மலைக்கண்ணன்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2022
பார்வையிட்டோர்: 3,878 
 
 

எங்கு நோக்கினும் மலைகள்.மலைகள்…மலைகள்.!

நீலம், இள நீலம், கருநீலம், பச்சை, கருப்பு..!

அச்சுதனுக்கு அந்த மலைகளெல்லாம் கண்ணனாகவே தெரிந்தது…!

எந்தக் கண்ணன்? சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாதான்..!

கண்ணன் நீலவண்ணன்..!

“கண்ணா! கருமை நிறக் கண்ணா..!”..பாடிவைத்தான் ஒரு கவிஞன்.

“காக்கைச் சிறகினிலே நந்தலாலா..நின்றன் கரிய நிறம் தோன்றுதய்யே!” என்று பாரதியாரால் பாடப்பெற்றவன்.

‘பச்சைமாமலைபோல் மேனியனாக’ காட்சி தருகிறான் தொண்டரடிப்பொடியாழ்வாருக்கு.

அச்சுதனுக்கோ அவன் எல்லா வண்ணத்திலும் சுற்றிலும் காட்சி தருகிறான்.. அவன்தான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான்.

கண்ணனை தெய்வமாக ஒரு போதும் அவன் நினைத்துப் பார்த்ததே இல்லை.

அந்த இடையர் குலச் சிறுவனுக்கு அவன் தோழன்..நல்லாசிரியன்..!

‘கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக் குலுங்கிடச் செய்திடுவான் – மனஸ்தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி்
தளர்த்திடச் செய்திடுவான் – பெரும்ஆபத்தினில் வந்து பக்கத்திலே நின்று
அதனை விலக்கிடுவான் – சுடர்த் தீபத்திலே விழும் பூச்சிகள் போல் வரும்தீமைகள் கொன்றிடுவான்.’

அச்சுதன் இடையர் குலத்தைச் சேர்ந்த பழங்குடி இனச் சிறுவன்..! பத்து வயது நிரம்பாத பாலகன்..கருநிற வண்ணத்தான்…!

கருவண்டுக் கண்களில் விழும் சுருண்ட முடியை ஒதுக்கி விட்டுக் கொண்டு புல்லாங்குழலில் கீதம் இசைக்கும் போது ‘ இவன் ஏன் கண்ணனாய் இருக்கக் கூடாது??’ என்று தோன்ற வைப்பவன்….

அவனே மூங்கில் குழாயில் துளையிட்டு செய்து கொண்ட புல்லாங்குழல்.

காலையில் மாடுகளுடன் புறப்பட்டால் பொழுது சாயும்வரை காட்டிலுள்ள மூலை முடுக்கெல்லாம் சுற்றித்திரிபவன்.

அவனுக்கு கண்ணனைப் பரிச்சயம் செய்தது அன்னை குயிலி தான்.

அது ஒரு சுவாரசியமான கதை…!

குயிலி என்ற பெயர் அவளை விட வேறு யாருக்கு பொருந்தும்?

அவள் பாட ஆரம்பித்தால் அந்தக் குயிலும் கூட வெட்கித் தலைகுனியும்.

சின்னப் பெண்ணாயிருக்கும்போதே எல்லா நடனக் கூட்டத்திலும் குயிலி கண்டிப்பாக இருப்பாள்.

அவள் மயில் போல ஆடவும் செய்வாள்..

இடையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாட்டத்தில ஆசையுள்ளவர்கள்.

பௌர்ணமி இரவுகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து பறையடித்து பாடும் பாடல்கள் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்.

“களங்கண்ட ராசாவே ஆமேரே!
பெருமிடுக்கு ராசாவே ஆமேரே!
காலடி வதனா ஆமேரே!
ஒய்யாரி வதனா ஆமேரே!”

கூட்டத்தில் குயில் குரல் தனித்து ஒலிக்கும்.. எல்லோருக்கும் செல்லப் பிள்ளை…

மாடனுக்கு சின்ன வயசிலிருந்தே அவள் மேல் ஒரு கண்..ஆளாகாக் காத்திருந்து தூக்கி வந்து தன் துணையாக்கிக் கொண்டான்.. அவள் மேல் உயிரையே வைத்திருந்தான்..

குயிலி குழந்தையிலிருந்தே அப்பனுடன் மாடு மேய்க்கப் போவாள்.. மாடுகள் கண்ணன் குழலுக்கு கட்டுப்படுவதுபோல இவளது குயில் குரலுக்கு கட்டுப்பட்டு எங்கிருந்தாலும் அந்தி மயங்கும் பொழுதில் இவளிடம் அடைக்கலமாகி விடும்.

திருமணம் ஆனதுமே மாடனிடம் சொல்லிவிட்டாள்.

”மாமாவ்..என்ன சுதந்திரமா விட்டுப் போடு..எனக்கு வீட்டுக்குள்ளாற ஒரு நிமிசம் இருக்க முடியாது..நானு மாடு மேய்க்கப் பொறந்தவ மாமோவ்…!

காலல கெளம்புறவ பொழுதுசாஞ்சுதான் திரும்புவேன்..

ஆமா!! சொல்லிப்போட்டேன்.. வீட்டு சோலி அம்புட்டும் நீதான்..சம்மதமுன்னா கூட்டிக்கிடு..!

மாடனுக்கு இந்த ஏற்பாடு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.ஏனென்றால் அவன் வேட்டைப் பிரியன்.மான்கறி சமைத்தால் காடே மணக்கும்.. வீட்டுக்குள் என்ன வேலையிருந்தாலும் சுணங்க மாட்டான்…

குயிலி அச்சுதன் பிறந்ததும் ஆறுமாதம் தான் வீட்டிலிருந்தாள்..

இடுப்பில் குழந்தையைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிடுவாள்.

ஒரு வயதிலேயை அச்சுதன் “ஹை! ஹை!” என்று மாடுகளை மிரட்டுவான்..

குயிலி மடியில் படுத்துக் கொண்டு கதை கேட்டுக் கொண்டே உறங்கி விடுவான்…

இப்போது பத்து வயது பாலகனாய் தனியாக மேய்ச்சலுக்கு கிளம்பி விட்டான்..

ஒரு நாள் புலி உறுமும் சத்தம் கேட்டு மாடுகளை திரட்டிக்கொண்டு மூச்சிரைக்க வீடு திரும்பினான்..

அவனை அணைத்துக்கொண்டு குயிலி சொன்ன கதைதான் ‘நாச்சியம்மையின் கதை..’

“அச்சுதா.!! எனக்கு அப்போ பதிமூணு, பதினாலு வயசிருக்கும்.காட்டுக்குள்ள மாடுகள அவுத்துவிட்டுப்போட்டு பாறைமேல ஏறி நின்று சுத்துமுத்தும் பாத்துக்கிட்டிருந்தேனா..?

வடக்கால புலி உறுமுற சத்தம் கேட்டிச்சு..அங்கால புலியப் பாத்ததா ஒண்ணு , ரெண்டு சனம் சொல்லியிருக்கு .. நான் நம்பல.. அன்னைக்கு எங்காதால கேட்டேபுட்டேன்…

கிட்டத்தால நெருங்கி நெருங்கி வருது.. கொரலுதான்.. நான் புலியப் பாக்கல.அம்புட்டு தெகிரியம் எனக்கு சத்தியமா இல்ல..!

வெரசா மாடுகள பத்திக் கிட்டு வீடு வந்து சேந்ததே உம்பாடு,எம்பாடுதான்….!

ஊருக்குள்ள எம்பேச்சே பெரும்பேச்சா போச்சு.

நம்ப பெரியாத்தா காளியம்மாதான் நாச்சியம்மா கதயச் சொன்னவுக..

“நாச்சியம்மான்னு சத்தியத்துக்கு கட்டுப்பட்ட பசு ஒண்ணு ஒரு புலி கிட்ட மாட்டிகிடுச்சாம்..நானு போயி என்னோட கன்னுக்குட்டிக்கு பாலக் குடுத்துபோட்டு உடனே கண்டிப்பா திரும்ப வரேன்னு ‘ போச்சாம்..!

”அம்மா! உன்ன விட்டா யாரு எனக்கு இருக்கா? யாரு மடில பாலக்குடிப்பேன்னு!” கன்னுக்குட்டி கதறுதாம்..!

ஊருல உள்ள மாடுங்கள பாத்துக்கச் சொல்லிப்போட்டு புலிகிட்ட திரும்பி வந்திச்சாம்..

“நீ உம்மையாலுமே சத்திய வாக்க மீறாம வந்திருக்க…உன்னிய நான் கொல்லமாட்டேன்.அந்தப்பாவம் எனக்கு வேண்டாம்..” ன்னு புலி திரும்ப காட்டுக்கு போயிரிச்சாம்.

நாச்சியம்மா ஆச தீர கன்னுக்குட்டிக்கு முட்ட முட்ட பாலக்குடித்திச்சாம்.

இடையனுக்கு எல்லாமே வெளங்கிட்டுது.

அந்த சின்னக்கண்ணன வணங்கவேணுமின்னு சொல்லவே , எல்லா மாடுகளும் ‘சத்தியமே பகவான்’னு தலையாட்டி கும்பிட்டுதாம்!

அச்சுதா..எப்பம் பயம் வந்தாலும் அந்த சின்னக் கண்ணன நெனச்சுக்க..உனக்கு காவலுக்கு வந்து நிப்பான்..”

அம்மா சொன்னது அச்சுதன் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

கண்ணன் அவன் காவலனானான்.

இப்போதெல்லாம் கண்ணன் புலியை நினைத்து பயப்படுவதேயில்லை.. அவனது தோழன் கண்ணன்தான் கூடவே வருகிறானே!

ஒருநாள் தன்னைமறந்து குழலூதிக்கொண்டிருந்தவன் இருட்டிப்போனதை உணரவில்லை.

வீடு திரும்பும்போது தான் கவனித்தான்..பேச்சியைக் காணவில்லை.அது இளம் கன்று! பயமறியாமல் எங்காவது போய் புலியிடம் மாட்டிக் கொண்டு விட்டதோ?

எல்லா மாடுகளையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு பேச்சியைத் தேடித்தேடி மலயடிவாரத்துக்கே வந்து விட்டான்.

அந்த ஊரை அவன் இதற்குமுன் பார்த்ததேயில்லை… எங்கும் புதிய மனித முகங்கள்!

தூரத்தில் ஒரு சின்ன கோபுரம்!

ஒரு பலகையில் குழலூதும் கண்ணனின் ஓவியம்!…ஆடை ஆபரணங்களோடு! ஒரு அம்புக்குறி!

பக்கத்தில் நிற்கும் பாட்டியிடம் விவரம் கேட்டான்.

அது ஒரு கிருஷ்ணன் கோவில்..அந்த கிராமத்தில் உள்ள அந்தணர்களுக்கு சொந்தமானது.. யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி இல்லை.

நேரம் போய்விட்டது.. பாவம் பேச்சி! எங்கே போயிருக்கும்..?

மூச்சிரைக்க வீடு வந்தவனை ‘ம்ம்மா!’ என்று வரவேற்றவளே பேச்சி தான்..!

கழுத்தைக் கட்டிக் கொண்டு பொய்க்கோபம் காட்டினான்.

நடந்த அதிசயத்தை அம்மாவிடம் கூறினான்…!

“அச்சு..! என் ராசா! நாமெல்லாம் அங்க போகக்கூடாது மவனே!”

“அம்மா! நம்ம கண்ணனுக்கு கோவிலாம்! நாம ஏன் போகக்கூடாது?”

“அச்சுதா! அது அப்படித்தான்! என் சொல் மீறி போயிடாதப்பா..!”

அன்றிலிருந்து அச்சுதன் மாறிப்போனான்..

தூக்கத்தில் அந்த கண்ணன் ‘வா!வா!’ எனறழைத்தான்..

என் கண்ணனைப் பார்க்கக் கூடாது என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை!? நான் அவனை பார்த்தே தீருவேன்!

ஒருநாள் இரண்டு மூன்று நண்பர்களைக் கூட்டிக் கொண்டு அப்பா, அம்மாவிடம் சொல்லாமல் மலையடிவாரத்துக்கு வந்துவிட்டான்…!

நேராக கோவில் காட்டிய திசையில் நடந்தார்கள்.

உள்ளே போனதும் ஒரு பெரிய குளம்.. இரண்டு மாடுகளை குளிக்க வைத்துக் கொண்டிருந்தார் ஒருவர்….!

“தம்பிகளா..உள்ள போவாதீங்க..! இன்னைக்கு பெரிய பூச நடக்குது…வந்த வழிக்கு போயிருங்க..!”

நாலு பேரும் காதில் வாங்காமல் மேலும் நடந்தார்கள்.

அப்போதுதான் பூஜை முடிந்து எல்லோரும் சாப்பிட போயிருப்பார்கள் போலிருந்தது..அந்த பெரிய அறையில் அலங்கார பூஷணனாய் கண்ணன்.. மட்டும்!!!

இதுபோன்ற கண்ணனை அச்சுதன் கனவிலும் கூட கற்பனை செய்ததில்லை.!

அவனுடைய கண்ணன் இடையன்.ஒரு துண்டுத்துணி மட்டுமே இடையில்.

அதற்குள் பேச்சுக்குரல் கேட்கவே உள்ளே நுழைந்து விட்டார்கள்..!

இலைபோட்டு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தனர் அந்தணர்கள் சிலர்.

காலியாயிருந்த இலைகள் முன்னால் போய் அமர்ந்து கொண்டார்கள்.

பரிமாற வந்த ஒரு பெரியவர் அவர்களைப் பார்த்து, “சாம்பு!யாரு இவாள உள்ள விட்டது..? அபச்சாரம்! பெரியவருக்கு தெரிஞ்சா நீயும் நானும் வெளில போகவேண்டியதுதான்…?

உட்கார்ந்த குழந்தைகளை எப்படி எழுப்புவது…?

“குழந்தைகளா! நீங்க இங்க உக்காரப்படாது! வெளில வாங்கோ..! பொட்டலத்துல மடிச்சு வாங்கிண்டு போங்கோ..! சாம்பு! இவாளுக்கு நாலு அப்பமும், வடையும் ஒரு இலைல பொதிஞ்சு குடு..!”

அச்சுதனுக்கு அவர்கள் பேசியது ஒன்றுமே புரியவில்லை.. ஆனால் ஒன்று தெளிவாகப் புரிந்தது… அவர்கள் அங்கு இருக்கக் கூடாது..!!”

கோபம், ஆத்திரம், அவமானம், எல்லாம் ஒன்றாக திரண்டு அவனை இலையிலிருந்து எழுப்பி விட்டது !!!!

“வாங்கடா! போவலாம்!”

“அம்பிகளா! இத வாங்கிண்டு போங்கோ…!”

நேராக வீடு திரும்பினவன் அம்மா மடியில் தலை வைத்து படுத்தான்.

ஒரு சொட்டு கண்ணீர் கூட இதுவரை அவன் கண்களிலிருந்து விழவில்லை!

***

“அம்மா! கண்ணன் நம்மப்போல மாடு மேய்க்கிறவன்தானே! நமக்குத்தானே சொந்தம்…சொல்லும்மா!”

அம்மாவைப் பிடித்து உலுக்கினான்.

“அச்சுதா! அவன் இந்த உலகத்துக்கே சொந்தம்!! நீதானே அந்தக் கண்ணன்! அவன்தான் நீ!

படித்தவர்களுக்கு ஆயுட்காலம்முழுவதும் எடுத்துக் கொண்டாலும் புரியாத தத்துவம். குயிலுக்கு புரிந்துவிட்டதே!

ஆனால் அச்சுதன் மனதில் ஒரு வைராக்கியம்..!

அம்மா கொஞ்ச நாள் மாடுங்கள நீ ஓட்டிகிட்டு போ! எனக்கு முக்கியமான வேலை ஒண்ணு கெடக்குது!

குயிலியும் அவன் போக்கிலே அவனை விட்டு விட்டாள்..!

இப்போதெல்லாம் மலையில் புல்லாங்குழல் ஓசை கேட்பதில்லை..பதிலாக உளிச்சத்தம் காடெங்கும் எதிரொலித்தது..

சரியாக மூன்று மாதங்கள்.!

“அம்மா! அப்பா! இங்க வந்து பாருங்க!”

அழகான குழலூதும் கண்ணனின் சிலை… இடையில் ஒரு அரையாடை.

மலைமேல் தெய்வமானான் அச்சுதனின் கண்ணன்…!

மிக விரைவிலேயே கண்ணன் அந்த மலைவாழ் மக்களின் குலதெய்வமானான்…!

அதிகாலை எழுந்து கோவிலை சுத்தம் செய்து கண்ணனுக்கு ஒரு துளசிமாலையைக்கட்டி கழுத்தில் அணிவித்து, குழலை எடுத்து ஒரு அமுத கீதம் இசைத்து விட்டுத்தான் மாடுகளை ஓட்டிச் செல்வான் அச்சுதன்!

அவன் இப்போது இருபது வயது இளைஞன்….

மலைவாழ் மக்களைத் தவிர இப்போது அக்கம் பக்கம் இருக்கும் ஊர்களிலிருந்து பக்தர்கள் வர ஆரம்பித்து விட்டனர்…

ஒரு நாள் அந்தணர்கள் கூட்டம் ஒன்று…. கையில் பெரிய கூடைகளில் பழங்கள்…. மாலைகள்…!

“பொண்ணுக்கு கல்யாணம்.. ரொம்ப சக்தி வாஞ்ச கண்ணன்னு ஊரே பேசறது..! ஆசீர்வாதம் வாங்க வந்தோம்…!!”

அச்சுதன் மனதில் பளிச்சென்று மின்னல் போல ஒரு காட்சி…!

“யாரு இவாள உள்ள விட்டது? அபச்சாரம்..!”

என்ற குரல்!?! ஓங்கி காடே கிடுகிடுக்கும்படி…!

காதை இறுகப் பொத்திக் கொண்டான்..!

“நீங்க எல்லாம் இங்க வரக்கூடாது சாமி! இது எங்க கோயில்..!”

தொண்டைக்குள் இருந்த வார்த்தைகள் வெளியே வர மறுத்தது!

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது சொந்தமன்றோ?

சுதாமன் அவலுடன் , ஆவலுடன் கண்ணனைப்பார்க்க வந்தபோது அவனை நேராக அரண்மனைக்குள் அழைத்துச் சென்று , ஒரு அவல் விடாமல் அள்ளித் தின்றவனல்லவா அந்த மாயக் கண்ணன்!!!!

இவர்களை நான் விரட்டிவிட்டால் அது தர்மமா?

“வாங்க சாமிகளே!” போய் ஆச தீர கண்ணன கும்புட்டுப் போங்க…!”

அவன் பேசவில்லை..அவனுக்குள் இருக்கும் கண்ணனின் குரலல்லவா இது ..!

“நாலு குலங்கள் அமைத்தான்- அதை நாசமுறப்புரிந்தனர் மூட மனிதர்!

சீலம் அறிவு கருமம் – இவை சிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்.

மேலவர் கீழவர் என்றே – வெறும் வேடத்திற்பிறப்பினில் விதிப்பனவாம் போலிச் சுவடியை யெல்லாம் – இன்று பொசுக்கிவிட்டால் எவர்க்கும் நன்மையுண்டென்பான் பாரதி…!

இப்போது அச்சுதன் மனம் மிகவும் சாந்தமாகிப்போனது..

குயிலி கூறியது போல அவனும் கண்ணனும் வேறல்ல!

புரியாதவர்களுக்கு புரியாமலே போகட்டும்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *