கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 12,948 
 
 

கையில் எடுக்துக் கொடுக்கச் சொல்லி மகள் அடம் பிடிக்கும் போதெல்லாம் மனைவி பயப்பட்டு கூவினாள், என் மகள் கையில் பிடித்துக்கொடு என்று கேட்டது ஒரு எலிக்குஞ்சை. காண்டாமிருகத்தையல்ல, மிஞ்சியிருந்தால் அந்த எலி ஒரு அங்குலம் இருக்கும், கரப்பான் பூச்சியைக் கண்டால்கூட காட்டுப் புலியை பார்த்ததுபோல் பயப்பட அவளால்தான் முடியும், “தொடாத,,, தொடாத,,, கடிக்கும, சனியனை கீழே விடு,,,” என்று கத்தினாள்,

என் மனைவியே. அது உயிர், உன்னைப் போல் என்னைப் போல் அதுவும் ஒரு உயிர், அது ஒரு எலி, கம்பளியில் மடிக்கப்பட்ட வெடிகுண்டல்ல. பிரியாணி பொட்டலமுமல்ல அது, அப்படி ஒரு பூனைதான் பார்க்கும், ஒரு உயிர் எதிர்த்தாக்குதல் நடத்துவதெல்லாம் பயத்தின் பொருட்டுத்தான் என்பதை புரிந்துகொள்,

ஒரு உயிரை அணுகும் முறை நம் மகளுக்குத் தெரியும், இந்த விசயத்தில் அவள் ஒன்றும் ஐந்து வயதுப் பெண் அல்ல, நீவிக் கொடுத்தால் காட்டுப் புலி. சர்க்கஸ் புலியாக ஆகிறது, பூனைக் குட்டிக்கு பால்கொடுத்த நாயைப் பார்த்தோமே நாம். அது ஒன்றும் அதிசயமல்ல, இரு உயிர்களுக்கு இடையே நடக்க வேண்டிய பரிபாஷை நடந்திருக்கிறது அவ்வளவே, இந்த அண்டத்தில். ஆதியில் சமுத்திர ஆழத்தில் கருக்கொண்டு வெவ்வேறு வடிவமாய் உருப் பெற்று கரையேறியவை தானே பூமி முழுக்க உள்ள எல்லா உயிரும், ஒரு எலி பட்டுப் புடவை கடிக்கலாம். ஆனால் நகம் நறுக்கப்பட்டு தலை தடவும் பரிவான நம் பிஞ்சுப் பெண்ணின் விரலைக் கடிக்காது,

“குட்டியூண்டு அழகா இருக்குப்பா. அந்த எலிய புடிச்சிகுடேன் , பத்திரமா என் புது கவுன் மாதிரி வச்சிப்பேன்.” என்று என் மகள் சொன்னதும் என் உணர்வு பாடிற்று. “இவள் என் அம்சம், என் ரத்தத்தை கடைந்தெடுத்து வார்த்த அமிர்த சொருபம்”,

எல்லா பிள்ளைகளும் தன் பெற்றோர்களிடம் தனக்கு பிடித்தமானதற்காக மன்றாடுகிறார்கள், என் அம்மாவிடம் ஒரு தேவதையை எனக்காக பிடித்துத் தரும்படி நானும் மன்றாடியிருக்கிறேன், என் அம்மா தன் கண்ணீர் கொண்டு என் கோரிக்கையை தள்ளினாள், என் ஏமாற்றம் அவளுக்கு புரியாது, ஜனங்கள் தேசத்தையே தன்னைப் போல ஆக்க வெகுவாய் முயல்கிறார்கள், அறுந்து போன ஆசைகளை கோர்க்கக் கூட அனுமதிக்கவில்லை என் அம்மா, நான் திரவத்தால் நிரப்பப்பட்ட குளம் தான், ஆனால் என்னுள் நிரம்பியிருக்கும் நீர். அந்தத் திரவம் நான் விரும்பிக் குடிக்கும் ஒன்றல்ல,

என் மனைவிக்கு உடன்பாடில்லை என்றாலும் அந்த எலியை உயிருடனே பிடித்தேன், மகளின் சந்தோஷம் என் மனைவியை சமாதானப் படுத்தும், பொம்மைக்கும். மணியாட்டும் யானைக்கும். மனசை பறிகொடுக்கும் பிள்ளைகளுக்கு நடுவே என் பிள்ளை எலி கேட்டது எனக்கு சந்தோசத்தையும். அதைப்பிடித்துத் தந்த என் போன்ற மூளைகெட்ட அப்பனைப் பார்த்து உங்களுக்கு திகைப்பையும் ஏற்படுத்தும் இந்த விசயத்தை மறந்துவிடுங்கள். இருபத்தி ஐந்தாம் வயதில் ஒரு முறை தற்கொலைக்காக முயற்சி செய்தேனே அது ஏன் என்று விசாரித்துப் பாருங்கள்,

நான் ஓரு ஆசிரியன், பளிங்குபோல் வரும் பிள்ளைகளிடம் இல்லாத அழுக்குகளை சலவை செய்து சமூகத்திற்கு பொருத்தமான வஸ்த்திரமாக தைத்துத் தரும் பணி என்னுடையது, அன்பை நாம் ஏன் போதிக்க வேண்டும்? அது அவர்களிடம் இல்லாத ஒன்றா? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால். நாம் துவேசத்தையும். வக்ர குணத்தையும் போதிக்க ஆரம்பித்ததால் தானே அன்பு காணாமல் போயிற்று, நல்லதை ஒன்றும் சொல்லித் தரத் தேவையில்லை, கெட்டதை சொல்லித் தராமல் இருந்தாலே போதும், “அவ வேற ஜாதிடா கருமமே,,,” என்று அம்மா என்னுள் நச்சை ஏற்றாமல் இருந்திருந்திருந்தால் தேவதைகளுக்கும் ஜாதி உண்டு என்ற விசயமே எனக்கு தெரிந்திருக்காது,

அண்டை அசலில் கேட்டுப் பாருங்கள். கழுத்து எலும்பை முறித்து எலியைக் கொல்லும் பொறிதான் எல்லோரும் வைத்திருப்பார்கள், அதுதான் மனிதர்களுக்கு பிடித்திருக்கிறது, எலியை முழுசாய் பிடித்து அப்புறப்படுத்தும் பொறியோ ஒரு சிலரிடம்தான் இருக்கும், அப்படி முழுசாய் சிலர் எலியை பிடித்தாலும். அதை அப்புறப் படுத்தும் வித்தையே வேறு. சுடுநீரில் முக்கிக் கொல்கிறார்கள், அல்லது கோணிப் பையினுள் ஓடவிட்டு அடித்துக் கொல்கிறார்கள்,

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும்தான் மற்ற ஜீவராசிகள் வாழ்வதே மகா தவறென்று எந்த வேதத்தில் உள்ளது, உங்கள் உடமைகளுக்கு பங்கமென்றாலே கொடுரமாக அதைக் கொல்கிறீர்களே,,, அந்த உயிர்களின் உயிர்களுக்கே உங்களால் பங்கம் வருகிறதே, உங்களைப் பிடிக்க யார் மனுஷப் பொறி செய்வது, ஆனால் என் அம்மா அப்படியும் ஒரு மனுஷப் பொறி செய்து வித்தைகாட்டி என்னை அதனுள் அடைத்துவிட்டாள், அந்த பொறிக்குள் மசால்வடை இருக்கிறது, ஆனால் மகிழ்ச்சிதான் இல்லை,

மிருதுவான எலியைப் பார்த்து மகள் மிகவும் சந்தோஷம் கொண்டாள், மனைவி மிகவும் விசனம் கொண்டாள். “கடிக்கப் போவுது,,,” அதன் துருதுருப்பு என் மனைவிக்கும் ஆர்வத்தை தந்தது, “அய்யோ,,, எத்தனை ஊசி மாதிரி இருக்குது பார் பல், இதுதான் பட்டு ஜாக்கெட்டை கடிச்சதா,,? கொண்டாடி சுத்திய. அது முன் பல் ரெண்டையும் ஒடைச்சி கையில குடுக்கணும்,” அவளுக்கு வந்தது நிஜமான கோபம் அல்ல, “வேணாம்மா பாவம் தெரியாம பண்ணிடிச்சி, இது. எல்.கே.ஜீ, படிக்கிற எலியா இருக்கும். இதுக்கு கடிக்கிறது தப்புன்னு தெரியாதும்மா,,, விட்டுடு,” என்மகள் சிபாரிசிற்கு வந்தாள், அவள் பயமும் பொய், ஆனால். அன்றைக்கு ஒரு நடுப்பகலில் வேர்வை வழிய நான் அழுதது பொய்யில்லை, அம்மா அதை நிஜமென்று நம்பவில்லை,

முதல்நாள் அப்பு என்ற பெயருடன் சிக்கிக்கொண்ட அந்த எலி இரண்டாம் நாள் துவண்டு போயிற்று, மூன்றாம் நாள் உணவெடுக்க மறுத்தது, என்னவாய் இருக்கும்?

ஏன் தளர்ந்து போனாய் எலியே? என் மகளின் அன்பு உன்னை சாந்தப் படுத்தவில்லையா? என் மனைவியின் கருணை உன் வயிற்றில் இறங்கவில்லையா? மற்றவர் போல் பிடிபட்டவுடன் கொதிக்க சுடுதண்ணீர் விட்டு கொல்ல எத்தனிக்கவில்லையே நாங்கள், காக்கைக் கூட்டத்தின் நடுவே கொத்து பட்டு சாகவிடவில்லையே நாங்கள், கோணிப் பைக்குள் உன்னை புகவிட்டு குடல் தெறிக்க குதிகால் கொண்டு மிதிக்கவில்லையே நாங்கள்,

‘பின்னர் என்ன பயம்? அம்மா நினைவா. வீட்டு “ஞாகமா? சந்தோஷமாய் இரு, இன்னும் சில நாள், வெளியே விட்டுவிடுகிறேன், உன்னை. உன் இணைதேடும் காலத்தில் வெளியே விட்டுவிடுகிறேன், சந்தோசமாய் இரு,’ சத்தம் போட்டு கூண்டினருகே வாய் வைத்து எலியோடு பேசியது எனக்கே வியப்பாய்தான் இருந்தது,

ஆனாலும் அதற்கு சந்தோஷம் வந்ததாய் தெரியவில்லை, அது என் பேச்சை புரிந்து கொள்ளுமா? பாஷை தெரியுமா? பின்னர் எலி மொழி தெரியாத நான் ஏன் அதற்கு சமாதானம் கூறுகிறேன்? மொழி தெரிந்த. சக மனுஷியான என் அம்மா தன் சொந்த மொழியில் எனக்கான சமாதானத்தை அன்றைக்கு கூறவேயில்லை, நான் துவண்டு போய்க் கிடந்தேன் என்னவாயிற்றப்பா என்று ஒரு வார்த்தையும் கேட்கவில்லை, அவள் செய்த கூண்டிலே என்னை அடைக்க வார்த்தைகளை தொலைத்து அத்தனை வேகமாய் பறந்தாள்,

எலியைப் பார்க்க பாவமாய் இருந்தது, இதுவல்ல அதன் சுதந்திரம், எலிக்கு வேண்டிய தீனி தந்தாலும் இதுவல்ல அதன் சொர்கம், எலிக்கு அதன் வலைதான் சொர்கம், விட்டுவிட வேண்டியதுதான், மகளே என்னை மன்னித்துவிடு உனக்கு சந்தோசமாய் இருக்கலாம் ஆனால் அதற்கு. அந்த எலிக்குட்டிக்கு நீ வைத்திருக்கும் பஞ்சு வைத்து துணி போர்த்திய அந்த பெட்டி ஒரு சிறை, உனக்கு உன் அம்மாவின் மடிதானே சொர்கம். அது போல்தான் அதற்கு அதன் அம்மா மடிதான் சொர்கம், அதை பெட்டியிலிருந்து எடுத்து விட்டுவிட்டேன் அது தன் அம்மா தேடி ஓடிப் போயிற்று,

என் மகள் மிக கோபித்துக் கொண்டாள், ஆசையாய் அப்பு என்று பேர்வைத்த அந்த சினேகிதனை பள்ளிவிட்டு வந்து பார்த்தால் காணாமல் என்னிடம் கோபித்துக் கொண்டாள், உன் அன்பு சரியானதுதான், ஆனால் வேண்டாம் மகளே இது, போதும் இந்த விபரீதம், எலியிடம் பாசம் வைக்காதே, அதை நீ அடிக்கப் பழகு,

நாய் கண்டால் அதை வன்மத்தோடு அடி, தும்பி பிடித்து ரெக்கை பிய்த்து சந்தோசம் கொள், பட்டாம் பூச்சியை தீப்பெட்டியில் சிறைவைத்துக் கொல், அப்படித்தான் வளர்கின்றன எல்லாக் குழந்தைகளும், நீயூம் சாதாரண குழந்தை போலவே இரு, உன் அன்பு எனக்கு பயத்தைத் தான் தருகிறது, மரவட்டை மிதிபடக் கூடாது என்பதற்காக அடுத்த படியில் கால் வைத்து தடுக்கி விழுந்த உன் கருணை என்னை பயம் கொள்ள வைக்கிறது, வேண்டாம் சிறுமியே,

இது வேறு உலகம், சாதாரணமாய் இரு, உன்னைப்போல் கரப்பான் பூச்சிக்கு உணவு வைக்கிற உலகமல்ல இது, இதோ நீ அமைதியாய் உறங்கிக் கொண்டிருக்கிறாயே. இப்படி உறங்கவில்லை இங்கு யாரும், உறங்கும் போதும் கொசுக்களை கொன்றபடிதான் உறங்குகிறார்கள், பசித்த கொசு கையின் ரத்தத்தை வயிறு முட்டக் குடிப்பதை யாரும் வேடிக்கைப் பார்ப்பதில்லை. பார்ப்பவர்கள் ரத்தம் தெரிக்க நச்சென்று அடிக்கிறார்கள், நீயும் அப்படியே இரு மகளே,,, சராசரியாய் இரு, கல்லடி படாதே,

இங்கே வாழ்க்கையைத் தேடி வாழ்க்கையின் எதிர்த்திசையில் ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள். வாழ்க்கையின் எல்லாவற்றையுமே தொலைத்து விட்டார்கள், அவர்களிடம் இருப்பது எதை வேண்டுமானாலும் செரிக்கும் ஒரு வயிரும், சில ஊறுப்புக்களும் மட்டும்தான், சொன்னால் உனக்கு புரியாது மகளே, இவர்களுக்கு வானவில் கிடையாது., வானம் கிடையாது. நிலவோ சில விண்மீன்களோ கூட கிடையாது, மழையோ பச்சை புல்லோ சிறு பூக்களோ கிடையாது, இவர்களுக்கு தோட்டம் கிடையாது. அதில் தும்பியோ அது குடிக்கும் தேனோ. அதன் இனிமையோ கிடையாது, சுவர் இருக்கிறது பத்திற்கு பத்து அறை, அதில் ஒன்றிரண்டு சிரிப்பு. கொஞ்சம் சோகம். நிறைய வன்முறை. ரத்தம். குரோதம். இவைதான் இருக்கிறது,

அசுர வேகம். போட்டி பந்தயக் குதிரைகளாய் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் மகளே.,, என் அம்மா என்னை அந்த ஓட்த்தில் ஓட விட்டு. ஒரு பதக்கமும் வாங்க வைத்தாள், பந்தயக் குதிரைகளுக்கு ஆசுவாசமாக மேயக்கூட நேரம் கிடையாது, ஓட்டம்,,, ஓட்டம்,,, ஓய்வற்ற ஓட்டம், சாகும்வரை ஓய்வற்ற ஓட்டம், அப்படித்தான் எல்லோரையும் முந்திவிட வேண்டும் என்று ஓய்வற்று ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் இந்த மனிதர்கள், எல்லோருமே ஜெயித்து விடும்படியான பந்தயமல்ல வாழ்க்கை, யாராவது ஒருவர் முதலில் வந்து ஜெயிக்கிறார்கள், அதற்காக எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்,

விடியற் காலையின் பனியை நான் இன்றைக்கு அனுபவிக்க முடிகிறதா? அதில் ஊடுருவும் வெயிலின் கம்பிகளை கண் கொண்டு பார்க்க முடிகிறதா என்னால்? நவீன காலத்தின் வெற்றி ரகசியம் இதுதானே, உன் பாட்டி என்னை உருவாக்கி சமூகத்திற்கு நேர்ந்துவிட்ட அந்த மனுசி. மகன் வாழ்க்கையில் தோற்றுப் போகக் கூடாது என்று என்னை இதோ இந்த புயல் வீசும் சமூகத்தில் தூண் போல் நிற்க வலு தந்து விட்டாள், என் கம்பீரமும் அசைக்க முடியாத என் வாழ்வின் உறுதியும் அவள் உதட்டில் ஒரு மெல்லிய புன்னகையை படரவிட்டது,

அம்மாவிற்கு நான் நல்ல மகன், என் மனைவிக்கு ஒரு முழுமையான உத்ரவாதமான புருஷன், உனக்குக்கூட குறைவொன்றும் வைக்காத அப்பா, எனக்கு,,? நான் வீட்டின் மேல் ஏற்றப்பட்ட உத்திரம், பலமானதாய். வலுவானதாய் எல்லா பாரத்தையும் தாங்கக் கூடியதாய் இருக்கலாம் அந்த உத்திரம், ஆனால் அந்த உத்திரம் பட்டமரம்தானே? அதில் எந்த மழைக்காலத்திலும் ஒரு துளிர் விடாது, என் ஆன்மா எதையோ சதா இடைவிடாமல் எங்கெங்கோ தேடியபடி இருக்கிறதே. எதை,,,? உண்மையில் என்னைத்தான் நான் இழந்தேன் என்பது கூட இந்த உயிர் வேகத்தில் எனக்கு மறந்து போயிற்று, மகளே நான் என்னைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்,

என் ஆன்மா. நிஜமான என் பிம்பம் படிமம். படிமமாய் பூமியின் ஒரு ஆழத்தில் புதைந்து போயிற்று, நான் இன்று ஒவ்வொருவரிடமும் காட்டிக் கொண்டிருப்பது என் நிஜமான சொரூபத்தை அல்ல, ஒருநிலா மெல்லத் தேய்வது போல் என்சொரூபம் தேய்து போயிற்று, என் பவுர்ணமிக் காலம் பத்தாம் வயதில்தான் வட்டமாய் இருந்தது, அது நிலாக்காலம், அது வேறு காலம், அது வேறு உலகம், அந்த உலகம் அம்மாவிற்கு ஏனோ பிடிக்கவில்லை, எந்த அம்மாக்களுக்குமே அது பிடிக்கிறதேயில்லை,

ஆதியில் அந்த உலகம் என்னவாக இருந்ததோ தெரியாது, சுற்றிலும் புங்கமரங்கள் சு{ழந்திருக்க என்றைக்கோ சுண்ணாம்பும் சிறு செங்கல்லும் கொண்டு கட்டப்பட்டு. இன்றைக்கு இடிந்து பாழ்பட்டு எவரும் உபயோகப் படுத்த முடியாது பாசிபடிந்த ஒரு பழங் கட்டிடம்தான் அந்த உலகம், என் உலகம். பத்தாம் வயதின் என் உலகம், காடு போல் வளர்ந்திருந்த மரங்களுக்கு நடுவே அது கிடந்தது, நிறைய மரம், நிறைய செடி. நிறைய புதர். நிறைய முள். நிறைய பயம் இதுதான் அது, பகலிலேயே ஆந்தை அலறும் இடம், பெரியவர்களும் வர அவசியமில்லாத. ஊரைவிட்டு தள்ளிக் கிடக்கும் அந்த இடம் ஒரு சொர்க்கம்,

மனிதர்கள் மெல்ல மெல்ல தொலைத்துக் கொண்டிருந்த எல்லாமே அங்கிருந்தது, ஒரு பட்டாம்பூச்சியை பிடிக்க அதன் பின்னாலே சென்ற எனக்கு அந்த இடம் முதலில் பரிச்சியமானது ஒரு மழை தூறும் நாளில், அங்கு எந்த பயமும் இல்லாமல் இரண்டு தேன்சிட்டுக் குருவியின் குஞ்சுகள் கூட்டிலிந்தபடி வாய்பிளந்து அம்மாவிடம் உணவு வாங்குவதை கண்கொட்டாமல் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்,

தினம் அந்த குருவிக் குஞ்சுகளைப் பார்க்க போனேன், பயமுறுத்தாத இடமென்றால் மனுச இதயத்தில்கூட ஒரு குருவி கூடு கட்டும், குஞ்சுகள் பெரிதாகும் வரை ஆசை கொண்டு பார்த்தேன், ஒரு பச்சோந்தியை கண்டால் பயப்படத் தேவையில்லை என்று அங்குதான் கண்டு கொண்டேன், சுவர் இடுக்கில் பல்லி இட்டு வைத்த முட்டையை கண் இடுக்கிப் பார்த்தேன், நெருஞ்சிமுள் குத்துவதை நான் பொருட்படுத்தவில்லை. எறும்புகள் தன் முட்டைகளை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வதை தொடர்ந்து சென்று பார்த்தேன், அம்மா ஊட்டிய சோற்றைவிட அங்கு கோவைப் பழம் இனிமையாக இருந்தது,

அந்த பழங்கட்டிடத்தின் பக்கத்திலேயே ஒரு கிணறு இருந்தது, அதுவும் பழங் கிணறுதான் எட்டி உள்ளே பார்த்தால் தூரத்தில் இருக்கும் ஆலமரம் தன் வேர்கொண்டு அந்த கிணற்று நீரை சத்தம் செய்யாமல் குடிப்பதை பார்க்க முடிந்தது, எந்த வீடும் தரமுடியாத குளிர்ச்சியை மரம் தந்தது, எங்கும் கேட்க முடியாத பாடல் அந்த வனத்தில் கேட்டது, அத்தனை பறவைகள், எத்தனைவிதமான பேச்சு பேசுகின்றன அந்த பறவைகள்,

மழைக் காலத்தில்தான் அது எத்தனை பசுமையாய் இருக்கிறது, குளித்து பளிச்சென்றிருக்கும் மரங்களின் சந்தோசத்தை பார்க்கும் யாரும் சுவற்றுக்கு நடுவே தூங்க மாட்டார்கள். மரத்தின் மடியில்தான் கிடப்பார்கள், ஒரு பச்சிலை வாசனை. இன்றைக்கு நான் எங்கு தேடியும் கிடைக்காத அந்த பச்சை வாசனை அங்கு இருந்ததே, இன்றைக்கு அணிலும். குயிலும். ஆந்தையும். மைனாவும் குறைந்து வருகிறதே,,, அன்றைக்கு அவைமட்டும் தான் அந்த வனத்தில் இருந்தது, நான் மட்டும் தான் ஒரே மனுசன், இன்றைக்கு எங்கும் என் கண் முன் மனுச முகம்,

உண்ணவும் தோன்றாமல் பள்ளிக்கு செல்லவும் தோன்றாமல் நான் அந்த வனத்தில் அலைந்திருக்கிறேன், ஏகாந்த உலகம் அதை வேறு எவரிடமும் நான் சொல்லவில்லை. சொன்னாலும் யாரும் வர மாட்டார்கள். பயம், அடக்க மாட்டாத ஆர்வத்துடன் பட்டுப் பூச்சியை விட மென்மையான ஒரு சிறுமியிடம் இதைச் சொன்னேன், “மெய்யாகவா” என்று அவள் என் பின்னால் வந்தாள், ஆலமரத்தின் கர்வம் கொண்ட பேரிரைச்சலான காற்றின் ஓசைக்கு அவள் பயப்பட்டாள், புதர்ச் செடியின் அடர்த்தியில் கால்வைக்க அவள் நடுக்கப்பட்டாள், பாம்பு இருக்குமா என்று கேட்டாள், என் விரல்களைப் பற்றிக் கொண்டாள், ரோஜாச் செடியின் குச்சுகள் முள் இல்லாமல் மிருதுவாய் இருப்பதை உணர்ந்தேன்,

என் அதிசயங்கள் ஒவ்வொன்றையும் விழிகள் விரிய பார்த்தாள், என் சொந்த உலகம், குருவிக் கூடுகளும். அதனுள்ளிருந்து குருவிக் குஞ்சுகள் கீச்சிட்டு முறையிட்டதும் அதிசயப் படுத்தியது அவளை, பொசுக்கென்று தாவிய அணிலுக்கு மிரண்டாள், நத்தை ஒன்றை தொட்டுப் பர்த்தாள், மரங்கொத்தி ஒன்று ஏகத்திற்கு கத்த மிரண்டு போய் என்னை பார்த்தாள், பூக்கள்,,, பூக்கள்,,, அவ்வளவு புதர்ப் பூக்கள், அத்தனை வாசனை, என் தோல் மேல் கைபோட்டபடி அவள் பார்த்தாள், அந்த வனம் ஒரு தேவதையின் வாசத்தை எங்கும் பரப்பிற்று,

தேவதை என் கைவிரல் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாய் உணர்ந்தாள், பாதத்தில் சின்ன முள் குத்த துடித்தாள், முள் எடுத்து ரத்தம் துடைத்து மண் தூவியதும் அவள் இதயம் பயத்தில் பாடல் போல் துடித்ததை உணர்ந்தேன், உலகத்திலேயே பெரிய மாயா ஜாலம் சிறுமி தரும் முத்தம்தான் என்பது எனக்கு அந்த வனத்தின் மத்தியில் தெரிந்தது,

அதிசயத்தை எவர்க்கும் சொல்லாமல் என்னைப்போல் கிணற்றுக் கோட்டானாய் இருக்க அவளால் முடியவில்லை, சினேகிதிகளுக்கு குசுகுசுப்பாய் சொல்லி. அவர்கள் சினேகிதர்களிடம் சொல்லி ஒவ்வொருவராய் வந்து எட்டிப் பார்த்தார்கள், தினம் வந்தார்கள், மனுசன் நல்லவன்தான் மனுசர்கள்தான் கெட்டவர்கள், வேதனையே இதுதான்,

என் மனசு மட்டுமே தொட்டு சந்தோசம் கொண்ட அந்த உலகத்து சிருஷ்டிகளெல்லாம் அவர்கள் கையில் பாடாய் பட்டன, என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே துவம்சம் செய்தார்கள், வண்ணத்துப் பூச்சி சிறகு ஒடித்து தன் ஆடைமேல் பூசி. பட்டு சட்டை என்று அந்த மினு மினுப்பை மெச்சிக் கொண்டார்கள், தும்பி பிடித்து அதன் வாலில் அருகம்புல் செருகி பறக்க விட்டு. ராக்கெட் என்று சந்தோஷப் பட்டார்கள், பல்லி முட்டையை உடைத்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தார்கள், கூட்டில் இருந்த இரண்டு தேன்சிட்டு குஞ்சுகளை ஒருவன் எடுத்து கையில் வைத்துக் கொண்டு “நான் வீட்டில் கொண்டுபோய் வளக்கப் போறேன்” என்கிறான், “தப்புடா” என்றால் “இது உன்னோடதா,,,? போடா” என்று அடிக்க வருகிறான், அவன் தடிமாடு. அடிதாங்க மாட்டேன்,

அய்யோ இவர்களுக்கு தள்ளி நின்று எதையும் வேடிக்கைப் பார்க்கத் தெரியாது. கசக்கிவிடுவார்கள், எத்தனை பூவை பறித்து அந்த கிணற்றில் போட்டு வேடிக்கை பார்க்கிறார்கள், நல்ல வேலை எல்லாம் ஒருமுடிவுக்கு வந்துவிட்டது, தினத்திற்கும் பிள்ளைகள் அங்கே சென்றால் பெரியவர்கள் சும்மா விடுவார்களா, பூச்சி பூரான் ஏதும் கடிக்கும் அங்கே போகாதே என்றார்கள், மீறிப் போனவர்கள் முதுகில் நன்றாக சாத்தினார்கள்,

எனக்குத்தான் நிறைய சாத்து, அம்மா. ஒத்தைப் பிள்ளையன என்னை பாம்பு கடித்தால் என்னாவது என்ற பயத்தில் ஏகத்திற்கும் அடித்தாள், அங்கே பேய் இருக்கும் என்று பயமுறுத்தினாள், நாய் வரும். புலி வரும் என்றார்கள், அப்படி எதுவும் அங்கில்லை என்பது எனக்கு தெரியாதா? ஆனால். அதற்கு மேல் அங்கு யாரும் போகவில்லை, என்னாலும் போக முடியவில்லை, நான் போனாலும் பிள்ளைகள் சொல்லிவிடுவார்கள், சந்தோசம் தான், இனி யாரும் அந்த பட்டாம்பூச்சிகளை கொல்ல மாட்டார்கள், குருவிக் குஞ்சை பிடிக்க மாடட்டார்கள்,

அந்த பையன் எடுத்து வந்த அந்த இரட்டைக் குஞ்சுகளையும் அவன் அப்பன் வீதியில் பிடிங்கி எரிய ஒரு பூனை தின்றுவிட்டது, நான் செய்த பாவம்தான் அது, நான் சொல்லிதான் நடந்துவிட்டது, எனக்கு தூக்கமெல்லாம் கனவாகவும். கனவெல்லாம். வனமாகவும. வனமெல்லாம் புதராகவும். புதரெல்லாம் பூவாகவும். பூவெல்லாம் தேனாகவும். தேனெல்லாம் இனிப்பாகவும் இருந்தது, அந்த இனிப்புக்கும் அவள் தந்த அந்த முத்தத்திற்கும் எதோ சம்மந்தமிருக்கிறது, நான் வளர்ந்தேன்,

மற்றப் பிள்ளைகளைப் போல் நான் இல்லை, என்னால் சராசரியாக இருக்க முடியவில்லை, பள்ளிக்கு போவது காய்ச்சல் தரும் விசயமாக இருந்தது, புத்தகம் பாம்பாய் கழுத்தை இறுக்கிற்று, மதிப்பெண்களால் குழுந்தைகள் அளக்கப்படுகிறார்களே அது சரிதானா? அதில் கடைசி எடை நான்தான், அம்மா நிறைய அடித்தாள், நிறைய அழுதாள், “ஞாக சக்தி மட்டுமே மனித பரிணாமத்தின் உச்ச கட்ட வளர்ச்சி என்று நம்புகிறார்கள். இந்த பிள்ளைகளைப் பெற்றவர்கள், மீன் கொத்திக்கு தன் மூக்கைப் போல் மனிதனுக்கு “ஞாக சக்தி, எனக்கு போட்டி வெறியோடு வளரும் வித்தை தெரியவில்லை என்பதுதான் அம்மாவின் துயரம், என்னால் முடியவில்லை, அம்மா கொல்லும் பொருட்டே என்னை அடிப்பதாய் தோன்றிற்று, கொஞ்சம் கொஞ்சாய் என் நதி தடம் மாறிற்று, சு{தும் வாதுமே வாழும் சு{ட்சுமமென்று வளரத் தளைப்பட்டேன், கூர்மதியை வளர்க்க மொழியும். பேச்சும். புத்தகமும். பள்ளியும் பயண்படக்கூடும், மெல்லிய இயல்பும். பேரண்ட கருணையும். சாந்த ரு்பத்தையும் இயற்கைதான் எவர்க்கும் கற்றுத் தரும்,

பள்ளியில் பிள்ளைகளுக்கு இவற்றை எல்லாம் நான் போதிக்கக் கூடாது, எவற்றை போதிக்க வேண்டு மென்று அச்சடித்து தந்திருக்கிறார்கள், அந்த புத்தகத்தில் அச்சடித்த விசயத்தை விழுங்கி. கேட்கும்போது வாந்தியெடுக்காத பிள்ளைகள்தான் ஏதும் தெரியாத நொண்டிக் குதிரைகள், எனக்கு ஊனமுற்ற ஒரு உயிரினத்தை வார்த்தெடுப்பதில் இஷ்டமில்லை, வாழத் தோதானவர்களாய். அச்சடித்த சங்கதியை விழங்கும் புதிய ஜீவராசிகளாய். தன் பக்கத்து இருக்கைக்காரனை படிப்பில் விழுங்கி ஏப்பம் விடுவதே முக்தி என்று உருவேற்றப்பட்டவனாய் உள்ள ஒரு உயிரினத்தை நானும் உற்பத்தி செய்கிறேன்,

வேத காலம் தொட்டு இன்று வரையுள்ள எல்லா குருமார்களும் என்னை மன்னிக்க, எனக்கு இந்த வேலை. உபாத்தியாயர் வேலை பிடிக்கவில்லை, இந்த பள்ளி. நான் சொல்லித் தரும் இந்த பள்ளிக்கூடம் ஒரு சுடுகாடு, மிகப் பெரிய சவக்குழி, உயரமான கல்லறை, காரணம் சாதாரணமானதாக உங்களுக்கு தோன்றக் கூடும் குருமார்களே,,, ஆனால் எனக்கு அது சதையறுந்து ரத்தம் வழியும் காரணம், நான் பத்து வயதில் பார்த்த அந்த வனத்தை அழித்து அதன்மேல் கட்டப்பட்ட இந்த பள்ளி. பள்ளியல்ல நிஜமான கல்லறை,

எனக்கு ஏற்பட்ட காயத்தை என்னுள் விடாது தொடரும் வலியை எவர்க்கு சொன்னாலும் சலித்துக் கொள்வார்கள், ஒரு ஆசிரியனாக இருந்து கொண்டு தான் சொல்லித்தரும் பள்ளியையே ஒரு சுடுகாடு என்று சொல்லும் ஒருவனின் வலியை எவரும் புரிந்து கொள்ள வேண்டும், என் துக்கம் அப்படி. வேதனை அப்படி,

எதுஎதற்கு துக்கப்பட வேண்டும் என்பதற்குகூட ஒரு பட்டியல் வைத்திருக்கிறார்கள், பட்டியலில் அல்லாத ஒன்றிற்காக அழுபவர்களை பயித்தியம் என்கிறார்கள், தன் சொந்த ரத்தத்தின் ஒவ்வொரு அணுவும் செத்துக் கொண்டிருந்தால்தான் துக்கப்படுவார்கள், அந்த சுயநலம்தான் அவர்களை அரக்கர்களைப் போல் பருக்கவிட்டது. உலகமெல்லாம், இருக்க இடமின்றி படரவிட்டது,

இதை எவரிடம் சொன்னாலும் என்னை எதிரிபோல் பார்க்கிறார்கள், எத்தனை தப்பாய் மனிதன் நடந்தாலும் அந்த இனத்தை குறை கூறக்கூடாதென்று எதிர்பார்க்கிறார்கள், தன் மேல் குற்றம் சுமத்தியதாய் என்மேல் கோபம் கொண்டு அடிக்க வந்தவர்களும் உண்டு, ஆனால். இந்த பேரண்டமெங்கும் காற்றாய் பரவிவிட்ட மனுசர்களின் மொத்தப் பேர் மேலும்தான் நான் குற்றம் சொல்கிறேன், நான் சிறுவயதில் கண்ட அந்த புங்கவனம். அந்த சொர்கம் அதில் இருந்த ஆயிரம் ஆயிரம் உயிர்களை அழித்து அதன் மேல் கட்டிய இந்த பள்ளி. அதில் சவம்போல் கிடந்து பாடம் நடத்தும் நான்? எதனால்,,, எதனால்,,, கல்வியும் அறிவும் முக்கியம் அடுத்த உயிர்கள் அப்புறம் என்று அவற்றை கொன்று பள்ளி கட்டிய நீங்கள். பிள்ளைக்கு பள்ளியில் எதை சொல்லித்தரப் போகிறீர்கள் ஒரு உயிர்க்கூட்டத்தைவிட மேலான விசயமாய், அதனால்தான் குற்றம் சொல்கிறேன். இந்த பள்ளியை சுடுகாடென்கிறேன், பொய்யென்று சொல்ல வழியுண்டா எவர்க்கும்?

வரம்புகளை உடைத்துக் கொண்டு வரை முறையற்று வளர்ந்து விட்டவர்களுக்கு இருக்க இடம் வேண்டாமா? பருத்தி தோட்டத்தை அழித்து வீடு கட்ட ஆரம்பிததார்கள். சரிதான், கொஞ்சம் நெல்வயல் அழித்தார்கள், அது கூட பரவாயில்லை, ஆனால் அந்த வனத்தை அழித்தார்களே. அந்த ஆலமரத்தை. வேப்பமரத்தை வெட்டினார்களே. ரோமம் முளைக்காத காக்கை ஒன்று அந்த மரத்தின் கூட்டில் இருந்ததே அதை என்ன செய்தார்கள், எனக்கு எது செய்யவும் தெரியவில்லை. பதினேழு வயது இளைஞன் அறிவு கூறவோ. ஆலோசனை கூறவோ தகுதி அற்றவன், அந்த என் ஜீவராசிகளின் உலகம் மெல்ல உயிர்விட்டுக் கொண்டிருக்கிறது. இடிக்க வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை, ஏன் என்றுதான் கேட்க முடிந்தது. புதிதாக ஒரு பள்ளிக் கட்டிடம் பெரியதாக கட்டப் போகிறார்களாம், பள்ளி இல்லா ஊரில் குடி இருக் வேண்டாமென்பதை ரத்தம் முழுதும் நாம் கற்று அடக்கியிருக்கிறோம், கல்வி கண் போன்றது. ஒருவருக்கு மாடல்ல மற்றயவை. கேடில் விழுச் செல்வம் கல்வி, நான் என்ன பேசுவது? மனித சமூகமா. ஜீவ ராசிகளா?

்அய்யோ,,, அங்க ஓணான் முட்டை இருந்தது இடிக்காதிங்க.் என்ற போது வேலை செய்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் கொல் என்று சிரித்தார்கள், வேதனை,,, வேதனை,,, இன்னொரு உயிரிடம் கருணை கொண்டவனை பயித்தியமாக்கும் சுயநலம் வேதனை,

ஆயிரம் உயிரைக் கொன்று ஒரு பள்ளியை கட்டுவது தவறென்று எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை, சொல்லும் தைர்யமும் எனக்கில்லை, அதைக் கேட்டவர்கள் மீண்டும் சிரித்தார்கள், நான் படித்தவனென்பதால் கல்விக்கும். பள்ளிக்கும் மரியாதை தரவேண்டுமென எதிர்பார்த்தார்கள், நான் மதிக்கிறேன். என் கல்வியை அது தரும் “ஞானத்தை மதிக்கிறேன், ஆனால் உயிரினத்தின் மேல் கருணை கொள்ளாத தட்டையான “ஞானத்தை வெறுக்கிறேன், நீங்கள் அழித்த அந்த வனத்தில் என்ன இருந்தது என்று அறிவீர்களா? புதர்களின் அடர்த்தியில் குருவிக் குஞ்சுகள் கத்தியது கேட்கவில்லையா? அந்த புதரின் இலைகளில் பட்டுப் பூச்சியின் முட்டையிருந்தது உங்களுக்கு தெரியவில்லையா? வகை வகையான பூச்சிகள் அங்குதானே முட்டையிட்டு இறக்கையடித்தபடி இருந்தன. அவையெல்லாம் துடிக்க துடிக்க இறக்கும் படி நெருப்பு வைத்தீர்களே,,, முட்டைகளைத் தேடி அலைந்த காடைகளுக்கு ஏதேனும் பதில் இருக்கிறதா உங்களிடம்? சில்வண்டு பாடிய பாடலின் வருகளை நீங்கள் கட்டிய இந்த கல்லறையிலிருந்து கேட்கமுடியுமா? இந்த கல்லறை மேல் எப்படி ஒரு அன்பான உலகம் சாத்தியப்படும்,

ரத்தக் கரையும், உயிர்ப் போராட்டத்தின் மரண ஓலமும் கேட்ட இடத்தின்மேலும். கர்பப்பை ரத்தத்தின் மேலும். கண்ணீர்த் துளி மேலும் கட்டப்பட்ட எவ்வளவு பெரிய சாம்ராஜயமானாலும். அது எத்தனை சர்வ சக்தி படைத்ததானாலும் சாம்பல் போல உதிர்ந்து போகுமே, இது தெரியாமலா நெருப்பு வைத்தீர்கள் வனத்திற்கு,,,? நீங்கள் மட்டுமா,,, என் அம்மாவும் என் உயிர்வனத்திற்கு நெருப்பு வைத்தாள், எனக்கு உள்ளிருந்த நிறைய பாடும் பறவைகள் பொசுங்கி விழுந்தது, திக்கற்றுப் போன எதுவோ நாதியற்று அழுதது,

அம்மாவிற்கு என் வேதனை புரியாமலில்லை அவள் வைத்த நெருப்பு எந்த இடத்தில் என்னை தீய்க்கும் என்று எனக்கும். அவளுக்கும் தெரியும், காதல் என்பது சாக்கடை என்று அவள் நினைத்தாள், ஆதிகாலத்தில் என் விலா எழும்பெடுத்து அரைஜீவனாய் உருவாக்கப்பட்டவள் தான் என் தேவதை என்று சொல்லியும். அம்மா நெருப்பு வைத்தாள், எல்லாம் பொசுங்கிப் போயிற்று,

இன்றைக்கு ஒருத்தியை கட்டி புருசனாகி. மகளைப் பெற்று தகப்பனாகி. கொஞ்சம் பிள்ளைகளுக்கு ஆசிரியனாகி வருமானமும். வசதியும் கொண்டு வாழ்வதால் எல்லோரும் என்னை கெட்டிக்காரன் என்கிறார்கள், வாழக்கையில் ஜெயித்துவிட்டதாய் அம்மா கூட கூறுகிறாள், நீ நினைப்பதுபோல் கல்யாணமும். காசும். வேட்டியும். பாய்விறிப்பும் அல்ல அம்மா நான் கேட்ட வரம், அந்த புங்கவனம் எப்படி எரிந்து போனதோ அப்படித்தான் எரிந்து போயிற்று என் தேவதைக் கனவும்,

வனமிருந்த இடத்தில் திரும்ப என்றைக்குமே கனகச்சிதமான ஒரு சந்தோசக் கூப்பாடு எந்த உயிரும் போட்டதில்லை, அங்கு எந்த ஜீவராசியும் புதிதாய் கருக்கொள்ளவில்லை, ரத்த ஓட்டமும். இதயத் துடிப்பும் அங்கிருந்து காணாமல் போயிற்று, அந்த புங்கவனத்தின்மேல் எழுந்த இந்த உயர்ந்த பள்ளிக் கட்டிடம் போல் நானும் கம்பீரமாய் இருக்கிறேன், என்னுள் பாடிய குயில்தான் அம்மா மடிந்து போயிற்று, அன்றைக்கு புங்கவனத்தை எப்படி பறிகொடுத்தேனோ அப்படித்தான் தேவதையையும் பறிகொடுத்தேன்,

எவர் சமாதானமும் என்னை சமாதானப்படுத்தாது. நான் ஜெயித்தேனா அம்மா,,? அம்மா நான் சிரிப்பதால் சிரிப்பிற்கு பின் ரணமிருக்காது என்று என்னாதே, பேசுவதால் பேச்சிற்கு பின் அழுகை இருக்காது என்று நினைக்காதே, என் தேவதை செய்ய ஏதுமற்றவளாய் “புத்திசாலித்தனமாய் நடந்துக்கோ,,,” என்று கூறி அவள் புத்திசாலித்தனமாய் நடந்து கொண்டாள், ஆனால் மறப்பது எப்படி?

அதனால்தான் மகளே இயல்பாய் இரு என்கிறேன், இவர்கள் எப்படியோ அப்படியே இருக்கப் பழுகு, கருணை மிகுந்தவர்கள் ரணம் தாங்கும் பக்குவம் கொண்டிருக்க வேண்டும், இல்லையென்றால் இந்த உலகம் முழுக்க கருணையால் நிறைக்க உன்னால் ஆகுமா? அந்த திண்மை உன்னிடம் இருக்கிறதா? அந்த பொறுமை இருக்கிறதா? இயற்கைக்கும் மனுசனுக்கும் ஒரு தொப்புள்கொடியை உன்னால் சிருஷ்டிக்க முடியுமா? மனிதர்களுக்குள் அமைதியும். கதகதப்பான அன்பும் இந்த விஞ்ஞான வேகத்தில் சாத்தியமில்லை, அவர்களின் ஏளனத்தை எதிர்கொள்ள முடியுமா உன்னால்,

என்னால் முடியவில்லை மகளே, என் சரிரத்தின் சிறு சிறு சதையும் சமூகக் கழுகிற்கு வெட்டி கொடுத்து விட்டேன், வனத்தின் நடுவே அணில் குஞ்சுகளோடு நானும் எரிந்து போனேன், என் அழுகையின் துளி சத்தம்கூட எவர் காதிலும் விழவில்லை, தலைக்கு உஷ்ணமேற வெறிகொண்டு தேடிக் கிளம்பி என் தேசத்தை அடையவிடாமல் தடுப்பது உன் பிஞ்சு விரல்தான், பிரமாண்டமான ராட்சசனுக்கு கீழ் நான் மண்டியிட்டு பயந்து கிடக்கிறேன், அசையாமல் அப்படியே நான் புதையுண்டு போவேன் என்று எனக்கு தெரிந்து போயிற்று, ஒரு வேலை நீவைக்கும் ஒரு செடி. நீ உருவாக்கும் ஒரு வனம். நீ உருவாக்கும் ஒரு பட்டுப்பூச்சியின் சிறகடிப்பு மீண்டும் என்னை உயிர்த்தெழ வைக்கக்கூடும், உன்னையாவது நம்பலாமா,,? எல்லா ஜீவன்களும் வாழும் ஒரு வனத்தை நீ படைப்பாய் என்று, அப்படி நீ படைத்தால் நான் இல்லாவிட்டாலும் சொல் அங்குள்ள தேவதைக்கு. என் அன்பு ஏதும் ஒரு வண்ணத்துபூச்சியின் சிறகடிப்பில் கருக்கொண்டிருக்கும் என்று!
சுபம்

Print Friendly, PDF & Email

1 thought on “வனதேவதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *