வரம் கேட்டவன் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 8,236 
 
 

அந்தக் காலத்திலே அதாகப்பட்டது 1930களிலும் அதுக்கு முன்னாடியும் திருநெல்வேலி வட்டாரச் சுற்றுப்புற ஊர்களில் மக்கள் பேசி மகிழ்ந்த கதைகளில் இரண்டை இங்கு தருகிறேன்.

ஒரு ஊரிலே அப்பாயி (அப்பாவி மனிதன்) ஒருத்தன் இருந்தான். அவனுக்கு அடங்காத ஆசை ஒன்று இருந்தது. தனக்கு அடர்த்தியா தாடி வளரணுமின்னு. அவன் பார்வையில்பட்ட பல பேருக தாடி அப்படி ஒரு ஆசையை அவனுக்கு ஏற்படுத்தியது.

ஆனா அவனோட உடல்வாகு, அவன் தாடையிலே மயிரு அடர்த்தியா வளரலே. ஏதோ கட்டாந்தரையிலே புல்லு முளைச்ச மாதிரி தாடி மயிர் தென்பட்டது. இதிலே அவனுக்கு ரொம்ப வருத்தம்.

அவனும் படாத பாடுபட்டான். தைலங்கள் தடவினான். யார் யாரோ சொன்ன பண்டுவம் பக்குவம் எல்லாம் செய்து பார்த்தான். ஊகூங். தாடி மயிர் அடர்த்தியா வளருவேனான்னு களுருவஞ்சாதனை சாதிச்சுப் போட்டுது. பையன் யோசிச்சான். அந்த ஊருக்கு வெளியே அய்யனாரு கோயிலு இருந்தது. சொல்லி வரம் கொடுக்கும் சாமின்னு சனங்க நம்பினாங்க. நேர்ந்துகிட்டு அய்யனாரைக் கும்பிட்டாங்க. அப்புறம் அது பலிச்சிட்டுதுன்னு சொல்லி மறுபடியும் சாமிக்கு பூசை பண்ணி பொங்கல் வச்சி வயிறார சாப்பிட்டு சந்தோசப்பட்டாக.

அதனால் இந்த அப்பாயியும் தனக்கு தாடி முளைக்க அய்யனாரிடம் வரம் கேட்பதுன்னு முடிவு செஞ்சான். அதிகாலையிலே எழுந்திருச்சு குளிச்சுப்போட்டு, நெத்திலேயும் உடம்பிலேயும் பட்டை பட்டையா திருநீறு பூசிக்கிட்டு, பக்தி சிரத்தையா கோயிலுக்குப் போயி கும்பிட்டான்.

அய்யனாரு கோயில் ஊரை ஒட்டிய சிறு மலை மேலே இருந்தது. சனங்க அதை மலையின்னு சொல்லிக் கிட்டாங்களே தவிர, உண்மையிலே அது மலையில்லை. பொத்தை (பொற்றை – சிறுகுன்று) தான்.

அப்பாயி தினசரி காலை நேரத்திலே பக்திமான் போல மலைக்குப் போயி சாமி கும்பிடுதானே; ரொம்ப நேரம் கும்பிடுற மாதிரித் தெரியுது; அப்படி என்னதான் வேண்டிக்கிடுதான் அய்யனாருகிட்டேயின்னு ஒரு ஆசாமிக்கு சந்தேகம் உண்டாயிட்டுது குறும்புக்கார மனிதன் அவன்.

அதனாலே, ஒரு நாள் அப்பாயி கோயிலுக்குப் போனதும் குறும்பனும் போனான். மறைஞ்சு நின்னு கவனிச்சான். கோயிலுக்குள்ளே அய்யனார் உருவத்துக்கு முன்னாடி நின்னு அப்பாயி கண்ணை மூடிக்கிட்டு, கும்பிட்டபடி, உருப்போடுத மாதிரி, இதை திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டிருந்தான்.

“மண்ணாலே கோட்டை கட்டி
மலை மேலே இருக்கும் அய்யனாரே
எனக்கு தாடி மயிர் முளைக்க
வரம் தாருமய்யா”

அவனுக்கே போதும்னு தோணுதவரை இதை நீட்டி இழுத்து பாட்டு மாதிரி கத்திக்கிட்டு இருந்தான் அப்பாயி. பதுங்கி நின்னு பார்த்த குறும்பன், ஓகோ இப்படியா சமாச்சாரம்னு எண்ணினான். நாளைக்கு இவன்கிட்டே ஒரு வேடிக்கை பண்ணணுமின்னும் நெனச்சான். குறும்பாகச் சிரிச்சுக்கிட்டே விருவிருன்னு முந்திக்கிட்டு ஊருக்குத் திரும்பிட்டான் அந்த ஆசாமி.

மறுநாள் அவன் அப்பாயி கோயிலுக்குப் போறதுக்கு முன்னாடியே போனான். அய்யனார் உருவத்துக்குப் பக்கத்திலே சிங்க வாகனம் ஒண்ணு இருந்தது. பெரிசா, மரத்தினாலே செய்யப்பட்டு, வர்ணம் பூசியது. அது பழசாகிப்போனதனாலே, வர்ணம் மங்கிப் போயிட்டுது. வாகனத்திலே ஒரு பொந்து (ஓட்டை) ஏற்பட்டிருந்தது.

சேட்டைக்கார ஆசாமி ஒல்லிதான். அதனாலே பொந்து வழியா சிங்க வாகனத்துக்குள்ளே புகுந்து அது வயிற்றுக்குள்ளே ஒடுங்கி இருக்க முடியும். இதை சோதித்துப் பார்த்த குறும்பன் உள்ளே நுழைஞ்சு பதுங்கிக்கிட்டான்.

பக்தன் வந்தான். வழக்கம் போலே சாமி முன்னே நின்னு கண்ணை மூடிக்கிட்டு, அய்யனாரை வேண்டி வரம் கேட்கும் பாட்டைத் திரும்பத் திரும்ப உச்சரித்தான்.

திடீர்னு அவனை உலுக்கியது ஒரு சத்தம்.

“ஏய் கவனி!
முன்னோர் செய்த தவப் பயனால்
மூன்று மயிர் முளைக்க அருள் புரிந்தோம்.
இன்னும் அதிகமாய் கேட்டதனால்
இருந்ததையும் எடுத்து விட்டோம்!”

சிங்க வாகனத்துக்கு உள்ளேயிருந்த ஆசாமிதான் வித்தியாசமான குரலில் இதை கத்தினான். மர வாகனத்துக்குள்ளே இருந்து வந்த குரல், கல்கட்டிடத்திலே எதிரொலித்து, கனத்த ஓசையாக முழங்கியது.

தாடி வரம் கேட்ட பக்தன் பயந்தேபோனான். அய்யனாருக்குக் கோபம் வரும்படியா நடந்துக்கிட்டோம்னு தெரியுது. அதுனாலேதான் சாமி இப்படி சொல்லுது என்று அவன் உள்ளம் பதறி, மிரண்டு அடிச்சு வெளியே ஓடலானான்.

அய்யனாரு தோணி (தோன்றி) அடிச்சுப்போடும்கிற கிலி வேறே. கண்ணு மண்ணு தெரியாம ஓடவும், வாசல்படி தடுக்கி தொபுக்கடீர்னு விழுந்தான். கீழே துருத்திக்கிட்டிருந்த ஒரு கல்லுலே அவன் முகம் இடித்தது. தாடையிலே பட்டு காயம் ஏற்பட்டது. தோல் பிஞ்சு (பெயர்ந்து) ரத்தம் வந்தது. தோலோடு தாடி மயிர் சிலவும் போய்விட்டது.

அய்யனார் சாபம் பலித்துவிட்டது என்று எண்ணிய அப்பாயி அப்புறம் கோயில் பக்கமே திரும்பிப் பார்க்கவில்லை. பக்தன் விழுந்து எழுந்து போன பிறகு, கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே வந்த ஆசாமி தன்னுடைய வேலைத்தனத்தை மெச்சி விழுந்து விழுந்து சிரித்தான். அப்புறம் இதை ஊராரிடம் சொல்லாமல் இருப்பானா? சொன்னான்.

அப்பாயியின் ஆசை பலிக்காமல் போனதைச் சொல்லிச் சொல்லி ஊர்சனங்க மகிழ்ந்துபோனாக.

மனைவியின் இயல்பு

ஒரு பனை மரத்திலே இரண்டு குருவிக கூடுகட்டி குடும்பம் நடத்திக்கிட்டு இருந்ததுக.

பக்கத்திலே நின்ன பனைக சிலதிலே. பாளை சீவி, கலயம் கட்டி வச்சிருந்தாக பனையேறிக. கலயத்துள்ளே சுண்ணாம்பு தடவி பதநி வடிய வைப்பாங்க. சில கலயத்துலே சுண்ணாம்பு தடவாம கள்ளு வடியச் செய்வாங்க.

ஒரு நா, ஆண் குருவிக்கு பதநி குடிக்கணுமின்னு ஆசை ஏற்பட்டுது. கலயம் கட்டியிருந்த பனை மரத்துக்குப் போச்சு. கலயத்து மேலே வசதியா உட்கார்ந்து, உள்ளே தலையைப் புகுத்தி பதநி குடிச்சுக்கிட்டிருந்தது.

அந்த நேரம் பார்த்து பனையேறி வந்துட்டான். ஏ திருட்டுப்பய குருவியின்னு கருவிக்கிட்டு, பாளை சீவுற அரிவாளை வீசினான். குருவியின் சிறகுலே சரியான வெட்டு.

குருவி பயந்து போயி, அலறி அடிச்சு, தப்பிச்சோம், பிழைச்சோமின்னு, ரத்தம் சிந்தச் சிந்த கூட்டை நோக்கிப் பறந்து வந்தது. கூட்டுக்குள்ளே பெண் குருவி சுகமாயிருந்துது. தன் சோடியின் கூச்சல் கேட்டும் அது எட்டிப் பார்க்கலே.

ஆண் குருவி அழுகிற குரலில்

“சாணான் களமுடிவான்
சிறகை அரிந்துவிட்டான்
கதவை திறயேன்டி
காரணத்தைக் கேளேன்டி”

என்று ஒப்பாரி வைத்தது. பெட்டைக் குருவி உள்ளே இருந்தபடியே பதில் குரல் கொடுத்தது.

“ஓலை சலசலங்கையிலே
ஓடி வந்தால் ஆகாதோ?
பாளை படபடங்கையில
பறந்து வந்தால் ஆகாதோ?
கள்ளு குடிச்ச மயக்கத்திலே
ஆள் அரவம் கேட்கலியோ?”

என்று புருசன் குருவியைக் குறை கூறியது அது.

கதை அவ்வளவுதான். புருசனைக் குறை கூறுவதும், சதா விமர்சிப்பதும் பெண்டாட்டியின் இயல்பாக அமைந்துவிடுகிறது என்பதைச் சுட்டுவதற்காக எழுந்த கதை இது. பெரும்பாலும் இதைப் பெண்கள் பேசி மகிழ்வது வழக்கம். அது ஒரு முரண்பாடுதான்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *