பள்ளிக்கூடத்தில் சில வேலைகளைக் கவனித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பியிருந்தார் அந்தத் தலைமையாசிரியர்.
ஆஜானுபாகுவான உயரம், முன் வழுக்கை, பின்னால் முடிக்கற்றை பாகவதர் போலப் படர்ந்து தோளைத் தொட்டு இறங்கியிருந்தது. நெற்றியில் சந்தனக் கீற்று, புருவ மத்தியில்
பெரிய குங்கும வட்டம், முழுக்கை வெள்ளைச் சட்டை, வெள்ளை வெளேர் வேட்டி. எதிரில் நிற்பவர்களுக்கு அவருடைய தோற்றமே பயபக்தியை ஏற்படுத்திவிடும்.
டவுன்பஸ் பிடித்து கஞ்சித் தொட்டி முனை நிறுத்தத்தில் இறங்கினார். சற்றுத் தூரத்தில் விளங்கியம்மன் கோயில் தெருவில்தான் வீடு. ஆனால், பஸ்சிலிருந்து இறங்கியவரின்
கண்களில், நிழற்குடை அருகே நின்றிருந்த பெண் பட்டாள். “ஹா!” வென்று மனம் அதிர்ந்தது.
வத்சலாவா? வத்சலாவேதானா அது? இடுப்பில் உள்ளது அவளுடைய குழந்தையா?..
மனசும் பார்வையும் இறுகிப் போன நிலையில், விசுவநாதன் விடுவிடென்று வீதியில் நடக்க ஆரம்பித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் அது நடந்தது.
நாகர்கோயில் வடசேரியில் இருந்த ஒரு பள்ளியில் அப்போது அவர் தலைமை ஆசிரியராக இருந்தார். அங்கும் இப்படித்தான் பள்ளியிலேயே நாளின் பெரும்பகுதி கழியும். செய்யும் தொழிலே தெய்வம் என்பது அவருடைய தாரக மந்திரம்.
ஓர் நெருங்கிய நண்பர்தான் முதலில் அவர் காதில் அந்த வெடிகுண்டை வீசினார், அவர் மகள் வத்சலாவைப் பற்றி.
வீட்டுக்குப் போனதும் மகளிடம் கேட்டார்: “வத்சலா! தாயில்லாத பெண்ணாச்சேன்னு உன்னைச் செல்லமா வளர்த்தேன். ஆனால், காலேஜுக்குப் போறதாச் சொல்லிட்டு யாரோ ஒரு பையன்கூட சுத்தறியாமேம்மா?”
வத்சலா பொங்கிப் பொங்கி அழுதாள். “யாரோ கட்டிவிட்ட கதையப்பா அது. அதை நீங்க நம்பலாமா?” மாலை மாலையாகக் கண்ணீர் விட்டாள்.
விசுவநாதனுக்குத் தெளிவு பிறந்தது. யாரோ வேறு ஓர் பெண்ணைப் பார்த்துவிட்டு நண்பர் தவறாக எண்ணியிருப்பார் என்று நினைத்தார். தன் மகள் தப்புச் செய்ய மாட்டாள் என்று
நம்பினார்.
ஆனால் வத்சலா முன்னைவிட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.
மில் அதிபரான சங்கர் வத்சலாவின் அழகில் மயங்கினான். காரிலேயே இருவரும் சுற்றினார்கள். கண்மூடித்தனமாக இருவரும் காதலித்தார்கள்.
ஒருநாள் – கல்லூரிக்குச் சென்ற வத்சலா வீடு திரும்பவில்லை. விசுவநாதனுக்கு இரண்டு நாள் கழித்து மகளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.
“அப்பா, மனதுக்குப் பிடித்தவரைத் திருமணம் செய்துகொண்டு வாழப் போகிறேன். நீங்கள் கோபக்காரர். அதனால் உங்களிடம் சொல்லி அனுமதி வாங்க முடியாது. எனவே, சொல்லிக்
கொள்ளாமல் கிளம்ப நேர்ந்து விட்டது. மன்னிக்க வேண்டும்… ” இந்த ரீதியில் நாலு பக்கம்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு விசுவநாதன் வீதியில் கம்பீரமாக நடக்க முடியாது போயிற்று. தன் ஒரே மகள் இப்படிச் செய்து விட்டதில் அவள் மீது அவருக்குக் கோபமில்லை. அவளுடைய
இன்னொரு முகத்தை உணர முடியாமல் ஏமாந்த தன் இயலாமை மீதுதான் அவருக்குக் கோபம் வந்தது.
சப்தமேயின்றி மகள் தன் முதுகில் கத்தியை இறக்கிய துரோகம் ஏழேழு ஜென்மத்துக்கும் மறக்க முடியாத ஒன்று என்று அவர் நினைத்தார்.
நாகர்கோயிலை விட்டு சிதம்பரத்துக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்து ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டன. இந்தக் கால கட்டத்தில் மகளிடமிருந்து இரு கடிதங்கள். நாகர்கோயில் பள்ளியிலிருந்து சிதம்பரம் முகவரிக்கு ரீ டைரக்ட் செய்து அனுப்பியிருந்தார்கள்.
“பெரிய ஆலைக்குச் சொந்தக்காரரின் வாரிசு என் கணவர். எங்களுக்குச் சொத்து சுகங்களுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. ஆனால் எனக்குத் தான் மனசில் மாளாத குறை. உங்கள் மன்னிப்பு மட்டுமே அதை நிவர்த்தி செய்யும். என்னை மன்னியுங்கள் அப்பா!”
அடுத்த கடிதம் அவரை அசைய வைத்தது. “உங்களை ஏமாற்றியதன் பலனை நான் அனுபவித்து விட்டேன் அப்பா! அவருக்கு நுரையீரலில் புற்று நோய் வேரோடி விட்டது. சிகிச்சையால் குணப்படுத்தும் நிலையைத் தாண்டிவிட்டதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். உங்கள் நல்ல மனசைக் காயப்படுத்திய எனக்கு ஆண்டவன் மிக அதிகமான தண்டனையைத் தந்து சோதனை செய்கிறான்… என்னை மன்னித்தேன் என்று ஒரு வார்த்தை எழுதுங்கள் அப்பா…”
அவர் மனது, கடும் புயலிலும் வேரோடி நிற்கும் அசையாத பெரிய மரம் போன்று நின்று தபஸ் செய்தது. நாகர்கோயில் வடசேரியில் அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வீட்டு
மாடியில் வசித்தார். -ஒருநாள் அவர் வந்து சொன்னது இப்போதும் இவர் காதுகளில் ஒலிப்பது போல இருந்தது.
அவர் சொன்னார்: “சொல்லவே கஷ்டமாயிருக்கு சார். நீங்க ரொம்ப நல்லவர். உங்க பெண் இப்படிப் பண்ணியிருக்க வேண்டாம். எனக்குக் கல்யாணமாகிற வயசில் ரெண்டு பெண்
பிள்ளைகள் இருக்காங்க. இந்த வீட்டுல ஒரு பெண் ஓடிப் போயிட்டாள்னு பலரும் பேசறதை எங்களால பொறுத்துக்க முடியலை. தயவுசெய்து நீங்க வீட்டைக் காலி செய்துட்டா தேவலை. அவசரமில்லை ஸார், ஒரு மாசம் டயம் எடுத்துக்குங்க!”
ஒரு மாதம் என்ன? இரண்டே நாளில் வீட்டைக் காலி செய்து விட்டார் விசுவநாதன்.
அந்த வீட்டை மட்டுமல்ல, ஊரையும் மாற்றிக் கொண்டு வந்து விட்டார். பள்ளிக்கூட நேரம் போக, சிதம்பரம் நடராஜர் கோயிலில் இறைவன் சந்நிதி முன் கால் வலிக்க நின்று தவம்
கிடக்க ஆரம்பித்தார். அப்போதாவது மனசின் வலி குறைகிறதா என்று சோதித்துப் பார்த்தார்.
அப்புறம் ஒரு நண்பர் எழுதியிருந்தார். வத்சலாவின் கணவன் மருத்துவ மனையில் இறந்து போனதாக. எதுவும் அவர் மனதில் பதியவில்லை. ஒரு வலி மட்டும் எந்நேரமும் ரீங்காரம் செய்து
கொண்டிருந்தது. அது, தான் பெற்று வளர்த்த மகளின் துரோகம்!
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் எதிர்பாராத சூழ்நிலையில் மகள் வத்சலாவைப் பார்க்க நேர்கிறது அவருக்கு.
அவளுடன் வரும் பெண், கணவன் வழி உறவினளாக அல்லது வத்சலாவின் சிநேகிதியாக இருக்கலாம். இந்த ஊருக்குத் தெரிந்தோ அல்லது யதேச்சையாகவோ வத்சலா வந்திருக்கக்
கூடும். இதோ நாற்பதடி தொலைவில் அவர் முதுகுக்குப் பின்னால் அவள் வந்து கொண்டிருக்கிறாள்.
மாலை வெயில் சுள்ளென்று காய்ந்தது.. திடுமென வேகமாக நடந்து விளங்கியம்மன் கோயில் திருப்பத்தில் கைக்குழந்தை யுடன் அவர் முன் வந்து வழி மறிப்பது போல நின்றாள் வத்சலா.
விசுவநாதன் இதை எதிர்பார்க்கவில்லை. இதயத்தில் ஒரு இறுகிய பந்து அடைப்பது போலத் திணறல் ஏற்பட்டது. ஐந்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு மகளைப் பார்க்கிறார்
அவர். புடவையில், நகைகளில், உடம்பில் செல்வச் செழிப்பு பளிச்சென்று தெரிந்தது. ஆனால் அந்த வெறிச்சோடிய நெற்றி, கலங்கிய விழிகள்…
நீர் கோர்த்த விழிகளுடன் வத்சலா அவரைத் தீனமாகப் பார்த்தாள். கையிலிருந்த குழந்தை சிரித்து அவரிடம் வரத் தாவியது. தூரத்தில் உடன் வந்த பெண் தயங்கி நின்றாள்.
மிகவும் சங்கடமாக உணர்ந்து, கோபப் பீறிடலுடன் மகளை முறைத்து, “என்ன?” என்றார்.
“மன்னிக்கணும்… என்னை மன்னிக்கணும்…” என்று தழு தழுத்தாள் வத்சலா. சொல்லும்போதே, உதடுகள் துடித்தன; கன்னம் நடுங்கியது; கண்கள் பொல பொலவென்று கண்ணீரை
வடித்தது.
அப்படியே நட்ட நடு வீதியில் அவரின் காலடியில் குழந்தையை வைத்துவிட்டு, அவர் பாதங்களில் வீழ்ந்து நமஸ்காரம் செய்தாள் வத்சலா. விசுவநாதன் திகைத்துக் கல்லாக நின்றார்.
வீதியில் நடந்தவர்கள் இக்காட்சியை அதிசயத்துடன் பார்த்து, முகத்தில் கேள்விக்குறியுடன் நின்றார்கள்.
எழுந்து குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு, கண்ணீர் வழியும் விழிகளால் தந்தையைப் பரிதாபமாகப் பார்த்தாள் வத்சலா. எதுவுமே நடவாதது போன்று சற்று ஒதுங்கி,
விடுவிடென்று நடக்க ஆரம்பித்தார் விசுவநாதன்.
தோளில் தூக்கிச் சார்த்திய குழந்தையுடன் கண்ணீர் வழிய, ஒன்றுமே சொல்லாமல் போகும் தந்தையைப் பார்த்துச் சிலையாக நின்றாள் வத்சலா.
மன்னிக்கணும்.. என்னை மன்னிக்கணும்.. என்ற அவளின் குரல், காதுப் பறைகளில் நடராஜர் கோயில் காண்டா மணி ஓசையாய்த் திரும்பத் திரும்ப மோதி அவரின் இதயத்தை அதிர
வைத்தது. திடுமென அவர் தன் எதிரே இல்லாத மகளைப் பார்த்து மனசுக்குள் சொல்லிக் கொண்டார்.
“வத்சலா, நான் இப்போ உன்னை மன்னிச்சிருந்தா, நீ என் கூடவே வாழ வந்திருப்பே. என் பாதுகாப்புல இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் இந்த அப்பாவை ஏமாத்திட்டு ஓடிப் போகாம இருந்திருந்தா நமக்கு இந்தக் கதி வந்திருக்காது. இப்படிப் பொட்டும் பூவுமில்லாம நிக்க வேண்டியிருந்திருக் காதுன்னு நீ ஏங்கிப் போகலாம். அந்த ஏக்கம் உன் மனசுள் புகுந்து உன்
கணவனை அவசரப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக் காக வருத்தப்பட வெச்சா அது அவனை விட்டுக் கொடுக்கிற மாதிரி ஆகாதா?
பெரியவங்க பேச்சைக் கேக்காம ஒருத்தனோட ஓடிப் போறது எத்தனை தப்போ, அதைவிடத் தவறு, அந்தக் கணவனையும் கணவனின் குடும்பத்தையும் விட்டுக் கொடுக்கறது! உன் முதல் செயல் நன்றி கெட்ட தனம், அதை என்னால் மன்னிக்க முடியும். மறக்க முடியும். ஆனால், உன்னுள் ஏற்படக்கூடிய இந்த மாற்றம் ஒரு பெரும் துரோகம். என்னால் இதை மன்னிக்கவே முடியது.
எந்த முடிவை எடுத்தாலும் அதுல உறுதியா நிக்க வேணாமா? அதை விட்டுட்டு உன் மனசு இப்போ சஞ்சலப்பட்டுப் போறதுக்கு நானே காரணமா இருக்க மாட்டேன். அதனாலதான் உன்னை மன்னிச்சு ஏத்துக்காமப் போறேன். நீ உன் குழந்தையை உன் கணவன் வீட்டிலேயே வளர்த்து, அவனுடைய குடும்பத்தாருக்கு மகனாகவும் இருந்து கணவனின் நல்ல நினைவுகளோட வாழணும்மா..!”
நடையை எட்டிப் போட்டார் விசுவநாதன்.
அவர் தன் வீட்டைச் சேர, இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டும்!
(ஆனந்த விகடன் வார இதழ்)