வரக்காப்பி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2024
பார்வையிட்டோர்: 2,328 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓட்டடை சூழ்ந்த தலைமுடி. யாரோ அறுந்து விட்டது; தேய்ந்துவிட்டது என்று கருதி தூக்கி எறிந்த வெவ்வேறு வடிவங்களில் மாட்டிக்கொண்ட தைக்கப்பட்ட கிழிந்த செருப்பு. வீடு துடைக்கப் பயன்படுத்திவிட்டு வீதியில் எறிந்த துணியை வேகமாய் உடுத்துக்கொண்டது போல் ஆடை அவர்களது உடம்பில்.

மூக்கு ஒழுகியபடி அவன் முதுகில் ஒன்றும், விரலைச் சூப்பியபடி அவளது தோளில் தொங்கிய தொட்டிலில் ஒன்றுமாய், இரண்டு குழந்தைகளையும் சுமந்தபடி அந்த மூனு சக்கர தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டே சாலையின் இரு பக்கமும் நோட்டமிட்டவாறு சென்றனர் மெய்யாத்தாளும் கருப்பனும்.

பனிமூடிய அந்தக் காலைப்பொழுதில் குண்டு குழியுமாய் கிடக்கும் தார்ச்சாலையில் “கடகட” வென சென்றது தள்ளுவண்டி.

வழியில் இருந்த பாலக்கட்டையில் பூசை நடத்திய குடிமகன்கள், பூசை சாமான்களான பாட்டிலை சாலையில் உடைத்தும் சிலவற்றை பாலக்கட்டை ஓரத்திலும் போட்டுவிட்டுச் சென்றதை கருப்பன் வண்டியை நிறுத்திவிட்டு பொறுக்கினான்.

“அப்பா, குனுஞ்சு குனுஞ்சு எந்திரிக்கவும் காலு வலிக்குதுப்பா, எறக்கிவிடு மகள் சொன்னதும் இறக்கி வண்டியில் உட்காரவைத்து தலையில் பனிவிழாமல் கிழிந்த சேலைத்துணியையும் போர்த்திவிட்டான்.

விரல் சூப்பி தூங்கியவன் அழ ஆரம்பித்தான்.

“மெய்யா அவன அமத்துஞ்ச”

“ஒன்னுக்குப் போயிட்டான் அதான் அழுவுறான்”

“சேரி… சேரி… அமத்து அழுவைய நிப்பாட்டிருவான்.”

“விடியலை நோக்கிய அந்தக் காலைப்பொழுதில் சாலையோரமாய் அமர்ந்து பாலூட்ட சாக்கெட்டை விலக்கினாள். கொக்கி அறுந்து விழுந்தது. இத்துப்போன சட்டையில் எத்தனை நாள் தான் ஒட்டிக்கொண்டே இருக்கும்.

“ஏஞ்ச கத்தவிட்டுக்கிட்டே இருக்க. இன்னும் அமத்தலையா”

“அமத்திக்கிட்டுத்தான் இருக்கேன். சூதானமா அங்கிட்டு கெடக்குற கிளாசு போத்தால எடுங்க”

சப்பி சப்பி நாக்கு தான் வறண்டது. பாலு துளியும் வரவில்லை.

விடாமல் அழ ஆரம்பித்தது குழந்தை.

“என்னஞ்சே ஆச்சு.. புள்ளைய தட்டிக்கொடு”

“இருந்தாதானங்க வரும். இல்லன்னா எப்படிங்க வரும். அழாம என்னங்க பண்ணுவான்.” சொல்லிக்கொண்டே அந்த பழைய தண்ணிடப்பாவை திறந்து பிளாஷ்டிக் குவளையில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினாள்.

குழந்தையின் வாயில் துணியால் நனச்சு வைத்தாள். குழந்தை சப்பிக்கொண்டே தூங்க ஆரம்பித்தது.

“அப்பா… பசிக்குது… மகளின் குரல் கேட்டு திருப்பிய கருப்பன். தன் மகளை தூக்கி நெஞ்சோடு அணைத்து.

“கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ… அப்பா ஒனக்கு பண்ணு வாங்கித் தர்றேன்.”

பாலக்கட்டையை விட்டு வண்டி பயணத்தைத் தொடர்ந்தது. அவர்கள் பின்னால் யாரோ ஓடி வருவது போல் இருந்தது.திரும்பி பார்த்தனர்.

நாலஞ்சு பேர் பெரிய தொந்தியை வைத்துக்கொண்டு ஓட்டப்பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தனர்.

“ஏய்யா… நமக்கு வயித்துக்கு வழியில்ல. இவங்களுக்கு வயிறுனால தொல்ல. நம்ம கஷ்டம் எப்ப வெலகப் போதோ” மெய்யாத்தாள் சொல்லி முடித்தாள்.

“விடுஞ்சே இப்படியே வா இருந்துறப் போறோம். எம் மகள ஸ்கூல்ல சேக்குறதுக்குள்ள சின்னதா பழைய இரும்புக் கடை ஒன்னு வச்சர்றேன். கொஞ்சநாள் பொறுத்துக்கோ.

“இதத்தான் உன்னக் கட்டிக்கிட்ட போதும் சொன்னே…ம்… நேத்து ஏழுரூவா காசு கொடுத்தேனே சட்டைப் பைக்குள்ள இருக்கானு பாரு. புள்ளக்கு வரக்காப்பி தண்ணியாவது வாங்கி கொடுப்போம்.”

“இருக்குஞ்சே… நாலு எழுத்து நானும் படிக்கல…நீயும் படிக்கல..ஏதாச்சும் தொழில கத்துக்கலாம்னா… அதுக்கும் வழியில்லாம போச்சு. விடுஞ்சே… பாட்டுலு, இரும்பாச்சும் பொறக்குற வேல கெடச்சுச்சே…”

“நா தப்பா சொல்லலையா… நம்ம பட்ட கஷ்டம் நம்ம பிள்ளைகளும் படக்கூடாதுயா”

வண்டியை நாலு ரோட்டுல ஓரமாக நிறுத்தினர்.

“அந்த கொவளைய கொடுஞ்சே போயி காப்பி தண்ணி வாங்கி வர்றேன்.”

டீக்கடைக்குப் போனவனை அங்கிருந்தவர்கள் விகாரமாக பார்த்தனர்.

“என்னப்பா வேணும்” ஒருவர் கேட்க, “காப்பி தண்ணி வாங்க வந்தேங்க. பிள்ளைங்க அங்கே நிக்குதுங்க. பாட்டுலு பேப்பரு கெடந்தா பொறக்க வந்தோங்க”

“ம்… சரி சரி போ… வரக்காப்பி வாங்கதான் அவனிடம் காசு இருந்தது.பால் காப்பி எட்டு எட்டு ரூபாய். வரக்காப்பி அஞ்சு ரூபா. நாக்கு ரொட்டி ரெண்டு ரூபா வாங்கி நடைபோட்டான்.

“இந்த மாறி வர்றவனுகள் நம்பக் கூடாதுயா.. அப்புடித்தான் போனவரம் திருநாட்டுல பேப்பர் பொறக்குற மாதிரி… வெளில் இருந்த பண்டம் பாத்திரத்தையெல்லாம் தூக்கிட்டு ஓடிட்டானுகளாம்.

அங்கிருந்தவர் ஒருவர் சொல்லவும்…

காதை செவிடாக்கிக்கொண்டே வண்டியை நோக்கிச் சென்றான்.

“என்னஞ்சே… மூஞ்சியே சரியில்லாம இருக்கு”

“ஒன்னும் இல்லஞ்சே… புள்ளைக்கு காலைப் பசிய போக்கிட்டோம். சொச்சப் பொழுத என்னப் பண்ணப் போறோம்னு தெரியலையே…”

“நேத்து குறுஞ்சாக்கீர வயித்த கழுவுச்சு. இன்னைக்கி கொவ்வாக் கீர கூடவா கெடக்காம போயிரும். ஆம்பள நீனே சங்கடப்பட்டா பொம்பள நா என்னயா பண்ணமுடியும்”.

வரக்காப்பியில் நனைத்து நாக்கு ரொட்டியை தின்றுகொண்டு இருந்த தன் மகளை தட்டிக்கொடுத்து தன்னுள் தைரியத்தை வளர்த்துக்கொண்டார் கருப்பன்.

“பொய்யும் பொறட்டும் நமக்கிட்ட இல்லயா. உண்மையா ஒழக்கிறோம். மனச தேத்திக்கஞ்சே..”

பொழுது விடிந்தது. ஏதோ ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையில் வாழ்க்கை பயணம் தொடர்ந்தது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *