மாற்ற முடியாதவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 21, 2015
பார்வையிட்டோர்: 10,167 
 

“நீங்க ஏன் கல்யாணமே பண்ணிக்கலே?” கேள்வி அந்தரங்கமானதாக இருந்தாலும், கேட்டவன் ஓரளவு தனக்குப் பரிச்சயமானவனாக இருந்ததால், பாமா அதை தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை.

அதோடு, அவள் இன்னும் சின்னப்பெண் அல்லவே, கல்யாணப் பேச்சை எடுத்ததும் நாணிக் கோண! தலை நரையை மறைக்க சாயம் பூச ஆரம்பித்து நாலைந்து வருடங்கள் இருக்காது?

“என்னமோ, எங்கப்பாவுக்குத் தன் பெண்ணை கல்யாணம் செய்து குடுக்கணும்னு தோணல!” என்றாள், பட்டும் படாததுமாக.

பத்மநாதனுக்குப் பரிதாபமாக இருந்தது. ஏதேனும் வரதட்சணைப் பிரச்னையாக இருக்கலாம். பெண்ணாகப் பிறந்தவர்கள்தாம் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கிறது!

இவளுக்கென்ன, முப்பத்தைந்து வயது இருக்குமா? கூடவே இருக்கும். காலாகாலத்தில் இவள் கழுத்தில் தாலி ஏறியிருந்தால், கல்யாண வயதில் மகள் இருப்பாள் இப்போது. இவள் தலையெழுத்து, படித்துவிட்டு, தன் பாட்டை தானே பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது, பாவம்!

அவனுடைய நினைவோட்டத்தில், அவள் கேட்டது காதில் விழவில்லை.

“என்ன கேட்டீங்க?”

சிரித்தாள் பாமா. “நீங்க கேட்டதையேதான் நானும் கேட்டேன்”.

பத்மநாதனுக்கு யோசனை வந்தது. மறக்க நினைத்த தன்னுடைய கடந்த காலத்தைப்பற்றி யாரிடமாவது கூறினால் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றியது. “கல்யாணம் பண்ணிக்கிற வயசில அக்கறை காட்டவோ, கண்டிக்கவோ ஆளில்லை. அப்போ வெளிநாடுகளுக்கு அடிக்கடி போற வேலை! அதனால எப்படி எப்படியோ இருந்துட்டேன். அப்படியே வயசாகிடுச்சு!” என்றான் அலுத்தவனாக.

“ஒங்களுக்கு என்ன, ஒரு நாப்பது வயசு இருக்குமா?” முகம் மாறாது கேட்டாள் பாமா.

இவ்வளவு சொல்லியும் இவள் தன்னை மட்டமாக எடை போடவில்லை என்ற நினைப்பே அவனுக்கு புதுத்தெம்பை அளித்தது. “கூடவே ரெண்டைச் சேத்துக்குங்க!”

“கல்யாணம் செய்துக்கணும்கிற நினைப்பே உங்களுக்கு வரவில்லையா?”

சங்கடத்துடன் சுற்றுமுற்றும் பார்வையை ஓடவிட்டான் பத்மநாதன்.

மலேசியாவின் மேற்குப் பகுதியில் இருந்த பங்கோர் தீவில் ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலில், கடற்கரையை ஒட்டி இருந்த நீச்சல் குளத்தருகே அமர்ந்திருந்தார்கள். கோலாலம்பூர், பெட்டாலிங் ஜயாவிலிருந்த அந்த அலுவலகத்திலிருந்து அப்பயிற்சிக்கு இவர்கள் இருவர் மட்டுமே அனுப்பப்பட்டு இருந்தனர்.

மாலை நேரம். இருவருமே இந்தியர்கள் என்பதால் யாரும் அவர்களை வித்தியாசமாகப் பார்க்கவில்லை.

இருந்தாலும், நாள் பூராவும் பள்ளிப் பிள்ளைகள்போல பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்து, பயிற்சியாளர் கற்பித்த விஷயங்களை கிரகிக்க முயன்றதில் உடம்பும் தலையும் ஒருங்கே வலித்தன.

கண்ணுக்கு எட்டியவரை தெரிந்த கடலையே வெறித்தபடி, “வராம இருக்குமா?” என்றான் முணுமுணுப்பாக. மேற்கொண்டு அவள் எதுவும் கேட்குமுன், “இப்ப அதெல்லாம் வேணாங்க!” என்றான்.

“ஸாரி,” என்றபடி எழுந்தாள் பாமா. “எனக்கு கடல் தண்ணியில காலை நனைச்சுக்க ரொம்ப ஆசை!”

பத்மநாதன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். ஆனால், அந்த நிம்மதி ஒரு நாள்தான் நிலைத்தது.

மறுநாள் அதே நேரத்தில், பாமா அவனைப் பிடித்துக் கொண்டாள். “நேத்து பாதியில விட்டுட்டீங்களே! இப்ப சொல்லுங்க. நீங்க யாரையாவது விரும்பி, அப்புறம் அது நடக்காம போயிடுச்சா?”

இதென்னடா, உடும்பு மாதிரி பிடித்துக் கொள்கிறாளே! தெரிந்தவள் என்று இவளுடன் வந்து உட்கார்ந்தது தப்பாகப் போயிற்றே என்ற கலவரம் ஏற்பட்டது பத்மநாதனுக்கு.

இனி இவளிடமிருந்து தப்பிக்க முடியாது என்று, பெருமூச்சுடன், “என் மனசுக்குப் பிடிச்ச ஒருத்தி. வெளிநாட்டுக்காரி. இங்கதான் பாத்துப் பழகினோம். ரெண்டு வருஷம் ஒண்ணா இருந்தோம். அவளோட அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு, திரும்பி வந்துடறேன்னு போனவதான்!”

“ஐயோ!”

“நாலு மாசம் கழிச்சு, ஒரு நீளமான கடிதமும், கல்யாண இன்விடேஷனும் அனுப்பியிருந்தா. அவளுடைய கலாசாரத்துக்கு ஏத்தவனா..,” தன்னையும் அறியாது, எல்லா விவரங்களையும் படபடவென்று கொட்டினான்.

“ஒங்களுக்கு ரொம்ப ஆத்திரமா இருந்திருக்குமே!”

“ஆத்திரமில்ல. வருத்தம்தான். போகப் போக, நல்ல வேளை, கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி எதுவும் நடக்காம, முதலிலேயே விவகாரம் முடிஞ்சு போச்சேன்னு நிம்மதியாக்கூட இருந்திச்சு!”

நீச்சல் குளத்திலிருந்த சிறுவர்கள் செய்த ஆரவாரம் அவர்களைப் பாதிக்கவில்லை. இருவரும் ஒரு தனி உலகத்தில் இருந்தார்கள்.

“அப்புறம்?”

“வேலை.., வேலை…! அவ்வளவுதான். வேற எந்தப் பெண்கிட்டேயும் மனசு ஒட்டலே. உலகமெல்லாம் சுத்தினேன். கிடைக்கிற வேலையைச் செஞ்சு பிழைச்சேன்!”

ஒரு பெண்ணால் ஏற்பட்ட ஏமாற்றத்தைத் தணிக்க பல ரகமான பெண்களை நாடினாரோ என்று ஒரு எண்ணம் எழுந்தது பாமாவுக்குள். கேட்பது மரியாதையாக இருக்காதே என்று அடக்கிக் கொண்டாள். “இனிமே கல்யாணம் செஞ்சுக்கணும்கிற யோசனை இருக்கா?” மெல்லிய குரலில் கேட்டாள், முதல் நாளும் அப்படிக் கேட்டதை மறந்தவளாக.

“எப்பவாவது நினைச்சுக்குவேன் — வேலை முடிஞ்சு திரும்பறப்போ, பேச்சுத் துணைக்கு வீட்டில யாராவது இருந்தா நல்லா இருக்குமேன்னு. ஆனா, அது சுயநலம். இல்லீங்களா?”

“எதிலதான் சுயநலம் இல்லே?”

“எனக்குள்ளே ஒரு தீர்மானம். என்னன்னு கேக்கறீங்களா? கட்டினா, என்னை மாதிரி கெட்டுப்போன.. அதாவது, திசை மாறிப்போன ஒரு பொண்ணைத்தான் கட்டணும்”.

“பரவாயில்லையே!” அவள் குரலில் இருந்தது பாராட்டா, ஏளனமா என்று பத்மநாதனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“பின்னே என்னங்க! எல்லா ஆம்பளையும் அவன் எப்படி வேணுமானாலும் இருக்கலாம், ஆனா, வரப்போற மனைவி மட்டும் கற்பின் சிகரமா இருக்கணும்னு நினைக்கிறான்!” அவன் குரலில் கோபம் கொப்புளித்தது. “ஆணாப் பிறந்தவனுக்கு மட்டும் ஒழுக்கம் இருக்க வேண்டாமா? நமக்கு வர்றவர் நல்லவரா, மத்த பொண்ணுங்களை நினைச்சும் பார்க்காதவரா இருக்கணும்னு பெண்கள் ஆசைப்பட மாட்டாங்களா?”

தத்தம் அறைக்குப் போன பிறகும், இருவரும் அடுத்தவரைப்பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

`பல நாடுகளைச்சுற்றி வந்தவர். அதுதான் மனமும் இப்படி பரந்து கிடக்கிறது. அவரைப்போலவே கெட்டுப்போன பெண்ணாக இருந்து, அவளைப் பிடித்துப் போனால் மணக்கத் தயாராமே!’ பாமாவின் மதிப்பில் அவன் உயர்ந்து போனான்.

பயிற்சி முடிந்து திரும்பியபோது, பழையபடி `நான் யாரோ, அவள் யாரோ!’ என்ற அந்நிய உணர்வும் வந்துவிட்டது போலிருந்தது.

பத்மநாதனுக்கு ஏக்கமாக இருந்தது. அன்றொரு நாள் மாலை, கடற்காற்று வீச, நீச்சல் குளத்தருகே அமர்ந்து பாமாவுடன் மனம் திறந்து பேசியது ஏதோவொரு இன்பக் கனவாகத் தோன்றியது.

தான் என்ன சொல்லியும், அவள் முகம் மாறவில்லையே! என்ன பெண்!

அவளுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்போல இருந்தது.

அந்த ஓர் அனுபவம் ஏன் அப்படியே குறையாக முடியவேண்டும்?

கெமிலியான் (ஓணான்) என்ற அந்த பிரபல சீன, சைவ உணவு விடுதி, கோலாலும்பூரிலிருந்த யாவ் ஹான் என்ற பேரங்காடியின் பக்கத்தில் இருந்தது. மேசையில் விரிப்பு, உள்ளே பசுமையான சிறு செடிகள் என்று அந்த இடம் ரம்மியமாக இருந்தது. போக்குவரத்து நெரிசலாக இருந்ததால், தெரிந்தவர்கள் கண்ணில் பட்டுவிடுவோமோ என்ற பயமும் இல்லை.

அங்கு எதற்குத் தன்னை அழைக்கிறான் என்று புரியாமலே வந்திருந்தாள் பாமா.

இலவசமாக அளிக்கப்பட்டிருந்த நிலக்கடலையைக் கொரித்துக் கொண்டிருந்தபோது, “உங்களால எனக்கு ஒரே குழப்பம்,” என்று பத்மநாதன் ஆரம்பிக்கவும், அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

“ஏதோ முட்டாள்தனமான கொள்கையாலே என் வாழ்க்கையை நானே வீண்டிச்சுக்கிறதா நினைக்கிறேன். இப்ப ஒங்களையே எடுத்துக்குங்க. நாம்ப ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கக் கூடாதா? வயசுப் பொருத்தமும் இருக்கு. ஏதோ காரணத்தால நீங்களும் இன்னும் தனியாவே இருக்கீங்க. அதுக்காக, நீங்க கெட்டுத்தான் போயிருக்கணும்னு நான் எதிர்பார்க்க முடியுமா? அது அபத்தமில்ல!”

அவனுடைய வெளிப்படையான பேச்சு அவள் கண்களில் நீரை வரவழைத்தது. வேகமாக எழுந்தாள். அவன் வரவழைத்திருந்த விதவிதமான ஹொக்கெயின் மீ (நூடுல்ஸ்), மென்மையான சோயாபீன் தவு, சைனீஸ் டீ எல்லாம் அப்படியே இருந்தன.

“என்னங்க! ஏதாவது தப்பா பேசிட்டேனா?”

“ஊகும்!” கண்ணீருக்கிடையே புன்னகைக்க முயன்றாள். முடியவில்லை.

“பின்னே என்ன? உக்காருங்க!” உரிமையுடன் அதட்டினான். “என்னைக் கல்யாணம் செஞ்சுக்க ஒங்களுக்குச் சம்மதமான்னு கேக்கத்தான் இன்னிக்கு… இங்க..!”

தலையைக் குனிந்தபடி, வேகமாகச் சாப்பிட ஆரம்பித்தாள் பாமா. வேண்டாத நினைவுகளை உள்ளுக்குள்ளேயே அமுக்க முயற்சித்தாள். ஆனால், அதில் தோல்விதான்.

தனது பதினைந்தாவது வயதில், கர்ப்பிணியான அக்காவுக்கு உதவியாக இருக்க அவள் வீட்டுக்குப் போனது, அங்கே அக்காள் புருஷன் அவளைப் பலமுறை பலாத்காரம் செய்தது, அதைப் பார்த்துப் பொங்கியெழுந்த அக்காளை அக்கயவன் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டுச் சிறை சென்றது எல்லாம் தொடராய் எழுந்தன, அவள் நினைவில்.

தன்வினை தன்னைச் சுடும் என்பதற்கு ஏற்ப, சிறையில் பலரால் பலாத்காரம் செய்யப்பட்டபோது, அக்கொடுமையைத் தாங்காது, அங்கேயே அவன் தூக்கு மாட்டிக்கொண்டு செத்திருந்தாலும், அவன் செய்த தீவினையை மறக்க முடியவில்லை அவளால்.

இதையெல்லாம் இவரிடம் எப்படிச் சொல்வது?

லட்சியம் என்ற திரை கண்ணை மறைக்க, கமலநாதன் ஏதோ பிதற்றி இருக்கலாம். கல்யாணம் ஆனபின், உண்மையை அறிந்து, `இவளுக்கு நான் இரண்டாந்தாரம்தானே!’ என்ற தாழ்வு மனப்பான்மையும், ஆத்திரமும் தோன்றாது என்பது என்ன நிச்சயம்?

“சரின்னு சொல்லுங்க, பாமா!” பத்மநாதனின் கெஞ்சல் அவளை நினைவுலகத்துக்கு மீட்டு வந்தது. “உங்களுக்கு நான் ஏத்தவனே இல்லதான். ஆனா, நீங்க மட்டும் சம்மதிச்சா.. உங்களை ராணி மாதிரி வெச்சுப்பேன். வர்ற தீபாவளியை ரெண்டு பேரும் தலைதீபாவளியா கொண்டாடலாம்!” குழந்தையை வசியம் செய்வதுபோல அந்தக் கடைசி வாக்கியத்தை குறும்புடன் சிரித்தபடி அவன் சொன்னது பாமாவின் உள்ளத்தில் எதையோ அசைத்தது.

ஒரு தலைவலி, காய்ச்சல் என்று வந்துவிட்டால், அருகில் அமர்ந்து ஆதரவாகப் பேசவோ, அனுதாபப்படவோ எவரும் இல்லையே என்ற சுய பச்சாதாபம் அடக்கடி எழுந்து தன்னை பலவீனப்படுத்துவதையும் நினைத்துப் பார்த்தாள்.

“சரி!”

அதைச் சற்றும் எதிர்பாராததால், “பாமா!” என்று தாவி, அவள் கைகளைப் பற்றினான் பத்மநாதன்.

“ஆனால், ஒரு நிபந்தனை,” முகத்தில் கடுமையை வரவழைத்துக் கொண்டாள். “பழசு எதையும் கிளறக்கூடாது!”

தன் கடந்த காலத்தைப்பற்றிக் கூறியதுதான் இவளுடைய மென்மையான உணர்வுகளை எவ்வளவு பாதித்துவிட்டது! “நீ சொல்றதும் சரிதான். இனிமே நீன்னு கூப்பிடலாமில்ல?” என்று மனம் லேசானவனாகச் சிரித்துவிட்டு, “நடந்து முடிஞ்சதை இனிமே மாத்தவா முடியும்! அதைப்பத்தி நினைச்சு கவலைப்படறது முட்டாள்தனம்!” என்று அந்த விஷயத்துக்கு ஒரு முடிவு கட்டினான்.

இவ்வளவு நல்ல மனிதரை ஏமாற்றுகிறோமே என்ற ஒரு சிறு வருத்தம் எழுந்தது பாமாவுக்கு. ஒரு கணம்தான்.

தன்னைவிட உயர்ந்தவளை மணந்திருக்கிறோம் என்ற நினைவும் நல்லதுதான்.

அனேகமாக எல்லா ஆண்களும் செய்வதுபோல், மனைவியை மிரட்டி, ஓயாது அடக்காமல், சமமாக நடத்துவார் என்று தோன்ற, பாமாவின் உதடுகள் சிரிப்பால் விரிந்தன.

(மலேசிய நண்பன், 1995)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *