அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை, ருக்மினிக்கு,மகளுக்கு இன்னைக்கு விடுமுறை. வீட்டில் இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள் செளம்யா வரும்போதுதான் தூங்கி எழுந்திருந்தாள். எனக்குத்தான் அவசரம். அலுவலகத்துக்கு கிளம்பி வந்து விட்டேன். இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று போன் செய்யலாமா? மனதுக்குள் நினைத்தவள் வேண்டாம், திட்டுவாள் ஏம்மா போய் அரை மணி நேரம் தான் ஆச்சு, அதுக்குள்ள எனக்கு போன் பண்ணலையின்னா என்ன? நான் என்ன சின்ன குழந்தையா? இந்த
பதிலை இப்பொழுது வாங்குவதற்கு பதில் இன்னும் அரை மணி நேரம் கழித்து அவளிடம் வாங்கிக்கொள்ளலாம். முடிவு செய்தவள் அலுவலக வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். இருந்தாலும் அவள் மனது தன் மகளை சுற்றியே வந்து கொண்டிருந்தது.
அவள் அப்பா மறையும் போது இவள் பத்தாவது படித்துக்கொண்டிருப்பாளா?
எப்படியோ சமாளித்து விட்டோம்.இவள் படிக்கும்போது கூட நான் இவ்வளவு பயப்பட்டதிலையே? பட்டப்படிப்பு படிக்கும்போது கூட தினமும் பேருந்தில் தானே சென்று வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது இவ்வளவு பயப்பட்டிருப்போமா? ஹூகூம், அந்த கல்லூரி வயதுக்கு உரிய துறு துறுவுடன் இருந்ததும், இவளோடு கல்லூரியில் படிக்கும் ஆண், பெண் நண்பர்களை, வார விடுமுறை அன்று வீட்டுக்கு அழைத்து வருவதும், வந்து அம்மாவின் சமையலை பற்றி புகழ்ந்து, விதவிதமாய் சமைக்க செய்து அன்றைய உணவை முடித்து கிளம்புவார்கள். மகள் அம்மாவின் கன்னத்தை பிடித்து சாரி அம்மா அவங்க எல்லாம் ஹாஸ்டல் ஸ்டூடண்ஸ், வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்குவாங்க, அதுதான் ஒரு நாள் இப்படி கூட்டிட்டு வந்து உன்னை தொந்தரவு பண்ணுறேன், சொன்ன மகளிடம் செல்லமாய் கோபித்துக்கொள்வாள். ஏண்டி ஒரு நாள் உன் நண்பர்களுக்கு விருந்து சமைச்சு போடறதுனால நான் ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டேன். அப்பொழுது என் மகளை பற்றி இருந்த தைரியம் இப்பொழுது எங்கே? அவள் மனதுக்குள் அந்த கேள்வி வந்தது.
படித்து முடித்து ஒரு மாதம் வீட்டில் இருந்தாள், தனியாகத்தான் இருந்தாள், அப்பொழுது கூட இந்த பயம் இவளுக்கு வந்ததில்லை.அதற்கப்புறம் மென்பொருள் கணினி துறையில் இவளுக்கு வேலை கிடைத்தற்கு பின்னால் தான் நாம் இவ்வளவு பயப்படுகிறோமா? சில நேரங்களில் அவளுக்கு சிரிப்பு கூட வரும். அங்கங்கு பெண்கள் வெளி மாநிலங்களுக்கும், பெரிய பெரிய நகரங்களிலும் வேலை செய்து கொண்டுதான் உள்ளார்கள். நான் மட்டும் ஏன் இப்படி மகளை பற்றி பயந்து சாகிறேன்.
இந்த பயம் எப்பொழுது ஆரம்பித்தது,நினைவு படுத்தி பார்த்தாள். ஆறு மாதங்களுக்கு முன்னாள் நான்கு வீடு தள்ளி இருந்த சுலோச்சனா ஒரு முறை இவளிடம் நம்ம ஏரியாவுல ஒரு பையன் அடிக்கடி சுத்தி கிட்டு இருக்கான், அதுவும் போகும்போதும், வரும்போதும், உன் வீட்டை பாத்துட்டே போறான். சில நேரம் கூப்பிட்டு கேக்கலாமுன்னு பார்ப்பேன், அப்புறம் அவன் உண்மையிலேயே வேற எதுக்காவது வந்திருந்தா, ஒரே களேபரமாயிடும், உன் பொண்ணு பேரும் கெட்டுடும், அதனால உன் காதுல போட்டு வைக்கிறேன், சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள். இவள் மனதுக்குள் ஒரு புயல் வந்து உட்கார்ந்து கொண்ட்து.
சுற்றி உறவுகளுடன் இருக்கும் பெண்ணுக்கே பொது இடத்திலேயே பல அபாயங்களை செய்து விட்டு போய் விடுகிறார்கள், நானும் என் பெண் மட்டும் இந்த ஊரில் இருக்கும்போது என்ன நடக்குமோ என்ற பயம் வந்து விடுகிறது. அதுவும் வீட்டில் ஆண் துணை இல்லை என்று தெரிந்து விட்டால்,அவளுக்கு நினைக்கவே பயமாக இருந்தது.
.ருக்மிணியும் ஓரளவு தைரியசாலிதான், இல்லாவிட்டால் கணவன் இறந்த பின்னால் வாரிசு வேலை அவளுக்கு கிடைத்து, அந்த வேலையில், தன்னுடைய மகளை இந்தளவுக்கு படிக்க வைத்து ஒரு வேலையில் உட்கார வைக்க முடிந்திருக்குமா?
சுலோச்சனா சொன்னதுக்கு அப்புறம் இவள் பயத்துடனே ஒவ்வொரு நாளும் தன் மகள் வீடு திரும்பும் நேரம் வரை பரபரப்புடனே இருப்பாள்.இவள் ஆறு மணி அளவில் வீட்டுக்கு வந்து விடுவாள். மகள் வருவதற்கு இரவு ஏழு மணிக்கு மேல் ஆகி விடும். அதுவரை இவள் பயத்துடனேயே காத்திருப்பாள். தன்னுடைய பயத்தை மகளிடம் காட்டாமல்
இருப்பதற்கு நிறைய மெனக்கெட்டாள். செளம்யாவுக்கு இவளின் கவலையை பற்றி தெரியவே தெரியாது. அவள் வழக்கம்போல எல்லோரிடமும் பழகிக்கொண்டும் பேசிக்கொண்டும், வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தாள்.
ஒரு முறை இவள் தன் மகளுக்காக காத்திருந்த போது தன் மகள் நடந்து வருவதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். தன் மகள் என்னம்மா இன்னைக்கு என்ன ஸ்பெசல் பண்ணியிருக்க என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள். வெளியே நின்றிருந்த இவளும் வீட்டுக்குள் நுழைய முற்படுகையில் யதேச்சையாக பாதையில் கண் செல்ல திடீரென்று பக்கத்து சந்திலிருந்து ஒரு இளைஞன் சட்டென்று தன் பைக்கில் வெளியேறி இவள் வீட்டை கடந்து செல்வதை பார்த்தாள், அப்படி சென்றவன் இவள் வீட்டை ஒரு முறை பார்த்து செல்வதையும் பார்த்தவள் வெல வெலத்து போனாள்.யார் இவன்? திடீரென்று சந்திலிருந்து வந்து தன் வீட்டு வழியாக இவ்வளவு வேகமாக வண்டியை முறுக்கி செல்ல வேண்டிய அவசியம் என்ன? அவ்வளவுதான் அவளின் சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.
உள்ளே வந்த தாயின் முகம் பேயறைந்த்து போலிருந்ததை பார்த்த செளம்யாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. என்னம்மா இப்படி இருக்கே? நான் உள்ளே வரும்போது நல்லாத்தானே இருந்தே? கவலையாய் விசாரித்தாள்.
இல்லே இல்லே ஒண்ணுமில்லை, திடீருன்னு தலைவலிக்கற மாதிரி ஆயிடுச்சு, சமாளித்தாள். மகள் இவள் சொன்னதை நம்பாமல், உடம்பு சரியில்லையா? வா டாகடரை போய் பார்த்துட்டு வந்துடுவோம்.
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் இப்ப பரவாயில்லை. சமாளித்தாள். வேண்டாம், தன் மகளிடம் எதுவும் சொல்ல வேண்டாம், பயந்து விடுவாள், இல்லை என்றால் வேறு ஏதாவது செய்யலாம் என்பாள். மனதை கட்டுப்படுத்திக்கொண்டு மகளுக்கு காபி போட சமையலறைக்குள் நுழைந்தாள், ஆனால் அப்பொழுது ஆரம்பித்த அவள் மனதின் புயல்..
அலுவலகத்தில் ஓடிக்கொண்டிருந்த தன் மகளை பற்றிய சிந்தனைகளை அதற்கு மேல் ஓட முடியாமல் சட்டென எழுந்தாள். வேண்டாம் லீவு போட்டுட்டு வீட்டுக்கு போவோம் முடிவு செய்தவள் தன் மேலாளரை பார்க்க விரைந்தாள்.
பேருந்தை விட்டு இறங்கியவள் தன்னுடைய் வீட்டை நோக்கி வேக வேகமாக நடந்தாள், மனம் முழுக்க தன் மகள் என்ன செய்து கொண்டிருக்கிறாள், என்ற எண்ணத்திலே அந்த சந்தில் திரும்பியவளை ஒரு வண்டி வேகமாக உரசி சென்றது. திடுக்கிட்டு போன ருக்மிணி நல்ல வேளை ஒரு நொடியில் ஆபத்தை உணர்ந்து அந்த ரோட்டை விட்டு தள்ளி தொப்பென்று விழுந்தாள். ஆனால் அவள் விழுந்ததை கூட கவனிக்காத அந்த வண்டி சர்..ரென்று மெயின் ரோட்டை அடைந்து அங்கிருந்து வேகமாக சென்று மறைந்து விட்டது.
கீழே விழுந்த இவள் அப்படியே வெல வெலத்து போய் விட்டாள். அதற்குள் அங்கு சிறிது கூட்டம் கூடி விட்டது. ‘கொஞ்சம் கூட மனிதாபிமானமில்ல போறான் பாரு” பலவேறு கருத்துக்கள். இவள் சமாளித்து எழுந்தவள், வலிய ஒரு புன்னகையை முகத்தில் கண்ண்பித்து மெல்ல வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
கீழே விழுந்த அதிர்ச்சி, மற்றும் உடல் வலியை விட வீட்டு அழைப்பு மணியை அழுத்தி தன் மகள் எந்த வித பாதிப்புமின்றி கதவை திறக்க வேண்டி, மனசு பரபரக்க நின்று கொண்டிருந்தாள். பத்து நிமிடங்களாயிற்று, இவள் மனது அப்படியே நொறுங்க
ஆரம்பித்தது.
க்ளிக்..கதவு திறக்க மகள் அப்பொழுதுதான் குளித்து உடை மாற்றிய கோலத்துடன் நின்றவள், எதிரில் தன் அம்மா கீழே விழுந்த்தில் உடைகள் கசங்கி போய் நின்று கொண்டிருப்பதை கண்டு, அம்மா என்னாச்சு, பதட்டத்துடன் விசாரித்தாள்.
ஒண்ணுமில்லை கீழே விழுந்துட்டேன், சமாளித்தாள், தன் மகள் பத்திரமாய் இருக்கிறாள் என்ற எண்ணமே அவள் மனதில் ஒரு அமைதியை கொண்டு வந்திருந்தது.
கொஞ்சம் இரு அப்படியே பக்கத்துல் ஒரு கிளினிக் இருக்கு, டாகடரை பார்த்துட்டு வந்திடலாம், மகள் அம்மாவை அப்படியே நிற்க வைத்து உள்ளே சென்றவள் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தாள்.
இவர்கள் டாக்டரை பார்க்க அடுத்த தெருவுக்குள் திரும்பிய பொழுது அங்கு கூட்டமாய் ஆட்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்தவர்கள், மெல்ல ஒதுங்கி நடக்க முற்படுகையில் கூட்ட்த்துக்கு நடுவில் ஒரு வண்டியும், தினமும் அவள் மனதை பயமுறுத்திக்கொண்டிருந்த அந்த இளைஞனும் கிடப்பதை பார்த்தாள். அவன் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தான்.
மகள் அதை பார்த்து விட்டு “ராஸ்கல்” எவனோ இடிச்சுட்டு போயிருக்கான், பாவம் சொல்லிவிட்டு அம்மாவை கூட்டிக்கொண்டு நடந்தாள்.
அப்படியானால் அந்த வண்டி இவனை அடித்து விட்டுத்தான் அவ்வளவு வேகமாக என்னையும் கீழே தள்ளி விட்டு போயிருக்கிறது. மனதுக்குள் நினைத்தவள், இப்பொழுது தன்னை இடித்து சென்ற அந்த வண்டிக்காரனை வாழ்த்திக்கொண்டாள்.
மறு நாள் செய்தித்தாளில் வந்த செய்தியை மகளுக்கு காட்டி “பாத்தியா என்னை இடிச்சு தள்ளின வண்டிதான் அந்த பையனையும் அடிச்சு தள்ளியிருக்குன்ன்னு போட்டிருக்கு, ஆனா அந்த பையன் மேல போலீஸ் கேசு நிறைய இருந்திருக்காம். இங்கே வந்து அடி படனும்ணா அவன் ஏதோ கெட்ட நோக்கத்துக்காகத்தான் இங்க வந்திருக்கணும்.சொன்னவளின் குரலில் தென்பட்டது மகிழ்ச்சியா, அல்லது நிம்மதியா என்று தெரியவில்லை.