மகளின் முடிவு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 2,250 
 
 

ரகுவரன் அப்பொழுதுதான் பணி முடிந்து, வீட்டிற்குள் நுழைய காலை வைத்தவனின் காதில் மனைவி சங்கீதாவின் சத்தம்தான் முதலில் கேட்டது. யாரை இவ்வளவு வேகமாக திட்டுகிறாள்? யோசனையுடன் உள்ளே நுழைந்தவனுக்கு ஆச்சர்யம். மகள் பரிமளாவைத்தான் அப்படி திட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். இதுவரை மகளை அவள் இப்படி திட்டியதை பார்த்த்தே இல்லை. அவளும் அம்மாவை எல்லா விஷயங்களிலும் அனுசரித்து போகுபவள் ஆயிற்றே ? வியப்புடன் மகளின் முகத்தை பார்த்தான். அங்கே இவள் சத்தம் போட்ட அளவுக்கு பரிமளா எதிர் வினை எதுவும் காட்டாமல் அழுத்தமாய் நின்று கொண்டிருந்த்தை கண்டான்.

இவனை கண்டவுடன் அவளது புருவம் சற்று விரிந்ததே அன்றி அம்மாவின் பேசும் பேச்சுக்களுக்கு அழுகையோ, ஆத்திரத்தையோ காட்டாமல் இயல்பாய் வைத்துக் கொண்டிருந்தாள்.அது மட்டுமல்ல அம்மாவை குற்றம் சாட்டும் பார்வையை கூட காட்டவில்லை. ஆனால் மனைவி இவனை கண்டவுடன் மேலும் சற்று குரலை உயர்த்தி மீண்டும் நான்கைந்து வார்த்தைகள் பேசி முடிக்கும் போது “எல்லாம் உங்கப்பா கொடுக்கற செல்லம்” என்று முத்தாய்ப்பாய் ஒரு வார்த்தையில் முடித்து விட்டு இவனுக்கு காப்பி கலக்க உள்ளே சென்றாள்.

அவள் அப்படி அமைதியாய் சமையலறைக்குள் நுழைந்தவுடன் சோவென மழை பெய்து ஓய்ந்த்து போல் இருந்தது ரகுவரனுக்கு. வந்த ஐந்து நிமிடத்துக்குள்ளேயே இவனுக்கு இப்படி இருந்தது என்றால் கிட்டத்தட்ட அரை மணி நேரமாவது இருக்கவேண்டும் அம்மாவின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்த பரிமளாவுக்கு எப்படி இருந்திருக்க வேண்டும். அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து அவளை கூர்ந்து நோக்கினான். அவள் தலையை சற்று குலுக்கிக்கொண்டு அவன் அருகில் வந்தாள்.

ஏன் அம்மா உன்னை அப்படி பேசிட்டு போறா?

ஒண்ணுமில்லை,… லை என்று முடிக்கும்போதே ஏதோ இருக்கிறது என்று புரிந்தது அவனுக்கு. அதற்கு தகுந்தாற்போல்..அவனது கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக காப்பியை கையில் கொண்டு வந்தவாறே அவ எதுவும் சொல்ல மாட்டா, கல்லுளி மங்கன் மாதிரி நிக்க சொல்லுங்க, எவ்வளவு நேரம் வேணும்னாலும் நிப்பா.. குற்றம் சாட்டியபடி வந்த சங்கீதாவிடம் நீ கொஞ்சம் பேசாம் இருக்கியா? நான்தான் கேட்டுட்டு இருக்கேனே?

அவளை எதுக்கு கேக்கறீங்க? எங்கிட்ட கேளுங்க, இதுவரைக்கும் கிளாஸ்ல பஸ்ட் மார்க்கை தவிர என்னைக்கும் குறைச்சலா வாங்கிட்டு வந்ததே இல்லை. இப்ப பாருங்க, கிளாஸ்ல ‘தேர்ட் ரேங்க்’ வாங்கிட்டு வந்திருக்கா ! கேட்டா கல்லுளி மங்கன் மாதிரி நிக்கறா. நல்லாத்தான் எழுதனேன்னு சொன்னாலே ! மனைவியின் குரலில் இவளே தேர்வு எழுதி மார்க் குறைந்து போன ஆற்றாமை அழுகையாய் தெரிந்தது.

இவ்வளவுதானா? எட்டாவது படிக்கும் பெண் ஒரு தடவை மதிப்பெண் குறைந்து பின் தங்கி விட்டால் உடனே அவளை கண்டிப்பதா? மனம் கேட்காமல் மனைவியிடம் உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? இதுவரைக்கும் அவ நல்ல மார்க் எடுத்துட்டுத்தானே இருக்கா? இந்த தடவை கொஞ்சம் குறைஞ்சுடுச்சு, அதுக்கு போய் ஊரே கேட்கற மாதிரி இப்படி கூப்பாடு போட்டு அவளை இம்சை படுத்தறே.

ஆமா உங்களுக்கு என்ன? ‘டாண்ணு’ வீட்டுக்கு வந்தா எல்லாம் கிடைச்சுடுது, இவளை பள்ளிக்கூடம் கொண்டு போய் விட்டுட்டு சாயங்காலம் வேலை முடிஞ்சு வரும்போது கூட்டிட்டு வந்து இராத்திரி எட்டு மணி வரைக்கும் அவ கூடவே உட்கார்ந்து என்ன என்ன கிளாஸ்ல நடந்துச்சுன்னு, அன்னன்னைக்கு பாடங்களை படிக்க வச்சு கேள்வி கேட்டு, பதிலை வாங்கி,அதுக்கப்புறம் உங்க இரண்டு பேருக்கும் சமைச்சு போட்டு….மூச்சு விடாமல் மறுபடி பேசிக்கொண்டே போனாள்.

உங்களுக்கு என்ன? நீங்க பேசுவீங்க, ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்த உடனே காப்பி, அப்புறம் பேப்பர் எடுத்து வச்சு உட்கார்ந்துக்கறது. புள்ளை என்ன படிக்கறா? என்ன செய்யறா எதுன்னா தெரியுமா?

அவளின் தாக்குதல் இப்பொழுது இவன் மீது பாய், இவன் சட்டென்று அமைதியானான். இவனால் முடிந்த அளவுக்கு அவளுக்கு ஒத்தாசை செய்து கொண்டுதான் இருக்கிறான், இப்பொழுது அதை சொல்லி காட்டினால் வீண் சண்டைதான் வரும். பிறகு அவள் மகளை கண்டித்து பேசியதற்கு பலன் இல்லாமல் போய் விடும். நினைத்தவன் அமைதியாக காப்பியை குடிக்க ஆரம்பித்தான்.

மனைவி சமையலறையில் ஏதோ உருட்டும் சத்தம் இங்கிருந்தே கேட்டது. அமைதியாய் டேபிளில் உட்கார்ந்து ஏதேனும் கவிதை எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ரகுவரன் எதிரில் பரிமளா வந்து அமர்ந்தாள். ஒரு நிமிடம் அப்பாவையே கூர்ந்து பார்த்தவள் ‘சாரி டாட்’ அம்மாகிட்டேயிருந்து உனக்கும் திட்டு வாங்கி கொடுத்துட்டேன்.

‘சே..சே..என்னடா இப்படி சொல்லிட்டே, ஏதோ ஒரு தடவை இப்படி நடந்துடுச்சுன்னு உங்க அம்மா சத்தம் போடறான்னா, அதை கண்டுக்காம விட்டுடலாம், என்ன சரிதானே’, அவளை பார்த்து கேட்கவும், ‘சாரி டாட் நான் இனிமேல் எப்பவும் ‘செகண்ட்’, இல்லாட்டி ‘தேர்ட்ராங்க்’ தான் வாங்கனும்னு முடிவு பண்ணிட்டேன்’. வியப்பாய் இருந்தது ரகுவரனுக்கு, ‘என்னடா இப்படி சொல்றே? எல்லாரும் முதல் ராங்க்தான் வாங்க டிரை பண்ணுவேன்னு சொல்லுவாங்க, நீ அப்படியே டர்ன் அடிச்சு, முதல் ரேங்க் வாங்கறவ செகண்ட், தேர்ட் ரேங்க் வாங்கப்போறேன் அப்படீன்னு சொல்றே ? உங்கம்மா உன்னை திட்டிட்டான்னு கோபமா? அதை எல்லாம் மனசுல வச்சுக்காதே’. அன்புடன் சொன்னான்.

‘இல்லை டாட் உண்மைதான்’ அவள் மீண்டும் அழுத்தம் திருத்தமாய் சொன்னவள் ‘டாட் உனக்கு மைதிலிய பத்தி தெரியுமில்லை ?’ யார் மைதிலி ஒரு நிமிடம் யோசித்தவன் ‘ஓ உன் கூட படிக்கற பொண்ணில்லை, அவங்கப்பா கூட ஏதோ ஆபிசுல பெரிய ஆபிசரா இருக்கறதா சொல்லியிருக்கறயே?’

‘யெஸ் டாட், அவங்கம்மா கூட அதே மாதிரி பேங்க்ல பெரிய ஆபிசரா இருக்கறவங்க’.

‘சரி அவங்களுக்கு என்ன?’

‘அவங்க இரண்டு பேரும் ரொம்ப ‘சாடிஸ்டா’ மைதிலிகிட்ட படிக்கிற விசயத்துல நடந்துக்கறாங்கன்னு சொன்னா, ஒவ்வொரு முறையும் செகண்ட், தேர்ட் ராங்க் எடுத்துட்டு வீட்டுக்கு போனா, இரண்டு பேரும் மாறி மாறி திட்டறது, சில நேரங்கள்ல அவங்கப்பா அடிக்க கூட செஞ்சிடறாராம், இரண்டு பேரும் இவ கூட பேசாம முகத்தை தூக்கி வச்சுட்டு இரண்டு நாள், இல்லை மூணு நாள் இருப்பாங்களாம். இவ போய் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டு அழுத பின்னாடிதான் பேசுவாங்களாம். இதையெல்லாம் சொல்லி சொல்லி என் கிட்டே அழுவா. நான் என்ன பண்ணுவேன்? உன் கூட நானும் போட்டி போட்டுத்தான் படிக்கிறேன், அப்பவும் உன் பின்னாடிதான் வர்றேன், அவ என் கிட்டே சொன்னப்ப நான் அவளுக்கு விட்டுக்கொடுக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்த தடவை அவதான் ‘கிளாஸ் பர்ஸ்ட்’. பார்க்கலாம் இப்பவாவது அவங்க வீட்டுல இவ மேலே சந்தோசமா இருப்பாங்களான்னு’.

ரகுவரனுக்கு சட்டென உள்ளுக்குள் ஒரு குளுமை பரவியது. இவள் வேண்டுமென்றேதான் மதிப்பெண்ணை குறைவாக பெற்றிருக்கிறாள். அதுவும் தன் தோழிக்காக. இவள் தோழி சொன்னது பொய்யோ உண்மையோ, ஆனால் இவளின் எண்ணம் தூய்மையானது. இதில் நாம் ஒரு கருத்தை சொல்லி அவளை திசை திருப்ப வேண்டாம். அப்புறம் மைதிலியின் பெற்றோருக்கும் நமக்கும் வித்தியாசமில்லாமல் போய் விடும். மனதிற்குள் முடிவு செய்தவன் அன்புடன் மகள் தோள் மேல் கை போட்டு ‘ரொம்ப கிரேட்’ டா உன்னுடைய எண்ணம், ஆனா அதே நேரத்துல உன் படிப்பு ரொம்ப பின்னாடி போகாம பார்த்துக்கணும்’. பரிமளாவின் கண்களில் தெரிந்த பளிச்சென்ற ஒரு மின்னல் ‘தாங்க்ஸ் டாட், ஆனா அம்மா….ஏதாவது சொல்லுவாங்களே!’

‘நீ கவலைப்படாதே, அம்மாகிட்டே உன்னுடைய எண்ணங்களை சொல்லி புரியவைக்கறது என்னோட பொறுப்பு. ஆனா உன்னோட படிப்பு முதல் ரேங்க் இல்லையின்னாலும், கீழே இறங்காம மட்டும் பாத்துக்கணும் என்ன சரிதானே? கீப்..இட்..அப்..’

மகள் சந்தோசமாய் எழுந்து போவதை பார்த்துக்கொண்டிருந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *