முதலா?…முடிவா?…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 5,100 
 
 

‘காலங்கள் மாறும்……கோலங்கள் மாறும்.. ஆனால் இந்த சென்னையின் குப்பை கூளம் மாறாதா?’

சிங்கப்பூரில் இருந்து, பல வருடங்கள் கழித்து, நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக சென்ற வாசுதேவனுக்கு முதலில் தோன்றியது இதுதான்.

ஆனால் பிறகு தான் தெரிந்தது…. சில மனிதர்களும் மாறவில்லை என்று…..

சுமதியும் மாறியிருக்கவில்லை. கடைசியாக சென்ற முறை இனிமை பூத்தாட வேண்டிய வயதில் சோகமே உருவாக காட்சி அளித்த சுமதியின் முகத்தில் இன்னும் அதே சோகம்.

நெருங்கிய உறவினர்கள் என்பதால், எப்போது சென்னைக்குச் சென்றாலும் சுமதியின் வீட்டிற்கும் செல்வது வாசுதேவனின் வழக்கம்.

“நீ அவனையே இன்னும் நினைச்சிண்டு இருக்கியா?” வாசுதேவனால் சுமதியின் ஆழ் மனதை காதல் எந்த அளவிற்கு தாக்கி உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“சுரேஷ் இப்போ எங்கே இருக்கான்?…. அவன் மனசு மாறி என்னை வந்து கட்டிக்கணும்னு தினம் தினம் நான் ஆண்டவனை வேண்டிக்கறேன் மாமா…” சுமதி விக்கித்து அழ ஆரம்பித்தாள்.

சுரேஷ், சுமதியின் அத்தை மகன்….. சிறு வயதில் இருந்து ஒருவரை ஒருவர் நன்கு அறிவர்.

‘நீ இவளுக்குத் தான்…… நீ அவனுக்குத் தான்’ என்று அவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் சீண்ட…. பருவ வயதில் அதைக் கொஞ்சம் சீரியசாக எடுத்துக் கொண்டு….. ‘கல்யாணம் தான் பண்ணிக்கப் போறோமே காதலிக்கலாம் வா!’ என்று சினிமா பாணியில் காதலிக்கத் தொடங்கினார்கள்.

சுரேஷின் பெற்றோர்களுக்கு உண்மையில் என்ன நடக்கிறது என்பது தெரியாது…… சுமதியின் பெற்றோர்களோ ‘சுரேஷ் நல்ல பையன். நன்றாகப் படித்து வேலைக்குச் சென்று பெண்ணைக் கட்டிக் காப்பான்’ என்று அவர்கள் நெருக்கமாக இருப்பதை கவனித்தும் இயல்பாக இருந்தார்கள்.

சுரேஷூம் சுமதியும் தொட்டுப் பேசி கொஞ்சித் தழுவி இன்பமாகத் தான் வாழ்ந்து வந்தார்கள். எல்லாம் அவன் படித்து முடித்து இரண்டு வருடங்கள் கழித்து மேற் படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் காலம் வரை…..

அமெரிக்கா சென்றவன் அங்கேயே ஒரு இந்தியப் பெண்ணிடம் பழகி, மனதைப் பறி கொடுத்து, அழகையும் அந்தஸ்தையும் எடை போட்டுப் பார்த்து…. முடிவில் சுமதிக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதினான்.

அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவள் தான்…… இன்றும் சுய நிலைக்கு மீண்டு வர முடியாமல் தவித்தாள்…..

பல சமயம் சுரேஷை முகநூலிலும், பின்பு வாட்ஸப்பிலும், பின் நேரடியாக தொலைபேசியிலும் பேசி மன்றாடினாள் சுமதி.

“நாம நண்பர்கள் மாதிரி தானே பழகினோம்?” என்று அவன் ஒரு முறை பதில் சொன்ன போது……. ‘சொன்னது நீ தானா?’ என்ற சினிமா பாடல் அந்த நேரம் பார்த்து கேட்க……. மன உளைச்சலில் மூழ்கிப்போனாள் சுமதி.

அதிலிருந்து இரண்டு மாதங்கள் கழித்து மீண்டவள் ‘அவனா சொன்னான்?… இருக்காது…. அப்படி ஒன்றும் நடக்காது!….. நம்ப முடியவில்லை!….நம்ப முடியவில்லை!’ என்ற இன்னொரு சினிமா பாடல் கேட்டு…. கொஞ்சம் தெம்பு வந்தவளாக மீண்டும் சுரேஷை தொடர்பு கொண்டு பேசினாள்.

“என்னடி இப்படி என் உயிரை வாங்கறே?…… ஒரு முறை சொன்னா புரிஞ்சுக்க முடியாதா?” என்று பட்டென்று பேசி தொடர்பை துண்டித்தான்.

அதன் பின் பல முயற்சிகள் வீண் போயின….சுரேஷும் தான் இன்னொருத்தியை காதலித்து திருமணம் செய்து கொள்வதை பற்றி அவளிடம் நேரடியாக சொல்ல பயந்து, அதோடு இப்படி சற்று கோபமாக பேசினால் தான் அவள் தன்னை மறக்க நேரிடும் என்று நம்பி, விட்டுவிட்டான்.

வாசுதேவன் இப்போது அந்த சுரேஷின் திருமணத்திற்காகத் தான் சென்னை வந்திருந்தார். திருமணம் முடிந்த மூன்றாம் நாளே தம்பதிகள் அமெரிக்கா சென்று விடுவார்கள்.

இப்போது இதை எல்லாம் சுமதியிடம் சொன்னால் அவள் ஏதாவது பிரச்சினை கிளப்புவாள் என்பது புரிந்தது. அதோடு கடிதங்கள் மூலமும், தொலைபேசி மூலமும் சுரேஷ், இந்த ஜென்மத்தில் மனம் திருந்தி, சுமதியை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பது தெளிவாகி இருந்தது.

அதனால் உண்மையை மூடி மறைத்தவர், “வாழ்க்கையில எத்தனையோ பேர் என்னென்னவோ தப்பு பண்றாங்க….. அதுக்காக மனம் நொந்து போய் மூலையில உட்கார்ந்துக்க நினைச்சா, கவிஞர் கண்ணதாசன் மாதிரி ஒருத்தரை நாம் கண்டிருக்க முடியாது…..அவருடைய தத்துவப் பாடல்கள் எல்லாம் கேட்டா, உடம்பும் உள்ளமும் பனியாய் உருகி, நம்ம பாவமெல்லாம் அழுகையாய் வெளியேறிடும்…… எத்தனையோ பேர் மனம் திருந்தி வாழறாங்க…

உன்னாலயும் அது முடியும்……. நீ படிச்ச பொண்ணு…….

முதல் முடிவாகி விட முடியாது……முதல் – அந்த ஆண்டவன் அவனவனுக்கு வகுத்துத் தர்றது…….. முடிவை, அந்த ஆண்டவன் சொல்ற பாடத்தைப் புரிஞ்சுட்டு நீயே நிர்ணயிச்சுக்கலாம்.

படிக்க வேண்டிய வயசில காதலிச்சு கெட்டு குடும்ப கெளரவத்தையும் பாழாக்கக் கூடாது…… இதுதான் உனக்கு முதல் பாடம். இதிலேர்ந்து நீ தெரிஞ்சுக்க வேண்டிய முடிவு, நீ மேல மேல படிக்கணும்கிறது தான்.

அதை விட்டுட்டு எந்நேரமும் இப்படி அழுதழுது பொழுதைப் போக்கினா, பார்க்கறவங்க மனசும் வாடும்…….

உன் கூட இருக்கறவங்களை சந்தோஷப்படுத்த, நீ முதல்ல சந்தோஷமா இருக்கணும்….. ஆமாம், அதைப் புரிஞ்சுக்க முதல்ல. உனக்கு இப்போ இருபத்து நாலு வயசுதான். இன்னும் எவ்வளவோ வாழ வேண்டி இருக்கு, எவ்வளவோ பார்க்க, அனுபவிக்க வேண்டி இருக்கு….. மனசை மாத்திரம் எப்பவும் தளர விடாதே…..இந்தப் பிரபஞ்சத்தில இருள்தான் அதிகம். ஒளியை அதிகரிக்க எல்லா நட்சத்திரங்களும் ஒன்று சேரணும்……உனக்குள்ள ஒளி பிரகாசிக்க, உன் நல்ல சுபாவம் எல்லாம் ஒன்று சேரணும்…… சோர்வும் குழப்பமும் இருளின் ஆதிக்கம்ங்கிறதை எப்பவும் மறந்துடாதே….

உன்னோட அழகுக்கும், குணத்துக்கும் ஒரு நல்ல எதிர்காலம் கண்டிப்பா கிடைக்கும்…..அந்த சுரேஷை மட்டும் மறந்திடு…அவன் உன்னை மறந்து, சந்தோஷமா வாழும் போது….. நீ மட்டும் அழறதுல யாருக்கு என்ன லாபம்? உன்னால இந்தக் குடும்பத்தில சந்தோஷமும், குதுாகலமும் போச்சு… இதை உடனே மாத்து… பழைய நிலைமைக்குத் திரும்பு……பெரியவங்க பார்த்து சொல்ற பையனைக் கல்யாணம் பண்ணி கிட்டு சந்தோஷமா வாழ வழி தேடு.

நான் போய் வரட்டுமா?” என்று அறிவுரைகளைக் கூறினார்.

அதற்குப் பின் இரண்டாண்டுகள் கழித்து……..

வாசுதேவனின் கையில் சுமதியின் திருமணப் பத்திரிகை தவழ்ந்தது. ஆனந்தக் கண்ணீர் மல்க அதைப் படித்தவர், பரிசுப் பொருட்களை அள்ளிக் கொண்டு திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே கிளம்பினார்.

அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்ட சுமதி, “மாமா, போன முறை வந்தப்ப என்கிட்ட ஒரு உண்மையை மறைச்சிட்டீங்க இல்லே..?” என்று சற்று முறைத்தவாறு கேட்டாள்.

வாசுதேவனுக்கு குற்ற உணர்வால் பேச்சு எழவில்லை……

“பரவாயில்லை மாமா.. அதுவும் ஒரு நல்லதுக்குத் தான்னு நான் இப்போ நினைக்கறேன்” என்றாள்.

“நீ என்ன சொல்றே ….?”

“சுரேஷோட கல்யாணத்துக்காகத் தான் நீங்க வந்திருந்தீங்க… என் கிட்டே சொன்னா நான் ஏதாவது பண்ணி கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு, என்கிட்ட அந்த உண்மையை மறைச்சீங்க. இப்போ சுரேஷ் எங்க இருக்கான்…எப்படி இருக்கான்னு தெரியுமா உங்களுக்கு?”

“உண்மையாவே இப்போ தெரியாதும்மா…. உன்கிட்ட அவன் உண்மையா நடந்துக்காததால, அவன் கல்யாணத்துக்கப்புறம் அவனோட தொடர்பு வெச்சிக்கலை…கல்யாணம் பண்ணிட்டு பெண்டாட்டியோட அமெரிக்கா போயிட்டான். அதுக்கப்பறம் இன்னி வரைக்கும் அவன் அங்கே சந்தோஷமா வாழறதா தான் நான் நம்பறேன்”

“சந்தோஷமாதான் இருந்தான்…சந்தோஷமாதான் இருந்தான்…இருந்தான் மாமா…அது என்னவோ ஒரு வருஷம் தான்…அதுக்கப்பறம் அவங்களுக்குள்ள சண்டை வந்திடுச்சாம்…இப்போ டைவர்ஸ் பண்ணிக்க கோர்ட் வரைக்கும் போயிட்டாங்க….தெரியாதா உங்களுக்கு?”

வாசுதேவன் “அடக் கடவுளே!…..” என்று பிரமித்துப் போனார்.

“நீங்க மட்டும் அன்னிக்கு என் கிட்டே உண்மையைச் சொல்லி…நான் அவன் கல்யாணத்தை நிறுத்தி இருந்தா?…கல்யாணம் மட்டும் தான் நின்னு போயிருக்கும்…அவன் என்னைக் கல்யாணம் செஞ்சிருப்பானா???….அவன் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ண பொண்ணையே டைவர்ஸ் பண்ற அளவு சண்டைன்னா……நான் அடாவடித்தனமா கல்யாணம் பண்ணி இருந்தா, என் கதி நல்லா இருந்திருக்குமா?…சந்தேகம் தான்!

நான் இப்போ ஒன்றை நல்லா புரிஞ்சுகிட்டேன் மாமா….. நம்ம ஆசைக்கு ஒருத்தரை அடாவடித்தனம் செய்ஞ்சு கல்யாணம் பண்ணிக்கறதை விட, நம்மை ஆசைப்படற ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கறது தான் பெட்டெர்.

ரொம்ப நன்றி மாமா…. நீங்க மாத்திரம் அன்னிக்கு அவ்வளவு அட்வைஸ் செய்யலைன்னா, நான் இன்னிக்கு இப்படி சந்தோஷமா மாறி இருக்க முடியாது… ரொம்ப நன்றி மாமா!”

Print Friendly, PDF & Email

1 thought on “முதலா?…முடிவா?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *