மேல்வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2013
பார்வையிட்டோர்: 9,318 
 
 

மாசாணத்துக்கு போன் செய்து சொன்னாள் சங்கரி, ‘ஏங்க அந்த மேல்வீட்டுப் பையன் தொலைஞ்சிட்டானாங்க.’

பக்கத்தில் கட்டிலில் படுத்திருந்த கெளவி, ‘நாங்கள்லாம் பட்டிக்காடு’ என்றாள்.

பதில் ஒன்றும் பேசாமல், சங்கரி மேல் வீட்டுக்குச்சென்றாள். அவளுக்கு அந்த வீட்டுக்காரம்மாவிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்ல. ‘ரொம்ப கஷ்டமா இருக்குங்க’ என்றாள். அவள் பதில் ஒன்றும் பேசாமல் அழுதாள். அவள் கணவன் கைலி, பனியனோடு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ‘எப்படிங்க தொலைஞ்சான்?’ என்றாள். அதற்கும் அவள் பதில் சொல்லாமல் அழமட்டும் செய்தாள். ‘என்ன சொல்றதுன்னே தெரியலைங்க’ என்று மீண்டும் சொன்னாள் சங்கரி. சிறிது நேரம் இருந்துவிட்டு, கீழே வந்தாள். கெளவி, ‘ரெண்டும் பதிலே பேசிருக்காதே’ என்றாள். பக்கத்து வீட்டுக்கு பாத்திரம் கழுவ வந்த வேலைக்காரி மெல்ல, ‘ரொம்ப வருத்தப்படாதீங்கக்கா, இது இப்படி நடக்கறதுதான். உங்களுக்குத்தான் புதுசு’ என்றாள். கெளவி, ‘நான் சொன்னா என்னைப் பட்டிக்காடும்பா, நீயாவது சொல்லுத்தா, நீதான் பட்டணத்துக்காரியாச்சே’ என்றாள்.

இந்த வீட்டுக்கு அவர்கள் குடிவந்து பத்து நாள்தான் ஆகிறது. சங்கரிக்கு சென்னையே பிடிபடவில்லை. சென்னை மக்களின் முக அமைப்பே அவளுக்கு விநோதமாகத் தெரிந்தது. மதுரைக்குத் தெற்கே உள்ளவர்கள் என்று தெரிந்த பின்புதான், அவர்கள் முகம் மனித முகமாகப் பட்டது. ‘போகப் போக பளகிரும்ட்டி’ என்றான் மாசாணம். ‘மொதல்ல அப்படித்தான் இருந்துச்சு, அப்புறம் பளகிட்டுன்னு நம்ம முருகன் சொன்னாம் கேட்டேல்லா.’

‘ஆமா, திருநவேலின்னா இவளுக்கு தெனம் படயல் வெப்பாவோ, இங்கன வெக்கல. பொங்கினா சோறு. எந்த ஊரா இருந்தா என்னட்டி’ என்று கெளவி சொல்லவும், சங்கரிக்கு பொத்துக்கொண்டு வந்தது. கட்டில்லயே படுத்துக் கிடந்தா வாய் இன்னும்கூட நீளும் என்று பதில் சொல்ல ஆசைப்பட்டாள். சொல்லவில்லை.

மாசாணத்துக்கு நெல்லையில் பீடி கம்பெனி ஒன்றில் சரக்கு குடௌன் மேனேஜர் வேலை. சென்னையில் நம்பிக்கையான ‘நம்ம ஊர்’ ஆள் வேண்டுமென்று மாற்றிவிட்டார்கள். இவனும் முதலாளியும் ஒரே ஜாதி என்பதால் இவன் மேல் கூடுதல் நம்பிக்கை அவருக்கு. ‘அம்மா, பொண்டாட்டி, கைக்குளந்தை சார்’ என்று சொன்னதெல்லாம் எடுபடவில்லை. முருகன் உட்பட்ட நண்பர்கள் வீடு பார்க்க, நான்கு வீடுகள் உள்ள அபார்ட்மெண்ட்டில் சென்னையில் அம்பத்தூரில் குடியேறிவிட்டார்கள்.

பக்கத்து வீட்டுக்காரி முகம் கொடுத்தே பேசவில்லை. ‘உங்க வீட்டுக்கு வர்றவங்க செருப்பு எங்க வீட்டு வாசல்ல கிடக்குது. அப்படி வராம பார்த்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டு, சே என்று உதட்டை மட்டும் அசைத்துக்கொண்டு, வீட்டுக்குள் சென்றவுடன் கதவைப் பூட்டிக்கொண்டு விட்டாள். சங்கரி என்ன பதில் சொல்கிறாள் என்றுகூட நின்று அவள் கேட்கவில்லை.

‘இவ புருசனுக்கு திருநவேலி பக்கம்தாட்டி. முருகன் சொன்னான்.’

’புருசங்காரன் நல்லவனா இருப்பாம்போல்ருக்கு, இவ மொகத்துல எப்பவும் எள்ளும் கொள்ளும்லா வெடிக்கு.’

மாடி வீட்டில் இருக்கும் மெயிண்டனென்ஸ் பாட்டி கீழே வந்து மிகவும் கறாராக, எந்த நாளெல்லாம் வீட்டைச் சுற்றிப் பெருக்கவேண்டும், மாதம் எவ்வளவு ரூபாய் தரவேண்டும், எத்தனை முறை மோட்டர் போட்டுக்கொள்ளலாம், எத்தனை பேர் வீட்டில் இருக்கலாம், அதிகம் பேரல்லாம் இங்கே வந்து தங்கக்கூடாது என்றெல்லாம் சொல்லிவிட்டுப் போனாள்.

‘மாமனார் மாமியாரை எல்லாம் கொன்னுடனும் போல’ என்றாள் சங்கரி.

‘உங்கப்பன சொல்லுதியா, அதுவும் சரிதான்’ என்று கெளவி சொல்லுவதுபோலவே அவளுக்குக் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். கெளவி அசந்து தூங்கிக்கொண்டிருந்தது. வெள்ளைச் பிளவுசுக்குள் தொங்கிய மார்பு தெரிய, வெள்ளைக் கைத்தறி சேலை விலகிக் கிடக்க, கால் மேல் கால் போட்டுக்கொண்டிருந்தது கெளவி.

‘கெளவிக்கு தூக்கத்துலயும் திமிருதான்.’

‘பாவம் மக்கா, பாட்டாளி, என்னய வளக்க அவ்ளோ பட்ருக்கா, சரி சரின்னு போ மக்கா’ என்று சொன்னான் மாசாணம்.

மாசாணம் மக்கா என்று சொன்னாளே சங்கரிக்கு உருகிப் போய்விடும்.

இந்த சென்னை வீட்டுக்கு வந்த இரண்டாம் நாள் இரவில் பதினோரு மணி வாக்கில் திடீரென்று அலறல் அழுகைச் சத்தம் கேட்டு சங்கரிக்கு பயம் வந்துவிட்டது. அடித்துப் பிடித்து மாசாணத்தை எழுப்பினாள். ‘எனக்கும் சத்தம் கேட்டது. என்னான்னு தெரியலையே’ என்றான். மீண்டும் அலறல் சத்தம். ஒரு சிறிய பையன் கத்துவது போல் கேட்டது. தொடர்ந்து அரை மணி நேரம் சத்தம். சங்கரியின் மகன் கண்ணன் எழுந்து உட்கார்ந்து அழத் துவங்கிவிட்டான். என்ன சமாதானப் படுத்தியும் அவன் உறங்கவே இல்லை.

அவனை மாசாணத்தின் கையில் கொடுத்துவிட்டு, சங்கரி ஜன்னல் கதவைத் திறந்து போய்ப் பார்த்தாள்.

வெளியில் யாரும் இல்லை. எல்லோர் வீடும் அமைதியாக இருந்தது. ஒரு அலறல் சத்தம் பற்றி யாருக்கும் சென்னையில் கவலை இல்லை.

‘ஏங்க, சத்தம் மேலேர்ந்துதான் வருது, போய்ப் பாப்போமா?’ என்றாள்.

‘வேணாம் மக்கா, பேசாம படு. நமக்கு யாரையுமே தெரியாது.’

‘இல்லைங்க, மேல ஒரு பையன் இருக்கான், அவன் அளற மாதிரிதான் இருக்கு.’

‘பையன் இருக்கானா? மாடிலயா? பாத்ததே இல்லியே.’

‘இருக்கான், நீங்க வீட்டுல எங்க இருக்கீங்க அவனைப் பாக்க. வாங்க போய் என்னான்னு பாப்போம். ரொம்ப அளற மாதிரி இருக்கு.’

லைட்டைப் போட்டுவிட்டு, கண்ணனைத் தூக்கிக்கொண்டு மாசாணமும் சங்கரியும் வெளியில் வந்தார்கள்.

கெளவி, ‘இந்த நேரத்துல எங்க கெளம்பிட்டீங்க ரெண்டு பேரும்? ரெண்டாம் ஆட்டத்துக்கா? இங்க வந்த ரெண்டாவது நாள்லயேவா? வெளங்குமா வீடு?’ என்றாள்.

‘எம்மா, சும்மா கெட. மேல பையன் ரொம்ப அலறுதான். என்னான்னு கேக்க போறேன்.’

‘ஒம் பொண்டாட்டி சொன்னாளா என்னான்னு கேப்போம்னு? அந்தால போய் படுல. அந்தப் பய ஒரு லூசு, அளுதான்’ என்றாள்.

‘எம்மா, என்னத்தயாவது சொல்லி வைக்காத.’

சங்கரி, ‘ஆமா இவுகளுக்கு எல்லாம் தெரியும்.’

‘தெரியும்ட்டி, ஒனக்குத்தான் கண்ணு பொட்டை. அவன் லூசுதாம்ட்டி. அதான் அளுதான். நீ போய்க் கேட்டு நல்லா வாங்கிட்டு வா. எய்யா, ஏம் நிக்க, போய்யா, ஒம் பொண்டாட்டி முந்தானைய பிடிச்சுக்கிட்டே போய் வாங்கி கட்டிக்கிட்டு வா.’

சங்கரி ஒன்றும் பேசாமல் மாசாணத்தைக் கையைப் பிடித்துக்கொண்டு இழுத்துக்கொண்டு போனாள். மாடிப்படி ஏறும்போது மெல்ல, ‘அத்த சரியான பட்டிக்காடு. ஒரு பையனைப் போய் லூசுங்காவளே. என்னதான் இப்படி ஒரு மனசோ’ என்றாள்.

மாடியில் மேல்வீட்டு வெளி லைட் எரிந்துகொண்டிருந்தது. உள்ளே இருந்து அலறலும் அழுகையும் வந்துகொண்டிருந்தது. வீட்டு வெளி கேட் பூட்டியிருக்க, உள்ளே கதவு திறந்து கிடந்தது. சங்கரியும் மாசாணமும் மெல்ல எட்டிப் பார்த்தார்கள். அங்கே பன்னிரண்டு வயதுச் சிறுவன் ஒருவன், அம்மணமாய் நின்றுகொண்டு ஓ என்று கத்திக்கொண்டிருந்தான். அவன் அம்மாவும் அப்பாவும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

சங்கரி மெல்ல, ‘எக்கா’ என்றாள். அவள் கூப்பிட்டது அவளுக்கே கேட்கவில்லை. பையன் இன்னும் கொஞ்சம் சத்தமாக அலறினான். இது எதுவுமே அந்தப் பையனின் அம்மாவுக்கோ அப்பாவுக்கோ கேட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். மாசாணம், ‘அண்ணாச்சி… சார்’ என்றான். ஒரு பதிலும் இல்லை. மீண்டும் அந்தப் பையன் அலறினான். அவர்கள் அசைந்ததாகக்கூடத் தெரியவில்லை.

‘சரி வாட்டி போகலாம்’ என்று திரும்பினான். தோளில் தூங்கிக் கொண்டிருந்த கண்ணன் விழித்துப் பார்த்தான். அவனைப் பார்த்ததும் அந்த பன்னிரண்டு வயதுச் சிறுவனின் அலறல் அப்படியே நின்றது. சத்தம் நின்றதைக் கவனித்த மாசாணம் மீண்டும் பையனைப் பார்க்கத் திரும்பவும், அந்தப் பையன் திரும்பவும் அலறினான். அவன் அலறல் சத்தம் கேட்டு கண்ணன் பயந்து அழுதான். அதுவரை உறங்கிக்கொண்டிருந்த அந்தப் பையனின் அம்மாவும் அப்பாவும் சட்டென்று எழுந்தார்கள். கதவருகே மாசாணமும் சங்கரியும் நிற்பதைப் பார்த்து, கதவருகே வந்து, ’என்ன’ என்று அதட்டலாய்க் கேட்டார்கள். ‘இல்லை, பையன் அலறின சத்தம் கேட்டது’ என்று சங்கரி முடிக்குமுன்னரே, ‘இப்ப ஒம் பையன் அலறினானே அதவிடவா’ என்றாள் அந்த அம்மா.

சங்கரிக்கு என்ன சொலதென்று தெரியவில்லை. அவள் கணவன், ‘சார், உங்க வீட்டு வேலையை நீங்க பாருங்க, பதினோரு மணிக்கு இப்படி மேல ஏறி வந்தீங்கன்னா என்ன அர்த்தம்? ஒரு டீசன்ஸி வேண்டாம்?’ என்றான். அவன் குடித்திருந்த சாராய நெடி மூக்கைத் துளைத்தது. ஒரு கைலி, பழுப்படைந்த போன பனியன் அணிந்திருந்தான். தலைக்கு எண்ணெய் வைத்து ஒரு மாதமாவது ஆகியிருக்கும். மாசாணம் எதுவும் பேசாமல் சங்கரியை அழைத்துக்கொண்டு, கண்ணனை சமாதானப்படுத்திக்கொண்டு கீழே வந்தான். உள்ளே நுழையவும் கெளவி, ‘என்னட்டி பட்டிக்காடா பட்டணமா’ என்றாள்.

மறுநாள் காலையில் வேலைக்காரியிடம் பேசும்போதுதான், அந்தப் பையனுக்கு மனநிலை சரியில்லை என்பது சங்கரிக்குப் புரிந்தது. என்னவோ ரொம்பவும் மனசுக்கு கஷ்டமாக இருந்தது அவளுக்கு. இது எப்படி கெளவிக்கு மொதல்லயே தெரிஞ்சது என்ற எண்ணம் வந்தது. ‘வெளவி லேசுப்பட்டவ இல்லை’ என்ற எண்ணம் வலுப்பட்டது. வேலைக்காரி சொன்னாள், ‘இந்தத் தெருவுல எல்லாரும் சொல்லிட்டாங்க, எங்க நிம்மதி போவுது, பையனை எங்கயாவது ஆஸ்பத்திரில சேருங்கன்னு. சேக்கவே மாட்டேன்னுட்டாங்க. அவங்களுக்கு சொந்த வீடா, அதனால யாராலயும் ஒண்ணும் பண்ணமுடியலை.’

‘பாவம், பையனுக்கு ஒடம்பு சரியில்லன்னா என்ன பண்ணமுடியும்?’

‘நீங்க புதுசு, இப்படித்தான் சொல்வீங்க. ஒவ்வொரு சமயம் அவன் குஞ்ச பிடிச்சுக்கிட்டு கத்துவான், அதெல்லாம் பார்த்தாதான் தெரியும் உங்களுக்கு. எதுக்கும் உங்க குழந்தைய பத்திரமா பார்த்துக்கோங்க.’

சங்கரிக்கு பக்கென்றிருந்தது.

இரண்டு நாள்களுக்கு அந்தப் பையனின் அட்டகாசம் அதிகமாக இருந்தது. மேலே இருந்து பந்து, பொம்மை, டிவி ரிமோட் என சகலத்தையும் கீழே விட்டெறிந்தான். தக்காளி, கொத்தமல்லி என எதுவும் விதிவிலக்கில்லாமல் கீழே வந்து விழுந்தது. அவனை நினைக்கும்போதெல்லாம் சங்கரிக்குப் பாவமாக இருக்கும். கீழே கிடக்கும் எல்லாவற்றையும் பொறுமையாகப் பொறுக்கி கழுவி எடுத்து வீட்டின் வெளியே ஜன்னலில் வைப்பாள். அந்தப் பையனின் அம்மா கீழே வரும்போது எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போவாள். ஒரு கையில் அந்தப் பையனைப் பிடித்திருப்பாள். பெரும்பாலும் ஒரு துணியும் இல்லாமல் அம்மணத்துடன்தான் அந்தப் பையன் வருவான். தலைமுடி சீரில்லாமல் புதர் மாதிரி மண்டிக் கிடக்கும். ஆனால் அழகான முகம். திடீரென்று அன்று தேங்க்ஸ் என்றாள் அந்தப் பையனின் அம்மா. சங்கரிக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. இதுல என்னா இருக்கு என்று சொல்வதற்குள் அவள் மாடியேறிப் போய்விட்டாள்.

மாசாணத்திடம், ‘என்ன கலரா இருக்கான் அந்தப் பையன்’ என்றாள்.

‘மெட்ராஸ்காரம்லா.’

‘ஏங்க நம்மூர்க்காரங்களுக்கு மட்டும் இந்தக் கலரா வந்துடுது’ என்று தன் கையைக் காட்டினாள்.

‘மக்கா, ஒங்கலருக்கு என்ன மக்கா. தங்கத்துக்கு ஏத்த கலருல்லா.’

‘கிண்டல் பண்ணுதியளோ?’

‘ஒண்ண கிண்டல் பண்ணுவனாட்டி?’

‘ஏங்க அந்தப் பையன் கலராத்தான் இருக்கான். ஆனா..’

‘ஆனா, என்னட்டி?’

‘இல்ல… எப்படி சொல்லண்ணு..’

’நொய் நொய்ங்காம பேசாம கெடங்கல. ஒண்ணு பெத்தாச்சுல்லா. ஒங்க தொணதொணப்புல எனக்கு தூக்கம் போயிட்டு’ என்று கெளவி சொல்லவும், அதற்குப் பின்பு சங்கரி பேசவே இல்லை.

மறுநாள் வீட்டுக்கு வெளியே வரவும், மூத்திர நாத்தம் குடலைப் பிடுங்கியது. வீட்டின் முன்பு சிமிண்ட்டுத் தரையில் மூத்திரம் பெய்ததற்கான அடையாளம் தெரிந்தது. சங்கரி முகத்தைச் சுண்டிக்கொண்டே உள்ளே வந்தாள்.

கெளவி, ‘மேலே இருந்து மூத்திரம் போறாண்ட்டி’ என்றாள்.

‘நீங்க பாத்தீங்களா?’

‘பாக்கலை, சத்தம் கேட்டேன்.’

அதற்குள் பக்கத்து வீட்டுக்காரியின் கோபமான குரல் வெளியே கேட்கத் தொடங்கியிருந்தது.

‘பக்கத்து வீட்டு பஜாரி தொடங்கிட்டா. மேல்வீட்டுக்காரி செத்தால்லா’ என்றாள் கெளவி.

சங்கரி வெளியே வந்தாள். வெளியே வரவும் பக்கத்துவீட்டுக்காரி சட்டென்று இவளைப் பார்த்து, ‘ஏன் இதையெல்லாம் நீங்க கேக்கமாட்டீங்களா? நான் மட்டுமே கேக்கணும், கடைசில கெட்ட பேரு எனக்கா’ என்றாள்.

‘இல்ல.. இப்பத்தான்..’

‘என்ன இப்பத்தான்? வந்து பார்த்தீங்கள்ல? உடனே மேல போய் அவளை சத்தம் போடவேண்டியதுதானே? அந்தப் பையனுக்கு மூளை சரியில்லைன்னா தனியா வெச்சு வளக்கணும். அவன் அங்கேர்ந்து ஒண்ணுக்கு இருக்கான். நாமல்லாம் வாழ்றதா வேண்டாமா?’

‘ஐயோ பாவம்ங்க, தெரியாமத்தானே பண்றான்.’

‘ஆஹா! வாங்கம்மா. சரி, அவன் தெரியாம பண்றான், நீங்க வந்து பார்த்துட்டு உடனே பினாயில் போட்டு கழுவ வேண்டியதுதானே? மூஞ்சிய சுண்டிக்கிட்டு உள்ள போயிட்டா நாத்தம் போயிடுமா?’

‘இல்லைங்க, நான் கழுவிவிடத்தான் போனேன்.’

‘என்ன கழுவி விடப் போனீங்க? இப்படியே போனா நான் நியூசென்ஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்துடுவேன்.’

மேல்வீட்டுக்காரி சத்தம் போட்டுக்கொண்டே கீழே வந்தாள். ‘நீ கொடு. என்னவேனா கொடு. என் பையனை லூசுன்னு சொன்னா உன் நாக்கு அழுகிடும். உம் புருஷன்னு ஒருத்தன் வர்றானே வாரத்துக்கு ஒரு தடவை மட்டும், அவன் லூசு, நீ ஒரு லூசு. இன்னொரு தடவை சொல்லு என் பையனை லூசுன்னு சொன்னா செருப்பு பிஞ்சிடும்’ என்றாள்.

கீழ்வீட்டுக்காரி ‘இவங்ககிட்டல்லாம் பேசமுடியாது’ என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள். சங்கரி வாரியலையும் பினாயில் எடுத்துக்கொண்டு வரவும், ‘யாரும் கழுவவேண்டாம், நானே கழுவிக்கறேன், என் தலையெழுத்து என்னோட இருக்கட்டும்’ என்று சொல்லிவிட்டு, ஒரு கையில் தன் பையனைப் பிடித்துகொண்டு இன்னொரு கையில் தண்ணீரை ஊற்றி, மேல் வீட்டுக்காரியே கழுவிவிட ஆரம்பித்தாள். சங்கரி எதுவும் பேசாமல் உள்ளே போனாள்.

கெளவி, ‘ஒனக்கு எதுக்குட்டி இதெல்லாம், ஒன் வேலையைப் பாரேன்’ என்றாள்.

‘பாவம் அந்த அக்கா.’

‘சரிட்டி, என்ன பண்றது. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் கேட்டுக்கோ, ஒரு பையன் இருந்தா ஒண்ணுக்கா இம்புட்டு நாறுது’ என்றாள் கெளவி.

அன்று மாசாணத்துக்கு காலை 4 மணிக்கே வேலைக்கு போகவேண்டும். சீக்கிரம் எழுந்து, மாசாணத்தை அனுப்பிவிட்டு, உள்ளே வரும்போது, மேலே இருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது. கெளவி, ‘அந்தப் பையன் திரும்ப ஒண்ணுக்கடிக்கான்’ என்றாள். சங்கரி வெளியே சென்று பார்த்தாள். அந்தப் பையன் இல்லை. அந்தப் பையனின் அப்பா. அவளைப் பார்த்துவிட்டு ஒன்றும் நடக்காதது போல் கைலியைச் சரி செய்துகொண்டு உள்ளே போய்விட்டான். சங்கரிக்கு குமட்டிக்கொண்டு வந்தது. படபடப்புடன் உள்ளே வந்து கதவைப் பூட்டிக்கொண்டாள்.

‘என்னட்டி, என்னாச்சு’ என்றாள் கெளவி.

‘கருமம், கொமட்டுது, அந்தப் பையனோட அப்பா அந்த கருமம் புடிச்சவன் ஒண்ணுக்கிருக்கான்’ என்றாள்.

‘அப்படி சொல்லுட்டி என் கண்ணுக்குட்டின்னானாம். என்னடா ஒரு பையன் ஒண்ணுக்கு இம்புட்டு நாறாதேன்னு நினைச்சேன்.’

‘இப்ப இது ரொம்ப முக்கியம்’ என்று சொல்லிவிட்டு உள்ளே போய் வாந்தி எடுக்க முயற்சி செய்து தோற்று முகத்தைக் கழுவிக்கொண்டு சங்கரி வெளியே வரவும், ‘நல்ல முழிப்புட்டி இன்னைக்கு ஒனக்கு’ என்று கெளவி சொல்லவும், அவளுக்கு ஆத்திரமாக வந்தது.

அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வரும் மாசாணம் பைக்கில் இருந்து இறங்குமுன்பே சங்கரி, ‘என்ன சொல்றதுன்னே தெரியலை, என்னல்லாமோ நடக்கு’ என்றாள்.

‘என்ன மக்கா சொல்லுத’ என்று சொல்லிக்கொண்டே அவன் வீட்டுக்குள் நுழைந்தான்.

உள்ளே நுழையவும், கட்டிலில் படுத்திருந்த கெளவி ஒருவித கிண்டல் சிரிப்போடு அந்தப் பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.

சங்கரி தன் கணவனுக்கு மட்டும் காதில் விழுமாறு, ‘கெளவிக்கு நக்கல் ஜாஸ்தி’ என்றாள்.

‘ஏட்டி சங்கரகோமதிங்கறவளே, இது 70 வருச நக்கல்ட்டி’ என்றாள் கெளவி சுவற்றைப் பார்த்துக்கொண்டே.

’நீ அவகிட்ட வாயக் கொடுக்காதேங்கேம்லா மக்கா’ என்றான் மாசாணம்.

கைகளில் உள்ள சுருக்கங்களை நீவிக்கொண்டே பல்லில்லாத வாயில் புன்னகைத்துக்கொண்டது கெளவி.

‘இப்படியெல்லாமா நடக்கும்? பேசாம நம்மூர்லயே இருந்திருக்கலாம்.’

‘நம்மூர்ல எவனும் ஒண்ணுக்கிருக்கமாட்டான். இவ கண்டா.’

‘என் வாய கெளறாதீங்க. பேசாம படுங்க.’

கெளவி நமுட்டுச் சிரிப்புடன், ‘பாக்காதத பாத்துட்டு என்னட்டி என்ன வெட்டுத’ என்றாள்.

சங்கரி மாசாணத்திடம் கோபமாகத் திரும்பி, ‘இங்க பாருங்க, பட்டிக்காட்டுலேர்ந்து உங்க அம்மா வந்திருக்கலாம். ஆனா எதுக்கெடுத்தாலும் இப்படி அசிங்கமா பேசுதது நல்லாயில்ல சொல்லிட்டேன்’ என்றாள்.

‘நாம் பட்டிக்காடு, இவ டவுணு. ரெண்டும் ஒண்ணுதாண்ட்டி’ என்றாள் கெளவி.

‘சரி விடு மக்கா, அது எதுவோ பேசிட்டுப் போகட்டும்.’

‘என் காதுல விழாட்டா நான் ஏன் கேக்கேன். இருக்கது ரெண்டு ரூமு. நாம என்ன பேசினாலும் அவங்களுக்கு கேக்கு, அவங்க என்ன பேசினாலும் என் காதுல விழுது. இந்த வீட்ட விட்டு வெளியவும் போக முடியாது. பக்கத்து வீட்டுக்காரி கொள்ளிக்காரி. மாடி வீட்டுக்காரிக்கு ஆயிரம் பிரச்சினை. அவ பேசவே மாட்டா.’

‘இவ ரொம்ப உத்தமி. மத்தவஙக எல்லாம் மோசம்.’

‘பாருங்க, இப்படித்தாம் என்னத்தயாவது பேசுதாங்க.’

‘எம்மா உசுர வாங்காத, சும்மா இரி.’

‘நீ அந்த டிவி ரிமோட்ட கொண்டா, நீங்க ரெண்டு பேரும் எக்கேடும் கெட்டுப் போங்க, நான் டிவி பாக்க போறேன். எம் பேரனை பாத்துக்கோங்க. என்ன விடுங்க’ என்று சொல்லிவிட்டு, கெளவி வேகமாக டிவி பார்க்க போனாள்.

‘சரி மக்கா, காலேலயே நல்ல தரிணம்னு சொல்லு மக்கா.’

‘அம்மா புத்தி எங்க போவும்.’

‘விடு மக்கா, நாலு விசயத்த தெரிஞ்சுக்கவேண்டாமா.’

திடீரென்று சங்கரி அழத் தொடங்கினாள்.

‘இதுக்கு ஏன் மக்கா அழுத.’

’எனக்கு இந்த வீடே பிடிக்கல.’

‘அதெல்லாம் பளகிடும்.’

‘பளகாட்டி என் மகன் ஒரு பங்களா கட்டித் தருவான் ஒனக்கு.’

‘எம்மா, நீ டிவி பாக்கேன்னு சொன்ன.’

‘அதவிட இங்க பெரிய நாடகம்லால ஓடுது.’

பதினைந்து நாள்களில் கண்ணனுக்கு வீடு பழகிவிட்டது. அங்கே இங்கே என்று ஓட ஆரம்பித்தான். வெளியில் நின்றுகொண்டு, அம்மா காணம் என்று சொல்லி உள்ளே ஓடிவருவான். கெளவி காலைக் கட்டிக்கொண்டு தூளி ஆடுவான். மெல்ல மாடிப்படி ஏறுவான். பின்பு அங்கிருந்து குதித்து வீட்டுக்குள் ஓடிவருவான். சங்கரி அடுப்பாங்கறையில் வேலையைப் பார்த்துக்கொண்டே வெளியே விளையாடும் கண்ணனையும் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருப்பாள். கெளவி திடீரென்று, ‘ஏட்டி கண்ணன் சத்தத்த காணமே, பாத்தியா’ என்பாள். கண்ணன் பக்கத்தில் எங்காவது ஒளிந்திருப்பான்.

சங்கரிக்கும் வீடு கொஞ்சம் பிடிபட்டது போலிருந்தது. பக்கத்து வீட்டுக்காரியைப் பார்த்தாலும் பார்க்காதது போலிருக்கவேண்டும். மேல் வீட்டுக்காரியைப் பார்த்தால் தான் சிரிக்கலாமா வேண்டாமா என்பதை அவள்தான் முடிவு செய்வாள். பக்கத்து வீட்டில் பாத்திரம் தேய்க்கும் பெண் பல விஷயங்களைக் கொண்டுவந்து கொட்டுவாள். மேல்வீட்டுப் பையன் அம்மணமாக அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு கீழே வருவான், மேலே போவான். கண்ணனைப் பார்த்துச் சிரிப்பான். கண்ணன் பயந்துகொண்டு வீட்டுக்குள் ஓடிவருவான். இவ்வளவுதானா மெட்ராஸ்? ரொம்பத்தான் பயந்துட்டோமோ என்று நினைத்துக்கொண்டாள் சங்கரி.

அன்று வழக்கம்போல கெளவி சத்தம் கொடுத்தாள். ‘ஏட்டி, கண்ணன் அழுகுத சத்தம் கேக்கே, எங்கட்டி அவன்?’

‘வெளியத்தான் வெளயாடிக்கிட்டு இருப்பான் பாருங்க, நான் இங்க கைச்சோலியா இருக்கேன்.’

சட்டென்று கெளவி கட்டிலிருந்து எழுந்து வந்து, ‘கைச்சோலியா, கோட்டியாட்டி ஒனக்கு. அவன் அழுகுத சத்தம் கேக்குங்கேன்’ என்று ஒரு விரட்டு விரட்டவும், சங்கரிக்கு பக்கென்று இருந்தது. ‘கண்ணா கண்ணா’ என்று சொல்லிக்கொண்டே வெளியே ஓடினாள். கெளவியும் ஓடினாள். கண்ணனின் அலறல் சத்தம் மேலே இருந்து வந்தது.

சங்கரியும் கெளவியும் மேலே ஓடினார்கள். அங்கே அந்த அம்மணமான பையன் கண்ணனைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருந்தான். அந்தப் பையன் கண்ணனை உலுக்கிக்கொண்டே ஓவென்று சத்தம் போட்டுச் சிரித்தான். கண்ணன் பயந்து போய் அலறினான். சங்கரிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

கெளவி, ‘ஐயோ எம்பிள்ளை’ என்று ஓடிச் சென்று, கண்ணனை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, அந்தப் பையனை ஒரு தள்ளு தள்ளுவிட்டாள். அந்தப் பையன் கீழே விழுந்து அழ ஆரம்பித்தான். கண்ணன் சங்கரியிடம் தாவிக்கொண்டான். ‘வாங்க அத்த கீள போயிடலாம்’ என்று சங்கரி சொல்ல, ‘என்னட்டி கீள போறது? லூச வெச்சிக்கிட்டு ஒழுங்கா குடித்தனம் பண்ணாத தாயோளிங்கள நாலு வார்த்த நாக்க பிடுங்காம கேக்கலன்னா என் ஆத்திரம் ஆறாது. பச்சப் புள்ளக்கு எதாவது ஆயிருந்தா எவ பாக்கான்? நீ பாக்கயாட்டி? இல்ல ஒங்கம்மாக்காரி பாக்காளா? புள்ள வளக்காளாம் புள்ள?’

‘யார அத்த இப்ப சொல்லுதீங்க?’

‘கொளுப்பெடுத்த எல்லாத்தயும்தாட்டி சொல்லுதேன். எனக்கு எவகிட்டட்டி பயம்? புருசங்கூட கொஞ்சதுக்கு நேரம் இருக்குல்லாட்டி, புள்ளைங்கள பாக்க ஒங்களுக்கெல்லாம் வலிக்கோங்கேன்.’

கெளவியின் சத்தம் கேட்டு, பாத்ரூமுக்குள் இருந்து அந்தப் பையனின் அம்மா வெளியில் வரவும், சங்கரி பதில் பேசாமல் கீழே வந்துவிட்டாள். கெளவியும் அந்த மேல் வீட்டுக்காரியும் மாறி மாறி பேசிக்கொண்டார்கள். கெளவி கடுமையாகச் சபித்துவிட்டு கீழே வந்தாள். ‘லூசப் பெத்தா தனியா வெச்சு வளக்கணும். இப்படியா ஊருக்காரங்க உசுர எடுக்கது? எங்க ஊரா இருந்திருக்கணும், சிலுப்பிருப்பேன் சிலுப்பி’ என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள்.

சங்கரி, ‘பாவம் அத்த, அந்தப் பையனுக்கு என்ன தெரியும்?’

‘என்னட்டி பாவம், பெரிய பாவங்க. பையன் சரியில்லன்னா தனியா வெச்சு வள. இல்ல அப்பா அம்மாவுக்கு புத்தி வேணும். இல்ல, ஒனக்காவது நம்ம புள்ளய பாத்துக்கிடணும்னு நெனப்பு வேணும். இதென்னட்டி பொளப்பு? பொம்பளயும் ஆம்பளயும் குடிச்சுட்டு கூத்தடிச்சா புள்ள இப்படித்தான் இருக்கும்’ என்றாள். சங்கரிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ‘ஆனாலும் அந்தப் பையன் பாவம் அத்த’ என்று மட்டும் மீண்டும் சொன்னாள்.

மறுநாள் காலை, மேல் வீட்டுக்காரியும் அவள் கணவனும் அந்தப் பையனைக் கூட்டிக்கொண்டு கீழே சங்கரி வீட்டுக்கு வந்தார்கள். கெளவி அவர்களை வாங்க வாங்க என்று வரவேற்றாள். ஆச்சரியமாக குடிவாடை வரவில்லையே என்று சங்கரி நினைத்துக்கொண்டு, வாங்க என்றாள்.

பையன் தலை நன்றாக வாரப்பட்டிருந்தது. அந்தப் பையனின் அப்பாவும் அம்மாவும்கூட மிக நன்றாக உடை உடுத்திக்கொண்டிருந்தார்கள். எப்போதும் அந்தப் பையனின் அப்பாவை கைலி, பனியனில்தான் பார்த்து சங்கரிக்குப் பழக்கம். இன்று நல்ல வேட்டி உடுத்தி சட்டை போட்டுக்கொண்டு வரவும் அவளுக்கு சட்டென்று ஆள் பிடிபடவே இல்லை. கெளவி வாங்க வாங்க என்று சொல்லவும்தான் அவளுக்கு உரைத்தது.

மாசாணம் உள்ளே இருந்து வெளியே வந்தான். மேல்வீட்டுக்காரி மாசாணத்தைப் பார்த்ததும், ‘தப்பா நினைச்சுக்காதீங்க சார், நேத்து பையன் கொஞ்சம் வயலண்ட் ஆகிட்டான். ஆனா சின்ன பசங்களை ஒண்ணும் பண்ணமாட்டான். அவனுக்கு சின்ன பசங்கன்னா ரொம்ப பிடிக்கும். அதுவும் உங்க பையன்னா ரொம்பவுமே பிடிக்கும். உங்க பையனைப் பார்த்தாலே சிரிப்பான். அதான் விளையாண்டான். ஆனா உங்க பையனுக்கு புரியாதா, அவன் பயந்துட்டான். உங்க வீட்டுலயும் பயந்துட்டாங்க’ என்றாள். ‘பரவாயில்லீங்க, ஆனா சங்கரி சொல்லவும் பக்குன்னுதான் எனக்கும் இருந்தது’ என்றான். அந்தப் பையனின் அப்பா, ‘ஸாரி சார்’ என்றான்.

கெளவி, ‘டாக்டர்ட்டலாம் காமிக்கலையாம்மா’ என்றாள்.

‘எல்லாம் காமிக்கறோம், ஒண்ணும் சரிப்பட்டு வரலை’ என்றாள்.

‘எங்கூர்ல குத்தாலத்துல குளிப்பாட்டும்மா, சரியாகிடும்.’

‘ஹ்ம். எல்லாம் பார்த்தாச்சு பாட்டி. இப்பக்கூட நாங்க குணசீலத்துக்குத்தான் கூட்டிக்கிட்டு போறோம், சொல்லிட்டுப் போகத்தான் வந்தோம்.’ என்றாள். ‘சரி, பார்த்து போய்ட்டு வாங்க’ என்றாள் கெளவி.

’கண்ணன் நல்லா இருக்கானா?’ ‘

உள்ள தூங்கிக்கிட்டு இருககான்.’

‘சரிம்மா நாங்க வர்றோம்.’

தன் மகனிடம், ‘பாட்டிக்கு டாட்டா சொல்லு’ என்றாள். அவன் உள்ளே கண்ணன் தூங்கிக்கொண்டிருக்கும் அறையையே எட்டி எட்டிப் பார்த்தான். அவனை இழுத்துக்கொண்டு அவர்கள் வெளியே சென்றார்கள்.

அவர்கள் போகவும் கெளவி, ‘பையன் தொலைஞ்சிடக்கூடாது’ என்று முணுமுணுத்தாள்.

’என்ன சொல்றீங்கன்னு சத்தமாத்தான் சொல்லுங்களேன்’ என்றாள் சங்கரி.

‘நான் பட்டிக்காடுன்னு எனக்கே சொல்லிக்கிடுதேன்’ என்றாள் கெளவி.

– ஆகஸ்ட் 2013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *