மரங்கள், செடிகள், தோட்டம் இவற்றுடன், சாலையில் சந்தடிகளிலிருந்து விலகி உள்வாங்கி இருக்கும் வீடுகள், எங்கள் பகுதியில் பார்க்க முடியாதோ என்ற ஆயாசம் எழும் வகையில், தனியான பங்களாக்களும், வீடுகளும் இடிபட்டு, அடுக்குமாடிக் குடியிருப்புகள் எழும்புகின்றன. அவைகளின் சுற்றுச் சுவர்கள் வரை, குடியிருப்புகளின் வராந்தா என்ற முகமோ, மூக்கோ நீள்கிறது. அடுத்து உள்ள குடியிருப்புகளை கை நீட்டினால் தொட்டுவிடும் தூரம். ஆனால், அங்கு வாழும் மனிதர்கள் தான், கதவுகளைச் சாத்திக் கொண்டு எட்ட இருக்கின்றனர்.
நான் புகுந்த வீடு அப்படியில்லை. எண்பது வயதான என் மாமனார், அதிகம் நடமாடா விட்டாலும், ஆரோக்கியமாகத்தான் இருக்கிறார். அவர் நண்பர்கள் பலரும், அவரைப் போலவே ஓரளவு நல்ல உடல்வாகு கொண்டுள்ளனர்.
மாலை வேளைகளில், வீட்டின் முன்னே உள்ள, சிமென்ட் தரை போட்ட நடைவழியில், ஈசிசேரில் தான், மாமனார் சிவராமன் உட்கார்ந்திருப்பார். இரண்டு பக்கங்களிலும், பல செடிகளும், மரங்களும்…. எனக்கோ, என் கணவருக்கோ, என் பிள்ளைகளுக்கோ, விற்று பல மாடிக் கட்டடம் கட்டும் எண்ணம் இல்லை.
மொட்டை மாடியில் உலர்ந்த துணிகளை நான் எடுக்கும் போதே, என் வீட்டு வாசல் அருகே சேஷாத்திரி மாமா வருவது தெரிந்தது. மணி பார்க்கத் தேவையில்லை. ஐந்து.
தினமும் ஐந்து மணிக்கு, “டாண்’ என்று ஆஜராகி விடுவார் சேஷாத்திரி மாமா. அவருக்கும், என் மாமனாருக்கும் கிட்டத்தட்ட நாற்பது, ஐம்பது வருஷத் தோழமை.
எங்கள் வீட்டிலிருந்து, ஆறு வீடுகள் தள்ளி இருப்பது சேஷாத்திரி மாமாவின் வீடு; வீடு இல்லை; முன்பு இருந்தது. இப்போது, அவர் வீடும் ஓர் அடுக்கு மாடிக் குடியிருப்பு. அவரும், அவர் மகனின் குடும்பமும் இரண்டு, “ப்ளாட்’களில் இருக்கின்றனர்.
நான் உலர்ந்த துணிகளுடன் கீழே வரவும், மாமனாரின், “”சியாமளா…” என்ற குரல் வந்தது. எதற்கு என்று எனக்குத் தெரியும். பதில் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
சமையலறைக்குள் சென்று, இரண்டு டம்ளரில், காபியை சூடாக எடுத்து வந்தேன். நான் காபியைக் கொண்டு வந்து கொடுக்கும் போது, சேஷாத்திரி மாமா, என்னை பார்த்து புன்னகை செய்துவிட்டு, காபியை வாங்கிக் கொண்டார்.
“”என்ன சேஷாத்திரி… என்ன விசேஷம்?” என்றார் என் மாமனார்.
“”நீதான் சொல்லணும்…” என்றார் சேஷாத்திரி.
நான் உள்ளே சென்றேன்.
“”இன்னிக்கு பேப்பர் பார்த்தியா?” என்று சேஷாத்திரி கேட்கும் கேள்வி, காதில் விழுந்தது.
நான் உள்ளே என் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தேன்.
சேஷாத்திரி மாமா சரியாக, ஆறு மணிக்கு கிளம்பி விடுவார். அந்த ஒரு மணி நேரத்தில், அவர்கள் என்ன பேசுவர் என்று தானே கேட்கிறீர்கள்?
நம்புங்கள். ஒன்றுமே பேச மாட்டார்கள். சேஷாத்திரி மாமா கேட்ட கேள்வி, தினமும் அவர் கேட்கும் கேள்வி தான். அதற்கு மாமனாரின் பதில், “ம்…’ என்பதாகத்தான் இருக்கும்.
இருவரும், மவுனமே பாஷையாக, ஒரு மணி நேரம் எதிர் எதிராக உட்கார்ந்து கொண்டிருப்பர். அவரும், இவரும் ஒருவருக்கொருவர் கேட்காமல் கேட்கும் கேள்விகளுக்கு, சொல்லாமல் மனசோடு மனசாகப் பதில் பேசிக் கொண்டு விடுவரோ என்னவோ!
இந்த நிகழ்வு, இன்று – நேற்று நிகழ்ச்சி அல்ல.
பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. உடம்பு சரியாக இருந்து, ஊரில் இருவரும் இருக்கும் நாட்களானால், இந்த சந்திப்பு மாலை ஐந்திலிருந்து, ஆறுவரை நிகழ்ந்தே தீரும்.
முதலில் இரண்டு, மூன்று முறை ஆச்சரியப்பட்டு நான், என் கணவரைக் கேட்டதுண்டு. அதற்கு, அவர் புன்சிரிப்பு செய்ததோடு சரி.
நான் மீண்டும் கேட்டபோது, “அதில் உனக்கென்ன நஷ்டம்… இல்லை கஷ்டம்… பேசாமல் இரு…’ என்று ஒதுங்கி விட்டார்.
ஆறு மணி ஆனதும் சேஷாத்திரி, “சரி… நான் வரேண்டா சிவா…’ என்று கிளம்புவார். இல்லையெனில், என் மாமனாரே, “ஆறு மணி… நீ கிளம்பல சேஷா?’ என்று கேள்வி கேட்டு, கிளப்பி விடுவார்.
இதுதான் அந்த முதிர்ந்த இருவருக்குள்ளும் நிகழும் உரையாடல்.
நானே ஒருநாள் யோசித்தேன்.
“பேச என்ன இருக்கிறது… நாம்தான் பேச்சை, உரையாடலை உருவாக்கிக் கொள்கிறோம்… பல நேரங்களில், நாம் பேசும் பேச்சின் சாரத்தைப் பார்த்தால் ஒன்றுமே இருக்காது… ஏதோ பேச வேண்டுமே என்பதற்காகப் பேசியதாகத்தான் இருக்கும்… தவிர, வயதாக ஆக, நம் தேவைகளும், எதிர்பார்ப்புகளும், எண்ணங்களும் மாறிக்கொண்டு தானே போகிறது… அது, அவர்கள் இருவருக்கும் புரிந்திருக்கும் என்று தோன்றுகிறது…’ என்று எண்ணிக் கொள்வேன்.
ஆகையால், கொஞ்ச நாளைக்குப் பின், எனக்கு, சிவராமன் – சேஷாத்திரி நண்பர்களின் மவுனமொழி, ஆச்சரியமாகப் படவில்லை. ஆனால், இன்று ஆறு மணிக்கு சேஷாத்திரி மாமா வீட்டுக்குப் போனதும், ஏழு மணிக்கு உள்ளே எழுந்து வரும் மாமனார் வரவில்லை.
வழக்கமாக ஆறரை மணிக்கு, ஆபீசிலிருந்து வீடு திரும்பும் என் கணவரையும் அன்று காணோம்.
பத்து நிமிஷம் பார்த்துவிட்டு, வாசலுக்கு வந்து, மாமனார் ஒரு வேளை கண்ணயர்ந்து விட்டாரோ என்று நினைத்து, “அப்பா… அப்பா…’ என்று கூப்பிட்டபடி, ஈசிசேர் அருகே சென்றேன்.
வாசலின் சற்று மங்கலான விளக்கில், அப்பா தூங்குவது போல் தோன்றியது. அருகில் சென்று திரும்பவும் அழைத்தேன்.
ம்ஹும்…
சற்றுக் கலவரம் அடைந்தவளாய், அவர் தோளைத் தொட்டு அசைத்து, “”அப்பா… அப்பா…” என்றேன் பதட்டத்துடன்.
எதிரொலி இல்லை. ஒரு வேளை…
மூக்கருகே கைகளைக் கொண்டு சென்றேன். மார்பில் கை வைத்துப்பார்த்தேன். உயிர்த்துடிப்பு இல்லை. நெற்றியில் கை வைத்தேன். சில்லென்று இருந்தது.
மரணம் தவிர்க்க முடியாததுதான்; அதுவும் வயதானவர். இருந்தாலும், அதை நெருங்கிய ஒருவருடையதாக அருகில் பார்க்கும் போது, வயிறு கலக்கியது.
வேகமாக உள்ளே ஓடி, மொபைலை எடுத்து, என் கணவருக்கும், டாக்டருக்கும் போன் செய்தேன்.
பதிமூன்று நாள் காரியம் கனவுபோல் ஓடி விட்டது.
சேஷாத்திரி மாமா, அப்பாவின் உடலை வந்து பார்த்த போதும், பெரிதாக எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை. அதே மவுனம்தான்.
என் கணவரிடம் தான், “என்னைத் தனியா விட்டுட்டுப் போய்ட்டான்…’ என்றார் முணுமுணுக்கும் குரலில்.
பதினான்காம் நாள், நான் தன்னிச்சையாக ஐந்து மணிக்கு வாசலுக்கு வந்தேன். கேட்டருகே சேஷாத்திரி மாமா நின்று கொண்டிருந்தார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல், ஓர் வினாடி திகைத்தாலும், ஓடிச் சென்று கதவைத் திறந்து, “”வாங்கோ மாமா,” என்றேன்.
அவர் மெதுவாக நடந்து, மாமனார் வழக்கமாக உட்காரும் இடத்துக்கு வந்தார். ஒரு நிமிஷம் மவுனத்தில் கரைந்தது. பிறகு, கரத்த தொண்டயைக் கனைத்து, “”சியாமளா… எனக்கு ஒரு சின்ன உதவி செய்வியா?” என்றார்.
“”சொல்லுங்க…” என்றேன் நான்.
“”நீ பழையபடி அந்த ஈசிசேரையும், என் சேரையும், இங்கே சாயங்காலத்தில் போட்டு வை… நான் வந்து… வந்து… சிவாவோட…” குரல் லேசான அழுகையில் கலைந்து போனது.
எனக்கும் கண் கலங்கியது.
“”கட்டாயம் மாமா…” என்றபடி, வராந்தாவில் இருந்த அந்த பழைய ஈசிசேரையும், சேஷாத்திரி மாமா அமரும் நாற்காலியையும் கொண்டு வந்து போட்டேன்.
சேஷாத்திரி மாமா நாற்காலியில் அமர்ந்து, ஈசிசேரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
நான் உள்ளே சென்று, காபியைக் கொண்டு வந்து, மாமா கையில் தந்தேன். அதை வாங்கும் போது, அவர் முகத்தில் ஒரு லேசான புன்னகை தெரிந்தது; ஏதோ, அவர், தன் நண்பருடன் பேசிக் கொண்டிருப்பது போல்.
நான் பேசாமல் உள்ளே சென்றேன். அவர்கள் இடையே, பல ஆண்டுகளாக பழகி வந்த பாஷை, மவுன மொழிதானே… அது தொடர்கிறது போலும்!
ஆறு மணிக்கு, சேஷாத்திரி மாமா கேட்டை மூடிக் கொண்டு செல்வது, மங்கலான மாலை வெளிச்சத்தில் தெரிந்தது.
– ஏப்ரல் 2012