மனசாட்சி..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 12, 2013
பார்வையிட்டோர்: 8,205 
 

“ மது.. என்னாச்சு… நேத்துலர்ந்து பார்க்கிறேன் ஒரு மாதிரி டல்லா இருக்கே.. நீ டூர் போயிட்டு வந்ததிலர்ந்தே கலகலப்பா இல்ல… “ மதுமிதாவின் அம்மா கேட்க,

“ அம்மா… நம்ம பாட்டி உயிரோட இருந்திருந்தா.. நீ நல்லா பார்த்திட்டு இருப்பே இல்ல…?”

அவள் கேள்வியில் ஒரு நிமிஷம் ஆடிப்போன விஜயா…. “ இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம இதை கேட்கிற….”

“ அம்மா ஏதோ ஒரு ஃபிலீங்க்ஸ் அட்டாக்…. அதான் கேட்டேன்… என்னையும் , அப்பாவையும் இவ்வளவு நேசிக்கிற நீ நிச்சயம் இன்னோரு ஜீவனை வெறுக்க முடியாது….. “

“ ஏய் நீ என்னமோ குழம்பி போயிருக்க… அப்பா ஏதாவது உன் கிட்ட மனசு வருத்தப் படற மாதிரி சொன்னாரா…?

“ நோ மா… நாங்க திருச்சில மலைக் கோட்டை பார்த்துட்டு… ஒரு ஆர்ட்டிக்கிளுக்காக அன்னை இல்லம் …ங்கிற முதியோர் இல்லத்துக்கு போனோம். அங்க இருந்த வயசான தாத்தா… பாட்டியை எல்லாம் பார்க்கிறப்ப ரொம்ப பாவமா இருந்துச்சி… சொந்தம் இருந்தும் கவனிக்க முடியாம அனாதை ஆனவங்க.. அதிலயும் ஒரு பாட்டி கிருஷ்ணவேணின்னு… நம்ம நேட்டிவ் ஊரைதான்மா சொன்னாங்க…. நீ என் பேத்தி போலன்னு ரொம்ப பாசமா பேசினாங்க… அப்பா ஊராச்சே ஒரு வேளை அப்பாவை தெரியுமோன்னு பர்சில் வச்சிருந்த நாம மூணு பேர் இருக்கிற நம்ம போட்டோவில அப்பாவை காட்டினேன்… தெரியலைன்னுட்டாங்க… அவங்களுக்கு யாருமே கிடையாதாம்…. பட் என்னமோ தெரியலை நான் கிளம்பிறப்ப அவங்க கண்ணீர் சிந்தியது என்னால மறக்க முடியலைம்மா… என் மொபைல்ல கூட அவங்க போட்டோ எடுத்து வந்திருக்கேன்….

அப்பாவிடம் காட்ட… அதிலிருந்த அம்மாவை பார்த்து அதிர்ந்து போனான் ராகவன்.

“ மது… நாம என்ன விதைக்கிறோமோ… அதைதான் அறுவடை பண்ணமுடியும்… பெத்தவங்களை அனாதையா விட்ட பிள்ளைங்களுக்கும்.. அந்த நிலமை ஒரு நாள் வரும்… நாளை நீ கல்யாணம் ஆகி போற இடத்துல இத உணர்ந்தாலே.. பெரியவங்களை மதிக்கிற நல்ல தலைமுறை வளரும்…. வருத்தப் படாதே நீயும்.. நானும் இன்னொரு நாள் அவங்களை பார்த்துட்டு ஏதாவது உதவி செஞ்சிட்டு வரலாம்… போய் தூங்கு…”

“ அப்பான்னா… அப்பாதான்… உங்களுக்கு எவ்வளவு நல்ல மனசு…. !”கொஞ்சலாக கை பிடித்து முத்தமிட்டு சென்றாள்.

“ பாவி… பெத்த பொண்ணு முன்னாடியே என்னை குற்றவாளியா நிக்க வச்சிட்டியே… என் அம்மாவையே அவ அனாதைன்னு காட்டறப்ப… வேதனையில துடிச்சி போயிட்டேன்… எங்கம்மா கூட இருந்தா தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டி மிரட்டியே… தனியா கூட்டிட்டு வந்துட்ட… எனக்கு வேதனை தரக் கூடாதுன்னு அம்மாவே… இருக்கிற இடத்தை கூட சொல்லாம எங்கியோ.. போயிட்டா….. இப்பக் கூட பாரு… உன்னை காட்டிக் குடுக்காம… அவளுக்கு யாருமில்லைன்னு பொய் சொல்லியிருக்கா… நல்ல வேளை.. பாட்டி முகத்தை கூட மதுவுக்கு காட்டாமயே வளர்த்துட்ட… இல்லைன்னா.. உன் வேஷம் கலைஞ்சி இவ்வளவு மோசமானவளா நம்ம அம்மான்னு உன்னை வெறுத்து போயிருப்பா….. !”

குற்ற உணர்வு குறு குறுக்க… விஜயா உள்ளுக்குள் வருந்தி தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் …. “ மனசு எப்படி வேணா நடந்துகிட்டாலும்… என்னிக்காவது ஒரு நாள் தப்பா.. சரியான்னு கேட்க ஆரம்பிச்சுடும்… விஜயா…. இனி நாம நிம்மதியா தூங்கமுடியுமா….?”

ராகவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திரும்பிகொண்ட விஜயாவின் மனசாட்சி புரட்டி கொண்டே இருந்தது….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)