“ராசாத்தி மகன் பாண்டி செத்துப் போனான்” என்ற அதிர்ச்சி. தீப்பிடித்த மாதிரி ஊரெல்லாம் சட்டென்று பரவியது. சாமிநாதன் செவியில் அந்தச் செய்தி நெருப்பாகவே இறங்கி மனசைச் சுட்டது. சர்வாங்கமும் குலுங்கிப்போனான்.
நெஞ்சைக் கவ்விய துக்கம், தொண்டைக்குள் அடைத்துக் கொண்டு நின்றது. “நெசந்தானா? என்று நம்ப முடியாமல் மனது திகைத்துக்கிடந்தது.
நேற்றுக்கூட குடுகுடுவென்று ஓடிவந்து விரலைப்பிடித்துக் கொண்டு, “மாமா, மாமா” என்றானே! அந்த ஏழுவயசுக் சிறுவனைப் பார்த்து “என்னடா” என்று அன்பு கனியச் சிரித்தானே….
“தங்கச்சி ஒனக்குப் பகை, தங்கச்சி மகன் ஒனக்கு உறவா?” என்று கடைத்தெருவில் யாரோ கேலி செய்தார்களே…
“மருமகனைக் கையிலே பிடிச்சிக்கிட்டாத் தானே… நாளைக்கு மகளை
ஓசியா தள்ளிவிடலாம் சாமிநாதன் காரியக்காரன் தானப்பா.”
அந்தப் பெரியவர்களின் கிண்டலான பலத்த சிரிப்புக்கு அர்த்தம் விளங்காமல், மாமா முகத்தைத் திகைப்பாய்ப் பார்த்தான், பாண்டி.
“என்னடா வேணும் பாண்டி?”
“துட்டு மாமா.. துட்டு”
“துட்டு எதுக்குடா..? வடை வேணுமா?”
“ம்”
அந்தப் பிஞ்சு முகத்தில் கும்மாளமிடுகிற களிப்பு. சின்ன உதடுகளில் மின்னுகிற சிரிப்பு.
உளுந்த வடையைக் கையில் வாங்கியவுடன் உலகத்தையே ஜெயித்துவிட்ட பெருமை. அந்தச் சிறுவனுக்கு. முகமெல்லாம் பூஞ்சிரிப்பாக விரிய, கால் முளைத்த பூச்செண்டாக ஓடினானே…! நேற்றுதானே….
அந்தப் பயலா செத்துப்போனான்? இதென்னடா… பேய்க்கூத்தாயிருக்கு…. அந்தப் பூவைக் கிள்ளிக் கொண்டு போகச் சாவுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சு? இந்தச்சாவு வாயிலே மண்ணுவிழ!
சாமிநாதன் மனசெல்லாம், மழையில் நனைந்த காகிதமாக நைந்துபோய்….. சோகத்தில் பொதும்பிப் போயிருந்தது.
அந்தப் பிஞ்சு முகத்தைக் கடைசியாக ஒரு தடவை பார்த்துவிட மனசு ஆவேசப்பட்டது. பரபரத்தது. ஓடத் துடிதுடித்தது. துண்டைத் தூக்கித்தோளில் போட்டுப் புறப்பட்டவன். அப்படியே திகைத்துப் போனான்.
“அதுக்காக…. அந்தப் பயலோட வீட்டு வாசப்படி மிதிக்கவா? மனசில் சுரீரிடுகிற உணர்வுகள், வெக்கையடிக்கிற அனலாக நினைவுகள், ரோஷமாய் எழுகிற அக்கினி.
அப்படியே சோர்வுடன் திண்ணையில் உட்கார்ந்துவிட்டான். மட்டியைக் கடித்துக்கொண்டான். மனசைக் கட்டுப்படுத்திக் கொண்டான். முறுக்கிக்கொண்ட மனசுக்குள் விறைத்துக் கொண்ட உணர்வுகள்.
போலீஸ் ஸ்டேஷனில் பயத்தில் வியர்க்கிற மனசோடு நின்ற காட்சிகள்: கண்ணில் தட்டுப்பட்ட காக்கிச்சட்டைகளுக்கெல்லாம் பயந்து குழைந்த அவலம்.
“ஏண்டா. டேய்… நீயெல்லாம் கல்லெடுத்துப் பாய்றதுன்னா… நாங்க நாற்காலிக்கு அலங்காரமாக இருக்கவா இங்கே இருக்கோம்?” என்று அதட்டலாக நெருங்கிய சப்-இன்ஸ்பெக்டர் ஓங்கிய கை மாறாமல் சப்பென்று அறைந்த அடியில் பொறி கலங்கி நின்ற பயங்கரக்கோலம்.
அந்தக் கேஸ் கோர்ட் வரைக்கும் போனால் என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற அச்சத்தில்…. ஸ்டேஷனிலேயே தீர்த்துக் கொள்ள யார் யாரிடமோ கெஞ்ச வேண்டிய அசிங்கம்…..
ஆசை ஆசையாய் வளர்த்த – பணம் பெற்ற பசுமாட்டை, அடிமாட்டுக்கு விற்றதுபோல விற்று யார் யாருக்கோ லஞ்சமாய்க் கொடுத்துச் சீரழிந்த கொடுமை….
இதனாலெல்லாம் அடைந்த கேவலம்…. இந்தக் தலைமுறைக்கே தாங்குமே. ஊரெல்லாம் கைகொட்டிச் சிரிக்கிற சிரிப்பாணியாய்.. அவமானப்பட்டுத் தலைகுனிய வேண்டியதாகியிருந்ததே….
இத்தனைக்கும் காரணமான தங்கச்சி புருஷன் மூக்கையா.
ச்சே! இம்புட்டு நடந்த பிறகும்… அந்த அற்பப்பயல் வீட்டிலே போய்க் கால் வைக்கவா? சோறு திங்கிற மானஸ்தன் எவனாவது, அவன் வீட்டிற்குப் போவானா?
மனசில கொந்தளித்துக் கொதிக்கிற நினைவுகள். உள்காயத்தின் ரணங்களை நினைவுபடுத்துகிற வேதனை. அப்படியே சுவரில் சாய்ந்துகொண்டான்.
உள்ளே சின்ன முகம் காட்டுகிற பாண்டி, பூஞ்சிரிப்போடு எச்சில் வடிக்கிற பாண்டி, கால் முளைத்த பூச்செண்டாக ஓடுகிற பாண்டி.
வெறியோடு இழுத்த இழுப்பில் பீடியின் முகம் கங்காய் மின்னி வெடிக்க. மனசுக்குள் போலீஸ் ஸ்டேஷன், எஸ்.ஐ. அடித்த அடிகள். செத்துப்போன அம்மா அய்யாவையெல்லாம் இழுத்து நாறிப் போன வார்த்தைகளால் திட்டிய வசவுகள்.
அப்போது –
நாலைந்து பேர்கள் திமுதிமுவென்று வீட்டுக்குள் நுழைந்தனர். ஆள் ஆளுக்குச் சத்தம் கொடுத்துக்கொண்டு, கண்டன வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டு…
ஆளுக்கொரு இடத்தில் உட்கார, ஒரு பெரியவர் மட்டும் நின்றுகொண்டே உரிமையோடு கண்டித்தார்.
“என்ன சாமிநாதா. ஒனக்குப் புத்தியேயில்லியே. கிளம்பு. முதல்லே அங்கே போவோம்.”
“எங்க மாமா?”
“ஊரே திரண்டு ஒந்தங்கச்சி வீட்டிலே கூடிக்கிடக்கு. வாயிலே வயித்துலே அடிச்சிக்கிட்டுப் புலம்பிக் கிடக்கு. கூடப் பொறந்த அண்ணன் நீ. இப்படிக் குத்துக்கல்லா இருந்தா… எப்படி?”
“அங்கே எனக்கொன்னும் சோலி இல்லியே, மாமா”
“அறிவுகெட்டதனமா பேசாதே. உறவு முறைகளுக்குள்ளே சண்டை சத்தம் வரத்தான் செய்யும். அதுக்காக, பகையைப் பத்திரப்படுத்தக்கூடாதப்பா நல்லதுலே கூடிப்போகாட்டாலும்… இழவுலே கட்டாயமா கூடிப்போகணும்”
“இது கூடிப்போற பகையில்லே மாமா. நா அனுபவிச்ச அவமானம் எனக்குத்தான் தெரியும். அவுகஅவுகளுக்கு வந்தால் தான் தெரியும். காய்ச்சலும் தலைவலியும்!”
“அதெல்லாம் வாஸ்தவம்தானப்பா…. இதெல்லாம் நினைச்சுக் கிட்டிருக்கிறதுக்கு இது நேரமில்லை. சாமிநாதா, ஒரே நாள் ராத்திரியிலே வாயாலே. வயித்தாலே போய். செத்துக்கிடக்கிற அந்தச் சின்னப்பயலுக்கு நீ தாய் மாமன். நீதான் கோடித்துணி போட்டு, மயானம் வரைக்கும் ஒம் மருமகனைத் தூக்கிட்டு வரணும். சம்பிரதாயம் தெரியாதா, ஒனக்கு? புறப்படு.”
“தாய்மாமன் இருந்தால்தானே, மாமா? செத்துட்டான்னு வைச்சுக்கோங்க”
“ஏலேய் சாமிநாதா, நீ மாமா சொல்றதைக் கேக்கப் போறீயா. இல்லியா.”
மாமா. நீங்க இதை விட்டுட்டு வேறு பேச்சைப் பேசுங்க கேக்கறேன்.”
ஒரே பிடி சாதனையாய் மறுத்துவிட்டான். வாய்க்கு வந்தபடி திட்டிப்பார்த்தார் பெரியவர். மற்றவர்களும் அற்பப்பயலே, என்றெல்லாம் திட்டிப்பார்த்தனர். இவன் அசையவேயில்லை.
எப்படி அசைவான்?
அசைகிற மாதிரியான பகையா? மானத்தையும் பொருளையும் சேதப்படுத்தி, ஊரார் முன்னிலையில் நிர்வாணப்படுத்திய அந்த அவமானத் தீயை அவ்வளவு சுலபமாகவா மறந்துவிட முடியும்? தலைமுறை உள்ளளவுக்கும் மறக்க முடியாத கேவலமாயிற்றே…?
சாமிநாதனின் பெரியப்பா இறந்த இழவுக்குத் தங்கச்சி புருஷன் மூக்கையா, வேட்டியும் பாலியஸ்டர் சட்டையும் எடுத்துப்போட்டிருந்தான். மூக்கையா வழியில் ஒரு பெரியவர் இறந்த இழவுக்கு “செம்பு” எடுத்திருந்தான்.
அவனுக்குச் சாமிநாதன் வேட்டி சட்டை எடுத்துப்போடணும் அருங்கோடை, கைக்கும் மெய்க்கும் காசில்லாத நேரம். கண்ணு முழி பிதுங்குகிற காலம். அதற்காகச் செய்ய வேண்டிய “வளமுறை”யைச் செய்யாமல் இருக்க முடியுமா?
எப்படியோ உருட்டிப்புரட்டி கிடைத்த பணத்தில் வேட்டியும் துண்டும்தான் எடுத்துப்போட முடிந்தது. சட்டை எடுத்துப் போடவில்லை என்பதில் மூக்கையாவுக்கு மனச்சடவு கோபம்.
“சபையிலே கரியைப் பூசிட்டானே. இவனெல்லாம் மச்சானா?” என்று சாடை மாடையாய்ப் பேசினான். இவனுக்கு ஆத்திரமாய் வந்தாலும் சகித்துக்கொண்டான். பல்லைக்கடித்துக் கொண்டான். இயலாமையைக் குத்திக் காட்டுகிற அவமானம்.
உறவில் சின்ன விரிசல். தங்கச்சி கூடப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். மூக்கையன் அதற்கும் மேல்.
அப்போதுதான்… அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
துட்டுச்சிக்கல் காரணமாகச் புஞ்சைப்பொழியில் நின்ற நான்கு வேலி மரங்களை விலைபேசி விறகுக்கு விற்றிருந்தான் சாமிநாதன். பெரியமரங்கள் அந்த வேலிமரங்கள். சாமிநாதன் புஞ்சைக்கும், மூக்கையா புஞ்சைக்கும் நடுவில் ஓடிய ஓடையில் நின்றன.
விறகுக்கு வாங்கியவன் என்ன நினைத்தானோ… சாமிநாதனையே மரத்தை வெட்டித்தரும்படி கூறிவிட்டான். வெட்டுக் கூலியாக ரூபாய் முப்பது கொடுத்துவிட்டான்.
அரிவாள் கோடாரியோடு புஞ்சைக்குப்போய்….. சாமிநாதன் வேலையைத் தொடங்கினான், துரட்டியால், மேல்முட்களையெல்லாம் இழுத்து ஒதுக்கிவிட்டு, கட்டைவிறகை வெட்டத் துவங்கிய போது.
“எந்த பய மகன்டா விறகை வெட்டுறது?” என்று குரல், இவனது மனசில் செருப்படியாக விழுந்தது. திரும்பிப் பார்த்தால்… மூக்கையா.
“என்ன மாப்புள்ளே, வாய் நீளுது?”
“மாப்புள்ளே… எம் புஞ்சை விறகை எதுக்காக வெட்டணும்?”
“இது ஒம் புஞ்சைக்குப் பாத்தியப்பட்டதில்லே. எம் புஞ்சை பொழியிலேதான் மரம் நிக்குது.”
“உழுது உழுது பொழியை நகட்டிக்கிட்டே வந்ததுமில்லாம…. மரத்தையும் வெட்டவா வரணும்? இதைப் பார்த்துக்கிட்டுச்சும்மாயிருக்க. நா ஒன்னும் பொட்டப்பய இல்லே.”
“ஊர்லே பெரியாளுக இருக்காக. கூட்டிக்காட்டுவோம். அவுக சொல்றதைக் கேட்டுக்கிடுவோம்”
“பெரியாளுக… கிழிப்பாக! இந்த ஊர்லே நியாயம் பேசுற பெரிய மனுசன் எவன் இருக்கான்? மரத்தை வெட்டக்கூடாதுன்னா…. வெட்டக்கூடாது.”
“மீறி வெட்டினா…?”
“ஒருத்தனுக்குப் பெறந்த உத்தமன்னா… வெட்டக்கூடாது.”
“மாப்புள்ளே வௌகாரம் பேசுறப்போ… வார்த்தை சுத்தமா பேசணும். சிந்துனா… அள்ள முடியாது.”
“எனக்குப் புத்திமதி சொல்ல ஒரு பயலும் வரவேண்டாம்.”
“பய பரட்டைன்னு பேசினா… மண்டை சிதறிப்போகும்… ஜாக்கிரதை.”
அரிவாளை ஓங்கிய இவனின் கையைப் பிடித்தான் மூக்கையா. வார்த்தைகள் தடித்தன.
சாமிநாதன் நெருப்பாகிவிட்டான்.
கைகலந்துவிட்டார்கள். மல்லுக்கட்டிப் புரண்டார்கள். விலக்கிவிட யாருமில்லை. கீழே கிடந்த சாமிநாதனின் மேலே உட்கார்ந்து மூக்கையா அரிவாளை ஓங்க….
சாமிநாதனுக்கு உயிர்ப்பறவை சிறகடிக்க…
அவன் கைக்கு ஒரு பெரிய கல் கிடைக்க ஓங்கியடித்துவிட்டான்.
முக்கையாவின் வலது நெற்றியில் ரத்தம் சள்ளென்று முகம் காட்டி வழிந்தது. அவன் போட்ட அலறலில் காடுகளில் வேலை பார்த்த ஆட்கள் ஓடிவர. இருவரையும் பிய்த்து விலக்கிவிட்டனர்.
மூக்கையா ரத்தம் வழிய சைக்கிளை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போய்விட்டான்.
எல்லாம்… நூத்தியறுபது ரூபாய்க்கு விற்றவேலி மரத்தால் வந்த வினை.. உணர்ச்சியின் பாதையில் வார்த்தைகளைச் சிதறி வந்த சண்டை. ஒரு பசுமாட்டையே விற்று காக்கிச்சட்டைகளின் வாயில் போட்டதுடன் முடிந்தது.
அதையெல்லாம் இப்போது நினைத்தால்கூட… மனசின் ஆழத்திலும் கசந்துகிடக்கிறது அவமானத்தீ எரிகிறது….
ச்சே! இதுக்குப்பிறகும் அந்த வீட்டு. வாசப்படியை நா மிதிக்கவா? வெக்கக்கேடு! அப்படிப்பட்ட மானங்கெட்ட சொந்தம் என்னத்துக்கு?
வீட்டுக்குள் விருட்டென்று நுழைகிறாள் மனைவி பார்வதி. அலை குலைய வருகிற அவள் கையில் ரெண்டு மீட்டர் மல்கோடித்துணி.
“என்ன பார்வதி, இது?”
“நீங்க போங்க. போகணும்”
“அதெல்லாம் நடக்காது”
“… இங்க பாருங்க. பெரியாளுக செய்ஞ்ச அக்ரமத்துக்கு, அந்தச்சின்னப்புள்ளை என்ன செய்யும்? சொல்லுங்க. அவுகதான் உங்களுக்குப் பகை. இந்தப்புள்ளை என்னைக்காச்சும் ஒதுங்கி நின்னதா? மாமா, மாமான்னு ஓயாமெ ஓடி வருமே. அத்தை, அத்தைன்னு என்னை வாய்நிறையக் கூப்புடுமே, இனிமே அந்தச் சத்தத்தை எங்க போய்க் கேக்கப்போறேன்… அய்யய்யோ!
என்றவள் தாங்கமுடியாமல் கதறியழுதுவிட்டாள். பேச வாய் வராமல் தலையில் “மடேர், மடேரென்று அடித்துக்கொண்டே அப்படியே உட்கார்ந்துவிட்டாள். அவள் அழுத அழுகையில். இவனும் கலங்கிவிட்டான்.
“மாமா, துட்டு” என்று ஓடி வருவானே… தெருவில் எந்த இடத்தில் உட்கார்ந்திருந்தாலும், மடியில் உரிமையோடு ஏறி உட்காருவானே….
“உங்ககிட்டே துட்டு வாங்குனா… அய்யா அடிக்காரு. ஏன் மாமா?”
“உங்கப்பன்கிட்டேதான் கேக்கணும்.”
“எங்கய்யா ரொம்ப மோசம். என்ன மாமா….”
மனசில் பூக்களை அள்ளித்தூவுகிற அந்தச் சிரிப்பு, காடைக் குருவியாய் அவன் ஓடுகிற அந்த ஓட்டம். அந்தச் சிறுவனின் உதட்டோரங்களில் வழிகிற எச்சில், அதில் ததும்பி நிற்கிற அன்புணர்ச்சி….
சாமிநாதனுக்குள் ஊற்றெடுக்கிற ஒரு பிரவாகம். உள்ளுக்குள் ஏதோ நொறுங்கிச் சரிகிற உணர்வு, கண்களில் உறுத்திக்கொண்டு வெளிவரத் துடிக்கிற கண்ணீர்.
“இங்க பாருங்க, உங்களுக்கு உங்க தங்கச்சியும் வேண்டாம். மச்சினனும் வேண்டாம். அவுக பகை. பகையாகவே இருக்கட்டும். அந்தப் புள்ளைக்குத் தாய்மாமன் கடமையை மட்டும் செய்துட்டு வந்துடுங்க”
அழுகையோடு அவள் சொன்ன வார்த்தையில் அர்த்தம் இருந்தது. இவன் அசைந்தான்.
“தாய்மாமன் கடமையை மட்டும் செய்துட்டு வந்துடணும். கோடித்துணியைப் போட்டுட்டு, மயானம் வரைக்கும் அந்தப்புள்ளையைக் கையிலே ஏந்திக்கொண்டு போய்க் குழியிலே போட்டுட்டு நேரா வீட்டைப் பார்த்து வந்துடணும் அந்தச் சனியன்ங்க முகத்திலே விழிக்கவே கூடாது!”
பாண்டியைக் குளிப்பாட்டி முடித்துவிட்டார்கள். ஊரே திரண்டு நின்றது. திடீரென்று வந்த சாவின் அதிசயம் பற்றி தாய்மாமன் தீராப்பகை பற்றிப் புலம்பிக்கொண்டு நின்றது. பெரியவர் பெருமூச்சோடு கூறினார்.
“இனிமே அந்தப்பய வரமாட்டான். தூக்குறதுக்கு வழியைப் பாருங்க. யப்பா நாவிதா, சங்கை
ஊது.
“சாமிநாதன் இந்தா வந்துட்டான்.”
எல்லாரும் இந்தப்பக்கம் திரும்பிப்பார்க்க. சாமிநாதன் ஒற்றையாளாக வந்து கொண்டிருந்தான். அவன் யாரையும் பார்க்காமல். நேராகக் கிடத்தப்பட்டிருந்த பாண்டியின் பக்கம் வந்தான்.
மஞ்சள் தடவிக் குளிப்பாட்டிக்கிடந்த அந்தச் சிறுவன் சடலத்தைப் பார்த்ததும் அவனுள் உடைப்பெடுத்துப் பாய்ந்த உணர்ச்சிகள்….
நெஞ்சுக்குள் உடைந்து தொண்டைக்குள் வந்து திரண்டு கொண்ட அந்தத் துக்க உணர்வுகள்.
“அண்…ணாச்சீ, எம் புள்ளை கிடக்குற கோலத்தைப் பாத்தீகளா?” என்ற கதறலுடன் தலைவிரிகோலமாய் இவன் கையைப் பிடித்துக்கொண்டு அழுகிற தங்கச்சி ராசாத்தி.
முகத்தை மூடிக்கொண்டு இறுகிக்கிடந்த மூக்கையா இவனைக் கண்டதும் உடைந்துபோய், குலுங்கிக் குலுங்கி இவன் தோளில் முகம் புதைக்கிறான். அவனது கண்ணீர் தோளில்….
முழிக்கக்கூடாத முகங்கள் ஒன்று கையில் ஒன்று தோளில்.
இவனுக்குள் கற்றையாய் ஊற்றெடுத்த மானுடப்பிரவாகம், நொறுங்கிச் சரிந்து கிடந்த கழிசடைகளையெல்லாம் அடித்துக் கொண்டு கரைபுரள…..
ஆறுதல் தேடி அலைமோதுகிற அந்த ஆத்மாக்களை அன்போடும் அழுகையோடும் அணைத்துக்கொண்டான்.
இவனும் துக்கம் தாளாமல் வெடித்துக் கதறிவிட்டான்!.
நன்றி: மானாவாரிப்பூ