இங்கிலாந்து-1980
இங்கிலாந்தில் எதை நம்பினாலும்,இங்கிலண்ட் நாட்டின் சுவாத்திய நிலையை நம்ப முடியாது.
எப்போது மழை பெய்யும் எப்போது பொல்லாத காற்றடிக்கும் என்று சொல்ல முடியாது.அதிலும் மார்கழி மாதத்தில லண்டனில் வெயிலையும் தென்றலையும் எதிர்பார்க்கமுடியுமா?
வானம் மப்பும் மந்தாரமுமாகவிருக்கிறது.
ஜன்னலுக்கு அப்பாற் தெரியும் வானத்தையும் வான நிலையையும் எடை போட்ட நான் ஜன்னற் கண்ணாடியால் ஊடுருவி வந்த குளிர் உடம்பைத் துளைக்க,நான் ஜன்னற் சேலையை இழுத்து மூடுகிறேன்.
இன்று லைப்ரரிக்குக் கட்டாயம் போகவேண்டும். லைப்ரரியில் எடுத்து புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்கும் நாள் வந்து விட்டது. புத்தகங்களைத் திருப்பக் கொடுக்காவிட்டால்,புத்தகம் திருப்பிக்கொடுக்கும் நேரம் கடந்த குற்றத்துக்காக அபராதம் கடடித் தொலைக்க வேண்டும்.
பனியோ மழையோ இன்று லைப்ரரிக்குப் போயாகவேண்டும்.
குளிருக்காக,ஓவர்க் கோர்ட்டை போட்டுக் கொண்டு,சின்ன மகனைத் தள்ளுவண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வீட்டுப் படிகளில் இறங்கினேன்,
நான் இன்று லைப்ரரிக்கப் போவதாக,சினேகிதி ஸேரா ஸிம்சனுக்குச் சொல்லியிருந்ததால்,லைப்ரரிக்கப் போகும் போது தன்னை வந்து பார்க்கச் சொன்னது ஞாபகம் வந்தது. லைப்பரரிக்குப் பக்கத்தில் அவள் வீடு இருக்கிறது.அங்குபோனால் எங்கள் இருவரின் அலட்டல்களிலும் அரை நாள் போய்விடும்.
ஸேராவைப் பற்றிய ஞாபகம் வந்ததும், அவள் தனது வீட்டுக்குப் பக்கத்தில் குடிவந்திருக்கும் இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தைப் பற்றிச் சொன்னதும் ஞாபகம் வருகிறது. ஸேரா ஸிம்சனுக்கு அவர்கள் தங்களை இலங்கையர்கள் என்று அறிமுகம் செய்து செய்து கொண்டபோது,ஸேரா என்னைப் பற்றிச் சொன்னதாகவும், ‘;ஹார்ப்பெண்டனிலும் தமிழர்கள் இருக்கிறார்களா? ஏன்று ஆச்சரியத்துடன்அவர்கள் ஸேராவைக் கேட்டார்களாம். ‘
ஹார்ப்பென்டனில் மட்டுமல்ல உலகத்தில் எந்த மூலைக்குப்போனாலம் தமிழர்கள் இருப்பார்கள்’ என்று சொன்னேன்.
‘ஓ அந்த இலங்கையர்களை,எங்களக்கு அறிமுகம் செய்து வைக்க முடியுமா’?என்று அந்தப் புதிய இலங்கையர்கள் கேட்டதாக ஸேரா சொல்லியிருந்தாள்.;
நாங்கள் வாழும் ஹார்ப்பென்டன் என்ற இடத்தில் ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் மிகவும் குறைவு. தமிழர்கள் ஒன்றிரண்டு குடும்பங்கள்தான் இருக்கின்றன. இந்த ஊர் உலகின் பிரபலம் பெற்ற நாடகாசிரியரான பேர்ணாட் ஷோ வாழ்ந்த ஊராகும். இந்தத் தெருக்களில் நான் நடந்து செல்லும்போது,இதே தெருவில் அந்த எழுத்து மேதை வாழ்ந்தார். அவரின் காலடிபட்ட மண்ணில் நடப்பதே கவுரவம் என்று நினைத்துக் கொள்வேன்.
இன்னுமொரு இலங்கைக் குடும்பம் இந்தக் கிராமத்துக்கு வந்ததையிட்டுச் சந்தோசப் பட்டேன். தெருவில் இறங்கி நூறு யார் கூட நான் நடக்கவில்லை;.அதற்கிடையில் ஸேராவின் பிரின்ஸஸ்கார் பேய்வேகத்தில் வருவதைக் கண்டேன்.அவள் அசுசர வேகத்தில் அந்தப் புதுக்; காரைத் தாறுமாறாக ஓட்டுவதால், அவளுக்கு இரண்டு வருடமும் தாக்குப் பிடிக்காது என்று அவளின் கணவர் முணுமுணுப்பார்.
‘ கெட் இன்’ என்று எனக்குச் சொல்லி விட்டு, இறங்கி வந்து எனது மகனின் தள்ளு வண்டியைக் காரின் ஏற்ற கதலைத்; திறந்து விடுகிறாள்.
‘என்ன கொஞ்ச நாளாக உன்னைக் காணவில்லை?’ ஸேரா காரை ஸ்ரார்ட் பண்ணிக் கொண்டு என்னைக் கேட்கிறாள்.
‘வீட்டு வேலைக்கள்,எழுத்து வேலைகள்’ நான் முணுமுணுக்கிறேன்.
‘ எப்போது உன்னைக் கூட்டிக்கொண்டு வருவேன் என்று மாலதி கேட்டாள்’ ஸேரா திரும்பியபடி எனக்குச் சொல்கிறாள்.
‘என்னைச் சந்திக்க விருப்பமென்றால் உன்னுடன் வந்திருக்கலாமே’ எனது கேள்வி ஸேராவை யோசிக்கப் பண்ணியிருக்கவேண்டும்.நான் பிள்ளை குட்டிக்காரி, புதிதாக வந்திருக்கும் இலங்கையர்கள் ஒரு இளம் தம்பதிகள் என்று ஸேரா சொல்லியிருந்தாள்.
‘உம் அவர்கள் வந்திருக்கலாம்தானே,. வந்திருக்கலாமே’ அவளும் நான் சொன்னதைத் திரப்பிச் சொல்கிறாள்.
நான் பெரிது ,நீ பெரிது என்று போட்டி போடும் இலங்கையர்கள் சிலர்போல அவளும்,’ நான் ஏன் வலியப் போய் யாரையும் பார்க்கவேண்டும் என்று நினைத்திருக்கலாம்.
‘அப்படித் தலைக்கனம் பிடித்த பெண்ணாகவிருந்தால் நான் ஏன் வலியத் தேடிப்போய் நேரத்தை வீணாக்கவேண்டும்?’ நான் எனக்குள் நினைத்துக் கொள்கிறேன் ஆனால் அதுபற்றிச் ஸேராவிடம் சொல்லவில்லை.அவள் இரு இலங்கையப் பெண்களைச்; சேர்த்து வைப்பதைப் பெரிய சேவையாக நினைக்கிறாள்.
ஸேரா ஸிம்சனுக்காவாவது நான் கட்டாயம் மாலதியைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.
‘மாலதியின் கணவர் வீட்டில் இருக்க மாட்டார்’ ஸேரா காரை நிறுத்தியபடி சொல்கிறாள்.
நான் ‘உம் கொட்டுகிறேன் ஸேராவின் கணவர் ஒரு டொக்டர் என்று ஸேரா சொல்லியிருக்கிறாள்.
ஸேராவின் அடுத்த வீடு; மாலதியினுடையது.
மாலதி இந்தப் பகுதிக்குக் குடிவந்து இரண்டு மாதங்களுக்கிடையில் ஸேராவுடன் பெரிய சினேகிதமானதற்கு, அவளின் கணவர் வேலைக்குப் போனபின் தனியாக வீட்டிலிருப்பதும் ஒரு காரணம் மட்டுமல்லாமல், இரு வீடுகளுக்கும் இடையில் இடைவெளி அதிகமில்லாதிருப்புதம் ஒரு காரணமாகவிருக்கலாம்.
காரின் பின்பக்கமிருந்த, எனது மகனின் தள்ளுவண்டியை வெளியே எடுத்தபடி நிமிர்ந்து பார்க்கிறேன். ஸேரா,மாலதியின் வீட்டு அழைப்பு மணியை அடிக்க மாலதி வந்து கதவைத் திறக்கிறாள்.
அவளுக்குச் சுமார் சுமார் இருபத்தியெட்டு வயதிருக்கும்.நீல நிற ஜீன்சும் கறுப்பு புல்லோவரும் போட்டிருக்கிறாள்.தலைமயிர் கழுத்து மட்டத்திற்கு வெட்டப்பட்டு,நாகரீகமாகச் சுருட்டி விடப் பட்டிருக்கிறது.
மாலா, ஸேராவுக்கு ஹலோ சொல்லி விட்டு என்னைப் பார்க்கிறாள்.
என்னை அடையாளம் தெரிந்தும் தெரியாத இரு பாவனைகளில்; அவள் விழிகளில் ஒரு குழப்பம் வந்து பளிச்சிட்டு மறைகிறது.
நான் அவளுக்கு ‘ஹலோ’ சொல்லிவிட்டு அவள் முகத்தை அருகிற் பார்த்தபோது யாருயை ஞாபகமோ என்னுள் சட்டென்று வந்து போகிறது.
யாருடைய ஞாபகம்?
மாலாவை எங்கேயோ பார்த்த ஞாபகம் எங்கே?
அண்மையில் இலங்கைக்கும் போய்வந்திருந்தோம். அப்போது யாழ்ப்பாணம் பெரிய கடையில் அவளைப் பார்த்திருப்பேனா?
திருகோணமலைக் கோணேசர் கோயிலிற் கண்டிருப்பேனா? மீpன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் வாவியருகிற் சந்தித்திருப்பேனா?
ஸேரா எங்களின் முழுப் பெயர்களையும் சொல்லாமல் எங்களை ஒருத்தொருக்கொருத்தர் அறிமுகம் செய்து வைக்கிறாள். ஸேராவுக்கு இலங்கை, இந்தியர்களின் நீண்ட பெயர்களைச் சரியாகச் சொல்ல முடியாது.
‘என் பெயர் மாலதி நடேசன்’ மாலதி தன் முழப் பெயரையும் சொல்கிறாள். நான் எனது பெயரைச் சொல்கிறேன.
மழையும் காற்றும் ஒன்றோடொன்று போட்டி போடுகின்றன. மாலதி தனது வரவேற்பறைக்குள் எங்களை அழைக்கிறாள். பணக்காரத் தோரணையான வீடு. அக்ஸ்மினிஸ்டர் கார்ப்பெட் பரப்பிய அறை, அதற்கு மட்ச் பண்ணப் போடப் பட்டிருக்கும் பல தரப்பட்ட உயர்தரத் தளவாடங்கள்.அதன் அழகை மிகைப் படுத்தும் பிரித்தானிய ஓவியர் கான்ஸ்டபிள் என்பவரின் கிராமிய அழகைப் பிரதிபலிக்கும் பல ஓவியங்கள்.
எனது பார்வை ஓவியத்தில் பதிந்திருப்பதைக் கண்ட மாலதி, ‘நாங்கள் இன்னும் சரியாக பேர்ணிஷ் பண்ணி முடிக்கவில்லை’ என்கிறாள். குரலிற் பெருமை.
அரைகுறை அலங்காரமே பிரமாதம். முழுதும் முடிந்தால் கண்கொள்ளாக் காட்சியாகவிருக்கும். தமிழர்களின் வீட்டலங்காரமாகவில்லாமல் பிரித்தானியக் கலவை அற்புதமாகவிருந்தது.
அவளின் கணவர் ஒரு டாக்டர் என்று ஸேரா சொன்னது ஞாபகம் வருகிறது. லண்டனில் டாக்டர்கள் பெரிய வசதியாகவும் ஆடம்பரமாகவும் வாழ்வது பெரிய விடயமில்லை.
மாலதியும் நானும் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று தயங்குவது ஸேராவுக்குப் புரிகிறது.
‘கௌரிக்கு லண்டனில் நிறைச் சொந்தக்காரரர்கள். ஓரே விசிட்டிங்தான் உனக்கும் அப்படியா மாலதி’ ஸேரா மாலதியைக் கேட்கிறாள்.
அவளது பேச்சு எங்கள் இருவரையும் சிரிக்கப் பண்ணுகிறது.
தமிழர்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் விசிட் பண்ணுவதுதானே பொழுதுபோக்கு?
‘நீங்கள் இலங்கையில் எந்த ஊர்?’ இலங்கையர்களைக் கண்டால் அவர்களின் கேள்வி, முக்கியமாக யாழ்ப்பாணத்துத் தமிழரின் முதற்கேள்வி அதுவாகத்தானிருக்கும் என்று எனக்குத் தெரியும்.
இதற்குப் பதில் பெரியது. புpறந்த ஊரா? படித்த ஊரா, திருமணம் செய்து கொண்ட ஊரா, லண்டனுக்கு வரமுதல் வாழ்ந்த இடமா, எது எனக்குச் சொந்தமான இடம்?
‘பிறந்த ஊர் மட்டக்களப்பு. வாழ்ந்த இடங்கள் பல’ நான் மறுமொழி சொல்கிறேன்.
‘ ஓ மட்டக்களப்பா எந்தக் கல்லூரியிற் படித்தீர்கள்?’
அவளின் வியப்பில்,நான் நினைத்ததுபோல் அவளுக்கும் மட்டக்களப்புக்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிகிறது.
நான் அவளுக்கு மறு மொழி சொல்ல முதல் பல பெண்கள் கல்லூரிகளின் பெயர்கள் அடிபடுகின்றன.அவற்றிற் சில எனது சொந்தக்காரப் பெண்கள் படித்தவை.
‘நான் மட்டக்களப்பில் எந்தப் பெண்கள் கல்லுரியிலும் படிக்கவில்லை, சாதராணமான ஒரு மகாவித்தியாலத்தில் படிப்பை முடித்து விட்டு லண்டன் வந்துதான் எனது மேற் படிப்பக்களைத் தொடர்ந்தேன’
‘ஓ…’ என்று தனது ஆச்சரியத்தை மறைத்துக் கொண்டவள்,’ நாங்கள் பலகாலம் மட்டக்களப்பில் இருந்தோம்..’ மாலதியை நான எங்கேயோ கண்டதாக நினைத்துக் கொண்டது வெறும் பிரமையில்லை என்று புரிகிறது.
‘எனது அப்பா அங்கே டாக்டராகவிருந்தார்’ என்று சொன்னவள்,அவளின் அப்பாவின் பெயர், அவர்கள் எந்த ஊரில் எந்தக் கால கட்டத்தில் அவர்கள் மட்டக்களப்பில் வாழ்ந்தார்கள் என்று சொல்லிக் கொண்டே போகிறாள்.
எனது நினைவுகள் சட்டென்று சிறகடிக்கின்றன. உணர்வுகள் உறைகின்றன. பழைய ஞாபகங்கள்
புதிய உருவெடுத்து என்மனதில் திரைப்படம் காட்டுகிறது;.
அவளுக்கு ஆறு அல்லது ஏழு வயதாகவிருக்கும்போது எங்களூரில் எங்களுடன் அறிமுகமானதை அவள் மறந்து விட்டாள் என்று அப்பட்டமாகத் தெரிந்தது.அவள் என்னையும் மறந்து விட்டிருக்கலாம் அல்லது அந்தக் குக்கிராமத்திரிருந்து ஒரு பெண் லண்டனுக்கு வந்ததை அவள் கடைசிவரையும் எதிர்பார்த்திருக்கு முடியாமலிருக்கலாம்.
‘எவ்வளவு காலமாக லண்டனில் இருக்கிறீர்கள்?’
அவள் தனது சமயலறைக்குப்போய்க் கொண்டபடி கேட்கிறாள்.
‘பத்து வருடங்களாகிறது’ மேசையிற் கிடந்த ரீடர்ஸ் டைஜஸ்டைக் கையிலெடுத்துக்கொண்டு அவளுக்கு மறுமொழி சொல்கிறேன்.
‘எக்ஸ்கியுஸ் மி; மாலா, எனக்குக் காப்பி போடவேண்டாம்..நான் அவசரமாக ஒரு இடத்திற்குப் போகவேண்டும’ ஸேரா ஸிம்சன் மாலாவின் பதிலை எதிர்பார்க்காமல் விரைகிறாள்.
‘ உங்களுக்கு இந்தக் குளிர் பழகியிருக்கும்’
கழுத்தில் ஒரு மவ்ளரைச் சுற்றிக் கொண்டு வந்து உட்காருகிறாள் மாலதி. அவள் கொண்டு வந்த நெஸ்கபே காப்பியின் மணம் மூக்கைத் அடிக்கிறது.
புதிதாக ஆங்கிலேயர்களைக் கண்டால் அவர்கள் பெரும்பாலும் பொது விடயமான சுவாத்தியம் பற்றிய பேச்சையே முதலிற் தொடங்குவார்கள்.லண்டனுக்கு வந்த நாளிலிருந்து யாரையும் பதிதாகச் சந்தித்தால் பிரித்தானிய சுவாத்தியம் பேசி அலுத்த எனக்கு இலங்கையிலுருந்து வந்த ஒரு தமிழ்ப் பெண்ணுடனும் அந்த உப்புச்சப்பில்லாத விடயத்தையே பேச எரிச்சலாகவிருக்கிறது.
இனி என்ன கேட்பாள்? சாதாரண தமிழர்கள்போல, எத்தனை குழந்தைகள்,பெரிய பையன் என்ன படிக்கிறான், சின்னப் பையன் குழப்படியில்லையா?அவர்களை என்னவாகப் படிக்கவைக்க ஆசை? இவையெல்லாவற்றுக்கும் திரும்பத் திரும்பப் பதில் சொல்லி அலுத்து விட்டேன். ஏழு வயதில் எனக்குத் தெரிந்த மாலா இன்னும் ஒரு’ குழந்தையாகவே’ இருப்பதான உணர்வு சிந்தனையில் நெருடுகிறது. வசதியான வாழ்க்கைக்கப்பால் யதார்த்தமான உலகைத் தெரியாத பலரில் அவளும் ஒருத்தியாய் இருப்பதில் என்ன பிழை?
லைப்ரரிப் புத்தகங்கள் கொடுக்கவேண்டும். வெளியில் மழை சற்று ஓய்ந்திருக்கிறது. அவள் தந்த காப்பியைக் குடித்து விட்டு அவளுக்கு நன்றி சொல்லி விட்டு எழும்புகிறேன்
‘இப்படி அவசரமாகக் கிளம்புவதாக இருந்தால் ஸேராவுடன் போயிருக்கலாமே’ அவள் வாசல் வரைக்கும் வந்தபடி சொல்கிறாள். அங்கிருந்தால் அவளுக்குத் தெரியாத சில விடயங்களைத் தற்செயலாக நான் சொல்லி அவளைத் தர்மசங்கடப் படுத்த என் மனம் விரும்பவில்லை என்பதை நான் அவளுக்குச் சொல்லவில்லை.
அந்த விடயங்களுக்கும் அவளுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.அவைபற்றி அவள் தெரிந்துகொண்டும் ஒன்றும் ஆகப்போவதில்லை.
நான் அவசரமாகச் செல்கிறேன் வானத்தில் கருமேகங்கள் படர்கின்றன். இன்னொருதரம் மழை கொட்டப்போகிறது.
மழை,மழை, மழை!!!
மழை பெயயும் இந்தச் சூழ்நிலையும் மாலதியும் மட்டக்களப்பு ஞாபகங்களங்களும் சில வேதனையான சம்பவங்களை என் மனதில் கிளறி விட்டதை அவள் அறிய மாட்டாள்.
‘ ஸேரா வந்தால் நான் லைப்ரரிக்குப் போகிறேன் என்று சொல்லுங்கள் ‘ நான் விரைகிறேன்.
வாசல் வரைக்கும் வந்த மாலதி ‘ குட்பை’என்று சொல்லி விட்டுத்தன் வீட்டு வாசலில் நிற்கிறாள்.
ஆனால் எனது நினைவுகள் அவள் வீட்டு வாசலுடன் நின்று விடவில்லை.
அந்த மழையும் மாலதியின் சந்திப்பும் பல வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் நடந்த மனவேதனையான சம்பவத்தைக் கிளறி விட்டது என்று அந்த இளம் பெண்ணிடம் சொல்லி என்ன பிரயோசனம்?
அந்த டாக்டர் சுந்தரலிங்கம் எங்கள் பகுதிக்கான வைத்தியசாலைக்கு டாக்ராகப் புதிதாக வந்திருந்தார். அந்தக் காலத்தில் பல வருடங்களாகப் பெரிய படிப்பு படித்த டாக்டர்களுக்கும் சில வருடங்கள் மட்டும் படித்த அப்போதிக்கரிமாருக்கும் வித்தியாசம் எங்களுக்குத் தெரியாது.இப்போதும் தெரிகிறதோ எனக்குத் தெரியாது. ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொண்ட எல்லாருமே டாக்டர்கள்தான்.
டாக்டர்கள் கடவுளர்களுக்கு அடுத்தபடியான அந்தஸ்தைச் சாதாரண மக்களிடம் பெற்றிருந்தார்கள்.
காற்சட்டை போட்ட அத்தனைபேரும் ‘ஐயா’க்களாகவும்,’சேர்’களாகவும் மக்களின் மரியாதையில் ஊறிப்போயிருந்த காலமது.
புதிதாக வந்திருந்த டாக்டருக்கு அப்பாவி மக்களின் ‘டாக்டரில்’ வைத்திருக்கும் ‘பக்தி’ நிலை கண்டு ஆரம்ப நாட்களில் அதிர்ச்சி வந்திருக்கலாம்.
அவரின் கடவுள் பக்தியும்,தமிழ் பக்தியும், ,அப்பாவி மக்களுக்கு அவரிடம்; இருந்த மரியாதையை, பக்தியை இன்னும் பல மடங்குகளாக்கின.
அந்தக் கால கட்டத்தில் யாழ்ப்பாணத்து டாக்டர்கள்தான் இலங்கையின் பல தமிழ்ப்பகுதிகளிலும் வேலை செய்ய வருவார்கள்.
குக்கிராமத்து மக்களிடம் தாங்கள் ஒரு அற்புதப் பிறவிகளாக,சாதாரண மக்களால் நெருங்கமுடியாத உயர் பிறவிகளாக நடந்து கொள்வது சாதாரண விடயமாகும்.
டாக்டர்கள் என்பவர்கள் மிகவும் உயர் படிப்பு படித்தவர்கள்.கர்மவினைகளால் மனிதருக்கு வரும் (?) நோய்களை அகற்றக் கடவுளால் அனுப்பப் பட்ட தூதுவராகத்தான் டாக்டரைச் சாதாரண மக்கள் வரையறுத்து வைத்திருந்தார்கள். அந்த டாக்டர்கள் தாஸ் புஸ் என்று ஆங்கிலம் பேசுவதை அந்த அப்பாவிக் கிராமத்தார் ஆச்சரியத்துடன் ரசிப்பார்கள். இலங்கையை ஆளவந்த தேவர்களின் (ஆங்கிலேயர்) மொழியைப் பேசும் இலங்கையர்கள்; (அசுரார்கள்?) தேவர் நிலைக்கு உயர்த்தப் பட்டுக் கவுரவிக்கப் பட்ட காலமது.
அவர்கள் எங்களுக்குத் தெரியாத பாஷையிற் பேசுவதை நாங்கள் வாய்பிளக்கப் பார்த்துக் கொண்டிருப்போம்.
அப்படியான ‘கடவுளரின்’ சேவைகளக்குக் காணிக்கையாக எங்களு+ர் மக்கள் பல பொருட்களைக் காணிக்கையாக அர்ப்பணிப்பார்கள்.
பெரும்பாலான கிராமத்தார் விவசாயிகள். விளைச்சல் காலம் முடிந்ததும், அவர்கள் தங்களின் வயல்களில் அறுவடையான புத்தரிசிப் பெட்டிகள்,கொத்துக் கொத்தான சோழக் குலைகள், முற்றிப் பழுத்து வாழைக்குலைகள்,கறுத்தக்கொழும்பான் மாம்பழங்கள் என்று பல வகைப் பொருட்களை,வைத்தியருக்குக் ‘காவு’ கொண்டுபோவார்கள் (காவிக் கொண்டு போதல்).
அவர்களுக்கு அரச சம்பளம் கொடுக்கப் படுகிறதைக் கிராமத்தார் கணக்கில் எடுப்பதில்லை. தங்களின் நோய் நொடிதீர்ர்க்கும்; ‘பகவானுக்கு’ அவர்கள் காணிக்கை கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிருக்கும் வைத்தியர் சுந்தரலிங்கம்,ஒரு ஏழைக்கு வரும் நோயைமாற்றக் கொடுக்கும் பெனிசிலின் ஊசிக்கு ஐந்து ரு+பாய்கள் வாங்காமல் விடமாட்டார்.
‘பெனிசிலின்’ ஊசி மக்களுக்காக அரசாங்கத்தால் இலவசமாகக் கொடுக்கப்பட்ட வைத்தியப் பொருள் என்பதையும் அதை அவர் விற்பனையாக்குவதையும்; கேள்வி கேட்கும் தைரியம் அப்போது ஊராருக்குக் கிடையாது..வருத்தம் குணமாக்க, ஒரு ஏழை தனது குடும்பம் சமைத்துச்சாப்பிட வைத்திருக்கும் இரண்டு மரைக்கால் நெல்லை விற்று அவருக்கு ஐந்து ரு+பா கொடுத்து விட்டு இரு நயள்; பட்டினி கிடப்பதைப் பற்றி அவருக்கு எந்த அக்கறையும் கிடையாது. அவரின் படிப்பும் ஊராரின் அறியாமையும் ஒரு கோடி மைல்கள் வித்தியாசமானவை.கடவுளையும் தமிழையும் பாவித்து இந்த அப்பாவிக் கிராமத்தாரின் மனதில் அவர் தெய்வ அம்சமாக மதிக்கப் பட்டார்.
மாலதியும்; அவளின் தம்பிகளும் எங்கள் கோயிலுக்கு வரும்போது நாங்கள் அவர்களைப் புதினம் பார்ப்போம். அவர்கள் கிராமத்துச் சிறார்களுடன் பேசமாட்டார்கள். நாங்கள் வேண்டுமென்றே பேச்சுக் கொடுத்துப் பார்ப்போம்.அவளின் காஞ்சிபுரச் சில்க் பாவாடைபற்றிப் எங்களுக்குள்ப் பேசிக் கொள்வோம்.
நாங்கள் ஒருநாள், ஒழுங்கையில் கோடுகள் போட்டு,மாங்கொட்டை அடித்து விளையாடிக்கொண்டிருந்தோம். திடீரென்று மழை வரப் பக்கத்திலிருந்து இலுப்பைமரப்; பொந்துகள் பக்கத்தில் மழைக்கு ஒதுங்கினோம்.;
அப்போது,பக்கத்து வீட்டிலுள்ள தங்கம்மா, தனது இடுப்பைப்பிடித்துக் கொண்டு சங்கடப் படுவது தெரிந்தது. மழை கொட்டத் தொடங்கியது; என்னோடு விளையாடியவர்கள் தங்கள் வீடுகளுக்கு ஓடிப் போய்விட்டார்கள்.
நான் தங்கம்மா வீட்டுக்கு ஓடினேன்.தங்கம்மா வேதனையில் முகத்தைச் சுழித்தபடி தர்ம சங்கடப் பட்டுக் கொண்டு திண்ணையிலிருந்தாள்.
அவள் கர்ப்மாயிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். அவளுக்குத் தலைப் பிரசவமது. எத்தனைமாதக் கர்ப்பம் என்று தெரியாது. முதற்பிள்ளைக்காரிகள் பெற்றாலும் பெற்றார்கள் செத்தாலும் செத்தார்கள் என்று பெத்தா அடிக்கடி சொல்வது எனக்குத் தெரியும்.
அவன் கணவன் வேலைக்குப் போய்விட்டான்,வீட்டில் யாருமில்லை.
‘என்ன தங்கம்மா அக்கா,வலிக்கிறதா’ என்று கேட்டேன்.
‘எனக்கு பிள்ளைப் பெறுகிற நோ வந்து விட்டது என்ற நினைக்கிறேன்… ஓடிப்போய் என்ர அம்மாவுக்கும் ஆச்சிக்கும் சொல்ல முடியுமா’ வேதனையுடன் என்னைக் கேட்டாள். நான் அவளின் அம்மாவிடம் விடயத்தைச் சொல்ல ஓடிக்கொண்டிருக்கும்போது, ஒழுங்கையிற் கண்ட பல கிழவிகளுக்கும் விடயத்தைச் சொல்லி விட்டேன்.
நான் தங்கம்மாவின் தாயுடன் திரும்பியபோது ஊர்க்கிழவிகள் பலர் தங்கம்மாவின் திண்ணையில் ஒன்றாகக்கூடியிருந்தார்கள்.தங்கம்மாவை வெளியிற் காணமுடியவில்லை.அவளை அறைக்குள் போகச் சொல்லி விட்டார்கள். அவளின் முனகற் குரல் எனக்குக் கேட்டது. கடைசியாக அவளைக்கண்டபோது அவளின் முகத்திற் தெரிந்த பயம்,சோகம், எதிர்பார்ப்பு என்பன என்மனதில் பலகாலம் பசுமையாகவிருந்தது.
தங்கம்மாவின் அறையிலிருந்து, அவளின் பிரசவவேதனையின் துடிப்பும் அழுகையும் மனதை என்னவோ செய்தது. பிரசவம் பார்க்க வந்த கிராமத்து மருத்துவ மாது அறைக்கும் வெளியுமாக அலைந்து ஏதோ மூலிகைகளை அவித்துக் கொண்டிருந்தாள்.
கொஞ்ச நேரத்தில் கிழவிகளின் குரல்கள் கேட்டன.’ புள்ள வெளியால வரத்துக்கு முக்கு மகளே முக்கு… மாடு மாதிரி முக்கு’ என்று சொல்லிக் கொண்டிருப்பது அறைக்குள்ளிருந்து கேட்டது. என்ன நடக்கிறது என்று, கதவுத் திறப்பு ஓட்டையால் நான் எட்டிப் பார்க்க முனைந்தபோது, தங்கம்மாவைச் சுற்றிப் பல கிழவிகளின் உருவங்கள் தெரிந்தன்.
‘சின்னப் பெட்டைக்கு பிள்ளை பெறுகிற இடத்தில என்ன வேலை’என்று கிழவிகள் என்னைத் துரத்தி விட்டார்கள்.
என்ன நடக்கிறது என்று முழுமையாகத் தெரியாவிட்டாலும்,தங்கம்மாவிலுள்ள பரிவால், மழைநீரால் துவானமடிக்கும் தங்கம்மாவின் திண்ணையின் ஓரமாக ஒதுங்கிகுந்திக் கொண்டிருந்தேன்.
நேரம் பகல் நேரம் இரண்டுதான் என்றாலும் கரிய முகில்களால் வானமிருண்டு இரவு நேரம்போலிருந்தது.மழையும் இடியும் பலமாக ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு மனிதரை வதைத்துக் கொண்டிருந்தது.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
தங்கம்மாவின் கணவன் பல மைல்களுக்கப்பாலுள்ள வயலொன்றில் வேலை செய்வதால் அவன் இன்னும் வரவில்லை. அறைக்குள் இருந்த சில கிழவிகள்,வெளியே வந்து, திண்ணையிலிருந்துகொண்டு ஏதோ குசு குசுவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். தங்கம்மாவுக்கு,அளவுக்கு மீறி இரத்தம் போவதாக முணுமுணுத்துக் கொண்டார்கள. அவர்களின் முகங்கள்; பேயடித்ததுபோலிருந்தது.
‘பலமணி நேரமாகியும் ஏன் தங்கம்மாவுக்க இன்னும் பிள்ளை பிறக்கவில்லை’ என்று நான் கேட்டேன்.
கிழவிகள் என்னைச் சட்டை செய்யவில்லை.’சின்னப் பெட்டைக்கு ஏன் தேவையில்லாத கேள்விகள்?’முறைத்துப்பார்த்தார்கள்.
‘ஆசுபத்திரிக்குக் கொண்டு போவது நல்லது’ ஒரு கிழவி சொன்னார்.
‘இந்த மழையில் என்னவென்று கொண்டுபோவது?கிரவல் ரோட்டில் மாட்டு வண்டி புதைந்து விடும்’ இன்னமொரு கிழவி பெருமூச்சு விட்டது.
‘டவுணுக்குப் போய்க் கார் பிடித்துக்கொண்டு வந்தால் என்ன?’ அவர்களுக்குள் இன்னொரு கேள்வி.
அந்த நேரம் தங்கம்மாவின் கணவன் தோய்ந்து நனைந்துபோய் வந்து கொண்டிருந்தான்.தனது முதற்பிள்ளையை எதிர்பார்த்து வந்த அவனுக்கு ஒரு சில நிமிடங்களில் தங்கம்மாவின் நிலை தெரிந்திருக்கவேண்டும்.
அப்படி ஒரு பயத்தை எவரின் முகத்திலம் நான் என் வாழ்க்கையில் கண்டதில்லை.
மருத்துவ மாது என்ன சொல்லியிருப்பாள்?
அவன் தனது பைசிக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடுவது தெரிந்தது.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
அறையுள் அலறலாகக் கேட்ட தங்கம்மாவின் வேதனை முனகல்களாக வந்து கொண்டிருந்தன. கதவு ஓட்டையாற் பார்க்கவும் முடியாது. கிழவிகள் படை வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கிறது.
போதாக் குறைக்கு,ஊரிலும் அடுத்த ஊரிலுமுள்ள தங்கம்மாவின் உறவினர்கள் பலர்,வளவின் மூலையிலுள்ள பெரிய இலுப்பைமரத்தடியில் மழைக்கு ஒதுங்கி நின்று கொண்டிருந்தார்கள்.
மழை கொட்டிக் கொண்டிருந்தது. ; சிலர் பழைய ஓட்டைக் குடைகளுடன் நிற்கப் பலர் தளப்பத்து மரத்தின் பெரிய இலையாற் தலையை மழைக்கு மறைத்துக் கொண்டு நின்றார்கள்.
அதுவுமற்றவர்கள் சுளகைத் தலைக்குப் பிடித்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக,எங்கள் ஊரே,தங்கம்மாவின் வீட்டைச் சுற்றி நின்றது.கிட்டத்தட்ட அத்தனைபேர் முகத்திலும் பயம்,சோகம்,பரபரப்பு.
தங்கம்மாவின் கணவன் திரும்பி வந்தான். ‘தங்கம்மாவைக் காரில் வைத்தியசாலைக்குக் கொண்டுபோக டவுணிலிருந்து கார்கிடைக்கவில்லை.டாக்டரிடம் நேரே போனேன்….’ தங்கம்மாவின் கணவன் தயங்கினான்.
‘டாக்டர் எங்கே’? ஊரே ஒருமித்துக் குரல் எழுப்பியது.
‘அவருக்கு வேலையாம்’ அவன் கண்களில் நீர் ஊற்றாக வடிந்தது.
எல்லோர் முகத்திலும் ஆச்சரியக்குறி. ஆத்திரத்தின் பிரதிபலிப்பு.
‘என்ன, அப்படி என்ன பெரிய வேலையாம். இஞ்ச ஒரு தலைப்பிள்ளைக்காரியும் பிள்ளையும் உயிருக்குப் போராடுகினம். அதைக்கவனிக்க முடியாமல் அப்படி என்ன பெரிய வேலையாம்’?
பலரிடமிருந்து பல கேள்விகள்.
ஆனால் அந்த டொக்டர் தனக்கு நேரமில்லை என்று சொன்ன போதெல்லாம் ஐந்து ரு+பாய்ப் பணத்தைக் காட்டினால் அவருக்கு, அவரை உதவிக்குக் கூப்பிட்ட நோயாளியைப் பார்க்க உடனே நேரம் கிடைத்துவிடும் என்று,ஒருசிலருக்குத் தெரியும்.
டாக்டரை அழைத்து வரப்; பணம் தேவை!. தங்கம்மாவின் குடும்பம் ஏழைக்குடும்பம்.அவன் இப்போதுதான் வயலிலிருந்து வந்திருக்கிறான். தங்கம்மாவுக்குப் பிள்ளை பிறக்க இன்னும் மூன்ற கிழமைகள் இருக்கும்முதலே பிரசவ வேதனை வந்து அவள் துடிக்கிறாள்.
தங்கம்மாவின் கணவன் திண்ணையிற் காத்திருக்க,ஓரு கிழவி, அறைக்குள்ச் சென்று, அரையும் குறையமான உயிருடன் முக்கி முனகும், தங்கம்மாவின் காதிற் கிடந்த சிவப்பு நிற மூன்று கற் தோட்டைக் கழட்டிக் கொண்டுவந்ததும், இன்னொரு கிழவி அதை வாங்கிக் கொண்டு தனது முடிச்சிலிருந்த கசங்கிய சில பத்து ரு+பா நோட்டுகளைக்; கொடுக்கிறாள்
ஒரு உயிரின் ஜனனத்துக்கும் இன்னொரு உயிரின் மரணத்துக்கும் விலை இந்த சில நோட்டுகளா? அந்தக் கற்தோடும் பண நோட்டுக்களும் கைமாறுவதைத் தாங்காத வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஒரு ஆணவமான வைத்தியனின் கடமைக்கு விலை அழுக்குமுடிச்சில் கிடந்த கசங்கிய நோட்டுகளா?
எனக்கு உலகம் புரியாத,அந்த வயதில்,எதையும சுரண்டிப் பிழைக்கும் மனிதரின் மனிதமற்ற தன்மை தெரியவில்லை.
தங்கம்மாவின் கணவன் தனது பைசிக்கிளை இன்னொருதரம், சகதியான பாதையில் உருட்டிக் கொண்டோடினான்.
கொஞ்ச நேரத்தில், தனது பளபளக்கும் காரில் டொக்டர் வந்திறங்கனார்.
மழையிருட்டுடன், இரவு இருளும் சேர்ந்து உலகம் எப்போதோ கருமையாகி விட்டது. டாக்டர் தனது டார்ச்சை அடித்துக் கொண்டு தங்கம்மாவின் அறையுள் நுழைந்தார்.
மழையையமு; இருளையும் பொருட்படுத்தாமல் இன்னும் ஊர் மக்கள் தங்கம்மாவின் வீட்டைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள்.
நேரம் நீண்டு கொண்டு போனது.
டாக்டர் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வந்தாh.
தங்கம்மாவின் தாயின் அலறல் இடியை, மின்னலை,அடைமழையை மீறியெழுந்து உலகை உலுக்கியது.; ஊரே அலறியது. வாழவேண்டிய ஒரு இளம்தாய்,அவளின் உயிரைக் காப்பாற்ற அந்த டாக்டர் லஞ்சமாக எதிர்பார்த்த ஒருசில ரு+பாய்களின் வலிமையால் உயிரிழந்த கொடுமை அவர்களை உலுக்கியது.
அடுத்த நாள் மழை நின்று விட்டது.
தங்கம்மாவின் வாசல் மழையாற் கழுவப் பட்டுத் தூய்மையாகவிருந்தது.
ஆண்கள் பாடைகட்ட, பெண்கள் ஒருத்தரையொருத்தர் கட்டியழ, தங்கம்மாவின் பிணம் பாயிற் கிடந்தது……
ஹார்ப்பெண்டன் நகர வளைவுச் சந்தியில் இரண்டு கார்கள் ஒன்னோடு ஒன்று மோதிக்கொள்ள, எனது நினைவு மட்டக்களப்பிலிருந்து ஹார்ப்பெண்டன் கிராமத்திற்குத் திரும்பியது. கார்களின் மோதல் ஒலியிற் பயந்த மகன் பயத்துடன் அழுகிறான். குனிந்து, குழந்தையை அணைத்து முத்தமிட்டுவிட்டுத் தேற்றுகிறேன்.
வீட்டுக்கு வந்ததும் ஸேராவின் டெலிபோன் வருகிறது. ‘ஏன் கொஞ்ச நேரம் எனக்காக நிற்காமல் ஓடிவிட்டாய்’ கொஞசம் கோபத்துடன் கேட்கிறாள்.
‘ஏதோ கட்டாயமாக ஒரு விடயத்தைப் பற்றி எழுத வேண்டும்போலிருந்தது வந்து விட்டேன்’ அவளுக்குச் சொல்கிறேன்.
எனது கதையையோ அல்லது, இலங்கைத் தமிழர்களென்றாலும், எங்களுக்குள் இருக்கும், வர்க்க, பிராந்திய பேதங்களையோ அவள் புரிய மாட்டாள். அதைப் பற்றித்தான் எழுதப்போகிறேன் என்றால், எல்லோரையும் நல்லவர்களாக நினைக்கும் ஸேராவுக்கு விளங்குமா?
(யாவும் கற்பனையே)
– கணையாழி-இந்தியா, ஏப்ரல் 1994.