மனுஷ ஜாதி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2024
பார்வையிட்டோர்: 4,158 
 
 

“அம்பு…அடியே அம்பு!” ஹாலில் இருந்து கணவர் ராமசாமியின் குரல் உச்ச ஸ்தாயி
யில் ஒலித்தது. வில்லில் இருந்து ‘விர்’ என்று புறப்பட்ட அம்பு மாதிரி,  அடுக்களையில்
இருந்த அம்புஜம் , விடு விடு வென்று ஹாலுக்குள் பிரவேசித்து, ஈ.ஸி.சேரில் சாய்ந்தபடி
இருந்த கணவர் எதிரில் வந்து நின்றாள்.

“எங்கம்மா, அப்பா எனக்கு அம்புஜம்னு அழகான பேரா வெச்சிருக்கா.  நீங்க வில்லு
அம்புன்னு என்னோட பேரை சிதைக்கிறேளே ?” கோபமாக முறைத்தாள்.

“கோபிக்காதடி. செல்லமா கூப்பிடறேன் .அது சரி..உன்னை அம்புன்னுதானே கூப்பிட்டேன். வில்லுன்னு இல்லையே? இதோ பார்டி. நீ அம்புன்னா, நான்தான்.வில்லு. இது மட்டுமா? நீ ஜாடின்னா நான் மூடி. நீ டிகாக்ஷன்னா நான் பால்…”

“அப்படியா! நானும் ஒண்ணு சொல்றேன். நான் பாகற்காய்ன்னா நீங்க எட்டிக்காய்..இது
எப்படி இருக்கு?”

“பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு .”  என்று சிரித்தார் ராமசாமி. அம்புஜம் தொடர்ந்தாள்.

“இப்படித்தான் அன்னிக்கு சீதாலக்ஷ்மி மாமி நம்மாத்துக்கு வந்திருந்தா. அவா எதிர்ல நீங்க ‘புஜம்’ன்னு என்னை அழைச்சேள். மாமி நக்கலா ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிச்சா.
எனக்கு ஒரே அவமானமாப் போச்சு.”

“சீதுமட்டும்தானே இருந்தா!”

“என்னது சீதுவா?” அம்புஜத்திற்கு பற்றிக்கொண்டு வந்தது. ராமசாமி கவலைப்
படாமல் மேலும் சொன்னார்.

“அடியே! கோமு  , சரோ,  பாக்கி , அலமு இவாள்ளாம் கூட இல்லியேன்னு சந்தோஷப்
படு.”

“என்ன… அவா பேரையெல்லாம் ரொம்ப  அந்நியோன்னியமா சொல்றேள்! அவாளோட
ஆத்துக்காரா காதுல விழுந்ததுன்னா உங்களை உண்டு இல்லே ன்னு ஆக்கிடுவா. “

“பைத்தியம், அவாளுக்கு எப்படி தெரியப் போறது ? நீயோ,  இல்லை நானோ சொன்னாத்தான் தெரிஞ்சுப்பா . “

“சரி, உங்க வியாக்கியானம் இருக்கட் டும். என்னை எதற்கு கூப்பிட்டேள்?”

“அதுவா வந்து…நாட்டு நடப்பைப் பத்தி பேசத்தான் கூப்பிட்டேன். “

“என்ன திடீர்னு நாட்டு நடப்பு மேல அக்கறை வந்துடுத்து?”

“அம்பு, பாழும் கொரணா வந்து ஜனங்களை அநியாயத்துக்கு இப்படி பாடாய் படுத்த
றது..லாக் டவுன்ல யாரும் வெளியில தலை காட்ட முடியல்ல. தொற்று வேகமாப் பரவி
நெறைய பேரை காவு கொள்றது.  முதல்அலையைவிட ரெண்டாவது அலை ரொம்ப
மோசமாயிருக்கு!”

“ஆமான்னா! நீங்க சொல்றது வாஸ்தவம்தான்.  ஒரு சினிமா டிராமா,  கோயில் குளம்னு ஆசையா வெளியில தலை காட்ட முடில்ல  .”

“ஹூம்..நம்மள மாதிரி கொஞ்சம் வசதியா இருக்கறவா எப்படியோ சமாளிச்சுக்கறோம். ஆஃபிஸ் போறவா அவா அவா ஆங்கள்லயே இருந்துண்டு கம்ப்யூட்டர்ல வேலை பார்க்குறா. மாச சம்பளம் கெடச்சுடறது.  தினக்கூலியாட்கள் வேலைக்குப் போகமுடியாததால சம்பளமில்ல..அதனால பசி பட்டினியால பாதிப் பேர் சாகறா.  மீதிப்பேரை கொரணா முழுங்கறது.”

“மனசுக்கு கஷ்டமாயிருக்கு..” என்ற அம்புஜம், “சேதி தெரியுமா? ஸ்கூல்ல பியூனா
இருந்த ரங்கராஜன் கொஞ்ச நாள் முன்னா ல கொரணாவால செத்துப்போனானே..”

“அந்த ரங்குதானே? தெரியுமே!”

“அடிமேல் அடியா, அந்தக் குடும்பத்துக்கு இன்னொரு கெட்டது நடந்திருக்கு.”

“நீ என்ன சொல்றே?”

“ஆமான்னா! அவனோட பொண்டாட்டி  ராஜலக்ஷ்மின்னு பேரு… அவளும் பாழும்
கொரணா தொற்றால ரெண்டுநாள் முன்னாடி காலமாயிட்டாளாம்  ! “

“என்னது ராஜியும்போயிட்டாளா?” அதிர்ச்சியடைந்தார் ராமசாமி.

“ஆமாம். அவாளுக்கு ஒரே பிள்ளை. பேர் பிச்சுமணி. பத்து வயசாகறது . அந்த ரங்க
ராஜன் பியூனா வேலை பார்க்கற ஸ்கூல்லயே அஞ்சாம் கிளாஸ் படிக்கறானாம்  ! அந்த
ப்பிள்ளை அநாதை ஆயிடுத்தேன்னு வேதனையா இருக்கு. பகவான் ஏன் இப்படி
சோதிக்கறானோ!”

பேச்சு இல்லாமல் விழிகளை மூடியபடி சாய்ந்திருந்தார் ராமசாமி ஈ.ஸி.சேரில். சில
வருடங்களுக்கு முன்னால் பெற்ற ஒரே மகன் மருமகள், மற்றும் பதினான்கு வயது பேத்தி இவர்கள் எல்லாம் இந்தோனேஷியாவில்  இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டு வரும் வழியில் ஏற்பட்ட விமான விபத்தில் மாண்டு போனது நெஞ்சில் நிழலாடியது .  நெஞ்சு
நடுங்கியது.  இதயம் ஆர்ப்பரித்தது.  தானும் தன் மனைவியும் அனாதைகள் ஆனதை
நினைத்து அழாத நாளில்லை.

இப்பொழுது பிச்சு(பிஞ்சு)மணி அநாதை ஆகியிருக்கிறான். அவனுக்கு உறவினர்
யாரும் கிடையாது. இந்தச் சின்ன வயதில் தன்னந்தனியாக அவனால் என்ன செய்ய
முடியும்?

கண்களைத் துடைத்துக் கொண்ட ராமசாமி  மனதில் திடமான முடிவு ஒன்று
எழுந்தது.

“அம்புஜம்…” சகஜமாக அழைத்த கணவரை உற்று நோக்கினாள் அம்புஜம்.  தன்
பெயரை முழுமையாக உச்சரிப்பதின் மூலம் கணவர் மிகவும் சீரியஸாக விஷயத்தைக்
கையாளப்போகிறார் என்பது புரிந்தது.

“சொல்லுங்க.” என்றாள் அம்புஜம்.

“எண்ணிப் பார் அம்புஜம். அந்த ரங்கன்  நம்மளுக்கு எவ்வளவோ ஒத்தாசைகள் செஞ்
சிருக்கான்.  உதாரணத்துக்கு தோட்டத்தில விளையற காய்கறிகள் , கீரை வகைகள்னு
சொல்லி அடிக்கடி தந்திருக்கான். அதுவும் இலவசமாக…தான் ஃப்ரீயா இருக்கற சமயங்
கள்ல கடை கண்ணிக்குப் போகறது ; கரண்ட் பில் கட்டறது இப்படி அவனே முன்னால்
வந்து இழுத்துப் போட்டுண்டு செஞ்ச வேலைகள் நெறைய…இப்போ அவனும் அவன்
பொண்டாட்டியும் உயிரோடில்ல.  அவாளோட ஒரே பையன் அநாதையா கிடந்து தவிக்கறது….”

அம்புஜம் விழியசையாமல் கணவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க,  இடைவெளி விட்ட ராமசாமி தொடர்ந்தார்.

“நான் என்ன சொல்ல வரேன்னு உனக்குப் புரிஞ்சிருக்கும்…”

“அந்தப் பிச்சுமணியை நாம தத்து எடுத்து வளர்க்கலாம்னு சொல்றேள் . சரி தானே ?”.

 சட்டென முகம் மலர்ந்தார் ராமசாமி. ” சரியா சொல்லிட்டே. பிச்சுவை பேரனா
தத்தெடுப்போம். நல்லபடியா வளர்ப்போம். ஆனால் பிச்சுவைத் தத்தெடுப்பதில் சட்ட
பிரச்னை இல்லாமல் பார்த்துக்கணும்.. எதிர்த்தாத்து வக்கீல் கோபாலை கன்ஸல்ட்
பண்ணலாம்…”

“எல்லாம் சரி..ஆனா…அவன் என்ன குலம் என்ன ஜாதின்னு தெரியாம நாம எப்படி
தத்தெடுக்கறது  ?”

“பைத்தியக்காரி.  காலம் மாறிண்டு  வரது.  போன தலைமுறைக்கும் இப்போதைய
தலைமுறைக்கும் இடையில்  நெறைய வித்யாசங்கள்….நியாபகமிருக்கா ? நம்ம
தூரத்து சொந்தத்தில ஒரு கல்யாணம் எப்படி நடந்தது ?  ஜாதகம் பார்க்காமல் நடந்தது.
காதலுக்கு கண்மட்டும் இல்லை;  ஜாதியும்  இல்லே ன்னு நிரூபிக்கப்பட்ட கல்யாணம்.
அவா அமோகமாதான் இருக்கா இப்போ.

ஒரு சின்னப் பையனுக்கு ஒரு நிலையான வாழ்வாதரத்தைத் தர பகவான் காட்டிய வழி.
அரசாங்கம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறது.  நாம
முந்திக்குவோம். அந்தப் பிச்சுமணி மனுஷ ஜாதி! அப்படின்னு நெனைச்சுக்கோ.”

கணவரின் பேச்சில் தெளிவடைந்தாள்  அம்புஜம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *