(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மியூஸிக் அகாடமி திரை கீழே விழுந்த போது, அதுவரை அமைதியாய் இருந்த ஆடியன்ஸ் கூட்டம் பலமாய்க் கைதட்டியது. கௌரி மேடையை வீட்டுக் கீழே இறங்காமல் பணிவான கைகூப்பலுடன் தன் ‘குளோஸ்-அப்’ பற்களைக் காட்டிச் சிரித்தாள். அவளை தலுங்காமல் காருக்குக் கூட்டிப் போகக் காத்திருந்தான் ஸ்ரீநாத்.
அவசரம் அவசரமாகத் தன் பிளிமௌத்தில் ஏறியபோது…
‘டிங் டிங்…’ என்று அலறியது அலாரம் கடிகாரம்.
கௌரி சட்டென்று கண் விழித்தாள். கை தானாகக் கடிகாரத்தின் வாயை அடக்கியது..’இன்னும் ஐந்தே நிமிடங்கள்…’ என்று கண்ணை மூடியபோது அந்தக் கனவு மறுபடியும் மனத்தில் எழுந்தது.
கனவுகள், ஆம்! இவையெல்லாம் இரவில் – தூக்கத்தில் கனவுகள்! பகலில் விளையும் மனத் தாபங்கள் மட்டுமே!
அவசரமாய்ப் படுக்கையை விட்டு எழுந்தாள் கௌரி, ‘தலைக்கு மேல் வேலை இருக்கிறது. பள்ளிக்கூடம் போவதற்கு முன்னால்’.
அவள் சமையல் அறைக்குள் நுழைத்தாள்.
வேறு ஒருவரும் இன்னும் எழுந்திருக்கவில்லை.
காப்பீ டிகாக்க்ஷனைப் போட்டுவிட்டுக் குளிக்கப் போனவள் திரும்பி வந்து பாலை அடுப்பில் வைக்கும்போது தான் முதல் காப்பிக்குச் சந்துரு எழுந்து வந்தான். பின்னர் அவளுடைய மாமியார். ஸ்ரீநாத், வத்ஸலா என்று ஒருவர் பின் ஒருவராய் எழுந்து வர ஆரம்பித்தனர்.
அவர்களுக்கெல்லாம் காப்பியைக் கலந்து கொடுத்துவிட்டு, மாமியார் குளிக்க உதவி செய்து, சமையலை ஆரம்பித்து.. ஒவ்வொன்றாய் அவளாகச் செய்து வந்தபோது ‘யாருமே உதவிக்கு வருவதில்லையே’ என்று அவளால் ஆதங்கப்படாமல் இருக்க முடியவில்லை.
கண்கள் இரண்டும் தெரியாத மாமியாருக்கு வாய் மட்டும் நீளம் தான், எதையாவது தொணதொணத்துக் கொண்டு, செய்யும் அல்லது செய்யாத காரியங்களுக்கு ‘நொட்டை’ சொல்லிக் கொண்டிருப்பாள், கணவர் ஸ்ரீநாத்தோ பேப்பரை எடுத்து வைத்துக்கொண்டால், குளித்துச் சாப்பிட்டுவிட்டு ஆபீஸுக்குப் போகத்தான் மாடியை விட்டுக் கீழே இறங்குவான். இளம் மச்சினன் சந்துருவை வேலை வாங்க முடியுமா? கிரிக்கெட் விளையாடுவதிலும், மேட்ச் காமெண்டரி கேட்க வேண்டுமானாலும் அவனுக்கு நேரமிருக்கலாம். ஆனால் வீட்டு வேலை என்று வரும் போது. ‘நிறைய ஹோம் ஒர்க் இருக்கு மன்னி’ என்று மாடிக்குப் போய்விடுவான்.
ஏற்கனவே இரண்டு நாட்களாய்ப் பள்ளிக்கு லேட்டாகப் போகிறாள், இன்றைக்காவது நேரத்துக்குப் போகாவிட்டால், ஹெட்மிஸ்ட்ரஸ் அறைக்கு வரும்படி உத்தரவு வந்துவிடும்.
கௌரி அவசரமாய்த் தேங்காயைத் துருவ ஆரம்பித்தாள்.
”கூட்டுக்குக் கொஞசம் தேங்காய் அரைச்சுக் கொடேன்” என்று வத்சலாவைக் கேட்க முடியுமா? வீட்டுக்கு ஒரே சொலலப் பெண்! பள்ளி இறதியாண்டில் படிக்கும் அவளுக்குச் சுண்டு விரலை அசைக்கக் கூடத் தெரியாது என்று சொல்லிக் கொள்வதில் மாமியாருக்குத்தான் எவ்வளவு பெருமை! அதே கௌரி அப்படி இருந்தால், ‘நன்னாத்தான் பெண்ணை வளர்த்திருக்கா’ என்று அலளுடைய அம்மாவுக்கு அர்ச்சனை வீழாதா?
அம்மியில் தேங்காயை அரைத்து, கொத்த வரங்காய் கூட்டில் சேர்த்து அடுப்பில் வைத்தாள். ஸ்ரீநாத்தின் ஷர்ட்டுகளைச் சலவையிலிருந்து வாங்கிக் கூடத்தில் டேபிளின் மீது வைத்தாள். குழந்தை ரவியைக் குளிப்பாட்டித் தலையை வாரி விடும் போது என்றுமில்லாமல் அவன் சுரத்தில்லாமல் இருப்பது போல் தோன்றியது.
அவனுக்குச் சாதத்தைப் போட்டுப் பள்ளிக் கூட ரிக்க்ஷாவில் ஏற்றி விட்டாள். அதன் பின் ஸ்ரீநாத், சந்துரு, வத்சலா எல்லோருக்கும் பரிமாறிவிட்டுத் தானும் ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்ட போது அவளுக்கே தன் சமையல் பிடிக்கவில்லை.
‘நிச்சயம் இன்னிக்கு மாமியாரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறேன்’ என்று நினைத்துக் கொண்டவள், கூட்டில் இன்னும் கொஞ்சம் உப்பைச் சேர்த்து ‘அட்ஜஸ்ட்’ செய்தாள்.
சட்டென்று புடவையை மாற்றிக் கொண்டு தன் டிபன் பாக்ஸைப் பையில் எடுத்து வைத்துக் கொண்டாள் கெளரி.
மாமியாருக்குப் பழக்கமான இடத்தில் மத்தியானத்துக்கு வேண்டியவற்றை எடுத்து வைத்தாள்.
“உப்புமாவும், பிளாஸ்கில் காப்பியும் வச்சிருக்கேன், மா! சாயந்திரம் இன்னிக்கு பஜனை இருக்கு. அதனாலே கொஞ்சம் நாழியாகும்..” என்று விழுங்கியபடி சொன்னவள் வாசற்படியைத் தாண்டி வந்தாள்.
***
கல்யாணம் ஆவதற்கு முன் அவளுக்கென்று எத்தனையோ கனவுகள்! கௌரி பள்ளிக்கூடத்திலும். கல்லூரியிலும் சங்கீதம் படித்தாள். பெரிய பாடகியாய் வர வேண்டும் என்று எத்தனை சாதகம்?. அவையெல்லாம் இப்போது குடும்பத்தில் ‘அடிஷனல் ஸாலரி’க்குப் பள்ளிக்கூட மாணவிகளுக்குப் போதிப்பதற்கு உதவுகின்றன. விருப்பம் உள்ள மாணவிகள் வெகு பேர் தான்! இருந்தாலும் வீட்டுச் சூழ்நிலையை விட்டு, அந்நியமான மனிதர்களைத் தினம் பார்ப்பதே மனத்திற்கு உற்சாகமாக இருக்கிறது. வீட்டில் இத்தனை பொறுப்புக்கள் – இல்லாவிட்டால் இன்லும் நன்றாயிருக்கும். அடுத்த மாதம் ‘சுமித்’ வாங்க வேண்டும். இந்த இருபதாம் நூற்றாண்டில் இவ்வளவு வசதிகள் வந்தும் ஏன் இப்படி மல்லாட வேண்டும். ஆனால் முடியுமா? மாமியார் விடுவாளா?.
அவள் அவசரம் அவசரமாய் நடையை எட்டிப் போட்டு நடந்தும் பள்ளிக்கூடத்திற்குள் நுழையும் போது மணி அடித்துக்கொண்டிருந்தது.
ஸ்டாஃப் ரூமில் தன் பையை வைத்து விட்டுப் பிரார்த்தனைக்குத் தன் இடத்தில் வந்து நிற்கும்போது அவளுக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.
‘இன்றைக்கு நேரத்துக்கு வந்து விட்டேன்’ என்ற பெருமித பாவனை தானாகவே அவள் முகத்தில் தோன்றியது.
பிரார்த்தனை முடிந்தபோது பீயூன் அவள் அருகே வந்தான்.
“ஹெட்மிஸ்ட்ரஸ் அம்மா கூப்பிடறாங்க, டீச்சர்” என்றான். அவனுக்கும் அவள் டீச்சரா என்ன?-கௌரிக்குச் சிரிப்பு வந்தது.
ஹெட்மிஸ்ட்ரஸ் அவளுக்காகத் தன் அறையில் காத்திருந்தாள். லேசாப் பூசிய உடம்பு. திருமணமாகாமல் ரொம்ப வருடங்களாக இந்தப் பள்ளிக் கூடத்துக்காக உழைத்திருக்கிறாள் மிஸ் பத்மாவதி.
“குட் மார்னிங், மேடம்.” – கௌரி சற்றே அச்சத்துடன் சொன்னாள்.
‘உங்க ஸன்னோட பள்ளிக்கூடத்திலிருந்து டெலிபோன் வந்திருக்கு, உங்க பையனுக்கு நல்ல ஜுரமாம். வந்து கூட்டிக்கிட்டுப் போகச் சொன்னங்க” – அவள் சொல்லும் போதே, ‘ஏன் உன் வீட்டு விஷயங்கள் இண்டர்பியர் பண்ண விடுகிறாய்’ என்பது போல் இருந்தது ஹெட்மிஸ்ட்ரளின் பார்வை.
“ஐ ஆம் ஸாரி மேடம்! ஐவில் பீ பேக் ஸூன்” -கௌரி வெளியே வந்தாள்.
ஹேண்ட் பேக்கை மட்டும் எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வெளியே வந்த போது சூரியன் அதிகமாகச் சுட்டுக் கொண்டிருந்தான். பள்ளிக்கூடம் அவள் பின்னால் மிக அமைதியாக இருந்தது. ரவியின் நர்ஸரிக்கு இங்கிருந்து பஸ்கூடக் கிடையாது. ஒன்றரை மைலாவது நடக்க வேண்டும். ரிக்க்ஷாவையாவது கூப்பிடலாமென்றால் மர நிழலில் வழக்கமாய் ஒதுங்கியிருக்கும் ரிக்ஷாக்கள் பள்ளி நேரமாதமால் வேறிடத்துக்குப் போயிருந்தன.
அவள் மனம் படபடத்தது. “காலைலேயே உடம்பு லேசாய்க் சுட்டது போலிருந்ததே! குழந்தையைச் சரியாகக் கவனிக்கக் கூட முடியாமல் என்ன வேலை வேண்டியிருக்கிறது” – அவளுக்கு வேர்த்துக் கொட்டியது. நைலான் புடவையில் காற்றுப் புகமுடிபாமல், கால்களில் மாட்டியது.
ரவி ஒரு மேஜையின் மேல் படுத்திருத்தான், அவனைப் பார்க்கவே கொரிக்குப் பாவமாய் இருந்தது.
“நேற்று தூங்குவதற்கு முன்னால் காது வலிக்கிறது என்றானே? ஒரு வேலை இயர் இன்ஃபெக்க்ஷனாய் இருக்குமோ? ரவியின் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தாள். அனலாய்க் கொதித்தது.
“டாக்டர் கிட்டே கூட்டிக்கிட்டுப் போங்கம்மா!” – ரவியின் அருகே நின்றிருந்த ஆயா ‘அட்வைஸ்’ பண்ணினாள்.
“ஒரு ரிக்க்ஷா பார்த்துக்கிட்டு வரவா?” என்று அவள் கேட்ட போது நன்றியுடன் ஒரு ரூபாயை ஆயாவிடம் நீட்டினாள் கௌரி.
“சாப்பிடப் போகணும்மா” – ரிக்க்ஷாக்காரன் முணு முணுத்தாலும் பொறுமையாய், அவளையும் ரவியையும் ஒவ்வொரு கிளினிக்காய் அழைத்துச் சென்றான்.
“பள்ளிக்கூடத்திலிருந்து ஸ்ரீநாத்தைக் கூப்பிட மாட்டார்கள். ஏனென்றால் அவன் ரவியின் அப்பா, உடம்பு சரியில்லாவிடில் அம்மாதான் வரவேண்டும். ஏனென்றால் தாய்மை மிக உயர்ந்தது…” – கௌரி மனத்துக்குள் சிரித்துக் கொண்டாள்.
“தாய்மை!”- புல்ஷிட்! நாள் முழுதும் வீட்டை மட்டும் கவனித்துக் கொண்டு, சமைத்துக் கொண்டு குழந்தைகளை வளர்ப்பதை மட்டும் கடமையாகக் கொண்ட பெண்களுக்குத்தான் அதெல்லாம்.
வீட்டில் உள்ள மனிதர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். வெளியே வந்தும் வேலை செய்ய வேண்டும். எல்லோரிடமும் இன்முகமாய்ப் புன்னனகத்துக் கொண்டு இருக்கவேண்டும், பணமும் கொண்டுவர வேண்டும்…கௌரிக்கு வெறுப்பாய் இருந்தது.
‘இப்படி நினைப்பது தவறு’ என்று மனத்தில் தோன்றியதற்குப் பரிகாரமாக ரவியை லேசாய் அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.
***
ஒரு வழியாய் டாக்டரிடம் மருந்து வாங்கி கொண்டு வீட்டுக்குள் வரும்போது மணி ஒன்றாகி விட்டது.
‘ஹெட்மீஸ்ட்ரஸுக்குப் போன் பண்ணியாவது விஷயத்தைச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நாளைக்கு எல்லா டீச்சாகள் முன்னாலும் சட்டென்று ஏதாவது சொல்லி முகம் சிவக்க வைத்து விடுவாள்’ – ரவியை மாமியாரிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு முனைக் கடையில் போன் பண்ணிச் சொல்லிவிட்டு வந்தாள்.
“இனிமேல் இப்படி லீவு எடுக்கக் கூடாது” –ஹெட்மிஸ்ட்ரஸ் சொன்ன வார்த்தைகள் அவளுக்குப் பிடிக்கவில்லை. திருமணமாகாமல் தாயாகாமல் இருக்கும் அவளால் சுலபமாகச் சொல்ல முடிந்து விட்டது. குழந்தை என்றாள் உடம்புக்கு வராதா?
***
மாமியார் தனக்குள்ளாகவே முணு முணுத்துக் கொண்டிருந்தாள்.
‘எங்க காலத்திலே இப்படியா? நாங்கள்ளாம் குழந்தைகளை வளர்க்கலையா? ஒரு பிள்ளையை நோய் நொடி இல்லாமல் வைத்துக்கொள்ளத் தெரியவில்லை?’
கௌரி வாயை மூடிக் கொண்டு மாடிக்குப் போனாள்.
“அம்மா… எங்கேயும் போகாதேம்மா!” என்று ஏக்கமாய் ரவி அவள் கையைப் பிடித்துக்கொண்டபோது அவள் கண்களில் தாய்மையின் காரணமாய் நீர் நிரம்பியது.
அவனுக்கு மருந்தைக் கொடுத்து அருகிலேயே உட்கார்ந்து கொண்டாள். அவனுக் கென்று வாங்கியிருந்த கதைகளைப் படித்த போது அவள் கையைப் பிடித்துக்கொண்டே, ரவி உறங்கிப் போனான்.
அவள் கீழே இறங்கி வந்தாள். ‘இன்னும் இன்றைய யாகம் முடியவில்லையே!’ என்று நினைத்துக் கொண்டபடி டிபனுக்குத் தயார் செய்ய ஆரம்பித்தாள்.
“இன்னிக்குப் பொங்கலr?” – உள்ளே முதலில் நுழைந்தது சந்துருதான்.
ஸ்ரீநாத மாலையில் நேரம் கழித்துத்தான் வந்தான், சமையலறையில் கிடைத்த தனிமையில் அவள் கைகளில் அடர்த்தியாகத் தொடுத்த மல்லிகைப் பூவைக் கொடுத்தான். அவன் கண்களில் அன்றிரவுக்கான பட்டியல் தெரிந்தது.
அவன் பூவைத் தலையில் வைத்துக் கொள்ளவில்லை. கொஞ்சம் அதில் கிள்ளி வத்சலாவிடம் கொடுத்தாள். மற்றதைச் சுவாமி படத்துக்குச் சாத்தினாள்.
இரவு பதினோரு மணி வரையில் சமையல் வேலையும், நடுவே ரவியைப் பார்த்துக்கொள்வதுமாகச் சரியாய் இருந்தது.
இரண்டு நாட்களுக்கு முன் அவள் பள்ளிக் கூடத்தில் நடந்த விழாவில் துறுதுறுப்பான மாணவி சியாமளா ‘மோனோ ஆக்டிங்’ செய்தாள். இரண்டு குழந்தைகள் சண்னட. போடுவது போலவும், அம்மா வந்து சமாதானப்படுத்துவது போலவும் அவள் மட்டும் ஒருத்தியாக மூன்று பாத்திரங்களில் நடித்து அப்ளாஸ் வாங்கிக் கொண்டு போனாள்.
கௌரியின் வாழ்க்கையும் மோனோ ஆக்டிங்தானோ? மாமியாருக்கு மருமகள், ஸ்ரீநாத்தின் மனைவி; வத்சலா, சந்துருவுக்கு மன்னி, ரவிக்கு அம்மா, பள்ளியில் மாணவிகளுக்கு டீச்சர், சமையல்காரி – எல்லாப் பாத்திரங்களிலும் அவளே மாறி மாறி நடிக்க வேண்டி,யிருக்கிறது. அதுவும் திறம்படச் செய்யாவிட்டால் அவளால் நிம்மதியாய் இருக்க முடியாது.
உயர்ந்த லட்சியங்கள், கனவுகளில் மட்டும் தான்! ‘இப்படிக் குடும்ப வாழ்க்கையில் உழலும் போது நான் நானாய் ஏன் இருக்க முடியவில்லை? எனக்கென்று நேரத்தைச் செலவழித்தால் ஏன் ‘செல்ஃபிஷ்’ என்ற பட்டம் கிடைக்கிறது?’ – பொங்கிய கண்ணீரைக் கௌரி அடக்கிக் கொண்டாள்.
சமையல் அறையைச் சுத்தம் செய்து விட்டு விளக்கை அணைத்துக் கதவைத் தாளிட்டாள். வீட்டில் மற்ற எல்லோரும் படுக்கப் போய் விட்டார்கள். எப்போதும் கடைசியாய்ப் படுக்கைக்குச் செல்வதும் அவள் தான், முதலில் எழுந்திருப்பதும் அவள் தான்.
சுவாமி படத்தின் மேல் இருந்த பூவைத் தலையில் வைத்துக் கொண்டாள், ‘மனைவி’ பாத்திரம் ஏற்கத் தன்னைத் தயார் செய்து கொண்டதாய் நினைத்தபோது கௌரிக்குப் பெருமூச்சுத்தான் வந்தது. இவளைப் போல் தற்போதைய சமுதாயத்தில் எத்தனை கௌரிகள்!
அவள் மெதுவாய் மாடிப் படி ஏறினாள்.
– 06-04-1980