மெத்தென்று ஒரு முத்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2021
பார்வையிட்டோர்: 5,519 
 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோமதி ஜன்னலண்டை உட்கார்ந்தபடி, வெளியே மருதாணி மரக்கிளையில் இரண்டு காகங்கள், ஒன்றை யொன்று கொத்திக் கொண்டு சண்டையிடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மாலை மஞ்சள் வெய்யில் அவளுடைய பூனை விழி களில் பட்டு, விழிகள் எரி திரிகள் ஆயின. வெய்யில் இன்னும் சற்று நேரத்தில் முகத்தை விட்டு நகர்ந்ததும், அந்த ‘ஜாலக்’ மாறிவிடும். மனம், அதற்கு மறுசுபாவமாவே போய்விட்ட இறுக்கம் தளர்ந்து, சற்று லேசாவே தற்போது இருந்தது. வானீலத்தில் மேகங்கள் இங்குமங்குமாய்ப் பல வர்ணங்களில் சிறுசிறு குன்றுகள் கட்டியிருந்தன. அவை களும் இன்னும் சற்று நேரத்தில் இருட்டின் ஒரே மெழுகல் ஆகிவிடும். அவளை அறியாமலே, இடது கை இடது கன்னத்தைத் தடவிக் கொண்டது.

“கோமு, டிபன் சாப்பிடவாயேண்டி, ஆறிப் போறது.” அம்மாவின் குரல் அசக்தமாய் கீழிருந்து எட்டிற்று. இது நாலாந் தடவை. மெனக்கெட்டு மாடி அடிக்கு வந்தே கூப்பிடறா. இப்படிப் புலம்பிப் புலம்பி , “எக்கேடு கெட்டுப் போங்கோடி, உங்களோட மல்லாட முடியல்லே. அவளை அட்ரெஸ்ஸே காணோம். இவள் என்னடான்னா இருந்துண்டே, பதில் கூடச் சொல்ல முடியாமல், அந்த அழும்பே!” என்று அலுத்து அடங்கிவிடுவாள்.

ஆமாம், வீட்டில் அப்பாவைத் தவிர ஆண்பிள்ளை கிடையாது. வீட்டில் தடித்தடியா ரெண்டு பெண்கள் இருக்கறதுக்கு அம்மாவுக்கு எவ்வளவோ ஒத்தாசையா இருக்கலாம். இந்த வயசில், இந்த உடம்பில் வேளைக்கொரு கோளாறுடன் அம்மாவே ஏன் சமைக்கணும்? முறை போட்டுக் கொண்டு நாங்கள் சமைக்கக் கூடாதா? சமையல் ஒண்ணுதானா ? சுத்துக் காரியம் இல்லியா? தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சலாம். கீதா கடை கண்ணிக்குப் போகலாம். நான் போவது நினைக்க முடியாத காரியம். வேலைக் காரியை அவள் வரும் ஒழுங்குக்கு ஒரு வழியா நிறுத்திட்டுப் பற்றுப் பாத்திரம் தேய்க்கலாம்.

இப்படியெல்லாம் நினைக்கும் போது, நன்னாத்தா னிருக்கு. மனசுக்கு ஒரு சுகம்கூட இருக்கு. ஆனால் எண்ணு வதில் கால் பாகமேனும் செயல்னு வரும்போதுதான் உடலின் வணங்காத்தனம் தெரியறது. மனம் அலுக்கறது. அது கூட இப்போ நின்னு போச்சு . அத்தனையும் அம்மா தலையில் தான்னு விடிஞ்சு போச்சு . ஆனால் அவளும் செய்ய விடமாட்டாள். திட்டிண்டேனும் அவளே செஞ்சுண் பாத்தான் அவளுக்குத் திருப்தி.

நானாவது நினைக்கிறேன். கீதா அதுகூட மாட்டாள். வீட்டில் இல்லாத வேளை போக மிச்சத்துக்கு எப்படித்தான் அலுக்காமல் கண்ணாடி எதிரில் அத்தனை நேரம் உட் காந்துண்டு இருக்க முடியறதோ? அதுவும் அப்பாவை நச்சரிச்சு, அந்த ஆள் உயர பெல்ஜியம் வீட்டுக்கு வந்ததி லிருந்து. அதை, அந்த அறையையே அவளே மானியம் எடுத்துக் கொண்டுவிட்டாள். அதன் எதிரே நின்னுண்டு அப்படித் திரும்பிப் பார்த்துக்கறதும், இப்படி இடுப்பை வளைக்கறதும், புருவத்தை நெரிக்கறதும், உதட்டைக் கோணிக்கறதும் – அவள் சேஷ்டைகள் அவளுக்குத்தான் ப்ரீதி.

ஒருமுறை, அதுபற்றி அவளிடம் சொன்னபோது, ‘நீ இருக்கற லக்ஷணத்துக்கு உனக்கு அசூயை வேறேயா?’ என்று விட்டாள். துடிச்சுப் போயிட்டேன். அம்பு என்பது இதுதானா? கத்தியை விடக் கொடுமையாயிருக்கே! என் மௌனமான வேதனையைப் பார்த்து அவளே பயந்துட்டா. ‘உன்னை நான் அப்படிச் சொல்லியிருக்கப்படாதோடி?’ என்று ஆயிரம் கேட்டுண்டாலும், அவளுடன் அந்த ஓர் அனுபவம் போதும்னு ஆயிடுத்து. அவள் வழிக்கே போவ தில்லை. அழகு படைச்சவாளுக்கே நாக்கில் நரம்பு இருக் காதோ? ஆனால் அவளைக் குற்றம் சொல்ல நான் யார்?

ஆனால் கோமதி, சிலையடித்த மாதிரி இப்போது உட்கார்ந்திருந்த நிலையில் அவள் அழகு கடைந்தெடுத்த சாஸ்திரியமாகவே (classic) இருந்தது. நூல் பிடித்த மாதிரி, அந்த நெற்றிக் கோடின் வளைவும், செதுக்கிய மூக்கும் உதடுகளும் சற்றுக்கூரிய மோவாயும் – அந்த முகமே மேகத் தினின்று பிதுங்கியது போன்று, கூந்தலின் அடர்ந்த இருட்டும் – அறை உள்ளே நுழைந்தவர் பிரமித்துப் போவர். ஒவ்வொரு புகைப்படக்காரனுக்கும் ஆனந்தம் அந்த profile.

மாடி ஏறிவரும் சப்தம். யார் ? அப்பாதான்.

“என்னப்பா, இன்னிக்கு சுருக்க?”

சொக்காயைக் கழற்றி மாட்டிவிட்டு, பக்கத்து நாற்காலி யில் உட்கார்ந்தார்.

“லேசாத் தலைவலி. கேட்டுண்டு வந்துட்டேன். நீ எப்படி இருக்கே?”

“எனக்கென்ன கேடு?”

கோமதியின் பார்வை, அப்பா மேல் கனிவுடன் தங்கிற்று. அப்பாவோடு இருக்கும் போது தன் இதயச் சுவர்களில் ‘பால்’ அடிக்கிற மாதிரி தோன்றும். அதன் ஆறுதலை வேறெப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. அப்பா கிடைக்க, அம்மா கொடுத்து வெச்சிருக்கணும். எனக்கும் அகமுடையான் அப்பா மாதிரி கிடைக்க மாட்டானா என்று அவள் எண்ணியதுண்டு. பிள்ளையார் தன் அம்மா மாதிரி பெண்பாட்டிக்குக் காத்துண்டு தெருத் தெருவா உட்கார்ந்துண்டில்லையா? அது போல, நான் தெருத்தெருவா நிக்க முடியுமா! நின்னாலும் எனக்குக் கிடைப்பானா?

“என்ன கண் தளும்பறது. வாய் புன்னகை பூக்கறது. அதென்ன காம்பினேஷன்?”

“இல்லேப்பா நெனச்சுண்டேன். உங்களுக்குக் கோவமே வராதா?”

“கோவமா, அதென்ன வீசை என்ன விலை?”

“வீசை?”

“ஓ, அது எங்கள் காலத்து எடை. சரி கிலோ என்ன விலை?”

அம்மா காப்பியுடன் வந்து, மேஜை மீது வைத்துவிட்டு, அவளை முறைத்துவிட்டுச் சென்றாள்.

அப்பா, கொஞ்சம் டபராவில் ஊற்றி அவளிடம் கொடுத்தார். இது அவர்களிடையே நித்தியப்படி சடங்காவே ஆகிவிட்டது. அப்பா அவளுக்குத் ‘தோஸ்து!’ அப்பா தன் காப்பியைப் பருகிக் கொண்டே –

“கோபத்தை வெச்சுண்டு என்னம்மா பண்றது? அதுவும் இந்த வயசில்? ஆனால் இப்பத்தான் கோபம் அதிகமா வரது. எல்லாம் கையாலாகாத்தனம்தான். தோள் கொடுக்கப் புள்ளையிருக்கானா? இந்தக் காலத்துப் பசங்க தோள் தூக்கத்தான் காத்திருக்கான்கள். எல்லாத்துக்கும் கொடுப்பனை வேணும்.

இப்படி நமுட்டு விஷமமா, அத்தோடு லேசா விசனமும் விரக்தியும் குழைந்திருந்தால் அப்பா ‘மூடு’லே இருக்கார்னு அர்த்தம்.

மருதாணிக் கிளைக்கப்பால் சிந்தித்துக்கொண்டு, அப்பா தனக்குத்தானே போல் –

“தன்னை அறையப் போகும் சிலுவையை யேசுநாதர் தாங்கிச் சென்றது, என் மனசை மிக்க ஈர்த்த சம்பவம். நாளுக்கு நாள் அதன் தாத்பர்யம் விரிய விரிய, ஆச்சர்யமா யிருக்கிறது. அவனவனுக்கு அவனுடைய சிலுவை. ஏன் உன் சிலுவையை நீ தாங்கிண்டு இல்லையா?” அவர் கண்கள் அவள் மேல் பால் சுரந்தன. “கோமு , உன்னைப் பத்தி நான் என்ன நெனச்சிண்டிருக்கேன்னு தெரியுமா? வேண்டாம். சொன்னால் சென்டிமெண்டலாக் கொழ கொழத்துப் போயிடும். உன் சிலுவை மஹத்தானது. சரி, கீதா எங்கே?”

கையை விரித்தாள். உண்மையிலேயே அவளுக்கு என்ன தெரியும்?

யோசனையில் ஆழ்ந்தார். “கீதா கண்ணில் படும்படி, வீட்டுள் இன்னும் கொஞ்சம் இருந்தால் நல்லது. நீ சற்று வெளியே போனால் நல்லது. சூரிய வெளிச்சம் மேலே பட வேண்டாமா?”

“சூரிய வெளிச்சம் என்மேல் படாமலா இருக்கேன்? அதான் தோட்டம் இருக்கேப்பா?”

“You fool! நான் இந்தச் சூரியனைச் சொல்லல்லே. சரி, சந்தியாவந்தனம் பண்ணனும்.”

அப்பா கீழே போய் வெகு நேரமாயும், கோமதி நிலை கலையாமல் உட்கார்ந்திருந்தாள்.

மருதாணிக் கிளையில் அணில்கள் ஓடிப் பிடித்து விளையாடின. அவை உச்சரித்த சப்தங்கள் ‘கிண் கிண்’ என இனிய உலோக ஓசையில் தெறித்தன. ஆகாயத்தில் ஒரு பறவைக் கூட்டம் அணிவகுத்துச் சென்றது. அறையுள், சுவர்களின் உயரங்களில், கூரை விட்டத்தில் மின்விசிறி மேல், இருள் பந்துகள் தேங்க ஆரம்பித்துவிட்டன.

‘குபீர்’ என ஏதோ மலர் மணம். மாலை மலர்ந்த பூ. மனம் லேசான போதையில் அமிழ்ந்தது. அதன் சோம்பிய ஓட்டத்தில் அவள் ஒரு காயிதக் கப்பலாய், அடிவாரத்தில் தவழ்ந்த அலைக்கு அலை ஏதேதோ எண்ணங்களை ஏற்றிக் கொண்டு மிதந்தாள். கோமதி சுகானுபவத்தில் ஆழ்ந்தாள்.

அப்பா மஹான். இந்த வயதிலும் பொழுதை வீணாக்க வில்லை. சர்க்காரிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் ஒரு மர வியாபாரியிடம் கணக்குப் பார்க்கிறார். நாள், கிழமை நல்லது பொல்லாது கிடையாது. பிழிந்து எடுக்கிறான். வேலைக்குப் போகாமல் முடியாது. குடும்பம் நடத்தப் போதாது. குதிராட்டம் இரண்டு பெண்கள் இருக்கோமே!

அவளுக்கு வேலைக்குப் போக ஆசைதான். ஆனால் யார் கொடுப்பார்? வேணும்னா பீடி சுற்றலாம். சிரிப்பு வந்தது. அதற்கும் அவள் தயார்தான். விடமாட்டாளே! படிப்பு எட்டாம் வகுப்புடன் நின்று விட்டது. சக மாணவிகளின் கொடுமை, அனுதாபம் – அந்த அனுதாபத்துக்குக் கொடுமையையே தாங்கிக்கலாம் – புறங்கைக்குப் பின்னால் மறைத்த சிரிப்பு – அவளை ஒதுக்கல் தாக்குப் பிடிக்க முடிய வில்லை. பள்ளி நின்றுவிட்டாள். இப்ப நினைத்துப் பார்க்கையில், பாதிக்கு மேல் தானாக நினைத்துக் கொண்டதாத்தான் தெரியறது. ஆனால் தாழ்வு மனப்பான்மை ஆழமாக வேரோடி விட்டது. இனி அதைத் தகர்க்க முடியாது.

கொஞ்ச நாளாவே, ஏதோ ஒன்று அவளைத் தன்னுள் இழுத்துக் கொண்டிருப்பதாக உணர்வு. நாளுக்கு இம்மி, அந்த உறையுள் புதைந்து, கடைசியில் ஒருநாள் அது என் மேல் மூடிவிடும். மார்பில் ஏதோ கல்லாய் கனத்தது. ஆனால் உடல் கோளாறு இல்லை , நிச்சயம்.

மனப்பாரம்.

கீதா, +2வை எட்டிப் பிடித்திருந்தாள். அவள் பார்வையாயிருப்பதற்கு நிச்சயமா வேலை கிடைக்கும். ஆஹா ஓஹோன்னு இல்லாட்டாலும் கிடைக்கும். ஆனால் போக மாட்டாளே! அவளுக்கு எங்கே நேரம்? அவளைச் சுற்றித் தான் ஈக்கூட்டம் ஒன்று மொய்த்துக் கொண்டிருக்கிறதே! பெண் ஈக்களையும் சேர்த்துத்தான்.

“கீதா, நீ பண்றது ஒண்ணும் நன்னாயில்லே. நெருப்போடு விளையாடறே!”

“இதென்னம்மா, நீ ஒருத்தியே போதும் போல இருக்கே! இவாளை நான் வரச் சொன்னேனா, என்னையே சுத்திண்டிருக்கச் சொன்னேனா?”

“ஓஹோ ! உன் இமைகள் படபடக்கறதும், கன்னம் சிரிக்கிறது, விரல்கள் திடீர் திடீர் கோத்துக்கறதும், அபிநயம் காட்டறதும், பூமியைக் கால் தட்டறதும் – நீ இன்னு வாய் திறந்து முத்து மொழியணுமா ‘வாங்கோ வாங்கோ’ன்னு!”

“அம்மாவைப் பாரேன்!” கீதா தட்டாமாலை சுற்றிச் சந்தோஷத்தில் கொக்கரித்தாள். ” இதனால் என் கற்பு எரிஞ்சு போயிடுத்தா அம்மா?”

“மூடு வாயை!”

கீதா சற்றுப் பின்வாங்கினாள். அம்மாவுக்கு இத்தனை கோபம் வந்து அவளே பார்த்ததில்லை. “கற்புன்னா உனக்கு அத்தனை கிள்ளுக்கீரையாப் போச்சா? அதைப் பத்தி உனக்கு என்னடி தெரியும்?”

“தெரிஞ்சுதான் பேசறேன். என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத் தெரியும். இது பட்டணம் அம்மா, கிராமம் இல்லை. கிராமமோ வம்புக் கூடமோ! அங்கேதான் எதுக்கும் யார் மேலும் சந்தேகம். அந்த பாஷையைத்தான் நீ பேசறே.”

கோமதி கீதாவை நம்பினாள். ஆம், கீதாவுக்குத் தன்னைக் காப்பாத்திக்கத் தெரியும். ஆமா, கீதாவுக்கு எதிலுமே ஆழமான பற்று கிடையாது. அவளுக்கு எல்லாமே பொழுதுபோக்கு. மனசை பொம்மை மாதிரிக் கீழே போட்டு உடைத்துவிடுவாள். எதுவுமே don’t care. நன்னா உடுத்தணும், நன்னா சுத்தணும். அரட்டை அடிக்கணும். எல்லாரையும் பயன்படுத்திக்கணும். தர்பார் நடத்தணும். ஆமாம், கீதா சொன்னமாதிரி இது பட்டணம்.

“Hullo Madras!”

“Hullo கீதா!”

“ஹாய், வினோத்!”

வினோத், விக்ரம், விகாஸ், என்ன வினோதமான பெயர்கள். மாலைப் பொழுதுக்கென்று ‘ஹாய், ஹுய், யா, யாச்-‘ இப்படி ஒரு பாஷை எனின் சரளமாய் அதில் கீதா நீந்துகிறாள் ! கீதா பாராட்டுக்குரியவள்தான். பருவத்தின் அனுகூலங்கள் அவளிடம் செறிந்திருக்கின்றன. அதை அவள் உணர்ந்து, அவைகளை நன்கு பயன்படுத்துகிறாள். வாழ்க்கையை அனுபவிக்கிறாள். அனுபவிக்க அவளுக்கு த்ராணியிருக்கு. எனக்கு இல்லையென்றால் அவளைப் பார்த்துப் பொறாமைப்படுவதில் என்ன அர்த்தம்? ஆம். அப்பட்டமாய், அம்மணமாப் பார்த்தால் பொறாமையில்லாமல் பின் என்ன? அம்மணம் என்ற சொல் மனதில் தோன்றினதும், வெட்கத்தில் கன்னங்கள் குறுகுறுத்தன. இடது கன்னத்தைத் தடவிக் கொண்டாள்.

ஒருநாள். நள்ளிரவில் விழித்துக் கொண்டாள். அம்மா வும் அப்பாவும் பேசிண்டிருக்கா. (கண்ணாடி அறை கீதாவின் சயனக்ரஹம்.)

“இதோ பாருங்கோ எனக்குத் தூக்கமே ஒரு மாஸமாயில்லை. கீதாவைப் பத்தி வயத்தில் நெருப்பைக் கட்டிண்டிருக்கேன். ஒரு கட்டுக்கும் அடங்க மாட்டேங்கறா. எங்களுக்கிடையே பகையே வந்தாச்சு.”

“அலமு, நீ அவளை நம்பணும். உலகத்தை நம்பணும். நீ நினைக்கிற மாதிரி உலகம் அத்தனை கெட்டதில்லை.”

“நீங்கள் நம்பிண்டிருங்கோ. உங்கள் தலையில் நீங்களே கை வெச்சுண்டு ஒரு நாள் பஸ்மாசூரம் ஆறப்போத்தான் உங்களுக்குத் தெரியப் போறது. அவளைக் கையைப் புடிச்சு யாரிடமேனும் கொடுத்துட்டாத்தான் எனக்கு நிம்மதி. அங்கே எக்கேடு கெட்டுப் போகட்டும், தாலியே கவசம்னு.”

“இப்போ என்ன உன் எண்ணம் நன்னாயிருக்கா?” அப்பா சிரித்தார். “அங்கே குடி கெட்டாலும் நீ தப்பிச்சுக்கணும்.”

“ஆமா, அப்படித்தான் வெச்சுக்கோங்களேன்! என் கேள்விக்கென்ன பதில் சொல்றேள்?”

“என்ன கேள்வி?”

“அவளுக்கு சீக்கிரம் கல்யாணம் முடிச்சாகணும்.”

“என்ன பேத்தறே, அவளுக்கு முன்னாலே ஒருத்தியிருக்காளே!”

தயக்கம். உடனே அம்மா: “அவளைப் பத்தி என்ன சொல்லச் சொல்றேன்? அவள் அவ்வளவுதான்.”

“என்னடி சொல்றே?” அப்பாவின் குரல் வெகுண்டெழுந்தது.

“இதோ பாருங்கோ. நம்மையே இன்னும் ஏமாத்திண்டிருக்க வேண்டாம். கோமதியே இப்போ தன்னைப் பத்தித் தெரிஞ்சுண்டிருப்பாள். இந்தமாதிரி கல்யாணமே ஆகாதவா, கன்னியாவே காலமாயிடறவாளை – இவாள் விஷ்ணுக்கு நாச்சியார்னு பொம்மனாட்டிகளுக்குள் ஒரு சொல் உண்டு. ஆண்டாள் மாதிரின்னு வெச்சுக்கோங்களேன்.”

“கொடூரமாப் பேசாதேடீ, அவளைப் படைச்சவன், அவளுக்கென்று ஒருத்தனையும் படைசிச்சிருப்பான்.”

“நீங்கள் இப்படியே நம்பிண்டிருங்கோ. கூடவே ‘கல்லினுள் தேரைக்கும்’ பாட்டைப் பாடிண்டிருங்கோ.”

பேச்சு சட்டென்று அடங்கிவிட்டது. அம்மா திரும்பிப் படுத்துத் தூங்கிவிட்டது. அப்பா இரு கைகளாலும் தலையைத் தாங்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பது, மனக் கண்முன் வந்து நின்றது.

இப்பவே போய், “அப்பா, நீங்கள் எனக்குப் பிள்ளை பார்க்க வேண்டாம். கீதா கல்யாணம் நடக்கட்டும்,” என்று சொல்லிவிடலாமா? அவர்கள் பேச்சை அவள் கேட்டு விட்டது தெரிஞ்சிடும். அவாளுக்கு உடனே முகமில்லாமல் போவதைப் பார்ப்பதில் என்ன சந்தோஷம்?

அனுபவி, அனுபவி மௌனமாய் அனுபவி.


ஒருசமயம் கிராமத்தில், பாட்டியாத்துக்குப் போயிருந்தப்போ –

வீட்டுக்கெதிரே குட்டி மைதானம். அதில் ஓர் ஆலமரம். விழுதுகள் தொங்கின. ஓரிரண்டு பூமியில் ஊன்றியம் விட்டன. ஒரு கோடைமழை. அதன் மேல் மின்னல் விழும் போது பார்த்துவிட்டாள். கிளை விழுந்த ராக்ஷஸத் தீக்கோடு வெட்டினதும், மரம் பற்றிக்கொண்டு இரண்டாய்ப் பிளந்து, ஒரு பகுதி எரிந்தபடியே சாய்ந்தது. கம்பீர சோகம். ஒரு விபரீத கவித்வம். மின்னல் என்றால் லேசா? இந்திராஸ்த்ரம் அல்லவா? வீழ்ச்சி என்றால் இப்படித்தான் வீழ்தல் வேண்டும். என்ன பேத்தறேன்?

அந்த ராக்ஷஸக் கொழுந்தும் புகை மண்டலமும் வானளாவின. ஊரே வேடிக்கை பார்த்தது. அடுத்த நாள் பூரா எரிந்தது. கிளைகளின் சந்துகளில் நெருப்பு சீறிற்று. ‘உஷ்’ என்று இரைந்தது. அனலில் அவர்கள் வீட்டுச் சுவர்கள் சுட்டன. திண்ணைக் கொதிப்பு உட்கார முடிய வில்லை. உள்ளே ஏதோ ஒன்று பீதி புகைந்தது. இது நல்லதற்கில்லை.

இதுவே இப்படி ஆனால், கண்ணகியின் கோபம் எப்படியிருந்திருக்கும்? கற்பு பற்றியெரிவதென்றால் இது போல் தானிருக்குமா? கீதா சுலபமாகச் சொல்லிவிட்டாள். எப்படிச் சொன்னாள்? வாயில் வந்து விட்டது. அப்படித் தானே?

ஆண்டாள் நாச்சியார் இதுபோல ஜோதியில் தானே கடைசியாகக் கலந்திருப்பாள்? No, அது குளுமையான ஜோதி. ஆனால் தடாதகை ஹோம குண்டத்தில் தானே தோன்றினாள்? பாஞ்சாலியும் அப்படித்தானே? அஞ்சு பேருக்கும் பத்தினி.

“ராமா, இவள் கற்பின் நெருப்பு என்னைத் தஹிக்கிறது. தாங்க முடியவில்லை. இவளைப் பெற்றுக் கொள்,” என்றானே அக்னி பகவான், அது என்ன நெருப்பு? இந்தப் புராணக் கதைகளே சமயத்தில் புரியறதில்லே. நியாயங்கள் ஒண்ணுக்கொண்ணு முரணா –

கோமதி, குருட்டு யோசனைகளிலிருந்து மனமின்றி மீண்டாள்.

இருள் நன்றாவே கனத்து விட்டது. வானத்தில் அங்கு மிங்குமாய்ச் சாம்பல் கலுக்குகள் சில. மருதாணி மரம், மொத்தாகாரமாய் அதன் வடிவக் கோடுகளை மட்டும் விட்டுக் கொண்டிருந்தது. இலைகளினிடைச் சந்தினின்று ஒரு மினுக், மினுக்’ திருட்டுத்தனமா எட்டிப் பார்த்தது.

“ஏ கோமதி; ஏடி, இப்படி இந்தப் பக்கம் பார். நான் தெரியறேனா?”

“உனக்கென்னடிம்மா, நீ நக்ஷத்ரம், உன் பதவியிலிருந்து கேக்கறே. நான் வெறும் கோமதி.”

“நீ அப்படி நினைக்கறே. உண்மையில் நாங்கள் அநாம் தேயங்கள். அத்தனையும் இரைஞ்சு கிடக்கும் மணல் கற்கள். நீயானும் கோமதி.”

விட்டுத்தள்ளு. இந்த சம்பாஷணையைத் தொடரப் பிடிக்கல்லே. சம்பாஷணையா இது? என் ஆற்றாமை. பெருமூச்செறிந்தாள்.

விளக்கைப் போட எழுந்திருக்க மனமில்லை. இந்த இருளில் சுகம், ஆதரவு. பத்ரம் கமழ்ந்தது.

அறைக்கதவு மெதுவாய்ச் சிறுகச் சிறுக, அதன் க்றீச்’ கூட அத்தனை அடக்கமாய்…

“கீதா!”

A whisper. அடிகள் நெருங்கி, நாற்காலிக்குப் பின்னால் நின்றன.

“கீதா, நீ தனியாக் கிடைக்க மாட்டாயான்னு எப்படி ஏங்கிப் போயிட்டேன் தெரியுமா? எனக்கு, எனக்கு மட்டும் நீ. கீதா, என் இதயராணி.”

சிரிப்பைக் கோமதி கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

“உன்னிடம் என் இதயத்தைத் திறந்து சொல்ல எவ்வளவோ இருக்கிறது. இந்த ஜன்மம் போதாது. அதன் ஆரம்பம் இந்த ஜன்மம் இல்லை – அதற்கும் முன்னால். கீதா! – கீதா! – நான் – நான் -“

சட்டென்று அவள் பின்னாலிருந்து குனிந்து, இடது கன்னத்தில் ஒரு முத்தம் விழுந்தது. வந்தவனுக்கு உடனேயே தப்பு தெரிந்துவிட்டது.

“My God!” ஓடினான். மாடிப்படிகளில் அடிகள் தட தட –

கோமதி அவள் இடத்தில் விறைத்துப் போனாள். முத்தம் என்னவோ மொக்கு மாதிரித்தான் மெத்தென்று ஒத்திற்று. ஆனால் கன்னம் தீய்ந்தது. கால் கட்டை விரலிலிருந்து மண்டை உச்சி வரை அந்த மின் தாக்கல் தனக்குத் தானே இல்லாமல் போய்விடுவாள் போல.

எழுந்து விளக்கைப் போட்டாள். கண்ணாடியெதிரில், இடது கன்னத்தைத் தேய்த்துக் கொண்டு நின்றாள். அந்தப் பயங்கர பரவசம் முற்றிலும் தணியவில்லை. ஆனால் வடிய ஆரம்பித்து, உணர்வு படிப்படியாக மீண்டது.

இடது கன்னம் பூரா, தார் ஊற்றினாற்போல், தடித்த மறு. அதில் ஒன்றிரண்டு மயிர்கள் முளைத்திருந்தன.


“பூ! ஒரு முத்தத்தில் என்ன இருக்கிறது? What is in a Kiss?” என்று கீதா சிரித்து ஊதி விடுவாள்.

ஆனால் –

அவளுக்கு ஏழு வருட நித்திரையிலிருந்து எழுந்த இளவரசி மாதிரியிருந்தது. நெஞ்சில் புது ஊற்றுப் பெருக்கெடுத்து, உள் ரணத்தையெல்லாம் ஆற்றிக் கொண்டு பாய்ந்தது!

அப்பா சொன்ன மாதிரி எனக்கு ஒருத்தன் பிறந்திருக்க மாட்டானா? ஒண்ணுமே வேண்டாம், ஒரு குருடனைப் பண்ணிக்கறேன். அது பிறவிக் குருடோ. பின்வந்த குருடோ, ஒருவருக்கொருவர் வாழ்வு தந்து கொண்டிருப்போம். என் கன்னத்தைத் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும். எப்படியும் கண் பார்த்து, பார்க்கும் போதெல்லாம் படும் கொடுமையைவிடக் குறைஞ்சுதானிருக்கும்.

அன்று பூரா, அடுத்த நாளும், பிறர் என்ன இவளுக்கு என்று வியக்கும்படி, அவள் சந்தோஷமாவே இருந்தாள்.

– அலைகள் ஓய்வதில்லை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *