போராட்டமே வாழ்க்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 7,291 
 
 

என்னுடைய மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தேன். சுமதியின் பெயர் ஒளிர்ந்தது. எடுத்துப் பேசினேன்.

“ஹாய் கண்ணன், நான் சுமதி. இன்று இரவு டின்னருக்கு கோல்டன் பார்ம்ஸ் ஹோட்டலுக்கு வர முடியுமா? நமக்கு டேபிள் புக் பண்ணிட்டேன். உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”

“என்ன விஷயம், இப்பவே சொல்லேன் சுமதி.”

“ப்ளீஸ் நேர்ல வாங்க சொல்றேன்.”

“ஓகே கண்டிப்பா வரேன்.”

சுமதியும் நானும் பெங்களூரில் உள்ள அந்த பன்னாட்டு நிறுவனத்தில் ஹெச்.ஆர். டிப்பார்ட்மென்டில் ஒன்றாக வேலை செய்தோம். நான் அப்போது அங்கு ஜெனரல் மானேஜராக இருந்தபோது அவள் புதிதாகச் சேர்ந்தாள். துடிப்பானவள். வேலையில் கெட்டிக்காரி. ஒளிவு மறைவில்லாமல் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்று வெளிப்படையாக பேசுவாள். தனக்குப் பிடிக்காத எதையும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ள மாட்டாள்.

ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அவளுக்கும் அவள் கணவன் லோகேஷுக்கும், அவன் அடிக்கடி குடிப்பதால் தகராறு வரும். அதை என்னிடம் சொல்லி வருத்தப் படுவாள். அவளுக்கு நான்கு வயதில் நரேன் என்று ஒரு மகன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். லோகேஷின் கெட்ட நடவடிக்கைகளினால் அவள் நிம்மதியாக வாழ முடியாது தவித்தாள்.

ஒரு நாள் இரவு லோகேஷ் அதிகமாக குடித்துவிட்டு வீட்டின்முன் நின்று சுமதியை அசிங்கமாக திட்டியதில், அந்தத் தெருவே கூடிவிட்டது. இதை மறுநாள் என்னிடம் சொல்லி சுமதி அழுதபோது, நான் அவளுடன் லோகேஷிடம் பேச அவள் வீட்டிற்கு சென்றேன். அவன் பகலில் குடித்துக் கொண்டிருந்தான். எங்களைப் பார்த்ததும் சமதியிடம், “என்னடி நீ இவன வச்சுக்கிட்டு இருக்கியா?” என்று சீறினான். நான் ஒன்றும் பேசாது திரும்பி விட்டேன்.

மறுநாள் சுமதி என்னிடம் லோகேஷை தான் விவாகரத்து செய்ய முடிவு செய்து விட்டதாகவும், நரேனை நன்கு படிக்க வைப்பதுதான் தன் லட்சியம் என்றும் சொன்னாள்.

லோகேஷும் அதற்கு ஒப்புக் கொண்டதால் விவாகரத்து மிக விரைவில் அவளுக்கு கிடைத்து விட்டது.

அடுத்த ஒரு வருடத்தில் என்னிடம் வந்து, தன்னுடன் கல்லூரியில் படித்த மஞ்சுநாத் என்பவரை சந்திக்க நேர்ந்ததாகவும், அவர் பெங்களூர் இந்திரா நகரில் ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்ட் வைத்திருப்பதாகவும், அவர் தன்னை மணந்து கொள்ள விரும்புவதாகவும் இவளும் சரி என்று சொல்லிவிட்டதாகவும் சொன்னாள். அடுத்த இரண்டு மாதங்களில் அவர்கள் கல்யாணம் நடந்தது. அந்தக் கல்யாணத்திற்கு நானும் என் மனைவியும் போயிருந்தோம். .

சுமதி-மஞ்சுநாத் மற்றும் சுமதியின் முதல் திருமணம் மூலமாக பிறந்த நரேன் மூவரும் ஒன்றாக வாழ்ந்தார்கள். மஞ்சுநாத்தின் புரிதல் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டாயிற்று.

அடுத்த வருஷமே சுமதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இருவரும் பெண் குழந்தைகள். சுமதி தனக்கு பிறந்த மூன்று குழந்தைகளையுமே நன்றாகப் பார்த்துக்கொண்டு, அலுவலக வேலைகளையும் திறம்பட செய்தாள். நல்லவிதமாக சுமதி வாழ்க்கையில் செட்டில் ஆனது குறித்து நானும் என் மனைவியும் பெருமைப் பட்டோம்.

அடுத்து சுமதி நரேனுக்கு சிறப்பாக பூணூல் கல்யாணம் செய்தாள். அதற்கும் நானும் என் மனைவியும் சென்றோம். அவளது இரட்டைக் குழந்தைகளை தூக்கி கொஞ்சினோம். கொள்ளை அழகு. அவர்களைப் பிரியவே எங்களுக்கு மனம் வரவில்லை.

அதற்கு அடுத்த இரண்டு வருடங்களில் எனக்கு ஐம்பத்தெட்டு வயதாகிவிட்டதால் நான் ரிடையர்ட் ஆகிவிட்டேன். ஆனால் சுமதி என்னிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தபடியால் அவ்வப்போது குழந்தைகளுடன் எங்கள் வீட்டிற்கு வருவாள். தொலைப்பேசியில் என்னை தொடர்பு கொண்டு தன் அலுவலக சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வாள்.

பல மாதங்கள் கழித்து இன்றுதான் அவளை பார்க்கப் போகிறேன்.

கோல்டன் பாம்ஸ் வந்ததும், என் காரை வாலே பார்க்கிங் கொடுத்துவிட்டு, உள்ளே சென்றேன். நீச்சல் குளத்தின் அருகிலுள்ள புல்வெளியில் அமர்ந்திருந்த சுமதி என்னைப் பார்த்து எழுந்து நின்று கையை அசைத்தாள்.

நான் சென்று அவள் எதிரில் அமர்ந்தேன்.

எனக்கு அப்சொல்யூட் வோட்கா ஒரு லார்ஜும், ஸ்ப்ரைட்டும் ஆர்டர் கொடுத்துவிட்டு, அவளுக்கு ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் செய்தாள்.

இருவரும் ஆபீஸ் விஷயங்கள் நிறைய பேசினோம்.

“குழந்தைகள் எப்படி இருக்காங்க?”

“குழந்தைகள் மூவரையும் இப்ப என் அம்மாகிட்ட மைசூரில் விட்டு வைத்திருக்கிறேன்.”

எனக்கு இரண்டாவது லார்ஜ் ஆர்டர் செய்ததும், “என்ன சுமதி, எதுக்கு வரச்சொன்னே? ஏதாவது முக்கியமான விஷயமா?” என்றேன்.

“ஆமாம்…வர வர மஞ்சுநாத்தின் நடவடிக்கைகள் சரியில்லை கண்ணன்.”

“மறுபடியும் ஏதாவது ஆரம்பிக்காத சுமதி. அவன் குடித்தாலும, ரேஸுக்குப் போனாலும் அவனை நீ திருத்தப்பார். உனக்கு இப்ப மூன்று குழந்தைகள். அவர்களின் எதிர்காலம் ரொம்ப முக்கியம்.”

“கண்ணன் ப்ளீஸ்…எனக்குன்னு வாழ்க்கைல சில குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடாதா என்ன? ஆண்களிடம் நேர்மையையும், ஒழுக்கத்தையும் எதிர்பார்க்கக் கூடாதா? அளவோடு குடித்து, பண்போடு நடந்து கொண்டால் என்ன? பெண்களை மரியாதையாக நடத்தினால் என்ன? இப்ப நீங்க இல்லையா? லோகேஷ் மொடாக் குடியன். விவாகரத்து பண்ணேன். இவன் நான் வீட்டில் இல்லாதபோது, பெண்களை வீட்டுக்கு கூட்டி வந்து கும்மாளமடிக்கிறான். ச்சீ அசிங்கமான ஜென்மங்கள்…”

“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?”

“எங்களுடைய பெட்ரூமில் தினமும் வேறு வேறு விதமான சென்ட் வாசனை அடிக்கும். படுக்கை கலைந்திருக்கும். நீளமான தலை மயிர்கள் கிடக்கும். சந்தேகத்தை உறுதி செய்து கொள்ள நம் கம்பெனியில் உற்பத்தி செய்யும் ரகசிய காமிராவை ஒரு நாள் பெட்ரூமில் இன்ஸ்டால் செய்தேன். அதை மஞ்சு இல்லாதபோது பென் ட்ரைவில் போட்டு டிவியில் பார்த்தேன். ஓ காட்…இவனோடு ரெண்டு பெண்கள் நிர்வாணமா…குரூப் செக்ஸ் வைத்துக் கொண்டார்கள். அவர்களின் செய்கைகள் அநாகரீகத்தின் உச்சம். கண்றாவி…. குமட்டிக் கொண்டு வந்தது. எனக்கு மட்டும் ஏன் இப்படி கண்ணன்?”

அவள் குரல் உடைந்தது.

இதை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

“சரி, அப்புறமா நீ என்ன செய்தாய்?”

“மஞ்சு வீட்டுக்கு வந்ததும், அவனிடம் அந்தக் கண்றாவியை போட்டுக் காட்டி, எதுக்கு இப்படி எனக்கு துரோகம் பண்றேன்னு கேட்டேன்.”

அவன் ஷாக்காகி பிறகு சமாளித்துக்கொண்டு, “வீட்டுக்குள்ளேயே ரகசிய காமிராவினால் புருஷனையே வேவு பார்க்கறையே, நீயெல்லாம் ஒரு பொம்பளையான்னு என் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் கண்ணன். பண்ணுகிற தப்பையும் பண்ணிட்டு, அவன் என்னை கை நீட்டி அடித்ததை என்னால் மன்னிக்கவே முடியாது. அவனை டிவோர்ஸ் பண்ணப் போறேன்.”

“பண்ணிட்டு?”

“இங்க பாருங்க என் அடுத்த ஹஸ்பெண்டுக்கு நேத்து டைம்ஸ்ல விளம்பரம் கொடுத்தேன். அதுல எனக்கு மூன்று குழந்தைகள் இருப்பதையும் இரண்டு முறை ஏற்கனவே திருமணம் ஆனதையும் சொல்லியிருக்கிறேன்….நான் நேர்மையா இருக்கும்போது, எதுக்கு பயப்படணும் கண்ணன்? இன்னிக்கி வர்கீஸ்னு ஒருத்தர் ரெஸ்பாண்ட் பண்ணியிருக்காரு.”

அவைகளை என்னிடம் காண்பித்தாள்.

“எனக்கு உன்னை நினச்சா ரொம்ப கவலையாக இருக்கு சுமதி.”

“நான் போராடிப் பார்த்துடறதுன்னு முடிவு பண்ணிட்டேன் கண்ணன். ஆப்டர் ஆல் பெண்களுக்கு போராட்டம்தானே வாழ்க்கை.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *