மூன்றாம் தூதனின் மூன்று சுருள்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 8,869 
 
 

இரண்டாம் சுருள்:

பதினெட்டாம் வயது. கடந்த ஆறு வருட கடுமையான முயற்சிக்குப் பின் அம்மாவால் எழுதவும் சரளமாகப் படிக்கவும் முடிந்தது. தனது வாசிப்பை அம்புலி மாமாவில் ஆரம்பித்து ராணிமுத்து, கல்கண்டில் நிறுத்திக் கொண்டவர். எப்படி முயன்றும் ‘ஹலோ’ என்ற ஆங்கிலச் சொல்லைத் தாண்டி முன்னேற அவரால் முடியாமற் போயிற்று. “போனால் போகட்டும், சனியன். மலாய் சொல்லிக் கொடு” என்று சொல்லி அம்மொழியில் தன் பெயரை மட்டும் எழுதக் கற்று; பேசுவதோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இந்தோனிசியர்கள் தோட்டத்திற்குள் நுழைந்த காலமது.

தோட்டத்தின் ஒரு வீடு என்பது இரண்டு தனித் தனி குடும்பங்களுடையது. முன் வாசலிலும் பின் வாசலிலும் பாதி நடுச்சுவர் எழுப்பப்பட்டிருக்கும். இப்படி எட்டுக் குடும்பங்கள் அமைந்த நான்கு வீடுகளுக்கு நடுவில்போல நடைபாதையோரத்தில் தண்ணீர்க் குழாய் இருக்கும். வேலையை முடித்த தோட்ட மண்டோர் முனுசாமி சரியாகப் பிற்பகல் இரண்டரை மணிக்குத் தண்ணீர் திறந்து விடுவார். சில சமயங்களில் தாமத மாகவும் திறந்துவிடுவதுண்டு. அவர் தாமதமாகத் திறந் தால் தாமதமாகத்தான் தண்ணீர்க் குழாயை அடைப்பார். தீபாவளி- திருவிழா காலங்களில் இரவு ஒன்பது மணி வரை தண்ணீர் சலுகை கிடைக்கும். முதலில் நீரைப் பிடிப்பதற்கு, ஒருநாள் ஒரு குடும்பமெனச் சுழற்சி முறை கையாளப்படும்.

மழையே இல்லாத கடும் வறட்சி மிகுந்த நாட் களில் தோட்டத்தின் தண்ணீர் குளம் வறண்டுவிடும். இந்நாட்களில் அரைமணி நேரத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் குறைக்கப்படும். தண்ணீர்ப் பற்றாக்குறையி னால் வீட்டு ஆண்களெல்லோரும் குளிப்பதற்கு ஆறுகளை நாடிச் செல்வர். செம்பனைக் காட்டினூடே மூன்று மைல்களுக்கப்பாலுள்ள யாரும் போகாத சிறு ஆற்றில் நான் மட்டும் குளித்துவிட்டு வருவேன். வீட்டில் பத்துப் பதினைந்து நிமிடங்களில் முடிந்துவிடும் என் குளியல் ஆற்றில் இரண்டு இரண்டரை மணி நேரமாகும்.

அன்று ஆற்றில் குளித்துவிட்டுத் தோட்ட வாயிலின் மேடேறும்போதே இயல்பாக இல்லை வீடு. உள்மனம் உறுத்தியதால் வேகப்படுத்தி வீடடைந்தேன். வீட்டின் பின் பக்கம் கோழி கூடொன்றும் பப்பாளி மரமொன்றும் சீத்தா மரமொன்றும் இருந்தன. அந்த சீத்தாமரத்தினடியில் கற்பாறை போன்றதொரு பெரிய கல்லுண்டு. அதன்மேல் உட்கார்ந்தவாறே சுருட்டுடன் புகையைக் கப்கப்பென்று இழுத்து வெளியிட்டுக் கொண்டிருந்தார் அப்பா. என்னவென்று புருவங்களை உயர்த்திக் கேட்டதற்கு “அங்கே பாரு கூத்தை…” என்று சொல்லி மேலும் புகை விட்டுக் கொண்டிருந்தார். அவர் காட்டின திசையில் அம்மாவும் தொத்தா அம்மாவும் தண்ணீர்க் குழாயருகே மண்தரையில் கட்டிப்புரண்டு அவரவர் எதிராளியின் தலைமயிரைப் பிடித்திழுத்து கொண்டிருந்தனர். “என்ன நடக்குதப்பா இங்கே…” என்றேன். “தெரியலேயா…சண்டை” என்றார் முக்கால் பகுதி வீணான சுருட்டை எடுத்துச் சாம்பலைத் தட்டிக் கொண்டு. “என்னப்பா நீங்க… மரவட்டை மாதிரி இருக்கீங்க, அம்மாவ இழுத்திட்டு வர்றத விட்டுட்டு…” என்ற நான் அவரைப் பொருட்படுத்தாமல் குழாயடிக்கு ஓடினேன்.

இருவருடைய பிடிகளும் உடும்புப் பிடிகளாக இருந்தன. என் முழுப் பலத்தையும் கொண்டு அம்மாவின் கரமொன்றைப் பிரிக்கையில் கிழீருந்த தொத்தா அம்மாவின் கால் என் இடுப்பை ஓர் உதை உதைத்தது. விழுவதற்கு முன்ன தாகச் சுதாகரித்து அவரிடமிருந்து அம்மாவைப் பிரித் தெடுக்கப் படாதபாடு பட்டேன். மனதிலோ ஆச்சரியம் கலந்த அச்சம். ‘பெண்கள் பலவீன பாண்டங்கள், மென் மையானவர்களென்று எந்த மடையன் சொன்னது…’ என்று மனதிற்குள் கருவிக்கொண்டு ஒரு வழியாக பிரித்திழுக்கவும் பிடித்த பிடியை இறுக்கவும் இயன்றது.

தன் கனத்த உடம்பை நிற்கவைக்கையில் அவிழப் பார்த்த கைலியைச் சரிசெய்துவிட்டு முன் பக்க உள் சட்டையை நீவிவிட்டுக் கொண்டார் தொத்தம்மா. ஒல்லியான தேகம் அம்மாவினுடையது. கலைந்த கூந்தலை முடிச்சுப்போட்டு முடிக்கையில் தொத்தம்மா கெட்ட வார்ததைகளால் பேச ஆரம்பித்து விட்டார். ‘அதற்கும் சளைத்தவளல்ல நான்’ என்று நிரூபிக்கும் வண்ணம் அம்மாவும் கொட்டும் அமிலங்களாய் வார்த் தைகளைப் பிரயோகித்தார். என்னை வெட்கம் பிடுங்கித் தின்றது. மண்டை கிறுகிறுத்தது. இது சகஜம் என்பதுபோல அக்கம்பக்கத்துவாசிகள் அவரவர்களின் வேலையில் கவனம் செலுத்துவது போல பாசாங்கு பண்ணினர். அம்மாவின் ஒரு கரத்தைக் கக்கத்தில் வைத்து இறுக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.

கால்மணிநேரம் ஆனபோதிலும் கெட்ட வார்த்தைகளின் அர்ச்சனை அம்மாவின் வாயிலிருந்து ஓயவில்லை. அதுபோலவே பின்பக்க வீட்டுவாசியான தொத்தாம்மாவின் அர்ச்சனைக் குரலும் கேட்டது. ‘இவர்களுக்கு நா கூசாதோ… இந்தப் புளுத்தப் பேச்சை சிறுவர்கள் கேட்டால் மனதில் பதிவாகுமே என்ற கவலைகூடவா இல்லை? கணவன்மார்கள் புருஷர்களாம், புருஷர்கள்… போக்கனாக் கொட்டைகள்” என்றெனக்குக் கெட்ட கோபம் வந்தது.

“ம்மா.. கொஞ்சம் சும்மா இருக்கியா..”

“டேஹ்! பொத்திக்கிட்டுப் போவீயா. வந்துட்டான் சமரசம் பண்றதுக்கு. உன்னை யார்றா வர்ரச் சொன்னது? இன்னிக்கு ரெண்டுலவொன்னு பாக்கறதுக்குள்ளே கெடுத்திட்டியேடா சண்டாளா. அந்தத்…. ரொம்பநாளா ஏங்கிட்டே வம்பிலுத்துக் கிட்டிருந்தா…. ஏதாவது புக்கெடுத்துக்கிட்டு எங் கேயாவது போய்த் தொலைய வேண்டியதுதானே. மயிராண்டி வந்துட்டான் புடுங்கிறதுக்கு…” பேசிக் கொண்டே இருந்தார் ஆத்திரம் தீராமல்.

அப்பா காணாமல் போயிருந்தார். அநேகமாகக் கள்ளுக்கடையாகத்தானிருக்கும். அந்த வீட்டு மனிதரும் மிதிவண்டியை எடுத்து நழுவுகிறதைக் கண்டேன். ‘பெண்கள் விஷயத்தில் நான் மூக்கை நுழைத்து மூக்குடைந்து போனேனே. எப்படியோ போகட்டும்..’ என்று முடிவெடுத்து நானும் கிளம்பினேன்.

பாதி தூரம் போனதும் நூலகப் புத்தகம் கொண்டு வராதது ஞாபகம் வந்தது; திரும்பினேன். தோட்ட வாயிலைத் தொட்டவுடனே சண்டையின் சத்தம் கேட்டது. மிதிவண்டியைப் போட்டுவிட்டு வீட்டின் பின்பக்கம் சென்றேன். கோழிக் கூண்டின் கூரையில் செருகப்பட்டிருந்த விறகு வெட்டும் கத்தியை எடுத்தேன். அம்மாவின் அருகே சென்று “ம்மா… இப்ப நீ வரப்போறீயா இல்லையா” என்றதற்கு ” டேய் வரமாட்டேன்டா,என்னடா செய்வே” என்று சொல்லியதும் இரத்த நாளங்கள் கொதிப்படைந்தன. “வெட்றா…டேய் வெட்டிப் போட்றா….வெட்றா டேய்ய்…” எனச் சொல்லிக்கொண்டே என்னருகே வந்ததும் கத்தியை வீசியபடி சுழற்றினேன். தொத்தம்மா, அம்மாவின் கரத்தை இலேசாகப் பின்னுக்கிழுக்கையில் தோளின் சட்டைமீது உரசிக் கொண்டுப் போனது கத்தி.

ஒரு கணத்தில் நடக்கவிருந்த விபரீதத்தை உணர்ந்தவனாய், கத்தியைக் கீழே போட்டேன். அதிர்ச்சியில் உறைந்து நின்றார் அம்மா. கைகள் நடுங்க ஆரம்பித்தன எனக்கு. திரும்பிய நான் தலையைக் கவிழ்த்துக் கொண்டே திரும்பி நடந்து செல்கையில் பிதுக்கி வெளிவருவதுபோல கண்ணீர்த்துளிகள் வெளிப்பட்டன.

சைக்கிளை ஓட்டும்போது காட்சியை மறைத்தது கண்ணீர். ‘அம்மாவ… அம்மாவையா வெட்டப் பார்த்தேன்…ஐயோ!’ என்று மனதிற்குள் உருவான வார்த்தைகள் வாயின் வழி வந்தன. ‘என்னுடைய ஆத்திரம் என் கண்களை மறைத்துப் புத்தியைக் குருடாக்கிவிட்டதே. புத்தகங்கள் நிறைய படித்தும் என்ன பயன்? பொன்மொழிகளை என் டைரியில் எழுதி நிரப்பி என்ன புண்ணியம்? நானேவொரு மனிதனாக நடந்து கொள்ளவில்லையே… இனி அம்மாவின் முகத்தில் எப்படி விழிப்பேன்…?’

தாறுமாறாக ஓடியது மிதிவண்டி. வாகனங்கள் எச்சரிக்கை ஒலி எழுப்பின. “சாவு கிராக்கி டேய்…” என்றும் “மாவ் மத்திக்கா… பொடோ…” என்றும் “செய்லோ! காணிணா…” என்றும் வாகனமோட்டிகள் ஏசி துப்பிச் சென்றனர்.

எங்கும் கெட்ட வார்த்தைகள் . முதன் முறையாகக் காணாமல் போகத் தீர்மானித்தேன்.

மூன்று நாட்களுக்குப் பிறகு கோபம் தணிந்தது. வீட்டிற்குப் போகும் திராணி இன்னும் வரவில்லை. கால்போன போக்கில் தொடர்வண்டி நிலையத்தினை அடைந்தேன். நண்பன் மகேஸ்வரன் ஞாபகம் வந்தது. நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுமே தாராளமாகத் தங்கக்கூடிய வீட்டில் ஆக மொத்தம் பதினான்கு குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருக்கிறார்கள். தகப்பனும் தமக்கைகள் இருவரும் வேலைக்குப் போவதால் வீட்டினுள்ளேயும் அவன் தம்பி தங்கைகளிடமும் வறுமையின் சாயல் தென்பட்டிருக்கவில்லை. அதைவிட, வீட்டின் பக்கமிருக்கும் கோவில் ஒரு காரணம். மகேஸ்தான் அதன் பூசாரி.

என்னிடம் எந்த நற்செய்கையை கண்டார்களோ தெரியாது; அவன் தாயின் உபசரிப்புக் கண்டிப்புடனும் பலமாகவும் இருக்கும். உணவருந்து கையில் குடும்ப எண்ணிக்கை மனதில் தோன்றி மறையும்.

அன்றும் எப்போதும்போல உபசரிப்பு நடந்தது. உணவு வேளையில் என் தாய் போல பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டு தொண தொணப்பதில்லை. காத்திருந்த நண்பன் கோவிலுக்குள் அழைத்தான். இடையில் கட்டியிருந்த காவி நிற வேட்டியை மடித்துச் சப்பனமிட்டமர்ந்தான். அவனெதிரில் உட்கார்ந்தேன்; பேசத் தொடங்கினான்.

“வீட்ல ஏதாவது பிரச் சனையா…?” என்றதும் அவன் கண் களைப் பார்த்தேன். “உங்கம்மா வந்தாங்க. ரெண்டு நாளா… இன்னைக்கு காலைலகூட வந்தாங்க. வேலைக்கும் போகல. இங்க மட்டும் வர்ல. ஊர் முழுக்கவும் தேடறாங்க. அழுவுறாங்கடா. இதுவரைக்கும் பச்சைத் தண்ணீர்கூட வாய்ல வைக்கல. பார்க்கவே பாவமா இருக்குடா. நீ இங்கேயும் வர்ல. வேற எங்கடா போனே..?” தொண்டை அடைத்துக் கொண்டது மாதிரி இருந்தது.

“எல்லோருக்கும் விஷயம் தெரிஞ்சிருச்சு. போலீஸூக்கு மட்டும்தான் போகல. சிலிம் ரீவரிலிருந்து கெகெபிவரைக்கும் தேடறாங்கடா. நடையா நடக் கிறாங்க. துண்டு தர்றே, போய் குளி. என்னோடதைக் கொண்டு வர்ற…. உடுத்திக்கிட்டுப் போ. நேரா வீட்டுக்குத்தான் போவணும். நானும் வர்றவா…”

“இல்லல்ல வேண்டாம்…. வீட்டிற்குப் போய் குளிச்சிக்கிறேன். போயிட்டு வர்றேன்” என்றேன்.

சீரான சிந்தனையின்றி கனத்திருந்தது மனம். வீட்டின் முன்பாக நெருங்கிய உறுவினரும் நண்பர்களும் அக்கம் பக்கமுள்ளவர்களும் ஒரு சாவு வீட்டின் முன் நிற்பதுபோல் கூடியிருந்தார்கள். நெருங்க நெருங்க இருதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. ‘தகப்பன் சம்பாதித்த நற்பெயரைக் கெடுத்தோமோ…’ என்ற குற்றவுணர்வு குடிகொண்டது. என்னைப் பார்த்துவிட்ட மளிகைக் கடைக்காரரின் கடைக்குட்டி சரோ “ரமேஸ் மாமா வந்தாச்சு… ரமேஸ் மாமா வந்தாச்சு…” என்று தொண்டை கிழிய கத்திக் கூச்சலிட்டுச் செய்தியைப் பரப்பினாள்.

எல்லோருமாக நடைபாதைக்கு வந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் வெட்கத்தில் அடுத்தடியை வைக்க முடியவில்லை. அவமானத்தில் கூனிக் கூசி நின்றேன். ‘திரும்பி விடுவோமா..” என்ற எண்ணம் கூட வந்தது. ஜஸ்மின் கோர் கூட்டத்திலிருந்து வெளிப்பட்டு என்னருகே வந்து கரம் பிடித்து வீட்டிற்குள் அழைத்துப் போனாள். பிறந்து தவழ்ந்து உருண்டு புரண்ட வீடு எனக்கு அந்நியமெனப்பட்டது. நாற்காலியில் உட்காருவதற்குக் கூட உரிமை இழந்ததாக உணர்ந் தேன். என்னை உட்கார வைத்தவள் ஆங்கிலத்தில் ஏசத் தொடங்கினாள். நானொரு முட்டாளென்றும் தாயைப் புரிந்து கொள்ளாத கபோதியென்றும் திட்டி “இம்மாதிரி இனியொரு தடவை நடந்தால் என்னை பார்க்கவே வர வேண்டாம்” என்று ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்து விட்டுக் கொஞ்சமாய் அழுது ஒரு மூலையில், தரையில் உட்கார்ந்து கொண்டாள். ஒவ்வொருவராக என் முன் நின்று “ஏய்யா இப்படிச் செஞ்சீங்க..”, ” பெத்த தாயை மூணு நாளா அலைய வைச்சிட்டீங்களே தம்பி…”, “இதுதான் படிச்ச படிப்புக்கு லட்சணமா…”, “என்னமோ போ! மாப்ளே, உங்க மேலே வைச்ச மருவாதையைக் கெடுத்திட்டீங்களே”, ” நீங்களா இப்படி நடந்துக்கிட்டது.. நம்பவே முடியல” இப்படிப் பலப்பல வார்த்தைகளில் அர்ச்சித்துச் சென்றனர்.

இரவு வந்தது. கடைசி ஆளாகத் தொத்தம்மா செல்லும் முன் “தம்பீ… நாங்க அடிச்சிக்குவோம், பிடிச்சிக்குவோம். பொம்பளைங்க சண்டைக்கு ஆம்பிளை வரக்கூடாது. ஒங்க நைனா பேச்சை நீங்க கேட்டிருக்கணும். அதைவிட்டுட்டு…வாராகளாம். ஒங்கம்மா மேலே லேசா கத்தி பட்டிருந்திச்சோ இன்னைக்கு உயிரோட பார்த்திருக்க முடியாது. நல்ல வேளை, மாரியாத்தா காப்பாத்திட்டா” என்றதும் அவரைப் பார்த்து முறைத்தேன்.

தாயும் தகப்பனும் பேசவில்லை. குளியலை முடித்து என்னறையில் படுத்துறங்கினேன். விடிந்தும் தூங்கினேன். பசியெடுத்த நேரத்தில் பெரியப்பா-பெரியம்மாவின் குரல் கேட்டது.

“மைனரு இன்னும் எழுந்திருக்கல போல…”

“அசதி. எந்தச் சிறுக்கி மடியிலே விழுந்தானோ, யார் கண்டது…”

“தெரிய மாட்டேங்குதே. எந்தத்… வலை விரிச்சாளோ, சண்டாளன் இப்படி அடிச்சுப் போட்டாப்ல தூங்கறான்”

“போன மாசம் இவனைத் தேடிக்கிட்டு ஒரு நாட்டுக்காரச்சி வந்தாளே, தழுக்கி மினுக்கிக்கிட்டு அவளா இருக்குமோ…”

“சடைச்சிங்கிங்க கூடத்தான் சுத்திக்கிட்டுத் திரியறதைப் பார்த்தேன். அதுங்க மயக்கிச்சோ இல்ல இவன் மயக்கினானோ…”

“இதான், ரொம்ப செல்லங்கொடுத்துச் சுதந்திரமா விட்டா இப்படித்தான் ஆகும். தெரு நாய்போல அலைஞ்சிட்டு வந்திருக்கான பாரு…”

தலை கனத்தது. யூதாஸ் காரியோத்திற்குள் புகுந்து வெளிவந்த சாத்தான் எனக்குள் புகுந்திருக்க வேண்டும். கதவைத் திறந்து படீரென அறைந்து குளியலறைக்குள் புகுந்தேன்.

“என்ன கொழுப்புப் பார்த்தீங்களா… கொழுப்பெடுத்து ஆடுறான் மயிராண்டி…”

முகம் அலம்பி வெளிவந்த நான் அம்மாவைப் பார்த்து “ம்மா! அறிவு இருக்கா உனக்கு? கெட்ட கெட்ட வார்த்தைகளை நீ பேசறதைப் போல நா பேசினா எப்படியிருக்கும்… நீ அம்மா மாதிரியா நடந்துக்கிறே. கழுதை மாதிரி கத்திக்கிட்டு…” சொல்லி முடிப்பதற்குள் கன்னத்தில் அறை விழுந்தது. பெரியம்மா மூர்க்கமானார். வாயிலிருந்து தீப்பிழம்புகளாய்த் தீய வார்த்தைகள்.

வீட்டை விட்டு வெளியேறிக்கொண்டே “இப்படிப் பேசி பேசியே நாசமாய்ப் போங்க…” என்றேன். தடுத்த அப்பாவைத் தள்ளினேன். வழிமறித்த பெரியப்பாவிடம் “மரியாதை தேஞ்சிடும்” என்றதும் விலகினார். அம்மா ஓடி வந்து “டேய்! இப்ப உனக்கு என்னடா வேணும்?” என்றார். “ஒன்னும் வேண்டாம். நான் செத்ததா நெனைச்சுக் கட்டிப் பிடிச்சு அழுவுங்க, போங்க..” என்று உரத்த சத்தத்தோடு கத்தி நடந்தேன். அம்மா சிலை போல் நின்றுவிட்டார். தார்ச் சாலை வரை வந்ததும் ‘கடைசியாய் ஒரு தடவை திரும்பிப் பார்ப்போம்’ என்றெண்ணித் திரும்பினேன். அம்மா ஓடிவருவதைப் பார்த்து நான் நடக்கத் தலைபட்டேன்.

முச்சந்தி. அம்மா ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்தார் என்னிடம். கலவரத்தோடு “டேய் ஒங்கால்ல விழுறேண்டா. போகாதறா…” என்றார்.

சிரித்துக் கொண்டேன். நடக்கலானேன். திடீரென்று முன்னே வந்து முழங்காலிட்டு என்னிரு கால்களையும் பிடித்துக் கொண்டார்.

“போகாதடா. நான் என்னடா செய்யணும்? என்ன செய்யணும்?”

“இனியொரு கெட்ட வார்த்தை உன்னோட வாயிலிருந்து வரக்கூடாது. யார்கிட்டயும் எந்தவொரு சண்டையும் போடக்கூடாது. மீறினா காணாமப் போய் விடுவேன். அப்புறம் என்னைப் பார்க்கவே முடியாது, ஒத்துக்கிறியா?”

“சரி. சரி. சரிடா ஐயா..” என்று என் கரத்தைப் பிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அம்மா, காலில் விழுந்த கதை ஊரெல்லாம் பரவியது.

அம்மா என்னிடம் பேசுவதும் நான் அம்மாவிடம் பேசுவதும் குறைந்தது. அம்மா தோட்டத்து மக்களிடம் பேசுவதுகூட அடியோடு இல்லாதிருந்தது. அப்பா ஒருநாள் என்னிடம் வந்து “ஏம்ப்பா இப்படி நடந்துக்கிறே…. முன்னல்லா ஒங்கம்மா எப்படிக் கலகலன்னு இருப்பா. இப்பப் பாரு, நூலுங்கண்டுமா உட்கார்ந்துக்கிறாடா. இதுக்கெல்லாம் நீதானே காரணம்…” என்றதும் நான் உரக்கமாகவே “நானா காரணம்…. நீங்கதான் காரணம். கோயில்ல போய் ஓதுறீங்க, மேடையிலே பேசறீங்க. ஊருக்கு மட்டும் உபதேசம். சொந்த வீட்ல ஒங்க பொண்டாட்டியை அடக்கத் தெரியல. என்னப்பா நீங்க, ரெட்டை வேஷம் போட்றீங்க..” என்று கத்தினேன். முதன் முதலாக அப்பாவின் முகத்தில் கோபத்தின் அடையாளம். சினச் சிரிப்பு “என்னய்யா, என்னையே எதிர்த்துப் பேசுற” வார்த்தைகளை அழுத்தி உச்சரித்தார். “எனக்கு அம்மா வேறயில்ல நீங்க வேறயில்ல. ரெண்டு பேரும் ஒன்னுதான். என்னோட அம்மா- அப்பா இப்படி இருக்கணும்னு நினைக்கிறேன். அதனாலே, நீங்க இனிமே கோயில்ல ஓதக் கூடாது; எந்த மேடையிலேயும் பேசவும் கூடாது…” சொல்லி முடித்த உடனே முதுகிலும் முகத்திலும் அறை விழுந்தது. பாம்பு அடிக்க வைத்திருக்கும் கட்டையை எடுக்க விரைந்தார். எனக்குள் ஏதோ ஒரு மூலையில் கட்டிவைத்திருந்த சாத்தான் விடுபட்டு வெளிப்படத் தொடங்கியது. பக்கத்தில் ஏதாவது கிடைக்குமா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒன்றும் இல்லாதது போலிருந்தது. அப்பாவை எதிர்க்கும் இந்த வெறியை உள்ளுணர்வு உணர்த்தியது ஒரு கண நேரத்தில். உடனே, நான் நாற்காலியில் உட்காரவும் அப்பா வரவும் சரியாயிருந்தது. அக்கட்டையினால் முது கை விளாசினார். எலும்புகள் முறிவது போன்றிருந்தன. அம்மா எழக்கூடயில்லை. பின்னுவதையும் நிறுத்தவில்லை.

அன்று பின்னிரவில் காணாமல் போனேன். போட்டிருந்த உடையும் அடையாளக் கார்டும் தவிர ஒன்றையும் எடுக்கவில்லை. அம்மா இன்னும் பின்னிக் கொண்டேயிருந்தார்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *