கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2013
பார்வையிட்டோர்: 9,864 
 

“மேகலா வரவில்லை. எதிர்பார்த்துக் காத்திருந்ததில் முக்கால் மணி நேரம் ஆபீசுக்கு லேட். வீட்டு சாவி எதிர் வீட்டில்.”

டீ ப்ரேக்கில் வாய்ஸ் பார்ட்னெர் சஞ்சனா விடம் “எக்ஸ்க்யுஸ் மீ” என்றுவிட்டு கச்சிதமாய் பிரேமிடமிருந்து வந்த டெக்ஸ்ட் மெசேஜை வாசித்தாள் வாணி.

இன்னைக்கும் மேகலா லீவா. இந்த வேலைக்காரர்கள் தொந்தரவிலிருந்து என்றுதான் விடுதலையோ என்றிருந்தது வாணிக்கு. அடக்கமான இரண்டு பெட்ரூம் ப்ளாட்; எல்லா வேலைக்கும் மெஷின். இருந்தும் கடந்த வாரம் முழுக்க மேகலா வரவேயில்லை. ஆபிஸ்

முடிந்து வீட்டிலும் போய்  வேலை செய்ய வாணி உடம்பில் தெம்பில்லை. வீட்டிற்குப் போனவுடன் அக்கடாவென சோபாவில் ஒரு கப் டீயுடன் சாய்ந்து விடுவாள். தெற்க்குப் பக்கம் கொய்யாமரத்திலிருந்து வீசுகிற காற்றும் டிவியில் மெலிதாய் சன் ம்யூசிக்குமாக பிரேம் வருகிறவரை அந்த குட்டி சுவர்க்கம் அவளுடையது மட்டுமே.

பிரேம் எட்டு மணிக்கு வீட்டில் நுழைகிறபோது பெரும்பாலும் அவள் இரவுச் சாப்பாடு முடிந்திருக்கும். சப்பாத்தியும், சப்ஜி, ஒரு பெரிய கப்பில் தயிரும் எடுத்து வைத்து விட்டு அவன் டிவியை ஆன் செய்வதற்குள் பெட்ரூமில் நுழைந்து கதவை சாத்தி விடுவாள். பிரேம் அவளுக்கு நேரெதிர். அவனுக்கு டிவி காதில் அறைகிற மாதிரி சவுண்டில் இருக்க வேண்டும்.

அவன் சாப்பிட்டு முடித்து பெட்ரூமிற்க்குள் நுழைகிற பொழுது தான் பேச்சு. ஆரம்பத்தில் இவளின் தீர்மானமான இந்த கட்டுறுதி பிரேமிற் க்குப் பிடிக்கவில்லை. ஆனால் இப்பொழுது யோசித்துப் பார்க்கிற பொழுது பிரேமின் எதிர்ர்ப்புதான் அவளை அவளின் முடிவில் உறுதியாய் இருக்க வைத்தது என்று தோன்றும். அவன் கண்டு கொள்ளாமல் விட்டிருந்தால் அந்த கவனிப்பின்மை வாணியை திரும்ப பொறுமையான நியதிக்குள் தள்ளியிருக்கும். இவளின் தன்மானப் பிடிப்பு தெரியாதவனில்லை பிரேம் ஏதோ அது ஒரு அடி சறுக்கிய தருணம். அதில் விட்டதைத்தான் இப்பொழுது பிடித்திருக்கிரானோ என்று தோன்றியது வாணிக்கு. இல்லேயனில் ஒரு சாதாரண மாமூலான சண்டைக்கு அவள் இத்தனை பெரிய 144 போடும்பொ ழுதே சொல்லியிருப்பான். ஆனால் அதற்க்கு வாணி சம்மதிதிருப்பாளா என்பது சந்தேகம்தான். வாணியைப் பொறுத்தவரை பிரே முடனான ஒவ்வொரு சண்டையிலிருந்தும் பிறந்ததுதான் அவளின் ஒவ்வொரு 144-ம்.

முன்னெல்லாம் வீட்டு சாவியை  வாசல் கார்பெட்டுக்கடியில் விட்டுச் செல்வார்கள். ஒரு முறை பிளாட் பெருக்குகிற பாட்டி அதை பெருக்கி எங்கேயோ தள்ளியதில் இருவரும் ஒரு மணி நேரம் வீட்டு வாசலில். இவள் மாற்றுச் சாவியை பேங்கிலிருந்து எடுத்து வருகிற வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. ஏன் டூப்ளிகேட் இல்லை, ஏன் சாவியை கார்பெட்டுக்கடியில் வைக்கணும் என்று பிரேம் ஒரே வாக்குவாதம். அது போல ஒரு சனிக்கிழமை பிரேம் ரொம்பவும் லேட்டாக ஆபீசிலிருந்து வர, வாணிக்கு அவர்களின் வாரஇறுதி அவுட்டிங் வீணா னதில் ஒரே வருத்தம். எல்லோரும் சர் சர்ரென காரில் போவதாய் ஹால் ஜன்னலிலிருந்து சாயங்காலம் முழுவதும் பார்த்து அலுத்துப் போனதில் வந்தவுடன் பிரேமைப் பிடித்துக் கொள்ள ஏக கடுப்பில் இருந்தவன் அவளை செமத்தியாய்  வாரி விட்டான். அதிலிருந்து சனி மற்றும் ஞாயிறு வெளியில் செல்வதற்கான கோரிக்கையுடன் பி ரேமிடத்தில்  செல்வதில்லை வாணி. லைப்ரரி, எக்சிபிஷன் என அவளே ஸ்கூட்டியில் கிளம்பி விடுவாள்.

மறுபடி இரவுச் சாப்பாடு மேஜையில் தான் சந்திப்பு. அப்பொழுதுகூட வாணி எங்கே போனாள் என்ற குறுகுறுப்பு இறுக்காது பிரேமிடம். நாள் முழுக்க தூங்கிய களைப்பு மட்டுமே தெரியும் அவன் முகத்தில். பிரேமிற்கு ஞாயிறு வெளியில் சுற்றுவது பிடிக்காது. அதனால் அவன் அவன் திரும்ப டிவி முன்னால் உட்கார இவள் புத்தகத்து டனே பெட்ரூமில்…

“இப்படி ஒரு ஆழுமை ஆகாதும்மா ரெண்டு பேருக்கும்,” என்றாள் அம்மா ஒருமுறை இங்கு வந்த பொழுது. “அதென்ன? நீ சதா புத்தகத்தோடவும் அவர் டிவி முன்னாடியும் மௌன யுத்தம் பண்றது? எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்க வேண்டியதுதானே?ஹ்ம்ம்…ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரிஆகிவிடும்..” என்று தனக்குத் தானே சமாதானமும் சொல்லிக் கொள்ளுவாள் இவர்களின் நாலு வருட போராட்டம் அறியாதவளாய். எல்லாமே சட்டென அந்த ஒரு முடிச்சில் வந்து நிற்பது குறித்து வாணிக்கு பிரமிப்பாய் இருக்கும்.

பிரேமின் பேச்சு கேட்க கூடாது என்றில்லை; வாணிக்கு அதைவிட அவளின் பிடித்தம் அதிமுக்கியமாய் இருந்தது. பிரேம் இயல்பிலேயே தனித்து வளர்ந்தவன்; தன்னிச்சை அதிகம். இவர்களின் சேர்வையில் அதனால்தான் இதனை பொறி பறக்கிறது என்பது வாணியின் தீர்மானம்.

ஆனாலும் பிரேமினால் சட்டென சண்டை மறந்து சமாதானதிற்க்குள் அடியெடுத்து வைக்க முடிவதில்லை. அவனுக்கும் இவளுக்கும் இடையிலான வாக்குவாதங்கள் பிரேமை கோபுரத்தின் மேலும் இவளை அதல பாதாளத்தில் தள்ளுவது போலும் கற்பனை செய்து கொள்வான் போல. சட்டென தண்ணீர் தெளித்த பால் போல அடங்கி அவன் உலகத்திற்குள் இவள் புக முற்படும்பொழுது அந்த உரிமையை இவளுக்கு கொடுக்க இயலாதவன் மாதிரி மென்று முழுங்குவான் பிரேம். இப்பொழுது இந்த மெசேஜ் போர் கூட நேற்றைய சண்டையின் விளைவுதான். சண்டைக்கு கொஞ்சம் நேரம் கழிந்து அவனிடம் ஏதோ கேட்க முற்பட்டபொழுது அவனின்  மௌனம் கொடு த்த வைராக்கியம். “இனி எதுவும் உன்னிடம் கேட்க மாட்டேன். மெசேஜ் பண்ணிக்கலாம்,” என்றுவிட்டாள் பட்டென.

___________________________________________________________________________

“பில்ஸ் பெய்ட்?” என்ற இவளின் கேள்விக்கு “கரண் ட் பில் கட்டியாகிவிட்டது; கேபிள் டிவி பில்லும் கூட…” “பர்நிச்சர் விற்பதற்க்கு olx-ல் போஸ்ட் செய்தாகிவிட்டது” என்ற அவனின் மெசேஜ்க்கு “டாக்டர் அப்பாய்ண்ட்மெண்ட் நாளை மறுநாள் ஓகேவா?”, “பிளாட் மெயின்டனென்ஸ் மீட்டிங் இன்று மாலை 6 மணிக்கு,” “நான் வர தாமதமாகலாம்,” என்று இவளும் மெசேஜ் செய்ய, தொடர்ந்தேத்தியாய் போன் சிணுங்கிக்கொண்டே இருக்க, வாணி ஹெட்போன்ஸ்-ஐ கழற்றிவிட்டு கைகளை நீட்டி மடக்கி மசாஜ் செய்து கொண்டாள்.

சஞ்சனாவால் அதற்குமேல் பொறுக்க முடியவில்லை. “என்னம்மா ஊடலா?” என்றாள் கள்ளச் சிரிப்புடன். இது ஊடல்தானா ? வாணியால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.

 

வாணியைப் பொறுத்த வரை ஆண்களின் உலகம் வெட்ட வெளி போன்றது. அதில் மதில் சுவர்களோ, வேகத் தடைகளோ கிடையாது. கால் போன போக்கில் அவர்கள் அதில் நடந்து செல்லலாம்.

ஆனால் பெண்களின் உலகம் உருண்டை. அவர்களின் பாதைகள் நிறைய சந்திப்புகளும், செயல்- எதிர்விளைவுகளும், முழுக்க முழுக்க தடைக் கற்களும் நிறைந்தவை. வாணிக்கு தான் இப்பொழுது ஒரு பெரிய பறைக்கருகில் மோதி நிற்பதான உணர்வு எழுந்தது.

உழைத்துக் களைத்ததில் அப்பாடா! வென்றிருக்கும் பிரேமுடன் இந்த மெசேஜ் போரை முடித்துக் கொள்ளலாம் என்று வந்தவளை வீ ட்டு வாசலில் நுழைவதற்கு முன்னேயே சிணுங்கிய மெசேஜ்தான் வரவேற்றது. “வெளியில் இருக்கிறேன்; இரவுச் சாப்பாடு வெளியில்.” யாருடன்? மீடிங்கில் என்ன சொன்னார்கள்? நம் வீட்டுக் குழாயில் தண்ணீர் உப்பு கரிப்பதைப் பற்றியும், சுவற்றில் தண்ணீர் கசிவது பற்றியும் சொன்னீர்களா? என ஐந்தாறு மெசேஜ்களுக்குப் பிறகு ஏதோ ஓரளவு வாணியால் விஷயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் அவன் விவரிக்க, விவரிக்க வாணிக்கு நிறைய கேள்விகள். ஒரு வழியாய் நிறைய கேட்க நினைத்து முடியாமல், போதும் என இவளே ஓகே என்ற ஒரு வார்த்தையுடன் யுத்தத்தை முடித்து, முகம் கழுவி, சோபாவில் சாய்ந்தாள் . பசி வயிற்றைக் கிள்ளியது. திரும்ப தனக்கு மட்டும் சப்பாத்தி மாவு பிசைய அலுப்பாய் வந்தது. மெசேஜ் அனுப்பியதில் வலது கை கட்டை விரலும், ஆட்காட்டி விரலும் சேருமிடத்தில் வலித்தது.  பிரிட்ஜ்ஜில் நேற்றைய சப்பாத்தி மற்றும் சப்ஜி மீதமிருந்தது நினைவிற்கு வந்தது. திறந்து பார்த்தாள். டப்பாதான் இருந்தது. அவள் கண்கள் எதிரே திறந்து கிடந்த ‘அவன்’ கதவில் பதிந்தது. சாப்பிடப் போவதற்குமுன் குறுஞ் சாப்பாடு வேறா ? பசியில் அழுகை வந்தது.

பிரேம் மெது கோபமாய் வந்தது. காய்ச்சாத பாலை பிரிட்ஜிலிருந்து அப்படியே சில்லென வாயில் சரித்துக் கொண்டாள்.

வீட்டில் அடர்ந்து கிடந்த அமைதியை உடைக்க டிவியை சற்று பெரிதாகவே வைத்தாள். அனால் மனது அதில் ஓடியதில் பதியவேயில்லை. சஞ்சனாவிற்கு காதல் திருமணம். அரவிந்தும் அப்படி ஒன்றும் சுலபமான கணவனில்லை. ஆனாலும் ஆபிஸ் முடிந்த கையோடு டின்னேருக்கென எங்காவது அழைத்துப் போய்விடுவான். ஒரு வயது நிர்மால்யவையும் தூக்கிக் கொண்டு சஞ்சனா போவதைப் பார்க்கையில் அவளுக்கும் தனக்குமான வித்தியாசம் பளிச்சென புரியும் வாணிக்கு. ஒரு வேளை குழைந்தை என்கிற பசை இல்லாததால்தான் வாணியும் பிரேமும் இரு வேறு திசைகளில் இழுபட்டுப் போகிறார்களோ? குழந்தையே பிறக்கவில்லைஎன்றால்? ஏதேதோ குழம்பியது மனது.

பிரேம் வீடு வந்து சேர்ந்த பொழுது மணி ஒன்றைத் தாண்டி இருக்கும். “யாரோடு டின்னெர்?” வாணி விளக்கு வெளிச்சம் தாங்காமல் கண்களைக் கசக்கியபடியே தூக்கத்திலிருந்து கேட்டாள். பதிலில்லை. கால்சராயை கழற்றி இரவு உடை மாற்றிக் கொண்டு போனுடன் குளியறையில் நுழைந்து விட்டான்.

அவன் போனவுடனே அவள் பக்கத்திலிருந்த போன் சிணுங்கியது. விஸ்வாவுடன்! பிரேமின் மெசேஜ்! ஏன் இத் தனை நேரம் என்று அவள் கேட்பதற்கு முன்னாலே க்ளைண்ட் பற்றிய விவாதம் என்றது அடுத்த மெசேஜ். வாணிக்கு போனைத் தூக்கிப் போட்டு உடைக்கலாம்போல இருந்தது.

மனதில் மோதி உடைந்த உணர்வுகளை சொல்ல வார்த்தைகளில்லை வாணிக்கு. விடிந்து ஆபிஸ் கிளம்புகிற வரையில் வாணி ஒன்றுமே பேசவில்லை. பிரேமிற்கு இருக்கவே இருக்கிறது அவன் எக்செர்சைசும், க்ரியாவும்…

“நீ வேறே அர்விந்த் மாதிரி ஒரு ஷவநிஸ்ட்டை நீ பார்த்திருக்க முடியாது. நாங்க டின்னெர் போகலை வாணி. நான் சமைக்க கத்துக்கணுமாம் அதுவரைக்கும் அவங்க அம்மா வீட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போய் அவங்ககிட்டே சமையல் கிளாஸ். நான் சமைச்சதை அப்படியே சாப்பிட்டுட்டு வருவோம். இதில் குத்தம் குறை வேறு. எங்களுக்குள்ள ஊடலும் கிடையாது; கூடலும் கிடையாது. உன் லைப் என்னுதைவிட ரொம்ப பரவாயில்லை.” வாணி கேட்ட பொழுது ஒரு சோகப்பாட்டு பாடி தீர்த்து விட்டாள் சஞ்சனா.

மறுபடி அன்று முழுக்க மெசேஜ் பரிமாரல்கள். வாணிக்கு கட்டைவிரல் நரம்பு சுருட்டிக் கொண்டு வலித்தது. அதைவிட சஞ்சனாவிடம் இவர்கள் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயம் அதிகமாய் இருந்தது

சாயங்காலம் அண்ணன் போன் செய்தான். “அம்மாவிற்கு ஷுகர் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது. மயக்கம் போட்டு விழுந்து விடுகிறாள். டாக்டர் ஒரு வாரம் ரெஸ்டில் இருக்கச் சொல்லி இருக்கிறார். சுனிதாவால் பார்க்க முடியாது. இப்போதைக்கு அவளுக்கு நைட் ஷிபிட்டிலிருந்து மாற்றம் கிடையாது..என்ன பண்ணலாம்? நான் அங்கே அனுப்பலாம் என்று நினைத்தேன்..என்ன சொல்கிறாய்?”

அம்மா வருகிறாள் என்றதும் வாணிக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி மத்தாப்பு. இவளுக்கும் பேச ஆளிருக்கும். தவிர அம்மா எப்படியானாலும் பிரேமை சரிக்கட்டி விடுவாள். யோசிக்காமல் சரி என்றாள்.

மளமளவென ஒரு அவர் பர்மிஷனில் அம்மா வருவதற்கு முன்னேயே வீடு வந்து இவர்களுக்குப் பக்கத்து பெட்ரூமில் ஒற்றைக் கட்டிலை போட்டு புது பெட்ஷீட் மாற்றினாள். அம்மாவைக் கைத்தாங்கலாய் அழைத்து வந்தான் அண்ணா. “கொஞ்சம் மாத்திரை கொடுத்து இருக்கிறார் டாக்டர். சோர்வாய் இருக்கிறாள். ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும்,” என்றான்.

பிரேம் எங்கே என்று கேட்கக்கூட ரொம்பவே சிரமபட்டாள் அம்மா. ஜாடையில் தான் பேச முடிந்தது. மருந்து மற்றும் கஞ்சி கொடுத்து படுக்க வைதபொழுது பிரேம் வந்தான்.

அவனிடம் அம்மா வந்தது பற்றி சொல்லவில்லை வாணி. சகஜமாய் ரூமிற்குள் எட்டிப் பார்த்து “எப்போ வந்தீங்க அத்தை?” என்றான். வாணி சமையற்கட்டில் இருந்தபொழுது அம்மாவிற்கு பெடஸ்டல் பேன் அருகில் கொண்டு வைத்தான்.

அவள் நைட்டி மாற்றப் போனபொழுது டிவி முன் அமர்ந்து விட்டான். வாணிக்கு அதற்க்கு மேல் சக்தியில்லை. கொஞ்ச நேரம் தூங்குகிற அம்மாவிற்குப் பக்கத்தில் அமர்ந்துவிட்டு படுக்கப் போய்விட்டாள். டிவி சத்தம் தவிர்த்து மறுபடி அமைதியில் ஆழ்ந்தது வீடு. வாணிக்கு பயித்தியம் பிடிக்கிரார்போல இருந்தது. பிரேம் இனி பேசவே மாட்டானோ என்றுகூட பயம் வந்தது.

___________________________________________________________________________

மறுநாள் மதியதிற்க்குமேல் வந்தது அந்த குறுஞ்செய்தி. சில பாதுகாப்பு காரணங்கள் குறித்து ஒருவர் ஐந்து குறுஞ்செய்திகளுக்குமேல் அனுப்பக் கூடாது- அனுப்ப முடியாது என்றாள் சஞ்சனா. “இன்று டாக்டர் அப்பைன்த்மேன் 5 மணிக்கு” இது வாணியின் முதல் மெசேஜ் பிரேமிற்கு.

“நீ முதலில் டெஸ்ட்க்குப் போ. நான் வந்து சேர்ந்து கொள்கிறேன்,” என்று அவனிடமிருந்து பதில் வந்தது. வாணி ஆஸ்பத்திரி போய் சேர்ந்தபொழுது 5.20.

5.45க்கு டாக்டர் பிரேம் வந்தாயிற்றா என்று டாக்டர் கேட்ட பொழுது வாணி அடுத்த மெசேஜ் அனுப்பினாள். “எங்கே இருக்கிறாய்?”. அவனும் சளைக்கவில்லை. “இருபது நிமிடத்தில் வந்து விடுகிறேன்” என்று பதில் அனுப்பினான். 6.10 வரையில் பார்த்து விட்டு இவளை மட்டும் உள்ளே அழைத்துப் போனார்கள். நடுவில் ஒருமுறை போனே செய்த பொழுது பிரேம் எடுக்கவில்லை. மறுபடி ஒரு மெசேஜ் அனுப்பினாள். “வழியில்,” என்றான். அதற்குள் டாக்டர் கூப்பிடுவதாக நர்ஸ் வந்து சொல்லவே என்னவோ ஏதோவென்ற பதட்டம் வந்தது. பிரேம் அப்பொழுதே வந்து விடக் கூடாதா என்றிருந்தது வாணிக்கு.

“”வாணி. நான் இப்போ உங்களுக்கு ஒரு நியூஸ் சொல்ல போறேன். அதை நீங்க நிறைய பக்குவத்தோடு எடுத்துக்கணும்…”

வாணி புரிபடாமல் டாக்டரைப் பார்த்தள்.

“இது வரையில் நீங்க பட்ட கஷ்டம் வீண்போகலை. உங்க கருப்பையில் நிறைய மாற்றம் தெரியுது; ஹா ர்மோன் ரிசல்ட் கூட ரொம்ப பாசிடிவ்வா க இருக்கு. நாம கொதுத்த மருந்து வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு,” என்றாள் டாக்டர்.

“”அப்படின்னா… ?” வாணி சந்தேகத்துடனே இழுத்தாள்.

“”அப்படின்னா நீங்க செயற்கை கருத்தரிப்புக்கு மெல்ல தயராகிட்டிருக்கீங்க.” டாக்டரின் முகம் புன்சிரிப்பில் விரிந்தது.

எங்கே போய் தொலைந்தான் இந்த பிரேம்? வாணிக்கு மனது படபடத்தது.

“பொறுமையா ஜாக்கிரதையோடு நம்பிக்கையோடவும் இருக்கணும்,” என்றுவிட்டு டாக்டர் சொன்ன அறிவுரையை கேட்டுக் கொண்டு மருந்து மாத்திரைகள் எழுதிய சீட்டுடன் வாணி ரூமைவிட்டு வெளியில் வந்தாள்.

பிரேமின் நம்பரில் பதிலில்லை. போன் அடித்துக் கொண்டேதான் இருந்தது. இனி காத்திருந்து பலனில்லை. எங்கே போனான்? டிராபிக்கில் மாட்டியிருப்பானா? ரொம்ப அந்தரங்கமான தருணங்களில் பிரேமை ஒருமையில் அழைப்பது அவனுக்கு பிடிக்கும். “இட் பீல்ஸ் வெரி செக்ஸி ,” என்பான்.

இனி அவளால் பிரேமுடன் பேசாமல் இருக்க முடியாது என்று தோன்றியது. தனக்குள்ளே சிரித்துக் கொண்டு வாணி மெதுவே பார்மசி நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

___________________________________________________________________________

 ஆட்டோவில் ஏறும் பொழுது சடசடவென தூறியது. வீட்டிற்கு வந்து சேரும் வரை பல முறை பிரேம் போனுக்கு அடித்துப் பார்த்தாள். பதிலில்லை. அண்ணாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டு உடை மாற்றி குக்கர் வைத்தாள். மழை இன்னும் நின்ற பாடில்லை. பால்கனியில் உலரப் போட்டிருந்த துணி எல்லாம் நனைந்திருந்தது. சிட்-அவுட்டில் இருந்த கம்பிக்கொடியில் அவற்றை உலர்த்தினாள். பிளட் வாசலில் குளமாய் குளிரில் தண்ணீர் தேங்கி இருந்தது. இரண்டு நாய்க் குட்டிகள் அம்மா கூப்பிடுவது கேட்டது.

மனதிற்குள் விவரிக்க இயலாத உணர்வு எரிமலை. அது என்ன உணர்வென்று வாணியால் வரையறுத்துச் சொல்ல முடியவில்லை. நிம்மதியா? களிப்பா? பிரேமைத் தவிர ஒருவரோடும் அதைப் பங்கிட்டுக் கொள்ள முடியாதென்பது மட்டும் வாணிக்குப் புரிந்தது. நாலு வருடத்திற்க்கப்புரம் இந்த முறை வெற்றியின் ஒரு சின்ன முகாந்திரம் மட்டும் கிடைத்திருக்கிறது. இதைத் தவற விடக்கூடாது என்றும்

தோன்றியது.

கஞ்சி கொடுத்தவுடன் அம்மா வெளியில் செல்ல வேண்டும் என்று ஜாடை செய்தாள். கைத்தாங்களை பிடித்து வந்து ஹாலில் உட்கார வைத்து டிவி ஆன் செய்தாள். கே டிவியில் படம் ஓடிக் கொண்டிருந்தது.

டிவி சத்தத்தையும் மீறி குகைக்குள் இருப்பது போல உணர்ந்தாள் வாணி. திரும்ப ப்றேமிர்ற்கு போனே செய்யலாம் என்று தோன்ற போனே எடுத்து வர பெட்ரூம் சென்றாள். திரும்பும் பொழுது வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஓடி வந்த பொழுது பிரேம் ஈரத்தில் சொட்டச் சொட்ட நின்றிருந்தான்.

பெட்ரூமிற்குள் நுழைந்தவனிடம் டாக்டர் ரிப்போர்ட்டை நீட்டி விட்டு டீ போடுகிற சாக்கில் சமயலறையில் நுழைந்து கொண்டாள். உணர்வுக் கலவையில் புதியதாய் ஒரு வெட்கம் வந்து சேர்ந்து கொண்டது.

டீ கொண்டு வந்த பொழுது பிரேம் பைஜாமாவில்.. டிவி ஹாலில் உட்கார்ந்திருந்தான். கைகளில் ரிப்போர்ட். அவனருகில் டீ கோப்பையை வைத்து விட்டு சென்றவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. கண்கள் ரிபோர்ட்டிலேயே பதிந்து இருந்தன.

டைனிங் டேபிள் அருகே போய் திரும்பிப் பார்த்தாள்.

“இன்னிக்கி என்ன படம் போடறான்?” என்றான் பிரேம்.

“காதலுக்கு மரியாதை,” என்றாள் வாணி அம்மா சொல்வதற்கு முன்னேயே, பிரேமின் பேச்சு வெளிப்படுத்திய நேர்மறையான அதிர்வுகளில் மிதந்து கொண்டே…

பிரேம் சேரிலிருந்து பின்நோக்கித் திரும்பி வாணியைப் பார்த்து புன்முறுவல் செய்தான்.

அப்போதைக்கு அந்த சிரிப்பு அவர்கள் பரிமாறிக் கொள்ளாத பல ஆயிரம் வார்த்தைகளுக்கு அர்த்தம் சொன்னது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *