கதையாசிரியர்:
தின/வார இதழ்: இதயம் பேசுகிறது
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 10,474 
 

சிவசிதம்பரம் பெருமூச்சு உயிர்த்தார்.

ஒரு பிரச்சினை தீர்ந்ததை நினைத்து அவர் நெஞ்சு உந்திய நெடுமூச்சுதானா அது..? அல்லது, மேலும் எதிர்நோக்கி நின்ற புதிய பிரச்சினைகளை மனம் அசை போட்டதால் எழுந்த அனல்மூச்சுதானோ என்னவோ!

அவர் மகள் கமலத்துக்கு ஒருமட்டும் கல்யாணம் முடிந்து விட்டது.

அந்த நினைப்பு “அப்பாடா!” என்று ஒரு நிம்மதியை அவருள் கொண்டு சேர்த்தது உண்மைதான்.

கமலத்துக்குக் கல்யாணம்! எல்லாருக்கும் மகிழ்ச்சி அளித்த பெரிய விஷயம். கமலத்துக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தந்த நிகழ்ச்சி.

எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் தன்னுள் விதைத்து, அன்றாடம் பசுமைக் கனவுகளை அறுவடை செய்துவந்த பெண் உள்ளம், காலஓட்டத்தில் கூம்பிக் குவிந்து ஏக்கப் பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருக்கும்படியான சூழ் நிலையே வளர்ந்தது. தனக்கும் கல்யாணம் என்று ஒன்று நடக்குமா என்று அவள் குமைய நேர்ந்தது.

*கமலத்துக்கு இன்னும் கல்யாணம் பண்ணாமல் வீட்டோடு வைத்திருக்கிறீர்களே!” என்று வக்கணை கொழித்தார்கள் அக்கம் பக்கத்தினரும், உற்றார் உறவினரும்.

அவர்களுடைய, மற்றும் சமூக மனிதர்களுடைய சின்ன மனசை, “சிறியதோர் கடுகு உள்ளத்தை, சுயநலத்தை, பேராசையை, வியாபாரப் போக்கை சிவசிதம்பரம் சந்திக்க நேரிட்டது, கல்யாண முயற்சிகளின் போது, “கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்” என்று வாய்கிழியப் பேசுகிறார்கள். கல்யாண முயற்சியில் ஈடுபடுகிறபோது, “மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்” லாப நோக்கம் கொண்டு வியாபாரிகளாக மாறி விடுகிறார்கள். பேரம் பேசுகிறார்கள். ஓர் இடத்தில் பேசி, முடிவாகப் போகிற கட்டத்தில், மற்றொரு பெண்வீட்டுக்காரர் “ஆயிரம் இரண்டாயிரம் அதிகம் தருவதாக ஆசை காட்டியதும், மனிதத் தன்மையை காற்றிலே விட்டு விட்டு, பணத்தாசையோடு செயல்பட்டார்கள்.

இப்படி ஒன்றா, இரண்டா? “புத்திக் கொள்முதல்” கணக்கில் வரவுகள் எத்தனை எத்தனையோ!

வருஷங்கள் ஓடின. கமலத்துக்கும் வயது அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அவளது புலப்பங்களும், பெருமூச்சுகளும் பெருகின. அவள் அம்மாக்காரியின் முணமுணப்புகளும் தொணதொணப்புகளும் அமைதியைக் குலைத்தன.

சிவசிதம்பரம்தான் என்ன செய்வார், பாவம்! ஊர் ஊராக அலைந்தார். தெரிந்தவர்கள், வேண்டியவர்கள் என்று எல்லாரிடமும் சொல்லி வைத்தார்.

எப்படியோ ஒர் இடம் சித்தித்தது. பேரங்கள், வாக்குறுதிகள் வெற்றிகரமாக முடிந்தன. நகைகள், ரொக்கப்பணம், மாப்பிள்ளைக்கு “ஸூட்டு வகையறா”, கல்யாணச் செலவு என்று பல ஆயிரம்கள் பணம் தாள்களாகப் பறந்து மறைந்தன.

கன்னி கமலம், மணமகள் வேடம் தாங்கி கல்யாண நாடகத்தில் சந்தோஷமாக நடித்து, திருமதி சந்திரசேகரன் என்ற பதவி ஏற்று, “மாப்பிள்ளை வீடு” போய்ச் சேர்ந்தாள்.

“மணமகளே மருமகளே வாவா! – உன் வலது காலை எடுத்து வைத்து வாவா! – குலமிருக்கும் குணம் இருக்கும் வாசல் எங்கள் வாசல்..” என்று ஒலி பெருக்கிகள் ஒலமிட்டு வரவேற்றதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!

உரிய முறைப்படி பண்டபாத்திரங்கள், பலகார வகைகள் முதலிய சகல சீர்சிறப்புகளுடனும் அந்த வீட்டிலே கொண்டு கமலத்தை சேர்த்துவிட்டு வந்த சிவசிதம்பரம் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார் என்றால், அது நியாயமேயாகும்.

அந்த நிம்மதி அல்பாயுசானது என்பதை உணரும் சக்தி பெண்ணைப் பெற்ற பெரியவருக்கு அவ்வேளையில் இல்லைதான்.

அவருக்கு “ஞானோதயம்” ஏற்படுவதற்கு வெகுகாலம் தேவைப்படவில்லை.

இரண்டு, மூன்று மாதங்களிலேயே, “குலமிருக்கும் குணமிருக்கும் வாசல் எங்கள் வாசல்” என்று பெருமை ஒலி பரப்பு பண்ணி, “மருமகளே வா வா” என்று. அழைத்த வீட்டில் குணக்கேடர்களே குடியிருந்தார்கள் என்பது புரிந்து விட்டது.

அம்மா பர்வதம் இனிப்பு வகைகளும் முறுக்கு சீடை தினுசுகளும் தயாரித்துக் கொண்டு, மலர்ந்த முகத்தோடு மகளைப் பார்க்கப் போனாள். மறுநாளே கொண்டை முடிந்து தொங்கப் போட்டது போல்” மூஞ்சியை “உம் “மென்று வைத்துக் கொண்டு திரும்பி வந்தாள். அவளுக்குப் புலம்புவதற்குப் புதிய விஷயங்கள் கூடைகூடையாய் கிடைத்திருந்தன.

கமலம் அங்கே சந்தோஷமாக இல்லை. மாமியார்காரி பெரிய தாடகை. மருமகளைப் படாதபாடு படுத்துகிறாள். மாப்பிள் ளைப் பையன் அம்மாப்பிள்ளை ஆக இருக்கிறான். நாம எவ்வளவோ செய்திருந்தும், அவங்களுக்குத் திருப்தி இல்லே. குறைகூறி, குத்திக்காட்டிக்கிட்டே இருக்கிறாங்களாம். கமலம் அந்த வீட்டிலே சம்பளம் இல்லாத வேலைக்காரியாகத்தான் இருக்கிறாள். ஏகப்பட்ட வேலைகள். அப்படி வேலை செய்தும் நல்ல பெயர் இல்லே…

இந்த ரீதியில் பலப்பல சொன்னாள்.

கொல்லன் உலைத் துருத்தியைப் போல சிவசிதம்பரத்தின் நெஞ்சு அனல் பெருமூச்சை வெளியே தள்ளியது.

“நாமும் எவ்வளவோ பிரயாசைப்பட்டு, நல்ல இடமாக வலை போட்டு தேடினோம். கமலம் பெரியமனுஷி ஆகிப் பதினஞ்சு வருசம் ஆயிட்டுதே. இன்னும் வீட்டோடு வைத்திருப்பது நல்லாயில்லை என்று, கிடைத்த இடத்தை முடிச்சோம். பையன் சுமாராப் படிச்சிருக்கான். தனியார் நிறுவனம் ஒன்றிலே சாதாரண வேலை ஒண்ணு பார்க்கிறான். பெரியதனங்கள் பண்ணமாட்டான்; பேராசைப்பட மாட்டான் என்று நினைத்தோம். அவனும் இந்த லெச்சணத்திலேதான் இருக்கிறான். என்ன பண்ண முடியும்? கமலத்தின் தலை யெழுத்து இவ்வ்ளவுதான்னு நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.”

சிவசிதம்பரம் இப்படி தனக்கும், தன் மனைவிக்கும் ஆறுதல் கூறிக் கொண்டார்.

ஒருநாள் – கமலத்துக்குக் கல்யாணமாகி ஆறேழு மாதங்கள் கழிந்தபோது – சிவசிதம்பரம் காலை உணவு சாப்பிட்டு விட்டு ஈஸிச்சேரில் சாய்ந்திருந்த சமயம் வாசல் கதவு தட்டப்பட்டது.

“யாரது?” என்று கேட்டவாறு எழுந்துபோய், கதவைத் திறந்த சிவசிதம்பரம் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தார். அங்கே கமலம் கையில் ஒரு பையுடன் நின்றாள்.

“வா” என்றுகூட சொல்லத் தோன்றாமல், “என்னம்மா, நீ மட்டும்தான் வந்திருக்கியா? மாப்பிள்ளை வரலியா?” என்று விசாரித்தார் அவர். விலகி நின்று மகளுக்கு வழிவிட்டார்.

அம்மா பர்வதமும் அடுப்படியிலிருந்து வெளியே வந்தாள். மகளின் தோற்றமே அந்தத் தாயின் வயிற்றில் புளியைக் கரைத்தது, நெஞ்சில் பெரும் சுமையை ஏற்றி வைத்தது.

“என்ன கமலம், இப்படி ஆயிட்டே ஆளை அடையாளமே தெரியலியே. மெலிஞ்ச கறுத்து …” என்று தாய் அங்கலாய்த்தாள்.

மகள் அவள் மீது சாய்ந்து, தோளில் முகம் புதைத்து விம்மினாள்.

என்னவோ, ஏதோ என்று பதறினர் பெற்றோர். அவளைத் தேற்றி, நல்லது கூறி மெதுமெதுவாக விசாரித்தார்கள்.

அவள் சொன்ன ஆறுமாதத்துக் கதையே ஒரு மகாபாரதமாக இருந்தது.

சந்திரசேகரன் நல்லபடியாக இல்லை. குடிக்கிறான். பணம் வைத்துச் சூதாடுகிறான். கமலத்தின் நகைகளைப் பிடுங்கிக் கொண்டு போய் அடகு வைத்து, சூதாடி பணத்தைத் தோற்று விட்டான். இப்போது கைவளையல்களைப் பிடுங்க வந்தான். அவள் கொடுக்க மறுத்தபோது, விறகுக்கட்டையால் அடித்தான். வளையல்களை முரட்டுத்தன்மாகப் பிடுங்கிக் கொண்டு போனான். .

கமலத்தின் கைகள் வீங்கியிருந்தன. வலியிருந்தது. முதுகிலும் அடி விழுந்த தழும்புகள்.

அவள் அழுது புலம்பிக் கொண்டிருந்தது. மாமியாருக்குப் பொறுக்கவில்லை. “துடைகாலி, துப்புக் கெட்ட மூதேவி, விடியாமூஞ்சி, தரித்திரப்பீடை, சனிப்பாடை, நீ அடி எடுத்து வைத்ததிலிருந்து இந்த வீட்டிலும் மூதேவி புகுந்துவிட்டது. என் மகனும் களை இழந்து, அழகு குலைஞ்சு, சீக்காளியாகி, சந்தோஷமே இல்லாமல் ஆகிப்போனான்” என்றெல்லாம் ஏசலானாள். காசு வைத்துச் சீட்டாடிக் கொண்டிருந்தபோது, போலீசார் வந்து சந்திரசேகரனையும் அவன் கூட்டாளிகளையும் பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள். மாமியார்க்காரி பத்திரகாளி ஆகிவிட்டாள்: “சூன்யம் புடிச்ச மூதி; சவம், நீ அழுது அழுதுதான் இந்த வீட்டிலே இருள் மண்டிப் போச்சு. நீ உங்க வீட்டுக்குப் போ” என்று ஏசி, கமலத்தைத் துரத்தி விட்டாள்.

– மகள் சொன்னதைக் கேட்டதும் சிவசிதம்பரம் துயரப் பெருமூச்சு உயிர்த்தார். அவரால் வேறு என்ன செய்ய இயலும்?

அவரைப் பார்த்துப் பேச வந்த அருணாசலம், வீட்டு நிலவரத்தை அறிந்து, சிவசிதம்பரத்துக்காக அனுதாபப்பட்டார்.

… பெண்ணுக்குக் கல்யாணம் முடிந்ததும் ஒரு பிரச்சினை தீர்ந்ததுன்னு சொன்னிங்க. சமூக நிலைமை அப்படி இல்லை. பெண்ணுக்குக் கல்யாணம் ஆவதற்கு முன்னாலும் ஏகப்பட்ட பிரச்சினைகளை பெற்றோர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கு. கல்யாணத்துக்குப் பிறகும் பல பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதாகிறது. உண்மையில், ஒரு பெண்ணின் கல்யாணம் அவள் வாழ்க்கையில் புதியபுதிய பிரச்சினைகள் புகுவதற்கு வழிசெய்யும் வாசலாகத்தான் இருக்கிறது” என்றார் நண்பர்.

“பெரிய படிப்பு படிச்சவன், பணம் – சொத்து – பெரிய வேலை எல்லாம் உடையவன் நம்ம நிலைமைக்குச் சரிப்பட மாட்டான். சாதாரணப் படிப்பும், சுமாரான வேலையும், மத்தியதர நிலையும் உள்ள ஒருவன் தனக்கு மனைவியாக வருகிறவளை நல்லபடியாகக் கவனித்துக் கொள்வான். கண்கலங்கும்படி செய்ய மாட்டான்”னு எண்ணினேன். அவனும் மோசமாகத்தான் நடந்துகொள்கிறான்” என்று சிவசிதம்பரம் குறைப்பட்டுக் கொண்டார்.

“ஆண்மனம் என்பதுதான் இதுக்கெல்லாம் அடிப்படை. “ஆண்” என்ற எண்ணமே சமூகத்தில் பெரும்பாலருக்கு ஒரு திமிரை, கர்வத்தை, பேராசையை, பெண்ணை அடக்கி ஆளும் விருப்பத்தை, மனைவியை அடிமை போல் கருதும் போக்கை எல்லாம் தந்து கொண்டிருக்கிறது. பெண்ணை வாழ்க்கைத் துணையாக மதிக்கும் பண்பைவிட, பெண்ணைக் கொண்டு தனது அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் – வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் – தனது சுகசவுகரியங்களையும் பலவிதமான தேவைகளையும் பூர்த்தி பண்ண வேண்டும் என்ற நினைப்பும் நடப்புமே ஆண் களிடம் காணப்படுகிறது. இந்த நிலைமை மாறினால்தான் பெண் சமூகத்தில் நல்வாழ்வு பெற முடியும். அதற்கு ஆண்களின் மனம் புனிதமுற வேண்டும். அப்படி மனம் வெளுப்பதற்கு மருந்தோ, மார்க்கமோ ஏதாவது உண்டோ?” என்றார் அருணாசலம். அவர் ஒரு மாதிரியான நபர் என்பது மற்றவர்களின் எண்ணம்.

அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சிவ சிதம்பரத்தின் உள்ளத்து அனல், நெடுமூச்சாக வெளிப்பட்டது.

(“இதயம் பேசுகிறது”, 1981)

– வல்லிக்கண்ணன் கதைகள், ராஜராஜன் பதிப்பகம், 2000 – நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *