யாதுமாகி நின்றவள்..!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 9, 2021
பார்வையிட்டோர்: 17,976 
 
 

பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப்,
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல்
‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,
அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்,
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்,
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே?
(நற்றிணை – பாடல் 110 போதனார்)

‘அண்ணி வந்து சாப்பிடுங்களேன்..!’

‘இல்லை நிலா எனக்குப் பசிக்கலை..!’

‘இரண்டு நாளாய் நானும் பார்க்கிறேன், மதியம் ஒரு சாப்பாட்டோட நீங்க இருக்கிறீங்க ஏன் அண்ணி?’

‘எங்க ஊர்க் கோயில் உற்சவம் நடக்குது அதுதான் விரதம் இருக்கிறேன்..!’ என்றாள் சுபா.

‘சரி, காலையில சாப்பிடாட்டி விரதம் என்று எடுத்துக்கலாம் அதுக்காக நீங்க இரவிலும் சாப்பிடாமல் இருக்கணுமா?’

சுபா சிரித்துச் சமாளிக்கப் பார்த்தாள்.

‘டயற்ரிங் என்று சொல்லப் போறீங்களா..? அளவாய், அழகாயிருக்கிறீங்க, என்னுடைய கண்ணே பட்டிடும் போல இருக்கு, இதைவிட மெலிஞ்சால் வடிவாயிருக்காது அண்ணி, ஏன் சாப்பிர்றதில்லை?’

சுபா எதுவும் சொல்லாது மௌனமானாள்.

‘அண்ணா ஏதாவது சொன்னானா, சொல்லுங்கண்ணி..?’

சுபா சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டுக் கேட்டாள்,

‘உங்கண்ணா சாப்பிடாமல் பட்டினி இருப்பாரா?’

‘அவரா, பசிதாங்கவே மாட்டார்..! ஒரு நேரம் சாப்பாடு தாமதமானாலே கொதிச்சுப் போயிடுவாரே’

‘உங்கம்மா இந்த வயசில பட்டினி கிடக்கலாமா, இல்லைத்தானே..! நானென்ன காலமெல்லாம் பட்டினி கிடக்கவா போறேன். இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை தீர்ந்ததும் எல்லாம் சாதாரண நிலைக்கு வந்திடும், அப்புறம் விரும்பின மாதிரி, விரும்பிய சாப்பாட்டைச் சாப்பிடலாம் தானே?’

கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி எல்லோரையும் முடக்கி, உலகத்தையே கட்டிப் போட்டு வைத்திருந்தது. பலசரக்குக்கடைகள், உணவகங்கள் எல்லாம் அவசரநிலை காரணமாக மூடப்பட்டுக் கிடந்தன. கண்ணுக்குத் தெரியாத இந்த ஆட்கொல்லி வைரஸ் எப்படி எங்கே பரவும், இதைத் தடுப்பதற்கான மருந்து என்ன என்று ஒன்றுமே தெரியாத ஒரு நிலையில் எல்லோரும் பயத்துடனே காலத்தைக் கழித்தார்கள். நோய் மேற்கொண்டு பரவுவதைத் தடுக்க அரசு எல்லோரையும் வீட்டுக்குள்ளே முடக்கி வைத்திருந்தது. போக்குவரத்தும் முடக்கப்பட்டதால், உணவு பற்றக்குறை ஒவ்வொரு வீட்டிலும் எதிரொலித்தது. நகரத்தில் இருந்தவர்களுக்குப் பணம் இருந்தாலும் வாங்க முடியாத நிலை, எனவே வீட்டிலே இருந்த உணவு வகைகளை வைத்துத்தான் சமாளிக்க வேண்டி வந்தது.

நிலா சற்று நேரம் யோசித்தாள். உணவு தட்டுப்பாடு இருப்பது அவளுக்கும் தெரியும், ஆனால் வீட்டில் இருப்பது எவ்வளவு காலத்திற்குப் போதும் என்பது பற்றி அவள் யோசித்துப் பார்க்கவில்லை. இருப்பதை வைத்துத்தானே சமாளிக்க வேண்டும்.

‘நீங்க சொல்றது சரி தான், எங்க வீட்டில இருக்கிறது எவ்வளவு நாட்களுக்குப் போதுமோ எனக்குத் தெரியாது, அவங்க இரண்டு பேரையும் விடுங்கண்ணி, ஆனால் நானும் சாப்பிடாமல் இருக்கலாம்மல்லவா..?’

‘இல்லை நிலா, உனக்குக் கலியாணம் பேசுறாங்க, எந்த நேரமும் அது முற்றாகலாம். பெண் பார்க்க வரும்போது காய்ந்து வாடிய முகத்தோடு இருந்தால் நல்லாவா இருக்கும். இந்த இளமைப் பருவத்தில எந்தக் குறையும் இல்லாமல் நீங்க வளரணும்’

‘அதுக்காக நீங்க பட்டினி கிடக்கணுமா அண்ணி, எந்தப் பெரிய பணக்காரக் குடும்பத்தில எவ்வளவு வசதியா, செல்லப் பெண்ணாய் இருந்து வந்தீங்க, அண்ணாவையே கட்டிப்பேன் என்று விரும்பினதாலேதானே கட்டீட்டு அண்ணாவோட இங்க டவுணுக்கு வந்தீங்க. இப்ப எங்ககூட இருந்து, உங்களை வருத்தி இப்படிக் கஸ்டப்படுறீங்களே’

‘இல்லையம்மா, யாரும் என்னைக் கட்டாயப் படுத்தல்லையே, எனக்குப் பிடிச்சபடியால் நானாகத்தானே உங்கண்ணாவை விரும்பிக் கட்டிக்கிட்டேன், எனக்குப் பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒண்ணுதான்!’

‘ஆனால் உங்க வசதிக்கு ஏற்றமாதிரி ஒண்ணும் இங்கே கிடைக்கலையே..!’

‘ஏன் கிடைக்கலை, குழந்தை மருத்துவரான அன்பான கணவன், ஆதரவான மாமி, சாப்பிட்டீங்களான்னு பாசத்தோட வந்து விசாரிக்கும் மச்சினி இதைவிட எனக்கு என்ன வேணும்..!’என்றாள் சுபா.

இதைக் கேட்ட நிலா உடைந்து போய், கண்கள் கலங்க அவளது தோளிலே தலை வைத்து விம்மினாள்.

‘எனக்கு இப்படி ஒரு அக்கா இல்லையேன்னு நான் ஏங்கியிருக்கிறேன். அண்ணி வடிவத்தில எல்லாமே நீங்களாய் இருக்கிறீங்களே, எப்படி அண்ணி உங்களாலே முடியுது?’

‘சின்ன வயதில அம்மாவும், பாட்டியும் சாப்பாடு ஊட்டி விடும் போதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி ஓடி ஒளிச்சிருக்கிறேன். உணவின் அருமை அப்போது எனக்குப் புரியவில்லை அதன் பின்னும் வீட்டிலே வசதிகள் இருந்ததால், நான் அதைப்பற்றிச் சிந்திக்கவில்லை. உணவு, உடை, அமைதியாய்ப் படுத்துத் தூங்குவதற்கு ஒரு இடம் இதெல்லாம் ஒருவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வளர்ந்த பிறகுதான் புரிந்து கொண்டேன். ஆண்டவன் எல்லா வசதிகளையும் எமக்குத் தந்திருக்கிறான் நிலா, கிடைத்ததே போதும் என்று அதை நாங்கள் திருப்தியோடு ஏற்றுக் கொள்ளப் பழகிக்கொள்ளணும். நாங்க எந்த நோய் நொடியும் இல்லாமல் பாதுகாப்பாய் வீட்டுக்குள்ளே இருக்கிறோமல்லவா, இதைத்தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று சொல்லுவாங்க.’

‘எனக்கொரு அண்ணி வந்தால் என்னோடு முரண்படுவாளோன்னு நான் சில சமயங்களில நினைச்சிருக்கிறேன், ஆனால் இப்படி ஒரு அன்பான, பாசமான அண்ணி கிடைச்சது நான் செய்த பாக்கியம்தான்.’ என்றாள் நிலா.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது, சுபாவின் செல்போன் அடித்தது, எடுத்துப் பார்த்தாள். ஊரிலிருந்து அப்பா..!

‘என்னப்பா எப்படி இருக்கிறீங்க, சொல்லுங்கப்பா.. அம்மா எப்படி இருக்கிறா..?’

‘நாங்க நல்லாயிருக்கிறோம். உன்னை நினைச்சுத்தான் அம்மா கவலைப்பட்டிட்டிருக்கிறா. டவுண்ல கடைகள், சுப்பமாக்கெட் எல்லாம் மூடிட்டாங்களாமே, ஒரு பொருளும் வாங்கமுடியாதாமே, சாப்பாட்டுக்கு என்னம்மா செய்யிறீங்க, அரிசி, மா, பருப்புன்னு கொஞ்சம் நம்ம வண்டியில அனுப்பி விடவாம்மா?’

‘வேணாமப்பா, எல்லாமே இருக்கப்பா, அவர் எல்லாமே வாங்கிக் கொண்டு வந்து வெச்சிருக்கிறாரப்பா, எங்களுக்கு இன்னுமொரு மாதத்திற்குப் போதுமப்பா’

அருகே நின்ற நிலா சட்டென்று செல்போனைப் பறித்து ‘அங்கிள் அண்ணி சாப்பிடாமல் பட்டினி இருக்கிறாங்க’ என்று சொல்ல, சுபா செல்போனை அவளிடம் இருந்து பறித்துப் பேசினாள்.

‘என்னம்மா நிலா சொல்றா, சாப்பிடாம இருக்கிறியாமே..?’

‘அது ஒன்றுமில்லையப்பா நம்ம கோயில் உற்சவம் நடக்குதுதானே, அதுதான் விரதம் இருக்கிறேன், இவங்க விட்டாத்தானே, பட்டினி கிடக்காதை சாப்பிடுன்ணு கட்டாயப் படுத்திறாங்கப்பா..!’

‘இந்தாம்மா அம்மா பேசணுமாம், அம்மாவோட பேசு..!’

‘அம்மா எப்படியம்மா இருக்கே..?’

‘இருக்கேன், உன்னை நினைச்சாத்தான் எனக்குப் பெருமையாய் இருக்குடி, எப்படி இதையெல்லாம் சமாளிச்சிட்டிருக்கிறாய்?’

‘என்னம்மா, ஒரு நேரம் சாப்பிடாமல் விரதம் இருந்ததற்கு இவ்வளவு ஆரவாரமா?’

‘மூத்தபிள்ளை ஆணாகப் பிறக்கலையேன்னு அப்பாவுக்கு வருத்தம் இருந்திச்சு, ஆனால் உன்னைப் பெற்றெடுத்ததற்காக உண்மையிலே நாங்க பெருமைப் படுறோமடி’ தாயார் விசும்பும் ஓசை காதில் விழுந்தது.

‘என்னம்மா, சின்னப்பசங்கமாதிரி நீங்களும் அழுகிறீங்களா, எல்லாமே உங்க கிட்ட கற்றுக் கொண்டதுதானே, உன்னைப் போலவே இவங்களும் ரொம்ப பாசமாய் இருக்கிறாங்கம்மா, நான் எப்படியும் சமாளிச்சிடுவேன், பயப்படாதீங்க, அப்பாவைப் கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கம்மா’ என்று சொல்லி விடைபெற்றாள்.

‘அவங்கதான் அரிசி, பருப்பு எல்லாமே கொடுத்தனுப்பிறதாய் சொன்னாங்களே ஏன் வேணாம் என்று சொன்னீங்கண்ணி?’ என்றாள் நிலா.

‘உங்கண்ணா சீர்செனம் என்று கேட்டு எப்பவுமே அவங்ககிட்டக் கடமைப்படல்லை, இப்ப ஒரு நேரச்சாப்பாட்டிற்காக அவர் கடமைப்படவேணுமா நிலா?, அவருடைய நல்ல மனசு எப்பவுமே நோகக்கூடாது என்றுதான் இப்படிச் செய்தேன். நான் அப்படிச் சொன்னது தப்பா சொல்லு..! கொஞ்ச நாளில நிலைமை வழமைபோல வந்து, எல்லாம் சரியாயிடும்’ என்றாள் சுபா.

‘இப்டியும் ஒரு அண்ணி கிடைப்பாளா, உண்மையிலே அண்ணாவைவிட, நான்தான் அதிஸ்டம் செய்திருக்கிறேன்.’ என்று நிலா ஆச்சரியப்பட்டாள்.

இரண்டு மாதங்கள் மெதுவாக நகர்ந்தன. கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு, நாடு பழைய நிலைக்கு மெல்ல மெல்லத் திரும்பிக் கொண்டிருந்தது. ஆனாலும் அதன் தாக்கம் எங்கும் பிரதிபலித்தது. இப்படி ஒரு நிலைமையை மீண்டும் எதிர்கொள்ள இயலாது என்ற நிலையில் மக்கள் மிகவும் கவனமாக இருந்தார்கள்.

என்னதான் கொரோனா வைரஸ் ஒருபக்கம் பரவிக் கொண்டிருந்தாலும், இயற்கையின் நியதிகள், அதாவது மகப்பேறுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருந்தன. அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக் கடமையாற்றும் கணவன் வந்ததும் சிரித்த முகத்தோடு வரவேற்றாள் சுபா. அன்று கொஞ்சம் கஸ்டமான சிசேறியன் பிரசவம் என்பதால் ஆயுதம் பாவிக்க வேண்டிவந்தது என்றும் ஆனாலும் பிரசவம் சுகமாக நடந்தது என்றும், தாமதமாக வந்ததற்குக் காரணம் சொன்னான் டாக்டர் ரமேஷ்..

‘இப்பவே இப்படிக் களைச்சுப் போனீங்கன்னா, இன்னும் கொஞ்ச மாதத்தால என்ன செய்யப்போறீங்களோ தெரியலை’ என்றாள் சுபா.

‘ஏன் கொஞ்சமாதத்தால என்ன..?’ என்றான் ரமேஷ்.

‘எங்களைப் போலவே நிறை ஜோடிங்க இந்த கொரோனா வைரஸாலே வீட்டுக்குள்ளே பொழுது போகாமல் அடைஞ்சு கிடந்திருக்கிறாங்க. இயற்கையின் நியதி என்று ஒன்று இருக்கிறதல்லவா, அதனாலே பார்த்திட்டிருங்க, உங்க நார்சிங்ஹோமுக்கு இன்னும் ஒன்பது மாசத்தில நிறைய பேஷன்ட் வரப்போறாங்க, கொஞ்சம் எக்ஸ்ராபெட் போட்டு வைங்க, தேவைப்படலாம்’ என்றாள் சுபா

புரிந்தும், புரியாதது போல கேள்விக் குறியோடு ஆச்சரியமாக அவளைப் பார்த்தான் ரமேஷ். வெட்கப்பட்டுக் தலைகுனிந்த சுபாவின் முகத்தில் தெரிந்த தாய்மையின் பூரிப்பு அவனது விடைதெரியாக கேள்விக்குப் பதில் சொன்னது. மார்பிலே சாய்ந்த அவளை அன்போடு அணைத்து, ஆதரவாகத் தலையை வருடிவிட்டான் அப்பாவாகப் போகும் டாக்டர் ரமேஷ்.

ரமேஷ் சாப்பிட உட்கார்ந்தான். சுபா நிலாவையும் கூப்பிட்டு இருத்திப் பரிமாறினாள்.

‘நீயும் உட்கார்ந்து சாப்பிடு சுபா..!’ என்றான் ரமேஷ்

‘எனக்குப்பசிக்கலை, நீங்கசாப்பிடுங்க..!’ என்றாள் சுபா

‘நிலா என்கிட்ட எல்லாம் சொல்லிட்டாள், இங்கேபார் இப்ப உணவு தட்டுப்பாடு ஒன்றுமில்லை, உனக்காக இல்லாவிட்டாலும் நம்ம குழந்தைக்காகவாவது நீ சாப்பிடணும்’ என்றவன் அருகே நின்ற அவளுக்கும் எட்டி ஊட்டிவிட்டான்.

இதற்காகவே, கணவனின் இந்த அன்புக்காகக் காத்திருந்ததுபோல அவள் ஆசையோடு குனிந்து அதை வெட்கப்பட்டு ஏற்றுக் கொண்டாள்.

ஒன்றுமே புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலாவுக்குச் சட்டென்று பொறி தட்டியது. ‘நான் அத்தையாகப் போகிறேனா?’ என்ற மகிழ்ச்சியைத் தாங்கமுடியாமல் மெதுவாக எழுந்து அந்த இடத்தைவிட்டு நழுவினாள்.

‘ஒரு குடும்பப் பெண்ணால் என்னென்ன பாத்திரங்கள் ஏற்க முடியுமோ அதை எல்லாம் முகம் கோணாது, யாருடைய மனமும் நோகாது, சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்டு நடக்கும் எத்தனையோ அண்ணிமார்களில் எனக்குமொரு அண்ணி கிடைத்ததற்கு உண்மையிலே நான் பெருமைப்படுகின்றேன்’ என்ற மகிழ்ச்சியோடு தாயாரிடம் ஓடிப்போனவள், ‘அம்மா, ஒரு நல்ல செய்தி, நீங்க பாட்டியாகப் போறீங்க..!’ என்று அந்த நல்ல செய்தியை மகிழ்வோடு தாயாரிடம் தெரிவித்துவிட்டு அவளின் முகத்தைப் பார்த்தாள் நிலா.

‘நானா, உண்மையாவா..?’அன்றலர்ந்த தாமரைபோல் மலர்ந்து விரிந்த தாயின் முகம், வரப்போகும் அடுத்த வாரிசை நினைத்துக் கற்பனையில் மிதக்கத் தொடங்கியது!

மேசையில் இருந்த பிரேமில் இருந்த குடும்பப்படத்தில் குட்டி ரமேஷின் சிரிப்பு கண்ணுக்குள் நின்றது.

Print Friendly, PDF & Email

1 thought on “யாதுமாகி நின்றவள்..!

 1. கொரோனாவின் கொடுமையான காலத்தில், மண்ணில் மலர்ந்த மனிதத்தைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் ஆசிரியர் குரு அரவிந்தன்.
  ஒரு பெண்ணின் தியாகம், சுயமரியாதை என விழுமியங்களைத் தாங்கிய நல்ல சிறுகதை இது
  ஓரகத்தியை ஓரங்கட்டும் காலத்தில், பணக்காரக் குடும்பத்தில் செல்லப் பெண்ணாய் வளர்ந்து, காதல் மணம் புரிந்து கொண்டு வந்த பெண், எனக்குப் பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒண்ணுதான் என்று சொல்லும் அண்ணி கதா பாத்திரம் சிறப்பினும் சிறப்பு.
  ‘மூத்தபிள்ளை ஆணாகப் பிறக்கலையேன்னு அப்பாவுக்கு வருத்தம் இருந்திச்சு, ஆனால் உன்னைப் பெற்றெடுத்ததற்காக உண்மையிலே நாங்க பெருமைப் படுறோமடி’ தாயார் விசும்பலின் மூலம் ஆணும் பெண்ணும் சமம் என்பதைப் பதிவு செய்துவிட்டார் கதாசிரியர்.
  ‘உங்கண்ணா சீர்செனம் என்று கேட்டு எப்பவுமே அவங்ககிட்டக் கடமைப்படல்லை, இப்ப ஒரு நேரச்சாப்பாட்டிற்காக அவர் கடமைப்படவேணுமா நிலா?’
  கட்டிய கணவன், அவசியமில்லாமல் தற்காலிகமான சாப்பாட்டுக் கஷ்டத்துக்காக மாமனார் வீட்டில் கடமைப் பட்டுவிடக்கூடாது என்று எண்ணும் அந்த கதாபாத்திரம் மாதர் குலத்தின் உயர்வான பிரதிநி என்பதில் ஐயமில்லை.
  ‘ஒரு குடும்பப் பெண்ணால் என்னென்ன பாத்திரங்கள் ஏற்க முடியுமோ அதை எல்லாம் முகம் கோணாது, யாருடைய மனமும் நோகாது, சிரித்த முகத்தோடு ஏற்றுக்கொண்டு நடக்கும் எத்தனையோ அண்ணிமார்களில் எனக்குமொரு அண்ணி கிடைத்ததற்கு உண்மையிலே நான் பெருமைப்படுகின்றேன்’ என்று நிலா மட்டுமில்லை. இந்தக் கதையைப் படித்த ஒவ்வொருவருக்கும் இந்தப் பாத்திரத்தை எண்ணி எண்ணிப் பெருமைப் படத்தக்க பெண்ணீயப் பாத்திரம் இது.
  வாழ்த்துக்கள்
  பாராட்டுக்கள்
  ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *