அரசாங்க அலுவலகம் ! கை கட்டி நின்று கொண்டிருந்தார் அருணாசலம், சார் தயவு செய்து அந்த லோனை பாஸ் பண்ணி கொடுங்க, பையனுக்கு காலேஜூல செமஸ்டர் பீஸ் கட்டியாகனும். இதை கேட்பதற்குள்ளே கண்ணீர் விட்டு விடுவார் போலிருந்தது.
எதிரில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த மாரியப்பனுக்கு அதை பற்றியெல்லாம் கவலையில்லை. இங்க பாருங்க அருணாசலம், உங்க லோனை நானா பாஸ் பண்ண மாட்டேங்கறேன். நீங்க எல்லா ரிப்போர்டையும் சரியா வச்சிருந்தா நான் உடனே அனுப்பிச்சு விட போறேன். நீங்க என்னடான்னா, நான் கேட்டதை இன்னும் அப்ளிகேசனோட சேர்த்தாமலேயே வச்சிருக்கறீங்க. இதை கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னார்.
இதை புரிந்து கொண்ட அருணாசலம் நீங்க கேட்டதை எல்லாம் இந்த அப்ளிகேசனோட வச்சுத்தான் கொடுத்திருக்கேன். சொல்லி விட்டு சார் என்னால
கொஞ்சம் தாம் கொடுக்க முடியும், இதை மெதுவாக சொன்னார்.
நீங்க முதல்ல கொடுங்க, ரெடி பண்ணிடலாம், அமர்த்தலாய் சொன்னார் மாரியப்பன்.
சரி சார் வருத்தத்துடன் வெளியே வந்தார் அருணாசலம். எப்படியும் ஆயிரமாவது தேவைப்படும் யாரிடம் கேட்பது? நானும் அந்த ஆளை மாதிரி அரசாங்க ஊழியன்தான் என்னுடைய சேமிப்பு பணத்தை எழுதி கேட்பதற்கு கூட இனாம் தர வேண்டியிருக்கிறது. மனதுக்குள் வேதனை கிளம்ப தன் அலுவலக பகுதிக்குள் செல்கிறார்.
ஏங்க இன்னும் இரண்டு நாள்தான் இருக்கு, அவனுக்கு காலேஜ் பீஸ் கட்ட?
மனைவியின் பேச்சுக்கு அவர் பாக்கலாம், வருத்தத்துடன் சொன்னவர், லோன் போட்டிருக்கேன், அந்த ஆள் என்னடான்னா காசு எதிர்பார்க்கறான். எவ்வளவு எதிர்பார்க்கறாரு?
தெரியலை ஆயிரம் ரூபாய் கேப்பான்னு நினைக்கிறேன். மாசக்கடைசி, நீயே அடிச்சுக்கோ புடிச்சுக்கோன்னு இருக்கே, இதுல இவனுக்கு கொடுக்கறதுக்கு பணத்தை எப்படி புரட்டறது.
மனைவி சட்டென தன் கம்மலை கழட்டி எப்படியோ ரெடி பண்ணி அந்த ஆள்கிட்டே கொடுத்து லோனை பாஸ் பண்ணிட்டு வாங்க. காலேஜ் பீஸ் கட்ட இன்னும் இரண்டு நாள்தான் இருக்குன்னு காலையில காலேஜுக்கு போகும்போதே சொல்லிட்டு போறான்.
பயபக்தியுடன் அருணாசலம் மாரியப்பனுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார். ஏதோ வேண்டாத பொருளை பெறுவது போல அதை பெற்று கொண்ட மாரியப்பன், உங்களுக்காகத்தான் அமெளண்டை குறைச்சுகிட்டேன், நீங்க கவலைப்படாம போங்க, நாளைக்கு அக்கவுண்ட்சுக்கு போயிடும்.
மனைவியின் கம்மல் பணம் இவனுக்கு சேர வேண்டும் போலிருக்கு, மனதுக்குள் நினைத்துக்கொண்ட அருணாச்சலம் நம்பிக்கையுடன் அங்கிருந்து நகர்ந்தார்.
அருணாச்சலம் மறு நாள் மாலை “லோன் பாஸாகி” பையனுக்கு காலேஜ் பீஸ் கட்ட பணம் பெற்ற கொண்ட மகிழ்ச்சியில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த பொழுது வழியில் இருந்த உயர்தர ஓட்டலிலிருந்து தன் மகனும், கூட நான்கைந்து பையன்களும் வெளி வருவதை பார்த்தார்
இரவு ஒன்பதுக்கு மேல் மெதுவாக உள்ளே வந்த மகனிடம் ஏன் தம்பி இவ்வளவு லேட், ஒன்றும் தெரியாதவர் போல் கேட்டார்.
அப்பா பிரண்டுக்கு இன்னைக்கு பர்த்டே, பிரண்ட்சுக்கு எல்லாம் பார்ட்டி வச்சு சினிமாவுக்கு கூட்டிகிட்டு போனான், அதான் லேட், தலையை குனிந்து கொண்டே சொன்னான்.
தம்பி பார்ட்டி கீர்ட்டின்னு வேண்டாத பழக்கமெல்லாம் பழக்கிடுவாங்க, வருத்தத்துடன் சொன்னார் அருணாச்சலம்.
அப்பா அப்படியெல்லாம் ஒண்ணுமில்லப்பா, அவன் வழியில இருக்கற பெரிய ஓட்டலுக்கு கூட்டிகிட்டு போய் பிரியாணி வாங்கி கொடுத்தான், அப்புறம் ஒரு சினிமாவுக்கு கூட்டிகிட்டு போனான், அவ்வளவுதான்.
ஏம்ப்பா அவனுக்கு நிறைய செலவு வச்சிருப்பீங்க போலிருக்கே
அப்பா அவன் வசதியானவன்தான் அப்பா, அவங்கப்பா கூட உங்க டிபார்ட் மெண்ட்தான், அக்கவுண்ட்சுல இருக்கறாரு, பேரு கூட மாரியப்பன்னு சொன்னான். நேத்து அவரே ஆயிரம் ரூபாய் பணத்தை இன்னைக்கு இவன்கிட்டே கொடுத்து உன் பிரண்ட்சுக்கெல்லாம் பிறந்த நாள் பார்ட்டி கொடுன்னு சொன்னாராம்பா.
தன் மகன் குரல் தன் அப்பா அப்படியில்லையே என்ற ஏக்கம் கூட அதில் தென்பட்டதாக தெரிந்தது அருணாச்சலத்துக்கு.
அதை விட “மனைவியின் கம்மல் பணம்” தன் மகன் பிரியாணி சாப்பிட கூட உதவியிருக்கிறது என்ற அற்ப திருப்தி அவர் மனதில் ஓடி மறைந்தது.