“நாளைக்கு அப்பாவோட திவசம், பாபு. லீவு எடுத்துடு!’
அவனுக்கு எரிச்சலாக இருந்தது. பாபுவாம், பாபு! பாலசுப்ரமணியம் என்று பெற்றோர் வைத்திருந்த பெயரைச் சொல்லிக் கூப்பிட்டால் என்னவாம்? பெயரை மாற்றிவிட்டால் மட்டும் தான் அவர்களுக்குப் பிறந்த பிள்ளை இல்லை என்றாகிவிடுமா?
மீனாட்சி இன்னும் இரண்டு முறை நினைவுபடுத்தினாள்.
இறுதியாக அவன் பதிலளித்தான். “ம்!”
`இந்த கர்வத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை! ஒடனே பதில் சொன்னா கொறைஞ்சு போயிடுவியோ?’ என்று முணுமுணுத்தவள், “நீ யாருக்கும் வேண்டாத பிள்ளை! நினைவு வெச்சுக்க. இந்த அப்பாதான் பாவம்னு ஒன்னை எடுத்து வளர்த்தாரு!”
அவனுக்கு உடலெல்லாம் கூசிப்போயிற்று. எத்தனை தடவைதான் இதையே சொல்லிச் சொல்லி அவனது சுயகௌரவத்தை அழிக்கப் பார்த்திருப்பாள் இவள்!
விவரம் தெரியாத வயதில், `அம்மா’ என்று அழைத்ததோடு சரி. அப்போதெல்லாம், `எனக்கே பசிக்குதே! பிள்ளைக்கும் பசிக்குமில்லே!’ என்று அவன் சாப்பிட்டுக் கை கழுவிவிட்டு வருவதற்குள், ஒரு பெரிய தட்டில் மிக்ஸ்சர், நிலக்கடலை என்று ஏதாவது வைத்திருப்பாள். அதன் பலனாக, அவளைப்போலவே அவள் வளர்த்த மகனும் பருத்துப்போனான். நண்பர்களுடன் பழகத் தெரியவில்லை. அம்மாவை அதிகமாக நாடினான். அவள் விரும்பியதும் அதுதானே!
இடைநிலைப் பள்ளியில் காலெடுத்து வைத்தபோதுதான், தான் ஒன்றுவிட்ட அண்ணன், அக்காள் என்று நினைத்தவர்களெல்லாம் உண்மையிலேயே தன் கூடப்பிறந்தவர்கள் என்ற உண்மை தெரிய வந்தது.
“நம்ப அப்பா இப்பல்லாம் என்னை அடிக்கிறதில்லே!” பூரிப்புடன் சொன்னான், வேலு — சித்தி மகன்.
“என்னண்ணே, என்னையும் ஒன்னோட சேத்துக்கறே?” என்று சிரித்தான் பாபு. “சரியாச் சொல்லு. என்னோட அப்பாதான் நான் சின்னப்பிள்ளையா இருக்கிறப்போவே செத்துப்போயிட்டாரே!”
“போடா! அது ஒண்ணும் ஒன்னோட நிஜ அப்பா இல்லே”.
“ஒனக்கு ரொம்பத் தெரியுமோ?” என்று வீம்பாகக் கேட்டாலும், பாபுவின் தொனி இறங்கிப்போயிற்று. அவனுடைய குழந்தைப் பருவத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றுகூட வீட்டில் இல்லையே என்று கேட்டபோதெல்லாம் ஏதேதோ சாக்கு சொல்லி, பேச்சை மாற்றினாளே — `அம்மா’ என்று இப்போது அவளைப்பற்றி நினைக்க முடியவில்லை.
ஏன் இந்தப் பொய்?
“நீதான் மறந்துட்டே. நான்தானே ஒனை கையைப் பிடிச்சு, ஒனக்கு நடக்கச் சொல்லிக் குடுத்தேன்!” தலையை நிமிர்த்திச் சொன்னான். “நம்ப வீட்டிலே அந்த ஃபோட்டோகூட இருக்கு. அடுத்தவாட்டி வரப்போ எடுத்துட்டு வரேன், என்ன?”
தன்னிடம் பராமுகமாக இருந்த சித்திதான் தன்னைப் பெற்ற அம்மாவா? தன்னை மட்டும் ஏன் அவளுக்குப் பிடிக்காமல் போயிற்று? எதற்காக இன்னொருத்தரிடம் தன்னைத் தூக்கிக் கொடுத்தாள்?
அவனுடைய குழப்பங்களை உணராது, வேலு மேலும் கூறினான்: “எனக்கு அஞ்சு வயசா இருக்கிறப்போ ஒனக்கு ரெண்டு வயசு. ஒன்னைப் பெரியம்மாவுக்குத் தத்து குடுத்துட்டாங்க. நீயும் இப்போ இந்த பெரிய பங்களாவுக்குச் சொந்தக்காரன் ஆயிட்டே!” அவன் குரலில் பொறாமை வெளிப்பட்டது.
அவன் சொல்லிப்போனது பாபுவின் மனதில் சூறாவளியைக் கிளப்பியது. `அம்மா’ என்று சொல்லிக்கொண்டு, என்ன அநியாயமெல்லாம் செய்திருக்கிறாள்!
`நெஞ்சில சளியா இருக்கு. குளிக்காதேன்னு நான் சொல்லச் சொல்ல, தலைக்குக் குளிச்சுட்டு வந்து நிக்கறியா?’ என்று அவனை பிரம்பால் விளாசினாளே! அது தன்மேல் உள்ள பரிவாலோ, பாசத்தாலோ இல்லை. அதிகாரம். அவ்வளவுதான். அவள் அவனை எப்படி நடத்தினாலும் கேட்பாரில்லை என்ற தைரியம்.
எவ்வளவோ எதிர்க்க நினைத்தாலும், வேறு என்ன செய்வது என்று புரியவில்லை, அந்த வயதில். அறையை உள்ளே தாளிட்டுக்கொண்டு, படிப்பில் மூழ்கினான்.
பிற பையன்களைப்போல பெண்களைப்பற்றிப் பேசுவது அவனைப் பொறுத்தவரை வீண்! அவன் வாழ்க்கையில் இன்னொரு பெண்ணே வேண்டாம்!
தான் வளர்த்த பிள்ளையில் இன்னொருத்தி பங்குக்கு வருவதா என்று நினைத்தவள்போல அவளும் அவனது கல்யாணப் பேச்சை எடுக்காதது அவனுக்கு சௌகரியமாகப் போயிற்று.
`இன்னிக்கு சாயந்திரம் கோயிலுக்குப் போகணும்,’ என்பாள், அடிக்கடி. அவன் ஒன்றும் பேசாது, அலுவலகத்திலிருந்து சீக்கிரம் வந்து அவளைத் தன் காரில் அழைத்துப்போவான். அங்கு அவன் பெயரையும் நட்சத்திரத்தையும் அர்ச்சகரிடம் தெரிவிக்கும்போது, அவன் பற்களைக் கடித்துக்கொள்வான். ரொம்பத்தான் அன்பு!
அவன் இரவு நேரங்கழித்து வீடு திரும்பினால், `எவளோட இருந்துட்டு வந்திருக்கே?’ என்று வார்த்தைகளாலேயே குதறுகிறாள்! அவளை மணந்தவர் — அதுதான் வருடம் தவறாது, தான் பார்த்தே அறியாத ஒருவருக்குத் திவசம் பண்ணுகிறோமே, அவர்தான் — ஒரு வேளை, அப்படி இருந்தாரோ, என்னவோ! அந்த எரிச்சலைத் தன்மீது காட்டுகிறாள்!
தனக்குப் பெண்கள் என்றாலே வெறுப்பு என்று அவளுக்கு இன்னுமா புரியவில்லை?
இப்போதெல்லாம் அவள் கோயிலுக்குப் போவதில்லை. படுக்கையில்தான் வாசம். இரவு பகலாக கவனித்துக்கொள்ள ஒரு பணிப்பெண்.
நல்ல வேளை, தான் நன்கு படித்து பெரிய வேலைக்குப் போனதால், பணத்தட்டுப்பாடு இல்லை என்ற ஆறுதல் ஏற்பட்டது அவனுக்கு. அவளது அறை வாயிலிலேயே நின்றுகொண்டு, “ஏதாவது வேணுமா?” என்று அவ்வப்போது கேட்பான். அவள் முனகியபடி மறுத்துவிடுவாள். வளரும் பருவத்தில் உணவளித்து வளர்த்தவளுக்கு ஏதோ, அவன் செய்யும் கைம்மாறு.
அன்று சித்தி, அவனைப் பெற்றவள், வந்திருந்தாள். அவள் பொதுவாக அவனிடம் அதிகம் பேசியதில்லை. அதிசயமாக, தனியே அழைத்துப் பேசினாள்.
“பாபு! ஒன்னை எதுக்கு அக்காகிட்டே குடுத்தேன், தெரியுமா?”
அவன் வெறித்தான்.
“ஒங்க சித்தப்பா சூதாடி. ஆபீஸ் பணத்திலே கைவெச்சுட்டாரு. வேலை போயிடுச்சு”.
`சே! இது என்ன, இந்த ரெண்டு குடும்பமும் தாறுமாறா இருக்கே!’ என்று நொந்துகொண்டான்.
“எடுத்த அம்பதாயிரத்தைத் திருப்பிக் குடுக்காட்டா ஜெயில்! அக்காகிட்ட வந்து அழுதேன். யோசிக்காம பணத்தைக் குடுத்தாங்க”. எதையோ யோசித்தாள். ”நானும் கடன் படணுமான்னு யோசிச்சேன்”.
அதற்குமேல் கேட்கப் பிடிக்காமல் எழுந்து நடந்தான். கணவரைக் காப்பாற்ற பெற்றவளே தன்னை விற்கத் துணிந்திருக்கிறாள்!
தன் விலை ஐம்பதாயிரம் வெள்ளி!
சே, இவளெல்லாம் ஒரு தாயா!
சிறு வயதில் தான் `அம்மா’ என்று அழைத்துவந்தவளை, இவளுடைய அக்காளை, நினைத்துப் பார்த்தான்.
எத்தனையோ வருடங்களாக, `நீ ஒன்றும் என் அம்மா இல்லை!’ என்பதுபோல் விட்டேற்றியாக நடந்துகொண்டிருக்கிறான். அதைப் பெரிதாக நினைக்காது, பிள்ளைக்குப் பசிக்குமே என்று உணவையே அன்பாக ஊட்டியிருக்கிறாள்!
முன்பு ஒரு முறை, தலைக்குத் தண்ணீர் விட்டுக்கொண்ட அன்று அறைந்தாளே! அது பிள்ளைக்கு ஜன்னி கண்டுவிடுமே என்ற கலக்கத்தால்!
நேரம் காலமில்லாது ஊர்சுற்றினால் மகன் கெட்டுவிடுவான் என்று எந்த பொறுப்பான தாய்தான் கவலைப்பட மாட்டாள்? வளர்த்தவளுக்கு அந்த உரிமைகூட கிடையாதா, என்ன!
ஒவ்வொரு நினைவாக மேலெழுந்து, இவன் வளர்த்தவளிடம் மனதால் நெருங்க, சித்தி மனத்துக்குள் அழுதபடி, என்றோ மறைந்துவிட்ட கணவரிடம் மன்றாடிக்கொண்டிருந்தாள்: `அக்காவுக்குப் பிள்ளை பிறக்கலேன்னு இன்னொரு கல்யாணம் கட்டிக்கிறதா இருந்தாரு மாமா. அதைத் தடுக்க நம்ப பிள்ளையைக் குடுக்கலாம்னு மனசாரச் சொன்னதே நீங்கதான்! ஐயோ! ஒங்களைப்போய் சூதாடி, திருடன்னு வாயில வந்ததைச் சொல்லிட்டேனே!’