மொட்டைமரமும் மோனத் தவமும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 8,632 
 

இலைகள் சடைத்து கம்பீரமாய் நிமிர்ந்து, நிற்கும் அழகான, அதி அற்புதமான மரங்களினிடையே, பாழாய் போன ஓர் ஒற்றை மரம் மட்டுமல்ல , பட்ட மரமும் கூட. முற்றாக, இலைகளை உதிர்த்து வெறிச்சோடிக் கிடக்கிறதே அதன் நிழல். நெருப்பு மூட்டி, குளிர் காயத் தான் இனி அது உதவும்.

புஷ்பாவிற்கு இனி அந்த பாக்கியம் கூட இல்லை. அவள் அபாக்கியவதி. சோரம் போன விழுக்காடு அவளூக்கு. பார்க்கப் போனால் அவளும் ஒரு மொட்டை மரம் தான். அதை விடக் கேவலம், தீண்டத் தகாத ஒரு கரும்புள்ளி போல அவள். எதிலே அவள் சோரம் போனாள்? உடம்பாலும் மனசாலும் தான் என்றால் அதிர்ச்சியாகி விடும். அது வாய் விட்டுச் சொல்லக் கூடிய பதிலல்ல. கேட்டால், மண்டை வெடித்து சிதறிப் போகும்.

பூஜைக்கு வந்த, ஒரு தெய்வீக மலர் அவள். அப்பா புடம் போட்டு அப்படி அவளை வளர்த்திருக்கிறார். உலகிற்கே வேத பாடம் நடத்தக் கூடிய அமானுஷ்யமான தேவதை. அவளா இன்று இப்படியொரு பட்ட மரம் போலானாள்? சீ வாழ்க்கையை நினைக்கவே வெறுப்பாக இருந்தது. அவளுக்கென்று ஒரு பாலைவன வாழ்க்கை. நெருப்பிலே கால் வைத்த மாதிரி அவளைச் சுற்றி கொலை வெறி மனிதர்கள். எல்லாம் திருமண உறவாய் வந்து சேர்ந்த பந்தம்.

எப்படியோ விலங்கு பூட்டியாயிற்று. கல்யாண விலங்கு. கொக்கி போட்டு இழுத்த, கால் விலங்கு. கல்யாணம் என்னவோ பேசித்தான் நடந்தது. இதிலே நடந்த தவறுக்கு யார் காரணம்? அப்பா அம்மாவா? பார்த்து பார்த்து செய்து வைத்தாளே அம்மா. இப்படிக் கருவறுந்து போவதற்கா? மொட்டை மரமாகி விடவா? பூத்துக் குலுங்க விடாமல் யார் அவளை இப்படி மூளியாக்கி தோலுரித்து அழகு பார்க்க வந்த அற்ப, மனிதப் பிசாசு?உன்னை வாழ விடாமல் கருவறுத்தே தீருவேன் என்ற கொலை வெறியுடன் வந்த, அன்பற்ற, கணவர்க்கு முன். அவளுடைய எல்லாமே எரிந்து போனது. கற்பும் கூடத்தான்.

எப்படி அந்தத் தவறு நேர்ந்ததென்று புரியவில்லை. கணவர் வேலைக்குப் போனபின் பிள்ளைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு, அவள் ஓய்வாக இருந்து, முற்றத்தைப் பார்த்துக் கொண்டுருந்தாள். முற்றம் இன்னும் கூட்டாமல், சருகு குவிந்து கிடந்தது. வீட்டைச் சுற்றி பெரிய வளவு, அது நிறைய மரங்கள் சூழ்ந்து , சோலையாக இருந்தது . முற்றத்திலே கிழட்டு பலா மரம் வேறு. இருந்தாலும் காய்க்கிறது பலாப் பழ வாசனை மூக்கைத் துளைத்தது. திடீரென்று வெளியே கேட் திறக்கும் சத்தம் கேட்டது. நீண்ட காலமாக, பெயிண்ட் அடிக்காததால் கறள் பிடித்து திறக்கும் போது கிறீச் சென்ற, சத்தத்துடன் அது மெல்ல முனகிற்று. கூடவே சைக்கிள் உருட்டுகிற, சத்தமும் கேட்டதால்,அவள் திடுக்கிடுப் போய் நிமிர்ந்து பார்த்தாள்.

ஆரது? என்று அவள் கேட்கும் போதே, முற்றத்தில் ஒரு நிலா சிரித்தது. அதுவும் நெருப்பு நிலா.

நான் தான் குணா, என்றபடியே முற்றத்தில் வந்து நிற்கிற அவனைப் பார்க்க அவளூக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அப்போது அவன் கேட்டான்.

என்ன புஷ்பா! முழிக்கிறியள்? என்னைத் தெரியேலையே, என்று கேட்டபடியே, சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்து பாமரத்தடியில் நிறுத்தி விட்டு, அவன் அழகாக அவளைப் பார்த்து புன்னகை செய்தான். அது கோடி, மின்னல் பிரகாசத்தோடு அவளுள் புகுந்து நிலை கொண்ட போது, அவள் கொஞ்சம் தடுமாறித்தான் போனாள். பிற ஆடவர்களைக் கண்டாலே இது வரை அவள் , நிமிர்ந்து கூட பார்த்தறியாள். படு மோசமாக தன் உணர்வுகளைக் கூட ஒவ்வொரு அணுவாக பங்கப்படுத்தி சித்திரவதை செய்யும் அன்பற்ற, கணவனைக் கூட தெய்வமாகப் பார்க்கும் கொண்ட அவளுக்கா, இன்று இந்த சறுக்கல்? சிறு சலனம் பெருந்தீயாய் வளர்கிற, மாதிரி, உள்ளே நிலை குலைந்த ஒரு தடுமாற்றம் அவளுள்.

வந்தவனுக்கு நாற்பது வயது கூட ஆகியிராது. இளமைக் களை சொட்ட அழகு வசீகரமான முகத்துடன், அவன் தோன்றினாலும் கை தேர்ந்த ஒரு ரவுடித் தனம் அவன் முகமெங்கும் வியாபித்துக் கிடப்பதாய் அவள் உணர்ந்த போதிலும், விலக முடியவில்லை, ஒரு பாச ஈர்ப்பு தானாகவே நேர அவள் கேட்டாள், நீங்கள் ஆர்?

என்ன புஷ்பா? என்னை மறந்திட்டியளே? அப்ப சின்ன வயதிலை மல்லாகம் பள்ளிக் கூடத்திலை, உங்களோடு படிச்ச ஞாபகம் எனக்கு , மட்டும் தானா? நான் குணசிங்கம் மறந்திட்டியளே?

இதைக் கேட்டபடியே, கொஞ்ச நேரம் அவள் மெளனமாய் நின்றிருந்தாள். ஒன்றும் பேசத் தோன்றாமல், அவளூக்குத் தெரியும். தோற்றமென்பது வெறும் கனவு. நடக்கிற எதுவும் நிச்சயமில்லை. துன்பம் வந்தாலும் தாங்கித் தான் தீர வேண்டும் என்ற அவளின் வைராக்கியம், அவனின் எதிர்மறை பிரசன்னத்தை எதிர்கொள்ள, நேர்ந்த தடுமாற்றத்தால், திடீரென்று, திசை மாறிப் போவதாய் , அவள் உணர்ந்தாள். எனினும் தடுக்க முடியவில்லை.

ஓ! இப்பதான் நினைச்சுப் பாக்கிறன், கட்டுவன் ரீச்சருக்கு அப்பவெல்லாம் உங்களை மிகவும் பிடிக்குமே. காலில் செம்பாட்டு மண் புழுதி பறக்க கிழிஞ்ச சேட்டு போட்டுக் கொண்டு, நீங்கள் வாறதை நான் பார்த்திருக்கிறன். உள்ளூக்கை வாங்கோ, என்றாள் அவள். கொஞ்சமும் விகல்பமில்லால் கதவைத் திறந்து விட்டுக் கொண்டே, அவன் புன்னகை செய்தபடியே, உள்ளே வந்து சேர்ந்தான்.

குடிக்க கொஞ்சம் தண்ணி தாறியளே? என்று கேட்டு விட்டு, அவனே தொடர்ந்தான். இஞ்சை நான் வந்தது பலாப்பழம் வாங்கத் தான். அதற்கு அவள் சொன்னாள்
தண்ணியென்ன, பால் தேத்தண்ணியே போட்டுத் தாறன்.

இதைக் கேட்க அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவன் குறி வைத்தால், ஒன்றும் தப்புவதில்லை. அவன் வரையில் அவள் அழகான ஒரு மான். அவளின் கணவனுக்கு இது மறை பொருள் தான். அவளின் தேகம் மட்டும் வேண்டும். இவனோ இதற்கு அப்பாலும் போயிருப்பதாய் அவள் மயங்கினாள். ஆம் அன்பு வழிபாடு ஒன்றையே பழகியிருந்த அவளுக்கு அவனும் அப்படியொருவனாகவே தோன்றியதால், நேர்ந்த, விபரீத நாடகம் தான் இது.

தேனீர் குடித்து முடிந்த, பின், அவளிடம் கத்தி வாங்கி , அவனே பலா மரத்தில் ஏறி, கயிறு கட்டி அவனேபலாப்பழத்தை இறக்குவதை அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வந்தது நல்லதாய் போயிற்று, இல்லாவிட்டால் பலாப்பழத்தை விற்பதற்கு, வண்டி தேட வேண்டும். அதுவும் கிடைக்காமல் போனால், பஸ்ஸில் ஏற்றி அவள் தான் சுன்னாகம் சந்தை வரை கொண்டு, சென்று விற்று விட்டு வர, வேண்டும். அவளுடைய காசுக் கஷ்டம் அப்படி. வருகிற சம்பளமும் ஒழுங்காய் அவள் கைக்கு வந்து சேர்வதில்லை. அதிலேயும் தில்லு முல்லு தான்.

பலாப்பழம் வாங்க வந்த குணா அதன் பிறகு அடிக்கடி அங்கு வந்து போக தலைப்பட்டான். பிறகு தான் புரிந்தது அவன் பெண் வேட்டையாடவே வந்து போகிறான் என்று. எனினும் அவன் வரவையோ, எல்லை மீறிய அவன் செயல்களையோ தடுக்க முடியதவளாய் அவள் அவனுக்கு இணங்கிப் போகும், வெறும் கைப் பொம்மையாகவே மாறிவிட்டிருந்தாள், வெகு காலம் வரை இது நீடித்தது.

இது நடக்கும் போது ஒரு நாள் அவள் கேட்டாள். நீங்கள் என்ன வேலை பாக்கிறியள்?
அதற்கு அவன் சொன்னான் உங்கடை ஆள் மாதிரி, அரச வேலை தான் கிராமத்து ஆசுபத்திரியில் ஓடலியாக இருக்கிறன். அது கூட வாற மருந்துகளாலையும் எனக்கு லாபம்.

புரியேலை… என்றாள் அவள். இதுக்கு மேலை விளக்குறது கஷ்டம், உங்களூக்கும் புரிஞ்ச அளவிலை இதைத் தான் என்னால் சொல்ல முடியும்.

போயும் போயும் பஞ்சமா பாதகளுக்கெல்லாம் அஞ்சாத, அயோக்கிய சிகாமணியான அவனைப் பார்த்தா, அவள் பெரும் காதல் வசப்பட்டு மனம் மயங்கினாள்? இந்த சறுக்கலும், விபரீத புத்தியும் எதனால் அவளூக்கு நேர்ந்தன? கணவனின் கண் மூடித்தனமான அன்பற்ற வக்கிர புத்தி காரணமாகவே அவளின் இந்த நடத்தை பிசகு, அவளைக் குழியில் தள்ளி புதைத்து விட்டிருக்கிறதே! முற்றாக கற்பு போன பின் இனியென்ன வாழ்க்கை?

அவளுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. களவுக்குத் துணிந்தவனுக்குக் கடவுளாவது மண்ணாவது. அவள் புருஷனும் இதே ரகம். தான். ஆனால், நான் அப்படி இருந்தவளில்லையே. கொண்ட கற்புக்காக உயிரையே விடத் துணிந்தவளல்லவா நான். இன்று அதுவும் காற்றில் பறக்கிறது. ஏற்கெனவே நான் மொட்டை மரம் தான். இனி மொட்டையாக, உதிர்ந்து போக என்னிடம் என்னதான் இருக்கு?

இது நடந்து ஒரு யுகமாய் விட்டது. காலாக்கினியில் எல்லாம் எரிந்து போனது. அவளும் கூடத்தான். அவள் பட்டுப் போன பற்றியெரிகிற மொட்டை மரமாகவே ஆகிப் போனாலும், ஒரு தபஸ்வினியாக சாந்த சொரூபினியாக அவள் பூண்டு அவளுள், நிலைத்து நின்று, கம்பீரமாய் ஒளி வீசிக் கொண்டிருக்கிற, அந்த மோனத் தவம் ஆன்ம ஞான விழிப்பு நிலையில் தான் கொஞ்சமும் கறைபட்டுப் போகாத, ஓர் ஆதர்ஸ் தேவதையாகவே அவள் பூண்டிருக்கிற அத் தவ இருப்பின் முன், கறைபட்டுப் போன தன் வாழ்க்கை நிழல் கூட கரை ஒதுங்கிப் போய் விட்டதாகவே, இப்போது அவள் உணர்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *