மாமியாரும் மருமகளும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 8, 2019
பார்வையிட்டோர்: 6,392 
 
 

என்னுடைய அம்மாவும், பாட்டியும் (அப்பாவின் அம்மா) அடிக்கடி போடும் சண்டைகள் மிகவும் பிரசித்தம். இருவருக்கும் புரிதல் என்பது சற்றும் . கிடையாது. இருந்தும் நாங்கள் கூட்டுக் குடும்பத்தில்தான் உழன்று கொண்டிருந்தோம்.

என்னுடைய அறியாப் பருவத்திலேயே வாயில் விரல் வைத்துச் சூப்பும் பழக்கம் என்னைத் தொற்றிக்கொண்டது.

வலது கை பெருவிரலை வாயில் வைத்து சூப்பும் பழக்கம் எனக்கு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்தப் பழக்கத்தை என்னிடம் நிறுத்த, என் பாட்டி எத்தனை முயற்சிகள் எடுத்தார் என்பது மட்டும் நிறையவே எனக்குத் தெரியும். .

ஒருநாள் இரவு நான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு மூன்று வயது. நான் அயர்ந்து தூங்குவதைப் பார்த்து, இதுதான் நல்ல சமயமென்று என்னுடைய பாட்டி மெதுவாக எழுந்துபோய் வேப்பெண்ணைய் இருந்த பெரிய புட்டியை எடுத்து வந்து, சப்தம் காட்டாமல் என்னருகில் வந்து உட்கார்ந்திருக்கிறாள்.

அதென்னமோ தூங்கும் போதுதான் என் வலது கை பெருவிரல் ஆணி அடித்தாற் போன்ற இறுக்கத்துடன் என் வாய்க்குள் மிக பத்திரமாக இருக்கும். பாட்டியும் ஆணியைப் பிடித்து இழுப்பதுபோல என் பெரு விரலைப் பிடித்து அசைத்து இழுத்திருக்கிறாள். என்னதான் இருந்தாலும் ஆணி பாவம் சின்னதுதானே… வாயில் இருந்து வெளியில் வந்து விட்டது ஆணி !

உடனே பாட்டி வேப்பெண்ணையை தொட்டுத்தொட்டு என் வலது கை பெருவிரல் பூராவும் நன்றாகத் தடவியிருக்கிறாள். தடவி முடிந்ததும் திருப்தியுடன் பாட்டி புட்டியுடன் எழுந்து கொண்டாள். பாவம், இதற்காக எத்தனை நாட்கள் பாட்டி திட்டமிட்டிருந்தாளோ !

புட்டியைத் திரும்பவும் அலமாரியில் கொண்டுபோய் வைத்த போதுதான் பாட்டியின் விதி சதி பண்ணிவிட்டது. பார்வை தெளிவாக இல்லாததால் அலமாரியில் வைப்பதாக நினைத்து புட்டியை கீழே போட்டு விட்டாள்.

சும்மாவே என்னுடைய அம்மாவிற்கு எலிக் காது! ஒரு பெரிய கண்ணாடி புட்டி கீழே விழுந்து உடைகிற சப்தம் அவளுக்குக் கேட்காமல் போய்விடுமா?

யாரது எனக் கேட்டு உடனே எழுந்து வந்திருக்கிறாள். இந்தச் சந்தடியில் என்னுடைய தூக்கமும் கொஞ்சம் கலைந்திருக்கிறது. அந்த அரைகுறை பிரக்ஞையிலும் என் பெருவிரல் வாய்க்குள் இல்லாததை நொடிப் பொழுதில் புலன்கள் மூளைக்குச் சொல்லிவிட்டன. உடனே என் பெருவிரல் வாய்க்குள் பொருந்தி விட்டது.

என்ன இது? எப்போதும் போல இல்லையே? விரல் என்னவோ போல் இருக்கிறதே? விரலின் கசப்பு வாய்க்கு அருவருப்பாக இருந்தது. சட்டென்று என் தூக்கம் முழுமையாகக் கலைந்து விட்டது. விரலை அவசரமாக வெளியில் எடுத்துவிட்டேன். ஏதோவொரு ஏமாற்றத்திற்கு ஆளாகிவிட்ட அதிர்வில் பெரிதாக அழ ஆரம்பித்து விட்டேன்.

பாட்டியை நோக்கிச் சென்று கொண்டிருந்த அம்மா உடனே என்னிடம் திரும்பி ஓடி வந்தாள். அம்மாவைப் பார்த்ததும் என் அழுகையின் சப்தம் மேலும் அதிகமாகியது.

அம்மா என்னை வாரி மடியில் போட்டுக் கொண்டாள். தூக்கித் தோளில் சாய்த்துக் கொண்டாள். முதுகில் தட்டினாள். தலையை வருடிக் கொடுத்தாள்.

“எதுக்குடா அழுவுறே என்ன பெத்த ராசா? யாருடா ராசா உன்னை அடிச்சது? பாட்டி அடிச்சாங்களா உன்னை? தூங்குடா என் ராசா… என் செல்லம் இல்லையா நீ? என் தங்கம் இல்லையா நீ…”

ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு முத்தம் தந்து அம்மா என்னுடைய அழுகையை நிறுத்த முயன்றாள். சொல்லவும் தெரியாமல், அழுகையையும் நிறுத்தாமல், நான் என்னுடைய வலது கையை மட்டும் உயர்த்தி அம்மாவிடம் காட்டினேன். என் பெருவிரலில் வேப்பெண்ணைய் தடவியிருப்பதை அம்மாவால் உடனே அந்த இருட்டில் பார்க்க முடியவில்லை.

“என் ராசாவின் கையில் எலி கடிச்சிருச்சா? என் தங்கத்தின் கையில் பெருச்சாளி கடிச்சிரிச்சா?” என்று கேட்டபடியே என் ஒவ்வொரு விரலாக முத்தமிட்டுக்கொண்டே வந்த அம்மா, பெருவிரலை முத்தமிட்டதும் சட்டென்று மெளனமானாள்…! சந்தேகத்துடன் மறுபடியும் பெருவிரலை முத்தமிட்டு பிறகு நக்கி சுவை பார்த்தாள்.

“என்ன இது, விரல் இப்படிக் கசக்குது?” என்று அதிர்ந்தாள்.

இதுதான் சாக்கு என்று நான் இன்னும் பலமாக சப்தம் போட்டு அழ ஆரம்பித்தேன்.

“ஏதோ எண்ணை மாதிரி இருக்கு?” என்றபடியே சந்தேகத்துடன் அம்மா திரும்பி பாட்டியைப் பார்த்தாள். ஒரு பக்கம் விடாமல் நான் அழுது கொண்டிருக்கிறேன். இன்னொரு பக்கம் புட்டியைக் கீழே போட்டு உடைத்துவிட்டு நடுங்கியபடி பாட்டி நின்று கொண்டிருக்கிறாள். அம்மாவால் என் அழுகையை தாங்கிக் கொள்ளவே முடியாது. அப்படியொரு செல்லப் பிள்ளை நான்.

குற்றவாளியாக நிற்கும் பாட்டியையும் சகித்துக்கொள்ள முடியாது அம்மாவால். பாட்டி அப்படியொரு ஏற்கத் தகாத மாமியார் அம்மாவிற்கு.

இந்த இரண்டு போதாதா, பெண்களிடையே யுத்தம் மூள? அதுவும் இல்லாமல் இந்த மாமியார்-மருமகள் போர்தான் நமது நாட்டின் மனமாட்சி ஆயிற்றே…! அந்த மனமாட்சி நடுநிசி என்றுகூடப் பார்க்கப் படாமல் பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது…!

“என்னத்துக்கு இப்ப தூங்கிகிட்டு இருந்தவன் விரல்ல போய் இப்படி வேப்பெண்ணையை தடவுனீங்க?”

“நாலு வயசாகப் போவுது… இன்னும் இது இப்படி கையைச் சூப்புதேன்னு பூசினேன்.”

“என் பிள்ளை கையையும் சூப்பும்; காலையும் சூப்பும். அதுக்காக வேப்பெண்ணையைத் தடவறதா?”

“வேற எந்த எண்ணையைத் தடவச் சொல்றே?”

“நான் உங்களை எந்த எண்ணையையும் தடவச் சொல்லலை.”

“நல்லது செஞ்சாக்கூட இந்தக் காலத்துல பொல்லாப்பா இருக்கு! இனிமே ஒண்ணுமே நான் தடவலையடிம்மா தடவலை. உன் பிள்ளையை நல்லா கல்யாணமாகிற வரைக்கும் கையைச் சூப்பச் சொல்லு. ஹும்… பிள்ளை வளர்க்கிறாளம் பிள்ளை. நானும்தான் ஒம்பது பிள்ளைகளை பெத்து வளர்த்திருக்கேன். இப்படியா கையையும் காலையும் சூப்பினதுகள்…!”

“சும்மா வார்த்தையை விட வேண்டாம். நீங்க பிள்ளை வளர்த்த லட்சணம் எனக்கும் தெரியும். பத்து வயசு ஆன அப்புறம் படுக்கையில் மூத்திரம் போனது உங்க பிள்ளைதான்… என் பிள்ளை கிடையாது…”

இதற்குப் பாட்டியால் பதில் சொல்ல முடியவில்லை. அம்மாவையும், என்னையும் அழகு காட்டி விட்டு உள்ளே ஓடிப் போனாள். போனால் போகிறாள், இன்று போய் நாளை வா என்று அம்மாவால் சமாதானமாக அடங்கிப் போக முடியவில்லை!

“கையை வீசிகிட்டு சும்மா உள்ளே ஓடிப் போயிட்டா எப்படி? உடைஞ்சு கிடக்கிற பாட்டிலை எடுத்துப் போட்டு, எண்ணையை துடைக்கிறது யாரு?” என கோபத்துடன் கத்தினாள்.

பாவம் பாட்டி திரும்பவும் வந்தாள். முனகிக்கொண்டே புட்டியின் உடைந்த துண்டுகளை முறம் எடுத்து வந்து அள்ளிப் போட்டாள். பழைய துணியால் எண்ணை கொட்டிக் கிடந்த தரையை நன்றாகத் துடைத்தாள்.

அம்மா என் விரலை அவளின் சேலைத் தலைப்பால் சுத்தமாகத் துடைத்து விட்டு, என் பக்கத்திலேயே படுத்துக் கொண்டாள்.

நானும் விரலைச் சூப்பியபடி அழாமல் தூங்க ஆரம்பித்தேன்…

அம்மாவும், பாட்டியும் எப்போதுமே சண்டைதான் போடுவார்கள் என்றில்லை. சில சமயங்களில் தேவையின் பொருட்டு ஒன்று கூடிக் கொள்வார்கள்.

அப்படித்தான் நான் ஒருமுறை வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டேன். என் அம்மா தரையில் உருண்டு புரண்டு அழுதிருக்கிறாள். பாட்டி அம்மாவிற்கு இரண்டு படி மேல். நான் செத்தே போய்விட்ட மாதிரி அப்படி ஒரு ஒப்பாரி! ஒப்பாரிக்கு துணையாக நாட்டுப் பாடலெல்லாம் வேறு…! பிறகு தாத்தாதான் பாட்டியை திட்டி அடக்கி இருக்கிறார்.

பெண்களே கொஞ்சம் வினோதம்தான். தினம் தினம் எலியும் பூனையுமாய் முறைத்துக் கொண்டிருப்பவர்கள், ஏதேனும் துக்கம் வந்து விட்டால் – ஒன்று, இருவருமே எலியாகி விடுவார்கள்; இல்லை, இருவருமே பூனையாகி விடுவார்கள். என்னைக் காணோம் என்ற துக்கத்தில் அம்மாவும் பாட்டியும் கூட்டணி அமைத்து அழ ஆரம்பித்து விட்டார்கள். அனால் ஒரு விஷயம் – எப்பேற்பட்ட கூட்டணியாக இருந்தாலும் சரி, காரியம் முடிந்ததும் கூட்டணி உடைந்து போய்விடும்…!

சற்று வயதானவுடன் விரல் சூப்பும் பழக்கம் எனக்கு நின்று விட்டது.

என்னுடைய பத்தாவது வயதில் பாட்டி திடீரென இறந்து போனாள்.

இத்தனை வருடங்களும் பாட்டியுடன் சதா கச்சை கட்டிக்கொண்டு சண்டையிட்ட அம்மா, பாட்டி செத்தவுடன் மார்பிலும், தலையிலும் அடித்துக்கொண்டு தரையில் உருண்டும் புரண்டும் அழுதாள். அதைப் பார்த்த ஊர்ஜனம் பூராவும் அப்படியே வாய் பிளந்து நின்று விட்டது. எனக்கேகூட அம்மாவின் அழுகை ரொம்ப ஓவராகத் தெரிந்தது.

அதன்பிறகு அம்மா பல நாட்களுக்கு திக்பிரமை பிடிச்ச மாதிரி வீட்டின் மோட்டு வளையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அடிக்கடி பெருமூச்சாய் விட்டுக் கொண்டிருந்தாள். அவள் பேசுகிறதே மிகவும் குறைந்து போய்விட்டது. அப்படியே பேசினாலும் மிக மெல்லிய குரலில் பேசுவாள்.

இந்த அமைதி எங்கள் வீட்டிற்கு மிகவும் புதிது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *