என்றைக்கும் தோன்றாத இலட்சணம், இன்றைக்கு புதிதாகத் தோன்றுவதுபோல, தெருவில்நடந்து சென்ற மணியரசியை, பார்த்த எல்லோருக்கும் ஆச்சரியம்தான். ஒப்பனைகளை. ஏற்றிக் கொண்ட முகத்தில், வெறியேறிப்போன வெண்ணிலாவின் கண்கள் சிவப்பாகி போனதைப் போல, நெற்றியில் விசாலமாக வைக்கப்பட்டிருந்தது குங்கும்ப்பொட்டு. காகிதப்பூவை மட்டுமே வைத்துப் பழக்கப்பட்டுப்போன, அள்ளி முடிய வழியற்ற கூந்தலில், மல்லிகைப் பூ சூடியிருந்தாள்.
யதார்த்ததிலிருந்து திடீரென மாறி விட்ட மணியரசியை, ” என்ன இப்டிச் சொல்லாமெக் கிள்ளாமெ மாறிப்னபோனீக’ என்ன விசேஷமா..?, என்றார் ஆறுமுகம். சிலர் ஒருபடி மேலே போய் ‘அடேங்கப்பா..!என்ன பயணமா என்றார்கள்.
‘இல்லை பொண்ணுக்கு, இன்னைக்குப் மாப்புளெ பேசி முடிக்கிறோம், அதாம் பொறப்புட்டேன் ‘
‘ அதானே சோத்துப்பானை தூக்குன தலையாச்சே, இப்டி பூக்கூடையைத் தூக்கி தலையிலெ வச்சிருக்கீங்களேன்னு கேட்டேன். உங்கட்டெ கேக்கப்போய்த்தான் தெரியிது., பரவாயில்லையே, மாப்ளே எந்த ஊரு, தெரிஞ்சுக்கலாமா..?
‘பக்கத்து ஊர்தான், நொண்டிக் கர்ணன் இருக்கார்ல அவரு பையந்தான்..’
‘வெள்ளெ வேட்டியும் சட்டையுமா வந்து, அம்பது காசு நிசாம் பாக்குப் போடுவாரே அவரா?, அவரு மயனககு கல்லாண வயசு ஆயிடுச்சா, சரி சரி உனக்கு செலவில்லை..’ என்றான் கோவிந்தராசு்.
‘அதெப்புடி, அவனோட மச்சினிச்சி விடுவாளா, அஞ்சு லட்சம் கேட்ருக்கா’ கொடுத்தாத்தான் நீட்ற கழுத்துலெ தாலியைக் கட்ட விடுவா’ ஹூம்கும்.. என்று சுளித்துக் கொண்டாள்.
‘அஞ்சு லட்சந்தானே, நீ பொறந்த வீட்லெ, உனக்கு என்ன செஞ்சு கிழிச்சாங்கே, இதாவது குடுக்குறாங்கெ, அந்த மொள்ளமாறிக் குடும்பத்திலெ பொறந்த மாப்புளைக்கு ரேட்டு கொஞ்சம் ஜாஸ்திதான், பரவாயில்லை, நல்லபடியா, கல்லாணத்தை முடிச்சிரு..’
சம்பாஷனைகள் முடிந்த நிலையில், ஆளுக்கொரு திசையில் நடந்தார்கள். திருமணநாள் நெருங்கியது. மகளின் திருமணத்திற்கு, பிரபலங்களை அழைப்பார்கள் என்று நினைத்தாள் மணியரசி. இது தொடர்பாக அந்தக் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் கேட்டார்கள். ‘அபூர்வராணி கல்லாணத்துக்கு, ஏற்பாடெல்லாம் பிரமாண்டமாச் செய்றீங்களா?’ என்று கேட்டார்கள்.
‘.. அவ புள்ளைக்குச் செலவு பண்றதே பெருசு, இதுவேறயாக்கும்’ என்று தட்டி கழித்தார்கள். இதைப் பற்றி எதையுமே பொருட்படுத்தாத மணியரசி, வீட்டுக்கும் வயல்வெளிக்கும் இடையே பொதி சுமக்கும் கழுதையாக நடந்தாள்.
நிச்சயித்த தேதியில், திருமண விழா மேளதாளங்களுடன் நடைபெற்றது. பிரபலங்கள் யாராவது வருகிறார்களா என, மணமண்டப வாயிலையே, மணியரசியும், அவளது மகனும் வழிமேல் விழி வைத்திருந்தார்கள். இதைப்பார்த்த அவளுடைய அக்கா, ‘பல்லுக்காளி என்ன ரோட்டையே பாத்துக்கிட்டு இருக்கா’ என்று, அவள் பங்குக்கு ஒரு வசைமாரியை உருவாக்கி வைது கொண்டிருந்தாள். முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில், முகத்தை விட மூக்கு பெரிதாக இருக்கின்ற உருவம் ஒன்று, இல்லத்தரசியுடன் மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்த மணியரசி வீட்டில், வேட்டி கட்டிய அவரது உறவினர்கள் சிலர், ஆரத்தியைக் கொண்டு வரச்சொல்லி, அவசரப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மணியரசியின் அக்கா மகள்களும், வீட்டுக்கு வாழ வந்து, விடியாமூஞ்சி என்று பெயரெடுத்த, மூன்று மருமக்களும், ஆரத்தி எடுத்து வரவேற்று அழைத்துச் சென்றனர்.
மங்களகரமான குங்குமம், சந்தனத்தை வாங்கிய மூக்குப்பெருத்த பிரபலத்தின் மனைவி ஜான்சி, முந்தனையில் போட்டு முடிந்து கொண்டாள். அவளுடைய கணவன் முன்வரிசையில் போய் அமர்ந்து விட்டான். பின்னிருக்கையில் இதனை கவ்வனித்துக் கொண்டிருந்த அ.பெ.பெருமாள், இந்த முடிச்சவிக்கிக்குத்ததான், ஆரத்தி தாம்பூலமா என்று, பக்கத்தில் இருந்தவர்களிடம் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார். ‘ஆமாங்க மணியரசி குடும்பத்தை நாசமாக்கனும்னே, இவனைக் கூட்டிட்டு வந்திருக்காங்கெ பாத்தீங்களா?’ என்றான் அருகில் இருந்தவன்.
இந்த உரையாடலைக் கேட்ட ஒருவன் ‘அவரு பெருமையப்பத்தி இவ்வளவு சொல்றீங்களே யாருங்க இவரு?’ என்றான். ‘இவனைக் கேக்குறியா, அவென் மூக்குப் போனமாதிரி, நினைச்ச மூப்புக்கு நடக்கிறவண்டா’ என்ற பெருமாள், ‘இந்தப்பய பெத்த புள்ளைகளுக்கு அடுத்தடுத்து அறுத்துக் கட்ற மூதேவிடா இந்தச் சனியன்’ என்றான். மல்லாம் உழைச்சுதான் சொத்துச் சேக்குறோம்..இந்தப் பயபுள்ளை, ஒரு புள்ளைக்கு மூணு கல்லாணம் பண்ணி சம்பாதிக்கிறாண்டா, இது தெரியாதா? இந்தா இந்தப்பயலுக்கு இன்னோரு கல்லாணம் ஆகும்போதுதாண்டா உனக்கு வெளங்கும், அதுவரை கொஞ்சம் பொறுடா’ என்றார்.
மேடையில் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டார்கள். மணமுடித்த மணமக்களுக்கு, இந்தப் பிரபலமும் அவரது மனைவியும் ஆசீர்வாதம் வழங்கினார்கள். அட்சதையை வாங்கி அடிப்பது போல எறிந்தாள், அவன் மனைவி.
இதனைப்பார்த்த மணியரசி உறவினர்கள்,’பாத்தியா அட்சதை போட்றதை எப்டி போட்றானு. எப்டியோ, மணியரசிக்கு, அவ குடும்பத்திலேயே மண்ணள்ளிப் போட்டுட்டாங்கே.. பாக்கலாம். சாப்பாடு போட்ருவாங்கெ போல.. புகையக்காணோம்’ என்று எழுந்து சென்றார்கள்.