முற்றுப் புள்ளி வேண்டாம்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 5,499 
 

கணேஷ் சொன்ன எந்த நல்லது கேட்டதும் காதில் ஏறவில்லை செண்பகாவிற்கு. அதன் சாராம்சம்தான் உடலையும் உள்ளத்தையும் தீயாய்ச் சுட்டது. வந்த கோப தாபம் எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டு வந்து…

“மொதல்ல வெளியே போங்க…”மெல்ல சொல்லி வெளியே கை நீட்டினாள் செண்பகா.

கணேஷ் ஆடவில்லை, அசையவில்லை. அப்படியே நின்றான்.

“வந்து ….”ஏதோ சொல்ல வாயைத் திறந்தான்.

“பேச்சு வேணாம். வெளியே போங்க …”கராறாகச் சொன்னாள்.

இனி சரி வராது ! என்று நினைத்த கணேஷுக்கு இப்போதுதான் முகம் சுண்டியது. மனதில் வருத்தம் வந்தது.

“போறேன் செண்பகா. அதுக்கு முன்னாடி நான் சொன்னதை மறுபடியும் நீ மறுபரிசீலனை செய்யணும். குமரன் சொன்னதால்தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன்.’மறுத்தாலும் பரவாயில்லேடா. அவளுக்கு உன்னைவிட்டா வேற துணை இல்லை. அவளைக் காப்பாத்து. காவலுக்கிரு. கைவிடாதே..!’- ன்னு சொன்னான். அவன் சொன்ன சொல்லக் காப்பாத்துவேன் செண்பகா. உன் முடிவு சாதகமா இருந்தாலும் பாதகமா இருந்தாலும், நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாசல்ல வந்து படுத்துக்கிடப்பேன். நான் வாங்கி வந்த குங்குமத்தை இங்கே வைச்சுட்டுப் போறேன். சம்மதம்ன்னா இட்டுக்க. வேணாம்ன்னா விட்டுடு. எதுவும் கட்டாயமில்லே.”என்று சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த மடித்தத் தாளை அவள் அருகில் வைத்துவிட்டு வெளியேறினான்.

அவன் வெளியேறும் வரை….. வெறுப்பு, கசப்பு, வேண்டாவெறுப்பாக இருந்த செண்பகா மனம் அவன் தலை மறைந்ததும் துவண்டது.

அப்படியே சுவரில் சாய்ந்து அமர்ந்தாள்.

‘அவன் சொன்ன சொல்லக் காப்பாத்துவேன் செண்பகா. உன் முடிவு சாதகமாய் இருந்தாலும் பாதகமான இருந்தாலும் , நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வாசல்ல வந்து படுத்துக்கிடப்பேன் செண்பகா.” அவன் சொல்லிவிட்டுச் சென்றது காதில் மறுபடியும் மறுபடியும் ரீங்காரிக்க…. மனதில் அவளையும் அறியாமல் கணம் ஏறியது.

‘தினமும் அப்படித்தான் படுத்துக்கொள்கிறான் !’- நினைக்க கண்களில் நீர் வழிந்தது.

‘தான் அப்படி எடுத்தெறிந்து பேசியது தப்போ..? கழுத்தைப் பிடித்துடீ த் தள்ளாத குறையாக வெளியே கை நீட்டியது தவறோ..? விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வருகிறேனென்று சொல்கிறான்.!! கோபத்தில் வராமலேயே போய்விட்டால்… ? துணை..?! காவல்..?!’- நினைத்துப் பார்க்க நெஞ்சு நடுங்கியது.

இவளை இந்த வீட்டிற்கு அதிபதியாக்கியவனே கணேஷ்தான். இவனில்லை என்றால் மடத்திலேயே எத்தனையோ அனாதைகளில் ஒருத்தியாக இவள் காலம் கழிந்திருக்கும்.

அன்று செண்பகா மடத்துத் தலைவிக்கு அருகில் அமர்ந்து துணியில்’எம்ப்ராய்டரி’போட்டுக்கொண்டிருந்தாள்.

இவன் தான் வந்து….

“வணக்கம் ! கை கூப்பினான்.

குரல் கேட்டு இவள் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள்.

“வணக்கம். உட்காருங்க. யாரைப் பார்க்கணும்..?”மடத்துத் தலைவிதான் அவனை விசாரித்து உட்கார வைத்து உபசரித்தாள்.

“உங்களைத்தான் மதர்.”

“சொல்லுங்க..? என்ன விசயம்..?”

“என் நண்பன் ஒருத்தன் அனாதைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கலாம்ன்னு விரும்பறான்…”

“சந்தோசம் !”

“அது விசயமா உங்களைப் பார்க்க வந்தேன். அந்தப் பெண்ணை உங்க மடத்திலிர்ந்து எடுக்கலாம் என்கிறது எங்க யோசனை.”

“அருமையான யோசனை. நல்ல எண்ணம். ரொம்ப சந்தோசம் ! vவாழ்த்துக்கள் . எங்கே உங்க நண்பர்…?”

“அவன் அவசர வேலையாய் வெளியூருக்குப் போயிருக்கிறான் மதர்”

“அவரை அழைச்சுக்கிட்டு வாங்க. கலந்து பேசி முடிவு செய்வோம். !”

“அவன் வரமாட்டான் மதர். ரொம்ப சங்கோஜம், கூச்ச சுபாவம். நீ பார்த்து பேசி முடிவு செய்துவிட்டு வா. நானும் வந்து நம்ம கொரிக்ககையை அவுங்க ஏற்கலைன்னா மனசு வலிக்கும் , வலி வரும். நீ எல்லாத்தையும் முடிச்சுட்டு வா. நான் பெண்ணைப் பார்த்து தாலி காட்டுறேன்னு சொல்லி என்னை அனுப்பி இருக்கான் மாதர்.”

அவளுக்குப் புரிந்தது.

“உங்க நண்பர் பேரென்ன..?”

“குமரன்.”

“வேலை…?”

“பொதுப்பணித்துறையில் வேலை. கை நிறைய சம்பளம். நானும் அவனும் ஒன்னா வேலை பார்க்கிறோம். துணிக்கடையில் அமர்ந்து துணிகளை புரட்டிப் புரட்டிப் பார்த்து தேர்வு செய்வது போல பெண்கள் விசயத்தில் அப்படி செய்ய விருப்பமில்லே. அது பெண்ணுக்கு வலி.”சொன்னான்.

“ஒரு அனாதைப் பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கிறதே பெரிசு. அதுல இது வேற நல்ல எண்ணம். வாழ்த்துக்கள்…”

“நாங்களும் அனாதைதான் மதர். அதனால் மனித வலி வருத்தம் தெரியும்.”‘

“நீங்க எந்த மாதிரி பொண்ணை எதிர்பார்க்குறீங்க..?”

“இங்கே இருக்கும் எல்லா பொண்ணுங்களும் உங்களுக்குப் பரிச்சயம், பழக்கம். இதில் அடக்கம், ஒடுக்கம், பண்பு, பணிவான பெண் தேவை. அந்த பெண்களில் உங்களுக்குப் பிடித்த பெண்கள் ஒன்றிரண்டை காட்டினீங்கன்னா…நான் என் மனசுக்குப் பிடித்ததை தேர்வு செய்வேன்.”

மதர் ஒரு சில நிமிடங்கள் மவுனமாய் இருந்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு….

“உங்க நல்ல மனசுக்கு அழகு, அம்சம் எல்லாம் பொருந்திய இவள் உங்களுக்கு பொருத்தமானவளாய் இருப்பாள். எனக்கு ரொம்ப பிடிச்சவள்”என்று சொல்லி….

“செண்பகா !..”அழைத்தாள்.

“நானா…???…”இவள் திடுக்கிட்டுத் துணுக்குற்று மதரைப் பார்த்தாள்.

பளிச் ! முகம். ஆளைப் பார்த்ததும் இவனுக்குப் பிடித்துப் போயிற்று.

திருமணம் அந்த மடத்திலேயே எளிமையாக நடந்தது. திருமணச் செலவென்று இரண்டு லட்ச ரூபாயை அந்த மடத்திற்குக் கொடுத்தான் குமரன்.

திருமணம் முடிந்த கையோடு..

“குமரா..! இதுநாள் வரை நீயும் நானும் அண்ணன், தம்பிகளை விட மேலாய்ப் பழகி, ஒரே அறையில் ஒண்ணா இருந்து வாழ்ந்துட்டோம். இனியும் நாம அப்படி இருக்கிறது சரி இல்லே. நாம பிரிஞ்சிடலாம். நீ தனிக்குடித்தனம் போயிடு.”சொன்னான்.

குமரன் சம்மதிக்கவில்லை.

“உனக்கும் திருமணம் நடக்கும் வரை நாம ஒன்னா இருக்கலாம். இதுவரைதான் நாம ஓட்டல் சாப்பாடு, சமையல்ன்னு காலத்தைக் கழிச்சோம். இனியாவது வீட்டு சாப்பாடு சாப்பிடலாம் ..!”சொன்னான்.

“அது சரி வராது !”கணேஷ் மறுத்தான்.

ஆனாலும் கணவன் மனைவி இருவரும் அவனை விடவில்லை. தங்கள் குடும்பத்தில் ஒருத்தனாக இணைத்துக்கொண்டார்கள்.

ஒரு மாத வாழ்க்கையில் விதியின் விபரீதம்.

குமரன் லாரி மோதி குற்றுயிரும் குலையுருமாகி கிடக்க… அள்ளிக் கொண்டு மருத்தவமனையில் சேர்த்தார்கள். கணேஷ்தான் அவன் தலைமாட்டில் துணையாய் இருந்தான். செண்பகா கண்ணீர் கம்பலை.

குமரன் நான்கு நாட்கள் போராட்டத்திற்குப் பின் இறந்தான்.

அவன் இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று….

“நான்கு நாட்களும் உன் புலம்பல்தான் செண்பகா. நான் இனி உயிர் பிழைக்க மாட்டேன். அவளைக் கையிட்டுடாதே. மறுமணம் செய்துகொள்ன்னு வற்புறுத்தல். மறுத்தேன், நிறைய சொன்னான், கெஞ்சினான். கடைசியாய்….கணேஷ் ! நீதான் அவளை எனக்குப் பார்த்து முடிச்சே. உன்னையும் என்னையும் தம்பிதான்டா வந்தாள். நான் போனபிறகு நீதான் அவளுக்குத் துணை வாழ்க்கை. எனக்குப் பிறகு நண்பன் மனைவின்னு நீ வழக்கம்போல் ஏறெடுத்தும் பார்க்க மாட்டே. ஆனா… ஊர் உலகம் உங்களைத் தப்பாப் பார்க்கும், பேசும். அதுக்கு இடம் கொடுக்கிறதைவிட… இவளை மறுமணம் செய்து அவர்கள் வாயை அடைக்கிறது நல்லது.’சொன்னான். உன் சோகம் தெளியட்டும் குறையட்டும்ன்னு இத்தனை நாள் காத்திருந்தேன். இன்னைக்குச் சொல்லிட்டேன். குங்குமம் வைச்சிக்கறதும் வைச்சிக்காததும் உன் விருப்பம். எது முடிவுன்னாலும் நான் உனக்கு காவல் இது நிதர்சனம் !”சொன்னான்.

‘கணேஷ், மறுமணம் !’இதுதான் முந்திரிக்கொட்டையாய் முன் வந்து செண்பகவின் உடல், உள்ளத்திலெல்லாம் புகுந்து , நுழைந்து தீயாய்ப் பற்றி நெருப்பாய்ச் சுட்டது.

ஆத்திரம் கண்களை மறைக்க….”வெளியே போ !”சொல்லிவிட்டாள்.

செண்பகா…. நடப்பு உலகத்திற்கு வந்தாள்.

நான்கு நாட்கள் போராட்டத்தில் நம் வாழ்வை உத்தேசித்து குமரன் , நண்பனிடம் என்னவெல்லாம் சொல்லி கெஞ்சி இருக்கிறார்…? நாம்தான் கணவன் மேல் உள்ள அபிமானத்தில்…கணேஷ் வார்த்தைகளை நம்பாமல்…. அண்ணன் எப்போது சாவான். திண்ணை எப்போது காலியாகும் என்கிற நினைப்பில் தவறாக கணித்து…. ஆள் நோகும்படி வெளியே போ சொல்லி ….. நினைக்க வலி வந்தது.

எதிரி சொன்னது பிடிக்கவில்லை, மனம் ஏற்கவில்லை என்றால்….. ஆத்திரம், கோபம் விலக்கி… தற்போதுபோல் யோசித்திருந்தால் இந்த வலி, வருத்தங்களைக் கண்டிப்பாகத் தவிர்த்திருக்கலாம்.. ஆத்திரம் அறிவிழக்கும் என்பது எவ்வளவு சரி .

கணேஷ் உயிருக்குயிராய்ப் பழகி, உடன் இருந்து ஒன்றாக வாழ்கிறார். குமரன் இவரிடம் தன்னை ஒப்படைக்காமல் வேறு எவரிடம் ஒப்படைப்பார். ?!

ஊர் உலகம் பேசுவதைப் பொறுக்காமல், இந்த வாழ்க்கையே வேண்டாமென்று முற்றுப்புள்ளி வைத்து…. திரும்ப மடத்தில் சென்று வாழ்வதை விட….முற்றுப்புள்ளி வைக்காமல் கணவன் விருப்பத்தை நிறைவேற்றினால்…. அவர் ஆன்மாவும் சாந்தியடையும்…. நண்பனை விட்டுப் பிரிந்து தவிக்கும் இந்த அனாதைக்கும் வாழ்வு கிடைக்கும். அனாதைகள் அனாதைகள் ஆவது சரி இல்லை !

– என்று நினைத்த செண்பகா…. கணேஷ் விட்டுச் சென்ற தாளைப் பிரித்து அதிலிருந்த குங்குமத்தைஎடுத்து நெற்றியில் இட்டாள். !!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *