வர்ணங்கள்…..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2018
பார்வையிட்டோர்: 4,945 
 
 

இரவு எடுத்த முடிவின்படி வழக்கமாக வடக்கே செல்லும் அதிகாலை 5.30 மணி நடைப்பழக்கத்தைத் தெற்கேத் திருப்பினேன்.

அதனைத் தொடர்ந்து, ‘இன்றைக்கு யார் மக்கள் அலட்சியத்தால் வீணாக வெளியேறும் குடிநீர், சாலை விளக்குகளை அணைப்பார்கள் ?’ கேள்வியும் எழுந்து என்னோடு வந்தது.

நான் நடை பயணம் சென்று திரும்பும் செல்லும் நேரங்களில் பொழுது விடிந்து விட்டால் மின்சார ஊழியர்கள் கண்டு கொள்ளாமல் விடும் வீணாக எரியும் சாலை விளக்குகளை அணைத்து வருவதோடு, மக்கள் திறந்து மூடாமல் சென்ற பஞ்சாயத்து குடிநீர் குழாய்களில் வீண் விரயமாகும் தண்ணீரையும் மூடி வருவது வழக்கம். எனக்கு மின்சார சேமிப்பைவிட தண்ணீர் சேமிப்பில் ரொம்ப ஈடுபாடு. காரணம்…? இன்றைய கால நிலவரம் அப்படி. தண்ணீரின் முக்கியத்தை உணர்ந்தவன் நான். மூன்றாவது உலகப்போர் மூளுமென்றால் அது தண்ணீருக்காகத்தான் என்று உலகப்பேரறிஞர்கள் சொல்லும் உண்மையை உணர்ந்தவன் நான்.

அதனால் நான் தண்ணீரைச் சிக்கனமாகவே செலவு செய்வேன். சோப்புப் போட்டு துணி வெளுத்தால் கூட மூன்றாம் முறையாகத் துணி அலசிய கடைசி தண்ணீரை முதல் முறையாக உடலுக்கு ஊற்ற உபயோகப்படுத்தி அடுத்து நல்ல தண்ணீரால் சுத்தமாகக் குளித்து வெளிவருவேன். அந்த அளவிற்கு எனக்கு தண்ணீர் மீது பற்று, பாசம். அதை அடுத்து மின் குறைவினால் இந்த மின்சார பற்று. ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு நாட்டுக்கோ, மக்களுக்கோ, எதிர்கால சந்ததியினருக்கோ இல்லை எனக்கோ உதவி, திருப்தி அவ்வளவே.

‘இன்றைக்கு மின், தண்ணீர் சேமிப்பு வேலை துண்டிப்பு. காலம் கடந்து செய்தாலும் வேறு எவராவது செய்வார்கள். வேறு வழி இல்லை. பொது நலத்தைவிட கொஞ்சம் சுயநலமும் அவசியம்.’ என்று மனதை மாற்றி நடையைத் தொடர்ந்தேன்.

இந்த நடையின் திசை மாற்றலுக்கு சின்னதாக ஒரு துப்பு துலக்கல் காரணம்…..

தெற்கே அரை கிலோ மீட்டர் தொலைவில் மருத்துவமனை, எதிரே காவல் நிலையம், அதைத் தள்ளி நாட்டாறு வாய்க்கால் ஓரம் கிராம பொது சேவை மையம், நகலகம், அதை அடுத்து என் மகன் நடத்தும் ஆங்கில மருந்துக்கடை ‘பிரியா மெடிக்கல்.’ அதை ஒட்டி டீக்கடை என்று சின்னதாய்க் கடைத் தெரு விரிவு. அதைத் தாண்டி நாலு கிலோ மீட்டர் தொலைவில் காரைக்கால் பெரு நகரம்.

வீட்டில் தினமலர் தினசரி வாங்கினாலும் பையன் மருந்துக் கடையில் வாங்கும் தினத்தந்தி, இந்து பத்திரிக்கைகளை மேய….மாலை ஏழுமணிக்கு மேல் அங்கே சென்று உள்ளே அமர்ந்து வியாபாரத்திற்கு இடைஞ்சலில்லாமல் படித்து வருவது என் வழக்கம்.

முந்தா நாள் சென்றேன். பத்திரிக்கைகள் இல்லை.

”எங்கே தம்பி ? ” ஊழியரை விடுத்து கல்லாவில் இருந்த மகன் நிர்மலைக் கேட்டேன்.

”இல்லைப்பா…” சொன்னான்.

”ஏன்…போடலையா ? ”

”போட்டிருப்பான். காலையில் இங்கே டீக்குடிக்க வந்து உட்காரும் மக்களில் எதோ ஒன்னு எடுத்துப் போயிருக்கும் போல.” கொஞ்சம் வெறுப்பம் கசப்புமாகச் சொன்னான்.

”என்னப்பா இது! மூணு வருசத்துல ஒரு நாளும் இல்லாத திருநாளாய் இன்னைக்கு.!?”

”அதான் தெரியலை. வந்ததுல ஏதோ கசடு.”

”ஷட்டருக்கு அடியிலதானே வைச்சான் ?! ”

”வழக்கம்போல அப்படித்தான் செய்திருப்பான். வெளியே தெரிய. சுட்டுப்போயிருப்பான்.”

நியாயம்தான். கடைக்கு வரும் எல்லாருமே யோக்கியர்களாக இருக்க மாட்டார்கள். காலை ஆறுமணிக்கெல்லாம் டீக்கடைப் பத்திரிக்கையை மருந்துக்கடை வாசல்படியில் வசதியாய் உட்கார்ந்து மக்கள் மேய்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அதில் ஒருத்தர் அடித்துப் போயிருக்கிறார்.! அதிர்ச்சியாக இருந்தது.

”பக்கத்துல கேட்டியா ? ”

”தெரியாது என்பான் கேட்கலை.” தொண தொணக்காதே முகபாவனையில் சொல்லி வியாபாரத்தைக் கவனித்தான்.

வெளியே வந்து டீக்கடைக்குச் சென்றேன். இந்த நேரத்தில் அந்தக் கடையில் எப்போதும் கூட்டம் குறைவாக இருக்கும். எட்டு மணிக்கு மேல்தான் இட்லி, தோசை, சிற்றுண்டி சாப்பிட வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

”என்னண்ணே ? ” இட்லி அடுப்பிலிருந்து எட்டிப் பார்த்து லியோன் கேட்டான்.

”இன்னைக்கு நம்ம கடை பத்திரிக்கையைப் பார்த்தியா ? ”

”பார்க்கலைண்ணே ? ”

”காணோம் ? ”

”அப்படியா ? ”

”காலையில டீக்கு வந்தவங்கதான் எடுத்துப் போயிருக்கனும்.”

”எங்கேண்ணே கவனிக்க முடியுது. என் பத்திரிக்கையே உங்க கடை வாசலுக்குப் போய்தான் கந்தலாய்த் திரும்பி என் கடைக்கு வருது. அது மொத்தமா திரும்புதான்னும் தெரியாது. வியாபாரத்துக்காக வாங்கிப் போடுறது நிறுத்தவும் முடியலை…” என்று அவன் சொந்தக் கதையைச் சொல்லி என் மனம் கோணக்கூடாது என்பதற்காக….”கவனிக்கிறேன்ண்ணே!” சொன்னான்.

வந்தேன்.

நேற்றும் காணோம். நிர்மல் இல்லை என்று கை விரித்தான்.

”பேப்பர்பையன் போட்டானா என்னான்னு கேட்டியா ? ” கேட்டேன்.

”அவன் காலையிலேயே போட்டுடுவான்ப்பா. நான் ஒன்பது மணிக்கு வந்து திறக்கிறதுனால் அவனைப் பிடிக்க முடியாது. பையன் போன் நம்பர் தெரியாது. வாங்கிதான் கேட்கனும்.”

”அவன் மொதலாளியிடம் விபரம் சொல்லி விசாரிக்க வேண்டியதுதானே ? ”

”அவர் நம்பர் இருக்கு கேட்க வேணாம்ன்னு யோசனை.”

”ஏன்ன்…??? ”

”சமயத்துல பையன் போடாமல் அவசரத்துக்கு அதை வித்து காசாக்கி இருக்கலாம். தினம் நாளைந்து இடங்களில் இப்படி தொடர்ந்து செய்தால் அது அவனுக்கு கூடுதல் வருமானம். விடுகளில் அப்படி செய்ய முடியாது. வாசல்களில் எறியும் பத்திரிக்கைகள் காணாமல் போகாது. இப்படி திறக்காத நம்மைப் போல் மளிகை, மருந்துக்கடைகளில் செய்தால் காணாமல் போகிறதுக்கு அவன் பொறுப்பாளி கிடையாது. கேட்டாலும்… போட்டேன் காணோம் சொல்லி தப்பிக்க வாய்ப்பிருக்கு. இதை பையன் வறுமையில் செய்யலாம். இது முதலாளி காதுக்குப் போனால் அவன் வேலைப் போகும். நம்பளால ஏன் ஒருத்தன் பொழைப்புக் கெடனும்…? பாவம்.!” பரிதாபப்பட்டான்.

”சரி. இருந்தாலும் இது தப்பில்லையா ? அவனைக் கண்டிக்கனுமில்லையா ? ”

”பார்த்து, கேட்டு…கண்டிக்கனும். நான் பத்து மணிக்குக் கடையைக் கட்டி பன்னிரண்டு மணிக்குப் படுக்கிறதால சீக்கிரம் எழ முடியலை. இன்னும் இரண்டு நாள் இப்படித் தொடர்ந்தால் சீக்கிரம் எழுந்துதான் அவனைப் பிடிக்கனும்.” சொன்னான்.

அவன் சொன்னது நியாயமாகவும் இருந்தது. பிள்ளை சொல்வது போலத்தான் படுக்கிறான். காலை ஏழு மணிக்கு மேல் எழுந்திருக்கிறான்.

சரி இனி இவனைத் தொணத் தொணத்து, தொந்தரவு செய்வதால் பலனில்லை. இவன் காலையில் எழுந்திரித்து இந்தத் திருட்டை எவர் செய்கிறார் என்று கண்டுபிடிப்பதும் கடினம். காலையில் எழும் நாமே களம் இறங்கி காரியத்தை முடித்தாலென்ன ? தோன்றியது.

இதோ நடை மாற்றம்.

நடைமுறை பழக்க வழக்கத்தைக் கொஞ்சம் மாற்றினால்….சின்ன சிக்கல்கள் வருவது இயல்பு. பொதுவாக இரு சக்கரவாகனத்தில் செல்லும் நாம் என்றைக்காவது ஒரு நாள் சைக்கிளில் சென்றால்….

”என்ன சார் வண்டி என்னாச்சு ?, பெட்ரோல் சிக்கனமா ?, சர்வீசுக்கு விட்டிருக்கீங்களா?” நண்பர்கள், தெரிந்தவர்கள் அக்கறையாய்க் கேள்விகள் கேட்பார்கள்.
அது அவர்கள் நம் மேல் கொண்டு அன்பு,அபிமானத்தினாலென்றாலும்….பத்துப் பேர்களுக்குப் பதில் சொல்வதற்குள், ஆசைப்பட்டு எதற்கு சைக்கிளில் வந்தோம் ? ஆகும். இப்போதும் அப்படித்தான்….தொல்லை ஆரம்பித்தது.

பத்தடி தூரம் நடப்பதற்குள்ளாகவே… வழியில் நடந்தவர்கள், தெரிந்தவர்கள், டீக்கடையில் நிற்கும் உள்ளூர் முகங்கள் யாவும்…’ இன்னைக்கு இவன் ஏன் இந்தப் பக்கம் போறான் ? ‘ என்ற யோசனை, முகபாவத்தில் பார்த்தார்கள்.

”என்ன சார் இந்தப் பக்கம் ? ” எதிரில் வந்த வருவாய்த் துறையில் வேலை செய்யும் வடிவேலு கேட்டே விட்டார்.

”சும்மா ஒரு மாற்றத்திற்காக.” என்று சொல்லி நடந்தேன்.

எங்கள் மருந்துக்கடையை நெருங்க….டீக்கடையில் வியாபாரம் படு விறுவிறுப்பாக இருந்தது. என்றைக்கும், எந்த இடத்திலும், காலை டீக்கடைக்கு உள்ள மௌசு, மரியாதை… பொழுதுக்கும் நடக்கும் டாஸ்மாக்குக்கூட கிடையாது. அப்படி வியாபாரம் ! லியோன் டீ போட்டுக்கொண்டும், காசு வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்டும் சுறுசுறுப்பாக இயங்கினான். வேர்த்து ஒழுகியது.

எங்கள் மெடிக்கல் வாசலில் வெள்ளை வேட்டி சட்டை, தலை வழுக்கையில் நான்கு பெரிசுகள் அமர்ந்து அருகிலிருக்கும் எச்சில் கிளாசுகளில் ஈக்கள் மொய்க்க….டீக்கடைப் பத்திரிக்கையை படி தரையில் விரித்தும், கைகளில் பிடித்தும் மேய்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் இரு இளசுகள் நின்றபடி வாசித்தது. கிடைக்காதது எட்டிப்பார்த்து டீ உறுஞ்சியது.

வந்தவர்களுக்கும் பத்திரிக்கைகள் கை மாறியது.

‘சரி. இந்தக் கூட்டத்தில் ஒன்றுதான் பத்திரிக்கையைச் சுடுகிறது. கவனிக்க வேண்டும்!’ நினைத்து நடையை நிறுத்தி அவர்கள் கண்ணில் படாமல் அருகிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கூட வாசலில் நின்று கவனித்தேன்.

பெரிசுகள் எழாமல் மாற்றி மாற்றி எழுத்துக்கள் விடாமல் படித்துக் கொண்டிருந்தது. சொந்தப் பத்திரிக்கையைக் கூட அவர்கள் அப்படி படிக்கமாட்டார்கள் போல இரவல் பத்திரிக்கையில் அத்தனை ஆவல். கால்மணி நேரத்திற்கு மேல் கால்கடுக்க நின்றும் அவர்கள் கலைவதாய் இல்லை.

எத்தனை நேரம் ஒரு இடத்தில் நின்று வெறுமனே கவனிப்பது. பார்ப்பவர்களுக்கும் சந்தேகம், நிற்கவும் சங்கடம் நினைக்கும் போதுதான் பள்ளிக்கு எதிரில் உள்ள பெட்டிக்கடையைச் செல்வம் திறந்தான். அது அவன் கடை, வீடு. பூர்வீக இடம். நானும் அவனும் இதே பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது கூட்டாளி. இளவயது தோழன்.

”என்னய்யா இங்கே நிக்கிறே ? ” என்னைப் பார்த்ததுமே ஆச்சரியமாகக் கேட்டான்.

”சும்மா பத்திரிக்கைப் பார்க்க வந்தேன். உன் கிட்டே இருக்கா? ” அந்த சாக்கிலாவது கொஞ்ச நேரம் இருந்து மெடிக்கலைக் கவனிக்கலாம் என்கிற நினைப்பில் கேட்டேன்.

அவன் என்னோடு வெளியில் நின்றவாறே உள்ளே உள்ள சுவர்; கடிகாரத்தைப் பார்த்து, ”மணி ஏழு. நமக்கு ஏழரை மணிக்குத்தான் வரும்.” சொன்னான்.

”இல்லே சொல்லு. லியோன் டீக்கடையில பேப்பர் படிக்கிறாங்க.” என்றேன்.

”அந்தக் கடைவரை ஒருத்தன். அதுக்கு அடுத்து உனக்கு எனக்கெல்லாம் வேற ஆள். அவன் ஆறு மணிக்கே வந்து வேலையை முடிச்சுப் போவான். நம்ம துரை எப்பவுமே ஒரு மணி நேரம் லேட்டாத்தான் வருவார்.”

”ஏன் ? ”

”ஏழை. அதிக வருமானத்துக்காகக் கொஞ்சம் பெரிய ஏரியாவைப் பிடிச்சிருக்கான் போல. முடிச்சு வர நாழியாகும். சரியாய் ஏழரைக்கெல்லாம் வந்துடுவான்.”

ஏழரைக்கு நம் பத்திரிக்கை வந்து, அங்கு படிப்பவர்கள் எடுத்துப் போவது என்பது சாத்தியமில்லாதது. கூட்டம் குறையாது. யார் எடுத்தாலும் தெரியும். யாரும் அசிங்கம், அவமானமென்று அஞ்சி தொடமாட்டார்கள். அப்போ…. பையன் மேல்தான் தவறு. போடாமல் விலைக்கு விற்று சுருட்டுகிறான். என் புத்திக்குத் தெளிவாகத் தெரிந்தது.

”ஏன் பேப்பர்ல ஏதாவது புது விசயமா ? ” செல்வம் கேட்டான்.

இதற்கு மேல் இவனிடம் உண்மையைச் சொல்லாவிட்டால் நிற்க விடமாட்டான் ! நினைத்து வந்த வேலையைச் சொன்னேன்.

”இவர்களெல்லாம் பெரிய மனுசன்கள். எடுக்க வாய்ப்பே இல்லே. பையன்தான் விட்டிருக்கனும். இருந்து விசாரிச்சுட்டுப் போ.” சொன்னான்.

”சரி.” நின்றேன்.

”இந்தா இதைப் படிச்சுக்கிட்டு கவனி!” சொல்லி பழைய சிறுவர் மலர் ஒன்றைக் கொடுத்து நாற்காலியும் கொடுத்தான். வெளியில் அமர்ந்து விரித்தேன்.

”சார். டீ குடிங்க.” பத்து நிமிடத்தில் அவன் மனைவி கணவனுக்கு எடுத்து வந்த கையோடு என்னைக் கேட்டாள்.

5.30க்குக் கிளம்பி சரியாய் 6.25 அல்லது 6.30க்கெல்லாம் திரும்பி வீட்டில் நுழைந்து கிரீன் டீ குடிக்கும் எனக்கு அவள் எடுத்து வந்த டீயின் மணம் நாசியில் ஏறி குடிக்கும் ஆவலைத் தூண்டியது.

”வேணாம் !” மரியாதைக்கு மறுத்தேன். அடுத்து அவனும் ”பரவாயில்லே குடி.” சொல்லவில்லை. அவளும் திரும்பவில்லை.

7.15, 7.30, 7..35, 7.45 என்று மணித்துளிகள் கரைய….கையிலுள்ள சிறுவர் மலரை எத்தனைத் தடவை புரட்டுவது ?

”செல்வம்! பத்திரிக்கையைக் காணோம் ? ” தலையைத் திருப்பி அவனைக் கேட்டேன்.

”ஆமாம்.. ஏன் வரலை… ? ” அவன் சந்தேகத் தொணியில் என்னைத் திருப்பிக் கேட்டான்.

”தெரியலையே….!!”

”சரியா வருவான். இன்னைக்கு இடையில் என்ன வேலையோ காலதாமதம். சரி… ..நீ ரொம்ப நாழி உட்கார்ந்திருக்கே. அவன் வந்ததும் நானே….நேத்து ரெண்டு நாளாய் உன் கடைக்குப் பேப்பர் போட்டானா இல்லையான்னு விசாரிக்கிறேன். நீ போ.” சொன்னான்.

ஏற்கனவே டீயின் பாதிப்பில் இருந்த இவன் சொன்னது சரியாகப் பட்டது.

”சரி. கேளு. அப்புறமா நான் உன்னை வந்து விசாரிச்சுக்கிறேன்.” சொல்லி நடையைக் கட்டி….வீட்டு வாசலைத் தொட்டேன். உள்ளிருந்து மணி எட்டு அடித்தது.

செருப்பைக் கழற்றிவிட்டு படியைத் தாண்ட… என் மகன்கள் நிர்மல், விமல், மருமகள் பிரியா, மனைவி எல்லாம் மயான அமைதியில் இறுக்கமாய் அமர்ந்திருந்தார்கள்.

”ஏன்…என்ன ஆச்சு ? ” நான் என் மனைவியைப் பார்த்துக் கேட்ட அடுத்து விநாடி….

”எங்கே போய்த் தொலைஞ்சீங்க ஏன் இவ்வளவு லேட் ? ” அவள் வெடித்தாள்.

”ஏ…ஏன்டி….??? ” அரண்டேன்.

”அஞ்சரைக்கெல்லாம் போய் ஆறரைக்கெல்லாம் திரும்பும் வயசான மனுசனை இன்னும் காணோமே….! எங்காவது மயக்கம் கியக்கம் அடிச்சி கிடக்கா, வழியில் வாகன விபத்து ஆபத்தா, இல்லே….வடக்கே சொல்லாம கொள்ளாம தங்கச்சி வீட்டுக்குப் போயிருக்கா, மேற்கே அம்மா வீட்டுக்குப் போயிருக்கா, கிழக்கே அண்ணன் வீட்டுக்குப் போய் கடற்கரையில் காத்து வாங்குதான்னு அல்லாடி…. பசங்களைத் துரத்தி, இப்போதான் அலைஞ்சி திரிஞ்சு ‘இல்லே’ ன்னு வந்து உட்கார்றானுங்க வயித்துல பாலை வார்த்தாப் போல நீங்க வர்றீங்க. போற இடம், காரியத்தைச் சொல்லிட்டுப் போயிருந்தால் எங்க மனசு துடிக்காமல் இருக்கும்ல்லே.?! ” சொல்லி முடித்த அடுத்த விநாடி டக்கென்று அவள் கண்களிலிருந்து இரு முத்துக்கள் புறப்பட்டு கன்னத்தில் உருண்டு நெஞ்சில் விழுந்தது.

‘ அட.!…’ எனக்குள்ளும் அந்த அதிர்ச்சி அடி விழுந்து சிலையாக்கியது.

மகன்கள் இருவரும்….அப்பா வந்த உணர்ச்சித் துடிப்பில், அம்மா அழுகையில் முகம் கனத்து அறைக்குள் செல்ல…..

”ம…மன்னிச்சிக்கோங்கோ…” மிழற்றினேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *