கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 6,000 
 
 

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலம் காலமாய், கற்பாந்த காலமாய் அவ்விடத்தில் நடமாடியவை காற்றும், மழையும், மண்ணும், மணலுமே. மரமும் செடியும் அவையவை விதை விழுந்த இடத்தில் முளைத்து, வளர்ந்து, சளைத்து மறுபடியும் கிளைத்தன. வானளாவியனவெல்லாம் கூனிக் குறுகிக் குன்றி மறுபடியும் தோன்றின. காற்று சுழல்கையில் அதனுடன் உதிர்ந்த சருகுகள் சுற்றித் தம்மைத் தாமே துரத்தி அலைந்தன. இரவியும் இரவும் மாறிமாறி வந்து போயும், கற்பாந்த காலமாய், காலம் அவ்விடத்தில் வரையே இல்லாது போயிற்று.

மனிதனின் அடிச்சுவடு படாமலே கற்பாந்த காலம்…

ஆயினும் நாளடைவில், இயற்கைக்கும் மனிதனுக்கு மிடையே நடந்துகொண்டிருக்கும் யுத்தம் அங்கும் பரவியது.

என்றோ ஒருநாள், எவனோ ஒருவன் எவரெவரையோ கூட அழைத்துக்கொண்டு அங்கு வந்தான். பார்வையில் படும் வெயிலுக்கு அடைப்பாய் ஒரு கையின் விரல்களை, புருவங்களையொட்டினாற்போல் சேர்த்து வைத்துக்கொண்டு, மேட்டின்மேல் நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். கண்ணுக்கு எட்டியவரையிலும், அதற்கு அப்பாலும் மரங்கள் ஓங்கி நின்றன. கூட வந்தவர்களுக்கு அதையும் இதையும் அங்கும் இங்குமாய் இன்னொரு கையால் சுட்டிக் காண்பித்தான்.

“சரி, காட்டைக் கழித்தெறியுங்கள்! ரோட்டைப் போடலாம்” என்றான்.

ஆகவே அன்றோ, அதற்கடுத்த நாளோ, மாதமோ, வருடமோ ஆட்களும் யந்திரங்களும் அவ்விடம் வந்து சேர்ந்தன. வானளாவியவற்றையெல்லாம் காலடியில் வெட்டி வீழ்த்தின. காலடியில் இருந்தவற்றைக் களைந்தெறிந்தன.

அன்று இரவு வந்தபொழுது, கூலிகள் அங்கே தங்குவ தற்குப் போட்டிருந்த சிறுசிறு கூடாரங்களினின்றும் பொறி விளக்குகள், இருளைக் குத்துக் குத்தெனக் குத்தின.

வேலை நடந்துகொண்டிருக்கையிலேயே கூடாரங்கள் மறைந்து குடிசைகள் தோன்றின. நாளடைவில் குடிசை களுக்குப் பக்கத்திலும் ஒதுக்கத்திலும் வீடுகள் முளைத்தன.

மேட்டு நிலத்தில் ஒரு ரோடும் வளைந்து வளைந்து ஒடியது.

மனிதன் தான் கட்டிய ரோட்டைத் தானே திறந்து வைத்தான். அவர்களுள் பெரிய மனிதன் ஒருவன், தான் ரோட்டைத் திறந்து வைத்ததற்கு அறிகுறியாய், தன் வண்டியை அந்த ரோட்டின்மேல் விட்டுக்கொண்டு சென்றான்.

அந்தப் பெரிய மனிதன், மற்ற மனிதர்களைவிட இரண்டோர் அங்குலம் குட்டையாய்த்தான் இருந்தான். வலியால் துடிக்கும் அவன் வயிற்றுள் உணவு எல்லோரையும் விட ஒரு பிடி குறைவாய்த்தான் இறங்கியது.

ரோட்டைத் திறந்து வைத்த பிறகு வேளை வந்து அவன் செத்த பிறகு, முன்னுக்கு வருவதற்காக முறுக்கான வயசில் அவன் இழைத்த பல காரியங்களின் பலனாய், போகிற காலத்தில் புழுத்துப்போன உடல் வேக, மற்றப் பினங்களை விடக் கட்டையும் முட்டையும் இரண்டு அடுக்குகள் நிறைவாய்த் தான் பிடித்தன.

ஆனாலும், அதனால் பெரிய மனிதனுக்கு அடையாள மாய் மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட நியமங்கள் மாறவில்லை.

காலம் கடந்தது.

பின்னால் வந்தவர் போனவர்களுக்கும், அந்த ரோடு பிடிக்கவில்லை. அதை அழித்தார்கள்.

இச்சமயம் அந்த மேட்டு நிலத்தில் இட்ட ரெயில் தண்டவாளம் கிடுகிடுக்க ஒரு புகைவண்டி கர்ரென்று சீறிக் கொண்டு வளைந்து வளைந்து வெகு வேகமாய் ஓடியது.

ஒருநாள்:

அளவுக்கு மிஞ்சிய வேகந்தானோ, அல்லது தண்ட வாளத்தில் பாராதுபோன பழுதின் காரணமோ, அல்லது மனிதன் தனக்குள் தான் ஒற்றுமையின்றி இடும் பல சண்டை களில், ஒரு தரத்தவர் தண்டவாளத்தில் பாதியைப் பிடுங்கி எறிந்ததனாலோ, ஒடிக்கொண்டிருந்த வண்டித்தொடர் திடீரென நிலை தவறி, இரையுண்ட மலைப்பாம்பைப் போல் அப்படியே புரண்டு சாய்ந்தது.

ஏகநாசம், உயிர்ச்சேதம்!

தந்தியிலும் தபாலிலும் ஒலியிலும் செய்தி பறந்தது. அப்புறம் அந்த ரெயில் பாதை உருப்படவில்லை. அதையும் அழித்தார்கள். இருக்கிற தண்டவாளத்தையும் பிடுங்கி எறிந்தார்கள். ‘கிராவல் கற்களை நாலுபுறங்களிலும் வாரி இறைத்தார்கள்.

அழித்ததை இழைத்து, திரும்பவும் இழைத்ததை அழித்து—

அப்புறம் அந்த இடத்தில் ஆள் நடமாட்டம் குறைந்து போயிற்று.

அந்த மேட்டு நிலைத்தையே அகழ் மாதிரி வெட்டிப் போட்டுவிட்டதால், இதுவரை தாழ இருந்த நிலம் மேடாகி விட்டது. சரியான காலத்திலும் காலமல்லாத காலத்திலும் மழை பெய்து, அந்தக் குழிந்த நிலத்தில் ஒரு குட்டைகூடத் தேங்கியது. அதன் கரையில் மரங்களும் செடிகளும் தளிர்த்தன. ஆட்டையும் மாட்டையும் குட்டையில் குளிப்பாட்டினர். அவசரத்துக்குக் குளிக்கவும் குளித்தனர். குடிக்கவும் குடித்தனர். இன்னும் அசுசியான காரியங்களுக்கு அந்த ஜலத்தைப் பயன்படுத்தி, அதன் பலனையும் அநுபவித்தனர்.

பிறகு ஒரு கோடை வந்தது. அதன் கொடுமையில் அந்த வட்டாரத்திலேயே கருப்புக் கண்டது. ஒலைக் குடிசைகள் வெயிலின் வெப்பத்திலேயே பற்றி எரிந்து போயின. பயிர் பச்சைகள் பட்டுப்போயின. வைசூரியும் வாந்தி பேதியும் ஊரையும் உயிர்களையும் சூறையாடின்.

குட்டையில் ஜலம் வறண்டது. அதன் கெட்டிப்பட்டுப் போன வயிற்றில் பாளம் பாளமாய் வெடித்திருந்தது. அதில் ஒரு கல்லின் கூழை மண்டை, வளையிலிருந்து ஒனான் எட்டிப்பார்ப்பதுபோல், எட்டிப் பார்த்தது. உள்ளங்கையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் பரவும் பரிமாணத்திற்கு, வழவழவென்று ஒர் அசட்டுச் சிவப்பு நிறம்.

பிறகு மழை பெய்தது. நேரம் தப்பி நேர்ந்து கொஞ்ச நஞ்சம் தப்பிய பயிர்களில் தேங்கிக் கதிர்களை அழுக அடித்தது.

ஆனால் அந்தக் குட்டையில் மாத்திரம், இந்தத் தடவை என்னவோ ஜூலம் தேங்கவில்லை. துரோகம் பண்ணப் பட்டவனின் அடிவயிறுபோல் பூமி கொதித்துக்கொண்டு, அத்தனை ஜலத்தையும் உறிஞ்சிக்கொண்டது.

பூமி அந்த இடத்தில், வயதுப்பெண் ஒருத்தியின் அடிவயிறு போல் தாழ்ந்து இறங்கி மறுபடியும் மேட்டில் ஏறியது.

சின்னதும் பெரிதுமாய்ச் சிதறிக் கிடக்கும் பல கற்களுக் கிடையில் அந்தக் கூழாங்கல்லின் வழுக்கை மண்டை அசிங்கமான ஒரு ரத்தக்கட்டிபோல் முடிச்சுக் கட்டிக் கொண்டிருந்தது. வெள்ளையும், கறுப்பும், சாம்பல் வர்ணமுமாய் இருக்கும் அத்தனை கற்களுக்கிடையில், அதன் சொட்டையும் சிவப்பும் சட்டெனத் தெரிந்தன. கொஞ்சம் வேடிக்கையாய்க்கூட இருந்தது.

பள்ளத்தின் விளிம்போரமாய் ஒரு பையன் கூழாங் கல் ஒன்றைக் காலால் பந்தாடிக்கொண்டே விளையாடிய வண்ணம் வந்தான். அவனுக்கு என்ன தோன்றிற்றோ, காலால் எற்றிக்கொண்டு வந்த கல்லைக் கையில் எடுத்து, தான் நின்ற இடத்திலிருந்து சிவப்புக்கல்லைக் குறிபார்த்து அடித்தான்.

“கல் குறிமேல் பட்டால், இந்தத் தடவை பரீrை தேறுவேன். படாமல் போனால்-”

எறிந்த கல் குறிமேல் லொட்டென்று அடித்தது. இரண்டு நெருப்புப் பொறிகளும் பறந்தன.

பையனுக்குச் சந்தோஷம் தாங்கவே முடியவில்லை. கொம்மாளம் போட்டுக்கொண்டு ஓடினான். அவன் கொக்கரிப்பு எதிரொலிகளைக் கிளப்பிற்று.


பொழுது சாய்ந்தது.

மேல்தட்டு இல்லாத ஒரு கட்டைவண்டி வீட்டை நோக்கி ‘லொடக் லொடக்கென்று கள் குடித்தவன் மாதிரி ஆடியபடியே புழுதியை எழுப்பிக்கொண்டு மேட்டின்மேல் சென்றது.

அதில் ஒரு ஜோடி. புருஷன் வண்டியை ஒட்டினான். பெண்சாதி, அங்கு ஒருவரும் இல்லாததால், காலை நீட்டிக் கொண்டு கொஞ்சம் அடக்கக் குறைவாகவே படுத்துக் கொண்டிருந்தாள். இருவருக்குமே சற்று மதுமயக்கம்.

“ஏ புள்ளே, மேலே பாரு, நகம் மாதிரி கீறி விட்டிருக்குது மூணாம்பிறை, பாத்தியா? சொருக்குப் பையிலே கையை வெச்சுக்கிட்டுப் பாரு, அதிலே இருக்கிற துட்டெ தொட்டுக் கிட்டுப் பாரு”

“இங்கே என்னா துட்டு இருக்குதாம்? இருந்த ரெண்டனா பில்லையிலே, சந்தையிலே ஒரனாவுக்கு முலாம்பழம் வாங்கி முழுசையும் வழிச்சு வாயிலே போட்டுக்கிட்டே இன்னிக்கு ஒனக்குச் சோத்தோடெ கொட்டறதுக்கு அரையனாவுக்கு முள்ளங்கி வாங்கியாச்சு. இன்னும் அரையனாவுக்குப் புகையிலெ, அதுவும் உபயோகமத்த புகையிலெ-”

“உன்னெ கள்ளுக்கடைக்கி ஒட்டினாப்போல இருக்கிற கடையிலே வாங்கச் சொன்னா, காப்பி ஓட்டலுக்குப் பக்கத்துலேருக்கிற கடையிலே வாங்கினே. கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசைக் கரியாக்கறதுலே மணி-”

அவள் முழங்கையை ஊன்றிக்கொண்டு படுத்திருக்கும் நிலையிலிருந்து, சாய்ந்திருக்கும் நிலைக்கு நிமிர்ந்தாள்.

“யாரு கஸ்டப்பட்ட காசு? நீயா, நானா? காரமேயில்லாத புகையிலெ, து:”

“அட! இவ்வளவுதான் துப்புவியா? இன்னும் இதுக்கு மேலேயும் துப்புவியா? இதோ நான் துப்புறேன் பாரு எச்சில் எவ்வளவு தூரம் பாயுது பாரு”

இருவரும் அந்தப் பள்ளத்துள், வழியெல்லாம் மாறிமாறித் துப்பிக்கொண்டே சென்றனர். வண்டிமேட்டிலிருந்து இறங்கி அந்தண்டை மறைந்த பிறகு அந்தக் கல்லின் மேல், ஒரு கொத்து எச்சில் வழிந்திருந்தது.

இரவும், அதில் அங்கும் இங்குமாய்ச் சுடர்விடும் நக்ஷத்திரங்களும் பொத்தல் கண்ட குடைபோல் பள்ளத் தாக்கின் மேல் கவிந்தன. நிசப்தம், பிறகு அருகிலிருக்கும் சுடலையினின்று ஒரு நரியின் ஊளை மறுபடியும் மெளனம்.

பொழுது புலரும் வேளையில், மேட்டில் இருந்த மரங்களுள் ஒன்றிலிருந்து உதிர்ந்த ஒரு பூக்கிண்ணம் கிரீடம் போல் அந்தப் புதைந்த கல்லின் மண்டைமேல் கவிழ்ந்து உட்கார்ந்திருந்தது.


பருவங்கள் மாறின. காலத்தின் போக்கில் என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. அந்தப் பள்ளத்தின் பக்கவாட்டில் ஒர் ஊற்றுக் கண்டது. குளுகுளுவென்று பளிங்கு போன்ற ஜலம் மடுவின் அடிவயிற்றிலும் அதிலிருக்கும் கற்கள் மேலும் பாய்ந்தது. ஒடிய ஜலம் அந்தப் புதைந்த கல்லை நன்கு குளிப்பாட்டி, சுற்றி ஒட்டிக்கொண்டிருந்த சேற்றையும் மண்ணையும் பறித்துக்கொண்டு போயிற்று. கல்லின் மண்டை அகன்றது.

நாளடைவில், ஒடும் ஜலம் கொஞ்சம் ஒதுங்கி, அங்கு எங்கோ ஒரு புரையுள் மறைந்து, அரை மைலுக்கு அப்பால் ஒரு சிறு வாய்க்காலாய் வெளிப்பட்டது.

பலநாள் மலடி ஒருநாள் தன் வயிற்றில் வித்துத் தங்கியதை உணர்ந்ததுபோல், அந்தப் பள்ளம் திடீரென்று ஒரே புஷ்பச் செடி மயமாகப் புளகித்தது. திடீரென்று அதில் சொரிந்த அழகு, ‘இதென்னவென்று கண்ணைக் கசக்கிக் கொண்டு நோக்கும்படி இருந்ததேயொழிய கண்டவுடன் நம்பக் கூடியதாயில்லை. வசந்தம் அங்கே தங்கி விளையாடியது.


பிற்பகலில் பாதி கழிந்திருக்கும். வெயில்கூட அங்கே தெரியவில்லை. இளந்தம்பதிகள் இருவர் அங்கு வந்தனர். அவன் வெள்ளைக் குடுத்தா உடுத்திருந்தான். அவள் பட்டுப் புடவை கட்டியிருந்தாள். மண வாழ்வின் மணம் இன்னமும் இருவரிடமும் கமழ்ந்து கொண்டிருந்தது. அவளுடைய மை தீட்டிய விழிகளில் அவனை வெற்றி கொண்ட வெறி கூத்தாடியது. இருவரும் ஒருவரை ஒருவர் ரகசியமாய்ப் பார்த்துக்கொண்டு, ஒருவரில் ஒருவர் மகிழ்ந்து கொண் டிருந்தனர். நெஞ்சத் துடிப்பைப்போல் படபடத்துக் கொண்டு அருவி ஜலம் ஒடுவதைக் கொஞ்ச நாழிகை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் அந்தச் சிவப்புக் கல்லின் மேல் ஒரு காலை வைத்துக்கொண்டு சின்னச் சின்னக் கற்களாகப் பொறுக்கி ஒவ்வொன்றாய் அந்த ஜலத்தில் போட்டாள்.

அவன் கீழே உட்கார்ந்து, அவள் கல்மேல் ஊன்றிய காலைப் பெயர்க்க முயன்றான். அவள் காலை இன்னும் அழுத்திச் சிரித்தாள். அம்மி மிதித்தது அவளுக்கு ஞாபகம் வந்தது போலும்!

அதற்குள், அங்கே ஜலத்துள் துள்ளிய ஒரு மீன் குட்டியின் மேல் அவன் கவனம் பாய்ந்தது. அவன் கவனம் தன்னைவிட்டு மாறுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. புன்னகை புரிந்த வண்ணம் அவன் மடியில் அவள் சாய்ந்தாள். குளிர்ந்த காற்று அவர்கள் முகத்தை ஒத்தியது. அவனுடைய குனிந்த பார்வை கனிந்தது. உதடுகள் மெளனமாய் என்னவோ வார்த்தைகளை உச்சரித்துக்கொண்டு அசைந்தன.

“உம்? என்ன திட்டறேள்? மெதுவாய் ஒரு கை அவன் முதுகைத் தடவியது.

“இப்படியே, இப்பவே இறந்துவிட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று யோசிக்கிறேன்.”

“இப்பத்தான் சாவைப்பத்தி நினைக்கிறதா? இது மாதிரி பேசாதேங்கோ.”

“ஏன் ஒரு நல்ல கட்டத்தில் முடிவடைந்துவிடுவது நல்லதில்லையா?”

“அப்போகூட நீங்கள் ஏன் சாகனும்! நான் போனாலும் போறேன். நீங்க ரெண்டாவது ஒண்ணு கட்டிண்டு செளக்கியமா இருங்கோ. ஜாதகப்பிரகாரமே நான்தான் உங்களை முந்திப்பேனாம். எனக்கே ஆயுசு கட்டைதானாம்.”

“ஆயுசைப்பற்றி என்ன! அதுவா பெரிசு? இருக்கும் வரை அன்போடு இருக்கவேணும். அதுதான் பெரிசு’

“ஆமாம், எத்தனைபேர் கட்டிண்டதே முதல் சண்டை போட்டுண்டு, ரெண்டுபேர்லே ஒத்தர் எப்போடா சாகப் போறான்னு காத்துண்டில்லை!”

அவன் புன்னகை புரிந்தான். “வாஸ்தவம். உனக்குத் தெரியாத விஷயமே இல்லை அல்லவா?”

அவளுக்குப் பெருமிதம் விம்மியது. இன்னும் செளகரியமாய் அவன் மடியில் புரண்டு படுத்துக்கொண்டாள். “எனக்கு எல்லாம் தெரியும் பின்னே என்ன, என்னை அசட்டுக் காமாகூவின்னு நெனச்சுண்டேளா!”

திடீரென்று:

“ஆனால் நாம்ப அப்படி இல்லையே!”

“எப்படி?”

“அறுபது நாழியும் சண்டை போட்டுண்டு!”

“சரியாப் போச்சு. ஓம் என்று ஒரு மந்திரம் சொல்லி யாகல்லை-?”

“நாம் எல்லாம் அப்படி இருக்கமாட்டோம். நான் உங்களைப் பார்த்தப்புறம் உங்களையேதான் வரிப்பேன்னு அம்மாவோடு சண்டித்தனம் பண்ணிச் சாதிச்சுண்டிருக்கே னாக்கும்! உங்களுக்கும் என்மேல் அப்படித்தானே?”

“இப்போ என்ன அதைப்பத்தி?”

மடியில் படுத்துக்கொண்டே அவள் தலையை பலமாக ஆட்டினாள். அதுவும் ஒரு கவர்ச்சியாய்த்தான் இருந்தது. “ஒண்ணுமில்லே, நான் சொல்றேன். நான் செத்துப் போனால், நீங்க ரெண்டாந் தடவை கல்யாணம் பண்ணிக்க மாட்டேளே? நான் தெய்வமாயிருந்து பார்த்துண்டு இருப்பேன்.”

“ஏன், பிசாசாக இருக்கக் கூடாதோ?”

அவன் கிண்டலைக் கவனியாமலே அவள் பேசிக் கொண்டே போனாள்.

“நான் செத்துப் போன இடத்திலே ஒரு கோரி கட்டுவேளா?”

“மும்தாஜ் மஹாலாக்கும்!”

அவள் குரலில் ஏமாற்றம் தொனித்தது. “ஆமாம். நம்ம ஜாதி பொசுக்கற ஜாதி; புதைக்கிற ஜாதியில்லை. போனால் போறது. நான் போனப்புறம் என்னிக்காவது நெனைச்சுக்கக்கூட மாட்டேளா?”

“சரி சரி, கொஞ்சம் சமத்தாயிரு”

“சொல்லுங்கோன்னா-?”

“நீ செத்துப்போன பிறகு நான் இரண்டாந்தாரம் கட்டிக் கொண்டு எப்படி நடப்பேன் என்பதைப்பற்றி இப்பொழுது தர்க்கம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டாம். நீ உயிரோ டிருக்கையில் நாம் இருவரும் பிரியாமல் இருப்பதைப்பற்றி யோசனை பண்ணுவோம். இன்னும் ஒரு வாரத்தில் வந்து உன் அம்மா உன்னைக் கூட்டிக்கொண்டு போவதாய்ச் சொல்லியிருக்காளே, அப்பொழுது போகாமல் இரேன்.”

அவள் யோசனையாய் நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள்.

“இப்பொழுதுதானே ஒரு மாதத்துக்கு முன்னால் போய் விட்டு வந்தாய்? அடிக்கடி இப்படிப் பிரிந்துகொண்டிருந்தால் நாம் எப்பொழுது ஒட்டுவது? உனக்கும் உன் தாய்மேல் ஆசை இருக்கும்; அவளுக்கும் பெண்மேல் இருக்கும் இல்லையென்று சொல்லவில்லை. இருந்தும் உன் புதுவாழ்வுக்கு நீ பழக வேண்டாமா? இன்னமும் இந்தப் பிறந்த வீட்டுச் சபலத்தை அடக்கிக்கொள்ளச் சக்தியில்லாவிட்டால் கல்யாணம் பண்ணிக் கொள்ளுவானேன்?

அவள் எழுந்து உட்கார்ந்துவிட்டாள். முகம் ஒரு தினுசான மருட்சியில் வெளுத்துவிட்டது. அவன் வார்த்தைகள் அவள் மூளையில் என்ன வேலை செய்தனவோ தெரியவில்லை; அடிக்கடி கை நகத்தால் அழுந்த வாரியிருக்கும் மயிரைக் கீறிக்கொண்டாள். அவள் முகத்தில் புகுந்துவிட்ட ஒரு சிறு கடடு அதற்கு ஒரு குறுகுறுப்பையும் தனியழகையும் கொடுத்தது.

அவள் அவன்மேல் வைத்திருந்ததைவிட, அவன் அவள் மேல் வைத்திருக்கும் ஆசையின் மிகுதி அவன் தன்னையும் மறந்து அவளைக் கெஞ்சும் குரலிலேயே வெளிப்பட்டது.

“அன்றொரு நாள் சொன்னையே, ஞாபகம் இருக்கிறதா?”

“என்ன?” என்னும் வினாவில் அவள் புருவங்கள்பென்ஸிலால் கீறியதுபோல், சுத்தமாய் வளைந்த புருவங்கள் உயர்ந்தன.

“சீதைக்கு ராமர் இருக்கும் இடந்தான் அயோத்தி-”

அவள் முகத்தில் அசட்டுப் புன்னகை தோன்றிற்று.

“சொல்லுக்கு அலங்காரமாய்ச் சொல்லிவிட்டால் ஆகி விட்டதா? கொஞ்சமாவது காரியத்தில் நடத்திக் காண்பிக்க வேண்டாமா? அதற்கு உனக்கு வயசாகவில்லையா? நாம் இருவரும் சந்தோஷமாயிருக்கிறதே இன்னமும் நாலைந்து வருஷங்கள், பிறகு எனக்கும் வயசாகிவிடும். உனக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்துவிடும். பிடுங்கல்களும் அதிகரித்துவிடும். பொறுக்காமல் நானே ஒருநாள், பிறந்த வீடு போய்த் தொலை’ என்பேன்!”

அவனுடைய தமாஷ் அவளுக்கு ஏறவில்லை.

“என்ன சொல்லுகிறாய்?”

அவள் ஒன்றும் பதில் பேசவில்லை. பக்கத்துப் புதரில் ஆடிக்கொண்டிருந்த ஒரு பூவைப் பறித்து அதை இதழ் இதழாய்ப் பிய்க்க ஆரம்பித்தாள். அவளுடைய அழுத்தமான மெளனம் அவன் பொறுமையை வெகுவாய்ச் சோதித்தது. தவிர, அவள் பதில் சொல்லத் தேவையேயில்லை. அவன் ஆசையையே கசக்குவது போன்று அந்தப் பூவை இதழ் இதழாய்ப் பிய்த்துக்கொண்டிருக்கும் அந்த இரக்கமற்ற காரியமே போதுமான பதில். சகிக்க முடியாத வேதனையில் அவன், “நீ வேனுமானால் பிறந்தகம் போ அந்தப் பூவை மாத்திரம் பிய்க்காதே’ என்று கத்தினான்.

திடுக்கிட்டு அவள் நிமிர்ந்தாள். சரசரவென்று கண்கள் நீரால் நிறைந்தன.

“இல்லே, நான் போகல்லே-”

“இல்லை, போய்க்கொள்-”

இனி அவள் போனாலும் போகாவிட்டாலும், அவன் அவளைப் பிரியத்தால் கட்டி இணைக்க முயலும் முயற்சியில் தோல்விதான். தன் உரிமையைச் செலுத்தி அவள் கீழ்ப் படிதலை வற்புறுத்த அவன் விரும்பவில்லை. மனமார்ந்த சம்மதத்துடன் கூடிய ஒத்துழைப்பையே அவன் விரும்பினான். அந்த மட்டுக்கும் அவன் பிரியத்திற்குத் தோல்விதான்.

“நேரமாய்விட்டது எழுந்திரு போகலாம்” என்றான் சற்று நேரம் கழித்து.

“இதுவரையில் எவ்வளவு சந்தோஷமாயிருந்தோம்! அந்தச் சந்தோஷத்தை நீங்கதான் கெடுத்தேள் என்றாள், சின்னக் குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கிக்கொண்டு.

“சரி வா, போகலாம்” என்றான். எதை வேணுமானாலும் அவன் ஒப்புக்கொள்ளத் தயாராயிருந்தான். இப்பொழுது அவன் மனத்தில் அவ்வளவு அசதி.

அவன் மார்பின்மேல் சாய்ந்துகொண்டு அவள் விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள். அவளைச் சமாதானப்படுத்தும் முறையில் அவள் முதுகை மெதுவாய்த் தட்டினான். லாயக்கற்ற பாத்திரத்தின்மேல் பாசம்வைத்துவிட்டால் தனக்கும் சுக மில்லை. அதற்கும் சுகமில்லை; சுற்றும் இருப்பவர்க்கும் சுகமில்லை. இப்படி ஒன்றுக்கொன்று ஒவ்வாத இரு சுபாவங் களுக்கு முடிச்சு ஏற்பட்டுவிடுகிறதே, அதுதான் கடவுள் சங்கல்பம்.

“வா, வா, போகலாம். நம்மைத் தேடப்போறா!”


ஒருநாள். தாடியும் மீசையும், காகிதமும் பென்ஸிலுமாய் ஒருவன் அங்கே வந்தான். பென்ஸில் நுனியை அந்தச் சிவப்புக் கல்லில் தீட்டிவிட்டுக் கொஞ்சம் எட்டப்போய், செளகரியமாய் உட்கார்ந்துகொண்டு எழுத ஆரம்பித்தான்.

“வாழ்க்கை ஓயாமல், தன்னைத்தானே திரும்பத் திரும்பத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. நடந்ததேதான் நடந்து கொண்டிருக்கிறது.

“இருந்தும் வாழ்க்கை இன்னதுதான் என்று ஒரு முடிவு கட்ட இயலவில்லை. ஒரு நிச்சயத்துக்கு வருவதற்குள் அதற்கு நேர் முரணாக இன்னமும் அதுவரையில் புலன்படாத பல அம்சங்கள் தலைகாட்டுகின்றன. வாழ்க்கை பிடிபட மறுக்கின்றது.

“ஒவ்வொரு சமயம், வருஷங்கள் விரைவது தெரிய வில்லை. இன்று தள்ளாமையாயிருந்தாலும் ரத்தத் திமிரில் துள்ளி விளையாடியதும் தூக்கியெறிந்து பேசியதும் நேற்று மாதிரி இருக்கின்றன.

“ஒவ்வொரு சமயம் ஒருநாள் நகர்ந்துபோவது நரக வேதனையாக இருக்கிறது.

“வாழ்க்கையின் பெரிய அதிசயம் யாதெனில், சகல ஜீவராசிகளும் அதன் அதன் பிறப்புக்கும் பிழைப்புக்கும் முடிவிற்கும் ஆதாரமாய் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதே அதன் அதன் வாழ்க்கையையும் தனித்தனியாய்ச் சோதித்தால் தம்முள் தாமே நிறைந்திருப்பினும், எல்லாமே உலகத்தின் வாழ்க்கையின் ஒரே கோவையில் அடங்கியவைதாம். சம்பவங்கள் தனித்தனியாயும், ஒன்றுக்கொன்று சம்பந்த மற்றவையாயும் அறுந்து தொங்கினாலும் எல்லாவற்றிலும் ஒரு காவியத் தொடர்பு ஊடே மறைந்திருக்கிறது.

‘ஆயினும் அவன் அவனுக்கு அவன் அவன் பெருமையும் துக்கமுந்தான் பெரியவை. எல்லாம் நான் போனாலன்றோ தெரியப்போகிறது:- ஒவ்வொருவனுக்கும் இதே எண்ணந் தான். உலகம் தன் இஷ்டப்படியோ, அல்லது தான் எதிர் பார்த்தபடியோ நடவாததால் அதை விட்டுப் போவதற்கும், அதே சமயத்தில், தான் போன பிறகு உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக, அதில் இருப்பதற்கும் ஆசை.

“அவனவன் எதைக் கஷ்டமென்று பார்க்கிறானோ அதனின்று விடுதலை வேண்டாதவனே இல்லை. இந்தக் கடவுள்தன்மையை மனிதன் வேண்டுவது நியாயமே. ஆனாலும் அவனுக்குக் கடவுளுடன் கலக்க விருப்பமில்லை. போட்டிக் கடவுளாய் ஆகத்தான் விரும்புகிறான். வெறும் மாமிசபர்வதமாக வளர்ந்த ஒரு திமிரினாலேயே நல்லவர் களுக்கு நல்லவனாகவும் பொல்லாதவர்களுக்குப் பொல்லாத வனாகவும் தான் இருப்பதாகப் பாவித்துக்கொண்டே நல்லவர் களையும் பொல்லாதவர்களையும் கண்டுவிட்ட மேதாவியாய்த் தன்னைத்தானே நினைத்துக்கொண்டு, கடவுளே செய்யத் திணறும் காரியத்தைத் தான் செய்ய முன்வந்து, அவன் காரியமே அவன் கழுத்தை அறுப்பது அவனுக்குத் தெரிவதில்லை.

“உலகத்தில் காக்கப்படுவனவற்றைவிட, கடவுள்கள் அதிகமாகிவிட்டன. சூளைக்கற்கள் எல்லாம் தெய்வமாய் விட்டன: தெய்வம் கல்லாகிவிட்டது.

“மனிதனுக்கு மனிதன் இப்படித்தான் முழுவதன் ஒருபாகம் என்று தெரிந்தும், எல்லாமே தன்னால்தான், தானேதான் எல்லாம் என்று.”

இந்தச் சமயத்தில் ஒரு காற்று அடித்து அவன் கைக் காகிதத்தைப் பிடுங்கி அடித்துக்கொண்டு போயிற்று. அவன் எட்டிப்பிடிக்க முயன்றான்.

ஆயினும் அவன் கைக்குத் தப்பி அது சிவப்புக்கல்லின் மேல், ஆணியால் அறைந்தாற்போல் ஒட்டிக்கொண்டு படபடவென்று இறக்கை மாதிரி அடித்துக்கொண்டது.

அதற்குள் அவனுக்கும் சோம்பல் வந்துவிட்டது. “நானும் என்ன, சொன்னதையேதானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்!” என்று முணுமுணுத்துக்கொண்டு அதிருப்தியுடன் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

இலைகள் பலபலவென உதிர்ந்தன. ஒன்றாயும், இரண்டாயும், கொத்துக் கொத்தாயும், திரையிட்டாற் போலேயும் உதிர்ந்தன. இலைகளும் சருகுகளும் நிலத்தையும் நிலத்தில் கிடந்தவற்றையும் ஜமக்காளம் போல் மூடின.

அந்தக் கிழவி அங்கு வந்து எவ்வளவு நேரமாய் உட்கார்ந் திருந்தாள் என்றே தெரியவில்லை. மூப்பேறிய உடலில் புடைவை உடுத்திய மாதிரியே இல்லை. உடலுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாமல் தொங்கின மாதிரியே இருந்தது. முழங்காலைக் கட்டிக்கொண்டு, குந்திட்ட மாதிரி எங்கேயோ முறைத்துப் பார்த்தபடியே அசைவற்று உட்கார்ந்திருந்தாள். தள்ளாமையால் தலை மாத்திரம் கழுத்தின்மேல் நிலையற்று லொடலொடவென்று ஆடிற்று.

இரவு இறங்கும் வேளைக்குக் கவலை தேங்கிய முகத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு அங்கு ஒருவன் வந்தான். அவளைக் கண்டதும் காணாததைக் கண்டது போல் அவளிடம் ஓடினான்.

“எங்கெங்கெல்லாம் உன்னைத் தேடுவதம்மா? வா.”

“நான் வரல்லை.”

“என்னம்மா, நீ இப்படிப் பண்ணினால்?”

“எனக்கு இனிமேல் உன்கிட்டே ஜோலி இல்லை.”

“அம்மா!”

“சீ! என்னை இனிமேல் அம்மா அம்மான்னு கூப்பிடாதே!”

“ஐயையோ!”

“இந்த வேஷம் எதுக்குடா? பெத்த வயிறு கொதிக்கப் பார்த்தவனெல்லாம் இதுவரை உருப்பட்டதில்லே. ஊருக் கெல்லாம் மேருவாயிருந்தாலும் எனக்கு நீ பிள்ளைதானேடா? நான் இல்லாட்டா நீ இல்லை, இந்தக் காலத்திலேயே எல்லாம் கைமேலே பலன், ஞாபகம் வெச்சுக்கோ! நீ எனக்குச் சரியா யிருந்தால்தான் உன் பிள்ளை உனக்குச் சரியாயிருப்பான். ஆனால் எனக்கு இந்தக் கதி வரவேண்டாம்!”

“அம்மா!”

“டேய், எல்லாரும் பிள்ளை பெத்தாலும் நான உன்னைப் பெத்ததற்கு ஈடாகாது. எத்தனை தவங்கிடந்திருப்பேன்! எத்தனை அரசமரம், கோயில் குளம் சுத்தியிருப்பேன்! எத்தனை கோபுரவாசற்படியை நெய்யால் மெழுகியிருப்பேன்! இடது கையால் சாப்பிட்டிருப்பேன்! உனக்காப் பிள்ளைப் பூச்சிகூட முழுங்கி இருக்கேண்டா. என் ரத்தத்தின் ரத்தம் நீ சதையின் சதை நீ. நீ எனக்கு ஒரே பிள்ளையாய் வாய்ச்சு, எனக்கு நீ துரோகம் பண்ணலாமா? அதுவும் இத்தனை நாள் நல்ல பிள்ளையாய் இருந்துட்டு இப்போ கல்லைத் தூக்கிப் போடலாமா? நல்ல பிள்ளைக்கு அடையாளம் கல்லைத் தூக்கிப் போடுவது, கல்லைத் தூக்கிப் போடுவது வலிப்பு வந்தவள்போல் அவள் பாட ஆரம்பித்துவிட்டாள். ஆத்திரத்தின் வேகத்தில் இருந்த ஒன்றிரண்டு பற்களினின்று ரத்தம் கொட்டியது.

“ஆரம்பத்திலேயே நீ இப்ப இருக்கிற மாதிரி இருந் திருந்தேன்னா, சீ, தத்தாரி, நமக்குக் கொடுத்து வைச்சது இவ்வளவுதான் என்று துப்பியெறிந்திருப்பேன். மற்றத் தாய்மார்போல் இல்லை நான்! உன் பிள்ளையா இப்படிப் பண்ணினான், உன் பிள்ளையா? என்று என்னை எல்லாரும் துக்கம் விசாரிக்கறப்போ எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?”

திடீரென்று கிழவி அழ ஆரம்பித்துவிட்டாள்.

“இத்தனை நாள் நான் என் புருஷனைப்பத்தி நினைக்கல்லே. உன்னைப் பார்த்து எல்லாத்தையும் மறந் திருந்தேன். ஆனால் இப்போ அவனை நினைக்கிறேன்; சபிக்கிறேன், இப்படி என்னை விட்டுட்டுப் போயிட்டா னேன்னு: உழைக்கிறதெல்லாம் உழைச்சுப்பிட்டு, உன் சமாசாரத்தை எப்படியோ தெரிஞ்சுண்டு, உன் கையை எதிர்பாராமல், முன்னாலேயே செலவு பெத்துண்டுட்டாரே, உங்கப்பா கெட்டிக்காரரா, நான் கெட்டிக்காரியா? நீயே சொல்லு”

அவள் பிள்ளை கண்களில் கண்ணிர் தளும்பியது. சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவிக்கிறான்.

“அம்மா, இப்படியெல்லாம் சொல்லாதேம்மா- கிழவி கண்ணைத் துடைத்துக்கொள்கிறாள்.

“வாஸ்தவந்தாண்டாப்பா. நான் ஏன் சொல்லனும்? இப்போ ஒரு காரணமும் இல்லாமலே நான் அநுபவிக்கறது போறாதுன்னு என் வாயால் உன்னை ஏன் சபிக்கணும்? கலி இப்பவே முத்திப் போச்சு கலி முத்தித்துன்னா பகவான் அவதாரம் பண்ணுவார். அப்போ அவர் பார்த்துக்கறார். இப்பவே அவதாரம் பண்ணிண்டிருக்காரோ என்னவோ! உன்னைப் பார்த்தாலும் என் வயிறு ஒட்டிக்கிறது. இப்படி என் வாயாலே நீ கேக்கனுமான்னு, எரிச்சல் தாங்காத சமயத்தில் கத்தறேன், ஒயறேன். கத்தறேன், ஒயறேன். இப்படித் தான் நான் சாகற வரைக்கும் இருக்கப் போறதோ, என்னவோவா, வா உனக்காச்சு, எனக்காச்சு…”


திடீரென்று எப்படி முன் அறிகுறியில்லாமல் அந்த ஊற்றுக் கிளம்பியதோ அதே மாதிரி வறண்டு போயிற்று? மறுபடியும் பற்களிலும் மணலிலும் கொதிப்பு ஏறத் தலைப் பட்டது. கானலில் மடு திரைப்படம் போல் நடுங்கிற்று.

ஒருநாள் காலை, ஒரு பிணம் மேட்டில் ஒரு மரக்கிளையி லிருந்து தொங்கிற்று. அக்கிளையின் நிலையும், அதனின்று தொங்கிக் கழுத்தை முறித்த கயிற்றின் உரமும், காலடியில் உருண்டிருந்த சிறு முக்காலியும் இறந்தவனின் முன்னேற் பாட்டை விளக்கின.

இரவின் மிருகங்கள், வாய்க்கு எட்டிய வரையில் கால் விரல்களைக் கடித்துப் பாதங்களைக் கூழையடித்திருந்தன. சுவரில் விளம்பரம் ஒட்டியது போன்று, பிரித்த கடிதம் ஒன்று அவன் மார்புப்புறத்தில், சட்டையோடு குண்டுசியால் குத்தி விட்டிருந்தது. அதில் அவன் தற்கொலைக்கு காரணத்தை விளக்கியிருந்தான்:

“என் பிணத்தைப் பார்ப்பவர் முக்கியமாய் இந்தக் கடிதத்தைப் பார்க்க வேண்டும்.”

“எனக்கு உலகத்தில் வேண்டாத பேர், வேண்டிய பேர் உண்டு. ஆனால் அவர்கள்மேல் சந்தேகம் வேண்டாம். இது என் காரியமே.”

“ஒன்பது வருஷங்களாக எனக்கு வயிற்றுவலி. நான் பண்ணிக்கொள்ளாத வைத்தியம் இல்லை. ஆயினும் குணம் இல்லை. ஒவ்வொரு சமயமும் தொப்புளைச் சுற்றி வலி. திருகுகையில் நான் ஒன்பது சாவுகள் சாகிறேன். அதுவும் ஒரு நாளா, இரண்டு நாளா? ஒன்பது வருஷங்கள்:”

“என் போன்ற கேஸ்கள் சாவைத் தேடினால் அது விடுதலையை வேண்டியே ஒழிய, பயங் கொள்ளித்தனத்தால் அல்ல. ஆகையால் நான் இறந்த பிறகு என் ஆவியைத் தேவதூதர்கள் கொண்டு போய் ரகடிகளின் சந்நிதானத்தில் நிறுத்தும் சமயத்தில் கன்னிமாதாவும், தேவகுமாரனும் எனக்காக லோக பிதாவிடம் மன்றாட வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். ஆமேன்.”

அப்புறம் அதிக நாள் அந்தப் பக்கம் அண்டுவார்கூட இல்லை. எட்ட இருந்து பார்க்கையில் அந்த இடமே, அதன் புதுத் தனிமையாலோ, அல்லது பயங்கரத்தால் சிலிர்த்துக் கொண்டதாலோ, முன்னிலும் பெரியதாய்த் தோன்றிற்று. செவி நுட்பத்தில் கற்பனை படைத்த சிலர் உச்சிவேளையிலும் இரவிலும், அப்பா, அம்மா, வலி பொறுக்க முடிய வில்லையே! என்றெல்லாம் குரல்கள். அந்த மடுவிலிருந்து வெளிவருவதாகச் சத்தியம் செய்தனர்.

ஆயினும் காலம் மாற்றாத காரியம் ஏது? நாளடைவில் மடுவிலிருந்து வருவதாகக் கூறப்படும் ஓசைகள், தாமே கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கிக் கடைசியில் அற்றுப் போயின. மறுபடியும் ஆள் நடமாட்டம் அங்கே தொடங்கிய பொழுது அந்தப் பள்ளத்தில், முழங்கால் உயரத்துக்கு இலைகளும் சருகுகளும், காற்று அடித்துச் சேர்ந்திருந்த குப்பையும் நிறைந்திருந்தன. அந்தச் சிவப்புக்கல் கூடத் தலை தெரியாமல், அந்தக் குப்பையுள் முழுகிப் போயிற்று.


“என்னடி இவ்வளவு அவசரமாய் என்னை இங்கே கூட்டிண்டு வந்தே? காரியமெல்லாம் அப்படி அப்படியே கிடக்கு. இன்னும் கொஞ்ச நேரமாச்சுன்னா, ஆபீசிலிருந்து அவர் வந்துடுவார். நீ கூப்பிட்ட அவசரத்தைப் பார்த்துட்டுக் கையை அப்படியே முன்றானையிலேயே துடைச்சுண்டு வந்துட்டேன். என்ன விசேஷம்? என்னடி, மூஞ்சியெல்லாம் வெளுத்திருக்கு? ஏண்டி அழறே? என்ன, என்ன?”

மற்றவள் விக்கினாள். “எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல்லே. நான் ரெண்டு மாசமா ஸ்நானம் பண்ணல்லே.”

“என்ன!”- நெருப்பைத் தொட்டுவிட்டவள்போல் இருந்தது அவள் குரல்.

“என்னைக் கோவிச்சுக்காதே. நான் சொல்றத்தை முழுக்க வாங்கிக்கோ, ஐயோ! நான் என்னடி பண்ணுவேன்! இந்தச் சமயத்தில் நீதான் என் அடைக்கலம். மாபாரமாய் வந்திருக் கறதுக்கு நீதான் ஒரு வழி சொல்லணும். இன்னிக்கு நேத்திக்கு இல்லை நம்ம சிநேகிதம். ஐயோ! மூஞ்சியைத் திருப்பிக் காதேயேன்.”

“அட அசடே, நான் ஒண்ணும் மூஞ்சியைத் திருப்பிக் கல்லே. என்னதான் இருந்தாலும் எனக்குத் தூக்கிவாரிப் போடாதோ? எனக்குக் கைகால் பறக்கறது. மார் படபடக்கறது. சரி, சொல்லு. இது என்ன? எப்படி? யாரு? உன் குடும்பம் ரொம்ப ஒசத்தியாச்சே அம்மா? எப்படி இது நேர்ந்தது உனக்கு? “

“எங்கே ஆரம்பிக்கறதுன்னு தெரியல்லே. ரெண்டு மாசத் துக்கு முன்னாலே பள்ளிக்கூடத்திலேருந்து திரும்பி வந்துண்டு இருந்தேன். கொஞ்சம் முன்னேரத்திலே பள்ளிக்கூடம் விட்டுட்டா. நான் இந்த வழியாகத்தான் போற வழக்கம். ரெயில்வே ஸ்டேஷனுக்கும் ஆத்துக்கும் இது கொஞ்சம் குறுக்கு வழி.

“அன்னிக்குக் கொஞ்சம் வெயில் ஜாஸ்தி. இங்கே வந்ததும் இதோ இதே மரத்தடியில்தான் நிழலுக்கு ஒதுங்கினேன். காற்று சுகமா அடிச்சுது.

“ஒவ்வொருத்தர் கிட்டேயும், வயசு எத்தனையானாலும் ஒரு குழந்தை சேஷ்டை எப்பவுமே ஒளிஞ்சுண்டிருக்கும்னு நினைக்கிறேன். இங்கே இத்தனை சருகுகள் உதிர்ந்திருக்கே, இதைப் பார்த்ததும் என்ன தோணித்தோ தெரியல்லே, அதிலே போய்ப் படுத்துப் புரண்டேன். அதுக்குத் தகுந்தாப்போல என் பளுவடியிலே, அதுவும் மெத்தை மாதிரிதான் மெதுவாய் அமுங்கிற்று.

“ஒரு காஞ்ச இலையைக் கையில் எடுத்துப் பார்த்தேன். நரம்புகள் கொடி கொடியாய் ஒடியிருந்தது, கைரேகை மாதிரி. உடனே என் கையைப் பார்த்துண்டேன். புருஷர்களுக்கு வலக்கை, பொம்மனாட்டிகளுக்கு இடக்கையைப் பார்த்துச் சொல்றதாமே?

“இந்தக் கைரேகையைப் பார்த்து, நடந்தது நடக்கப் போகிறது எல்லாம் சொல்லலாமாமே? உடனே என் வாழ்க்கையில் நடந்ததையெல்லாம் நெனைச்சுண்டேன். இந்த மனசு போற போக்குத்தான் என்ன!

“நான் இதுவரை என் ஆம்படையானைப்பத்தி அதிகமா நெனச்சதில்லே. அவர் போறப்போ எனக்கென்ன பிரமாத வயசா? அக்ரமம்! அக்ரமம்! ஆனால் வயசாக ஆகத்தானே ஒவ்வொண்ணாத் தோணறது. போனதுதான் போனாரே, ஒரு குழந்தையையாவது அடையாளமா வெச்சிட்டுப் போனாரா? அதுக்குப் பாலூட்டுகையில், அதன்மூலம் அதன் பசியை ஆத்தி, அத்தோடு எனக்கு இருக்கும் எத்தனையோ பசிகளும் ஆறியிருக்கும்.

“இப்போகூடத்தான் கேக்கறேன். என்னைப்போல இருக்கிறவா கதிதான் என்னிக்குமே விடியாக் கதி. இந்த லோகத்தில் இப்பவும் வாழாவெட்டிகள் எத்தனைபேர், உயிரோடிருக்கிற ஆம்படையானை விட்டுப் பிரிஞ்சிருக்கா? பிரிஞ்சிருக்க முடியறது, கலியாணத்துலே நாலுபேருக்கு நடுவிலே பண்ணிக்கொடுத்த சத்தியத்தையெல்லாம் மறந்துட்டு? அத்தோடு கொண்டவனையும் தூத்திண்டு ஊரிலேயும் எப்படி வளைய வர முடியறது?

“என் மாதிரிப் பேர் மனசைத் திருப்ப, எவ்வளவுதான் படிச்சாலும், பாஸ் பண்ணினாலும், என்னதான் அறிவை வளர்த்தாலும், இந்த உடலும்கூட வளர்றதேடி இந்த உடல் என்கிறது அவ்வளவு லேசாயிருக்கா? அதுவே நம் கட்டுப் பாட்டுக்கு வந்தபாடில்லே. அதுக்குள்ளே எங்கேயிருக்குன்னு கூடத் தெரியாத இந்த மனசைப்பத்தி நாம் என்ன அறியப் போறோம்!

“திடீர்னு என்னவோ தெரியல்லே, எனக்கு ஒரே அழுகையா வந்துடுத்து. அதுக்குக் காரணங்கூடத் தெரியல்லே. முகத்தைக் கையில் புதைச்சுண்டு விக்கி விக்கி அழுதேன். என்னை திடீர்னு ரெண்டு கை வாரி அணைச்சுது. யார் இன்னு கண்டதும் பஞ்சிலே நெருப்பு வெச்ச மாதிரிதான் ஆயிடுத்து.

“ஐயோ என்னைத் தொடாதேங்கோன்னு ஒரு கத்தல் கூடத் தொண்டையிலேருந்து எழும்பல்லெ. என் துக்கமும் ஒரே வெறியாயிடுத்து. அவ்வளவுதான், தப்பு யார்மேலேன்னு சொல்லுவேன்! யார்மேலேன்னு சொல்வேன்!”

“யார் அந்தப் பாவி, ஆள் ஏமாந்த சமயம் பார்த்துப் பயன் பண்ணிண்ட பாவி- ஏன் பயப்படறே? அந்த ஆசாமி யார்? உனக்குத் தெரிஞ்சவனாய்த்தான் இருக்கணும். உன் மனசுக்கு ஒப்பியவனாயுந்தான் இருக்கணும். இல்லாட்டா, அவன் உன்னைத் தொட்டவுடனே அப்படி அறிவிழந்திருக்க மாட்டே எனக்கு இதிலெல்லாம் கொஞ்சம் அதுபோகம் உண்டு. எனக்கு நாலு பெத்திருக்கு, செத்திருக்கு பார்; யாரு, சொல்!”

ஆனால் அவள் சிநேகிதி பதில் பேசவில்லை. திக்பிரமை பிடித்தவள்போல் இருந்தாள்.

“சொல்லேண்டி இது விளையாடற சமயமில்லே. வெறுமனே என் தாலிச் சரட்டைத் தொட்டு நெருக்கிண் டிருந்தால் என்ன அர்த்தம்?”

ஆயினும் பதில் வரவேயில்லை. பீரிடும் அழுகையை அடக்கிக் கொண்டு அந்தப் பெண் மற்றவளின் மாங்கல்யத் தைப் பிடித்து, அவள் கண்ணெதிரில் ஆட்டிவிட்டு அவள் மடியில் அப்படியே சாய்ந்தாள்.

“ஆ என்ன!”

அவள் செய்கையின் அர்த்தம், அவள் மனத்தில் விடியும் பயங்கரம். ஏதோ இதுவரை கவனித்துக்கொண்டிருந்த புகைப் படத்திலிருந்து திடீரென்று ஒரு பூதம் திரண்டு உருவாகித் தன்னை விழுங்க வருவது போன்றிருந்தது.

மேட்டுக்கு அந்தண்டை இருவர் பேசிக்கொண்டு போகின்றனர். அவர்கள் பேச்சுவாக்கில் சில வார்த்தைகள் காற்றில் மிதந்து வருகின்றன:

“நல்லது பொல்லாது ரெண்டுக்கும் சாகூவியாய், அந்தக் கடவுள் ஒருத்தன் இருந்துக்கிட்டுத்தானே வாரான்?”


வானத்தில் ஒவ்வொரு சமயம், நீலத்தில் பொன் விளைந்தது; ஒரு சமயம் கறுப்பில் வெள்ளி விளிம்பு கட்டியது. மாலைகளில் சிவப்பில் செம்பு அடித்திருந்தது.

ஒரு நாள் மாலை அங்கு ஒர் அப்பா அம்மா’ ‘பாப்பா’ மூவர் உலாவ வந்தனர். அப்பா ஒரு மரத்தடியில் உட்கார்ந்து, கையோடு கொண்டு வந்திருந்த ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். அவருக்கு இந்த லோக சிந்தனையே இல்லை; புத்தகத்தில் அவ்வளவு சுவாரஸ்யம்.

அத்தனைக்கு அத்தனை ‘அம்மாவுக்குக் குடும்பத்தைப் பற்றித்தான் சிந்தனை. கைக்கு எட்டிய வரைக்கும் அங்கு ஒரு மரத்தின் இலைகளைப் பறித்து மடியில் கட்டிக்கொண் டிருந்தாள். ஏதோ இரண்டு வேளை சாப்பாட்டுக்காவது தைத்துப் போடலாம் அல்லவா?

பாப்பா கொஞ்சம் துடி குடுகுடுவென்று பள்ளத்தில் ஒடி, அந்தச் சருகு மெத்தையில் தொப்புத் தொப்பென்று குதித்து விளையாடிக்கொண்டிருந்தது.

“அம்மா அம்மா! இதைப் பாரேன், இங்கே ஒண்ணு!”

“சும்மா இருடா-”

“இங்கே வாயேன், வான்னா வா-‘

அம்மா சலித்துக்கொண்டே போனாள்.

“அட இதென்ன! இங்கே வந்து பாருங்கோன்னா!”

அவள் குரலின் ஆச்சரியம், அப்பாவைத் தட்டி எழுப்பியது. அப்பா சாவகாசமாய்ப் போனார். அந்தச் சருகுக் கூளங்களிலிருந்து ஒரு சிவப்புக் கல்லின் வழுக்கை மண்டை எட்டிப் பார்த்தது. அவருக்கும் விந்தையாய் இருந்தது. அதைச் சுற்றியிருந்த சருகுகளையும் குப்பையையும் கையால் பறித்துத் தள்ளினார். அப்பாவுக்கு ஒத்தாசையாய், குழந்தை காலால் முன்னும் பின்னுமாய்க் குப்பையை உதைத்துத் தள்ள ஆரம்பித்தான்.

“சும்மாயிருடா பயலே, விஷமம் பண்ணாமே!”

பையனா சும்மா இருப்பான்? திடீரென்று வீல்’ என்று கத்திக்கொண்டு காலைக் கையால் பிடித்துக்கொண்டு துடித்துக் கீழே விழுந்தான். “ஐயோ ராஜா” என்று அம்மா அலறிப் புடைத்துக்கொண்டு குழந்தையை அப்படியே இரு கைகளிலும் வாரினாள். ஆனால் அதற்குள் குழந்தைக்கு மயக்கம் போட்டு விட்டது?

இலைகளில் சலசலவென ஒரு சப்தம்.

அப்பா திக்பிரமை பிடித்து நின்றார். உதறும் கரங்கள் அவரையும் அறியாமல் கூப்பின.

அவர் குப்பையைப் பறித்து வழி பண்ணின இடத்தில் ஒரு முழ உயரத்திற்கு ஒரு சுயம்புலிங்கம் எழும்பியிருந்தது.

– ஜனனி (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: ஜூன் 1992, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *