கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 21,710 
 
 

பொழுது சாய்ந்து விட்டது. கொல்லையில் காய வைத்திருந்த சவுக்குக் கட்டைகளை ஒரு மூலையில் நேர்த்தியாக அடுக்கி வைத்து, மழையில் நனைந்து விடாமல் ஓலைக்கீற்றுகளால் மூடி விட்டு, தரையில் சிதறி இருந்த சுள்ளிகளை குனிந்து நிமிர்ந்து பொறுக்கியதில் ராஜலக்ஷ்மிக்கு மூச்சு இரைத்தது.
அவளைத் தேடிக்கொண்டே அங்கு வந்த தாசு, பின்னால் கைகளைக் கட்டியபடி நின்று கொண்டே கொஞ்ச நேரம் ஆர்வத்துடன் கவனித்து விட்டு,

“இத்தனை விறகை என்ன செய்யப் போகிறாய்?” என்றார் நீட்டி முழக்கிக் கொண்டே.

அந்தம்மாள் சுட்டெரிப்பது போல் ஒரு பார்வையை வீசிவிட்டு, “நாளைக்கு நீங்க ஹரிஹி என்று மூச்சை விட்டால் கொள்ளி வைப்பதற்கு வேண்டாமா?” என்றாள் அதே சுருதியில் நீட்டியபடி.

அவர் கொஞ்சம் கூட அசராமல் போனதோடு உரத்தக் குரலில் சிரித்து விட்டு, “அடியேய்! உனக்கு எவ்வளவு முன் யோசனை கிழட்டுப் பொணமே!” என்று அந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த என்னை அழைத்து, “பார்த்தாயாடா உன் மாமியின் பத்தினித்தனத்தை! உடன்கட்டை ஏறுவதற்கு தயாராகிக் கொண்டு இருக்கிறாள். இல்லை என்றால் இந்த ஒரு கட்டைக்கு இத்தனை விறகு வேண்டுமா என்ன?” என்றார் அலையலையாக சிரித்துக்கொண்டே.

அந்த வார்த்தைக்கு எனக்கும் சிரிப்பு வந்தது. மாமி இல்லாத பற்களை நறநறவென்று கடிக்கப் போய் உதட்டால் நாக்கைக் கடித்து கொண்டு விட்டாள். கோபத்தில் விரல்களை நெட்டி முறித்து அதுவும் சத்தம் எழும்பாமல் போனதால் ரோஷத்தை தாங்க முடியாமல், “அய்யோடா! ரொம்பவும் ரசனையுடன் பேசி விட்டதாக நினைப்பு. இந்த நக்கலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. ஒரு நகையா புடவையா. குடித்தனத்திற்கு வந்து அறுபது வருஷம் ஆயிற்று. ஒரு பண்டிகையா? கொண்டாட்டமா? ஒருத்தர் வந்தார்கள் என்றா? போனார்கள் என்றா? ஒரு தீர்த்தமா க்ஷேத்திராடனமா?” மாமியின் குரல் போகப் போக கம்மிவிட்டது.

மாமா சிரிப்பதை நிறுத்தி விட்டு ஓரடி பின்னால் வைத்தார்.

“என் தலையெழுத்து இப்படி ஆகி விட்டது. அந்த மெலட்டூர் வரனை முடிவு செய்திருந்தால் வங்கி, ஒட்டியாணம், ஆறு ஜோடி வளையல், காசுமாலை எல்லாம் போடுவதாக சொன்னார்கள். சல்லிகாசு வரதட்சிணை வேண்டாமென்றார்கள். எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்போ நினைத்து என்ன பயன்?”

மாமி மெலட்டூர் என்று ஆரம்பித்ததுமே மாமா பின்னால் திரும்பி இடது தோளில் இருந்த காசித் துண்டை எடுத்து ஒருமுறை உதறி விட்டு வலது தோளில் போட்டுக்கொண்டு கொஞ்சம் கூட தயக்கம், நடுக்கம் இல்லாமல் நிதானமாக வீட்டை நோக்கி நடந்தார். நீளமான தன்னுடைய நிழலை ஒரு உறையைப்போல் இழுத்துக்கொண்டே போய்விட்டார் ராமதாசு

எதிர்பாராத விதமாய் நான் சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன். எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் அங்கேயே நின்றிருந்தேன்.
“இங்கே என்ன பொம்மலாட்டமா நடக்கிறது? கணவன் மனைவி என்றால் ஆயிரம் பேச்சு இருக்கும். எல்லாவற்றுக்கும் நீ பல்லைக் காட்டத்தான் வேண்டுமா? சிறிசு பெரிசு என்ற பாகுபாடு வேண்டாமா? பார்த்து விட்டாய் இல்லையா? இனி கிளம்பு” என்று மாமி என்னை அதட்டினாள்.
பைத்தியம் போல் விழித்துவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டேன்.

oOo

ஊருக்கு நட்ட நடுவில் விசாலமான இடம். சுற்றிலும் அடர்த்தியாக வளர்ந்த மரங்கள். அதில் சிவப்பு அரளி, மருதாணி, இலந்தை மரம், நடுநடுவில் உயரமாய் நின்றபடி காவல் காத்துக் கொண்டிருக்கும் சிப்பாய்களை போல் தென்னை மரங்கள்.

அவற்றின் இலைகளுக்கு நடுவில் தேனடையும், காக்காவின் கூடுகளும் இருந்தன. வேலியைச் சுற்றிலும் சிவப்பு சங்கு பூச்செடியும், பட்டாணி பூக்களின் கொடியும் கன்னாபின்னாவென்று படர்ந்து பச்சை வர்ண சுவற்றில் வண்ண கோலம் போட்டது போல் இருந்தது.

அந்த பசுமையான வெட்டவெளியின் நடுவில் ஒரு சிறிய ஒட்டு வீடு. கொலுவில் வைக்கும் பொம்மை வீடு போல், குளத்தின் நடுவில் தாமரை மொட்டு போல் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. அந்த வீட்டில் இருப்பது இருவர் மட்டும் தான் என்றாலும் திண்ணைப் பள்ளிக் கூடம் போல் எப்போதும் சந்தடியாக இருந்து வந்தது. அந்த வீட்டில் இருப்பவர்கள் எனக்கு சொந்த மாமா மாமி இல்லை என்றாலும் ஒன்று விட்ட இரண்டு விட்ட உறவுமுறை.

தாசு மாமா வீடு என்றால் எல்லோருக்கும் கிலிதான். புலி இருக்கும் குகைக்குச் சமம். யாராவது வீட்டுக்கு வந்தால் வாசலிலேயே நிற்க வைத்து சுருக்கமாக பேசி அனுப்பி வைத்து விடுவார். அவர் படியிறங்கி எங்கேயும் வந்தது இல்லை. ரொம்ப கண்டிப்பான பேர்வழி. என்னை மட்டும் லேசில் தன் வீட்டில் வர விடுவாரா? பசுமையான கொல்லைக்கும், கறவை மாட்டுக்கும் ஒத்து வராது என்று எங்கள் பொறுப்பில் விட்டு வைத்திருந்தார். பால் சொம்புடன் மிடுக்காக இரண்டு வேளையும் போய் வருவேன். மேலும் நாலு முறை அங்கே நடக்கும் காட்சிகளை வேடிக்கை பார்ப்பதற்கு. அவர்கள் திட்டினாலும், கடிந்து கொண்டாலும் போகாமல் என்னால் இருக்க முடியவில்லை. அங்கே காணக் கிடைக்கும் காட்சிக்கு முன்னால் அந்த வசவுகள் எல்லாம் எந்த மூலை?

“தாசுவுக்கு எப்பொழுதோ எண்பது தாண்டி விட்டது. முதல் இரண்டு மகன்களும் அறுபது வயதை நெருங்கி விட்டார்கள். இன்றைக்கும் ஆசாமி எண்ணெயில் முழுக்காட்டிய சிலை போல் இருக்கிறார். கண்பார்வை மங்கவில்லை. ஒரு பல் விழவில்லை” என்று ஊர் மக்கள் திண்ணை மீது உட்கார்ந்த போது பேசி கொண்டு இருப்பார்கள்.

“வயிற்றில் பிறந்த ஐந்துமே மகன்கள். எல்லோரும் கை நிறைய சம்பாதித்துக் கொண்டு உசத்தியாக இருக்கிறார்கள். பேரன் பேத்திகளுக்கு கணக்கு வழக்கு இல்லை. போகட்டும், இவர்களை பொருட்படுத்தாதவர்களா என்றால் அதுவும் இல்லை. இந்த வயதில் இந்த இரண்டு கிழங்களும் இங்கே தனியாக இருப்பானேன்? ஒவ்வொருத்தரின் வீட்டிலும் இரண்டு மாதங்கள் வீதம் இருந்தாலும் ஒரு வருடம் நிம்மதியாக கழிந்து போய் விடும். என்னவோ இவர்களின் பிடிவாதம்.” அம்மா அவ்வப்பொழுது அப்பாவிடம் சொல்லிக்கொண்டு இருப்பாள்.

“பிடிவாதம் என்று நீ நினைக்கிறாய். ‘அவரவர்களின் வாழ்க்கை அவரவர்களுக்கு. என்னதான் பெற்ற மகன்கள் என்றாலும் தேவையில்லாமல் இன்னொருத்தர் மீது சார்ந்து இருக்கக் கூடாது. எல்லாம் ஈஸ்வரன் செயல். காற்றும் நீரும் எங்கே பிராப்தமோ யாருக்கு தெரியும்?’ என்பான் தாசு அத்தான்.” அப்பா சொல்லுவார்.

எனக்கு நினவு தெரிந்து பதினைந்து வருடங்களாக மஞ்சள் காவி வேட்டி, தோளில் சிவப்பு காசித் துண்டைத் தவிர வேறு உடையில் மாமா எப்படி இருப்பாரோ எனக்குத் தெரியாது. மாமி மடிசார் கட்டில், முக்கில் சிவப்பு கல் பேசரி, காலில் வெள்ளி கொலுசுடன் வயதான பார்வதி தேவியைப் போல் இருப்பாள்.

மாமா மட்டும், “கிழட்டு மானுக்கு புடவை கட்டி விட்டாற்போல் இருக்கிறாய் அம்மாளம்” என்று சொல்லி நாளுக்கு ஒரு முறையாவது மாமியிடம் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொள்வார்.

அவர்களுடைய மகன்களின் பெயர்களும் வேடிக்கையாக இருக்கும், கிருஷ்ணா, கேசவா, கோவிந்தா, மாதவா, நாராயணா.
வரிசை வைத்தது போல் இது என்ன பெயர்கள் மாமா என்று கிண்டல் செய்தால் சிரிப்பார்.

“முதலாமவனுக்கு கிருஷ்ணா என்று செல்லமாக பெயர் சூட்டினேன். ஒரு வருடம் போவதற்குள் அடுத்தவன் தயார். உங்க மாமியின் போக்கைப் பார்த்தால் பீர்க்கை காய்ப்பது போல் இருக்கே என்று சந்தேகம் வந்து விட்டது. இனி ஒவ்வொரு வருடமும் பெயருக்கு எங்கே போவது என்று கடவுள் மீது பாரத்தை போட்டு அவனுடைய பெயர்களை பற்றிக் கொண்டேன்.”

“என் குழந்தைகள் வேண்டாத பீர்க்கை ஒன்றும் இல்லை. ரத்தினங்கள் மாணிக்கங்கள்.” செல்லமாய் சிணுங்குவாள் மாமி.

oOo

அவர்கள் வீட்டு கிணற்று ராட்டினத்தின் சத்தத்துடன் அக்ரகாரம் விழித்துக் கொள்ளும். ராமதாசு ஸ்ரீ சூக்தம், புருஷ சூக்தம், நமகம், சமகம் எல்லாம் சொல்லிக் கொண்டே வாளியால் தண்ணீரை இறைத்து தலையில் ஊற்றிக் கொண்டு இரண்டு மணிநேரம் குளிபார்.

அத்தனை நேரமும் ராஜலக்ஷ்மி, “சீதையின் கணவன் ஸ்ரீ ராமச்சந்திரன் கார் மேக வண்ணன்… ஆஜானுபாகுவானவன்… தாமரை இதழ் போன்ற கண்ணுடையவன்” என்று பாடிக்கொண்டே கொல்லையில் செடி கொடிகளுக்கு இடையில் வளைய வந்து கொண்டிருப்பாள். வாய்க்காலில் தண்ணீர் ஒழுங்குப் படுத்திக் கொண்டே பூக்களையும் காய்களையும் குசலம் விசாரித்தபடி கொல்லை முழுவதும் சுற்றி வருவாள். அங்காங்கே நின்று செம்பருத்தி பூவையோ, சாமந்தியையோ பறித்து தலையில் சூடிக் கொள்வாள். பருத்தி வெடித்திருந்தால் உரித்து எடுத்து தலைப்பில் முடித்துக் கொள்வாள். முதல் நாள் இரவில் விழுந்த மட்டை தேங்காய்களை, தென்னை மட்டைகளை ஒரு பக்கமாக ஒதுக்கி வைப்பாள்.

“கொல்லை என்றால் அதுதான் கொல்லை. காலடி எடுத்து வைத்தால் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அந்த வயதில், அந்த பொறுமைக்கு கையெடுத்து கும்பிடு போட வேண்டும்” என்று அப்பா பாராட்டுவார்.

கிணற்றங்கரையில் சேரும் சகதியுமாக இருக்கும் இடத்தில் ஐந்தாறு வாழை மரங்கள். அம்மாவின் தலைப்பை பிடித்தபடி நின்று கொண்டிருக்கும் குழந்தைகளைப் போல் அவற்றின் கன்றுகள், அவற்றின் நிழலில் இஞ்சியும், சேனையின் குருத்துகள், இன்னொரு பக்கம் கத்தரி, மிளகாய்… வேலி ஓரமாய் பாகற்காய், பீர்க்கை, கோவைக்காய் வேலியைப் பின்னிய படி பறிக்கப் பறிக்க மாளாதது போல் காய்த்து தொங்கும்.

தினமும் தண்ணீர் கேட்காத வாதாம் மரமும், முருங்கையும் ஒரு மூலையில் இருந்தன. கடாரங்காயும் எலுமிச்சையும் ஒரே இடத்தில் இருந்தாலும் அதிகமாக பட்டுக்கொள்ளாத ஒர்படிகளை போல் இருந்தன.

அடர்த்தியாக வளர்ந்த கீரை பாத்தி… புதர் போல் மண்டி கிடந்த கறிவேப்பிலை சமையலறை கொல்லை வாசலில் எப்போதும் கைக்கு எட்டிய படி இருந்தது.

தரையில் படர்ந்த பூசணி கோடி அப்பொழுதுதான் ஊர்வலம் போய் விட்டு வந்த ஆதிசேஷனை நினைவுப் படுத்திக் கொண்டிருந்தது. கூரைமேல் ஏறிய சுரைக்காய் கொடி கூரை முழுவதும் படர்ந்து விட்ட போது அந்த குடீரமானது கண்ணாடியில் தெரியும் மலை!

கொல்லை வாசலுக்கு எதிரே துளசி மாடம். மாடத்தில் வீற்றிருக்கும் துளசிச் செடி. மாடத்தைச் சுற்றிலும் சேடிகளைப் போல் செம்பருத்தியும், குண்டுமல்லி, கனகாம்பரமும் அணிவகுத்து இருந்தன. துளசி மாடத்திற்கு இரு புறமும் தூண்களைப் போல் இரண்டு தென்னை மரங்களும், அவற்றை சுற்றிலும் மரிக்கொழுந்து, சாமந்தி பூச்செடிகள் படர்ந்து பச்சையும், கெம்பும் பதித்த உறையை அணிவித்தாற்போல் இருக்கும். இரு புறமும் தென்னைக் கீற்றுக்கள் வானத்தில் இணைந்து மாடத்திற்கு பச்சைத் தோரணமாய் முகத் துவாரத்தை அமைத்தன. பவழமல்லி உதிர்ந்து துளசியின் கொண்டையை அலங்கரிக்கும்.

நடுநடுவில் மாமா ஸ்லோகம் சொல்லுவதை நிறுத்திவிட்டு கிணற்றடியிலிருந்தே, “அம்மாளம்! நீ பாட்டுக்கு இஷ்டம் வந்தது போல் காயையும் பூவையும் பறித்து விடாதே. நான் வரும் வரையில் காத்திரு” என்று கத்துவார்.

ஒரு சதுர அடியில் அவிசை மரமும், அதனை சுற்றிக்கொண்டு வெற்றிலை கொடியும், பசலை கொடியும் இருக்கும்.

“அடியேய்! நீ அந்த இலைகளின் ஜொலிக்கு போகாதே. அந்த இலைகள் எல்லாம் ஒன்று போலவே இருக்கும். அப்புறம் வெற்றிலையை பருப்பில் போட்டு கடைந்து, பசலைக் கீரையை தாம்பூலத்தில் சுற்றிக் கொடுப்பாய். எனக்கு ஏற்கனவே நேற்று இரவு கெட்ட கனவு ஒன்று வந்தது” என்று திரும்பவும் ராட்டினத்தில் கயிற்றை விடுவார்.

அத்தை அவர் வார்த்தைகளை பொருட்படுத்தாமல், “இங்கே பாருங்களேன். வாய்க்காலுக்கு இரு பக்கமும் வெண்டையை பார்த்தீங்களா. ஏகப்பட்டது காய்ச்சிருக்கு. புடலைப் பூவெல்லாம் பிஞ்சு வைத்திருக்கு. ஒரு திருஷ்டி பொம்மையை வைத்தாக வேண்டும் இல்லா விட்டால் சரிப்படாது” என்றாள்.

மாமியின் கத்தலை கேட்டுவிட்டு, கை காரியத்தை நிறுத்தி, “நீதான் நாள் முழுவதும் வன விஹாரம் பண்ணிக் கொண்டு இருக்கிறாயே. இன்னும் திருஷ்டி பொம்மை எதுக்கு?” என்று திரும்பவும் ஸ்லோகத்தை சொல்ல தொடங்கினார்.

“பின்னே நான் திருஷ்டி பொம்மை இல்லாமல் வேறு என்ன ஆவேன்? அரக்கன் கையில் சிக்கிக் கொண்டு இலங்கையில் சீதைபோல் ஆகி விட்டேன். என் சின்ன வயதில் துலக்கி வைத்த குத்து விளக்கு போல் இருப்பேனாம்.”

மாமியின் தாக்குதலை காதில் வாங்கிக் கொள்ளாமல் குரலை உயர்த்தி, “அந்த ரோஜா புதர் பக்கம் போனாயா என்ன? ஒரே சத்தமாக இருக்கு” என்று நீட்டி முழக்கிவிட்டு, குளியலை முடித்துக் கொண்டு உடல் மீது இருக்கும் துணியை அப்படியே பிழிந்தார். “என் சிரசு சாலிகிராமம். இன்றைக்கு ஆயிரம் குடத்தால் அபிஷேகம் முடிந்து விட்டது” என்று முணுமுணுத்த படி கிணற்றடியில் உட்கார்ந்து கொண்டார் மாமா.

“அந்த சிவாஷ்டகம் கூட ஒரு தடவை சொல்லியிருக்கலாம் இல்லையா. அந்தக் கோடியில் இருக்கும் செடிகளுக்கும் தண்ணீர் கிடைத்திருக்கும்.” மாமி நீட்டி முழக்கினாள்.

“இன்றைக்கு இத்துடன் நிறைவு. ஏற்கனவே அரைமணி நேரம் தாமதம் ஆகி விட்டது.”

“எதுக்கு தாமதம் ஆகி விட்டது? நீங்க என்ன சர்க்கார் வேலைக்கு போறீங்களா?” கையில் கொய்யாக்காயை அம்மானை ஆடியபடி வந்தாள் மாமி.

“இதெல்லாம் சர்க்கார் வேலை இல்லாமல் வேறு என்ன? ஆபீசுக்கு போய் வேலை பார்க்கும் துரைகளை விட அந்தந்த வேளை உழைப்பிற்குத் தகுந்த பலனை கையோடு கொடுக்கும் இந்த இடத்தில் வேலை பார்ப்பது எவ்வளவு சந்தோஷம்?”

“இது நீங்க தினமும் சொல்லும் பாராயணம்தானே. இந்தாங்க கொய்யாக் காய். கொஞ்சம் கடித்துக் கொடுங்கள்” என்று கணவரின் கையில் கொடுத்தாள்.

“அதுதானே பின்னே! பல் போனால் மட்டும் காய் சாப்பிடும் ஆசை போய் விடுமா? தலை மொட்டையானாலும் ஆசைகள் போய் விடுமா என்று சொன்னார்கள் பெரியவர்கள்” என்று சொல்லிக்கொண்டே கொய்யாக் காயை பற்களால் கடித்து சுவைத்துக்கொண்டே, “பார்த்தாயா! உழைப்பை சுரண்டாது. காய்த்தாலும், பூத்தாலும் தம்மிடமே வைத்துக்கொள்ளாது. வரி கட்ட வேண்டியது இல்லை” என்று இன்னொரு துண்டை கடித்து “மெமோவும் மாற்றல்கள் எதுவும் இருக்காது. கும்பிடு போட வேண்டும் என்றோ, புகழ வேண்டும் என்றோ எதிர்பார்க்காது. இதை விட நல்ல யஜமான் எங்கிருந்து கிடைப்பான்?”

“என்னுடைய பங்கு காய் எங்கே? அந்த வார்த்தை இந்த வார்த்தை சொல்லி முழு காயையும் விழுங்கி வைக்கப் போறீங்க.”

மாமிக்கு அபயம் தருவது போல் கையை காண்பித்து, கடைசியாய் ஒரு துண்டை மாமியின் வாய்க்கு கொடுத்தார்.

மாமி சமாதானம் அடைந்தவளாய் காயை மென்று கொண்டிருந்தாள். அவர் நிம்மதியாக கிணற்று அடியில் சரிந்து உட்கார்ந்தபடி “சத்ஸங்கத்வே நிஸ்ஸங்த்வம்! நல்ல துணையும் நல்ல நிழலும்” என்று நினைத்துக் கொண்டார்.

சிறிது நேரம் இளைப்பாறி விட்டு மெதுவாக எழுத்து மரங்களை நோக்கி நடந்தார். மாமி பின்பற்றினாள். எல்லா செடிகளுக்கும் தண்ணீர் போய் சேர்ந்ததோ இல்லையோ கவனித்துக் கொண்டே சாய்ந்து போன்றவற்றை சரிசெய்து விட்டு முழுவதுமாக சுற்றி வந்தார்.

பெரிய மரங்களை குழந்தைகளின் பெயரைச் சொல்லி செல்லமாக அழைப்பார்கள்.

எலுமிச்சை மரத்திற்கு பிஞ்சு வந்தால், “நம் கிருஷ்ணன் இலை தெரியாமல் பிஞ்சு வைத்திருக்கிறான். பெரியவன் ஆகி விட்டான்” என்று பூரித்து போய் விடுவார்.

தென்னை மரம் குலை தள்ளினால், “மாதவன் நம்மை கை விடவில்லை. நம்முடைய பாரத்தை அவன் தோளில் சுமந்து கிட்டு இருக்கிறார் பார்” என்பார்

மாமரம் பூத்தால், “கோவிந்தன் இந்த கிழங்களை மறக்கவில்லை. இந்த முறை காய் பிரமாதமாக இருக்கப் போகிறதாம்” என்று நினைத்து நினைத்து சந்தோஷப் பட்டுக் கொள்வார்கள்.

அந்த வேளைக்கு தேவைப்பட்ட காய் கறியை பற்றி தீவிரமாக யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார் மாமா.

நாலு வாழைக்காயை பொடிமாஸ் பண்ணும் நிபந்தனையின் பெயரில் அனுமதி வழங்கினார். “கீரைக் கட்டை பருப்பில் போட்டுக் கொள். இதோ பார் கொத்தமல்லி. எதுக்கு தெரியுமா? கத்தரிக்காய் துவையலுக்கு. நேற்று பறித்த கத்திர்க்காய் மூன்று இருக்கு இல்லையா. துவையலுக்கு புதிதாக பறித்ததை விட வாடிய காய்தான் உகந்தது. இந்த கொத்தமல்லியை அதில் போடு. கறிவேப்பிலையை அப்போதைக்கப்போது போடணும். செடியிலிருந்து நேராக ரசத்தில் விழணும். நினைவில் வைத்துக் கொள்.” மாமா கம்பீரமாக மொழிந்து கொண்டிருந்த போது மாமி பின்னாலிருந்து பழிப்பது போல் கைகளை ஆட்டி, தலையை அசைத்து சரி சரி என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இதோ பார்! கொத்தமல்லி தான் இருக்கே என்று கத்தரிக்காய் துவையலில் அதிகம் போட்டு விடாதே. கீர்த்தனை பாடும் போது சுருதி போடுவது போல் தம்பூரா இருக்க வேண்டுமே தவிர அசல் விஷயத்தை விழுங்கி விடக்கூடாது. கிண்டல் பார்வை தேவை இல்லை. நான் சொன்னதற்கு வேதத்தில் சாட்சியம் இருக்கு.”

இருவரும் எலுமிச்சை மரத்தின் நிழலுக்கு வந்தார்கள். காயைப் பறிக்கப் போனாள் மாமி. எட்டவில்லை. மாமா தோளில் இருந்த துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, “அம்மாளம்! எட்டி பறித்து விடு” என்று சொல்லிக் கொண்டே தம் பிடித்து மாமியை அப்படியே தூக்கிவிட்டார்.

மாமி பழத்தைப் பறித்ததும் அப்படியே விட்டுவிட்டு நிமிர்ந்து மூச்சை விட்டுக்கொண்டார்.

தடால் என்ற சத்தமும், கால் சலங்கை ஒலியும், “அம்மாடி! செத்தேனடா சாமி!” என்ற அலறலும் ஒன்றாக கேட்டன.

தரையில் விழுந்த காசித் துண்டை எடுத்து உதறி தோளில் போட்டுக் கொண்டே, “பொணம் கனம் கனக்கிறாய். ராஜகுமாரியை போல் நாசூக்காக இருப்பாய் என்று நினைத்து சக்திக்கு மிஞ்சிய காரியத்தில் இறங்கி விட்டேன்” என்றார் மாமா.

மாமி மூச்சு இரைத்தபடியே, “போகப்போக மேல் துணி கூட பாரமாகி விடுமாம். வயதாகி விட்டால் அப்படித்தான். ஆடத் தெரியாமல் முற்றம் கோணல் என்றாற்போல்.” முனகிக் கொண்டே மாமி எழுந்துகொள்ளப் போனாள். மாமா கை கொடுத்து உதவப் போனார். அந்தக் கையை உதறித் தள்ளினாள்.

“வேண்டுமென்றே கீழே போட்டீங்க. கிருஷ்ணன் தான் சாட்சி! இது போல் இருமடங்கு அனுபவிப்பீங்க.”

மெதுவாக எழுந்து கொண்டு சேறு படிந்த புடவையைப் பார்த்து வசைபாடிக் கொண்டே கிணற்றை நோக்கி நடந்தாள். அதற்குள் திடீரென்று கிணற்று ராட்டையின் சத்தம் கேட்டதும் மாமா அந்த பக்கம் திரும்பி பார்த்தார்.

“நான்தான். மாமிக்கு உதவி செய்வோம் என்று.” மென்று முழுங்கினேன்.

“டேய் அற்பப் பயலே! வால் நட்சித்தரம் போல் என் வீட்டையே சுற்றி வருகிறாயா? நீ எப்போதடா வந்து தொலைந்தாய்?” என்றார் கோபமாக.
“கத்தரிக்காய் துவையல் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கும் போது” என்றேன் பணிவாக.

“அது போகட்டும்! டேய்! ராமதாசு வீட்டில் ரகசியமாக வெங்காயம் சாகுபடி நடக்கிறது என்று ஊரில் கிசுகிசுக்கிறார்களாம். உன்னுடைய கைங்கரியம்தானா?”

“………..”

“என் நிலம். என் இஷ்டம். டேய்! வெங்காயம் மட்டுமே இல்லை. கஞ்சா …கஞ்சா தோட்டம் வளர்ப்பேன். என்னை ஊரில் தள்ளி வைத்து விடுவார்களா? தூக்கில் போட்டு விடுவார்களா? திண்ணையில் உட்கார்ந்து கொண்டு வேண்டாத பேச்சு பேசிவிட்டால் போதுமா? வரச் சொல்லு என் முன்னால்!”

தொங்கி விட்ட என் முகத்தைப் பார்த்து மாமி குறுக்கே வந்தாள். “அது இல்லையடா! நாம் எவ்வளவு செல்லமாக பார்த்துக் கொண்டாலும் வெங்காயம் நம் நிலத்தில் விளையாது கண்ணா. அதையும்தான் பார்த்து விட்டோமே” என்றாள்.

“அடியேய்! கிழட்டு பொணமே! நீ வாயை மூடு முதலில். தவளையைப் போல் வாயை வைத்துக் கொண்டு…” மாமா களைத்து போனாற்போல் தலையை சாய்த்து விட்டார்.

oOo

ராஜலக்ஷ்மி விறகு அடுப்பை மூட்டினாள்.

வெளியில் வெயில் தீவிரமடைந்தது.

ராமதாசு தினசரி நிகழ்ச்சி நிரலின் படி “ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர” என்று சொல்லிக் கொண்டே வெயிலில் கயிற்றுக் கட்டிலை போட்டு விட்டு, தனித்தனி முறங்களில் கத்தரிக்காய், மாங்காய் வத்தல், வடாம், மோர் மிளகாய், வேப்பம் பூ இலந்தை வடை போன்றவற்றை காயவைத்து ஒரு கழியைக் கையில் வைத்துக் கொண்டு அங்கேயே காவல் உட்கார்ந்து கொண்டார்.

கட்டிலுக்கு பக்கத்திலேயே பூந்திக் கோட்டையைக் காய போட்டார். சின்ன குழந்தைகள் தீபாவளி வெடியை காயவைக்கும் உற்சாகம் அவர் கண்ணில் தென்பட்டுக் கொண்டிருந்தது. வெயிலை பொறுத்து கட்டிலை இடம் மாற்றிக் கொண்டு, அவ்வபொழுது முறங்களில் இருக்கும் பொருட்களை புரட்டிக் கொண்டு, அதன் ருசியை ஊகித்தபடி கனவுலகில் சென்று விட்டார்.

“சர்வலோக பிதா மகாம்.” வடகத்தை ஒடித்து வாயில் போட்டுக் கொண்டார். “ஆஹா! தேஜஸாம் புன்ஜம் வாயு ராகாசி… அம்மாளம்! மேவச… ராஜி!”

குரலைக் கேட்டு “இதோ வந்து விட்டேன்” என்று மாமி அரக்கபரக்க சமையல் அறையிலிருந்து வந்தாள்.

“விச்வேஷம்… பார்த்தால் சோழியைப் போல் இருக்கு வாயில் போட்டால் கரைந்து போகிறது.”

“எது?”

“குழம்பு கருவடகம்! அம்மாளம் … நீ ஆயிரம் சொல்லு. உன் புடவையில் வைத்த வடகத்திற்கு தனி ருசி இருக்கு.”

“ஏன் இருக்காது? அது நம் கேசவன் வாங்கி கொடுத்த புடவை இல்லையா.” ராஜலக்ஷ்மி மலர்ந்த முகத்துடன் ஒரு நிமிடம் வேறு நினைவில் மூழ்கி விட்டாள். உடனே தேறிக் கொண்டு சமையல் அறைக்குள் நடந்தாள், புடவைத் தலைப்பால் கண்களை ஒற்றிக் கொண்டே.

“தம் சூரியம் பிரணமாம்யஹம். அம்மாளம்! சொல்ல வந்ததை கேட்கவே இல்லையே.”

கணவரின் கத்தலுக்கு துள்ளிக் குதித்தபடி வெளியில் வந்து, “திரும்பவும் என்ன வந்து விட்டது? அடுப்பில் குழம்பு கொதித்துக் கொண்டு இருக்கிறது” என்றாள் எரிச்சலுடன்.

“அதில் மாங்கொட்டையை போட்டாயா?”

“அடடா! மறந்து விட்டேன்.”

“அதனால் தான் போலும். ஏதோ அபசகுனம் நேர்ந்து விட்டாற்போல் சற்று முன்னாலிருந்து என் இடது கண் துடித்துக் கொண்டிருக்கிறது. அப்பொழுதே எனக்கு சந்தேகம் வந்து விட்டது, பெரிய ஆபத்து ஏதோ வரப் போகிறது என்று. இதோ இந்த இரண்டு மாங்கொட்டையை எடுத்துக்கிட்டு போ. புளியைக் கொஞ்சம் குறைத்துக் கொள்.”

மாங்கொட்டையை எடுத்துக்கொண்டு உள்ளே போகப் போனாள்.

“அவசரப்படாதே. குழம்பு நன்றாக கொதிக்கட்டும். கொதிக்கக் கொதிக்கத்தான் குழம்புக்கு சுவை கூடும். நாள் ஆக ஆகத்தான் தாம்பத்தியம் இனிக்கும். நன்றாக நினைவில் வைத்துக் கொள். தாளிக்கும் போது பெருங்காயத்தை கண்ணில் காட்டினால் மட்டும் போறாது. சற்று தாராளமாகவே போடு. குறைந்த பட்சம் ருத்ராட்ச கொட்டை அளவுக்காவது போடணும்.”

மாமாவின் வாரத்தையை இடைமறித்து, “கொஞ்சம் இருங்க. குழம்பு கொதிக்கும்போது க்ஷீர சாகர மதனம் போல் சலசல சத்தம் …. தாளித்துக் கொட்டும் போது கல்சட்டியில் பிரளயம் ….. என் ஸ்ராத்தம் எல்லாம் வரவேண்டும்” என்று மொழிந்துவிட்டு விருட்டென்று சமையல் அறைக்குள் போய்விட்டாள்.

“அந்த கடைசி வார்த்தை என்னுடையத் இல்லை போலிருக்கே.” மாமா நினைத்துக் கொண்டார்.

oOo

உணவு நேரம்.
மாமா சமையலறை பரணில் உட்கார்ந்து ஆவேசமாய் கத்திக் கொண்டிருந்தார்.

ஒரு அடி தொலைவில் எதிர் சுவற்றில் ஏணி சாத்தி இருந்தது. தரையில் உட்கார்ந்து மாமி வாழையிலையில் தேங்காயை துருவிக் கொண்டிருந்தாள்.
மாமாவில் உடல் ஆவேசத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது. “ஜாடியிலிருந்து ஊறுகாயை எடுத்துத் தரச்சொல்லி, ஏணியை எடுத்து விடுவாயா? அடியேய்! போடு… ஏணியை கொண்டு வந்து போடு.”

“மாட்டேன் என்றால் மாட்டவே மாட்டேன்.” கொஞ்சம் கூட ஆத்திரம் இல்லாத குரலில் சொன்னாள் மாமி.

அபர சாணக்கியன் போல் குடுமியை அவிழ்த்து உதறிக் கொண்டே. “இன்னிக்கு என் கையால் உன் சாவு. ஒரு பெண்ணை கொலை செய்த மாபாதகம் என்னைச் சேர்ந்தாலும் சரி. நரகத்திற்குப் போக நேர்ந்தாலும் சரி. இது நிச்சயம்” என்றார்.

“இந்த வேண்டாத பிரதிஞைக்கென்ன வந்தது? என் கை காரியம் முடியும் வரை நீங்க இறங்குவது நடக்காது.” முடிவாகச் சொல்லி விட்டாள்.
பரணிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த உரியை பிடித்துக் கொண்டு இறங்க முயன்ற போது, “கீழே விழுந்தால் எலும்புக் கூடு தான் மிஞ்சும். அப்புறம் உங்கள் விருப்பம்” என்றாள்.

அந்த முயற்சியை கைவிட்டு திரும்பவும் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டார். “அடுத்த பிறவியில் நாயாகப் பிறக்கக் கடவது.” சபித்தார்.
“இப்போ மட்டும் அதை விட உசத்தியான வாழ்க்கையா?”

“வஸ்த்ர சந்நியாசம் செய்து சிவதாண்டவம் ஆடுகிறேன். காண சகிக்காமல் உன் மூச்சு நின்று விடும்.”

“நன்றாக ஆடுங்கள். வயசு தொண்ணூறு. முதுகெலும்பு சிவனின் வில்லை போல் பட்டென்று முறிந்து விடும்.”

“குதிக்கணும் என்று முடிவு செய்தால் குதித்து விடுவேன். அது ஒன்றும் எனக்கு அசாத்தியம் இல்லை.”

“உங்களுக்கு சிம்ம ராசி இல்லை. மேஷம்.”
வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லிக் கொண்டே மாமி தேங்காயை துருவி முடித்து விட்டு, கும்முட்டி அடுப்பில் வாணலியை வைத்தாள். மாமா பரணிலிருந்தே மாமியை, துருவிய தேங்காயை விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் நெருப்புத் துண்டங்களாய் இருந்தன. நெற்றில் குங்குமப் பொட்டு மூன்றாவது கண் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது.

அரவம் கேட்டு, “யார் அங்கே?” என்று அதட்டினார்.
“நான்தான்.” பயந்துகொண்டே உள்ளே எதிரில் வந்து நின்றேன்.

“எப்போதும் சமயத்திற்கு வந்து சேருவாய். சித்த அந்த ஏணியை எடுத்து இப்படி போடேன்” என்றார் கெஞ்சுவது போல்.

நான் நகர முயன்ற போது, “ஏணியை போட்டால் தெரியும் சேதி.” படபடவென்று தாளித்துக் கொண்டே மாமி சொன்னாள்.

“அவளுடைய கத்தலுக்கு என்ன வந்தது? ஏணியை இழுத்து இப்படி போடுடா.”

தாளித்துக் கொட்டலின் கமறலுக்கு வராத இருமலை நான் வலிய வரவழைத்துக் கொண்டதை உணர்ந்து விட்ட மாமா, “வயதில் பெரியவன். சொன்னால் கேட்டுக்கொள்” என்று உறுமினார்.

இனி தப்பாது என்று நான் ஏணியின் பக்கம் நகரப் போனேன்.

“பெரியவள் நான் சொல்கிறேன். எங்கள் வீட்டு விஷயத்தில் நீ தலையிடாதே,” வறுபடும் மிளகாய் போல் தாக்கமாகவே மாமி எச்சரித்தாள்.

செய்வதறியாமல் நான் நின்று விட்டேன். மாமா இயலாமையுடன் பரண் மீதே இருந்து விட்டார்.

“எள்ளு போட்டு வறுத்து தொலை. லேசாக வறுக்கணும். எனக்கும் துவையலுக்கும் அநியாயம் செய்து விடாதே.” அங்கிருந்தே கத்தினார்.
மாமி எதையும் பொருட்படுத்தும் நிலையில் இல்லை.

சூடு அடங்கியதும் தாளித்துக் கொட்டலை நேராக கல்லுரலுக்கு மாற்றினாள். மாமா தன்னையும் அறியாமல் ஆழமாக மூச்சை எடுத்துக் கொண்டார்.

மாமி இலையிலிருந்து துருவலை எடுத்து உரல் குழிக்கு வேலியை போல் அமைத்தாள். கை வளையலை மேலே இழுத்துக் கொண்டு அரைக்க தொடங்கினாள்.

மாமாவின் ஆவேசம் திரும்பவும் கடல் அலை போல் பொங்கியது.

“நம்பிக்கைத் துரோகம் உங்கள் வம்சத்திலேயே இருக்கிறது.”

பரணிலிருந்து மாமாவின் கத்தலுக்கு மாமி கையிலிருந்த குழவி பதில் சொல்லிக் கொண்டிருந்தது. அரைக்கும் போது விதவிதமான ஸ்தாயில், கதியில் சுருதியுடன் ஒலித்துக் கொண்டிருந்தது. ஏளனத்திற்கு ஏளனம், குத்தலுக்கு குத்தல், சாடலுக்கு சாடல் என்று ஒலி எழுப்பிக் கொண்டே கொஞ்ச நேரம் கச்சேரி தொடர்ந்தது.

அதற்குள் மிளகாய் அரைபட்டு விட்டது.

“உன் தந்தை சாட்சாத் தட்சன்! நம்பிக்கை துரோகி!”

மாமா சொன்னதற்கு மாமி ஒரு பார்வையை வீசி விட்டு சும்மா இருந்தாள். கல்லுரலின் சத்தம் சற்று நின்றது. சுற்றிலும் இருந்த தேங்காய் துருவலை உள்ளே தள்ளினாள். கை வளையல்களின் ஓசை சலசலத்தது.

“நம்பிக்கை துரோகம் இல்லாவிட்டால் வேறு என்ன? நகை நட்டுடன் கண்ணியாதானம் செய்வதாக சொன்ன பெரிய மனுஷன் முகூர்த்த நேரம் வந்த போது வெறும் மூக்குத்தியுடன் ஒப்பேற்றுவாரா?” என்றார் மாமா.

மாமி ஒரு நிமிஷம் பரண் பக்கம் பார்த்து விட்டு, “அய்யோடா! இவருடையது ஹரிச்சந்திர வம்சம்” என்று மொழிந்து விட்டு, வளையலை மேலே இழுத்துவிட்டுக்கொண்டு கல்லுரலை வேகமாக ஆட்டத் தொடங்கினாள்.

“சுளையாய் ஐநூறு ரூபாய் வரதட்சணை வாங்கிக் கொண்டு, ஐந்து பவுன் நகை போடுவதாக சொல்லி விட்டு, கடைசியில் மூன்று பவுனில் திருமணச் சரடும், கருகுமணிமாலையும் எடுத்து வந்தீங்களே. அதிலும் குந்தாணி தங்கம் கம்மி. பெரிதாக சொல்ல வந்துட்டீங்க” என்று குழவியை எடுத்து துவையலை ஒன்று சேர்ந்தாள்.

எல்லாவற்றையும் மேலே இருந்த படியே கவனித்துக் கொண்டிருந்த மாமா குரல் கொடுத்தார்., “துவையலை உன் இஷ்டத்திற்கு வந்தாற்போல் அரைக்காதே. இன்னும் நான்கு சுற்று சுற்று, உப்பு சேர்ந்திருக்கிறதா பார்.”

மாமி எதையும் லட்சியம் செய்யவில்லை. குழவியை கல்லுரலை சுத்தமாக வழித்து துவையலை குழிக்குள்ளேயே வைத்து துருவிய இலையையே மேலே வைத்து மூடினாள். அங்கிருந்து எழுந்து மீதி சமையல் பாத்திரங்களை எல்லாம் ஒரு இடத்தில் சேர்த்து வைத்தாள்.

“அந்த மெலட்டூர் வரன் மட்டும் நிச்சயமாகி இருந்தால்! எல்லாம் என் தலையெழுத்து. இப்படி சமையல்காரியாய் வாழணும் என்று என் தலையில் எழுதி விட்டான் அந்த கடவுள்.” முணுமுணுத்துக் கொண்டே சமையல் அறையில் மணையை போட்டாள்.

மெலட்டூர் என்றதுமே மூலிகையை நுகர்ந்த பாம்பை போல் மாமா சுருண்டு விட்டார்.

கொல்லைப்புறம் சென்று நுனி வாழையிலையைப் பறித்து வந்து மணையின் முன்னால் விரித்தாள். செப்பு பஞ்சப் பாத்திரத்தை தண்ணீருடன் இலைக்கு பக்கத்தில் வைத்து விட்டு, “டேய் கண்ணா! இப்போ போடுடா அந்த ஏணியை. மாமாவை மெதுவாக இறக்கி விடு” என்றாள் மாமி.

“அவசர நைவேத்தியம் தவிர அசல் நைவேத்தியத்தை அந்த கடவுளுக்கு படைத்தது இல்லை. எந்த பாவம் வந்து சேருமோ என்னவோ” என்று நினைத்துக் கொண்டே உணவு பண்டங்கள் மீது இருந்த மூடிகளைத் திறந்து நீரைத் தெளித்து அங்கிருந்தே தொலைவில் இருந்த பூஜையறைக்கு கையைக் காட்டினாள், குழந்தைகளின் பெயர்களைச சொல்லிக் கொண்டே.

மாமா மெதுவாக பரணை விட்டு இறங்கி மணையில் உட்கார்ந்து கொண்டார். ஒரு பேச்சு வார்த்தை இல்லை. மந்திரத்திற்கு கட்டுண்டவர் போல் காட்சி தந்தார்.

கல்லுரலில் இருந்த தேங்காய் துவையலை கொஞ்சம் எடுத்து இலையில் ஒரு ஓரமாக வைத்தாள். சமையலின் நறுமணம், சூடான சாதம், இளம் இலையில் பரிமாறியதும் சாதத்திலிருந்து ஆவியுடன் சேர்ந்து கமகமவென்று பரவியதும் மாமாவின் நாக்கு ஆதிசேஷனின் படகை போல் தலை தூக்கியது.

முதலில் பரிமாறிய தேங்காய் துவையலை அப்படியே மூன்று விரல்களால் எடுத்து நாக்கில் தடவியவர் சப்பு கொட்டிவிட்டு, “அம்மாளம்! அற்புதம்! வைகுண்ட வாசலில் நிற்பது போல் இருக்கிறது. உன் கையில் மணம் இருக்கிறது” என்று ரசித்துக் கொண்டே. “அதோ பார்த்தாயா! சங்கு சக்கிரமும், நடுவில் திருநாமம் எதிரே தென்படுகிறது என்றால் அது மிகை இல்லை” என்றார் தன்னிலை மறந்தவறாய்.

மாமி சிரித்துக் கொண்டே வெள்ளிக் கிண்ணத்தில் இருந்த நெய்யை பரிமாறிக் கொண்டே, “சுவற்றில் மாட்டியிருந்த முறம், சல்லடை நடுவில் மத்து. அவை உங்களுக்கு சங்கு சக்கிரம், திருநாமம் போல் தென்படுகிறது. பார்வை மங்கிவிட்டது போலும்” என்றாள்.

மாமின் பேச்சுக்கு வாய் விட்டு சிரித்துக் கொண்டே, “திட்டினாலும் பொறுத்துக் கொள்வாய். புகழ்ந்தால் மட்டும் தாங்க மாட்டாய் நீ” என்றார்.
வெட்கம் கொண்ட மாமியின் முகமும், குழி விழுந்த கன்னமும் மாதுளம் பழம் போல் மின்னியது.

மாமி விசிறியால் விசிறிக்கொண்டே பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டிருக்கையில் மாமா அக்னி தேவனை போல திருப்தியாக சாப்பிட்டு முடித்தார்.”
“அம்மாளம்! இன்று சமையல் களை கட்டி விட்டது போ. தீர்க்க சுமங்கலி பவ” என்று மணையை விட்டு எழுந்து கொண்டு கையை அலம்ப வெளியில் போனார்.

ஏணியில் சாய்ந்தபடி கேள்விக்குறியுடன் நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்தாள் மாமி. “தேங்காயைப் பார்த்தால் மாமாவால் நாக்கைக் கட்டுபடுத்திக் கொள்ள முடியாது. துவையலுக்கு கொஞ்சம் கூட மிச்சம் வைக்க மாட்டார். அதனால்தான் அவரை பரண்மேல் உட்கார வைத்து விட்டேன். பிரச்சனைகள் ஆயிரம் என்றால் அதற்கான வழிகள் பல்லாயிரம்!”

மாமியின் வாரத்தை முடிக்கும் முன்னே மாமா உள்ளே வந்தார். வந்ததுமே என்னைப் பார்த்து, “நீ எதுக்குடா பக்கீரைப் போல் வீடு வீடாக சுற்றுகிறாய்? உங்கப்பாவிடம் நான் சொன்னேன் என்று சொல்லி ஒரு பூணல் கயிற்றை போட்டுக்கொள். திவசத்துக்கு இரண்டாவது பிராம்மணன் ஆகவாவது உதவிக்கு வருவாய். நம் அக்ரகாரத்தில் திவசங்களுக்கு குறை இல்லை தடிப்பயலே.”

எச்சிலை இலையை எடுத்து வெளியில் போடப் போனாள் மாமி. கூடவே நானும் வெளியேறி விட்டேன்.

oOo

துளசி மாடத்தின் முன்னால் அமர்ந்து கொண்டு வாசல் பக்கம் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே தென்னங்கீற்றுகளை நடுவில் கிழித்து விளக்குமாற்றுகளாய் கட்டிக் கொண்டிருந்தார்கள் அந்த இருவரும். மாமா கைக் காரியத்தை நிறுத்திவிட்டு தென்னங்கீற்றை எடுத்துக் கொண்டு சுருட்டி எலுமிச்சை முள்ளைக் குத்தி இரண்டு ஊதல்களை தயாரித்தார். இரண்டையும் ஊதி பார்த்துவிட்டு …

“அம்மாளம்! உனக்கு ஒன்று எனக்கு ஒன்று” என்றார். இரண்டு பேரும் பீ… பீ என்று மாறி மாறி ஊதிக் கொண்டிருந்தார்கள்.

கொல்லையில் மரத்தின் மீது இருந்த பறவைகள் கலவரமடைந்து விட்டன, இது எந்த இனத்து பறவைகள் என்று!

ஊதி ஊதி மூச்சு இரைத்தில் சமாளித்துக் கொண்டே, “அம்மாளம்! நம் கல்யாண நாதசுரம் நினைவுக்கு வருகிறது” என்றார்.

“ஏன் நினைவுக்கு வராது? மேளத்திற்கான செலவு முழுவதும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுடையது என்றார்கள். தஞ்சாவூரிலிருந்து நாதசுர கோஷ்டி வரப் போவதாக சொன்னார்கள். கானா பஜானா, பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் … நிலமும் வானமும் அதிர்ந்து போய் விடும் என்று பீலா விட்டார்கள். கடைசியில் எந்த மேளமும் இல்லை. மேள சத்தம் இல்லாமல் கல்யாணமாவது என்று எங்க ஊர் குப்பனை கெஞ்சி கூத்தாடினால் வந்து ஊதி விட்டு போனான். கடைசியில் அவனுக்கு பத்து ரூபாய் சம்பாவனை வாங்கிக் கொடுப்பதற்குள் எங்கள் உயிரே போய் விட்டது.”

“இதோ பார்! பொக்கை வாயை வைத்துக் கொண்டு வாய்க்கு வந்தபடி பேசாதே. உங்கள் வீட்டார் மட்டும் குறைந்து விட்டார்களா? ஐந்து நாட்கள் கல்யாணம் என்று சொல்லி ஏழுவேளை சாப்பாடுடன் முடித்துக் கொண்டார்களா இல்லையா?”

“பீ … பீ..”

“பூ… பூ”

“மாப்பிள்ளை வீட்டார் சத்திரத்தில் இறங்கிய போது இரவு நேரம் என்பதால் ஒரு பொழுது, மறுநாள் சனிக்கிழமை உபவாசம் என்று சொல்லி விட்டார்கள். அதற்காக செலவு குறைந்து விட்டதா என்ன? இரண்டு அடுக்கு புளிப் பொங்கல், இரண்டு வட்டில் இஞ்சி பச்சடி அனுப்பி வைத்தால் பாத்திரங்களை தேய்க்க வேண்டிய வேலை இருக்கவில்லை. பானை பானையாய் தயிர் மாயமாகி விட்டது. வாழைத் தார்களை வண்டியில் அனுப்பி வைத்தால் கிஷ்கிந்தை வாசிகளைப் போல் தோலியைக் கூட மிச்சம் வைக்கவில்லை. “

“பூ …பூ ,,,பீ.. பீ”

“போதுமே. பெரிதாக சொல்ல வந்து விட்டாய். கல்யாணத்தில் சமையல் எல்லாம் மருந்து போல் ஒரே நெடி. தர்ப்பையால் நெய் பரிமாறினார்கள். விளையாடல் நேரத்தில்…”

“உங்க மூஞ்சிக்கு அதுவே அதிகம் என்றார் எங்கள் சித்தப்பா.”

“தூ தூ.. பீ பீ.”

“சமையலில் பஞ்ச ரத்தினங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள் பெரியவர்கள். முழு கத்தரிக்காய் கறி, பூசணிக்காய் சாம்பார், கருணைக் கிழங்கு மசியல்…”

மாமா சொல்லிக் கொண்டிருந்த போதே மாமி, “சேனை வறுவல் வாழைக்காய் பொடிமாஸ்” என்று நிறைவு செய்தாள். “எனக்கும் தெரியும் இந்த பஞ்ச ரத்தினங்களைப் பற்றி இந்த அறுபது வருடங்களில் மணிக் கொரு தடவை கேட்டு கேட்டு என் காது ஓட்டையாகி விட்டது. காதில் போட்டுக்கொள்ள தோடு இல்லையே தவிர ஓட்டை மட்டும் மிஞ்சியிருக்கு.”

“பேச்சை மாற்றாதே. நான் சொல்ல வந்தது நளபாகத்தைப் பற்றி.”

“பூ… பூ.. பீ… பீ.”

“எல்லா வேதங்களைப் போலவே பாக வேதம் கூட அபௌருஷேயம். அபௌருஷேயம் என்றால் என்னவென்று கூட உனக்குத் தெரியாது இல்லையா. அக்ஷரகுக்ஷி நீ! அந்த வார்த்தைக்கு கூட உனக்கு அர்த்தம் தெரியாது. அதாவது சமையலும் பரம்பரையாய் வரும் வித்தை. பாக வேதத்திலும் சிலபல வழிமுறைகளை கடை பிடிக்க வேண்டும்”

என்று மாமா சொன்னதும் மாமி, “பீ ..பீ.. பூ… பூ. இதுதானே அந்த வழி முறைகள்” என்று நக்கலடித்தாள்.

“ஊதலை எடுத்து அந்தப் பக்கம் போடு. சிறிசு பெரிசு என்ற பாகுபாடு இல்லாமல் அந்த சேட்டைகள் என்ன?” என்று மாமியின் கையில் இருந்த ஊதலை பிடுங்கி தூர எரிந்து விட்டார்.

மாமி எழுந்து வந்து மாமாவின் கையில் இருந்த ஊதலை பிடுங்கப் போனாள். இருவருக்கும் நடுவில் கலகலப்பு தொடங்கி விட்டது. சற்று நேரத்தில் குடுமி மாமியின் கையிலும், கொண்டை மாமாவின் பிடியிலும் இருந்தன. இருவரும் இழுபறியில் இருந்த போது, “பீ பீ” என்ற ஊதல் சத்தம் கேட்டு இருவரும் பிடியைத் தளர்ந்ததி பின்னால் திரும்பி, யார் என்பது போல் பார்த்தார்கள்.

“நான்தான். வழியில் ஊதல் கிடைத்தது. அதான்” என்று முணுமுணுத்தேன்.

மாமா மண்ணில் கிடந்த காசி துண்டை எடுத்து உதறிவிட்டு, “ஊதுடா.. ஊது. ஊர் முழுவதும் இல்லாததும் பொல்லாததும் சேர்த்து டமாரம் அடித்துக் கொண்டு இருக்கிறாயே?”

“…….”

“என்னாடா? நானும் அவளும் விளக்கை அணைத்து விட்டு நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து ஒரே இலையில் சாப்பிட்டதை கண்ணால் பார்த்தேன் என்று பொய் பிரச்சாரம் செய்து, என்னை, என் வீட்டுக்காரியை தலைகுனிய வைக்கிறாயா…” ஆவேசம் கூடியதில் மாமாவுக்கு மூச்சு இரைத்தது.
மாமி இடையில் புகுந்து, “கண்ணா! அடிகடி அவர் வாயால் பொய் சொல்ல வைக்காதேடா. அப்புறம் மாமா நரகத்தில் வேண்டாத சித்திரவதை அனுபவிக்க வேண்டியிருக்கும். பாவம் இல்லையா” என்று சமாதானப் படுத்தினாள். மாமா உடனே ஊதலை எடுத்து கன்னாபின்னாவென்று ஊதத் தொடங்கினார்.

oOo

முன்னறையில் ஒரு ஓரமாக ஊஞ்சல் பலகை இருந்தது. மற்றொரு பக்கம் குட்டி யானை நின்று கொண்டிருப்பது போல் இரட்டை கட்டில் இருந்தது. மதிய நேரத்தில் மாமா சற்று நேரம் ஊஞ்சலில் படுத்துக் கொண்டு இளைப்பாறுவார்.

க்ரீச் க்ரீச் என்று ஊஞ்சல் தாலாட்டிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கண்ணசந்து விட்ட மாமா கண்ணை திறந்து பார்த்தார். வாசற்படி அருகில் உட்கார்ந்து, பருத்தியை திரித்துக் கொண்டிருந்த மாமியைப் பார்த்ததும் ஏதோ நினைவுக்கு வந்தாற்போல் சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டார். “நாளை சமையல் விஷயம் என்ன? ஏதாவது முடிவு செய்தாயா?” என்றார், உலக மகா பிரச்சனை அது என்பது போல் பதற்றமாய்.

“நாளைப் பற்றி நாளைக்குப் பார்த்துக் கொள்ளளாம். விடியட்டும் முதலில்” என்றாள் மாமி நிதானமான குரலில்.

மாமாவின் தீவிரமாக யோசிப்பது போல் மாறியது. திடீரென்று மாமி கதை சொல்லத் தொடங்கினாள்.

“தருமராஜர் வாசலில் பிச்சைக்காரன் வந்த போது, “நாளைக்கு வா” என்று சொன்னாராம். அதைக் கேட்டு பீமன் சிரித்தானாம். எதற்காக சிரித்தாய் என்று அண்ணன் கேட்ட போது நீ நாளை வரையில் நிச்சயமாக உயிரோடு இருப்பீங்க இல்லையா என்று சந்தோஷப்படுகிறேன் என்று சொன்னானாம். உடனே தருமர் வெட்கியவறாய் போய் பிச்சை போட்டுவிட்டு அனுப்பி வைத்தாராம்” என்று முடித்தாள்.

ஊஞ்சலின் க்ரீச் சத்தம் பலவீனமாக ஒலித்தது.

“அம்மாளம்! அது ஒரு வேடிக்கை! அதுக்கு ஒரு கணக்கு இருக்கிறது. கடவுள் தையல் இலை மீது நம் பெயரை எழுதி வரிசையாய் எண்களை போட்டுவிட்டு அந்த இலைமீது கையெழுத்து போட்டு விடுவான். ஒருத்தனின் பங்கு இலைகள் தீர்ந்து விட்டால் இனி பாகி என்ன இருக்கும்? வெறும் தரைதான். ஆனால் அந்த எண்ணிக்கை நம் கண்ணுக்கு தெரியாது. நமக்கு அந்த விஷயம் புரியாது. அதனால் அதெல்லாம் பரம் ரகசியம்!” அவர் வேதாந்த சொற்பொழிவை முடிவதற்குள் மாமி எழுந்து உள்ளே போய் விட்டாள்.

“இதெல்லாம் ஆழமான விஷயங்கள். சொன்னால் உனக்கு எளிதில் புரிந்து விடுமா என்ன?”

சமையல் அறையிலிருந்து அடுப்பில் ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் கழித்து மாமி சிறிய வெள்ளிக் கிண்ணத்தில், கால் சலங்கை கணீர் என்று ஒலிக்க அவர் கையில் எதையோ கொண்டு வந்து கொடுத்தாள்.

“அரிசி பொரியா! பேஷ் பேஷ்! நல்ல யோசனை தான் உனக்கு” என்று வியப்படைந்துவிட்டு “மல்லிகைப் பூ போல் மலர்ந்து இருக்கு” என்று வாயில் போட்டுக் கொண்டார். “உப்பு காரம் சரியாய் இருக்கு. அதோடு ஒரு சொட்டு நெய்யும், துளி ஜீரகமும், கறிவேப்பிலையும் சேர்ந்துவிட்டதில் அரிசி பொரி அமிருதமாகி விட்டது.”

“சரிதான்! எப்போ பார்த்தாலும். வயிற்றுப் பாட்டுதானா. வீடே கைலாயம். வயிறுதான் வைகுண்டம் உங்களுக்கு. ஒரு யாத்திரையா க்ஷேத்ராடனமா? மாதவனுக்கு ரயில்வே பாஸ் கூட இருக்கு. காசிக்கு அழைத்துக் கொண்டு போய் கங்கா ஸ்நானம் செய்விப்பதாகச் சொன்னான். தலையை அசைத்தால்தானே. எதற்கும் பிராப்தம் வேண்டும்.” மாமியின் குரல் கம்மி விட்டது.

அவர் கொஞ்சம் கூட அசரவில்லை. ஒவ்வொரு பொரியாக வாயில் போட்டுக் கொண்டே, “அம்மாளம்! ஒரு சூக்ஷமம் சொல்கிறேன். கேட்டுக்கொள். காசியில் தான் கங்கை இருக்கிறது என்று நினைப்பது உன் அஞ்ஞானம். காசியில் பிறந்த மேகம் காளஹஸ்தியின் மீது வந்து மழையாய் பொழியும். சுவர்ணமுகியின் ஊற்று நீர் மேகமாய் மாறி ஸ்ரீசைலத்தில் தூறல் விழும். கிருஷ்ணா நதி வானத்தில் மேகமாய் மாறி காவேரியின் மீது அடைமழையாய் பொழியும். அதானால் கங்கையில் முழுகுவதற்கு காசிக்கு போக வேண்டியது இல்லை தங்கம்! முதல் மழை பொழியும் போது நம் வீட்டு கூடு வாய் மூலையில் தலையை வைத்தால் போதும். ஏழு நதிகளில் மூழ்கிய பலனும், அதன் மூலமாய் ஏழு பிறவிகளுக்கு வேண்டிய புண்ணியமும் கிடைக்கும்.”
“புண்ணியம் கிடைப்பது இருக்கட்டும். மூக்கு முட்ட ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும். உங்கள் வேதாந்தத்தை கேட்டுக் கேட்டு எனக்கு பைத்தியம் பிடித்து விடும் போலிருக்கிறது. ஒருநாள் இல்லாவிட்டால் ஒரு நாள் உங்கள் மண்டையில் ஒன்று போட்டு விட்டு நானும் செத்துத் தொலைகிறேன். சனி விட்டுப் போகும்.” கண்களில் நீர் நிறைந்தது.

மாமா சித்விலாசமாய் சிரித்தார். “அதுதான் ஆனந்ததாண்டவ நிலை! முற்றும் துறந்த நிலையை அடைந்துவிட்டாய். உனக்கு அடுத்த பிறவி கிடையாது. அடுத்த பிறவியில் வேறு பெண்ணை தேடிக்கொள்ள வேண்டியதுதான்.”

சிரிப்பை அடக்க முடியாமல் மாமியும் கண்களை துடைத்துக் கொண்டாள்.

oOo

முன்னோர்கள் கொடுத்த மூன்று ஏக்கர் நிலம் இருந்தது ராமதாசுவுக்கு. பொங்கல் சமயத்தில் முப்பது மூட்டை நெல் குத்தகையாக வீட்டுக்கு வந்து சேரும். வீட்டின் முன்னால் குழியில் நிரப்பி வைத்து விடுவார். திரும்பவும் நிலத்தை உழப் போகும் நேரத்தில் நெல்லை வெளியில் எடுத்து மூன்றில் ஒரு பங்கை தங்களுடைய செலவுக்கு வைத்துக் கொண்டு மீதியை விற்று வெளிச் செலவுகளுக்காக பத்திரப் படுத்துவார்.

மழை பெய்ய ஆரம்பித்ததும் குழி தோண்டிய இடத்தில் புடலை, அவரை போன்ற கொடிகளை நடுவார். சாரம் மிகுந்த மண்ணும், உள்ளே இருந்த வைக்கோல் சாரமும் சேர்ந்து அவரையும், புடளையும் பிள்ளையார் சதுர்த்தி சமயத்தில் பந்தல் வளைந்து விடும் அளவுக்கு காய்த்து தொங்கும்.
மரத்திருவைக்கு முன்னால் எதிரும் புதிருமாக உட்கார்ந்த வண்ணம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லை அரைப்பார்கள்.

“சரியாக பிடித்து சுற்று…இவ்வளவு வேகமாய் சுற்றினால் எப்படி? நம் குடித்தனம் போல் ஏடாகூடமாக இருக்கிறது.”

இப்படி ஒருத்தரை ஒருத்தர் சாடியபடி அரைத்து முடித்து, நொய்யை, உமியை வேறுபடுத்தி முனை முறியாத அரிசியை பானையில் பத்திரப்படுத்துவார்கள்.
“உழைத்து உழைத்து ஓடாகி விட்டேன்” என்று சிலசமயம் மாமி முணுமுணுபாள். மாமா பதிலுக்கு ஏதோ சொல்ல கொஞ்ச நேரம் வார்த்தைகள் மழையாய் பொழியும். எப்போது பார்த்தாலும் இருவரும் ஏதோ ஒரு வேலையில் மூழ்கி இருப்பார்கள்.

ஊறுகாய் சீசன் வந்தால் இனி கேட்க வேடியதில்லை. திருமண காரியங்களைப் போல் ஊறுகாய் போடும் சடங்கை நடத்தி முடிப்பார்கள்.
மழை காலத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டியதில்லை என்றாலும் வேறு வேலையை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

வீட்டின் முன்னால் பெரிய வெப்ப மரம் இருந்தது. வைகாசியில் உதிர்ந்து விழும் வேப்பம் பூவை பொறுக்குவதற்கு அதன் அடியில் பாயை விரித்து, மதிய நேரத்தில் அங்கே பொழுது போக்குவார்கள்.

அன்று அவர்கள் இருவரும் மரத்தின் அடியில் பாயில் உட்கார்ந்து பரமபத சோபானம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தாயக்கட்டையை உருட்டி காய்களை நகர்ந்தி கொண்டிருந்தார்கள். மாமா பாம்பின் வாயில் விழுந்து விட்டார். மாமி ஏணியின் மேல் ஏறிக் கொண்டிருந்தாள்.

“அதோ பார்! பச்சை கிளி ஒன்று மாம்பழத்தைக் கொண்டு வந்து சாப்பிடுகிறது” என்றார் மேலே பார்த்துக் கொண்டே. மாமி வேப்ப மரத்தை கவனமாக பார்த்துவிட்டு கண்களால் தேடினாள்.

“மாம்பழம் சரிதான். ஆனால் எது கிளி இல்லை அணில்” என்றாள்.

“கிளிதான்! சிவப்பு மூக்கு, பச்சையாய் வால் தென்பட வில்லையா?”

“அணில்தான்! ராமர் போட்ட மூன்று கோடுகள் தெளிவாக இருக்கே?”

இவர்களின் சச்சரவில் கிளியோ அணிலோ முடிவு ஆகாமலேயே அது ஓடி விட்டது.

மாமியின் பார்வை திரும்பவும் ஆட்டத்தின் பக்கம் திரும்பியது. தேள் கொட்டினாற்போல் வீலென்று அலறினாள்.

“ஐயோ சாமி! என் காயை நகர்த்தி விட்டீங்க. அழுகுணி ஆட்டம் இது” என்று கத்தினாள்.

“அழுகுணி ஆட்டம் ஆட வேண்டிய அவசியம் இந்த ராமதாசுக்கு இல்லவே இல்லை” என்றார் கம்பீரமாய்.

“பெண்பிள்ளையை அநியாயம் செய்தால் நரகத்திற்கு போவீங்க, அங்கே எண்ணெய் சட்டியில் போட்டு வாட்டுவார்கள். முட்கள் நிறைந்த தூளியில் போட்டு ராட்சசிகளைக் கொண்டு தாலாட்டு பாட வைப்பார்கள்.”

“எனக்கு ஒன்றும் கவலை இல்லை. அந்த தாலாட்டு கேட்டுத்தான் ஐந்து குழந்தைகள் வளர்ந்து ஆளாகி இருக்கிறார்கள்.”

“உங்களுடன் ஆட்டத்திற்கு உட்கார்ந்தது என்னுடைய தவறு.”

ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் சாடிக் கொண்டார்கள். வார்த்தைகள் தீர்ந்து போகவே தாயக் கட்டையை எடுத்துக் கொண்டார்கள். தாயக்கட்டை நெற்றியில் பட்டு, “அப்பா!” என்றேன்.

இரண்டு கண்களும் என்னை தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

“டேய் விபீஷணா! இங்கே வா” கோபம் கலந்த குரலில் அழைத்தார் மாமா.

மாமி, “நெற்றியில் எழுதிய எழுத்து அழித்தாலும் போகாது. புடவைத் தலைப்பால் துடைத்தாலும் போகாது” என்று பாடிக் கொண்டே கலைந்து போன தாயக்கட்டை காய்களை பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

“வா என்றால் வாயேண்டா.” உறுமினார் மாமா.

ஏற்கனவே அவர் கால் முதல் தலை வரையில் சந்தனம் பூசி இருந்தாரோ என்னவோ, கண்கள் மட்டும் தெரிந்தபடி பேய் போல் காட்சி அளித்தார்.
பயந்து நடுங்கிக் கொண்டே அருகில் போனேன். கைகட்டி நின்றேன்.

“ரொம்பவும் பணிவாக இருப்பது போல் நடிக்கத் தேவையில்லை. கேட்டதற்கு பதில் சொல்லு.”
“………..”
“என் வீட்டுக்காரிக்கு நான் தினமும் தலைவாரி பின்னி விடுவதாக ஊரெல்லாம் டாம் டாம் அடிக்கிறாயாமே. ஏதோ கை வலியால் அவள் கஷ்டபடுகிறாளே என்று கொஞ்சம் உதவி செய்தால் அது உனக்கு இளக்காரமாய் இருக்கிறதா?”

நான் ஏதோ சொல்ல வந்த போது தடுப்பது போல் கையை உயர்த்தினார்.

“மருதாணியை அரைத்து மனைவியின் உள்ளங்கையில் பாகற் இலையை வைத்து இட்டு விட்டேன் என்று அக்ரகாரத்தில் வேலையற்றவர்கள் எல்லோரும் பேசிக் கொள்கிறார்களாமே.”

“……..”

“ஆர்வக்கோளாறு தவிர வேறு ஒன்றும் இல்லை. மருதாணி பத்தினால்தானே.” மாமி சோழிகளை டப்பாவில் போட்டுக் கொண்டே சொன்னாள்.
மாமா பெருமூச்சு விட்டார். “வசம்பை முழுசாக அப்படியே விழுங்கி விட்டாயா? பைத்தியமே!” என்று மாமியை கடிந்துகொண்டு திரும்பவும் என்மீது பாய்ந்தார். “என்னுடைய வயதில் கால் பங்கு கூட இல்லை உனக்கு. தொப்புள்கொடி கூட இன்னும் விழவில்லை. அப்படியே நீ சொன்னாலும் இந்த கிழட்டுப் பிணங்களுக்கு என்ன கேடு வந்தது?” மாமா பெரிதாக கத்திக் கொண்டிருந்தார்.

மாமி இடையில் புகுந்து, “அது போகட்டும் கண்ணா! குளிக்கும் போது மாமிக்கு முதுகு தேய்த்து விடுகிறார் என்பதை மட்டும் வெளியில் மூச்சு விடாதே. ஏற்கனவே உனக்கு விவரம் பத்தாது” என்றாள் எச்சரிப்பது போல்.

பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டே காதையும் மூடினாற்போல் காசித் துண்டை தலைப்பாகை போல் மொட்டை தலையில் சுற்றிக் கொண்டார் மாமா.

oOo

ஆவணி மாதம். தரை முழுவதும் ஈரமாக இருந்தது. வெள்ளிக்கிழமை தாம்பூலம் வாங்கிக் கொள்ள மாமி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் மாமா கைத்தடியும், எரியும் லாந்தருடன் வந்து எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டார். இன்னும் சூரியன் அஸ்தமிக்கவில்லை.

“ஒரு நிமிடம் கூட உன்னை விட்டு இருக்க மாட்டார் போலிருக்கு. புதுமாப்பிளை!” என்றும், “உன்னை காக்கா தூக்கிக் கொண்டு போய் விடுமோ என்று பயம்” என்றும் தாம்பூலம் வாங்க வந்த மற்ற பெண்டிர் கிண்டல் செய்து மாமியை சீண்டினார்கள்.

மாமா விநாடிகளை எண்ணியபடி அடிக்கடி உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

வந்த பெண்டிர் கூட்டமெல்லாம் போன பிறகு அம்மா ஒரு தட்டில் தாம்பூலமும், ஊறவைத்த கொத்துகடலையும் கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்து இருந்த மாமாவிடம் கொடுத்தாள். அவர் முகம் மலர்ந்துவிட்டது. அம்மா மாமாவின் காலைகளில் விழுந்து வணங்கினாள். தலையைத் தடவிக் கொடுத்து, “தீர்க்க சுமங்கலி பவ” என்று வாய் நிறைய வாழ்த்தினார்.

“இருட்டி விட்டால் அவளுக்கு கண் தெரியாது. ஏற்கனவே சேரும் சகதியுமாக இருக்கு. வழுக்கி விழுந்தாளானால் என் பாடு திண்டாட்டமாகி விடும்.” மாம் விளக்கம் சொன்னார்.

“ஆதிதம்பதிகள் போல் இருவரும் எங்கள் வீட்டுக்கு வந்தீங்க. உண்மையிலேயே என் நோம்பு பலித்து விட்டது. அந்த தட்டை இப்படி கொடுங்கள். பையனுடன் அனுப்பி வைக்கிறேன்” என்றாள் அம்மா பணிவாக.

“எதுக்கு வீண் சிரமம்” என்று மாமா மேல்துண்டை எடுத்து அதில் இருந்த எல்லாவற்றையும் மூடையாய் கட்டிக் கொண்டு தட்டை அம்மாவிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.

மாமி நெற்றி நிறைய குங்குமத்துடன், கழுத்தில் பூசிய சந்தனத்துடன், மஞ்சள் தடவிய கால்களுடன் தலைப்பில் தாம்பூலத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்தாள். மாமா அவளை தலை முதல் கால்வரை திருப்தியுடன் பார்த்தார்.

அப்பொழுதுதான் பசுக்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. மாடுகளுடன் வந்து கொண்டிருந்த அப்பா மாமாவைப் பார்த்து விட்டு, “மாமாவின் மாட்டையும் கன்றையும் ஒருதடவை காட்டி விடு. திரும்பவும் அவர் கிடைக்க மாட்டார். எந்த மூடில் இருந்தாரோ இன்று படி இறங்கி வந்திருக்கிறார்” என்று எனக்கு ஆணையிட்டார்.

நான் போய் அவருடைய மாட்டையும் கன்றையும் அழைத்து வந்து அவர் முன்னால் நிறுத்தினேன்.

மாமா திண்ணையை விட்டிறங்கி, மாட்டின் கழுத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டே, “உங்கள் மேற்பார்வையில் இருக்கும் போது அவற்றுக்கென்ன குறைவு? காமதேனுவாக இருப்பாள்” என்றார்.

மேல்துண்டு மூட்டையைப் பிரித்து அதிலிருந்து ஒரு பிடி கடலையை எடுத்து மாட்டின் வாயருகில் கொண்டு போனார். மாடு அவசரமாக சாப்பிட்டுவிட்டு அவருடைய உள்ளங்கையை நக்கிக் கொடுத்தது. அவர் சந்தோஷமாக அந்த தொடுகையை அனுபவித்தார்.

கன்றுக்குட்டி ஒரு இடத்தில் நிற்காமல் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

மாமா மாட்டின் உடலை தடவிக் கொண்டே, “திரும்பவும் எப்போ எங்களுக்கு திரட்டிப் பால் கொடுக்க போகிறாய்?” என்றார் செல்லமாக.
“இன்னும் மூன்று மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும் அத்தான்” என்றார் அப்பா.

“சத்யம்! ருணானுபந்த ரூபேணா பசு பத்தினி சுத ஆலயம் என்றார்களே ஒழிய செடியைப் பற்றி சொல்ல மறந்து விட்டாரகள். அசல் ருணானுபந்தம் என்றால் செடி கொடி தான்” என்றார் மாமா கம்பீரமாய்.

“உங்களுக்கு எப்போதும் அந்த நினைப்புதான்.” மாமி பேச்சை மாற்றினாள். அம்மா அப்பா ஜாடை காட்டியதும் மாமா மாமி கால்களில் விழுந்து வணங்கினேன்.

“என்னைப் போல் பெரிய மனிதனாக வேண்டுமடா பயலே” என்றார் மாமா தோளில் தட்டிக் கொடுத்து.

“வேறு ஏதாவது நல்ல வார்த்தையாய் சொல்லக் கூடாதா?” என்றாள் மாமி.

மாமா கலகலவென்று நகைத்துவிட்டு, “உங்க மாமியைப் போல் நல்ல பெண் உனக்கு ஜோடியாக வர வேண்டும்” என்றார்.

“அப்படிச் சொன்னீங்க. நல்லாயிருக்கு” என்றால் மாமி பொக்கை வாய் சிரிப்புடன்.

இரண்டு பேரும் நகர்ந்தார்கள். அம்மா, அப்பா, நான், மாடு, கன்று வாசல் வரை வந்து விடை கொடுத்தோம்.

இரண்டு பேரும் தெருவுக்கு வந்தார்கள்.

மாமாவின் தோளில் சிறிய மூட்டை, கையில் லாந்தர், கைத்தடி.

“அந்த மூட்டையை இப்படி கொடுங்கள். நான் கொண்டு வருகிறேன்” என்றாள் மாமி கையை நீட்டிக் கொண்டே.

“தரமாட்டேன். இது எனக்காக தனியாக கொடுத்தார்கள்.”

“ஆஹா கொடுத்தார்கள். மூட்டை நழுவினால் மண்ணில் விழுந்து விடுமே என்றுதான்.”

“ஒன்றும் விழாது. இப்பொழுதே சொல்லிவிட்டேன். வீட்டுக்கு போன பிறகு திரும்பவும் ஆரம்பிக்காதே. இந்த கொண்டைகடலை எனக்கு மட்டும்தான். இப்பொழுதே சொல்லி விட்டேன்.” சாலையின் நடுவில் குறுக்கே திரும்பி நின்று சண்டையில் இறங்கினார் மாமா.

“இரவு நேரம். அத்தனை கொண்டை கடலை சாப்பிட்டால்…”

“அது என் சுயார்ஜிதம். என் பங்குக்கு கிடைத்தது. உன் தலையீட்டை சகித்துக் கொள்ள மாட்டேன்.” மாமா தெளிவாகச் சொல்லிவிட்டார்.
“சரி வாங்க. இவ்வளவு பிடிவாதக்காரனை என்னால் தாங்க முடியாது சாமி.”

“பரணில் ஏற்றி ஏணியை எடுத்து விட்டாயே? இனி உன்னை இந்த ஜென்மத்தில் நம்புவேனா?”

“ஆவணி மாதம் வெள்ளிகிழமை அதுவுமா நடுத்தெருவில் பஞ்சாயத்து வைக்கிறீங்களா? இன்றைக்கு வந்த பெண்டுகள் எல்லோரும் என்னை எப்படியெல்லாம் கேலி செய்தார்கள் தெரியா? இனியும் எனக்கு பொறுமை இல்லை. இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒற்றைக் காலில் நின்று பிடிவாதம் பிடித்தால் சும்மா இருக்க மாட்டேன். ஐந்து மகன்களின் தாய் நான். கால்கடிதாசு எழுதி போட்டால் போதும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்து வருவார்கள். பல்லாக்கில் ஏற்றி என்னை ராஜபோகத்துடன் அழைத்துப் போவார்கள்.”

“பெரிதாக சொல்ல வந்துவிட்டாய். அந்த நேரம் வந்தால் என்னையும் கொண்டு போவார்கள் பல்லாக்கில். கொண்டைக்கடலை விஷயத்தில் சமாதானம் ஆகும் வாய்ப்பே இல்லை” என்றார் தீர்மானமாக.

தாம்பூலம் வாங்க போன ஜோடி திரும்பவும் கூட்டுக்கு வந்து சேர்ந்தது.

கட்டில் மீது அமர்ந்து கொண்டு தாளித்துக் கொட்டிய கடலையை சாப்பிட்டு விட்டு செப்பு சொம்பால் துளசி தீர்த்தம் பருகிவிட்டு, “அம்மாளம்!” நன்றாக இருந்தது” என்றார் ஏப்பம் விட்டுக் கொண்டே.

மாமி ஊம் கொட்டினாள், கொட்டாவி விட்டுக்கொண்டே.

ஜன்னல் வழியாய் கட்டில் மீது விழுந்துக் கொண்டிருந்த நிலா வெளிச்சத்தை கையால் தடவிக் கொண்டே, “அம்மாளம்! பார்த்தாயா, நிலா வெளிச்சம் தேங்காயைத் துருவி பரத்தி வைத்தாற்போல் இருக்கிறது.”

“அதைக் கொண்டு இப்போது தேங்காய் பர்பி கிளரச் சொல்றீங்களா என்ன? நாழியாகி விட்டது. படுத்துக் கொள்ளுங்கள்.”

“தூக்கம் வரவில்லையடி. இன்றைக்கு மனம் ஏனோ வினோதமான நிலையில் இருக்கிறது.”

“கண்களை மூடிக் கொள்ளுங்கள். தூக்கம் தானாகவே வரும்.”

“இமைகளை மூட முடியவில்லையே?”

அவருடைய போக்கை கவனித்து விட்டு அவள் எழுந்து அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.

“ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம்… நிழலும் துணையும் எனக்கு கிடைத்த அளவுக்கு உயர்வாக அந்தக் கடவுளுக்குக் கூட கிடைத்திருக்காது.”

“அதெல்லாம் இப்போது எதற்கு?”

“ஏனோ மனம் விட்டு சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. உனக்கு அந்த மெலட்டூர் வரன் முடிவாகி இருந்தால் இந்த வைபவம் எனக்கு கிட்டி இருக்குமா? உன் வாழ்க்கை இப்படி இருந்திருக்குமா? ஏழைவீட்டு அரசியாய்… பாவம்…”

“சும்மா இருங்கள். மேலட்டூரும் இல்லை. வரனும் இல்லை.”

அதைக் கேட்டுவிட்டு சந்தேகத்துடன் அவள் கண்களுக்குள் ஊடுருவது போல் பார்த்தார்.

“உண்மைதான். நம் கிருஷ்ணன் மீது சத்தியம்! சும்மா உங்களை அழ வைப்பதற்காக..”

அவள் பேச்சுக்கு பனியில் நனைந்த மலரைப் போல் அவர் கண்கள் ஒளி வீசின.

“பிடிவாதக்கார ஆசாமியை வழிக்குக் கொண்டு வருவதற்காகத்தான் அந்த மெலட்டூர் பேச்சு! வந்தது, முடிந்தது எல்லாம் ஒன்றுதான். எனக்கு நகை நட்டு மீது ஆசை என்றுமே இருந்தது இல்லை. இல்லையே என்ற குறையும் இல்லை. நாராயணன் மீது சத்தியமாக சொல்கிறேன்.” கையின் மீது கையைப் பதித்துச் சொன்னாள்.

“ராஜலக்ஷ்மி! எவ்வளவு நல்ல வாரத்தையைச் சொன்னாய்” என்று நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டார்.

அதுதான் இறுதி வார்த்தை. அதுதான் இறுதி மூச்சு.

வெள்ளைத் துணியைப் போல் நிலா வெளிச்சம் அவர் உடலை முழுவதுமாக போர்த்தி விட்டது.

செய்தி தெரிந்ததும் ஐந்து மகன்களும் பறந்து வந்தார்கள்.

பல்லாக்கில் படுக்க வைத்து தந்தையைக் கொண்டு போனார்கள்.

பேரன் பேத்தி, உற்றார் உறவினர் எல்லோரும் வந்தார்கள்.

“இத்தனை பேர் இருந்தாலும் தாம் இருவர் மட்டும்தான் உலகம் என்பது போல் வாழ்ந்தார்கள்.” எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள்.

“இனி எனக்கு பொழுது போகாது. நான் கிளி என்று சொன்னால் அது கிளி. அணில் என்று சொன்னால் அது அணில். மறுப்பவர்கள் யார்? கடியாரத்தில் பெரிய முள் உதிர்ந்து விட்டது. இனி எனக்கு வினாடிகள் நகராது.” மாமி ஹோவென்று அழுதாள்.

கொல்லையில் தோட்டம் தலையைச் சாய்த்துவிட்டது, தன்னை போஷிக்கும் மகாராஜா இனி இல்லை என்று.

நான்கு நாட்கள் வரையில் அந்த வீட்டு பக்கம் என்னால் போக முடியவில்லை. புதைத்து வைத்த நிதியைப் எத்தனையோ நினைவுகள்!
பழக்கப்பட்ட கால்கள் அந்தப் பக்கமே இழுத்துச் சென்று விட்டன. நான் போன போது மாமி தனியாய் பூந்திகொட்டை மரத்தின் அடியில் உட்கார்ந்து இருந்தாள்.

என்னைப் பார்த்ததுமே ஹோவென்று கதறி தீர்த்து விட்டாள். என்னை அருகில் உட்கார வைத்துக் கொண்டாள். எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. சற்று நேரம் கழித்து மாமி தானாகவே தேறிக் கொண்டாள்.

“கண்ணா! உன்னிடம் ஒரு உண்மையைச் சொல்கிறேன். நான்தான் முன்னாடி போய்ச் சேர்ந்து விடுவேனோ என்று ஒவ்வொரு நிமிஷமும் பயந்து கொண்டிருந்தேன். இப்பொழுது என் மனதில் இருந்த பெரிய பாரம் நீங்கி விட்டது.”

எனக்கு மாமின் வார்த்தைகள் வித்தியாசமாக தோன்றின.

“நான் முன்னாடி போனால் மஞ்சள் குங்குமத்தோடு போயிருப்பேனாய் இருக்கும். ஆனால் அந்த ஜீவன் எவ்வளவு அவஸ்தை பட்டிருக்குமோ எனக்குத் தெரியும். அந்தக் கடவுளுக்குத் தெரியும். டேய் கண்ணா! பச்சை மரத்தின் அடியில் உட்கார்ந்துகொண்டு சொல்கிறேன். கடவுளே! முதலில் இந்த மனிதனை அழைத்துக் கொண்டு போ. பின்னால் என் காரியத்தைப் பாரு என்று தினமும் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன். கணவனின் மரணத்தை வேண்டும் பைத்தியக்காரிகள் இருப்பார்களா என்று நினைக்காதே. இருப்பார்கள். எனக்கு உங்க மாமா என்றால் உயிருக்குச் சமம். அவருடைய சின்ன விருப்பம் நிறைவேறாமல் போனாலும் என் உயிர் திண்டாடி விடும்.”

மாமி சொல்லிக் கொண்டிருந்த போது ஊம் என்று கூடச் சொல்லாமல் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தேன்.

“இருட்டு என்றால் பயம். இடி இடித்தால் பயம். மின்னல் என்றால் பயம். நான் உறுதுணையாக இல்லாவிட்டால் யார் அவருக்கு தைரியம் சொல்லுவார்கள்? நள்ளிரவில் பசிக்கிறது என்று எழுந்து உட்கார்ந்து கொண்டால் கொழுக்கட்டை, குழிப் பணியாரம் யார் செய்து தருவார்கள்? சும்மாவே தலை தூக்கும் விருப்பங்களை யார் தீர்ப்பார்கள்? மகனா? மருமகளா? பேத்திகளா? கடவுளா? நான் சொன்னது உண்மைதானே?”

“…….”

“என்னடா? கருங்குரங்கு போல் பேசாமல் இருக்கிறாய்?” என்று எரிச்சல் அடைந்தாள்.

“டேய் கண்ணா! சை என்றால் சை, நீ என்ன என்றால் நீ என்ன என்று பேசிக் கொள்வோமே தவிர, ஒளிமறைவுகள், ஜிலுபுலு பேச்சுகள் நாங்கள் அறியோம். நாங்கள் இருவரும் கணவன் மாணவி என்ற விஷயத்தை என்றோ, திருமணத்தின் போது பல்லாக்கில் ஊர்வலம் போகும் போதே மறந்து விட்டோம்.”

மாமியின் வார்த்தைகள் புரியாமல் நிமிர்ந்து பார்த்தேன். மாமியின் இதழ்களில் மெல்லிய முறுவல் மலர்ந்தது.

“என்ன நடந்தது என்றால்… முஹூர்த்தம் முடிந்ததும் எங்களை பல்லாக்கில் உட்கார வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்துச் சென்ற போது, வழியில் தன் தோளில் இருந்த பட்டு அங்கவஸ்த்திரத்தில் முடித்து வைத்திருந்த முடிச்சை அவிழ்த்து ஒரு பிடி வேர்க்கடலையை என் உள்ளங்கையில் வைத்தார். என் உடல் சிலிர்ந்து விட்டது. இதயத்தையே கையில் வைத்தது போல் இருந்தது. “சாப்பிடு. நன்றாக இருக்கும். பொழுது போகுமே என்று கொண்டு வந்தேன்’ என்றார். இன்னும் மீசை கூட முளைக்கவில்லை. இந்த பையனுக்கு எவ்வளவு துணிச்சல் என்று நினைத்துக் கொண்டேன்.

எங்களுடைய சகவாசத்திற்கு அந்த இடத்தில்தான் பிளையார் சுழி விழுந்தது. இவன் எவனோ நல்லவன்தான். பகிர்ந்து கொண்டு சாப்பிடும் குணம் என்று மனதில் பட்டது. எழுபது வருடங்கள் கழிந்து விட்டாலும் பல்லாக்கில் திருட்டுத்தனமாக சாப்பிட்ட வேர்கடலையின் ருசி இன்னுமும் என் நாக்கில் இருக்கிறது.” மாமியின் முறுவல் ஈரமாக இருந்தது.

ஒரு முறை ஆழமாக மூச்சு எடுத்து, சமாளித்துக் கொண்டாள் மாமி. “எங்கெங்கே இருந்த குழந்தைகளை பசுமையான மரங்களில் பார்த்துக் கொள்ள கற்றுக் கொடுத்தார். இத்தனை வருட சகவாசத்தில் வேண்டிய பேச்சுகள் பேசினார். வெற்றுப் பேச்சு இல்லை. வாழ்க்கையின் பாரத்தை குறைக்கும் பேச்சுகள்! பூக்கும் காய்க்கும் ஒவ்வொரு மரத்திலும் என்னால் உங்க மாமாவைப் பார்க்க முடியும். அரக்கும் தங்கமும் போல் ஒருவரோடு ஒருவர் இணைந்து விட்டோம். இப்போது தங்கம் மறைந்து விட்டது. வெறும் அரக்கு மட்டும் எஞ்சி இருக்கிறது. தீபம் இல்லாமல் வெறும் திரி மட்டும் எத்தனை நாள் இருக்கப் போகிறது. என்னுடைய இலைகள் தீர்ந்து போனதும் நானும்…” விசும்பல் சத்தம் கேட்டது.

“இத்தனை சொல்லிவிட்டு திரும்பவும் எதற்காக அழறீங்க?” என்று கோபித்துக் கொண்டேன்.

மாமி திடுக்கிட்டு என்னைப் பார்த்தாள். “வாழ்க்கை என்றால் அதுதாண்டா பைத்தியக்காரப் பயலே” என்று பொக்கை வாயுடன் சிரித்தாள்.

– தெலுங்கில்: ஸ்ரீரமணா

1952 ஆம் ஆண்டு பிறந்த எழுத்தாளர் ஶ்ரீரமணா தெலுங்கு நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பரவலாக எழுதி வந்தவர். 15க்கும் அதிகமாகத் தொகுப்புகள் வெளியான நிலையில் மேலும் 10 தொகுப்புகள் வெளிவரக் காத்திருக்கின்றன. மிதுனம் எனும் இந்த சிறுகதை 25க்கும் அதிகமான இந்திய மொழிகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது ‘ஒரு சிறு புன்சிரி’ எனும் பெயரில் மலையாளத்தில் படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மொழியில் வெளியான இக்கதைக்குப் பல பரிசுகள் கிடைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *