மனித யந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,036 
 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்றொரு நாள் பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிந்த போது, “காலணா இருந்தால் கொடுங்க, ஐயா!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். சின்னஞ் சிறு சிறுமி ஒருத்தி எனக்குப்பின்னால் நின்று கொண்டிருந்தாள் அவளைப் பார்த்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் அவள் என் நண்பன் சிவராமனின் செல்வக் குழந்தை இந்தக் கதி அவளுக்கு எப்படி நேர்ந்தது?

“கஸ்தூரி என்னைத் தெரிகிறதா, உனக்கு?”

“தெரிகிறது மாமா!”

“அம்மா, அப்பா எல்லாம் எங்கே இருக்கிறார்கள்?”

“அம்மா வீட்டில் இருக்கிறாள்; அப்பா ஆஸ்பத்திரியிலே இருக்கிறார்”

“அப்பா ஏன் ஆஸ்பத்திரிக்குப் போனார்?”

“அவருக்குக் கால் என்னத்துக்கோ நடக்க வராமற் போச்சு; அதாலே அவர் ரெண்டு மாசமா ஆஸ்பத்திரியிலே தான் இருக்கிறார்”

“சரி வா வீட்டுக்குப் போகலாம்” என்று நான் அந்தச் சிறுமியை கூட்டிக் கொண்டு சென்றேன்.


சிவராமன் ‘பரஞ்சோதி மில்ஸ்’ஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்; மாதம் முப்பது ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளத்தைக் கொண்டு அவன் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது!

வாரத்தில் ஆறு நாட்கள் தண்ணீர்ச் சாதம் சாப்பிட்டாலும் ஒரு நாளாவது அவன் வத்தக் குழம்புச் சாதம் சாப்பிட வேண்டும். நடு நடுவே உடம்புக்கு ஏதாவது வந்தால் அதையும் பார்த்துக் கொள்ள வேண்டும். மாமாங்கத்துக்கு ஒரு முறையாவது புதுப்புடவை எடுத்துக் கொடுப்பதின் மூலம் தன் மனைவியின் மனதை அவன் திருப்தி செய்ய வேண்டும். தங்க வளையல்களுக்குப் பதிலாக கண்ணாடி வளையல்களாவது வாங்கிப் போட வேண்டும். சினிமா, நாடகம், சர்க்கஸ் போன்ற தமாஷாக்களை அவளும் அவள் குழந்தைகளும் அவர்களுடைய ஜன்மத்தில் ஒரு தடவையாவது பார்க்கச் செய்ய வேண்டும். தன் பெண் விளையாடுவதற்காக அவன் ‘ஸலுலாய்ட்’ பொம்மை மூன்று சக்கரசைக்கிள்முதலியவை வாங்கித் தராவிட்டாலும் மரப்பாச்சி, ஓலைக் கிலுகிலுப்பையாவது வாங்கித் தரவேண்டும். வீடு தேடி வரும் விருந்தாளிகளை மனங்கோணாமல் உபசரிக்க வேண்டும். பந்து மித்திரர்கள் அவ்வப்போது நடத்தும் கல்யாணம், கர்ண வேதனம், சீமந்தம் முதலிய விசேஷங்களில், மூக்கால் அழுது கொண்டாவது அவன் சன்மானம் செய்ய வேண்டும் – அப்பப்பா! இத்தனை கஷ்டங்களுக்கு ஓர் ஏழைத் தொழிலாளி ஈடு கொடுப்பது எப்படி? இந்தக் கஷ்டங்களையெல்லாம் அளவுகோலாக வைத்துக் கொண்டா முதலாளிகள் அவனுக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள்?

இந்த லட்சணத்தில் அப்பா இரண்டு மாதகாலம் ஆஸ்பத்திரியில் இருந்தால் பெண் ஏன் பிச்சை எடுக்க வரமாட்டாள்?


இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டே சென்ற நான், சிறிது நேரத்திற்கெல்லாம் சிறுமியின் வீட்டை அடைந்தேன். அவளுடைய அம்மா என்னைக் கண்டதும் “வாங்க, அண்ணா மன்னி செளக்கியமா?” என்று கேட்டபடி என்னை வரவேற்றாள்.

“செளக்கியந்தான்!” என்று சொல்லிவிட்டு “கஸ்தூரியின் கதி ஏன் இப்படியாச்சு?” என்று நான் அவளை விசாரித்தேன்.

“கால வித்தியாசம், அண்ணா! அவர் சம்பாதிக்கும் போதே கையில் ஒரு காலணா மிச்சமிருக்காது. இப்பொழுது கேட்க வேண்டுமா? அவர் பாயும் படுக்கையுமாகி விட்டார். வேறு வழியில்லாமல் நான் இரண்டு பெரிய மனிதர்கள் வீடுகளில் வேலை செய்து வருகிறேன். நான் வேண்டாமென்றாலும் சொன்னாலும் கேட்காமல் கஸ்தூரியும் என்னுடைய கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்கிறாள். இதுதான் அவளுடைய கதி!”

“ஏன், இந்தச் சங்கடமான சமயத்தில் முதலாளி உபகாரச் சம்பளம் ஒன்றும் கொடுத்து உதவி செய்யவில்லையா?”

“ஐயா! உபகாரச் சம்பளம் கொடுக்காமலிருப்பதோடு நின்றால் போதுமே! அவருக்காக வேலை காத்திருக்காது என்று வேறே சொல்லுகிறார்களாமே!” என்றாள் அவள்,

இதைக் கேட்டதும் என் சிந்தனை சுழன்றது – என்ன அநியாயம்! கேவலம் ஒரு மெஷின் வேலை செய்வதற்கு லாயக்கில்லாமற் போனால் அதைப் பழுது பார்க்க ரூபாய் ஆயிரம் வேண்டுமானாலும் எந்த முதலாளியும் செலவழிக்கத் தயாராயிருக்கிறான். ஆனால் வாழ்நாட்கள் முழுதும் தன்னிடம் நாயா யுழைத்த ஓர் ஏழைத் தொழிலாளி வேலை செய்வதற்கு லாயக்கில்லாமற் போனால், அவனுக்காக ஒரே ஒரு ரூபாய் செலவழிக்கக்கூட மனம் வருவதில்லை! – மனிதன் என்ன யந்திரத்தைவிட அவ்வளவு மட்டமானவனா? இரும்பு யந்திரத்தை வேண்டுமானால் மனிதன் நினைத்தால் சிருஷ்டித்துவிடலாம்; மனித யந்திரத்தை மனிதன் நினைத்தால் சிருஷ்டித்துவிட முடியுமா? – இவ்வாறு எண்ணமிட்டுக்கொண்டே நான் உட்கார்ந்திருந்த போது, நொண்டி நொண்டி நடந்த வண்ணம் உள்ளே நுழைந்தான் என் நண்பன். “என்னப்பா இது?” என்றேன் நான்.

“வேறொன்றுமில்லை; கடவுளின் கருணை – அவன் அருளால், என் கைகளும் கால்களும் இனிமேல் சரிப்பட்டு வராதென்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்!”- என்றான் அவன் விரக்தியுடன்.

“ஆ!” என்று அலறினாள் அவன் மனைவி. “அப்படின்னா இனிமே அப்பாவாலே வேலைக்குப் போகமுடியாது!” என்று முத்தாய்ப்பு வைத்தாள் குழந்தை கஸ்தூரி.

“ஆமாம் அம்மா! இனிமேல் உன்னோடு நானும் சேர்ந்து பிச்சை எடுக்க வேண்டியது தான்!” என்றான் அவன்.

என் கண்களில் நீர் துளிர்த்தது. அதற்குமேல் என்னால் ஒரு கணம்கூட அங்கே உட்கார்ந்து கொண்டிருக்க முடியவில்லை; எழுந்து நடையைக் கட்டினேன்.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

– முல்லைக் கொடியாள், மூன்றாம் பதிப்பு: 1952, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *