“மறந்துடேனா! இந்த லோகத்துல அந்த இரங்கநாதன் கூட மக்கள ரட்சிக்க மறக்கலாம்டி குழந்தே ஆனா நான் என்னைக்குமே என்னோட கொள்கைகள மறந்ததில்ல தெரியுமோ”
“இல்ல இவ்ளோ நாழி ஆயிடுத்தே இப்ப போறளே அதான் கேட்டேன்” என்றாள் கஸ்தூரி மாமி.
“வயசாயுடுத்தோனோ அதான் நடக்க முடியுறதில்ல” என்று ஐப்பாசி மாத மழை நீர் தேக்கங்களில் தத்தி தத்தி நடந்து வந்து கொண்டிருந்தார் நம்ம சீனிவாசன் பாவம் எம்பத்தினாலு வயசாயுடுத்தோனோஅப்படி தான் இருப்பார் என்ன பண்ண சொல்றேள். சட்டென சிறிது நேரம் நின்று நிதானமாக ‘என்ன?’ என்று சம்பாஷனையில் கேட்டார். நம்மலதானோ! நம்மலயே தான். ‘என்ன?’ இல்ல இந்த தெருவில் இருக்குற மத்த மார்க்கம் சமூகம் கொண்டவா கூட அக்ரஹாரத்து பாஷை பேசுறச்ச நம்ம பேசலன தப்பாயுடுமோனோ அதான்….. வேண்டாம்குறேளா! நல்ல இல்லயோ, இருந்தாலும்…
சரி இதோட நிறுத்தின்றுவோம் இல்லனா ரொம்ப கோச்சுண்டுருவார் போல ம்ம்.
சுப்ரபாத கீர்த்தனைகள் ஆங்காங்கே ஒலித்து கொண்டிருந்தது கதிரவனின் ஓளி வேகம் சற்று குறைந்து தான் வந்தது. அக்ரஹாரத்து மாமிகள் எல்லோரும் மஞ்சள் தெளித்து கோலமிட்டு கொண்டிருந்தனர் ஆஹா! என்ன அழகு இத பார்க்க நம்ம சீனிவாச அய்யங்காருக்கு கொடுத்து வைக்கலயே ஆமா கண் பார்வை வேற குறஞ்சுருச்சோனோ. பாவம் அந்த நடை தளர்வுல பங்கஜம் மாமி போட்ட கோலமயிலோட கால மிதிச்சுட்டார். பங்கஜம் மாமிக்கு கோவம் தலைகெறிவிட்டது.
“சீக்கிரம் போய் சேரமா நம்ம பிராணன வாங்குறதே” படக்கென வாயைவிட்டாள் பங்கஜம் மாமி.
கண்கள் கொஞ்சம் மங்கல் என்றாலும் காதுகள் ஒருவாறு உயிர்ப்போடு தான் இருந்தது. “கொஞ்சம் பொறுடி மா வைகுண்டத்துல இடமில்லயாம் அதான் கைலாயத்துல கேட்டுருகேன் இடம் கிடச்ச உடனே போய்றேனடி மா சரியா” இந்த மறுமொழிக்கு பங்கஜம் மாமியிடமிருந்து குமட்டு சினுங்கல் தான் கிடைத்தது.
“அப்படி தட்டு தடுமாறி இந்த அதிகாலை வேளையில எங்க தான் போறாரோ அந்த பெருமான சேவிக்க போறாரோ” என்றான் அவரை கண் கொட்டாமல் பார்த்த வழிப்போக்கன்.
மறுபடியும் நின்று நிதனாமாக திரும்பி பார்த்தார் சீனிவாசன் மறுபடியும் நம்மளதான் “அய்யோ நானில்ல சார்வாள்”.
“ஓய் நீ என்ன ஊருக்கு புதுசா அவர் எங்க போறாரு நோக்கு தெரியாதா. நேதாஜி போருக்கு கூப்டப்ப பாரதி பாட்டெல்லாம் பாடின்டே பட்டாளத்துக்கு போனவரு பெருமாள சேவிக்க போறாராக்கும்”
“நேக்கு என்ன தெரியும்? பின்ன எங்க அவசரமா கொல்லைக்கு போறாரோ”
“போடா அபிஷ்டு வெட்டி பேச்சு பேசாம போடா” என வழிபோக்கனுக்கு புத்தி கூறி சென்றார் கோயில் குருக்கள்.
அந்த மனுஷன் எங்க தான் போறாருனு பின் தொடர்ந்து போனான் நம்மவன். பனிகாற்று வாடையும் குளிரும் அந்த காலை பொழுதை ரம்மியமாக்கியது.
ஒரு நீண்ட நடை பயணத்துக்கு பிறகு சீனிவாச பெருமாள் கோயில் வாசல் தென்பட்டது. மெள்ளஅவர் நடை வேகம் பெற்றது முகத்தில் கொஞ்சம் புன்னகை கொஞ்சம் சினுங்கல் அது மூப்பின் காரணமாய் இருக்கலாம் கொஞ்சம் பதற்றமும் கூட. ஒருவழியாக அந்த காலைபனி அவரை வெகுவாக மறைத்தது.
கோயில் கடைத்தெருவின் வாசலின் மறைவில் நின்று நம்மவன் பனி விலக காத்திருந்தான். அப்படி என்ன தான் பண்ணப்போறரு இன்னைக்கு பார்த்தே ஆகனும் என்ற ஆவலுடன்.
மெள்ள புகைமூட்டம் புடை சூழ்ந்தது அது விலக வெகு நேரம் ஆனது அதற்குள் நம்மவன் அங்கலாய்த்து தீர்த்துக்கொண்டான். அந்த புகை மண்டலம் சற்றே விலக எத்தனித்தது பொறி பறக்க நெருப்பின் ஜுவாலை தெரிந்தது துளசி வாடையுடன் நெய்யின் நறுமணமும் கலந்து மூக்கை துளைத்தது இட்லிகள் கமகமவென ஆவியை பரவவிட்டது, ஆழ பொறிந்த தோசைகள் நெய்யை சொட்டி கொண்டிருந்தன, வறுத்த கொட்டை பொடியின் இடுக்குகளில் சிக்கரி தன் மணத்தை சிதற விட்டது குறிப்பாக பொன்னிற அப்பங்கள் தேனை கக்கி கொண்டிருந்தன அந்த நாரயண வாடை ஒருவாறு அவனை பாற்கடலில் மூழ்க செய்தது ஆனால் எந்த வித சலனமுமில்லாமல் அங்கே கிடத்தப்பட்ட பலகையின் முன்னேரத்தில் உட்கார்ந்து சௌகர்யத்துடன் சப்பு கொட்டி மணி கடை காப்பியை குடித்து கொண்டிருந்தார். நம்ம சீனிவாசனை பார்த்து கொஞ்சம் ஆடித்தான் போனான் நம்மவன்.
“அட பகவானே” என தலையில் அடித்துக்கொண்டே பெருமாள் கோயிலை நோக்கி நடந்தான் நம்மவன். அவனை நேருக்கு நேர் முட்டுவதை போல
துளசியையும் நெய் பொங்கலையும் கைகளில் ஏந்தியபடி ஆழிலையில் எழுந்து ஓடி வந்த கண்ணனை போல சீனிவாசனை நோக்கி ஓடி வந்தான் பாரதி “சீனி தாத்தா! இந்தாங்க” என்று இரண்டு கைகளையும் நீட்டினான். பொங்கலை எடுத்து கொண்டு காப்பி டவராவை பாரதி கைகளில் வைத்தார் சீனிவாசன், அதனை பவ்யமாகவே ஏந்தி கழுவி மணியிடம் கொடுத்தான்.
“டேய் தம்பி, இந்தா இத போய் சிவராமன் ஐயர்ட்ட கொடுத்துட்டு வா” என நான்கு நெய் அப்பத்தை வாழையிலையில் மடித்து கொடுத்தான் மணி.
அதை வாங்கி கொண்டு துள்ளி குதித்து ஓடினான் பாரதி. அவன் ஓடும் அழகை அவ்வளவாக ரசிப்பதற்கில்லை அவன் அணிந்த பனியனில் அவன் மொத்த மச்சங்களையும் எண்ணிடலாம் அவன் அணிந்திருந்த டவுசரில் தான் எத்துனை நிறங்கள் அது ரசிப்பதற்குறியதாகுமா என்ன!.
சூரியன் இப்போது சஞ்சாரம் செய்ய தொடங்கிவிட்டான். சீனிவாச அய்யங்காருக்கோ ஒரே படபடப்பு.
“என்ன ஓய் தேடிட்டு இருக்கீரு” என கூறிக்கொண்டே அவ்வழி கடந்தார் கரீம் பாய்.
“ஓ! நீயா மூக்கண்ணாடிய மறந்துட்டேன் ஓய்! கொஞ்சம் நீ வந்து படிச்சு சொல்லேன்” என்று அன்றைய நாளிதழை நீட்டி தன் சுருங்க சிரிப்பால் அசடு வழிந்தார்.
“இப்பலாம் நீ ரெம்பவே மறக்கறீர் ஓய்.
கொஞ்சம் பொறும் பேரன போய் ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடறேன்.” எனக் கூறிவிட்டு மெள்ள நடந்தார் பாய்.
வழக்கம்போல பாதசாரிகளை வேடிக்கை பார்த்தவாறே நாழியை கடத்தினார். அதற்குள் நம் பாரதியும் வந்துவிட்டான். வாய்க்கு வாய் வாயாற தாத்தா என்று அழைக்கும் உரிமையை முழுமையாக அந்த அக்ரஹாரத்தில் பெற்றவன் பாரதி மட்டுமே என்பதில் அங்கிருப்பவர்களுக்கு கொஞ்சம் பொறாமை தான். பகுத்தறிவு பேர்வழி என்று எப்போதும் விதண்டாவாதமாக பேசிக்கொண்டு சித்தாந்தங்களை சிந்திக்கொண்டு திரிவார் என்பதாலோ அல்லது பட்டாளத்தில் சில பல பராக்கிரம செயல்களை செய்ததால் தானோ என்னவோ சீனிவாசனை அவ்வளவாக யாருக்கும் பிடிப்பதில்லை. தான் பெற்ற ஐந்தும் சரி, தன்னை ஆறவதாக பெற்றவர்களும் சரி சீனிவாசனின் கொள்கைகளில் பெரிதும் அவநம்பிக்கை உடையவர்கள். ஆனால் சீனிவாசனும் ஒரு விதத்தில் அதிர்ஷ்டசாலி தான், தன் சிந்தனை பிதற்றல்களை கேட்க ஒருத்தியை அனுப்பி வைத்தானே. அவள் என்ன பாவம் செய்தாளோ வாழ்க்கைபட. இருந்தாலும் அவள் பேணிய அன்பிற்கு நிகர் அந்த ஆண்டாள் கூட ஈடு செய்ய முடியாது.
அவள் வெற்றிடத்தின் பக்கங்களை தான் இப்போது நிரப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறார் சீனிவாசன். அதற்கு பெரிதும் தான் பயன்படுகிறான் பாரதி. பின்பு தூக்கி தாலாட்டிய தன் பேர பிள்ளைக்கே வைக்க இயலாத பெயரை இந்த மணி மைந்தனுக்கு வைத்து அழகு பார்த்தார் அல்லவா!.
அன்று கூட்ட நெரிசலுக்கு வழி இல்லாமல் போனது அதனால் கடையும் இளைப்பாறிக்கொண்டது. பாரதிக்கு தான் கொஞ்சம் மகிழ்ச்சி இரண்டு அப்பம் ஒரு தோசையும் எடுத்து சீனிவாசன் அருகே உட்கார்ந்து சுவைந்து கொண்டிருந்தான்.
“பாரதி கண்ணா! இத கொஞ்சம் படிச்சு சொல்லுடா” என்றார் சீனிவாசன் ஏக்கமாக.
சீனிவாசனை பார்த்து மென்சிரிப்பை உதிர்த்துவிட்டு மீண்டும் சுவைக்கலானான்.
அதற்குள் கரீம் பாயும் வந்துவிட்டார். சீனிவாசனுக்கு புன்னகை பொங்கியது பாவம் அவையெல்லாம் இன்னும் கொஞ்சம் நாழிக்கு தான் என்று அறிந்திருக்கமாட்டார் யானும் சொல்வதாய் இல்லை அனுபவிக்கட்டும். கரீம் பாய் கேட்கபோகும் கேள்விகளுக்கும் அதை கேட்கமறுக்க போகும் சீனிவாசன் செவிகளுக்கும் ஏன் அந்த அக்ரஹாரத்துக்கே பேரதிர்ச்சியாக தான் இருக்க போகிறது அந்த கேள்வி.
பாவம்! நடக்கபோவது இன்னதென்று அறியாமல் சிரித்து கொண்டிருந்தார் சீனிவாசன் தெரிந்திருந்தால் இந்த கேள்விக்கு பதில் கூற தேவையே இருந்திராதே…
“என்ன ஓய் ரெம்ப நாளா ஆளயே காணோம்”என்றார் சீனிவாசன்.
“என்னத்த ஓய் சொல்ல பேர பிள்ளைகள் வீட்டு வேலைனே ஓடிடுது”
உம்ம பசங்கலாம் எப்படி இருக்கா?” எனக் கேட்டார் கரீம் பாய்.
“எல்லாரும் சௌக்கியம் ஓய், சென்னை ரொம்ப பிடிச்சு போய்டுத்து போல தீபாவளிக்கு கூட என்ன அங்க வர சொல்லுதுகள் ஏன்டானு கேட்டா லீவ் கிடைக்காதுனு சொல்றதுகள். இப்படி காசு பணத்த சம்பாரிச்சு என்னத்த பண்ணபோறதுகளோ
ம்ம் பிராணன விட்ட கூட வருதுகளோ என்னவோ”
“ஓய் உன்னை முதியோர் இல்லத்துல சேர்க்காம தனியா விட்டதுக்கு சந்தோசபடுவோய், அப்புறம் பேர பசங்க எப்படி இருக்கா”
“அவங்களுக்கு என்ன ஓய் நல்ல பெரிய இன்டெர்னாஷ்னல் ரெசிடன்ட் ஸ்கூல்ல படிக்கிறாங்க” என்று பகட்டு சிரிப்பு சிரித்தார் சீனிவாசன்.
“ஹூம்…..
ரொம்ப சந்தோஷம், ஆனா இப்படி தனியா எப்படி தான் சமாளிக்கிறியோபா”
“தனிமை என்ன நமக்கு புதுசா ஓய், பாதி இளமைய தனிமையே வாங்கிடுத்து மீதி தனிமைய இப்ப அனுபவிக்கிறேன்
நல்ல வேள ஓய் அவ சுமங்கலியா போய் சேர்ந்துட்டா நான் போய் அவ இருந்துருந்தா வாழும் போதே நரகத்த பார்த்துண்டுருப்பா
இவாலாம் அதுக்கும் மேல காட்டிருப்பா” என குரல் தழு தழுத்தது அருகில் இருந்த மாகோலத்தையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தார் அந்த கோலம் அவர் ராஜலக்ஷ்மி போட்டது போல் இருந்திருக்கலாம் யார் கண்டது.
“விடு ஓய், என்னைக்காது என் நிலைமைய கண்டுருக்கீரா
பம்பரம் மாறி சுத்திண்டு இருக்குற வயசாவோய் இது, ஒரு அஞ்சு நிமிசம் செத்த குருக்க சாச்சு கண்ணசற முடியறதா! ம்ஹூம்…” என்று சலித்தார் கரீம் பாய்.
“என்ன ஓய் இப்படி சளிச்சுக்குற, நம்ம பட்டாளத்துல இருந்தப்ப கூட நீ இப்படி சலிச்சதில்ல இப்ப என்ன ஓய்”
“உனக்கு என்ன ஓய் நீ நல்லா இருக்கீரு சுகவாசியா பசங்க பேரங்கலாம் நல்ல வெளியூருக்கு அனுப்பி வச்சுட்டு ஒண்டி கட்டயா சந்தோசமா இருக்கீரு…
என பாரும் வயசுக்கு மரியாதையுமில்ல ஒரு பச்சாதாபமில்ல இந்த வயசுக்குமேல என்ன என்ன வேலயலாம் வாங்குறா ம்ம் ‘அல்லாஹ்’ உண்மைய சொல்லனும்னா முடிலடா… சீனி”
“வாஸ்தவம் தான்…
வர வர மனுஷாளாம் மாறீட்டே வர்றா
ஒரு பொறுப்பில்ல
இங்க பாரு திருப்பல்லாண்ட எப்ப பாடுறதுகள்னு கலிகாலம் என்னத்த சொல்ல சொல்ற”
“ஆமா ஆமா மனுஷாள் மாறிட்டு தான் வராங்க அதுல நீயும் தான இருக்க
ஹா
ஹா
ஹா”
என்றார் கரீம் பாய் எக்காள சிரிப்புடனே.
“என்ன ஓய் சொல்றீரு?” என்று கரீம் பாயை சிறுது நேரம் உற்று பார்த்தார்.
‘கொஞ்சம் தள்ளுங்க தாத்தா’ என்று கரீம் பாயின் கவனத்தை சிதறி சென்றான் பாரதி.
“பின்ன என்ன ஓய், இந்த இருக்கானே மணி வம்சமே உங்க வீட்டுக்கு பரம்பர பரம்பரையா சேவ செஞ்சிட்டு வந்தா இப்ப இங்க இருக்கான் அதுக்கு நீ தான் காரணம் ஆனா….” என்று இழுத்தார்.
ஆம், சுமார் அறுபது ஆண்டுகளாக சீனிவாசன் வீட்டில் கைங்கரியம் செய்து வந்த மணியின் மூத்தகுடிகளின் பூர்வ பிம்பத்தை தகர்த்து மணியின் இருபதுகளில் தனக்கு பிடித்தமான தாயார் சன்னதி தெருவிலுள்ள காணி நிலத்தை கொடுத்து அழகு பார்த்தவர் சீனிவாசன். எத்துனை மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள் கண்முன்னே உதிரம் சிந்தி கிடக்கும் மனிதர்களின் இரத்த வாடை கூட நுகர்தல்கூடாது என்று விலகி செல்லும் மனிதர்களிடையே சீனிவாசன் அந்த நூற்றாண்டின் நாயகன் தான் இருந்தும் சீனிவாசன் இன்று இப்படி செய்ததை யாரலும் நியாயப்படுத்த முடியாது என்பதே நிதர்சனம்.
காணி நிலம் கொடுத்தும் எப்படி வாழப்போகிறோம் என்று கை பிசறி முழி பிதுங்கி நின்ற மணிக்கு தான் வாழ்க்கையின் சூட்சமத்தை ஒப்புவித்தார். இவர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் அவர்கள் அப்படி தான் நடக்க வேண்டும் என்ற கூற்றுகளை கேளாது வாழ்ந்த சீனிவாசன் அப்படி செய்தது போற்றுதற்குரியதாக என்றும் இராது தானே.
கலைவாணி மீட்டெடுக்கும் வீணையின் இசையை இவர்கள் தான் கேட்கவேண்டும் என்று பிரம்மன் செய்தானோ தெரியவில்லை ஆனால் அப்படி சேராத இசையை மீட்ட வீணை வாணியின் கைகளில் இருந்தென்ன லாபம் அது நலம் கெட்டு புழுதியிலே கிடத்திடலாம். அதை வாரி எடுத்திட்டு மீட்ட சீனிவாசன் போன்று மனிதர்கள் இருந்தார்கள் அவர்களும் விதிவசத்தால் மதி இழந்து கிடக்கிறார்கள் இதுவும் பிரம்மனின் செயல் தானோ யார் அறிவார்?.
பாரதி இந்த சம்பாஷனைகள் எதையும் பொருட்படுத்தவில்லை அவன் கவனமெல்லாம் அவனை கடந்து சென்ற அந்த பள்ளி மாணவன் மீது தான் இருந்தது புத்தக மூட்டையின் அடர்த்தியை தாங்காமல் ஒரு புத்தகம் புழுதியில் வீழ்ந்தது அதை ஓடி சென்று தொட்டு எடுத்தது இந்த மென் கைகள் ஆஹா! என்ன நறுமணம் புத்தக வாடை தான் எவ்வளவு அருமையாக இருந்தது அவனுக்கு. ஒவ்வொரு பக்கமாக திருப்பினான் ஒவ்வொரு பகுதியையும் ரசித்தான் மெள்ள திருப்ப ஓர் இடத்தில் நின்றான் தவறவிட்டவனும் வந்தான் பாரதி கைகள் பற்றிய புத்தகத்தை பிடுங்கி எடுத்து சென்றான் பிடுங்கிய வேகத்தில் அந்த பக்கம் கிழிந்து பாரதி கைகளிலே தங்கிற்று. அந்த காகிதத்தையே பார்த்து கொண்டிருந்தான் பாவம் அவனுக்கு தான் என்ன தெரியும் முன்னும் பின்னும் பார்த்துகொண்டிருந்தான் ஒன்றும் புரியவில்லை காற்றிலே பறக்கவிட்டான் அது ஓடி விளையாடியது அங்கிருந்த பாப்பாக்களுடன்.
அதை பார்த்து கொண்டிருந்த கரீம் பாய் இப்போது சட்டென வினாவினார்
“ஆனா இந்த பாரதி பையன பள்ளிக்கூடதுல சேர்க்கனும் படிக்க வைக்கனும்னு தோனலல
உம்ம பேரன மட்டும் இன்டர்நெஷனல் ஸ்கூல்ல படிக்க வைக்கிறீரு இவன கவர்மன்ட் ஸ்கூல்ல கூட படிக்க வைக்க முடியலயே ஓய்
ஏன் ஓய் கொள்கைகளலாம் மறந்துட்டியா இல்ல மறச்சுட்டியா”
இதற்கு மறுமொழியை பாய் எதிர்பார்க்கவில்லை சீனிவாசனும் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை.
சீனிவாச அய்யங்காருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை வாய் குளறியது ஆனால் உதடுகள் மட்டும் ஏதோ சொல்ல துடித்தது
“நான் மறந்துட்டேனா
நான் மறந்துட்டேனா”