மூத்தவளின் நகைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2019
பார்வையிட்டோர்: 7,416 
 
 

(இதற்கு முந்தைய ‘மூச்சுத் திணறல்கள்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)

சபரிநாதனை கல்யாணம் செய்துகொள்ள ராஜலக்ஷ்மி சம்மதம் சொல்வாள் என பெரியசாமி எதிர்பார்க்காவிட்டாலும் கூட, மனசுக்குள் அவள் ஒரு பணக்காரனுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் என்ற நினைப்பில் அவள் மேல் அவனுக்கு காழ்ப்புணர்ச்சி இருந்தது.

அதேபோல அழகான பெண்களைக் கல்யாணம் செய்து கொள்வதற்காகவே பிறந்து வளர்ந்ததுபோல் விறைப்பாக இருக்கிற பணக்காரன்கள் மீதும் பெரியசாமிக்கு துவேஷம் உண்டு. அப்படிப் பட்டவனுக்கு இந்தக் கல்யாண நிச்சயம் எப்படி இருந்திருக்கும்? மெளனமாகவே இருந்து ராஜலக்ஷ்மி அவனை வென்றுவிட்டாள்.

இனி அவளிடம் பெரியசாமியின் அதிகாரம் எதுவும் பலிக்காது! அதோடு மட்டுமல்ல. வீட்டில் இனிமேல் அவளுடைய அதிகாரக் கொடிதான் பறக்கும். அந்த எண்ணத்தில் சபரிநாதன் ரொம்ப வயதானவர் என்ற காரணம் காட்டி கல்யாணத்திற்கு மறுப்புத் தெரிவித்து விடலாமா என்றுகூட யோசித்தான். ஆனால் அவளே சம்மதித்த பிறகு பெரியசாமி ஊமைச்சாமியாக இருக்க வேண்டியதாகிவிட்டது.

பெரியசாமி ஊமைச்சாமியாய் இருக்க இன்னொரு காரணமும் இருந்தது. சபரிநாதன் அவருடைய பணத்தை முதலீடு செய்து கல்லிடைக்குறிச்சியில் பெரிய மளிகைக் கடை ஒன்றை ஆரம்பித்துக் கொடுக்கப் போகிறார். கடைக்கு முதலாளி அவர்தான். பெரியசாமி வொர்க்கிங் பார்ட்னர். நல்லதாக வீடு ஒன்று விலைக்கு வந்தால் அதையும் ராஜலக்ஷ்மி பெயரில் வாங்கத் திட்டம். அந்த வீட்டில் ராஜலக்ஷ்மியின் அம்மா குடும்பம் வாடகை தராமல் இருந்து கொள்ளலாம்.

இத்தனை பொருளாதார நலத் திட்டங்களை சபரிநாதன் அறிவித்த பிறகு, எப்படி பெரியசாமியால் ஊமைச்சாமியாகாமல் இருக்க முடியும்? சீக்கிரம் அவனும் ஒரு பணம் புரளும் மனிதனாக மாறிவிடுவான். அதன்பிறகு ராஜலக்ஷ்மியை விடவும் அழகான ஒருத்தியை அவனாலும் கல்யாணம் செய்துகொள்ள முடியும்! அது போதும் அவனுக்கு.

சபரிநாதன்-ராஜலக்ஷ்மியின் நிச்சயதார்த்தம் கல்லிடைக்குறிச்சி பூராவும் எப்படி பரபரப்பாக பேசப் பட்டதோ, அதைவிட பரபரப்பாக திம்மராஜபுரத்திலும் பேசப்பட்டது. சபரிநாதன் பெருமையோடு நெஞ்சை உயர்த்திக்கொண்டார். தெருவில் இறங்கி அவர் நடந்த நடையில் சிறிது செருக்குகூட தெரிந்தது!

ராஜலக்ஷ்மி வந்த பிறகு இதற்கும்மேல் ஒரு ராஜநடை நடக்கவும் உத்தேசம். ஊரில் நடக்கிற எல்லா கல்யாணம் காட்சிக்கெல்லாம் ராஜலக்ஷ்மியையும் அழைத்துக்கொண்டு சபைக்கு அலங்காரமாகப் போய் வரலாம். ஒரு விசேஷத்திற்கு மனைவியுடன் ஜோடியாகப் போனால் அதற்குக் கிடைக்கிற உபச்சாரமும், வரவேற்பும் தனி! ஓரிக் காக்காய் மாதிரி ஒத்தையாகப் போனால் இளக்காரமாகப் பார்ப்பார்கள்…

சபரிநாதன் அவருடைய அனுபவத்திலேயே இதைப் பார்த்திருக்கிறார். பெண்டாட்டி இல்லாத ஆம்பிளைக்கும்; புருஷன் இல்லாத பொம்பளைக்கும் இந்தச் சமூகத்தில் மரியாதை கிடையாது. தேவையில்லாமல் அவர் மனதில் புருஷன் இல்லாத காந்திமதியின் உருவம் தெரிந்தது. வேகமாகத் தலையைக் குலுக்கி அவளின் நினைப்பை மனதில் இருந்து விரட்டியடித்தார்.

ஆனால் காந்திமதியால் அத்தனை எளிதாக சபரிநாதனை ஞாபகத்தில் இருந்து விரட்டித்தள்ள முடியவில்லை. கோபத்தில் குமுறினாள். ‘கள்ளப் பார்வை பாக்கறதுக்கு மட்டும் ஒமக்கு அறுதலி முண்டை வேணும்! ஆனா கட்டிக் கொள்றதுக்கு நேத்துச் சமைந்த கன்னிச் சிறுக்கி வேணும்! நடத்துவே உம்ம களவாணி ராசாங்கத்தை! வயசாக வயசாக மனசு சின்னப் பிள்ளைக உடம்புக்கு அலையுதாக்கும்… கட்டிட்டு வாரும், பாக்கேன் அந்தச் சிறுக்கி அழகையும்’ என்று காந்திமதி மனசுக்குள் பொருமி பொருமி பொங்கிப் போயிருந்தாள்.

சபரிநாதன் வேறு அவளை வெறுப்பேற்றும் விதமாக, திண்ணையில் அவளைப் பார்த்தாலே அழகான சின்ன வயசுப் பெண்ணை கட்டிக்கொள்ளப் போகிற பூரிப்பையும், செருக்கையும் சும்மா சும்மா தன் நடையில் காட்டிக்கொண்டிருந்தார். பொறுத்துக் கொண்டிருப்பாளா ஒருத்தி? அதுவும் காந்திமதி…

ஒருநாள் சபரிநாதன் அப்படி நடந்தபோது, விருட்டென்று வீட்டுக்குள் சென்று தடாலென்று கதவை அறைந்து சாத்தினாள். இது அவரின் மூஞ்சியில் அறைந்ததற்கு சமானம். ரத்தமாக சிவந்துவிட்டது அவருடைய முகம். அவமானத்தில் உடம்பெல்லாம் பதறியது. “பழி வாங்கிட்டா சிறுக்கி. ஒன்னை வச்சி அழகு பார்க்க புதுசாவா எவனும் வரப்போறான்? எனக்கு வரப்போறா பாரு பூலோக ரம்பை! ஒன்னை அவ வால்ல கட்டித்தான் வெளுக்கணும்” என்று அவளை வசை பாடினார். காந்திமதியின் மேல் இருந்த அத்தனை கோபமும் அவளுடைய அப்பா கோட்டைசாமியின் மேலும் பாய்ந்தது. அப்பாவியான கோட்டைசாமியை மனசுக்குள் “ஈர் எடுக்கக் கூலியாக பேன் கேட்கிற பிச்சைக்காரப் பயல்” என்று முனகினார்.

ஆனால் மூஞ்சியில் அறைந்த மாதிரி கதவைச் சாத்தியதெல்லாம் அவமானத்தில் சேர்த்தியே இல்லை என்பது போன்ற வேறு ஒரு சம்பவம் சபரிநாதனுக்கு அடுத்த வாரத்திலேயே நடந்தது.

சபரிநாதனின் வீட்டுக்குள் கோவில்பட்டியில் இருந்து வந்த அவரின் பெரிய மச்சான் இடது காலை எடுத்து வைத்து நுழைந்தார்.

“அடடே! வாங்க மச்சான்… ஏது இவ்வளவு தூரம்?”

“முக்கியமான ஜோலியா நெல்லை வந்தேன்.”

“ஜோலி கெடக்கட்டும் மொதல்ல உட்காருங்க.”

பெரிய மச்சான் விறைப்பாக உட்கார்ந்தார். முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, “போன வாரம் சுகுணா அவ ஆச்சிக்கு போன் பண்ணிப் பேசினா…”

“ஆமா ஆச்சிகிட்ட அவளுக்கு ரொம்பப் பிரியம்…”

“கல்லிடைக்குறிச்சியில நீங்க பொண்ணு பாத்து கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டதா சொன்னா.”

“ஆமா…” சபரிநாதன் அமைதியாக மூக்குப் பொடியை எடுத்து மூக்கில் தேய்த்துவிட்டு பேசாமல் இருந்தார்.

“நாங்க எங்க மரகதக்கா கல்யாணத்துக்கு அந்த காலத்லேயே நூறு பவுன் நகை செஞ்சு போட்டோம்…”

“மரகதமே போயாச்சி… இப்ப எதுக்கு மச்சான் அதெல்லாம்?”

“அதைபத்திதான் பேச வந்திருக்கேன்..”

பெரிய மச்சான் சொன்னதன் சுருக்கம்:

‘அந்த நூறு பவுன் நகைகளை புதுப் பொண்டாட்டிக்கு கொடுப்பது கூடாது; அவைகள் சபரிநாதனின் மகள்களுக்கு மட்டுமே சேர வேண்டும். வேறு யாருக்கும் அந்த நகைகளின் மேல் எந்தப் பாத்யதையும் கிடையாது. இப்போதே அந்த நூறு பவுன் நகைகளை எடைபோட்டு அவரிடம் ஒப்படைத்து விடவேண்டும். அவைகளை சரிசமமாகப் பிரித்து கர்த்தர் இல்லத்துக்காரர்களே மரகதக்காவின் மகள்களுக்கு கொடுத்து விடுவார்கள்.’

சபரிநாதனுக்கு மிகுந்த அவமானமாக இருந்தது. காந்திமதி செய்த அவமானமெல்லாம் வெறும் ஜூஜூபி என்று தோன்றியது.

ஒரு சமூக பாரம்பர்ய நடைமுறையை நினைவுபடுத்தி அதைச் செயல்படுத்த பெரிய மச்சான் துடிக்கிறார். ஆனால் தன்னை அவமதித்து விட்டதாக சபரிநாதன் குதித்தார். நகைகளைத் தரமுடியாது என்று கூச்சல் போட்டார். கோர்ட்டுக்கே போனாலும்கூட பயப்படமாட்டேன் என்றார்.

சபரிநாதன் பக்கம் நியாயம் இல்லைதான். அதற்காக பெரிய மச்சான் திரும்பிக் கூச்சல் எதுவும் போடவில்லை. கனமான பெருமூச்சுடன், “ஓ அப்ப மரகதக்கா நகைகளை நீங்க தரப்போறதா இல்லை?”

“ஆமா. நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி” இதையே சபரிநாதன் பல தடவைகள் திருப்பி திருப்பிச் சொன்னார்.

“அப்ப கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு ஓடைக்கலாம்னு பாக்குறீங்க… நீங்க தேங்கா உடைங்க, ஆனா எங்க கடைத் தேங்காயை எடுத்து ஓடைக்காதீங்க.!” பெரிய மச்சான் எழுந்து நின்றார்.

“தேங்கா ஒங்க கடைத் தேங்காய் கிடையாது மச்சான்! அது ஒங்க தோப்புத் தேங்கா! என் கடைக்கும் அது வந்து சேர்ந்தாச்சி! இப்ப அது என் கடைத் தேங்கா. அதை நான் யாருக்கு ஒடைக்கிறேன் என்பது என் பாடு! ஒங்களுக்கு அதில் உரிமையில்லை…”

பெரிய மச்சான் பதில் பேசாமல் வேகமாகப் படிகளில் இறங்கி திரும்பிக்கூடப் பார்க்காமல் வேகமாக வெளியேறினார்.

“அப்படி ஓடுவே…” ஆங்காரத்துடன் முனகிக்கொண்டே சபரிநாதன் மூக்குப் பொடியை நிறையவே எடுத்து காட்டமாக இழுத்தார். இப்படி ஒரு பிரச்னை வரும் என்று அவர் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அவருடைய மனதில் ஒரு துக்கம் நெகிழ்ந்து சுய இரக்கத்தில் உருகிக் கரைத்தது. தான் தப்புப் பண்ணிவிட்டோம் என்பது அவரது மனசாட்சிக்கு புரிந்துவிட்டது.

மரகதத்தின் அம்மா வீட்டில் அவளுக்குச் செய்துபோட்ட நகையைத் தூக்கி ராஜலக்ஷ்மிக்கு கொடுப்பதற்கு கொஞ்சம்கூட அவருக்கு உரிமை கிடையாதுதான். ஆனாலும் தான் செய்யப்போவது தவறுதான் என்று மச்சானிடம் ஒப்புக் கொள்வதற்கு அவருடைய வறட்டு சுயகெளரவம் இடம் தரவில்லை. அதனால்தான் ‘வரட்டும் பாப்பம்’ என்று வேட்டியை வரிந்து கட்டினார்.

கோவில்பட்டிக்காரர்கள் அவரைப்பற்றி இனி என்ன நினைத்தாலும் அவருக்கு கவலை கிடையாது. கல்லிடைக்குறிச்சிகாரர்கள்தான் தப்பாக அவரைப்பற்றி எதுவும் நினைத்துவிடக் கூடாது. இனிமேல் அவருக்குத் தேவை புது மாமியார் வீடுதானே தவிர, பழைய மாமியார் வீடு இல்லை.

இதே மன நிலையில் மகள் சுகுணாவைத் மொபைலில் தொடர்பு கொண்டார்.

“சொல்லுங்கப்பா…”

“ஒன் ஆச்சிக்கு நீ என்ன சொன்ன?”

“நா ஒண்ணும் சொல்லலையப்பா….” சுகுணா பயந்துகொண்டே இழுத்தாள்.

“நெசமாவா நீ ஒண்ணும் சொல்லலை?” அதட்டினார்.

“……………………….”

“ஒங்க எல்லாருக்கும் நான் கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்கலை. அப்படித்தானே?”

“அப்டி இல்லப்பா.”

“ஒன் அம்மா நகையை நான் ஒன் சின்னம்மாவுக்கு கொடுக்கிறதப்பத்தி மெனக்கிட்டு ஒன் ஆச்சிக்கு நீதான் வத்தி வெச்சிருக்கே…”

சுகுணாவின் கண்களில் நீர் முட்டியது. அமைதியாக இருந்தாள்.

“ஒன் பெரிய மாமன் இங்கன வந்து என்னல்லாம் கேட்டுட்டு போயிட்டார் தெரியுமா?”

“தெரியாம செஞ்சிட்டேன். என்னை மன்னிச்சிருங்கப்பா.”

“வெள்ளம் தலைக்கு மேல போயாச்சி தாயி. என்னோட மானம் மரியாதை எல்லாம் காத்துல பறந்தாச்சி. நான் ஒரு கிறுக்கன்! மண்டையைப் போடற வரைக்கும் பேசாம கிருஷ்ணா ராமான்னு இருந்திருக்கணும்… நீங்களும் வெளியூர்ல உக்காந்துக்கிட்டு எங்கப்பா ஒத்தையில வெந்ததையும் வேகாததையும் தின்னுக்கிட்டு கிடக்காரேன்னு மூக்கால அழுதிட்டு சும்மா இருந்திருப்பீங்க! நான் செத்ததும் ஒங்க அம்மா படத்துக்கு பக்கத்லேயே என் படத்தையும் மாட்டி வச்சிட்டு திதி வந்தா ரெண்டு பூ போட்டு பாயாசம் பண்ணிச் சாப்பிட்டுவிட்டு சாமி கும்பிட்டுட்டு ஒங்க பாட்டுக்கு தேமேன்னு இருந்திருப்பீங்க. அப்படி இருந்தாத்தான் ஒங்களுக்கும் சரிப்படும்… நா ஒருத்தியைப் பாத்து கட்டிக்கலாம்னு ஆசைப்பட்டா, ஆச்சிக்காரிக்கும் பூச்சிக்காரிக்கும் ஒடனே போனைப் போடுவீங்க…!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *