மறுமலர்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 14, 2023
பார்வையிட்டோர்: 1,502 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நோன்புப் பெருநாள் நெருங்கி விட்டதைக் குறிக்கும் வாழ்த்துக் கார்டுகள் வந்து தபால் பெட்டியில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. வேலை முடிந்து வீடு திரும்பிய ரெஜினா அவை அனைத்தையும் அள்ளி எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்து கையிலிருந்தவற்றை மேசைமேல் போட்டுவிட்டுக் களைப்போடு சோபாவில் அமர்கிறாள்.

அவள் போட்ட கார்டுகளில் சில மேசையில் இருந்து சிதறிக் கொண்டு வந்து அவள் காலடியில் விழுகின்றன. குனிந்து அவற்றை எடுக்கிறாள். வானவில்லின் வண்ணக் கலவைகளாய்க் கண்சிமிட்டும் கார்டுகளை ஒவ்வொன்றாய்ப் பிரிக்கிறாள். அதனுள்ளே அடங்கியுள்ள வாசகங்கள், சித்திரங்கள் கூறும் செய்திகளினால் மனம் பரவசமடைகிறது.

எத்தனை துயரம் மனதில் இருந்தாலும் நோன்புத் திருநாளை நினைக்கும் போது ஏற்படுகின்ற பரவசம் எல்லையற்ற ஒன்றாயிற்றே! காலத்தால் மறக்க முடியாத அந்த இனிய நினைவுகள் கடல் அலைபோல் அடுக்கடுக்காய் வந்து புரள…

இறுதியாக ஒரு குதூகலமான நோன்புப் பெருநாள் வந்தது. அது அவளின் மணவிழா முடிந்து மாமியார் வீடு சென்ற முதல் வருடம் வந்த தலை நோன்பு! அவள் ஆயிரமாயிரம் கற்பனைகளோடு எதிர்பார்த்திருந்த நோன்புத் திருநாள்.

அம்மாவும் அண்ணனும் சீர் கொண்டுவந்தார்கள். அத்துடன் அண்ணன் தன்னுடைய பால்ய நண்பனும் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருப்பவனுமான உசேனையும் அழைத்து வந்திருந்தான்.

தத்தித் தளர்நடை பயின்ற போதே கைப்பிடித்து நடந்த நண்பன்.

உள்ளத்தால் ஒரு குழந்தை போன்றவன். நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருந்தான். அவனுக்கே அதிக வியப்பாய் இருந்தது. ரெஜினாவின் அறிவு வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் அவனை வியக்க வைத்தன. நீண்ட நேரம் அவளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். மற்றவர்களைவிட அவனுக்காக அவள் எடுத்துக் கொண்ட அக்கறையும் கரிசனமும் அவள் கணவனுக்கும், மாமியாருக்கும் வெறுப்பையும் வேதனையையும் தந்தன. மௌனமாய் இருந்தார்கள். வந்தவர்கள் புறப்படத் தயாரானர்கள். உசேன் அப்போதே பிரியா விடை சொல்லிக் கொண்டான். மறுபடியும் சந்திக்க ஆண்டுகள் ஐந்தாகும் என்றான். கண்களில் நீர் மல்க அவனது கரங்களில் முத்தமிட்டு அனுப்பி வைத்தாள் ரெஜினா.

அன்றைய மாலைப் பொழுதே அவளது சந்தோஷமான வாழ்க்கையின் கடைசி நாளாக இருந்தது. தாயும் பிள்ளையும் சேர்ந்து கொண்டு அவளை வார்த்தைகளால் கொன்றார்கள். அவள் அடக்கமில்லாதவள் என்று பழித்துக் கூறினார்கள். குடும்பத்திற்குப் பொருத்தமில்லாத பெண் என்று கூறி அவளுக்குத் “தலாக்” சொல்லி அம்மா வீட்டுக்கே அனுப்பி வைத்தார்கள். மறுமொழி பேசாமல் தாய்வீடு திரும்பினாள்.

அண்ணனும் அம்மாவும் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் தனக்கென்று ஒரு வேலையையும் தேடிக் கொண்டு வாடகை வீடொன்றில் தனியளாய்க் குடியேறினாள். மணவாழ்வில் ஏற்பட்டுவிட்ட ரணம் மனதை வேதனைக்குள்ளாக்கி இருந்தாலும், அவளுக்குள் முகிழ்த்தெழுந்த தன்னம்பிக்கை அவளையே ஒரு புதுப் பிறவியாக மாற்றி விட்டது.

போகாத பொழுதையெல்லாம் தன் அறிவின் துணைகொண்டு விரட்டியடித்தாள். மாத வருமானம் தரும் உத்தியோகம் என்பது மட்டுமின்றி, தினந்தோறும் மனதுக்கு இதந்தரும் மழலைகளின் அன்புரையாடலும் அவளை நிமிரவைத்தன. காலவெள்ளத்தில் வெகு வேகமாய் அடித்துச் செல்லப்பட்டு விட்ட ஐந்தாண்டுகள் அவள் மனதில் ஒரு நிழற்படமாய் மட்டுமே நிலைத்திருந்தது. மற்றச் சுவடுகள் எதுவுமே இல்லை. ஆனால் உசேன் மட்டும் அவளை மறக்கவே இல்லை. அயல் நாட்டிலே இருந்தாலும் அவளது அண்ணன் வழியாக அவளுக்கு ஏற்பட்டுவிட்ட கஷ்டங்களைத் தெரிந்து கொண்டான். அவளுக்குக் கொடுமை செய்த அந்தக் குடும்பத்தின் மீது எல்லையில்லாத கோபமும் வெறுப்பும் கொண்டான். தனது கல்விக் காலம் முடிந்ததும் நேரடியாக அவர்களின் வீட்டிற்குச் சென்று நாலுவார்த்தை ரோஷம் வருகிற மாதிரி கேட்டு விட்டு வரவேண்டும். ரெஜினா மீது தான் வைத்துள்ள அன்பின் ஆழம் என்ன என்பதை அவர்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தான்.

அந்த நேரமும் வந்தது. அதே நேரத்தில் நோன்பும் வந்தது. தன் பெற்றோர்களைப் பார்க்கவும், நண்பர்களைச் சந்திக்கவும் பிறந்த பூமியிலேயே உத்தியோகம் தேடிக் கொள்ளும் எண்ணத்துடன் திரும்பினான். அவனைப் பார்த்ததில் பெற்றோர்களுக்கு அளவு கடந்த ஆனந்தம். அல்லாஹுவின் நல்லருளால் தங்கள் பிள்ளை வளமோடும் நலமோடும் நாடு திரும்பியதை முன்னிட்டு உறவுகளையும் நட்புகளையும் அழைத்து விருந்து நடத்த ஏற்பாடுகள் செய்தார்கள்.

உசேன் தன் தாயிடம் கேட்டுக் கொண்டு ரெஜினாவின் வீட்டுக்குப் போனான். அங்கே ரெஜினாவின் அம்மா அவனை அன்போடு வரவேற்றார்கள்.” அடக்கமும் அன்பும் எளிமையும் நிறைந்த இந்தப் பிள்ளைக்கு நல்ல ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடு யா அல்லாஹ்” என்று கையேந்தித் “துஆ” கேட்டுக்கொண்டார்கள். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டபோது ரெஜினாவின் அண்ணன் இக்பால் வந்தான்.

நண்பர்கள் இருவரும் ஒருவரையொவர் ஆரத்தழுவிக் கொண்டார்கள். கடந்த காலத்தில் நடந்து விட்ட சம்பங்களைப் பற்றி விவாதித்தார்கள். நீண்ட விவாதத்திற்குப் பின் உசேன் ஒரு முடிவோடு புறப்பட்டான். அவனது கால்கள் நேராக ஜமிலாவின் வீட்டை நோக்கி நடந்தன. அது மாலை நேரமாகையால் வீட்டில் ஜமிலாவும் ரெஜினாவின் கணவன் லத்தீப்பும் வீட்டில் இருந்தார்கள். வீடு முழுவதும் விளக்குகள் ஒளி சிந்திக் கொண்டிருந்தன. நிசப்தம் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. லத்திப்பின் கார் வாசலில் கிடந்தது. உசேன் அழைப்பு மணியை அழுத்திய சிறிது நேரத்தில் ஜமிலாவே மெல்ல நடந்து வந்து கதவைத் திறந்தார்.

‘அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொன்ன உசேனைப் பார்த்ததும் அவருக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்துப் பேச நா எழவில்லை. கை குவித்து வஅலைக்கும் ஸலாம் சொல்லி உள்ளே அழைத்தார். மௌனமாய் வந்து உசேன் இருக்கையில் அமர்ந்தான். நீண்ட மௌனத்தை அவனே கலைத்தான்.

“லத்தீப் இல்லையா அம்மா… வீடு அமைதியாக இருக்கிறது…! அம்மா ஏன் முகம் வாடியிருக்கிறீர்கள். உடல் நலமில்லையா?’ என்று கேட்டான். அவன் விசாரிப்புக்காகவே காத்திருந்தது போல் ஜமீலா தன் சோகக் கதையைக் கொட்டி அழ ஆரம்பித்து விட்டாள். அவர் சொன்ன கதையைக் கேட்டு அவன் அதிர்ந்து போனான். மேல்மாடிக்குச் சென்று படுக்கையில் இருந்த லத்தீப்புக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வீட்டுக்குத் திரும்பினான்.

வழி நெடுக மனதில் புதுப்புதுத் திட்டங்கள் உருவாகிக் கொண்டிருக்க அதைச் செயல்படுத்தும் முறையையும் மனதிலேயே முடிவு பண்ணிக் கொண்டான். விருந்துக்கு நண்பர்கள் உறவினர்களை அழைக்கச் செல்லும் போது ரெஜினாவையும் போய்ப் பார்த்து விட்டு அவளையும் விருந்துக்கு அழைக்க விரும்பினான். அப்படியே அவள் வீட்டுக்கும் சென்றான். வசதியாகப் பிறந்து வசதிகள் நிறைந்த வீட்டில் வாழப் புகுந்து… இப்போது எளிய வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும் ரெஜினாவின் வீட்டை அடைந்ததுமே மனதுக்குள் ஒருவித சந்தோஷம் வந்து ஆட்டம் போட்டது. சின்னஞ்சிறு வயதில் கைப்பிடித்து நடைபயின்ற தோழி ஆயிற்றே! எப்படி வாழ்ந்தாலும் எங்கே இருந்தாலும் அந்தப் பால்மணம் மாறாத பசுமை நினைவுகள் மனதை விட்டுப் போய் விடுமா என்ன?

பேரங்காடியில் வாங்கிய வண்ண மலர்க் கொத்துடன் அந்த வீட்டின் முன் நின்று ‘அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொன்னபோது முகத்திரை நீக்கிய முழுநிலவு ஒன்று “வஅலைக்கும்” மறு ஸலாம் சொல்லி கதவைத் திறந்தது.உசேன் முகம் மலர்ந்து கைகளில் இருந்த மலர்க்கொத்தை வாஞ்சையோடு நீட்டினான். அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய்க் கண்கள் மலர அவள் அதை வாங்கினாள்.

“வாங்க… வாங்க…” என்று முகமும் அகமும் மலர அவனை வரவேற்றாள்.

“என்ன அதிசயம் இது ! நான் இதை எதிர்பார்க்கவே இல்லையே… எப்ப வந்தீங்க? வீட்ல எல்லாரும் சௌக்கியமா? பயணமெல்லாம் நல்லாயிருந்துச்சா?’

என்று கொஞ்சமும் வாஞ்சை குறையாமல் பேசினாள். அவன் அசந்து போனான். அவளின் வாழ்க்கைப் பிரச்சினைகளின் பாதிப்பை அவளிடம் காணமுடியவில்லை. இயல்பாக இருந்தாள். உடம்புதான் மெலிந்து காணப்பட்டது.

“எப்படி இருக்கே ரெஜினா…! நான் எல்லாத்தையும் கேள்விப்பட்டேன். அவங்க அவசரப்பட்டுட்டாங்கன்னு நெனைக்கிறேன்.

அவள் அவனுக்குக் குடிப்பதற்குச் சுவைநீர் கொண்டு வந்து வைத்தாள்.

“யாரைச் சொல்லி என்ன பிரயோசனம்? எல்லாம் என் தலையில எழுதின மாதிரிதானே நடக்கும்.” அவள் குரலில் சோகம் இருந்தது. உசேன் நெகிழ்ந்து போனான். ஒரு காலத்தில் எப்படி எல்லாம் பேசுவாள். உற்சாகம் ததும்பும் அவளது குரலைக் கேட்கும் போதெல்லாம் இனிய சங்கீதம் கேட்பது போலல்லவா இருக்கும். அந்த ரெஜினா தானா இவள்? மனதுக்குள் கேள்வி எழ அமைதியாய் அவளைப் பார்க்கிறான்.

“அவரவர் செயலுக்குத் தகுந்த தண்டனையை அல்லாஹ்வே வழங்குவான் ரெஜினா! நயவஞ்சகமா உன்னோட வாழ்க்கையைக் கெடுத்தவுங்களுக்கு இப்ப நல்ல தண்டனை கெடைச்சிடுச்சி, ஒவ்வொரு மணித்துளியும் ரத்தக் கண்ணீர் வடிச்சிக்கிட்டு நாட்களை ஓட்டிக்கிட்டிருக்காங்க… உன்னோட சந்தோஷத்தை, உன்னோட நிம்மதியைக் கெடுத்தவுங்களை இப்ப நீ போய்ப்பார்த்தா இப்படிப்பட்ட வார்த்தைகளை நீ பேச மாட்டே…”

ரெஜினா அவன் வார்த்தைகளால் நிமிர்ந்தாள். கண்கள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க அவன் அடுத்து என்ன சொல்லப் போகிறான் என்று மனம் தவித்தது.

நீ ஒழுங்கில்லாத பொண்ணுன்னு சொல்லிட்டு ஒரு அடக்கமான பொண்ணை உன் புருஷனுக்கு திருமணம் செய்து வெச்சதுக்கு நல்லா அந்த அம்மா அனுபவிச்சிட்டாங்க, அந்தப் புது மருமக அவுங்கள ஒரு வேலைக்காரியாவே மாத்திடுச்சு. தகாத வார்த்தைகளால் திட்டி சித்திரவதை பண்ணிடுச்சு… பணமும் பகட்டுமா வந்த பொண்ணு புருஷனையும் சும்மா விட்டு வைக்கல… தன் விருப்பத்துக்குச் செலவு செய்ய புருஷன பணம் கேட்டுத் தொந்திரவு பண்ணியிருக்கு. மனைவியின் தேவைக்குப் பணம் கொடுக்க முடியாத புருஷன் வேலை செய்ற இடத்தில கையாடல் பண்ணிட்டான். ஜெயிலுக்குப் போக வேண்டியதாச்சு. இப்ப தான் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் அறிவு வந்திருக்கு. உனக்குச் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கெடைக்குமான்னு அல்லாஹ்விடம் கையேந்தி “துஆ” கேட்டு நிக்கிறாங்க உன்னோட புருஷனும் ரொம்ப பாதிக்கப்பட்டுக் கெடக்கிறான். உன்னை நேர்ல பார்த்து உன்கிட்டே மன்னிப்பு கேட்கக் காத்திருக்கான். சொல்லப் போனா ஒரு நடைப்பிணமாயிட்டான் ரெஜினா… வாழ்க்கையில இன்பமோ துன்பமோ லாபமோ நஷ்டமோ அது எதுவும் நம்ம கையில இல்லே ரெஜினா!

நமக்கு மேலே உள்ள சக்தி அல்லாஹ் போதுமானவன்… அவன் மனசு வெச்சு நமக்கு எதைக் கொடுக்கணுமின்னு நினைக்கிறானோ அதை யாராலும் தடுக்க முடியாது. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் முடிவு பண்ணியிருக்கிற வாழ்வு உனக்கு ஒண்ணு இருக்கு ரெஜினா… மனக்கவலைகளைத் தூக்கிப் போட்டுட்டு நீ என் வீட்டு விருந்துக்கு வரணும். அந்த விருந்து நிகழ்ச்சி உனக்கும் எங்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதா நிச்சயம் இருக்கும்.

உசேனின் முகத்தை அமைதியாய்ப் பார்த்து மென்மையாய்ப் புன்னகைத்தாள் ரெஜினா. அவளது புன்னகையும் முகமலர்ச்சியும் அவனுக்குச் சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் அளித்தன. அவள் கொடுத்த காப்பியுடன் அவளது இசைவையும் பெற்றுக் கொண்டு விடை பெற்றான். வாசல் வரை வந்து வழியனுப்பினாள் ரெஜினா. கையசைத்து விடை கொடுத்தபோது மனம் லேசாய் அசைந்தது.

அவன் எதற்காக இப்படியெல்லாம் பேசினான். என்ன முடிவை மனதில் வைத்திருக்கிறான், என்ற கேள்விகளோடு தனது அடுத்த பணிகளில் ஈடுபட்டாள். மாலை நேரத்தில் விருந்து நடைபெறும் இடத்திற்குச் செல்வதற்காக அண்ணனுக்குத் தொலைபேசி வழித் தொடர்பு கொண்டாள். அவர்கள் வந்து அழைத்துப் போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.

முடிந்தவரை எளிமையாகவும் அழகாகவும் தன்னை அலங்கரித்துக் கொண்டு வீட்டை நன்றாகப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக்கொண்டாள். தன் வீட்டை விட்டு இறங்கி வாசலில் நின்றாள். அண்ணனும் அம்மாவும் வந்தார்கள். அவர்களுடன் காரில் ஏறிக் கொண்டாள். அம்மாவும் அண்ணனும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறிமாறிப் பார்த்துக் கொண்டார்கள். ரெஜினாவின் முகமலர்ச்சியும் அவளது அலங்காரமும் அவர்கள் மனதை நனைத்திருக்க வேண்டும். இருவர் முகத்திலும் தெம்பு தெரிந்தது.

கார் உசேன் வீட்டை அடைந்ததும் மூவரும் ஒன்றாகவே நுழைந்தார்கள். உசேன் ஓடி ஓடி வரவேற்றுக் கொண்டிருந்தான். இவர்களின் வரவு அவனுக்கு அதிக உற்சாகத்தைத் தந்தது. ஆர்வமாய் ஸலாம் சொல்லிக் கை கொடுத்து அழைத்துப் போய் முக்கிய விருந்தனர்களின் இடத்தில் அமரவைத்து விட்டு அங்கிருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்த லத்தீப்பையும் அவன் தாயையும் கைப்பிடித்து அழைத்து வந்து புதிய நபர்களைப் போல அறிமுகப்படுத்துகிறான்.

ரெஜினா பயமும் அதிர்ச்சியுமாய் அவர்களையே பார்க்கிறாள். லத்தீப் அவளை நேராகப் பார்க்கவே வெட்கப்பட்டான். அவனைப் பெற்றவளும் கூனிக்குறுகி நின்றாள். சிறிது நேரம் மௌனத்தில் கடந்தபின் உசேன் ரெஜினாவின் அண்ணனுடன் பேசினான். “லத்தீப் தன் தவறுக்காக வருந்தினான். ரெஜினாவிடம் மன்னிப்புக் கேட்டான். அவசரப்புத்தியினால் வாழ்க்கையை அசிங்கப் படுத்தி விட்டேன். என் தவறுக்கு அல்லாஹ்வே என் மறுமணத்தின் மூலம் பாடம் கொடுத்து விட்டான்! இனி என் உயிர் பிரிந்தாலும் உன்னை நான் பிரியமாட்டேன்” என்றான்.

ரெஜினாவுக்குத் தன் அருமை நண்பனின் அன்புள்ளம் அப்போது தான் புரிந்தது. ஐந்தாண்டுகளுக்கு முன் தன்னால் பிளவுப்பட்ட அந்தக் குடும்பத்தைத் தானே முன்னின்று சேர்த்து வைக்கவே இந்த விருந்துக்கு அவன் அவர்களையும் தன்னையும் அழைத்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டாள். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளும் நாட்டமும் இதுவானால் அதை மறுக்க முடியுமா என்றாள் மென்மையாய். ! விருந்து உபசாரத்துக்கு வந்திருந்தவர்கள் அவர்களின் மணநாளை ஏற்பாடு செய்தார்கள். ஒரு நோன்புப் பெருநாளிலே விழிநிறைந்த கண்ணீரிலே தன் வாழ்வைப் பறிகொடுத்தவள், இன்னொரு நோன்பிலே மீண்டும் அதனைத் திரும்பவும் பெற்றதை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

பால்ய நண்பனின் பவித்திரமான அன்பின் பரிசாய் விளைந்த அந்தப்புதிய வாழ்க்கை அவள் மனம் வைத்துத் தொடங்கிய நோன்புகளின் மாண்பும், விழித்திருந்து வணங்கி வந்த பிரார்த்தனையும் அவளுக்குச் சொல்லாமல் சொல்லியது.

– ஆர்க்கிட் மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு) , முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002. சிங்கை தமிழ்ச்செல்வம் வெளியீடு, சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *