக்கு எம்மை வரவேற்கும்! வீட்டு வாசலில் என் தங்கை ஓடிவந்து நிற்பாள். அவளுக்கு மூச்சிரைக்கும்!

மோட்டார் சைக்கிளின் ஓசை … மூச்சு வேகத்தினிடை அவளை முகம் மலரச் சிரிக்க வைக்கும்!

ஆரத்தழுவும் பார்வையில் நானப்படியே துவண்டு போய் விடுவேன். அவளுக்குக் கண்கள் கலங்கும். அப்படித்தான் நின்றாள் முகம் மலர, கண்கள் கலங்க, புன்னகைத்து!

“வாங்கோக்கா … வாங்கோ .. .” என்று உள்ளே இழுத்துக் கொண்டு போனாள். கையைப் பற்றிய பிடியில் அன்பும் உரிமையும் அழுத்திக் கவ்வும்! வட்டநிலவென அவள் நெற்றியில் கிடக்கும் குங்குமம், அவளின் கணவர் எங்கே என்று கேட்கத் தூண்டும்.

“அவர் வேலையால வர அஞ்சரை மணியாகும் … அது வரைக்கும் உங்களைப் போகவிடக்கூடாது எண்டு சொல்லிப் போட்டுத்தான் போனவர் .. .” சின்ன விறாந்தைக்கு என்னை இழுத்துக் கொண்டு போய் ஒரு கதிரையில் இருத்திவிட்டாள். என் கால்களிற்கருகாக அவளிருந்தாள். பேச்சு வாக்கிலெல்லாம் என் புதுச்சேலையிலும் ஆசையாக அவள் கண்கள் அடிக்கடி மொய்த்து மீளும்!

“அக்கா … , நீங்கள் அத்தான் வாங்கித் தந்த சேலையில நல்ல வடிவாயிருக்கிறீங்கள் … ” என்கிறபோது அரும்பும் அழகான புன்னகையினுள்ளே இலேசான ஏக்கமும் தொக்கி நிற்கும்!

உதடுகளை வளைத்து நெளித்து அவள் வண்ணக் கதை கதையாய்ச் சொன்னாள். முற்றத்து வேப்பங்காற்று முகத்தில் வந்தறைந்து, முன்முடியை அலைக்கழிக்க, கைகளால் ஒதுக்கி
யதுக்கி நிறையவே கதைகள் சொன்னாள். ஆறு மாதங்களிற்கு முன் .. . ஆசைத்தம்பி வந்து, தன்கையால் ரசித்துச் சாப்பிட்டுப் போன கதை சொன்னாள். போர்க்களத்தில் பொறுப்பான பதவியில் நிற்கும் பரத்தின் கெட்டித்தனங்களை யெல்லாம் புகழ்ந்துபுகழ்ந்து சொன்னாள். தம்பி – பரத்தின் உடுப்புகளை … தான் கழுவிக் கொடுத்ததைப் பெரிய பாக்கியமாய்ப் பெருமையுடன் சொன்னாள்.

“பரத்தை நாங்கள் பார்க்க முடியாதா?” நான் தான் அவளைக் கேட்டேன்.

“அவன் அடுத்த மாவட்டத்திற்கு அலுவலாகப் போய் ஆறுமாசமாச்சு. வர நாளாகுமென்று அரசியல் கூட்டம் நடத்துகிற அம்பி தான் சொன்னான். அதுக்கப்புறம் ‘பேஸ்’ க்கும் போனனான் … அங்கேயும் அதைத்தான் பாபு மாஸ்ரர் சொன்னார் .. .”

பின்னால் அரவம் கேட்க, பட்டென்று கதையை வெட்டி …திரும்பிப் பார்த்தவாறே அப்பாவியாய்ச் சிரித்தாள்.

“அத்தான் நல்லா கொழுத்திட்டார்” என்றவாறே எழுந்தாள்.

“கட்டின புதிசில, உங்கட மனுசனும் இப்படித்தான் கொழுத்தவராம் ஆறுமாசம் கழிய, அடையாளம் தெரியாமல் அரைவாசியாய்ப் போனாராம். உங்கட அப்பாதான் இந்த இரகசியம் சொன்னவர் .. .” அவர் சொல்லியவாறே கதிரையில் அமர்ந்தார்.

சட்டென்று சிரிக்கத் தொடங்கியவள், விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டேயிருந்தாள்.

எட்டு வருடங்களுக்கு முன், என்னையும் பார்க்காமல், காதல் கொண்டு செய்த கல்யாணமும், அந்தப் புதுமண நாட்களும், அவள் மனத்தினுள் நாட்டியமாடத் தொடங்கி விட்டது போலும்! அப்படித்தான் நினைத்தேன். எனக்கும் சிரிப்பு வந்தது. இந்திரகுமார் இளைஞனாக இருந்தபோது, ஒரு பாட்டுக் ‘கசற்’றைக் கொடுத்து இவளைக் கேட்கச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான்; அவளுக்குப் பித்துப் பிடித்து, காதல் நோயில் அஷ்டாங்கமாய் விழுந்துவிட்டாள்! தூக்கி நிறுத்த எவராலும் முடியவில்லை. அம்மாவின் அடி, குத்து, நுள்ளு .. . எல்லாம் அவளுக்கு அமுதமாய் இருந்திருக்க வேண்டும். மஞ்சள் கயிற்றில் மூன்று முடிச்சுப் போட்டுத்தான் மனைவியாக்குவேன் என்று சூளுரைத்து, ஊருக்குள் மகா புரட்சிக் கணவனாய் அவர் பெயர் எடுத்து விட்டார்! ஆனால், ஒரு குழந்தைக்கு அவர் அப்பாவாகிற அதிர்ஷ்டம்; இன்னும் இல்லையே என்கிற சோகம், இவளின் கண்களிற்குள் தான் எப்பவும் தெரியும்!

“பரத்தைக் கண்டால் பவானிக்குப் பத்தும் பறந்துவிடும் … ” என்று இந்திரகுமார் அவளை அடிக்கடி கேலிசெய்வார்.

“அவன் எனக்குத் தம்பியில்லை; பிள்ளையெல்லோ? நான் கைமுறிஞ்சு கிடக்கேக்க .. . எனக்குக் குளிக்க வார்த்த பிள்ளை, கால் கடுக்க நடக்கேக்க … சைக்கிளிலை வைத்துச் சுமந்து திரிஞ்ச பிள்ளை! கஞ்சி வடிக்க வழியில்லாமல் கஷ்டப் பட்ட நேரத்திலையும் கடுதாசிகள் அடுக்கிக் கொடுத்து .. .என்ரை கை நிறைச்ச பிள்ளை, எல்லாரும் என்னை விட்டிட்டுப்
போக அவன் தானே வந்து அப்பப்போ என்னை எட்டிப் பார்த்திட்டுப் போனான் .. .” அவள் சொல்லிக்கொண்டே போவாள். அந்த நேரம் கண்ணீர் பொங்கிப் பெருகும்! அவள் கண்களுக்குள் சோகமிருக்காது; பெருமைதான் பெரிதாய்ப் பிரவகிக்கும்!

நாங்கள் கை, கால், முகம் கழுவி விட்டுச் சாப்பிடக்குந்தினோம். சடைத்து நின்ற பிச்சிப்பூ மரத்தில் அண்டங்காக்கா ஒன்று வந்து குந்திக்கொண்டது. அது அவசரம் அவசரமாய் அலறிய அலறல், பவானிக்குள் ஏதோ பரபரப்பை ஏற்படுத்துவதாய், அவளின் வளைந்து நெளியும் புருவங்கள் எனக்கு உணர்த்தின!

வளவிற்குள் நின்ற, நல்ல களிப்பிடிப்பான முருங்கைக் காயில் பிரட்டல் கறியும், சண்டியிலையில் ஒரு சுண்டலும், நெய் ஊற்றிய பருப்பும், சுட்ட கத்தரிக்காய்ச் சம்பலும் கருவாட்டுப் பொரியலும், சொல்லி வைத்தெடுத்த சட்டித் தயிரும் போட்டுச் சுடச்சுடக் குத்தரிசிச் சோறு பரிமாறினாள்.

“அத்தான் … இந்த முருங்கைக்காய் எங்கையும் கிடையாது, பிறகு நினைச்சு நினைச்சு ஏங்காமல் நல்லாய்ச் சாப்பிடுங்கோ .. .” என்று அள்ளியள்ளிப் போட்டாள்.

“தெரியும் .. . ஆடு அதிலைதானே கட்டிவிட்டிருக்கிறீங்கள். நல்லாய்த்தான் இருக்கும் … ”

அவளை முந்திக்கொண்டு எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. தயிர்ச் சோறு தொண்டைக்குள் திசைமாறிப் புரைக்கேறி அடித்தது! ஓடிவந்து உச்சியில் தட்டினாள்.. . தண்ணீரை நீட்டினாள்.

சாப்பிட்டு முடிந்தபின் கைகளைக் கழுவிவிட்டு முற்றத்து மல்லிகைப் பந்தலின் கீழிருந்த வாங்கில் அமர்ந்து கொண்டோம். அவள் அடுப்படியுள் ஏதோ அடுக்கிக்கொண்டே குரல் கொடுத்தாள்.

“வெத்திலையைப் போட்டுடாதேங்கோ .. . பப்பாளிப்பழம் வெட்டிக்கொண்டு வாறன்.”

இவர் மேலே அண்ணாந்து.. . கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும் மல்லிகைப் பூக்களை ரசித்துக்கொண்டிருந்தார். நான் பிச்சி மரத்தருகே பிஞ்சு பிடித்திருந்த நெல்லி மரத்தைக் கண்களால் துளாவிக்கொண்டிருந்தேன். நாக்கில் எச்சில் ஊறியது. ஐந்தாறு நாட்களாய், இந்தப் புளிக்காய்களெல்லாம் பார்க்கப் பார்க்க ஆசையாகத்தான் இருக்குது!

வாசலில் ஏதோ அரவம்! எட்டிப்பார்த்தேன்; மின்னலடித்தது போல் அவன் முகம்! ‘அவனா .. .அ .. .அ து … அவனா ..?’ சட்டென்று எல்லாவற்றையும் உதறிவிட்டு எழுந்து ஓடினேன்.

தலைவாசற் படியை அண்டினாற்போல் வீதிக் கரையில் அவன்!

“பரத் . .! டேய் .. .பரத் . .. ” பரவசத்தால் என் கால்கள் நடுங்கின. அருகில் சென்று அவன் கைகளைப் பற்றினேன்.

“எப்பிடி இருக்கிறாயடா ..? ”

அவன் பதில் சொல்லாமல் புன்னகைத்து நின்றான்!

கண்கள் சின்ன குழந்தையெனப் பெரிதாய்ச் சிரித்தன! நான் அவனைக் கட்டிப் பிடித்து முத்தமிட முனைந்தேன். அவன் முகம் உயரமாய் இருந்தது!

“கிட்டன் உங்களை ஓராங்கட்டையடியிலை கண்டவனாம், அதுதான் அலுவல் முடிச்சிட்டுப் போறவழியிலை பார்த்திட்டுப் போகவெண்டு ஓடி வந்தன் … ” புன்னகை மாறாமலே கூறினான்.

கறுப்பு சேர்ட்டும் கறுப்பு ரவுசரும் அணிந்திருந்தான். இடுப்பில் தடித்த கோல்சர் பட்டி! ஒற்றைக் கையில் ஒரு புதியரகத் துப்பாக்கி! கண்களில் தெரிந்த களைப்பை, போர்த்தன மிடுக்கும் புன்னகையும் கலந்து போர்த்தி வைத்திருக்கும் ஒரு கம்பீரம்!

“ம் …அத்தான் எங்கை? . .. சின்னக்கா குசினிக்குள்ளை யாக்கும்?” அவன் உள்ளே எட்டிப் பார்த்தவாறே சிரித்தான்.

கன்னத்தில் இப்பவும் அதே குழிகள்! அரும்பு மீசையோடு அழகாயிருந்தான்.

“எப்பிடி இருக்கிறீங்களக்கா .. ?” மீண்டும் கேட்டான்.

அவனின் குழந்தைச் சிரிப்புப் பசுமையாய் என்னுள் பதிந்து போனது!

சின்னப் பையனை இடுப்பில் தூக்கி இருத்திக்கொண்டு பிச்சி மரத்தைச் சுற்றிச் சுற்றி ஓடி விளையாடினதும், ஆழக் கிணற்றில், தொங்கித் தொங்கித் துலா இழுத்து நீர் கோலிக் குளிக்க வார்த்து விட்டதுவும், அம்மா குழைத்துத் தரும் சோற்றைப் பாட்டுப்பாடிப்பாடி ஆசையாய் ஊட்டி விட்டதுவும் .. . இனிய கனவுகள் போல் என்னுள் வந்து வந்து போயின!

“அம்மாவைப் பார்க்க வேணுமெண்டு ஆசையாயிருக்கு, ஆனால் .. . யாழ்ப்பாணப் பக்கம் போறதுக்கு எனக்கிப்ப சந்தர்ப்பமேயில்லை, அம்மாவைக் கேட்டதாய்ச் சொல்லுங்கோக்கா” அவனின் கண்களுக்குள் ஒரு குழந்தையின் ஏக்கம் குறுநகையோடு கலந்து நின்றது!

“உள்ளே வா .. . முதல்ல, ஒரு பிடி சாப்பிட்டுப் போட்டு நிறையக் கதைக்கலாம் வா பரத் . .. வாவன் .. .” நான் அவனின் கைகளைப் பற்றிய பிடியைத் தளர்த்தாமல் இழுத்தேன். அவன்
படியில் ஏறுவதற்கு முன் ஒரு கணம் வீதியைத் திரும்பிப் பார்த்தான்.

சந்தியிலிருந்து இரு இளைஞர்கள் இவனை நோக்கிக் கையசைத்தவாறே ஓடிவந்து கொண்டிருந்தார்கள்.

“பொக்குனி … என்னடா?” இவன் புருவத்தை உயர்த்தி மெதுவாகக் கேட்டான். அவர்களின் ‘ஷேட’ வியர்வையில் ஒட்டியிருந்தது. மூச்சிரைக்க முன்னால் வந்து நின்றார்கள்.

“பரத் . .! நாங்கள் உடனை இடத்தை மாத்தவேணும் .. .” என்றவாறே ஏதோ மெதுவாய்ச் சொன்னார்கள். பரத் உடனே பரபரப்பானான்!

“அக்கா .. . நாங்கள் போட்டு வாறம், சின்னக்காட்டையும் சொல்லுங்கோ, நாலைஞ்சு கிழமைக்கு நான் இந்தப் பக்கம் வரமாட்டன் எண்டு .. .”

அவன் கைகளை அவசரமாக விடுவித்துக்கொண்டு மெதுவாய்ச் சிரித்தான். அப்பவும் கன்னங்களில் குழிகள் விழுந்தன. இனம் புரியாத பரிதவிப்பில் நான் நிலையிழக்க …நிலைமையின் அவசரம் நிமிடங்களைப் பிடுங்கி எடுக்க .. .அவனின் கனிவான கண்கள் என்னைத் தழுவித் தழுவி.. .நகர்ந்து செல்ல .. . நிகரில்லாத பல சேதிகளை என்னுள் நிறையவே தூவிவிட்டு அழகான கனவாக … அவன் மறைந்து விட்டான்!

பவானி மூசி மூசி அழுதாள், மூக்கைத் துடைத்தாள்!

“என்னையேன் ஒரு சொல்லுக் கூப்பிடேல்லை, பரத் என்னைப் பார்க்காமல் போயிருக்க மாட்டானே! எனக்கென்ன கேடுகாலம் வந்திச்சு .. ?” என்று நீண்ட நேரமாய்ப் பொருமிப் பொருமிக் கண்ணீர் சிந்திக்கொண்டேயிருந்தாள்.

அவர் எதுவுமே கதைக்க முடியாத ஒரு வகை வேதனையில் மௌனித்துப் போயிருந்தார்!

ஒரு நொடியில் அவன் வந்து, சிறு கனவாய்ச் சிரித்துப் போனது .. . எனக்கும் மின்னலடித்த அதிர்ச்சி தான் என்று அவர்களுக்கு விளங்கப்படுத்தவே முடியவில்லை. பேசட்டும், நன்றாக என்னைப் பேசட்டும் என்று பேசாமலே இருந்தேன். பேசாமலிருந்து அவனுடன் பேசியதை நினைக்கப் பேரின்பமாய் இருந்தது!

பவானி வெட்டித் தந்த பப்பாளிப்பழம் இனிமையானதா என்பதை நான் கவனிக்கவில்லை. பரத்தின் நினைவுகள் அதைவிட இனிமையாய் இருந்தன!

அஞ்சரை மணிக்கு இந்திரகுமார் வந்து விட்டார். ஆனால் அப்பவும் பவானி தன் அழுகையை முற்றாக முடித்துக் கொள்ளவில்லை!

“பரத்தைக் காணாத பவானியோட … இனி என்பாடு திண்டாட்டம்தான்.”

இந்திரகுமார் கிணற்றடியில் நின்றவாறே கதைத்துக் கதைத்துக் குளித்துக்கொண்டிருந்தார். குரல் மட்டும் கேட்டது, ‘சோப்’ வாசனையும் சேர்ந்து வந்தது. இரவு எங்களைத் தங்கிப் போகும்படி இரந்து கேட்டார்.

“ஏகப்பட்ட வீட்டு வேலைகளிருக்கு .. . இனி என்ரை பயண அடுக்குகளும் பார்க்க வேμம், வாசுகி வரவேணு மெண்டு ஒற்றைக் காலிலை நிண்டதிலைதான், எல்லாத்தையும் போட்டது போட்டபடி விட்டிட்டு வெளிக்கிட்டனாங்கள். குறை நினைச்சிடாதையுங்கோ … ” – என் கணவர் ‘வெளிக்கிடுவமா’ என்ற ‘ஜாடையில் என்னைப் பார்த்துக் கண்ணசைத்தார்.

நாங்கள் புறப்படலாமென முடிவான போதே, பவானி அழுகையை மறந்து .. . எம்மோடு கோபிக்கத் தொடங்கி விட்டாள்!

“எல்லோரும் என்னை இங்கை தனியாய் விட்டிட்டு அங்கங்குப் போயிடுங்கோ … ” ஏதேதோ முணுமுணுத்தவாறே இடித்து வறுத்த அரிசிமாவையும் வடாகப் பொதியையும் சேர்த்துக் கட்டிக்கொண்டுபோய் மோட்டார் சைக்கிள் பையினுள் வைத்தாள்.

நான் மேசையில் எடுத்து வைத்த ஆனை வாழைப்பழச் சீப்புக்களையும், தோடம்பழங்களையும், அம்மா கட்டித் தந்த பொரி விளாங்காய்ப் பொதிகளையும் காட்டி “அழுதழுது அதுகளை அழுக விடாமல் சாப்பிடுங்கோ” என்றேன்.

பவானி கவலையினூடு இலேசாகச் சிரித்தாள். இவர் பொக்கற்றினுள்ளிருந்த புதிய துபாய்க் கைக்கடிகாரத்தை எடுத்து இந்திரகுமாரிடம் கொடுத்தார். மகிழ்ச்சியில் பூரித்துப் போன இந்திரகுமாரின் முகம், நாம் மோட்டார் சைக்கிளில் ஏறும்வரை மாறாமலே இருந்தது.

பவானிக்கு மீண்டும் கண்களிற்குள் நீர் முட்டி மின்னியது!

‘இ .. .இதென்னது, எ .. .எனக்குமா . .?’ இரு துளிகள் பொட்டென்று என் சேலையில் விழுந்தன.

‘அவர் பழிக்கப் போறார் … ’ நான் அவசரமாகக் கண்களைத் துடைத்தேன்.

இந்திரகுமாரின் முகமலர்ச்சியெல்லாம் ஓடி ஒழிந்துவிட்ட பின்னும் ஏனோ சிரித்துக் கொண்டு நின்றார்!

மோட்டார் சைக்கிள் புறப்பட்டது!

பவானி கையசைத்துக்கொண்டு வாசலிலேயே நின்றிருந்தாள். தூரத்திலும் அவள் கண்கள் மின்னிக்கொண்டிருப்பதாய்த் தெரிந்தன!

மாலை வெயிற்சாரல் தேகம் முழுவதும் விழுந்து குழைந்தது! நான் நன்றாக அவரோடு ஒட்டிக்கொண்டிருந்தேன்.

மோட்டார் சைக்கிளின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க ஊர் மனைகள் யாவும் ஓரு கண்ணசைப்பினுள் கடந்து போயின!

‘வல்லைவெளி’க்காற்று மெல்ல வரும் ஓசை எல்லையைத் தாண்டிக் கேட்கத் தொடங்கியது!

– லண்டன் ஐ.பி.சி.வானொலி சஞ்சிகையான புலம் 8ஆவது இதழலில் ஏப்ரல் 1999இல் பிரசுரமானது.

– புது உலகம் எமை நோக்கி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: ஜூகிய 1999, சக்தி வெளியீடு, நோர்வே.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *