முழுவிலக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 30, 2017
பார்வையிட்டோர்: 11,484 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கணேசானந்தனுக்கு தன்னுடைய பெயரைப் பிடித்திருந்தது; ஆனால் அது ஆபிரிக்காவுக்கு வரும் வரைக்கும்தான். இங்கே அவனுடைய பெயர் செய்தகூத்தை விவரிக்க முடியாது. போகிற இடமெல்லாம் முழுப் பெயரையும் எழுதும்படி கேட்பார்கள். ‘தாமோதிரம்பிள்ளை கணேசானந்தன்’ என்று விஸ்தாரமாக இவன் எழுதி முடிப்பதற்கிடையில் அவர்கள் தங்கள் சுருண்ட தலைமுடியை பிய்த்துக் கொண்டு நிற்பார்கள். குடும்பப் பெயர், நடுப்பெயர், கிறிஸ்டியன் பெயர், முதற்பெயர் என்று மாறி மாறி சில வேலைகளில் ‘தலையா, பூவா’ போட்டு ஒரு பேரை எழுதி வைப்பான். சில சமயங்களில் சண்டை போட்டும் பார்ப்பான். “நான் இந்து; எனக்கு கிறிஸ்டியன் பெயர் கிடையாது” என்று கெஞ்சினாலும் விடமாட்டார்கள். ஏதாவது ஒன்றை எழுதச்சொல்லி நிர்ப்பந்திப்பார்கள்.

ஒருமுறை உச்சக்கோபத்தில் தன்னுடைய முழுப் பெயரையும் இரண்டு வரிகளில் எழுதி “ஐயோ, என்னுடைய எல்லாப் பெயர்களும் இதற்குள்ளே அடக்கம்; உங்களுக்கு எந்தெந்தப் பெயர் தேவையோ அவற்றை இதிலிருந்து பிய்த்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டான். கடைசியில், வந்து பல வருடங்களுக்கு பிறகுதான் இதற்கான ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடித்தான். ‘கணேசானந்தன்’ என்ற பெயரை மூன்று பகுதிகளாக பிரித்து ‘கணே சா நந்தன்’ என்று அமைத்துக் கொண்டான். அவர்கள் விருப்பப்படியே எல்லாப் பெயர்களும் அதனுள் அடக்கம். இவனுக்கும் தொல்லை விட்டது.

ஆபிரிக்காவிலுள்ள அந்த குடிவரவு அலுவலகத்துக்கு இத்துடன் பலமுறை அவன் வந்து விட்டான். கொடுத்த பாரங்களையெல்லாம் வெகு நேர்த்தியாக பூர்த்தி செய்தான். பெயர்கள் இப்போது தொல்லை கொடுப்பதில்லை. பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து ஆபிரிக்காவிலேயே தங்கி விட்டதால் நிரந்தரக் குடியுரிமை விரைவிலேயே கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தான். மேலதிகாரியைப் பார்ப்பதற்காக அவன் காத்திருந்தான்.

அலுவலகம் இப்போது கொஞ்சம் சுறுசுறுப்பு அடையத் தொடங்கியிருந்தது. ஒவ்வொருவராக வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்து பைல்களை இழுத்து தூசு தட்டத் தொடங்கினார்கள். தோடம் பழக் கூடைக்காரி ஒருத்தி உள்ளே வந்து மேசை மேசையாகப் போய் விலைபேசி விற்றடிபயே வந்துகொண்டிருந்தாள். எல்லாமே தோல் žவி வைத்த நேர்த்தியான பழங்கள். தடிமாடு போன்ற ஒருத்தன் வந்து இலவசமாக ஒரு பழத்தை கைவிட்டு எடுத்துவிட்டான். கையை நீட்டி அடித்து அதைப் பறித்து விட்டு இடுப்பிலே கையை வைத்து ‘ஆர்த்த குரலெடுத்து’ அவளுடைய குலதர்மம் பிசகாமல் அவனைவையத் தொடங்கினாள் அவள். நல்ல நல்ல அசிங்கமான வார்த்தைகளை பொறுக்கியெடுத்து திட்டினாள். ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. எல்லாரும் தங்கள் தங்கள் தோடம்பழங்களில் கருமமே கண்ணாயிருந்தனர். பழத்தில் சிறு ஓட்டை துளைத்து, ஒரே உறிஞ்சிலே முழுச்சாற்றையும் உளிளிழுத்து, கொட்டைகளை ‘தூதூ’ என்று காலடியில் துப்பி, நிமிடத்தில் மூன்று நான்கு பழங்களை கணக்குத் தீர்க்கும் கலையில் அவர்கள் சூரர்கள்.

சங்கீதா ஆபிரிக்காவுக்கு வந்து கணேசானந்தனை பதிவுத் திருமணம் செய்து இரண்டு வருடங்களாகிவிட்டன. ஆனால் இவனுடைய சங்கடம் இன்னும் தீர்ந்தபாடில்லை. நிச்சயமாக குடியுரிமை கிடைக்கும் வரை பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை என்று சங்கீதா பிரதிக்ஞை செய்திருந்தாள். எத்தனையோ பேர் எத்தனையோ விதமான பிரதிக்ஞை எடுக்கிறார்கள். ஆனால் இவள் மங்கம்மா செய்தது போல் அவசரப்பட்டு இப்படி ஒரு சபதம் செய்து விட்டாளே! இவனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். காலை முடக்கி முரண்டு செய்யும் மாடுபோல மறுத்து விட்டாள்.

இவர்களுடைய காதல் யாழ்ப்பாணத்தில் வேம்படியில் அரும்பியது. கணேசானந்தன் அப்பொழுது சென்ட்ரல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய பள்ளி விட்டதோ இல்லையோ வேம்படி பள்ளி விடும் நேரமாகப் பார்த்து துடித்துக் கொண்டு சைக்கிளிலே பாய்ந்து போய்விடுவான். மணிக்கூட்டு வீதி வழியாக அவன் வேகமாக மிதிக்கவும் அவள் வரவும் நேரம் சரியாக இருக்கும். வெள்ளை மலரை அள்ளி வீசியதுபோல வெள்ளைச் žருடை தேவதையர்கள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களிலே இவள்தான் உயரம். வாழைத்தார் போல திரண்டிருக்கும் கூந்தலை இரட்டைச் சடையாகப் போட்டிருப்பாள். அவளுடைய விசேஷம் கண்கள்தான். சஞ்சலப்படும் கண்கள் என்று சொல்வார்களே, அப்படி ஒரு நிலையில் நில்லாத கண்கள். நிமர்ந்து ஒருமுறை கண்ணை வீசிவிட்டு போய்விடுவாள். அந்தக் காலத்திலேயே விடாமுயற்சிக்கு பேர் போனவன் கணேசானந்தன். ஒரு வருட காலம் இப்படித்தான் கண்ணிலேயே செலவழிந்தது.

புட்டுக்கு தேங்காய் போட்டதுபோல விட்டுவிட்டு தொடர்ந்த பெருமை கொண்டது இவர்கள் காதல். பல்கலைக் கழகத்தில் இவன் படிக்கப் போன பின்பு காதல் தொடர வழியின்றி தேங்கிவிட்டது. படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சமயம்தான் மறுபடி அவளுடைய தரிசனம் கிடைத்தது. கிடுகிடுவென்று வளர்ந்து விட்டாள். கண்கள் முகத்தில் சரிபாதியை அடைத்துக் கொண்டு கிடந்தன. முதல்முறையாக அவளுடன் பேசினான். இரண்டு முறை பல்கலைக் கழக தேர்வு எழுதியும் சரிவரவில்லையாம். பெற்றோருக்கு மாத்தறைக்கு வேலை மாற்றம் கிடைத்தபடியால் கொழும்பு விடுதி ஒன்றில் தங்கி கம்புயூட்டர் படிக்கிறாளாம். கம்புயூட்டர் ஒரு பாஷனாக இருந்த காலம் அது.

அந்த நாலு வருடங்கள் கணேசானந்தனுக்கு நிரந்தரமான வேலையில்லை. தொட்டு தொட்டு தற்காலிகமாக நிறைய வேலைகள் பார்த்தன். சங்கீதா ஒரு வங்கியிலே வேலைக்கு சேர்ந்து விட்டாள். அந்த சமயம்தான் அவனுக்கு ஒரு நண்பனின் உதவியால் ஆபிரிக்காவில் ஒரு வாத்தியார் உத்தியோகம் கிடைத்தது. மூன்று வருட ஒப்பந்தம். நல்ல சம்பளம். சங்கீதாவிடம் தன் காதலை வெளியிடமுன் நிலையான ஒரு வேலை கிடைக்கவேண்டும் என்ற அவன் பிரார்த்தனை நிறைவேறி விட்டது.

புறப்படுமுன் இவன் போய் சங்கீதாவிடம் விடை பெற்றது. ஒரு சுவையான சம்பவம். அதை எத்தனையோ தடவை தனிமையில் நினைத்து நினைத்து அனுபவித்திருக்கிறான். விடுதியிலே இவன் போய் கீழே அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். மேல் வீட்டிலிருந்து படிகளிலே குதித்து குதித்து அவள் சுபாவப்படி இறங்கி வந்தாள், தேவதை ஒன்று வானுலகில் இருந்து இறங்குவது போல. இவன் இருப்பதை அவள் காணவில்லை. கீழே இருந்த ஒரு நிலைக் கண்ணாடியின் முன் இளைக்க இளைக்க ஒரு செகண்ட் நின்று தலைமுடியை சரி செய்து கொண்டாள்; இமையை நீவி விட்டாள். திரும்பியவள் இவைனைக் கண்டு வெட்கித்துப் போனாள்.

ஒரு பெண் ஒருவனுக்காக தன்னை செம்மைப் படுத்துகிறாள் என்ற நினைவு அவனுக்கு எவ்வளவு களிப்பூட்டும்! அன்று தனிமையில் இருவரும் நெடுநேரம் கதைத்துக் கொண்டு இருந்தார்கள். அடுத்த நாள் அவன் வெளிநாடு போவதாக இருந்தான். அன்று எப்படியும் தன் காதல் மாளிகையின் மேல் கதவைத் தட்டுவது என்ற தீர்மானத்தோடுதான் அவன் வந்திருந்தான். மனத்தில் துணிவு இருந்த அளவுக்கு கையில் பலமில்லை. கடைசியில் பிரியும் சமயத்தில், மைமலான அந்த மழை நாளில் ஒரு மூலையில் அவளை தள்ளிக் கொண்டு போய் வைத்து, உத்தேசமாக அவள் இதழ்களை தேடி ஒரு முத்தம் பதித்துவிட்டான். பெட்டைக்கோழி செட்டைகளைப் படபடவென்று அடிப்பதுபோல் அவள் இரண்டுகைகளாலும் அவன் கழுத்தைக் கட்டி உதறினாள். அவள் தள்ளினாளா அல்லது அணைத்தாளா என்பது கடைசிவரை அவனுக்கு தெரியவில்லை.

பிளேனில் பறக்கும்போது அவளுடைய சிந்தனையாகவே இருந்தான். விமானத்தில் யோசித்து வைத்து பதில் எழுதும்படி அவள் ஒரு விடுகதையும் சொல்லியிருந்தாள். அவர்களடைய காதலுக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கிறதாம்.

‘ஒரு மரம், ஆனால் இரண்டு பூ அந்த மரம் என்ன? பூ என்ன?’

இவனும் யோசித்து, யோசித்து பார்த்தான்; புரிபடவில்லை. பன்னிரெண்டு வருடம் அவனைக் காக்க வைத்துவிட்டுத்தான் விடையைக் கூறினாள்.

‘மரம்: தென்னை மரம். பூ: தென்னம்பூ, தேங்காய்பூ’

அவன் ஆபிரிக்கா போன பிறகு அவர்கள் காதல் வலுப்பெற்றது கடிதங்கள் மூலமாகத்தான். துணிந்து இவன் தன் காதலை பிரகடனப்படுத்தினான். மூன்று வருட ஒப்பந்தக் காலம் முடிந்து இரண்டு மாத விடுப்பில் வந்தபோது எப்படியும் அவளை மணமுடித்து தன்னுடன் அழைத்துப்போவது என்றுதான் வந்திருந்தான். அந்தச் சமயத்திலேதான் அவன் தன் வாழ்நாளிலேயே மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய தவறு செய்ய நேரிட்டது.

இவனுக்கென்று கலியாணம் பேச பெரிசாய் ஒருவரும் அங்கே இல்லை. சங்கீதாவின் தகப்பனார் சபாபதி நல்ல மனுஷன். தாயும், தகப்பனும் பரிபூரண சம்மதத்தை தந்துவிட்டனர். ஒரே மகளை பிரிந்திருப்பது கஷ்டம்தான்; ஆனால் அவர்கள் அதைத் தாங்குவதற்கும் சித்தமாக இருந்தனர். மடைத்தனமாக காலை இழுத்தது கணேசானந்தன்தான்.

பத்து மணியளவில் இவனை உள்ளே கூப்பிட்டார் அதிகாரி. ஜன்னல்கள் கண்டுபிடிக்கமுன் கட்டிய கட்டிடம் அது. அதைக் கட்டிய கொத்தனாருக்கும் சூரியனுக்கும் ஜென்மப் பகை. கன்னங்கரேலென்று கதிரையை நிறைத்து இருந்த அதிகாரியைப் பார்ப்பதற்கு கண்களைப் பழக்கப்படுத்த சிறிது நேரம் எடுத்தது. முரசு தெரிய பளிச்சென்று பற்களைக் காட்டி சிரித்தார். முகம் சிநேகமாக இருந்தாலும் கண்கள் தீர்க்கமாக கணக்குப் போட்டபடியே இருந்தன.

இந்த அதிகாரியை இதற்கு முன்பும் பல தடவை பார்த்திருக்கிறான்; இருவரும் தங்கள் சேம நலன்களை ‘ஹவ்தி பொடி, பொடி பைன், குஸே, குஸே’, ‘ஹவ்தி பொடி, பொடி பைன், குஸே, குஸே’ என்று திருப்பித் திருப்பி சொல்லி விசாரித்துக் கொண்டார்கள். இந்த சேம விசாரிப்பு ஐந்து நிமிடங்கள் வரை தொடர்ந்தது. ‘உங்களுடைய நலம் எப்படி?’, ‘பெற்றோர் நலம் எப்படி?’, ‘மனைவி நலம் எப்படி?’, ‘பிள்ளைகள் நலம் எப்படி?’, ‘பக்கத்து வீட்டுக்காரர் எப்படி?’ என்ற இந்த நலன் விசாரிப்புகள் எட்டு முழ வேட்டிபோல முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும்.

அதிகாரி கோப்பிலே ஒரு சிறிய சிக்கல் இருக்கிறது என்றும் அதற்கு தான் விரைவிலேயே சட்டவிலக்கு அளிப்பதாகவும் நிரந்தர குடியுரிமை இரண்டே மாதத்தில் கிடைத்துவிடும் என்றும் உறுதி கூறினார்.

கணேசானந்தன் வீட்டுக்கு வந்து நடந்த விபரத்தை மனைவியிடம் கூறினான். அவளுக்கும் சப்பென்று ஆகிவிட்டது. இந்த முறை கட்டாயம் கிடைக்கும் என்று அவள் மிக்க எதிர்பார்போடு இருந்தாள்.

அன்றிரவு சங்கீதா’ வ்வூவ்வூவும், ஓக்ரா சூப்பும்’ செய்திருந்தாள். இந்த இரண்டு வருடத்திலே அவள் ஆபிரிக்கச் சாப்பாட்டு முறைகளை ஒரு ஆவேசத்துடன் கற்றுத் தேர்ந்து விட்டாள். அவள் ஒரு காரணம் வைத்திருந்தாள். ஆபிரிக்காவிலேயே நிரந்தர பிரஜையாக தங்கிவிடுவது என்று முடிவெடுத்த பிறகு எவ்வளவு žக்கிரம் முடியுமோ அவ்வளவு žக்கிரம் அவளுடைய பழக்கவழக்கங்கள், சாப்பாடு, கலாச்சாரத்துடன் ஒன்றிவிட வேண்டும் என்பது அவள் வாதம். ‘உங்களுடைய தேசத்து பழக்கவழக்கங்கள் அவ்வளவு உயர்ந்ததென்றால் ஏன் நாடு விட்டு நாடு வந்தீர்கள்?’ என்பதுதான் அவளுடைய கேள்வி.

‘வ்வூவ்வூ’ என்பது யாழ்ப்பாணத்து களிமாதிரி. ஆனால் பத்து மடங்கு பவர் கூட, விஷயம் தெரியாதவர்கள் அவசரப்பட்டு ஒரு விள்ளல் எடுத்து வாயிலே போட்டால் அது தொண்டைக் குழியிலே போய் அங்கேயே தங்கிவிடும். கீழுக்கும் இறங்காது, மேலுக்கும் போகாது. அது வயிற்றில் போய் சேர்வதற்கிடையில் உயிர் பிரிந்து விடும். இதற்கென்று பிரத்தியேகமான ஒரு சூப். அதுதான் ஓக்ரா சூப்; வழுவழுவென்று இருக்கும். வ்வூவ்வை எடுத்து இந்த சூப்பில் தோய்த்து வாயில் போட்டால் அது அப்படியே நழுவிக் கொண்டு போய் வயிற்றிலே விழுந்துவிடும்.

தொடக்கத்தில் இது நல்லாகத்தான் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் சாப்பிட முடியுமா? தேவாமிர்தமென்றாலும் ஒரு நாளைக்கு அலுக்கத்தானே செய்யும். ஒரு நாள் இவன் நாக்கிலே சனி. “மெய்யே, ஒரு நாளைக்கு புட்டு செய்யுமென்; கனநாள் சாப்பிட்டு” என்று சொல்லி விட்டான். அவளுக்கு அது பிடிக்கவில்லை. வெஞ்சினம் கொண்ட வேங்கைபோல žறினாள். “உங்களுக்கு புட்டும் முசுட்டை இலை வறையும், விளைமீனும், பலாப்பழமும் வேணுமெண்டால் என்னத்துக்கு சிலோனை விட்டு வெளிக்கிட்ட நீங்கள். அங்கைபோய் அடிவாங்கிக் கொண்டு குசாலாய் இருக்க வேண்டியதுதானே? இது எங்களுக்கு தஞ்சம் கொடுத்த நாடு. இவர்களுடைய சாப்பாடுதான் இனிமேல் எங்களுடைய சாப்பாடு” என்று அடித்துக் கூறிவிட்டாள். ‘அந்தச் சிவபிரானே கேவலம் உதிர்ந்த புட்டுக்காக மண் சுமந்து அரிமர்த்தன பாண்டியனிடம் பொற்பிரம்படி வாங்கினானே! இங்கே நான் கேவலம் சொற் பிரம்படி தானே பெற்றேன்? என்று மல்லாக்காக படுத்துக் மனதை தேற்றிக்கொண்டான். அதற்குப் பிறகு கணேசானந்தனுக்கு புட்டு சாப்பிடும் ஆசையே வேரோடு போய் விட்டது.

புட்டும், தேங்காய்ப்பூவும் போன்ற அவனுடைய காதல் வாழ்க்கை இப்படித்தான் எட்டு வருடங்கள் தேங்காய்ப்பூவாக தேய்ந்து போயிற்று. இரண்டாவது ஒப்பந்தத்தை ஏற்றுவிட்டு கணேசானந்தன் பயணச்žட்டும், விசாவும் ஒழுங்கு பண்ணிய பிறகு தான் அந்த இடி வந்து விழுந்தது. இவள் தன்னை மறந்து விடும்படியும் தனக்கு கலியாணமே வேண்டாமென்றும் எழுதி விட்டாள். எண்பத்திமூன்று கலவரத்தில் சபாபதி அநியாயமாக மனைவியைப் பறிகொடுத்து விட்டார். அதிலிருந்து புத்தி பேதலித்தவர் போல புசத்திக் கொண்டு திரிந்தார். சங்கீதாவால் அவரை அந்த நிலையில் தனித்து விட்டு விட்டு வரமுடியவில்லை. எந்தப் பெண்தான் அப்படி பெற்ற தகப்பனை நிர்க்கதியாக விட்டு வர சம்மதிப்பாள்?

சங்கீதா நக்கீரர் பரம்பரையைச் சேர்ந்தவள் என்பதை முதல் தடவையாக கணேசானந்தன் உணர்ந்தது அப்போதுதான். அவளில் அவன் உயிரையே வைத்திருந்தான். அவளும் அப்படித்தான். ஆனால் அவளுடைய பிடிவாத குணம்தான் அவனால் நம்பமுடியாததாக இருந்தது. அந்த எட்டு வருடங்களும் அவளை அசைக்க முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவளுடைய தகப்பனார் இறந்தபோதுதான் கண்­ரில் தோய்த்து ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அப்பொழுதுதான் முதன்முறையாக அவனுக்கு அவளுடைய காதலின் ஆழம் தெரிந்தது.

குடியுரிமைக்கும், பிள்ளை பெற்றுக்கொள்வதற்கும் என்ன சம்பந்தம்? இப்படி பிடிவாதமாக இருக்கிறாளே? குழந்தைகள் என்றால் அவளுக்கு உயிர். நேரம் போவது தெரியாமல் விளையாடிக்கொண்டிருப்பாள். ஆனால் குடியுரிமை கிடைப்பதற்கிடையில் கருத்தரிக்காமல் இருக்கவேண்டும் என்பதில் எதற்காக இவ்வளவு எச்சரிக்கை? ‘பன்னிரெண்டு வருடங்கள் பாழாகிவிட்டதே’ என்ற யோசனைகூட இல்லையா அவளுக்கு? என்ன பிடிவாதம்?

மீன்காரி ஒருத்தி அவர்கள் வீட்டுக்கு வாடிக்கையாக வந்துபோவாள். தொடை சைஸ் ‘கூட்டா’ மீன்களை கூடையிலே வைத்து தூக்கிக்கொண்டு ஒயிலாக நடந்து வருவாள். தலையிலே வைத்த கூடையை கையாலேயே பிடித்துக்கொண்டு வரும் பழக்கமெல்லாம் அங்கே கிடையாது. கரகாட்டக்காரனுடைய கரகம்போல கூடை தலையிலே ஒட்டிவைத்தது போல இருக்கும். இப்படி மீன்காரிகள், நாப்பது கிலோ எடையை தலையில் சுமந்தபடி, மடித்த வில்லுக்கத்தியை நிமித்தியது போன்ற முதுகிலே ஒரு குழந்தையையும் கட்டிக்கொண்டு, ‘கை வீசம்மா கை வீசு’ என்று இரண்டு கைகளையும் வீசிக் கொண்டு, ஆபிரிக்காவின் சிவப்பு மண் புழுதியை கிளப்பியபடி, பரந்து விரிந்த ‘டம்பளா’ மரங்களின் நிழலை ஆற அமர அநுபவித்தபடி வரும் இந்த அதிசயத்தை உலகத்திலேயே ஆபிரிக்காவில் மட்டும் தான் பார்க்கலாம்.

கூட்டா மீன் குழம்பு நல்ல ருசியாக இருக்கும். பெரிய பெரிய துண்டங்களாக வெட்டித்தான் அதை குழம்பு வைப்பார்கள். ஆபிரிக்காவில் ஒரு மிளகாய் இருக்கிறது. பெயர் ‘ஸ்மோல்பெப்பே’. உருண்டையாக, சிவப்பாக பார்த்தால் வெக சாதுவாக இருக்கும். காரம் நாலரைக்கட்டைக்கு தூக்கும். ‘பாம்’ எண்ணெயோ ரத்தச் சிவப்பாக இருக்கும். பதமாக வெட்டிய மரவள்ளி இலையையும மீன் துண்டங்களையும் இந்த என்ணெயில் மிதக்கவிட்டு, மிளகாயையும் வதக்கிப்போட்டு, கொறுக்காப்புளியும் சேர்த்து, ஒரு குழம்பு வைத்தால் அந்த வாசனையே ஊரைக் கூட்டிவிடும்.

சங்கீதாவுக்கு மீன் என்றால் பிடிக்கும்; அதிலும் மீன்காரியுடன் பேரம் பேசுவது இன்னொரு சுவையான விஷயம். பேரம் என்றால் சங்கீதத்தில் வரும் நிரவல் போல் சூடுபிடித்துக் கொண்டே போகும். அடிமட்ட விலை தரைதட்டியவுடன் மீன்காரி ஆத்தாமல் “யூ லவ்மீ” என்று ஓலமிடுவாள். அவளுடைய பாஷையில் ” நீ என்னைக் காதலிக்கிறாயல்லவா! இப்படி என்னை படுத்தலாமா?” என்று பொருள். அப்படி அவள் சரணாகதி அடைந்த பிறகுதான் பேரம் முடிவுபெறும்.

சங்கீதா மீன்காரிக்கு ‘யூலவ்மீ’ என்றே பெயர் வைத்துவிட்டாள். இவர்களுடைய மீன் பேரச் சண்டையை ஆர்வத்தோடு அவதானித்தபடி இருக்கும் அவள் முகத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் குழந்தை. அது சிணுங்கி சங்கிதா கண்டதில்லை. இரண்டு கண்களும் இரண்டு வெள்ளி மணிகள்போல மினுங்கும். சங்கீதா அந்தக் குழந்தைகைக்ம் ஒரு பெயர் வைத்திருந்தாள். கரிக்குருவி.

கணேசானந்தன் பள்ளியில் இருந்து வந்ததும் சங்கீதா படபடவென்று வாய்ப்பாடு ஒப்பிப்பது போல அன்றையச் சங்கதிகளைச் சொல்லுவாள். அதிலே கரிக்குருவியைப் பற்றியும் ஒரு அத்தியாயம் கட்டாயம் இருக்கும். அப்பொழுதெல்லாம் கணேசானந்தன், ‘இப்படி குழந்தைமேலே ஆசையுள்ளவள் எப்படித்தான் இந்த விஷயத்தில் மட்டும் இவ்வளவு உஷாராக இருக்கிறாளோ!’ என்று நினைத்துக் கொள்வான்.

கரிக்குருவி உண்மையிலேயே யூலவ்மீயின் குழந்தையல்ல; அவளுடைய தங்கை ஓனைஸாவின் பிள்ளை. ஓனைஸாவுக்கு வயது பதினைந்துதான்; ஓட்டு மாங்கன்று போல இருப்பாள்; இன்னும் பள்ளியிலே படிக்கிறாள். பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் ‘மன்ஸாரே’ என்ற மன்மதனின் மோகத்தில் விழுந்து அவனுடன் சரசமாடி செய்து கொண்டே கந்தர்வ திருமணத்தின் பெறுபேறுதான் கரிக்குருவி. கரிக்குருவி பிறந்தபோது ஓனைஸாவின் பெற்றோர்களுக்க அளவற்ற சந்தோசமாம்.

களவாய்ப் போட்ட žட்டுக்காசைத் தைலாப் பெட்டியில் வைத்து காப்பதுபோல விரதம் காக்கும் கற்புக்கரசிகளை ஆபிரிக்காவில் காணமுடியாது. ஒரு பெண் பருவமடைந்ததும் எவ்வளவு žக்கிரம் முடியுமோ அவ்வளவு žக்கிரம் அவள் தன் கருவளத்தை உலகுக்கு காட்டிவிட வேண்டும். ஒருபிள்ளை பெற்றுவிட்டால் அவள் அந்தஸ்து உயர்ந்துவிடும். அவளை முடிப்பதற்கு ஆடர்கள் போட்டி போடுவார்கள். ஒரு பெண்ணின் உண்மையான விலைமதிப்பு அவளுடைய பிள்ளை பெறம் தகுதியை வைத்துத்தான் அங்கே நிர்ணயிக்கப்படுகிறது.

அது ஒரு பெண்வழிச் சமுதாயமானபடியால் அங்கேயெல்லாம் ஒரு ஆணைப்பார்த்து ‘உனக்கு எத்தனை பிள்ளைகள்?’ என்று மறந்து போயும் கேட்கக்கூடாது. அடிக்க வந்து விடுவார்கள். அவர்களுக்கே அது தெரியாது. கணேசானந்தன் படிப்பிக்கும் பள்ளியிலே இப்படித்தான் அடிக்கடி பெண் பிள்ளைகள் மூன்று, நான்கு மாசங்களுக்கு மறைந்து விடுவார்கள். கேட்டால் ‘பிரசவம்’ என்று வெகு சாதாரணமாக சொல்லிவிட்டு இவன் தலையை குனிவதைப் பார்த்து சிரிப்பார்கள்.

ஆனால் யூலவ்மீக்கு ஏற்கனவே ஏழு பிள்ளைகள். அவளுக்கு கரிக்குருவியும் வந்து சேர்ந்ததில் கொஞ்சம் கஷ்டம்தான் ‘யாராவது இந்தப் பிள்ளையை கேட்டால் கொடுத்துவிடுவேன்’ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய தங்கை படிப்பை முடிக்கும்வரை கரிக்குருவியை யூலவ்மீதான் வளர்த்தெடுக்க வேண்டுமாம்.

கணேசானந்தன் தன் மனைவிக்கும் ஆசிரியையாக ஒரு சிறிய பள்ளியிலே வேலை பிடித்துக்கொடுத்திருந்தான். வங்கியிலே வேலை செய்தவள் இப்படி வந்து ஒரு ஓட்டைப் பள்ளியிலே வேலை பார்க்கவேண்டி வந்துவிட்டதே என்று இவனுக்கு ஆதங்கம்தான். ஆனால் சங்கீதா மிகவும் மகிழ்ச்சியுடனேதான் அந்த வேலையை ஏற்றுக்கொண்டாள். இவளுடைய பாடங்கள் சுகாதாரமும், ஆங்கிலமும். அந்தச் சின்னச் சின்ன முகங்களை பார்த்துக்கொண்டே பாடம் சொல்லிக் கொடுப்பதில் தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்துவிடுவாள். பள்ளி முடிந்ததும் இந்தப் பாலர்களெல்லாம் தங்கள் தங்கள் கதிரைகளைத்தூக்கி தலைமேல் வைத்துக்கொண்டு, புத்தகங்களையும் முதுகில் கட்டியபடி, சிட்டுக்கள் போல கூவிக்கொண்டு வீட்டுக்கு பறந்து போகும்போது இவள் வயிற்றை என்னவோ செய்யும்.

கணேசானந்தன் திருநீலகண்ட நாயனாருடைய திண்டாட்டத்தில் இருந்தான். பரத்தையிடம் இவர் போய் வந்தது தெரிந்ததும் ‘எம்மைத் தொடாதீர்; திருநீலகண்டம்மீது ஆணை’ என்று சாபம் இட்டுவிட்டாள் மனைவி. கணேசானந்தன் என்ன நாயனாரா தொடாமல் இருக்க? பன்னிரெண்டு வருடம் காத்திருந்து அடைந்த மனைவியை பக்கத்திலே வைத்துக் கொண்டு பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பது எவ்வளவு கொடூரம்?

குடிவரவு அலுவலகத்து பதிகம் அதிகாரி கூறியது போல இரண்டு மாதத்திலேயே குடியுரிமை பத்திரம் கிடைத்து விட்டது. திருவானைக்காவில் பாடியவுடன் கோயில் கதவு திறந்து கொண்டது அல்லவா? குடியுரிமைச் žட்டு இவன் கையிலே இருந்தது. இனிமேல் எந்தக் கதவுகள் அவனுக்கு சாத்தியிருக்கும்? இரண்டு வருடங்கள் இப்படியாக அநியாயமாகப் பலிபோய் விட்டதே! அவை எப்படிப்பட்ட மகத்தான இரண்டு வருடங்கள் என்பதை பின்னாலேதான் கணேசானந்தன் உணர்ந்து கொள்வான்.

திருவானைக்காவுக்கு டிக்கெட் கிடைத்ததும் கணேசானந்தன் முற்றிலும் மாறிவிட்டான். ‘அடையா நெடுங்கதவையே’ ஜபித்துக் கொண்டிருந்தான். ஒரே நினைப்புதான் மற்ற-ல்லாம் மறந்துவிட்டான். பள்ளிக்கூடத்தை மறந்தான்; பிள்ளைகளை மறந்தான்; ஹ’ஸ்டரி பாடத்தை மறந்தான். இராவணனுடைய நிலைதான் அவனுக்கும்.

‘கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான் உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப்பெற்ற வரனையும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்திலாதான்’

கம்பரைப் படிக்காத ஆபிரிக்கப் பிரின்ஸ’பாலுக்கு இது எல்லாம் எங்கே விளங்கப் போகிறது? பள்ளிக் கூடம் விட்டதும். கணேசானந்தன் கோடடித்ததுபோல நேராக வீட்டுக்கு ஓடியதன் மர்மம் அவருக்கு புரியவில்லை. ஒருமுறை அவசரமாக நேர அட்டவணை போட வேண்டியிருந்தது. இவன் கவலைப்படாமல் வீட்டுக்கு ஓடிவிட்டான். நேர அட்டவனை போடுவதில் கணேசானந்தன் அடிக்க ஆளில்லை. இந்த திறமையை வைத்துத்தான் அவன் கடகடவென்று ஆபிரிக்காவில் முன்னுக்கு வந்தவன். இவனுடைய பிரின்ஸ’பாலுக்கு இந்த ஒரு விஷயம் மாத்திரம் ஓடாது. India man has magic என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். ஒருமுறை அவர் அட்டவணை போட்ட விண்ணாணத்தை இப்பவும் சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள். அந்த அட்டவணையின்படி ஒரு கிளாஸ’ல் மூன்று வாத்திமார்கள் ஒரே சமயத்தில் படிப்பிக்க வந்துவிட்டார்களாம். அதை கணேசானந்தன்தான் பிறகு ஒருமாதிரி சரிக் கட்டினானாம்.

கணேசானந்தனின் பிரயாசை கடைசியில் ஒருநாள் பலித்தது. ஆறே மாத காலத்தில் சங்கீதாவிடம் அவன் ஆவலுடன் எதிர்பார்த்த மாற்றம் தெரியத் தொடங்கியது. முன்பு விரும்பிச் சாப்பிட்டதெல்லாவற்றையும் இப்ப தூக்கி எறிந்தாள். மீன்குழம்பு என்றால் பிடிப்பதில்லை; யூலவ்மீயை தூரத்தில் பார்த்தாலே ஒடி ஒழிந்து கொள்வாள்.

ஒரு நல்ல நாளில் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு நர்ஸ’ங்ஹோமுக்கு ‘செக்கப்பிற்கு’ போனான் கணேசானந்தன். பிரசவத்தை அங்கேயே வைப்பதென்று நினைத்திருந்தான். ஆபிரிக்காவில் வசதிகள் அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. வெளிநாடுகளில் படித்த டாக்டர்களும், நர்ஸ்மார்களும்தான் அங்கே வேலை செய்தார்கள். ஆனாலும், ‘போதிய உபகரணங்களும், மருந்துகளும் இல்லாவிட்டால்?’ என்ற கவலை அவனுக்கிருந்தது.

சங்கீதா இவன் பக்கத்தில் இருந்து நெளிந்தாள். இவன் திரும்பிப் பார்த்தான். இவனுக்காகப் பன்னிரெண்டு வருடங்கள் தவம் செய்தவளல்லவா? எந்தப் பெண்தான் இப்படியான தியாகத்தை செய்ய முன்வருவாள்? நினைக்கும்போதெல்லாம் இவனுக்கு அவள்மேல் அன்பு சுரந்தது.

மெய்கண்டான் கலண்டர் பொய் சொல்லாது. இப்ப அவளுக்கு மூன்று மாதம் தள்ளிப்போய்விட்டது. அடிக்கடி வாந்தி வேறு வருகிறது என்கிறாள். மாங்காய் பிஞ்சையும், ‘கோலா நட்டையும்’ ஆர்வத்தோடு சப்பியபடியே இருக்கிறாள். நடக்க அவளுக்குத் தெரியாது. துள்ளித்தான் திரிவாள்; இப்போது அடிக்கடி சோர்ந்துபோய் காணப்படுகிறாள்; ‘தூக்கம் வருவதில்லை; தலை சுற்றி மயக்கம் வருகிறது’ என்று சொல்கிறாள். பாடசாலைக்கு கூட இரண்டு நாளாக போகவில்லை.

அவளுடைய வயிற்றை பார்த்தான். அது ஆலிலை அளவுக்கு சிறுத்து வழுவழென்று இருந்தது. இந்தச் சிறிய வயிற்றிலிருந்து எப்படி இன்னொரு உயிர் வரும்? சடையைப் பார்த்தான். அது எப்போதும் போல் இப்பவும் கருநாகமாக கைப்பிடிக்குள் அடங்காமல் இருந்தது. காதோர மயிர் கற்றைகளை ஆபிரிக்கர்கள் செய்வதுபோல எலிவாலாகப் பின்னி நுனியில் நீளமாக மணிகள் கோத்து கட்டியிருந்தாள். அதுவும் பார்க்க ஒரு அழகாகத்தான் இருந்தது. குனிந்து அவள் காதருகே “உம்மைப் பார்க்க ஒரு சின்னப் பெட்டைபோல இருக்கு” என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சொன்னான். அவள் கீழ் கண்ணால் பார்த்தபடி தலையை வெடுக்கென்று திருப்ப அந்த மணிகள் கிணுகிணுவென்று ஆடின.

அந்த நேரம் பார்த்து டாக்டர் கையிலே கனரிப்போர்டுகளுடன் அவசரமாக வந்தார். கணேசானந்தன் எதிர்பார்த்ததுபோல ‘கன்கிராட்ஜுலேசன்ஸ்’ என்று அவர் கூறவில்லை. சிறிது நேரம் இவர்களையே பார்த்தபடி இருந்தார். பிறக மடிபடியும் ரிப்போர்டுகளை சரிபார்த்துக் கொண்டார். இன்னொரு முறை இவர்கள் முகத்தை நோக்கி யோசித்தபடியே மெதுவாக “நீங்கள் எதிர்பார்ப்பதுபோல இல்லை” என்றார். கணேசானந்தன் அதிர்ச்சியடைந்தவனாக “என்ன? கர்ப்பம் இல்லை என்றால் வேறு ஏதாவது வருத்தமா?” என்றான்.

அவர் சிறிது மௌனம் சாதித்துவிட்டு “இல்லை, இல்லை உங்கள் மனைவிக்கு மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்டது, அதாவது menopause” என்றார்.

விக்கித்துப்போய் இவர்கள் ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். “என்ன டாக்டர், உண்மையாகவா? என் மனைவிக்கு 39 வயதுதான் ஆகிறது” என்றான்.

“ஆசியப் பெண்களுக்கு பொதுவாக 40-45 வயதிலேயே முழுவிலக்கு வந்து விடுகிறது. அவர்கள் பூப்பெய்திய காலத்திலிருந்து அநேகமாக முப்பது வருடங்கள் கருவளம் தொடரும். உங்கள் மனைவி எத்தனையாவது வயதில் பருவமடைந்தார்?” என்றார்.

கணேசானந்தன் தன் மனைவியைப பார்த்தான். அவள் கண்களிலே இப்போது நீர் கட்டிவிட்டது. சன்னமான குரலில் “பத்து” என்றாள்.

“அதுதான் சொன்னேன், முப்பது வருடங்கள் உங்கள் மனைவி கருவளம் உள்ளவராக இருந்திருக்கிறார். இனிமேல் கருத்தரிக்கும் சாத்தியக் கூறு இல்லை” என்றார் டாக்டர்.

முதல் முறையாக அவன் மனைவி டாக்டரிடம் வேசினாள். “இதற்கு மருந்துகள் ஒன்றும் இல்லையா, டாக்டர்? நாங்கள் மணம்முடித்து இரண்டே வருடங்கள்தான் ஆகின்றன.”

அப்பொழுது டாக்டர் சொன்னார்: “இதற்கு மருந்துகளே இல்லை. அம்மா. ஒரு பெண் பிறக்கும் போதே அவளுக்கு எத்தனை கருமுட்டைகள் என்று அவளுடைய கர்ப்பப் பையில் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. என்னதான் தலைகீழாக நின்றாலும் அதை மாற்ற முடியாது.”

அவனால் தன் மனைவியின் முகத்தை பார்க்கவே முடியவில்லை. திரும்பி வரும்போது வழிநெடுக விம்மிக்கொண்டே வந்தாள். திடீரென்று அவள் அரற்றினாள்: “ஐயோ! பிரம்மா எல்லாருக்கும் தலையிலே எழுதுவான்; எனக்கு மட்டும் கர்ப்பப் பையில் எழுதிவிட்டானே!” என்று இரண்டு கைகளையும் தலையிலே வைத்துக் கோவென்று கதறினாள்.

ஒரு நாள் கணேசானந்தன் நித்திரையாய் இருந்தபோது இவள் அவனை உலுக்கி எழுப்பினாள். அவன் எழும்பி பார்த்தபோது இவள் தலைவிரி கோலமாக அழுதபடி இருந்தாள். “பன்னிரெண்டு வருடங்களாக படித்தேன்; பரீட்சை எழுதவில்லையே! பன்னிரெண்டு வருடங்களாக சமைத்தேன்; சாப்பிடவில்லையே! நான் என்ன செய்ய?” என்று தலையிலே அடிக்கத் தொடங்கி விட்டாள்.

இப்படி அடிக்கடி இவர் தலையிலே அடிக்கத் தொடங்கியதும் கணேசானந்தனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘திடீர், திடீர் என்று சன்னதம் வந்ததுபோல இவள் நடக்கிறாளே!இது படுத்தலாமா? இப்படியே கட்டுக்கடங்காமல் போனால் டாக்டரிடம் போய் யோசனை கேட்க வேண்டியதுதான்’ என்று முடிவு செய்துகொண்டான்.

சில காலம் இப்படியோ போய்விட்டது. அவள் பேருக்கு மறுபடியும் பள்ளிக்கூடம் போய் வரத் தொடங்கினாள். ஆனால் சிற்சில வேளைகளில் அவளுடைய நிலைகுத்திய பார்வையும், அசாதாரணமான செய்கையும் இவனைக்கூட அச்சப்பட வைத்தன.

ஒரு நாள் அதிகாலை மூன்று மணியிருக்கும். கணேசானந்தன் திடீர் என்று விழிப்பு வந்து எழுந்தான். பக்கத்திலே தடவிப் பார்த்தான். இவளைக் காணவில்லை. தேடிப்போன இவன் கண்ட காட்சி அதிர்ச்சி தருவதாக இருந்தது. சமையலறைக்கும், வரவேற்பறைக்கும் இடையில் உள்ள ஓடையில் இவள் சுவரிலே தலையைச் சாய்த்து உட்கார்ந்திருந்தாள். இவள் உடல் எல்லாம் வேர்த்து தெப்பமாகியிருந்தது.

இவன் ஒன்றுமே பேசவில்லை. பக்கத்திலேபோய் அமர்ந்து கொண்டான். அவள் தலையை வருடினான். சடுதியாக திரும்பி அவனைப் பார்த்து நெஞ்சு சட்டையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்; “நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்? பன்னிரெண்டு வருடங்கள் எனக்காக காத்திருந்தீர்களே? இதற்காகத்தானா? உங்கள் பிள்ளையை என் வயிற்றில் சுமக்கவேண்டும் என்று தவம் செய்தேனே!என் அசட்டுப் பிடிவாதத்தினால் எல்லாத்தையும் இழந்து விட்டேனே!”

“ச்ž, கண்ணைத் துடையும். ஏதோ உலகம் கவிழ்ந்ததுபோல? இது என்ன?”

“குதிரை போனபின் லாயத்தைப் பூட்டி என்ன பயன்? நான் இப்பொழுது என்ன? பெண்ணா? இல்லை, ஆணா? அல்லது பேடியா? பெண்மை இல்லாத ஒரு பெண்ணை எப்படி அழைப்பது? இனி நான் ஒரு எண்ணிக்கைக்கு மாத்திரமே; என்னால் ஒரு பிரயோசனமும் கிடையாது.”

“இது என்ன விசர்க் கதை? எல்லாருக்கும் வருகிறதுதானே! சங்ககாலக் கணக்கின்படி இது ஏழாவது வாசல்; அதாவது ‘பேரிளம்பெண்’. இனிமேல்தான் வாழ்க்கையின் ருசியே தெரியப் போகிறது” என்றான் அவன், முகத்தில் வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்சிரிப்புடன்.

“உங்களுக்கு எங்கே விளங்கப் போகுது? நீங்களும் ஒரு ஆண்தானே! இது கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை. எனக்கு வேணும். கடவுளுடைய வரப்பிரசாதத்தை என் ஆணவத்தினால் வேண்டமென்றே இரண்டு வருடங்கள் தள்ளி வைத்தேன். கருவளம் இருந்தபோது நான் அதை மதிக்கவில்லை. ஆபிரிக்கர்கள் அதை எப்படி போற்றுகிறார்கள்! இல்லாவிட்டால் எங்கள் நாட்டு சிறுமைகள் தாங்க முடியாமல் புகலிடம் ஓடி கேட்டு வந்த இந்த நாட்டில் எங்களுக்கு பிறக்கும் பிள்ளை முழு ஆபிரிக்கனாக இருக்க வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தேன். ஆனால் ஒன்றை மறந்து விட்டேனே?”

“என்ன?”

“பிள்ளை பிறந்து ஆண் என்றால் ‘அரவிந்தன்’ என்றும் பெண் என்றால் ‘அபிராமி’ என்றும் அகரவரிசையில் பேர் வைப்பதாக தீர்மானம் பண்ணினோமே? அது எவ்வளவு பிழை? நாங்கள் மனத்தளவில் மாறவில்லையென்றுதானே அர்த்தம்.”

கணேசானந்தனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவள் சொல்வதில் ஞாயம் இருப்பதாகப்பட்டது.

“பெண் எவ்வளவு கேவலமாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். முதலில் பருவம் அடையும் தொல்லை; பிறகு மாதா மாதம் வரும் உபத்திரவம். கர்ப்பம் அடையும்போது ஒன்பது மாதம் அவள் பிள்ளையை சுமக்கிறாள். அதைத் தொடர்ந்து அவள் படும் பிரசவ வேதனை. ஆனால் இது எல்லாவற்றிலும் கேவலமானது அவளுக்கு ஏற்படும் பெண்மை நீக்கம் தான். இந்த அவஸ்தையெல்லாம் ஆணுக்கில்லையே!”

இப்படியான நேரங்களில் கணேசானந்தன் ஆறுதல் கூற முயற்சிப்பதில்லை. அது வியர்த்தம். ஆற்றோட்டத்துடன்தான் போய் அடுத்த கரையை அடைய வேண்டும் என்பது அவன் சித்தாந்தம். ஆனால் அவனுடைய மனைவி கூறியது முற்றிலும் உண்மைதான் என்று அவனுக்குப்பட்டது. ஒரு பசுஞ்சோலை கருகி அவன் கண் முன்னே பாலைவனமாகிக் கொண்டிருந்தது; பருவத் தோப்பொன்று மூப்பை நோக்கி அடியெடுத்து வைத்தது. ஓளவையார் ஒரு பெண் புலவரல்லவா? அவருக்குக் கூடவா இந்தக் கொடுமை புலவரல்லவா? அவருக்குக் கூடவா இந்தக் கொடுமை தென்படவில்லை? ‘கொடிது, கொடிது வறுமை கொடிது’ என்று தானே அவர் பாடினார்.

ஒரு பிராயத்திலே பெண்ணுக்கு ஏற்படும் இந்த அநீதி பற்றியல்லவா அவர் பாடியிருக்க வேண்டும்?

உள்ளிழுத்த தலையை ஆமை மெள்ள மெள்ள வெளியே விடுவதுபோல் சங்கீதாவும் மெதுவாக வெளியே வரலானாள். பள்ளிக்கு புதுத் தென்புடன் வந்து போனாள். தன் உடைகளிலும் ஒப்பனைகளிலும் முன்புபோல் கவனம் செலுத்தினாள். இடைக்கிடை அந்த வீட்டில் அவளுடைய குபீர் சிரிப்பு மறுபடியும் ஒலிக்கத் தொடங்கியது.

கோப்பி என்றால் ஐரிஷ் கோப்பி, துருக்கி கோப்பி, இந்தியா கோப்பி என்று இப்படி பலவகை உண்டு. ஆனால் ‘முட்டை கோப்பி’ என்பது இந்த உலகத்திலேயே யாழ்ப்பாணத்தில்தான் அகப்படும். இந்த அதிகாலை வேளையில் கடந்த ஐந்து நிமிடங்களாக சங்கீதா அதைத்தான் போட்டு ‘இந்த அடி’ அடித்துக் கொண்டிருந்தாள். தாய்மார்கள், சாமத்தியப்பட்ட பெண்களுக்கும், புதுமணப் பெண்கள் தங்கள் கணவன்மாருக்கும் தவறாமல் கொடுத்துவந்த பாரம்பரியமான காயகல்பம் இது. சங்கீதா இவ்வளவு கர்மசிரத்தையாக முட்டைக்கோப்பி போடுவது அவனுக்கு அதிசயமாயிருந்தது.

ஆனால் இதைவிட அதிசயம் அன்று பள்ளியிலிருந்து திரும்பி வந்தபோது அவனுக்கு அங்கே காத்திருந்தது. அவன் வீட்டிலிருந்து ஓர் ஆபிரிககப்பாடல் மெல்லிய குரலில் ஒலித்தது.

ராலம் தாங் கீ
ரா ஆ லம்
ரெல் பாபா கோட் தாங் கீ
வட் ஈ டு பாஃர் மீ
ஐகோ ரெல்
தாங் கீ

‘கடவுளே நன்றி, என்னை மீட்டதற்கு நன்றி’ என்ற ‘கிறியோல்’ பாடலை முணுமுணுத்தபடி சங்கீதா சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். அதிலே இன்னொரு விசேஷம், இவள் முதுகிலே ஒட்டிக் கொண்டு லப்பாத் துணியினால் விரிந்து கட்டப்பட்டிருந்தது ஒரு ஆபிரிக்கக் குழந்தை. அது வேறு யாருமில்லை, கரிக்குருவிதான். கறுத்த உருண்டையான கண்கள் அதற்கு. அற்தக் கண்களை மலர்த்தி தலையை இரண்டு பக்கமும் ஆட்டி அசைந்து கொண்டிருந்தது.

சங்கீதா கால்களை தரையில் தேய்த்து தேய்த்து உடம்பை அசைத்து பாட்டிற்கேற்ப ஆடிக்கொண்டிருந்தாள். பரத நாட்டியத்திற்கு பரம சத்துரு ஆபிரிக்க நடனம். பரத முனிவர் பரதநாட்டிய சாஸ்திரம் எழுதும்போது இடையின் கீழ்ப்பகுதி அசையாமல் நேராக நிற்க வேண்டும் என்பதை ‘அண்டர்லைன்’ பண்ணி எழுதி இருந்தார். ஆபிரிக்க நடனம் அப்படியல்ல. இடைக்குமேல் உடம்பு நேராக நிமிர்ந்து நிற்கும்; வேலையெல்லாம் பிருஷ்டத்துக்குத்தான் பெண்டுலம் போல அது இடமும் வலமும் அசைந்து மனசை அலங்கோலப்படுத்தும்.

சங்கீதா அப்படித்தான் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தாள். இந்த மாதிரி குதூகலத்தை கணேசானந்தன் அவளிடம் கண்டு பல மாதங்களாகிவிட்டன. அன்றிரவு அவர்கள் படுக்கைக்கு சென்றபோது ‘கரிக்குருவியை’ படுக்கையின் நடுவே அவள் கிடத்தியிருந்தாள், “அப்ப, என்ன பேர் வைத்திருக்கிறீர்? அபிராமியா?” என்றான் அவன், கண்களைச் சிமிட்டிக்கொண்டே. “ச்ž, இல்லை; ‘அய்சாத்து’, என்ன இனிமை பாருங்கோ! அசல் ஆபிரிக்க பேர்.”

“ஆஹா” இதுவும் அகர வரிசைதான்; அப்ப இன்னும் பதினொரு பேருக்க இடமிருக்கு.”

“ஏன், மெய்யெழுத்தையும் சேர்ப்பதுதானே! ‘அய்சாத்து’ என்றால் ஆபிரிக்க பாஷையில் என்ன பொருள் தெரியுமா?” என்றாள் சங்கீதா. அவள் கண்கள் என்றுமில்லாதபடி வெட்டிக் கொண்டு இருந்தன.

“நீயே சொல்” என்றான் அவன், அவள் கண்களை அள்ளியபடியே.

“நம்பிக்கை” என்றாள் சங்கிதா, மந்தகாசமாக சிரித்தபடி.

சிறிது நேர மௌனத்திற்க பிறக அவன் சொன்னான்: “கடவுள் பெண்மைக்குத்தான் ஒர் எல்லை வைக்கமுடியும்; ஆனால் தாய்மையை எடுக்க முடியாதல்லவா?”

இப்படிச் சொல்லிக்கொண்டே அவளை மெல்ல தன் பக்கம் இழுத்தான். அவள் சிணுங்கிக்கொண்டே நெருங்கினாள்.

அவள் முகத்திலே பெண்மை வந்து கவிழ்ந்தது.

* * *

7. முடிச்சு
கிரேக்க புராணங்களில் கூறியுள்ள கோர்டியன் முடிச்சு என்பது ப்ரிகியா தேசத்து அரசன் கோர்டியஸ’னால் போடப்பட்ட முடிச்சாகும். கோர்டியஸ் அரசனாவதற்க முன்பு சாதாரண குடியானவனாக இருந்தவன். ஒருநாள் அவன் தன் வண்டியை ஒட்டிக்கொண்டு முதன் முறையாக ப்ரிகியா நகரத்துக்குள் நுழைந்தபோது தெய்வ வாய்மொழிப் பிரகாரம் அவனை அரசனாக அந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டனர். தன் நன்றிக் கடனாக žயஸ் என்ற கடவுளுக்கு அந்த வண்டியை கோர்டியஸ் அர்ப்பணித்து வண்டியின் நுகத்தடியைச் சேர்த்து ரு முடிச்சுப் போட்டான். அந்த முடிச்சானது கடுஞ்சிக்கல்கள் கொண்ட ஒரு நூதனமான முடிச்சு. அந்த முடிச்சினை அவிழ்ப்பார் ஆசியாவுக்கு மகுடாதிபதியாவர் என்பது தொன்று தொட்டு வந்த வாக்கு. ஆண்டாண்டு காலமாக அந்த முடிச்சை அவிழ்க்க பலதும் முனைந்து தோற்றப் போயினர். மாவீரன் அலெக்சாந்தர் இதனைக் கேள்வியுற்று அந்த முடிச்சின் முன்னால் வந்து நின்றான்; நிதானமாகப் பார்த்தான்; தன் உடைவாளை உருவி ஓங்கி ஒரே வீச்சில் முடிச்சை இரு கூறாக்கினான்.

– கைக்கிரோசொப்ட் – என் காத்தா

நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது கந்தையா வாத்தியார் கொடுத்த கணக்கு இதுதான்; “இரண்டு மரங்களுக்கிடையிலிருக்கும் தூரம் பத்து மைல். ஒரு மரத்திலிருந்து ஒரு மனிதன் மணிக்கு ஐந்து மைல் வேகத்தில் மற்ற மரத்தை நோக்கி நடக்கிறான். அதே நேரத்தில் மற்ற மரத்தில் இருந்து புறப்பட்ட நாய் ஒன்று மணிக்கு இருபது மைல் வேகத்தில் மனிதனை நோக்கி ஓடுகிறது. நாய் மனிதனிடம் வந்து சேர்ந்ததும் திரும்பவும் தான் புறப்பட்ட மரத்தை நோக்கி போகிறது. மரம் வந்ததும் திரும்பவும் மனிதனை நோக்கி ஓடுகிறது. இப்படியோ மாறி மாறி அது ஓடிக்கொண்டேயிருக்கிறது. கடைசியில் மனிதனும் நாயும் மற்ற மரத்தடியில் வந்து சேருகிறார்கள். நாய் ஓடிய தூரம் எவ்வளவு?”

கந்தையா வாத்தியார் இதைச் செய்பவருக்கு ஒரு ரூபா கொடுப்பதாக அறிவித்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களாக ‘நேரமும், தூரமும்’ கணக்குகளை உச்சந் தலையில் அடித்தடித்து உள்ளே இறக்கியிருந்தார். ஆனால் இந்த நாய்க் கணக்கு என்னை நாயாய் அலைத்துவிட்டது. இரண்டு நாளாக இதைத் தூக்கிக்கொண்டு திரிந்தேன். அப்பதான் இந்த ‘மண்டையன்’ வந்தான். சூல்கொண்ட தேங்காய் போல அவனுக்கு பெரிய தலை. தலை முழுக்க அவனுக்கு மூளை என்று பரவலாக ஒரு பேச்சுமிருந்தது. இரண்டு கால்களையும் பரப்பிவைத்து, கைகளை பின்னால் கட்டிக்கொண்டு “என்ன கணக்கு?” என்றான். நான் சொன்னேன். யோசிப்பதுபோல் கொஞ்சம் கண்ணை மூடி “இன்னொருக்கால் சொல்” என்று அதிகாரம் செய்தான், நானம் ‘சிவனே’ என்று இன்னொரு முறை கூறினேன். அவன் “ஆ! விடை நாப்பதுமைல்” என்றான். நான் “எப்டி, எப்டி?” என்று பறந்தேன். மண்டையன் ஏளனமான ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு சொன்னான்: “பத்து மைல் தூரத்தை மனிதன் இரண்டு மணி நேரத்தில் கடக்கிறான். நாயின் வேகமோ மணிக்கு இருபது மைல்; இரண்டு மணியில் நாய் நாற்பது மைல் தூரத்தைக் கடக்கும்.”

நான் வாயைப் பிளந்து கொண்டு சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றேன். இந்தச் சிறிய கணக்கை என்னாலே செய்ய முடியவில்லையே? அந்த நேரம் கந்தையா வாத்தியார் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. “எந்தவொரு சிக்கலான கணக்குக்கும் இலகுவான ஒரு பாதை இருக்கிறது; உன் விவேகத்தால் அந்தப் பாதையை நீ கண்டு பிடிக்க வேண்டும்.”

கணக்கிலே நான் படு புலியென்றாலும் இப்படி பலதரம் புல்லை சாப்பிட வேண்டி வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் எனக்கு நானே தேறுதல் கூறிக்கொள்வேன். கலாசாலையில் முதல் வருடம் படிக்கும்போது இப்படித்தான் ஒரு கணக்கு என் காலை வாரி விட்டது.

“ஒரு காதலன் தன் காதலியோடு ஆற்றின் ஓட்டத்துக்கு எதிராக படகிலே போகிறான். ஆற்றின் வேகம் மணிக்கு பத்து மைல்; படகின் வேகமோ மணிக்கு ஐந்து மைல். காதலரை வருடிய தென்றல் காற்று காதலன் போட்டிருந்த தொப்பியை நீரிலே தள்ளி விடுகிறது. (ஏன் இவன் காதல் செய்வதற்கு தொப்பி போட்டுக்கொண்டு போனான், முட்டாள்) காதல் வேகத்தில் நேரம் கழித்து பதைபதைத்து தொப்பியைத் தேடுகிறான். காணவில்லை. படாரென்று படகைத் திருப்பிக்கொண்டு (கருமி, கருமி) வந்த வழியோ போகிறான். எவ்வளவு மணி நேரத்தில் அவன் தொப்பியை மீட்பான்?”

இந்தக் கணக்கிலேயும் நான் அதே தவறைத்தான் செய்தேன். மூளையைக் கசக்கி விடையைத் தேடினேன். ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடினால் விடை கிடைத்து விடுமா? அடுத்த நாள் எங்கள் பேராசிரியர் கணக்கை விளக்கிய போது தான் ‘அடே’ என்று எனக்குப் பட்டது; அவமானமாகப் போய்விட்டது. விடை: அரை மணிநேரம் [ இந்த விடை காரணத்தை இங்கே விளக்கினால் இதுவே ஒரு கணக்குப் புத்தகமாகிவிடும். மேலே தொடருவோம்.]

சாதாரண மனிதர்களுக்குத்தான் இப்படியென்றில்லை. ஒரு விஞ்ஞானிக்கு நடந்ததைப் பார்ப்போம்… பாரிஸ் நகரில் ஜோர்ஜ் உர்பெய்ன் என்று ஒரு தலைசிறந்த விஞ்ஞானி இருந்தார். இவர் பல வருடங்களாக மூளையைச் செலவழித்தும், பணத்தை இறைத்தும் மிக அரிதான நாலு தனிமங்களை பொடிசெய்து குழம்பாக்கி பிறகு அவற்றை விஞ்ஞான முறைப்படி வேறுபடுத்தி தனிமங்களை கண்டுபிடிக்கும் அபூர்வ வித்தையைத் தெரிந்து வைத்திருந்தார். இவர் இந்தக் குழம்பைத் தூக்கி நளாயினி போல தலையிலே வைத்துக்கொண்டு ஒவ்வொரு விஞ்ஞானியாகத் தேடிச்சென்றார். இந்தக் குழம்பைத் தனிப்படுத்தி தனிமங்களின் பெயரைச் சொல்லும்படி இவர் மற்ற விஞ்ஞானிகளுக்கு சவால் விட்டார்.

ஹென்றி க்வியின் மொஸ்லே என்ற ஆங்கிலேய விஞ்ஞானி மாத்திரம் யாருமே எதிர்பாராத விதமாக ஒரு காரியம் செய்தார். அந்தக் குழம்பின் எலக்ட்ரான்களைப் பாய்ச்சி அதிலிருந்து புறப்பட்ட எக்ஸ்ரே அலைகளின் நீளத்தை கணித்து அந்த நாலு தனிமங்களின் பெயர்களையும் கடகடவென்று இரண்டே நிமிடத்தில் கூறிவிட்டாராம். இருபத்தியாறு வயதுகூட நிரம்பாத இளைஞர் மொஸ்லே. உர்பெய்ன் ஆடி விட்டார்; இத்தனை வருடத்து ஆராய்ச்சிகள் எல்லாம் வியர்த்தமானதில் அவருக்கு தாங்கமுடியாத வருத்தம்தான். எனினும் விஞ்ஞானத்துக்கு ஒரு புது வழி கிடைத்து விட்டதே என்று மகிழ்ந்து போனாராம்.

சாதாரண விஞ்ஞானிகளை விடுவோம்; கடவுளருக்கு வருவோம். நாதருடைய கையிலே ஒரு அழகிய மாம்பழம் இருந்தது. விநாயகர் அந்தப் பழம் வேணுமென்று ‘தாம் தாம்’ என்று குதித்தார்; முருகன் தனக்குத்தான் வேணுமென்று அடம் பிடித்தார். நாரதர் சொன்னார்: “யார் முதலில் உலகத்தை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் பழம்.” முருகன் யோசிக்கவில்லை. அந்தக்கணமே மயில் வாகனத்தை உலகத்தை வலம்பர புறப்பட்டார். பிள்ளையார் ‘டொங்கு, டொங்கு’ என்று எலியிடம் ஓடினார். எலி அவரை ஏற்றிக் கொண்டு இரண்டு அடி வைப்பதற்கிடையில் ‘மூசுமூசு’ என்று மூச்சு வாங்கியது. அப்படியே நசுங்கி நிலத்தோடு படுத்து விட்டது. “என்ன நின்று விட்டாயா? இப்ப முருகன் ஆபிரிக்காவின் மேல் போய்க் கொண்டிரு கிறானே! நான் இங்கே வாசற்படி கூடத் தாண்டவில்லை” என்று பெருமூச்சு விட்டார். “ஸ்வாமி, நீங்கள் கொஞ்சம் ஓவர் வெயிட்; காரட் ஜுஸ் மட்டும் இனி சாப்பிட்டு பாருங்கள்” என்றது எலி. விநாயகருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உடனே வேறு ஒரு யுக்தி பண்ணினார். “அம்மையும், அப்பனுமல்லவோ உலகம்; நான் அவர்களை வலம் வந்தாலே போதுமானது” என்று நினைத்து அம்மையப்பனை வலம்வந்து மாம்பழத்தை கையிலே வாங்கும் தருணம் முருகன் மயிலிலே வீச்சாக வந்து ‘சடன் பிரேக்’ போட்டு நின்றார். விநாயகர் அவ்வளவுக்கும் நிற்பாரா, என்ன? தும்பிக்கையை எட்டிப் பழத்தைப் பறித்துக் கொண்டு மெள்ள நகர்ந்து விட்டார்.

நான் இப்படியான ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு பெரும் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருந்தேன். நான் ஹாவார்டில் படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பேராசிரியர் அடிக்கடி கூறுவார். ‘பூட்டுச் செய்தவன் சாவியும் செய்திருப்பான்” என்று சாவியைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். மனக்கண்ணினால் ஐந்தாம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை நான் படித்தது எல்லாவற்றையும் அலசிப் பார்த்து விட்டேன். இதிகாசங்களையும், புராணங்களையும் தேடியாகிவிட்டது. கணிதவியலையும், பொருளியலையும் ஆராயவும் தவறவில்லை.

மனிதர்கள் இரண்டுவிதமானவர்கள். முதலாவது ரகம், சாதாரணமான நேரங்களில் சாதாரண வேலை செய்வார்கள், கழுத்தைப் பிடிக்கும் நெருக்கடி சமயம் சுடர்விட்டு பிரகாசிப்பார்கள். இரண்டாவது ரகம், சாதாரண நேரங்களில் அசாதாரண திறமையுடன் செயல் படுவார்கள். ஆனால் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு செய்வதறியாமல் திகைப்பார்கள்.

இதில் இரண்டாவது ரகம் இதிகாசத்தில் கர்ணன். வில் வித்தையில் கர்ணன் அர்ஜுனனைவிட ஒரு இழைமேல் என்றே சொல்லலாம். ஆனால் உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கும் சமயங்களில், பாவம் கர்ணன் செய்வதறியாது தடுமாறி நின்று போய் விடுவான். இந்தக் கால உதாரணம் வேண்டுமென்றால் டென்னிஸ் வீரன் கோரன் இவானி ஸேவிக்கை சொல்லலாம். இவனுடைய சர்வீஸ் 135 மைல் வேகத்தில் போகும். கண் வெட்டுவதற்கிடையில் மளமளவென்று புள்ளிகளைக் குவித்து விடுவான். ஆனாலும் என்ன பயன்? வெற்றித் தேவதை அணைக்கவரும் நேரத்தில், பாவம் இவனுக்கு கைகால்கள் சோர்ந்துவிடும். சர்வீஸ் ‘பொத், பொத்’ என்று விழும் எதிராளி தட்டிக்கொண்டு போய்விடுவான். இவன் விளையாட்டைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வரும்.

நான் முதலாவது ரகம். அசாதாரண நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதுதான் என் விசேஷத் திறமை. அதற்காகவே படித்துப் பட்டம் பெற்றவன். சூறாவளி என்றால் அதற்கு ஒரு மையம் இருக்கும்; மகாவிருட்சகம் என்றால் அதற்கு ஒரு ஆணி வேர் இருக்கும். எந்தவிதமான சங்கடத்துக்கும் ஒரு உயிர் மையம் இருக்கும். அதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்.

மறுபடியும் பேராசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பெரிய பாழடைந்த பத்து மாடிக் கட்டிடம். இதை உடைத்தெறிய உத்தரவு வந்து விட்டது. நாங்கள் தகர்ப்பு விற்பன்னர்களைக் கூட்டி இந்தக் காரியத்தை ஒப்படைக்கிறோம். இது சாதாரண காரியமில்லை. ஒரு கட்டிடத்தைக் கட்டுவதிலும் பார்க்க மிகவும் சிரமமானது. அவர்கள் இந்தக் கட்டிட வரைபடத்தை முதலில் ஆராய்ச்சி செய்து கட்டிடத்தைத் தாங்கம் ஆதார மையங்களில் வெடி மருந்துகளைப் பொருத்துவார்கள். அது வெடித்ததும் கட்டிடம் ஆடாமல், அசங்காமல் சொன்னபடி கேட்டு அதே இடத்தில் வேறு சேதம் விளைவிக்காமல் பொத்தென்று வந்து விழும். உன்னுடைய வில்லங்கங்களை ஒட்டுமொத்தமாக தீர்க்க வேண்டுமானால் பிரச்சனையின் உயிர்நாடியைக் கண்டுபிடிக்க வேணும். அல்லாவிடின் மலேரியாக் காய்ச்சல்காரனுக்கு மாதவிடாய் நிற்க மருந்து கொடுத்தது போல அனர்த்தம்தான் விழையும்.

விஷயம் இதுதான். மிகவும் பெரிய ஒரு கம்பனியின் மானேஜிங் டைரக்டராக நான் இரண்டு வருட காலத்திற்கு முன்பாக பதவி உயர்வு பெற்றிருந்தேன். எனக்கு வயது முப்பத்தைந்து; எனக்கு முன்பு இருந்தவர் வயதானவர்; திடீரென்று மாரடைப்பில் இறந்து போனார். கம்பெனி இயக்குனர்கள் என் பேரில் முழு நம்பிக்கை வைத்து இந்தப் பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தனர். எல்லாம் நல்லாய்த்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று சனிதிசை பிடித்து ஆட்டத் தொடங்கியது.

விற்பனைகள் சரியத் தொடங்கின. தொழிலாளர்கள் அதிருப்தி காட்டி முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். முன்பிருந்த மானேஜிங் டைரக்டரின் மருமகன், ஜெயந்தன் என்பவன் கம்பெனிக்கு எதிராக நாசகார வேலைகள் பார்க்கிறானாம். இவன் என்னுடைய பதவியில் கண்வைத்து ஆவலாக எதிர்பார்த்து இருந்தவன் சில இயக்குணர்களையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறானாம். பங்கு மார்க்கெட்டில் கம்பெனியின் பங்குகள் சரியத் தொடங்கின. ஆனால் இது எல்லாத்தையும் விட மோசம் கிட்டடியில் வந்த செய்திதான்.

கம்பனியின் முழுமூச்சு ஏற்றுமதிதான். அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சரக்கு மாத்திரம் எழுபது வீதம். சமீப காலங்களில் வந்த ஓடர்களை முற்றிலும் நிறைவேற்ற முடியாமல் கம்பனி தத்தளித்தது. எதிராளிக் கம்பனி ஒன்று இந்த ஓடரில் ஒருபகுதியை தன் வசமாக முயற்சிகள் செய்து வந்தது. இது அவர்களுக்கு போனால் வேறுவினையே வேண்டாம்; கம்பெனியை இழுத்து மூட வேண்டியதுதான்.

தலைக்குமேலே தண்ணி போய்விட்டது. இனி என்ன செய்யலாம் என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு யோசித்த போதுதான் திருவண்ணாமலை ஞாபகம் வந்தது. அங்கே மகாயோகி இருக்கிறார். எனக்கு இப்டியான இக்கட்டுகள் வரும்போது அவரிடம்தான் ஓடுவேன். இதே மாதிரி இரண்டு முறை முன்பு போயிருக்கிறேன். அவர் அறிவுரை, ஆசியென்றொல்லாம் வழங்க மாட்டார்; உங்கள் சிந்திக்கும் திறனைத் தூண்டி விடுவார்.

அடுத்த நாளே திருவண்ணாமலை போய் விட்டேன். இரண்டு நாளாக யோகியாரை எங்குதேடியும் காணக் கிடைக்கவில்லை. கடைசியில் யாரோ சொன்னார்கள் யோகியார் பதினாறு கால் மண்டபத்தில் இருப்பதாக, யோகியாரிடம் ஓடினேன். அவர் சிரித்தபடியே இருந்தார். அந்தச் சிரிப்பிலே எத்தனையோ அர்த்தங்கள் எனக்கு தெரிந்தன. ஸ்வாமியைப் பார்த்தவுடன் எனக்கு வந்த காரியம் எல்லாம் மறந்துவிட்டது; அது மாத்திரமல்ல, என் கஷ்டமெல்லாம் அர்த்தம் இல்லாததாகவும் பட்டது. என் கண்கள் பனித்துவிட்டன. ஸ்வாமி என்னையே பார்த்தபடி இருந்தார்.

“ஆதிமூலத்தை அறிந்து விட்டாயா?” என்றார்.

“ஸ்வாமி, அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்; நீங்கள்தான் காட்டவேணும்” என்றேன்.

“மடையா, நான் என்னத்தைக் காட்டுவது? நீதான் தேடிப் பிடிக்க வேணும்” என்றார்.

“ஸ்வாமி, எனக்கு சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்தது….”

“என்ன, சாயுஜ்யபதவியா?” என்றார், ஸ்வாமி சிரித்தபடி.

“இல்லை, இது சாதாரண பதவிதான். மிக நல்லாக முன்னேறி வந்த கம்பனி காரணமின்றி படபடவென்று சரியத் தொடங்கி விட்டது. நாலா பக்கத்திலும் இருந்து எனக்கு தொல்லைகள். தலை நிமிர்த்தவே முடியவில்லை; மீழும் வழியும் தெரியவில்லை” என்றேன்.

“நாலா பக்கமும் பிரச்சனைகள் இல்லை; பிரச்சனையின் மூலம் ஒன்றுதான். நீதான் நாலு பக்கமும் பார்க்கிறாய். ஸ்பெய்ன் நாட்டில் நடக்கும் மாட்டுச் சண்டை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?”

“சொல்லுங்கள், ஸ்வாமி”

“மேரடோர் என்பவன் எருதுடன் சண்டை போட்டு அதைக் கொல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட வீரன். எருதுக்கும் இவனுக்கும் ஒரு நீண்ட போர் நடக்கும். இறுதியில் எருது களைத்து, தலையைத் தாழ்த்தி சோர்ந்துபோய், ஆனால் கடைசி மூச்சின் ஆங்காரத்தோடு சண்டைபோடும். எருது தலை குனிந்திருக்கும் அந்தக் கணத்தில் மேரடோர் என்பவன் தன் நீண்ட வாளை உருவி மாட்டின் தோள் பட்டைகளில் இடையே உள்ள ஒரு நுண்ணிய துவாரத்தில் வாளை நுழைத்து அதன் ஆதார நாடியை சேதித்து விடுவான். இந்த நேரம்தான் மகத்தான உண்மையான நேரம். எருது அந்தக் கணமே விழுந்து இறந்து விடும்.”

“ஸ்வாமி, எனக்கு எல்லாம் புரிகிறது. ஆனால் அந்த ஆதாரநாடி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே? திசை தெரியாத பறவைபோல அல்லவா சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றேன்! ஒரு வழி காட்ட முடியாதா?”

ஸ்வாமி யாரோ பக்தர்கள் கொடுத்துவிட்டுப் போன ஒரு žப்பு வாழைப்பழத்தில் இருந்து இரண்டு பழங்களைப் பிய்த்தார். “இந்தா, இதைக் கொண்டுபோ. இரண்டு நாளைக்கு இதுதான் உனக்கு சாப்பாடு. கொஞ்சம் பால் வேண்டுமானால் மட்டும் பருகலாம். மூன்றாம் நாள் காலை இங்கிருந்து போய் விடு” என்றார். நானும் பழத்தை எடுத்துக்கொண்டு என்னுடைய மடத்தை நோக்கி புறப்பட்டேன்.

அடுத்த நாள் காலை. ஒரு பழமும் ஒரு அண்டா பாலும் சாப்பிட்ட பிறகும் பசியும் ஆறவில்லை; பிரச்சனையும் தீரவில்லை. நான் படித்ததெல்லாவற்றையும் மறுபடி அசைபோட்டு பார்த்தேன். பீட்டர் ட்ரக்கர் கூறியதையும், கென்னத் கல்பிரெய்த் சொன்ன சித்தாந்தங்களையும், பிரடெரிக் டெய்லர் எழுதி வைத்ததையும் நினைவுகூர்ந்து பார்த்தேன். மனமானது சுழன்று சுழன்று வந்ததே ஒழிய ஒரு பிடியும் கிடைக்கவில்லை.

சிந்திப்பது மூன்று வகைப்படும். ஒன்று செக்கு மாட்டு வகை; ஒன்றையே திருப்பித் திருப்பி அசைபோடுவது. இது பிரயோசனமில்லாமல் நீன்று கொண்டே போகும். இரண்டாவது தொடர் சங்கிலி சிந்தனை முறை. இது ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்றாக தர்க்க ரீதியாக வருவது. மூன்றாவது பரவல் சிந்தனை. அறிவியலுக்கு ஆதாரமான பல சித்தாந்தங்களை பரவல் சிந்தனை மூலம்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். ஆகாய விமானத்தை கண்டுபிடத்த ரைட் சகோதரர்களாகட்டும், பெனிசிலினைக் கண்டுபிடித்த அலெக்சாந்தர் பிளெமிங் ஆகட்டும் பரவல் சிந்தனை மூலம்தான் தங்கள் மகா கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு அளித்தார்கள்.

இத்தாலி மகாவிஞ்ஞானி கலீலியோ ஒரு நல்ல கிறிஸ்துவர். அவர் தன் சித்தாந்தங்களை வெளியிட்டபோது அவை அன்றைய கிறிஸ்துவ நம்பிக்கைகளுக்கு முரணாக இருந்தன. இருந்தும் அவர் கருத்துக்களை அவசரமாக பகிரங்கப் படுத்திவிட்டார். தேவாலயத்து மதகுருக்களுக்கு அவர் கூறியது சங்கடமாக இருந்தது. வேறு என்ன? அவர் ‘பூமி சூரியனைச் சுற்றி வருகிறது’ என்று அபத்தமான உளறினால் அவர்களுக்கு கோபம் வராமல் என்ன செய்யும்? அவருக்கு அறுபத்தொன்பது வயது நடக்கும் போது தேவாலயத்தினர் அவரைக் சிறையில் இட்டனர்; சொன்னதை மறுதலிக்கும்படி வற்புறுத்தினர். கலீலியோ “பூமி சூரியனை சுற்றவில்லை, பூமி சூரியனை சுற்றவில்லை” என்று உரத்துச் சொல்லிவிட்டு மனத்திற்குள், தனக்குள் பூமிக்கும் மட்டுமே கேட்கும்படி, “என்றாலும் சுற்றுகிறது” என்று கூறினாராம்.

உலகத்தின் இன்றைய முன்னேற்றத்திற்க காரணம் கலீலியோ போன்ற விஞ்ஞானிகளின் பரவல் சிந்தனைகள் மூலம் பிறந்த அருமையான கண்டுபிடிப்புகள்தான். நான் தேடிக்கொண்டிருக்கும் விடையும் இப்படியான சிந்தனைகளில்தான் தங்கியிருக்கிறது என்று எனக்குப்பட்டது. மனதைக் குவித்து ‘ஏகாக்கிரக சிந்தனை’ என்று சொல்வார்களே அப்படி நேர்ப்படுத்தினேன்.

மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். தொழிற்சாலையில் போதிய ஓடர்கள் வந்து குவிந்தன; உற்பத்தி வேகமும் குறைந்ததாகத் தெரியவில்லை. விற்பனைகள் சரிவதின் காரணமென்ன? ஜெயந்தன் செய்யும் நாச வே€லைகளாக இருக்குமா? அவன் இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் கம்பெனியிலிருந்து ஒரு பெண்ணாக கூட்டிக்கொண்டு திரிகிறானே, இதற்கு நேரம் இருக்குமா?

ஜெயந்தனுடன் நேர் மோதலை நான் தவிர்த்துவந்தேன். ஒருமுறை கேட்டுவிட்டேன்: “ஜெயந்தன், நீ என்ன இப்படி ஒரு நாளைக்கு ஒரு பெண்ணுடன் சுற்றுகிறாயே! இது உனக்கும் நல்லதல்ல. பெண்ணுக்கும் நல்லதல்ல; கம்பெனிக்கும் நல்லதல்ல?”

அதற்கு அவன் கூறிய பதில் விசித்திரமாக இருந்தது. “எனக்கு பதின்மூன்று வயதாகியதிலிருந்து நான் இப்படி ஒரு விரதம் காத்து வருகிறேன். எப்பவும் கன்னிப் பெண்கள் பாதுகாப்பில் இருக்கவேண்டுமென்பதுதான் அது. எனக்கு கிடைக்கம் அந்தப் பாதுகாப்பை இப்படி சடுதியாக துறக்கச் சொல்கிறாயே. இது நியாயமா? நீ அதற்குப் பொறுப்பேற்பாயா?” என்றான். நான் அவனுக்கு பைத்தியம் முற்றிப் போய்விட்டது என்று நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன்.

உண்மையிலேயே இவன் பைத்தியக்காரத்தனமான வேலைகள் செய்வானோ? தொழிலாளர்களுக்கு வேண்டிய சலுகைகளெல்லாம் செய்து கொடுத்திருக்கிறோமே! சக தொழிலாளருடன் ஒப்பிடும்போது இவர்களடைய சம்பளமும் வருமானமும் மிகக் கூடுதலாகவல்லவா இருக்கிறது! இருந்தும் அவர்களுடைய அதிருப்தியை தூண்டிவிடுவதற்கு இவன் காரணமாக இருப்பானோ?

திருப்பித் திருப்பி செக்குமாடு போலத்தான் சிந்தனை சுழன்று கொண்டே வந்தது. இரண்டு நான் இரண்டு யுகம் போல சென்றது. மிஞ்சியது பசியும் களைப்பும்தான். மூன்றாம் நாள் அதிகாலையே எழுப்பிவிட்டேன். நான் வந்தது வியர்த்தம் போலத்தான் பட்டது. பிரச்சனை அப்படியே கொழுக்கட்டைபோல் முழுசாக இருந்தது. நல்ல பசி. சாப்பிட்டுவிட்டு திரும்புவோம் என்ற முடிவோடு புறப்பட்டேன்.

பாதையோரத்தில் அந்தக் கிழவி சுடச்சுட தோசை வார்த்து விற்றுக் கொண்டிருந்தாள். நான் போனபோது அங்கே ஒரு சிறுமி மாத்திரம் தோசையை ஒரு பெட்டியில் அடுக்கிவிட்டு அதை மூல முயற்சி செய்து பார்த்தாள். வாழை இல் நேராக நட்டுக்கொண்டு நின்றது. அப்போ அந்த சிறுபெண் “பாட்டி, வாழை இலையை மடித்துவீடு, மடித்துவிடு” என்று மணியடிப்பது போல சொல்லிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மூளையிலே ஒரு மின்பொறி தட்டியது “அப்படியும் இருக்குமா?” என்று மனசு போட்டு அடித்துக்கொண்டது.

அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு உடனேயே புறப்பட்டேன். வழிநெடுக சிந்தனை தொடர்ந்தது. ஒரு பெரிய கேள்விக்கு சிறிய விடை கொடு பபதும் ஒரு சிறிய கேள்விக்கு பெரிய விடையொன்று தருவதும் சில வேளைகளில் நடப்பதுதான். மிகவும்படித்து இறுமாந்த ஓளவைக் கிழவி ஒரு மாடுமேய்க்கும் சிறுவனிடம் தோற்கவில்லையா? கிழவி, சிறுவன்தானே என்று பாராமல் அவனுடைய கேள்விக்கு ஆழ்ந்து யோசித்திருந்தால் சரியான விடை கூறியிருப்பாள் அல்லவோ? ஓளவையார் பழத்தை எடுத்து “பூ, பூ” என்று ஊதியபோது சிறுவன், “என்ன பாட்டி! பழம் சுடுகிறதா?” என்று கேட்டு சிரித்த அந்தத் தருணத்தில் ஒளவையாருடைய மனம் என்ன பாடு பட்டிருக்கும்? ஒரு கணத்திலும் கணம் சிந்திக்கத் தவறியதன் விளைவல்லவா இது?

தொழிற்சாலையை வந்து அடைந்ததும் முதல் வேலையாக கணக்கு வழக்குகளைச் சரி பார்த்தேன். நான் நினைத்தது சரிதான். ஓடர்கள் எல்லாம் உரிய காலத்தில் தொழில்சாலையில் முடிக்கப்பட்டு விட்டன. ஏற்றுமதியில் தான் பிரச்சனை. துறைமுகத்திலே தேக்கம்; துறைமுகத்துக்கு எடுத்துப் போகும் வாகனங்களின் பற்றாக்குறை; ஆனபடியால் தொழிற்சாலை கிடங்கிலும் ஏற்றுமதிப் பொருட்கள் குவிந்து கிடந்தன.

எங்கள் தொழிற்சாலையில் நாங்கள் உற்பத்தி செய்தது உயர்ந்த ரச சமையல் பாத்திரங்கள். சமையல் பாத்திரங்கள் என்றால் சாதாரண வீட்டு சமையல் பாத்திரங்கள் அல்ல. இவையோ மிகப்பெரிய ஹோட்டல்களிலும் சமையல் விடுதிகளிலும் பாவிக்கும் உறுதியான எஃகுப் பாத்திரங்கள்; செப்பு அடித்தகடுவைத்த பென்னம்பெரிய பாத்திரங்கள். நாலு பருமன்களின் ஒன்பது ரக பாத்திரங்களை நாங்கள் செய்து கொண்டிருந்தோம். இதற்காக தயாரித்த விசேஷமான பெரிய அட்டைப் பெட்டிகளில் அவற்றைப் போட்டு அடைத்து ஏற்றுமதி செய்வதுதான் வழக்கம்.

இந்தப் பாத்திரங்களின் கைபிடிகள் பெரிதாக மேலே நீட்டிக்கொண்டு நிற்கும் முதல் வேலையாக கம்பனி வரைபட வல்லுனரைக் கூப்பிட்டு இந்தப் பாத்திரங்களின் கைபிடிகளை மடித்துவிடக் கூடியதாக செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் சிறிது நேரம் யோசித்தார். அவருடைய சிந்தனையும் என்னுடையதுபோல ஒரே நேர்க்கோட்டில் போயிருக்கவேணும். ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு ஒன்றும் பேசாமலே போய்விட்டார். அடுத்த நாள் அவர் கொண்டு வந்த புது டிசைனில் ஒரு பாத்திரத்தை செய்து பார்த்தோம். அது நல்லாகவே வந்திருந்தது.

அதிர்ஷ்டவசமாக ‘பக்கிங்’ பெட்டிகளில் ஒரு சிறு மாற்றம்தான் செய்ய வேண்டியதாக இருந்தது. அறுநூறு கன அடியில் முன்பெல்லாம் நூறு பாத்திரங்கள் அடைத்து அனுப்ப முடிந்தது. இந்தப் புது டிசைன்படி நூற்றி நாற்பத்திமூன்று பாத்திரங்கள் அடைக்கக் கூடியதாக இருந்தது. எங்கள் வாடிக்கைக்காரர்கள் இந்தப் புது டிசைனை வரவேற்றார்கள்.

என்னுடைய ஊகம் சரிதான். உற்பத்தி குறையவில்லையென்றாலும் ஏற்றுமதியில்தான் பிரச்சினை. தொழில்சாலையில் இருந்து கப்பலுக்கு போவதில் சுணக்கம்; துறைமுகத்தில் கப்பலில் ஏற்றுமதி செய்வதில் தடங்கள். பாத்திரங்களின் கைபிடியை மடக்குவதால் இப்போது முந்திய கனஅளவில் கூடிய பாத்திரங்களை அனுப்பக்கூடியதாக இருந்தது.

எங்கள் புது டிசைனை நடைமுறைக்கு கொண்டு வந்தேன். கிடுகிடென்று துறைமுகத்தில் தேங்கியிருந்த பெட்டிகள் குறையத் தொடங்கின. தொழில் சாலை சூடு பிடித்தது. ஆறே மாதத்தில் தேங்கி நின்ற பொருட்கள் எல்லாம் கப்பலேறிவிட்டன. ஓடர்கள் வரவர அவை உற்பத்தியாக்கப்பட்டு அதே வேகத்துடன் ‘பக்’ செய்யப்பட்டு அனுப்பப்பட்டன. ஏற்றுமதியின் வேகம் பார்த்து புது ஓடர்களும் வந்து குவிந்தன.

இதற்கிடையில் தொழிற்சாலை போனஸ் முறையிலும் சிறு மாற்றம் கொண்டு வரப்பட்டது. முன்பெல்லாம் உற்பத்தியில் போனஸ் கொடுக்கப்பட்டது. இப்போதோ ஏற்றுமதி அல்லது விற்பனை என்ற அடிப்படையில் கூடிய விகிதத்தில் போனஸ் வழங்கப்பட்டது. விளைவு? தொழிலாளரிடம் கூடிய ஒற்றுமை இருந்தது; எல்லோரும் ஒரே நோக்கத்தோடு பாடுபட்டார்கள்; தேக்கம் என்பதே அரிதாகிவிட்டது.

எங்கள் வரைபட வல்லுனரின் பெயர் சின்னபாரதி. அவருடைய தகப்பனார் பாரதியின் ரஸ’கனாக இருந்திருக்கக் கூடும் அவர் அதிசயித்துப் போனார். அவர் முப்பது வருடமாக அங்கே வேலை பார்த்து வருகிறார். அவர் கேட்டார்: “இத்தனை வருட காலமும் ஏன் ஒருவரும் இது பற்றி சிந்திக்கவில்லை?”

அதற்கு நான், “சில பேர் சில விஷயங்களை ஓர் இக்கட்டான சமயம் வரும்போதுதான் கண்டு கொள்கிறார்கள். இப்படியான கஷ்டம் எங்களுக்கு முன்பு வந்ததில்லையோ” என்றேன்.

ஆனால் எனக்கு இன்னுமொரு வேலை இருந்தது. இழந்துபோன ஓடர்களை மீட்பதற்கும், புது ஓடர்களைத் தொடர்ந்து ஸ்திரப்படுத்துவதற்கம்: வாடிக்கைக்காரர்களின் நன்மதிப்பை பெறுவதற்கும் ஒது புதுவித அணுகுமறை தேவைப்பட்டது. ஜெயந்தன் அதற்கு மிகவும் தகுந்த ஆளாகப் பட்டார். அமெரிக்க, ஐரோப்பா போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கம்பனிக்கு ஒரு புதுமுகத்தை தயார் பண்ணவேண்டிய பொறுப்பை அவரிடம் கொடுக்க முடிவு செய்தேன்.

சின்னபாரதி இதைக் கேள்விபட்டதும் அசந்துவிட்டார். அவர் அனுபவஸ்தர்; நம்பகமானவர். அவருடைய அறிவுரைகளை நான் அவ்வப்போது கேட்பதுண்டு. அவர் சொன்னார்: “ஜெயந்தனுடைய அசைந்தாடும் நெஞ்சில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அவனிடம் இப்படியொரு பொறுப்பை ஒப்படைக்கலாமா? அரபுக் குதிரைபோல் நிமிர்ந்து திரியும் வெள்ளைக்கார மோகினிகளின் கண் வீச்சிலே இவனுடைய புத்தி சிதறிவிடுமே! இது இன்னும் žரழிவையல்லவோ கொண்டு வரும்.”

ஆனால் என்னுடைய உள்மனதுக்கு நான் செய்வது சரிபோல பட்டது. துணிந்து இந்தக் காரியத்தை ஜெயந்தனிடம் ஒப்படைத்தேன். ஜெயந்தனுக்கு அளவற்ற மகழ்ச்சி. அவருக்கு இப்படியாக கம்பனி செலவில் உலகம் சுற்றுவது மிகவும் பிடித்த காரியமாகப் போய்விட்டது. இதுதவிர இன்னுமொரு முக்கிய காரணமும் இருந்தது.

அவருடைய மாதச் சம்பளத்தை தவிர அவர்பிடிக்கும் ஓடர்களின் பிரகாரம் அவருக்கு ஒரு ஸ்பெஷல் போனஸ் இப்போதெல்லாம் வழங்கப்பட்டது. ஜெயந்தன் ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் வெளியே தங்கினார். ஓடர்கள் வந்து குவிந்த வண்ணமே இருந்தன. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வெகுமும்முரமாக வேலையில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு வேறு விஷயங்களுக்கு நேரமே இல்லை. ஏற்றுமதி போனஸ் மூலம் அவர்கள் வரும்படி நல்லாக விரிவடைந்திருந்தது.

என்னுடைய கல்யாண குணங்களில் சிரேட்டமானது அடக்கம். என் எதிரிகள் எத்தனை ‘மகா மேதாவி’ என்றும் ‘அறிவுஜ“வி’ என்றும் திட்டும்போதெல்லாம் நான் மறுப்பதில்லை; பேசாமல் இருந்துவிடுவேன். ஆனபடியால் என்னுடைய தனித்திறமையால் கம்பனியை அதலபாதாளத்தில் இருந்து மீட்டு விட்டேன் என்று நான் சொல்லிக்கொள்ளமாட்டேன். அது தற்பெருமைபோல் தோன்றும்.

ஆறு மாதத்தில் கம்பனி இழந்த விற்பனைகளை எல்லாம் மீட்டுவிட்டது. நடப்பு வருடத்து விற்பனை முந்திய வருடத்து அதிகரித்து விட்டது. மூன்று வருடங்களில் கம்பனியின் விற்பனை இரண்டு மடங்காகி விட்டது; லாபம் எழுபது வீதம் கூடிவிட்டது. பங்கு விலைகள் கிறுகிறென்று ஏறிவிட்டன. இயக்குனர்கள் எல்லாம் ஒன்றுகூடி என் திறமையை சிலாகித்தார்கள். கம்பனியை இன்னும் தொழிற்சாலையை விரிவு செய்யவும், புது மெசின்கள் வாங்கவும் ஆலோசனைகள் தர வெளிநாட்டு நிபுணர்கள் தருவிக்கப்பட்டார்கள்.

இப்படியாக என்னுடைய வாழ்க்கைத் தேர் அந்தரலோகத்தில் பவனி வந்தது. அரம்பையர் சாமரம் வீசி பன்னீர் தெளித்தனர். தேவதூதர்கள் துந்துபி முழங்கினார்கள்; தேவதூதிகள் தும்புரு (அது என்ன தும்புரு?) வாசித்தார்கள். இந்த மயக்கத்தில் வெள்ளை முயல் போன்ற மேகக்கூடட்டங்களில் சங்சரித்துக் கொண்டிருந்த போதுதான் நான் எதிர் பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது.

அரசாங்கம் திடீர் என்று கொண்டுவந்த ஒரு புதிய சட்டத்தினால் கம்பனியின் ஏற்றுமதிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டன. எங்களுக்கு கிடைத்த சில சலுகைகள் நீக்கப்பட்டன. பார்த்துக் கொண்டிருக்கும்போதே கம்பனி கடகடவென்று கவிழத் தொடங்கியது. இந்த சமயத்தில் நான் கற்ற வித்தை ஒன்றும் பயன் தரவில்லை. தலைக்குமேல் தண்ணி போனபின் எனக்கு மறுபடியும் திருவண்ணாமலை ஞாபகம்தான் வந்தது. ஓடோடியும் சென்றேன்.

அங்கே யோகியார் என்னை எதிர்பார்த்து இருந்தது போல புன்சிரிப்புடன் வரவேற்றார். இந்த முறை எனக்கு வாழைப்பழம்கூட இல்லை; வெறும் தண்ணி தான். யோகியார் நான் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டார். பிறகு என் கண்களைப் பார்த்தபடி பேசத் தொடங்கினார்.

அது இன்னொரு கதை

கடிதத்திலே ஆர்வமுள்ள வாசகர்களக்கு மாத்திரம்: பிரஸ்தாபிக்கப்பட்ட கணக்குக்கு விடை

ஆற்றை உறைய வைக்க வேண்டும் அதன்பிறகு படகின் வேகம் மணிக்கு பதினைந்து மைல். தொப்பி விழுந்தபோது அது ஆற்றில் அப்படியே இருக்கும். அரைமணியில் ஏழரை மைல் போனபடகு திரும்பவும் அதே தூரத்தை கடக்க அரை மணி ஆகும்.

– 1995, வம்ச விருத்தி, மித்ரா வெளியீடு, முதல் பதிப்பு 1996

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *