கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2019
பார்வையிட்டோர்: 14,186 
 

சண்மூவின் உள்ளங்கை தவளையின் உட்புறத்தில் இருப்பதைப் போலவே எப்பொழுதும் வியர்வையின் ஈரத்தன்மையுடன் இருக்கும்… நான் கீத்துவிடம் சொல்வேன்…

“சண்மூவோட உள்ளங்கையைப் பிடிச்சுப் பாரேன். லேப்ல தவளையைத் தொடற மாதிரியே இருக்கும்.’

அவள் என்தலையில் செல்லமாக அடித்து, “ஏய் உனக்கு கம்பேர் பண்ண வேற ஒண்ணும் கிடைக்கலையா?’ என்றாள்.

சண்மூவிடமே சொல்லி இருக்கேன்… முறைத்துக் கொண்டு அடிக்க வருவாள்.. ஒல்லியான குச்சி போன்ற தேகத்தில் இருக்கும் மஞ்சள் அழகி அவள். வேறொரு ஊரிலிருந்து தினமும் எங்கள் ஊருக்கு வந்து படித்துக் கொண்டிருந்தாள்.

சண்மூ என்கின்ற சண்முக சுந்தரி. ஓரளவிற்குப் படிப்பாள். லொடலொட வென நிறையப் பேசுவாள். பள்ளியின் பதினொன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது…

ஆசிரியர்கள் பிளஸ் டூவிற்கு அதிக கவனம் செலுத்தி ங்கள் வகுப்பிற்கு அதிகம் வர மாட்டார்கள். உட்கார்ந்து ஊர்க்கதைகள் கேட்பது, பாட்டுப்பாடுவது என உருப்படி இல்லாதவற்றை தேடிக் கொண்டிருந்த காலகட்டம்.

வகுப்பில் பதினாறு வயதிற்கே உரிய விடலைக் காதல் கிட்டத்தட்ட எல்லாரும் கொண்டிருந்தார்கள். கூடவே அந்த வயதில் காதலிக்கும் பொழுது நாம்தான் வகுப்பில் நாயகி என்ற மனோபாவமும் இருந்தது. அதனால் எல்லாரும் ஒரு காதலைத் தேடிக் கண்டுபிடித்து அதைப் பற்றி சிலாகிப்பதே வேலையாகக் கொண்டிருந்தனர்.

யாராவது ஒருத்தர் பள்ளிக்குப் புகைப்பட ஆல்பம் கொண்டுவந்தால் அடுத்தடுத்து எல்லாரும் தம்தம் வீட்டிலிருந்து கொண்டு வருவார்கள். எல்லாருக்கும் அந்த வாரம் பொழுது போகும்.
அப்படித்தான் அவளும் ஒரு புகைப்பட ஆல்பம் கொண்டு வந்தாள். அவள் அம்மா கெண்டைக் கால் வரைக்கும் ஒரு மிடி போட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் இவளும் இவள் அண்ணாவும் நின்று கொண்டிருந்தார்கள்.

“உன் அம்மா மிடி இப்பவும் போடுவாங்களா?’ நான் ஆச்சரியமுடன் கேட்டேன்.

“ஆமாம்டி.. என் அம்மாவும் அப்பாவும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்க’ என்றபடி,

அவள் அம்மா – அப்பாவின் காதல் கதையையும் அவர்கள் திருமணம் செய்த விதத்தையும் சொல்ல ஆரம்பித்தாள்.

சண்மூவின் அம்மா ராஜி கல்லூரி முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கும் பொழுது கல்லூரிக்கு தினமும் பேருந்தில்தான் செல்வார். அப்பொழுது அந்த பேருந்தில் நடத்துனர் தினமும் டிக்கெட் கொடுக்கும் சாக்கில் பேசி ராஜியைக் காதலிக்கவும் செய்து விட்டார். இருவரும் யாருக்கும் தெரியாமல் சினிமா செல்வது கோயில் செல்வது என இருந்திருக்கின்றனர்.
ஒருநாள் வீட்டில் விஷயம் தெரிய, ராஜிக்கு திருமணம் நிச்சயம் செய்து இரண்டே நாளில் திருமணத்திற்கு நாளும் குறித்திருக்கிறார்கள்.

ராஜிக்குத் துணையாக அவரது பாட்டியை அமர்த்தி விட்டு திருமணத்திற்கு உறவினர்களை அழைக்கச் சென்று விட்டிருந்தனர் அவரின் பெற்றோர். இதுதான் சமயம் என ராஜி தன் பாட்டிக்கு தூக்க மாத்திரைகளை பாலில் கலந்து கொடுத்து தூங்கச் செய்து விட்டு வீட்டில் வாங்கி வைத்திருந்த தாலியை ஒரு சரடில் கோர்த்துக் கொண்டு காதலனைத் தேடிச் சென்றிருக்கிறார். வழக்கமாகச் செல்லும் பேருந்தை தேடிச் சென்று அங்கே இருந்த தன் காதலனிடம் விஷயத்தை கூறி அவசரத்தையும் அவசியத்தையும் புரிய வைத்து “இந்த தாலியை இங்கேயே இப்பொழுதே கட்ட வேண்டும்’ என கூறியிருக்கிறார். நேரம் காலம் எதுவும் பார்க்காமல் எந்தப் பேருந்தில் அவர்கள் காதல் வளர்ந்ததோ அதே பேருந்தில் எல்லாரும் பார்க்க சண்மூவின் அப்பா அவள் அம்மாவிற்குத் தாலியைக் கட்டினார். பின் போலீஸிடம் தஞ்சம் அடைந்திருக்கின்றனர். உறவினர்களை திருமணத்திற்கு அழைத்து விட்டு வந்த அவரது பெற்றோருக்கு பேரதிர்ச்சி! இனிமேல் இவள் தங்களுக்குப் பெண்ணே இல்லை என்று கூறிவிட்டனராம். சண்மூ பிறந்ததும்தான் ராசியானதாகச் சொன்னாள்.
“ஜாலிதான் சண்மூ. நாளைக்க நீ லவ் பண்ணினா வீட்ல டபுள் ஓகேதான்?’

இதை நான் அவளிடம் கூறியபோது அவள் வெட்கமும் மகிழ்ச்சியும் ஒரு சேரச் சிரித்தது இன்றும் நினைவில் இருக்கிறது.

நாங்கள் பள்ளி இறுதி வகுப்பிற்கு வந்தோம். அப்பொழுது பள்ளிக்கு அருகே இருந்தே ஒரு டியூஷன் சென்டரில் கெமிஸ்ட்ரிக்கு ட்யூஷன் சென்றோம்.

சண்மூவிற்கு அங்கே படிக்க வந்த சுந்தர் என்ற மாணவனுடன் காதல் துளிர்த்திருந்தது. அவன் அப்பவே கூலிங் கிளாஸ் பைக் சகிதம் ட்யூஷனுக்கு வருவான். சண்மூவின் முகத்தில் பெருமை பூக்கும். அவனைக் காதலிக்க ஆரம்பித்தவுடன் அவள் மஞ்சள் முகம் மேலும் பொலிவுற்று மின்னியது. இருவரும் ட்யூஷன் சென்டரில் சைகையில் பேசிக் கொள்ளும் போது எங்களுக்கு காதில் புகை வரும்… அவன் பூ வாங்கித் தருவதும் இவள் பதிலுக்கு ஏதாவது தருவதும் பார்க்க பொறாமையாக இருக்கும்.

ஒருநாள் ட்யூஷன் முடிந்ததும் இருவரும் சேர்ந்து வண்டியில் போனதை எல்லாரும் திகைப்புடனும் அதிர்ச்சியுடனும் பார்த்த போது அவள் சுலபமாக டாட்டா காண்பித்துவிட்டுப் போனாள்.
சண்மூ என்னிடம் நன்றாகப் பழகிய தோழியாக இருந்த போதிலும் மிக நெருக்கமானவற்றைப் பேசும் அளவிற்கு எங்களிடம் நட்பு கிடையாது. அவளின் நெருக்கமான தோழி சுமா. அவளுக்கும் ஒரு காதல் இருந்தது. வகுப்பில் அவர்கள் ரகசியமாக ஏதாவதுபேசிக் கொண்டே இருப்பார்கள்.

எனக்கும் கீத்துவிற்கு இருக்கும் வேலை யார்யாரெல்லாம் காதலிக்கிறார்களோ அவர்கள் வகுப்பிற்கு வெளியே சென்றிருக்கும் நேரம் பார்த்து அவர்களின் பையைக் கிளறி இருக்கும் காதல் கடிதங்களைத் திருடி வீட்டிற்கு வந்து படிப்பதுதான். சண்மூவின் கடிதங்களையும் தேர்வுக்குப் படிப்பதுபோல் விழுந்து விழுந்து படித்திருக்கிறோம்.

பள்ளிப் படிப்பு முடிந்ததும் சண்மூவிடம் நட்பு தொடரவில்லை. ஆனால் சுமா எங்கள் ஊரிலேயே வசித்தாள். எப்பொழுதாவது அவள் வீட்டிற்கு செல்ல நேரிடும், அப்பொழுதெல்லாம் சண்மூவைப் பற்றி நான் கேட்பேன். கல்லூரியிலும் சண்மூவின் காதல் தொடர்ந்ததாகச் சொன்னாள்.

புதிய படிப்பு புதுத் தோழிகள் என கல்லூரியின் சுற்றுச் சூழலில் சண்மூவைப் பற்றி ஞாபகம் இல்லாமல் போனது… படிப்பு முடிந்து என்குத் திருமணம் ஆனபின் ஒருமுறை என் அக்காவுடன் சுமா வீட்டிற்கு சென்றேன். அப்பொழுது சுமா சண்மூவைப் பற்றி கூறினாள்.

அவளின் அம்மா அவளது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் அவளும் சுந்தரும் ஓடிச் சென்று திருமணம் செய்து கொண்டதாகச் கூறினாள். அவள் ஓடிச் சென்று திருமணம் செய்ததில் எனக்கு வியப்பில்லை. ஆனால் காதல் மணம் செய்த அவளது பெற்றோர் ஏன் எதிர்த்தனர் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

வருடங்கள் கழிந்தன. குடும்பத்துடன் ஒரு விசேஷத்திற்காக மும்பை செல்ல வேண்டியிருந்தது. ரயிலில் சென்று கொண்டிருநதபோது கழிவறை செல்ல நடந்த போது அதே கோச்சில் சண்மூவையும் பார்த்தேன்.. ஆச்சரியமாக இருந்தது. என்னைக் கண்டதும் கட்டிப் பிடித்துக் கொண்டாள். இந்தப் பத்து வருட இடைவெளியில் அவளது ஒடிசலான தேகம் சற்று பூசியிருந்தது. அவ்வளவே மாற்றங்கள்.

பரஸ்பரம் விசாரித்த பின் அவளது கணவனையும் குழந்தையையும் அறிமுகம் செய்தாள். எனக்கு குழப்ப ரேகைகள் தோன்றியது.. அது சுந்தர் அல்லவே? வேறொருத்தனை கணவன் என்று அறிமுகம் செய்கிறாள். சிறிது நிமிடங்கள் பேசிய பின் நாசூக்காய் அவளைத் தனியே அழைத்து வந்தேன்.

“நீ சுந்தரை கல்யாணம் பண்ணினதா சுமா சொன்னாளே..’ என்றேன்.

அவள் அதிர்ந்தாள்.

“மெல்லமா பேசு. இந்த விஷயம் என் புருஷனுக்குத் தெரியாது. நான் அவனைக் கல்யாணம் செஞ்சது உண்மைதான். ஆனா நாங்க செஞ்ச ஒரே தப்பு கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம் எங்க அப்பா அம்மாவைப் பார்க்கப் போனதுதான். கல்யாணம்தான் செஞ்சாச்சே.. இனிமே அவங்களால எதுவும் பண்ண முடியாது. கோபம் எல்லாம் குறைஞ்சிருக்கும்னு நெனைச்சுதான் போனோம்.. ஆனா அவங்க என்னையும் அவனையும் அடிச்சு என் தாலியைப் பிடுங்கிஎறிஞ்சுட்டாங்க அப்புறம் என் பெரியம்மா பாம்பேல இருக்கிறதால் நைட்டோட நைட்டா என்னைக் கூட்டிட்டுப் போய் கொஞ்ச நாள் கழிச்சு அங்க இவருக்கு என்னைக் கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க.’

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது…. என்ன ஒரு வன்மம், பெற்றோர் காதல் திருமணம் செய்துக்கலாம். ஆனால் மகள் செய்துக்கக்கூடாதா? அவளுக்குப் பிடித்தமானவனை அவள் தேர்வு செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

“சரி, சுந்தர் என்ன ஆனான்?’

“அவன் ஆஸ்திரேலியால இருக்கிறதா கேள்விப்பட்டேன். நான் ரொம்பவே நல்லா இருக்கேன். முதல்ல ரொம்ப அழுதேன். மனசு உடைஞ்சேன். ஆனா என்னை இவர் குணம் மாத்திடுச்சு. நல்லா சந்தோஷமாதான் இவர் வச்சுருக்கார். வர்கிட்ட உண்மையச் சொல்லலை.’

“சரி.. உன் ஹஸ்பெண்டுக்கு விஷயம் தெரிஞ்சுடுச்சுன்னா என்ன பண்ணுவ?’

“சத்யமா தெரியலடி… நிறைய நாள் சொல்லலாம்னு நினைப்பேன். ஆனா பயமா இருக்கும்.. அப்புறம் சொன்னவடனே இவர் மனசு மாறிடுச்சுன்னா? குடும்பத்துல இருக்கிற நிம்மதி போயிடும்.. ஊர்ப் பக்கம் வர்றதே இல்ல. இவருக்கும் அங்க யாரையுமே தெரியாது. அதனால தப்பிச்சேன்..’

“ஆனா இவர் ரொம்ப நல்லவர்டி… சொல்லப் போனா அவன் கூட இவ்வளவு நல்லா வச்சு இருப்பானான்னு சந்தேகம்தான்… நான் ஹேப்பியாக தான் இருக்கேன்’ என்று புன்னகைத்தாள்.
அவளையே பார்த்தபடி அவளின் கையை அழுந்தப்பிடித்தேன். தவளையின் உட்புறம் போல் முன்பிருந்த வியர்வையின் ஈரப் பிசுபிசுப்பில்லாமல் வறண்டிருந்தது அவளின் உள்ளங்கைகள்!

– மே 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *