இப்போதும் அப்படியே நடந்தது. கைகளும், கால்களும் சண்பகப் பூங்கொத்துக்களாய்த் துவளப் பொன் கொண்டு பூசினாற் போன்று மின்னும் உடம்போடு வெள்ளை விழிகளினிடையே திராட்சைக் குண்டுகளாய்க் கருமை உருள, ஒவ்வொரு பார்வையிலும் ஓர் புதிய மருட்சியை உண்டாக்கிய படி தெருவைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குழந்தை, அவரைக் கண்டதும் பயந்து முகத்தை திருப்பிக் கொண்டு குடுகுடுவென்று குடிசைக்குள் ஓடிப் போய் விட்டது. மறுபடி வெளியில் வரவே இல்லை. அவர் காத்திருந்தது வீணாகத்தான் போய் விட்டது. அந்தக் குழந்தை நேற்றும் அப்படித்தான் ஓடியது. அதற்கு முந்திய பல தினங்களிலும் கூட அப்படித்தான் ஓடியிருந்தது.
அவருக்கு ஒர் ஆசை. தங்கத்தில் செதுக்கி, மெருகிட்டு உயிரும் ஊட்டித் தவழ விட்டது போன்ற அந்தக் குழந்தையைச் சில விநாடிகள் எடுத்துக் கொஞ்ச வேண்டும். அதன் பிஞ்சுக் கைகள் தன் கழுத்தைச் சுற்றி வளைக்கும்படி, நீண்ட மூக்கைப் பிடித்து இழுக்கும்படி, கன்னங்களைக் கிள்ளும்படி – இன்னும் விதவிதமாக எல்லாம் விளையாட வேண்டுமென்று அந்தக் குழந்தைக்கு ஆசையிருக்கிறதோ, அந்த விதமாக எல்லாம் விளையாடும்படி தன்னை அதனிடம் ஆளக் கொடுத்து விடுவதற்குத் தயாராயிருந்தார் அவர்.
அவரைப் போன்ற நிலையில் உள்ள ஒருவர், இப்படிக் கொஞ்சுவதற்கு ஆசைப்படும் போது குழந்தைகளுக்கா பஞ்சம்? தம்முடைய காரியதரிசியை அழைத்து இப்படி ஒர் ஆசை மனத்தில் ஒளிந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பாய் இரண்டொரு வார்த்தைகள் சொன்னால் கூடப் போதும். அவருடைய பெரிய பங்களாவின் வாசலில் ஒரு குழந்தை எக்ஸிபிஷனே நடத்தலாம் போல் அவ்வளவு குழந்தைகள் கூடி விடும்.
ஆனால் புதருக்குள் பூத்த பூவைப் போல் வெளிப் பார்வைக்குத் தெரியாமல் உள்ளேயே மணக்கும் அந்தரங்கமான ஆசையாயிற்றே இது. இந்தக் குழந்தையைப் பார்த்த கணத்தில்தான் இப்படி ஒர் ஆசையே அவருக்கு ஏற்பட்டது. தற்செயலாய்க் காற்றில் விரித்து விட்டபுத்தகத்தின் பக்கத்தைப்போல முன்பின் தொடர்பின்றி இந்தக் குழந்தையைப் பார்த்த முதற்கணத்தில் உண்டாகி அந்தக் கணத்துக்கு அப்பாலும் நிலைத்து விட்ட ஆசை இது.
இந்த ஆசையை அவருடைய தினசரி வழக்கங்களில் ஒன்றாகப் புரிந்து கொண்டு விட்ட கார் டிரைவர் அந்தக் குடிசை வாசலை நெருங்கியதும், வேகத்தைக் குறைத்து மெல்ல நிறுத்துவான். பின்பக்கத்து ஸீட்டின் நடுப்பகுதியிலிருந்து ஓரத்துக்கு நகர்ந்து அந்த வயதுக்கு எந்த அளவு அவசரப்பட முடியுமோ அவ்வளவு அவசரப்பட்டுக் காரின் கதவைத் திறந்து கொண்டு அவர் கீழே இறங்குவதற்குள் அந்தக் குழந்தை உள்ளே ஒடிவிடுகிறது. அப்படி ஒடுமுன் ரோஜாமொட்டுக்களைப் போன்ற உதடுகளை மலர்த்தி வலது கைக்கட்டை விரலை இதழோரமாகச் சப்பிக் கொண்டிருக்கும் கோலத்தில் அது நின்றதே அந்தக் காட்சியை மட்டும் அவர் கண்கள் பதிய வைத்துக் கொள்கின்றன. கண்ணுக்கு நம்பிக்கையாலும், ஆசையினாலும் தோன்றும் பொய்யான பிரமைக்காட்சியாய் அந்த இடத்திலேயே அந்தக் குழந்தை நிற்பது போலத் தோற்றுகிறது. நிற்பது போலத்தானே தவிர நிற்பதாக அல்ல. இப்படிச் சில அழகான குழந்தைகளாகப் பிறந்துதான் தெய்வம் இந்த மண்ணில் தவழ்கிறது என்ற நினைப்போடு காரில் ஏறிக் கொண்டு புறப்பட்டார் மில் முதலாளி மீனாட்சிசுந்தரம்.
அறுபத்தேழு வயதுவரை தனக்கு மனைவியும் மனைவிக்குத் தானும் குழந்தையாக இருந்ததைத் தவிர வேறு குழந்தைகளைப் பெற்றுக் கொஞ்சுவதற்கு வாய்ப்பில்லாத ‘தந்தை’யின் மனநிலையைக் கற்பனை செய்து பார்க்க முடியுமானால் திருவாளர் மீனாட்சிசுந்தரத்தின் துன்பங்களை நாமும் புரிந்து கொள்ள முடியும். நாமும் தவிக்க முடியும்.
‘தந்தை’யாவது ஒன்றாவது? அவரைத் தந்தையென்று சொல்வதற்கு யார் இருக்கிறார்கள்? ‘’யாரைப் பெற்று வளர்த்திருக்கிறார் அவர்?
‘கலைத் தந்தை’ ‘தொழில் தந்தை’என்று செல்வத்தையும் செல்வாக்கையும் மதித்து உலகத்தார் கூட்டம் கூடிப் புகழும் பட்டங்கள் அவரை எது எதற்காகவோ ‘தந்தை’ என்று கூறிக் கொண்டிருந்தன. அப்படி எவ்வெவ்வற்றிற்கு எல்லாம் அவர் புகழ்த் தந்தையாக்கப்பட்டிருந்தாரோ அவற்றை அவர் பெற்றதுமில்லை; வளர்த்தது மில்லை. பெறாமலும் வளர்க்காமலுமே தந்தையாயிருக்க முடியுமா? பெறாததற்கும், வளர்க்காததற்கும் கூடத் தந்தையாக இருக்க முடிந்த உலகமா இது? இருந்தும் என்ன பயன்? பெறுவதற்கும் வளர்ப்பதற்கும் ஆசைப்பட்டதை அவர் இன்னும் அடையவில்லையே!
இந்த விநாடியில் அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும். அவருடைய வசதியுள்ள உறவினர்கள்கூடத் தங்கள் குழந்தைகளில் ஏதாவதொன்றை அவர் சுவீகாரம் செய்து கொள்ளும்படி கொடுத்துவிடத் தயாராயிருந்தனர். அவருடைய செல்வச் செழிப்பை ஆதாரமாகக் கொண்டுதான் உறவினர்களுக்கு இந்த ஆசை தோன்றியிருந்தது. மற்றவர்கள் அவருடைய பணத்துக்கு ஆசைப்பட்டுக் கொண்டிருந்தனர். அவரோ பணத்தினால் வாங்கிவிட முடியாத ஒர் அன்புக்காகத் தவித்துக் கொண்டிருந்தார். தம்முடைய மனத்தில் ஏதோ ஒரு வறுமை இருப்பது அவருக்கே புரிந்தது.
இந்தக் குழந்தையைப் பார்க்க நேர்ந்ததிலிருந்து அந்த வறுமை அதிகமாகியிருப்பது போலவும் புரிந்தது.குடிசையின் வாயிலில் நின்று கொண்டிருந்து விட்டு தன்னைக் கண்டதும் உள்ளே ஒடும் இந்தப் பொன்னிறக் குழந்தையோ தன்னைத் தொட்டுத் தழுவிக் கொஞ்ச முடியாத காரணத்தினால் அவரை இன்னும், பெரிய ஏழையாக்கியிருந்தது. பெரிதும் ஏக்கமுடையவராக்கியிருந்தது.
சாயங்காலம் மில்லிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது வேறு விதமாக இந்தது. குழந்தையை நெருங்க முயன்றார் அவர்.
அந்தக் குடிசைக்குச் சிறிது தொலைவு முன்னாகவே காரை நிறுத்தச் சொல்லி, கீழே இறங்கிக் கொண்டு தாம் மட்டும் தனியே நடந்தார் அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை.
குடிசை வாயிலில் சாக்கடை ஒரமாகத் தெருப் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்தது குழந்தை சட்டைப் பையில் வாங்கி வைத்துக்கொண்டிருந்த சாக்லேட் துண்டுகளை எடுத்துக்கொண்டுபட்டுப்பூச்சி பிடிப்பதற்காகப் புதர் அருகே பதுங்கிப் பதுங்கி கிடக்கும் சிறுவனைப் போல் அந்தக் குழந்தையைப் பிடிப்பதற்காக அது தன்னைப் பார்த்துவிடாமல் அடிமேல் அடி வைத்து நடந்து நெருங்கினார் அவர்.
அவருடைய வலதுகையில் வர்ணத்தாளில் சுற்றிய சாக்லேட் துண்டுகள் நடுங்கின. ஆயிற்று! அவருடைய ஆசை நிறைவேறிவிட்டது. பூ மாலையைத் தொடுவது போல் அந்தக்குழந்தையின் பட்டு மேனியைத் தீண்டித் தோள் உயரத்துக்குத் துரக்கிவிட்டார். சாக்கடைச் சேற்றில் அழுந்தியிருந்த அதன் செவ்விளம் பாதங்களை அவருடைய வெள்ளைச் சட்டையில் பட்டு அழுக்காக்கி விடுகின்றன.
அழுக்காவது. இந்த அழுக்குத்தான் அவர் அடைய விரும்புகிற பரிசுத்தம், ரோஜாப் பூக் குவியலைத் தீண்டுவதுபோல எவ்வளவு சுகமாயிருக்கிறது இந்தக் குழந்தையின் உடம்பு?
திடீரென்று பின்புறமாக யாரோ வந்து தொட்டுத்துக்கிவிட்ட அதிர்ச்சியிலேயே பாதி மிரண்டு போயிருந்த அந்தக் குழந்தை தன் கண்களுக்கருகே அவருடைய முகத்தைப் பார்த்துவிட்டு வீலென்று அலறியது.
“நாயினா. பூச்சாந்தி. பூச்சாண்டி .!” குடிசைப் பக்கமாகக் கையை நீட்டிக் கொண்டு வீறிட்டது குழந்தை அவருடைய கையிலிருந்த சாக்லேட் துண்டுகளைத் தட்டி விட்டுவிட்டது. குழந்தையின் உடம்பும் அவருடைய பிடியிலிருந்து விடுபட்டு இறங்கி ஒடுவதற்காகத் திமிறியது.
முகத்தில் சரிபாதி அடர்ந்த தாடியும் தாடியில்லாத இடங்களில் வெட்டுக் காயங்களுமாகக் கோரமான தோற்றத்தை உடைய மனிதன் ஒருவன் குடிசைக்குள்ளிருந்து ஓடிவந்தான்.
“நாயினா. பூச்சாந்தி.” என்று கூறிக் கொண்டே குழந்தை அவனை நோக்கித் தாவியது.
அவன்தான் அந்தக் குழந்தையின் தந்தை போலிருக்கிறது. அவர் குழந்தையை அவனிடம் விட்டுவிட்டார். வீறிட்டு அழுததில் அதன் முகம் குங்குமக் குழம்பாய்ச் சிவந்திருந்தது. ஆனால் குழந்தையை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டவனோ அதைக் கீழே நிற்கச் செய்து விட்டு அடக்க ஒடுக்கமாக அவரருகே ஓடிவந்து இரண்டு கைகளையும் சேர்த்துக் கூப்பினான். அவன் உடம்பு பாதாதிகேசப் பரியந்தம் நடுங்கிக் கொண்டிருந்தது.
அவன் தன்னுடைய மில்லில் வேலை பார்க்கிறவர்களில் ஒருவனாயிருக்க வேண்டுமென்று அவருக்குப் புரிந்தது.
“ஐயா! குழந்தை உங்கள் சட்டையெல்லாம் சேறாக்கிட்டுதுங்களே. துக்கிரியப்ப மவ-நாலு வெக்கணும் முதுகிலே…” என்று குழந்தையைப் பிடித்து அறைவதற்கு இருந்த அவனைத் தடுத்துக் கையமர்த்தினார் அவர்.
“குழந்தையை ஒண்ணும் செய்யாதே! நான்தான் அதைத் துரக்கினேன்…”
“……”
“என்ன வயசாகுது குழந்தைக்கு?.”
“மூணு வருஷம் ரெண்டு மாசமிருக்கும்.”
“என்ன பேரு வச்சிருக்கே..?”
“வண்டு’ன்னு வச்சிருக்கா எம் பொஞ்சாதி. துறுதுறுன்னு எப்பவும் ஏதாச்சும் செய்தியிட்டேயிருக்குது. அதான் வண்டு’ன்னு வச்சிருக்கா.”
“ரொம்பப் பொருத்தமான பேர்தான்.”
“ஏன்?. சுட்டித்தனமா உங்ககிட்ட என்னவாவது செஞ்சிட்டாளா?.”
“அப்படி ஒண்னுமில்லே அழகான குழந்தை. கண்ணு பார்வை துறுதுறுன்னு நடத்தை – பேச்சு எல்லாமே வண்டு போலத்தான் இருக்கு.”
“ஏதோ.. எசமானுக்குப் பிடிச்சுப் போச்சு ரொம்பப் புகழறீங்க…”
“நான் வரேன்…” அவர் புறப்பட்டார். பின்னால் பத்துப் பதினைந்து கெஜதுரம் கார் நிறுத்தியிருந்த இடம் வரை நடந்து போய் எறிக் கொண்டார். அவர் மனம் மட்டும் அந்தக் குழந்தையைச் சுற்றி நின்று கொண்டது.
டிரைவர் அதுவரை காரருகே நின்றுகொண்டே அந்தக் குடிசை வாசலில் நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டேதான் இருந்தான். அவன் மனத்தில் ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையை அந்தரங்கமாக வைத்துக் கொண்டான் அவன்.
அவரைப் பங்களாவில் இறக்கியதும் காரை போர்டிகோவில் அப்படியே விட்டுவிட்டு வந்த வழியே திரும்பி நடந்து புறப்பட்டான் டிரைவர். அதே குடிசை வாசலுக்குப் போய் நின்று கொண்டு கைதட்டினான். குழந்தை இப்போதும் சாக்கடையருகேதான் விளையாடிக் கொண்டிருந்தது.
குழந்தையின் தந்தை குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்து பார்த்தான். டிரைவரைப் பார்த்ததும் அவனுடைய தாடிக்கு நடுவே சிரிப்பு மலர்ந்தது. “வாங்க என்ன சங்கதி…?”
“சங்கதிதான்…ரொம்பப் பெரிய சங்கதி”
மில் கூலியின் தாடிக்கு நடுவே மறுபடி சிரிப்பு மலர்ந்தது.
“ஆமா. நீயும் உன் சம்சாரமும் ரெண்டு பேருமா மில்லிலேதானே வேலை பார்க்கிறீங்க?”
“ஆமாங்க…”
“எத்தினி குழந்தைங்க உங்களுக்கு?”
“ஆறு பொண்ணு… ரெண்டு பையன்…”
“அப்பாடீ. தாங்குமா..?”
“தாங்குதோ…தாங்கலியோ.பெத்துட்டாக் கிணத்துலே பிடிச்சுத் தள்ளிட முடியாதுங்களே. வளர்த்துத்தானே ஆவணும்…”
“நீயேதான் வளர்க்கனுமா? வேறெங்கேயாவது வளரலாமா?”
“நீங்க சொல்றதொண்ணும் புரியலிங்களே?.”
“இப்பிடி வா, சொல்றேன். புரியும்.”
டிரைவரும் மில் கூலியும் காதருகே இரகசியம் பேசுவது போல் சிறிது நேரம் பேசினர். கூலி தயங்கினான்.
“அவ சம்மதிக்கமாட்டாளுங்க. இந்தக் குழந்தை மேலே அவளுக்கு உசிர்… வண்டு.வண்டுன்னு இதுமேலே கொள்ளை ஆசை அவளுக்கு. ராஜா வீட்டுலே பெறக்கற ராணியாக்கும் இதுன்னு அவ சொல்லிப் புகழாத நாளில்லே…”
“அட சர்த்தான்யா… புகழ்லே என்னா பெரயோசனமிருக்கு…? நெஜமாவே ராணியாக்கிப் பார்க்க முடியும் போல சந்தர்ப்பம் வந்திருக்கு பெரிய ஐயா இந்தக் கொழந்தைக்காக மில்லையே எழுதி வைங்கன்னாலும் வச்சிடுவார்.நீ நா சொல்றபடி செய்யி. எட்டுக் கொழந்தைலே ஏழு பத்தாதா உன் சொந்தத்துக்கு?”
“பார்க்கலாம்… எனக்கு யோசிக்க டயம் கொடுங்க… அவளைக் கலந்து பேசிச் சொல்றேன்…”
இது நடந்த மறுநாள் மீனாட்சிசுந்தரம் கோடை வாசத்துக்காக ஊட்டிக்குப் போய்விட்டார். டிரைவரும் உடன் சென்றான். இனி ஒரு மாதம் ஊட்டியில்தான். குளிர்ந்த சூழலில் உதகமண்டலத்தின் வைத்துத் தன் யோசனையை அவருக்குச் சொன்னான் டிரைவர்.
“அந்தக் கொழந்தை மட்டும் கிடைக்கிறதாயிருந்தா இந்த உலகத்தையே அதுக்கு ஈடாகக் கொடுக்கலாம்.” என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் அவர். அந்தக் குழந்தையின் மேல் அவ்வளவு ஆசை அவருக்கு அந்தக் குழந்தைக்குத் தன்னைத் தந்தையாக நினைத்துப் பார்ப்பதில் ஒரு பெருமிதத்தை உணர்ந்தார் அவர். வண்டு அவர் மனத்திலேயே இடைவிடாமல் சுழன்று கொண்டிருந்தாள். அவளுடைய சுறுசுறுப்பான கண்கள், பேச்சு, ரோஜாப்பூ போன்ற மெல்லிய மேனி – எல்லாவற்றையும் நினைத்து நினைத்து உதகமண்டலத்திலிருந்து திரும்பும் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார் அவர். ஏப்ரல் 15ந் தேதி புறப்பட்டவர் மே 16ந்தேதிதான் ஊருக்குத் திரும்பி வர முடிந்தது.
ஊருக்குத் திரும்பிய முதல்நாள் வீட்டிலிருந்து மில்லுக்குக் காரில் புறப்பட்டபோது முப்பது நாள் அந்தக் குழந்தையைப் பார்க்காமல் இருந்துவிட்ட பிரிவின் தாபம் எல்லாம் ஏங்குகிற மனத்தோடு போய்க் கொண்டிருந்தார் அவர்.
ஆனால் என்ன ஏமாற்றம்? குடிசை வாசலில் வண்டு நிற்கவில்லை. அந்த ஏமாற்றத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாயுங்காலம் மில்லிலிருந்து திரும்பும்போது பார்க்கலாம் என்று நம்பினார். திரும்பும்போதும் வண்டு தென்படவில்லை. மறுநாளும் அப்படியே.வண்டு எங்கும் பறக்கவில்லை.அந்த வாசல் வாடியிருந்தது.
மூன்றாம் நாள் காலையில் அவரே அந்தக் குடிசையின் வாசலில் இறங்கிக் கைகளைத் தட்டி உள்ளேயிருந்த வண்டின் தந்தையை அழைத்தார். வண்டின் தந்தை தளர்ந்து போயிருந்தான். அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவன் கோவென்று அழ ஆரம்பித்துவிட்டான். அவன் உதடுகள் உணர்ச்சிவசப்பட்டுத் துடித்தன.
“என்னடாது.? ஏன் அழறே? வண்டு எங்கே காணலே…?”
“வண்டு பறந்துட்டா எசமான். நாலு நாள். அம்மையிலே கிடந்து. உடம்பெல்லாம் பொரிப் பொரியாகக் கொப்புளமாகி…”
அவர் இதயம் தாங்க முடியாத அதிர்ச்சியோடு வீடு திரும்பினார். போர்டிகோவில் காரை நிறுத்திக் கதவைத் திறந்துவிட்டு “சார்…வீடு வந்தாச்சு” என்று குல் கொடுத்தான் டிரைவர். தூங்குவதுபோல் உட்கார்ந்திருந்த அவர் தலை சாய்ந்தது. சரிந்தாற்போல் காருக்குள்ளேயே அவர் உடலும் சாய்ந்தது. அந்த உடம்பைத் தாங்கிய டிரைவர் அதில் உயிர் இல்லை என்பதை உணரச் சிறிது நேரம் ஆயிற்று!
– 1969-க்கு முன், நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை