முறை மாமன்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 7,487 
 
 

காலை முகூர்த்தத்திற்கு மண்டபம் சந்தடியின்றி இயங்கிக்கொண்டிருந்தது.

மணமகள் அறையில் மணப்பெண் மல்லிகா மட்டும் நிலைகொள்ளாமல் தவித்தாள்.

இவள் கண்களுக்குப் படுகிறமாதிரி சுவர் ஓரம் சேகர் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தான்.

அவனை அப்படிப் பார்க்கப் பார்க்க இவளுக்குள் ஏகத்துக்கும் எரிச்சல், கோபம் !

‘ தன்னை, இவன் பலி பீடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு எப்படி நிம்மாதியாகத் தூங்குகிறான். .?!

தன்னை இவன் எந்தவிதத்தில் காப்பாற்றுவான்…. தாலி காட்டுவான்??!! ‘ – அறைக்குள் நகத்தைக் கடித்துக்கொண்டு முன்னும் பின்னுமாக நடந்தாள்.

‘ மணி நான்கானால் ஒவ்வொருவராக எழுந்து ஆறு மணி முகூர்த்தத்திற்கு தயாராகி விடுவார்கள். என்னவோ மாப்பிள்ளைக்குப் பதில் இவனை மணவறையில் உட்க்கார வைத்து தாலி கட்டக் சொல்வது மாதிரியல்லவா தூங்குகிறான். .?! ‘

‘ ஏதாவது முன்னேற்பாடுகள் சேது வைத்துவிட்டு தூங்குகிறானா. ..? ! ‘

‘ ஐயா ! என் காதலியை வலுக்கட்டாயமாகப் பிரித்து இன்னொருத்தனுக்கு மணம் முடிக்கின்றார்கள். முகூர்த்த நேரம் 6. 00 மணி. சரியாய் 5 .50 க்கெல்லாம் தாலி கட்டி முடித்து விடுவார்கள். நீங்கள் அதற்கு முன் மண்டபத்தில் ஆஜராகி திருமணத்தை தடுத்து நிறுத்தி என் காதலியை மீட்டு எனக்கு கட்டி வையுங்கள் ! ‘ என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு அவர்கள் வருவார்கள் என்று தூங்குகிறானா. ..? அவர்கள் சரியான நேரத்திற்கு வருவார்களா. .? அப்படி ஓடி வந்து காப்பாற்ற அவர்கள் இவன் வைத்த ஆளா..? இல்லை…. நாட்டின் முக்கிய புள்ளி, அரசியல் வாதியா. .?! ஒரு குடிமகன் பாதிக்கக்கூடாது. காதலர்கள் பிரியக்கூடாது. சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று அவர்கள் நினைத்து காத்திருந்தாலும்.. அந்த சமயத்தில் கொலை, கொள்ளை, வேறு முக்கிய வேலைகள் வந்து காரியத்தைக் கெடுத்தால். ..?!! ‘ – நினைக்க அவளுக்குத் திக்கென்றது.

‘ வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றானா. என்ன திட்டம் வைத்திருக்க முடியும். எந்தவித முன்னேற்பாடுகளும் திட்டங்களும் வைத்திருப்பவனால் நிச்சயமாய் இப்படி தூங்க முடியாது. சரியானபடி நடக்க வேண்டுமே என்று தூக்கம் வராது ! தான் திட்டமிட்டது எல்லாம் சரியாக நடப்பது மாதிரியல்லவா தூங்குகிறான். இல்லை வேறுறொரு திட்டம்…. பழகும்வரை பழகி, காதலிப்பதாய்ப் பொழுதை போக்கிவிட்டு கைவிடும் எண்ணமா. .? இல்லை… எந்த திட்டம், முன்னேற்பாடுகளும் சரியில்லை. தலைக்கு மேல் வெள்ளம். இனி போராடி பயனில்லை என்று உறங்குகின்றானா. ..?!

சேகர் தன்னைக் காப்பாற்றாமல்விட்டால். .? ‘ – மல்லிகாவிற்கு நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்க விரலிலுள்ள மோதிரத்தை வெறித்தாள்.

அதில்தான் அவள் உயிர் இருக்கிறது. எந்த நிமிடத்திலும் சேகர் மட்டும் இவள் கழுத்தில் தாலி கட்டாவிட்டால் அடுத்த வினாடி இதிலுள்ள வைரத்தைத் தின்று… அந்த அளவிற்கு இவள் சேகரை உயிருக்குயிராய் காதலிக்கின்றாள். அவன் இல்லையென்றால் சாதால்தான் கடைசி ஆயுதம்.!!

இவ்வளவு உளைச்சல் மல்லிகாவிற்கு தேவையே இல்லை.

” எங்க வீட்டில எனக்குச் திருமண ஏற்பாடு செய்யுறாங்க . ..” என்று ஆரம்பத்திலேயே இவனிடம் சொன்னாள்.

” அதுக்கென்ன. .. செய்ஞ்சா செய்ஞ்சிட்டுப் போறாங்க. ..” சேகர் இவளிடம் அலட்சியமாகச் சொன்னான்.

” சேகர்ர்ர். ..! ” திடுக்கிட்டாள்.

” ஏன் பதட்டப்படுறே. .? ”

இவளுக்கு இன்னு படபடப்பு , பரிதவிப்பு.

” என்ன சொல்றீங்க. ..? ” கேட்டாள்.

” எல்லாம் எனக்குத் தெரியும். ..!” இன்னும் அமைதியாக சொன்னான்.

” என்ன தெரியும். .? என்னை இன்னொருத்தருக்குப் பெண் பார்க்கிறாங்க. ”

” அதுவும் தெரியும் ! ”

” இது தெரிஞ்சும் எப்படி கொஞ்சமும் பயம், பதட்டமில்லாம இருக்கீங்க. ..? ”

” என்ன பண்ணனும். .? ”

” என்ன இப்படி அலட்சியமா பதில் சொல்றீங்க. .? ” மல்லிகா அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.

”…………………………. ”

” நீங்க என்னைக் காதலிக்கலையா. .? ” தொண்டையடைக்கக் கேட்டாள்.

” காதலிக்கிறேன். ! ”

” உயிருக்குயிராய் நேசிக்கிறீங்களா. .? ”

” நேசிக்கிறேன் ! ”

” திருமணம் முடிக்க விருப்பம். .? ”

” உண்டு ”

” தடை. .? ”

” இல்லை. ”

” அப்புறம் ஏன் பேசாம இருக்கீங்க. .? நீங்க நேரடியா என் அப்பாகிட்ட வந்து நம்ம காதலிச் சொல்லி என்னைப் பெண் கேளுங்க. ”

” அது முடியாது மல்லிகா . .! ”

” ஏன். ..? ”

” உன் அப்பா சம்மதிக்க மாட்டார். ”

” காரணம். .? ”

” நீ பணக்காரி. நான் ஏழை. ‘ என் அக்கா பையன் என்கிறதுக்காக உனக்குக் கட்டி வச்சு என் பொண்ணு கஷ்டப்படுறதை நான் பார்க்க முடியாது. போடா வெளியில. .’ சொல்லித் துரத்துவார். அவமானம். ! ”

” அதுக்குப் பயந்துகிட்டு என்னைக் கை கழுவப் போறீங்களா. .? ”

” இல்லே ”

” பின்னே. .என்னதான் செய்யப்போறீங்க. .? ”

” ஒண்ணும் தெரியாதவன் போல சும்மா இருப்பேன். ! ”

” சேகர் ! ”

” ஆனா. .. எவனையும் உன் கழுத்துல தாலி கட்ட விடமாட்டேன். நான்தான் காட்டுவேன் ! ”

” எப்படி. .? ”

” நீ என்னைக்கு என் மேல ஆசை வச்சு, நாம ரெண்டு பேரும் உயிருக்குயிராய் பழக ஆரம்பிச்சோமோ அன்னைக்கே என் மனசுல திட்டம் தயார் ”

” என்ன திட்டம். .? ”

” மன்னிக்கனும். சொல்ல முடி யாது. பெண்களிடம் ரகசியம் சொல்லக்கூடாது ! ”

” பொய். என் அப்பா மேல உங்களுக்கு பயம். ஏதேதோ உளர்றீங்க. எனக்குச் சாதகமாய்ப் பேசி, ஏய்க்கப் பார்க்குறீங்க. நான் விடமாட்டேன். எனக்கு நீங்க உயிர். நீங்க இல்லேன்னா எனக்கு வாழ்க்கை கிடையாது. என் அப்பாகிட்ட நானே விசயத்தை உடைச்சு உங்களைக் கை பிடிப்பேன். ” கத்தினாள்.

” வேணாம் மல்லிகா. . அது உனக்கு கஷ்டம். எனக்கும் கஷ்டம். நம்ம காதலுக்கு வேட்டு மட்டுமில்லே. வெட்டு.!! நம்ம காதல் வெளியில யாருக்கும் தெரியக்கூடாது. ”

” சரி தெரிய வேணாம். என்ன திட்டம். .? அதையாவது சொல்லுங்க. .? நான் நிம்மதியாய் இருப்பேன். ”

” நீ நிம்மதியாய் இருன்னுதான் என்னால சொல்ல முடியும். . உன் கழுத்துல நான் கண்டிப்பா தாலி கட்டுவேன்னு உத்திரவாதம் தரமுடியும். திட்டம் சொல்ல முடியாது. உன்னைப் பொன்னோடும் பொருளோடும் மண்டபத்துல காப்பாத்துவேன். ”

” உங்க திட்டம் எனக்குப் புரிஞ்சி போச்சு ”

” என்ன..? ”

” நீங்க என்னை விட பொன், பொருளுக்கு ஆசைப்படுறீங்க. ”

” பைத்தியம் !! ”

” என்ன. .? ”

” ஆசைப்படலை. உனக்குச் சேர வேண்டியதோட கொண்டு வர்றதுதான் என் திட்டம், விருப்பம். என் அம்மா உன் அத்தையே உனக்கு மாமியாரானாலும் நாளைக்குக் கஷ்டம்ன்னு வரும்போது…. ‘பொண்ணுக்கு ஆசைப்பட்டு வெறுமனே இழுத்துக்கிட்டு வந்துட்டான்’ ன்னு உன்னையும் என்னையும் குறை சொல்லக்கூடாது ! ”

” அத்தை அப்படி சொல்லுவாங்களா. .? ”

” மாமியாகிற அத்தனைப் பொம்பளைங்களுக்கும் அந்த குணம் தானா வந்துடும் !”

” எனக்கு ஒன்னும் புரியல. ஆனா ஒன்னு .என் கழுத்துல தாலி ஏறுற கடைசி நிமிசம் வரைக்கும் உங்களுக்காகக் காத்திருப்பேன். ஏறிடுச்சின்னா கண்டிப்பா செத்திடுவேன். இந்த மோதிரத்துல உள்ள வைரத்தை தின்னு செத்திடுவேன். இது சத்தியம். ”

” உன் உயிரைப் அப்படி போக விடமாட்டேன். எதையும் கண்டுக்காம எப்போதும் போலிருப்பேன். கலியாணம் வரைக்கும் மாமா என்ன வேலை விட்டாலும் எப்போதும் போல செய்வேன். கார்ல போய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை அழைச்சு வரச் சொன்னாலும் அழைச்சு வருவேன். பெண் பார்த்து முடிஞ்சதும் அவுங்களைக் கொண்டு விடச் சொன்னாலும் விட்டு வருவேன். திருமணத்துக்கு முழு மூச்சாய் எல்லா வேலைகளையும் செய்வேன். ஆனா. …. மணவறையில் தாலி மட்டும் நான் காட்டுவேன். ”

” எப்படி. .? ”

” சஸ்பென்ஸ்!! ”

” மண்ணாங்கக்கட்டி ! ”

மல்லிகா இப்போது கையை நெறித்தாள்.

‘ படவா ! நீ இப்போ கையில கெடைச்சி கொன்னு போட்டுடுவேன். ! ” துடித்தாள்.

‘ நீ நம்ம காதலைக் காட்டிக்காம நல்ல பொண்ணா நடி. நானும் நடிக்கிறேன்னு சொல்லி இப்படி நடுச்சந்தியில நிக்க வச்சுட்டீயேடா பாவி. ! நாளைக்கு நான் சாகப்போறேன். என் பாவம் சும்மா விடாது. ‘ சேகரைப் பார்வையால் குதறிக்கொண்டே நடந்தாள்.

” மணி நாலாயிடுத்து எல்லோரும் எழுந்திரிங்கோ. .. ” ஐயரே குரல் கொடுத்து எல்லோரையும் எழுப்பினார்.

கொஞ்சம் சோம்பலாய்…. அப்புறம் சுறுசுறுப்பாய் அனைவரும் எழுந்து அரக்க பறக்க அவரவர் காரியத்தைப் பார்த்தார்கள்.

ஐயர் மணவறை முன் அமர்ந்தார்.

” முகூர்த்த சாமான்களையெல்லாம் கொண்டு வாருங்கோ. .” உத்தரவிட்டார்.

கொண்டு வந்து வைத்தார்கள்.

” உங்க சாதி வழக்கப்படி பொண்ணுக்குச் சேர வேண்டிய சீர், செனத்தி, சொத்து பத்தெல்லாம் சபையிலே தோப்பனார் அறிவிச்சுடுங்கோ. .” அவர் மட மடவென்று வேலையைப் பார்த்துக்கொண்டே சொல்ல வேண்டியவைகளை சொன்னார்.

கனகலிங்கம் மிடுக்காய் வந்து. …

” என் சொத்தில் பாதியும். நூறு பவுனும். அஞ்சு லட்சம் ரூபாய் சீர் வரிசையும் இருபது லட்ச ரூபாய் காரும் என் பெண்ணுக்கு அளிக்கிறேன். ! ” சொன்னார்.

எல்லோரும் மாப்பிள்ளை, பெண் வீட்டாரை மதிப்பாய்ப் பார்த்தார்கள்.

” மாப்பிள்ளையைத் தயாராகச் சொல்லுங்கோ. பொண்ணைக் கூட்டி வாருங்கோ. .” அக்னி வளர்த்தார்.

மல்லிகா மணப்பெண்ணாய் அவர் முன் அமர்ந்தாள்.

மந்திரம் ஓதி பெண்ணுக்குத் தர்ப்பைப்புல் மோதிரம் அணிவித்து இரு கை நிறைய அரிசியை அள்ள வைத்து அதில் தேங்காயை வைத்து ஐயர். ..

” காப்பு கட்டணும். பொன்னுக்குத் தாய் மாமனோ முறைப்பையனோ வாங்கோ. .”குரல் கொடுத்து. … மஞ்சள் நூலில் மஞ்சள் கிழங்கை கட்டி தயாரானார்.

” சேகர் ! ” கனகலிங்கம் குரல் கொடுத்தார்.

தயாராய் இருந்த சேகர். ..

” இதோ வந்துட்டேன் மாமா. ..” ஓடி வந்து மணப்பெண் அருகில் அமர்ந்தான்.

” இடது கையில் காட்டுங்கோ. .” ஐயர் நூல் கட்டிய மஞ்சள் கிழங்கு காப்பைக் கொடுத்தார்.

சேகர் பணிவாய் வாங்கி சட்டென்று மல்லிகா கழுத்தில் கட்டி மூன்று முடிச்சுகள் போட்டான்.

பார்த்த எல்லோருக்கும் அதிர்ச்சி.

யாரோ ஒருவன் சுதாரித்து. …

” ஏய். …..!! ” உறுமி நெருங்கினான்.

சட்டென்று தன் இடுப்பிலிருந்து கத்தியை எடுத்து நீட்டிய சேகர். …

” யாரும் எங்களை நெருங்க கூடாது. நான் சொல்றதை எல்லோரும் அமைதியாய் கேளுங்க. நானும் இவளும் காதலிக்கிறோம். எங்கள் திருமணம் எந்த வித தங்கு தடங்களுமின்றி சுமுகமான முடிக்க இதைத் தவிர எங்களுக்கு வேற வழி இல்லே. இப்போ நடந்ததை மறந்து எங்க காதலை ஏத்து எங்களை வாழ்த்தினால் இங்கே நல்லது நடக்கும். மீறி எதிர்த்து எங்களை நெருங்கினால். … இவளைக் கொன்னுட்டு நானும் செத்துப்போவேன். !இவள் கையில் வைர மோதிரம் வேற இருக்கு. கடிச்சி தின்னு செத்துடுவாள் ! ”சொன்னான்.

” ஆமாம் ! ” சொல்லி மல்லிகா அவர்களை பார்த்தாள். கண்கள் பளபளத்தது.

அசைய உணர்வின்றி எல்லோரும் ஆணி அடித்தது போல அப்படியே நின்றார்கள்.

” நம்ம சாஸ்திர சம்பிரதாயங்கள்ல நல்ல வசதிகளிருக்கு. எதுக்கு வீணா நாம கஷ்டப்படணும். .? ஐயாவோட புத்திசாலித்தனத்தை இப்போ புரிஞ்சிக்கோ…” சேகர் மல்லிகா காதில் முணுமுணுத்தான்.

மல்லிகா காதில் அது தேனாகப் பாய்ந்தது.

வேறு வழியில்லாமல் மண்டபம் மொத்தத்தமும் இவர்கள் மீது அட்சதை தூவி ஆசீர்வதித்தது .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *