பொய் முகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 10,284 
 

”நீ சரக்கடிப்பியா?”

‘ம்.. எப்பவாச்சும்.. வெளியூர் போனா மட்டும்’

“வெளியூரில் தான இருக்கோம். அப்ப இன்னிக்கு நைட்டுக்கு நாம் சேர்நது சரக்குப்போடுவோம்.. ரூம்முக்கு வந்துடு” என்று கோமதிசங்கர் தான் என்னை அழைத்தார்.

பொதுவாகவே நான் தண்ணியடிப்பதை விட்டு, பல வருடங்களாகிவிட்டன. பள்ளி இறுதியில் தொடங்கிய பழக்கம், கல்லூரி முழுவதும் கூடவே வந்தது. வேலை தேடிக்கொண்டிருந்த போதும் தண்ணியடித்துக் கொண்டு தான் இருந்தேன். அறை நண்பர்களில் யாராவது ஒருத்தன் தண்ணியடிக்க அழைத்துச்சென்று விடுவான். தூங்கிக்கொண்டிருக்கும் போது எழுப்பி, தண்ணியடிக்க அழைத்துப் போய் விடுவார்கள். அம்புட்டு பாசம்.
வேலைக்கு சேர்ந்து முதல் மாச சம்பளம் வாங்கிய அன்று நண்பர்களுக்கு நான் பார்ட்டி கொடுத்தேன். ஆறுபேர், எட்டு பியர்கள், நாலு ஃபுல். அதுவும் பத்தாது என்று குமார் வெளியில் போய் ப்ளாக்கில் இரண்டு ஆப் வாங்கி வந்தான். ஏற்கனவே அடித்திருந்த சரக்கும், குமார் வாங்கிவந்த சரக்கும் வேறுபட, இருவர் கழண்டு கொண்டார்கள். நாங்கள் நால்வர் மட்டும் அடித்தோம். அடுத்த நாள் எழுந்திரிக்கவே முடியாத தலைவலி. அதன் பின் எப்போ தண்ணியடித்தாலும் அடுத்த சில மணி நேரங்களில் தலைவலி வந்துவிடும். என்னென்னவோ பண்ணிப் பார்த்தும், தலைவலி விட்ட பாடில்லை என்பதால் சரக்கடிப்பதையே நிறுத்தி வைத்திருந்தேன். கோமதிசங்கர் கேட்டதும், ஏனோ மறுக்கத் தோன்றவில்லை.

நீங்கள் ஒருவரோடு சேர்ந்து தண்ணியடிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நாலு ரவுண்ட் போன பிறகு எதிரில் இருப்பவர், தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்கிறார். உங்களுக்கோ காரணம் ஏதும் தெரியாது. ஒன்றாக அலுவலகத்தில் பணியாற்றக்கூடியவர். உங்களுக்கு சீனியர். அவ்வளவு தான் அவரைப் பற்றி உங்களுக்கு தெரியும். உறுதியாக அவர் ஏன் அழகிறார் என்று தெரியாமல் எப்படி நீங்கள் சமாதனப்படுத்த முடியும்? அப்படித்தான் அன்று என் நிலைமையும் இருக்கிறது.

காலையில் ஷூட்டிங்க் ஸ்பாட்டில் ஏற்பட்ட ஏதோவொரு குளறுபடி காரணமாக பாஸ் போன் போட்டு இவரை திட்டினாராம். நான் வெளி வேலையாக அலைந்து கொண்டிருந்ததால், அவ்வளவு தான் எனக்கு தெரியும்.. அதற்காக இப்படி தண்ணியடித்துவிட்டு அழுவதில் என்ன ஆகிவிடப்போகிறது.

பொதுவாகவே லாகிரி வஸ்துக்கள் மனிதனின் ஆழ்மனதில் புதைந்துகிடக்கும் விசயங்களை கிளறிவிடுவதில் வல்லமை பெற்றவையாகவே இருக்கின்றன. அதிலும் மது மாதிரியான திரவ நிலை லாகிரிகள் இது போன்ற காரியங்களை கனகச்சிதமாக செய்து விடுகின்றன.

ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் மகிழ்ச்சி, பழைய காதல்கள், வஞ்சம், ஏமாற்று, துக்கம் இப்படி எதுவானாலும் அது வெளிப்பட்டு விடும். சிலர் அப்படி எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்க பகீரதப் பிரயத்தனப்படுவார்கள். அவர்களோடு எல்லாம் தண்ணியடிப்பதே பெரும் தவறு. எதிரில் இருப்பவனை நம்ப மறுக்கிறவன் தான் ஆழ்மனதில் புதைந்துகிடப்பதை வெளிக்காட்டிக் கொள்ள தயங்குவான்.

ஆனால் என் எதிரில் அமந்திருப்பவரின் கதையே வேறு. வெளியே சொல்லக்கூடாது என்ற எந்தக்கட்டுபாடுகள் ஏதும் அவருக்கு இல்லை. ஆனாலும் சொல்லவேண்டியதை எப்படிச்சொல்லுவது என்ற குழப்பமே அவருக்கு. எப்படி இதை நான் சொல்கிறேன் என்றால்.., நான் இன்று தண்ணியடிக்க உட்கார்ந்ததே, அவர் அழைத்தனின் பெயரில் தான்.

மிச்சர், முறுக்கு, ஆப்பிள், வறுத்த முந்திரி, ஊறுகாய் என எல்லா துணைப் பெருட்களும் விரிக்கப்பட்ட நாழிதளில் விரவிக்கிடந்தது. வெட்டி வைத்திருந்த ஆப்பிள் துண்டை எடுத்து கடித்துக்கொண்டே கேட்டார்.

”ஒனக்கு தெரியுமாடா, ஐ லவ் கிட்ஸ்..”

’தெரியும்’

‘ம்ம்.. என்ன தெரியும் ஒனக்கு..’

அடுத்த ரவுண்ட் ஊற்றும் படி சைகை காட்டினார் கோமதி. நானும் அவருக்கும் எனக்கும் அளந்து ஊற்றினேன். அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை கிளாஸில் சரித்தேன். விளிம்புவரை வந்ததும் நிறுத்தி, அவரைப் பார்த்தேன். கண்கள் சிவந்து போய் இருந்தார். பிளாஸ்டிக் கிளாஸ் அழுந்திவிடாமல் எடுத்து, ஒரு சிப் குடித்துவிட்டு கீழே வைத்தார். முனை கடித்திருந்த ஊறுகாய் பாக்கெட்டை நசுக்கி, விரலில் ஊறுகாய் பட்டவுடன் வழித்து சப்பினார். ஒரு சிகரெட்டை பற்ற வைக்க வாயில் வைத்தபடியே திரும்பவும் கேட்டார்,

‘கமான்.. என்ன தெரியும் ஒனக்கு..?’

‘ஒங்களுக்கு குழந்தைகள்னா பிடிக்கும்னு தெரியும்’

‘ம்..’ சிகரெட்டை பற்றவைத்து ஒரு தம் புகையை உள்ளே இழுத்து, மூக்கு, வாய் வழியாக வெளியே விட்டர். என்னைப் பார்த்து லேசான புன்னகையுடன் சொன்னார்,

‘ பட்.. ஐ ஹேட் கிட்ஸ்..’

இப்போது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. போதை தலைக்கேறியதும், இதுமாதிரியான பலவற்றையும் சமாளிக்க வேண்டியதிருக்கும். நாமும் போதையில் இருந்து விட்டால் பெரியதாக ஒன்றும் தெரியாது. தண்ணியடிக்காத சமயங்களில் தண்ணியடிக்கும் நண்பர்களுடன் உடன் இருந்து பாருங்கள். பல சுவாரஸ்யங்களை உங்களால் காண இயலும். அப்படியான சமயங்களில் சில சமயம் எரிச்சல் மேலிடும். அல்லது, எதிரிலிருப்பவர் மேலே பரிதாபம் கூட தோன்றலாம். ஆனால்.. இன்று ஏன் சரக்கடிக்கனும் என்று சொன்னார் என்பது மட்டும் புரிந்தது.

கோமதி சங்கர் என்னோடு தொலைக்காட்சியில் வேலை ஒன்றாக வேலைப் பார்ப்பவர். வேலையில் எல்லாம் ஆள் கெட்டி. இதே துறையில் பல வருட அனுபவம் உள்ளவர். சினிமாவில் சில ஆண்டுகாலாம் பணியாற்றி விட்டு, பிறகு தொலைக்காட்சிக்கு வந்தவர்.

’சினிமாவுல நுழையிறது எவ்வளவு கஷ்டமோ, அதவிட கஷ்டம், ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி, கதையை போணி பண்ணுறது தான்..”ன்னு அடிக்கடி சொல்லுவார். அந்த திறமை தன்னிடம் இல்லாததால் தான் தான் தொலைகாட்சி நோக்கி வரவேண்டியதாகி விட்டது என்பார்.

என் அலுவலகத்தில், எந்த நிகழ்ச்சிக்கும் எனாக்மெண்ட் மாதிரியான சித்தரிக்கப்பட்ட காட்சிகள் எடுக்கவேண்டும் என்றால் மற்ற நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் கோமதியிடம் தான் போய் நிர்ப்பார்கள். அவருடைய கிரியேட்டிவ் அறிவும் அற்புதமானது.

காட்சிகளை திட்டமிடுவதாகட்டும், கோமரா கோணம் சொல்லுவதாகட்டும் எல்லாமே மிகவும் சிறப்பாக இருக்கும். உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை நூல்களைத் தேடித்தேடி வாசிப்பதில் பெரிய ஆள். ஆனால் பெரியதாக ஏதும் எழுதும் வழக்கம் எல்லாம் அவருக்கு இல்லை. இரண்டொரு கட்டுரைகளும், சில சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். அதுவும் குழந்தைகள் இலக்கியம் தொடர்பானது.

தமிழ்நாட்டின் இன்றும் பெரிய அளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகள் நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்தவர். இப்போது எங்கள் தொலைக்காட்சியில் வந்து கொண்டிருக்கும் குழந்தைகள் தொடர்கள் இரண்டுக்கு இவன் தான் தயாரிப்பாளர். ஒன்று பிக்ஷன். இன்னொருன்று நான்-பிக்ஷன்.

நேரடியாக அறிவுரை சொல்லாமல், அனுபவங்கள் மூலம் அறிவு பெறுவது போன்ற கதை. குழந்தைகளோடு, ஒரு அனிமேசன் கேரெக்டரும் உடன் வந்து அசத்தும் படியான தொடர் அது. 24மணி நேர குழந்தைகள் சானல் இருந்த போதிலும் அவற்றின் ஒட்டு மொத்த ஜி ஆர் பி ரேட்டிங்கை இந்த ஒரு தொடர் மூலம் அள்ளிக்கொண்டு வந்து விட்டார் கோமதி.

இன்னொரு நிகழ்ச்சிகள், அறிவியலை மையப்படுத்திய செயல்முறை நிகழ்ச்சி. குழந்தைகளைக் கொண்டே செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

பொதுவாக எல்லா பிக்ஷன் நிகழ்ச்சிகளை வெளித்தயாரிப்பாளரிடம் கொடுத்து விடுவார்கள். ஆனால் குழந்தைகள் நிகழ்ச்சி என்பதால் கோமதி வெளியே விடமாட்டார். தனக்கு கீழ் இருக்கும் அஸோசியட்டுகளை கசக்கிப் பிழிந்து விடுவார். எப்படியெல்லாமோ யோசித்து, நிகழ்ச்சிகளை சுவாரஸ்யமாக்குவதில் வல்லவர்.
குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது என்பது மிகுந்த மகிழ்ச்சியைக்கொடுக்கக்கூடியதாக இருக்கும். அவர்களின் மழலையும், எதையுமே தெரிந்துகொள்ளும் ஆர்வமும், யாரும் கேமராவை பார்க்கக்கூடாது என்று சொல்லிவிட்டு, ஒளிப்பதிவை தொடங்கிய ரெண்டாவது நிமிடம்.. யாரவது ஒரு குழந்தை கேமராவை பார்த்துவிடும். மானிடர் பார்த்துக்கொண்டிருக்கும் கோமதி குதியாட்டம் போட்டு கத்துவார்.

சில நேரங்களில் ஒரு குழந்தை ஏதாவது செய்துகொண்டிருப்பதை படமாக்கிக்கொண்டிருக்கும் போது, இன்னொன்று குறுக்கே வந்து அடிதடியில் இறங்கி விடும். உண்மையில் குழந்தைகளை அதன் போக்கில் தான் விடவேண்டும். அவர்களை படம்பிடிக்க நினைத்தால் எல்லாம் முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். ரொம்பவுமே சிரமான சவாலான காரியம் தான் குழந்தைகளை மையம்கொண்ட நிகழ்ச்சிகள் தயாரிப்பது.

வேலைப் பளு அதிகமிருந்தாலும் எப்படித்தான் சமயம் ஒதுக்கி, கதை வசனம் எல்லாம் எழுதுவாரோ தெரியாது. வாராவாரம் ஒரு ட்விஸ்ட் நிச்சயம் இருக்கும். குழந்தைகளுக்கான சீரியல் என்றாலும் ஜி.ஆர்.பி-யில் நிகழ்ச்சியை பார்க்கும் மக்களின் வயது கணக்கைப் பார்த்தால், எல்லா வயதினரும் இருந்தார்கள். அதனால் தானோ என்னவோ, நிகழ்ச்சி பிரபலமாகி இருந்தது.

’இன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுமா ஒனக்கு?’

‘என்னன்னு முழுசா தெரியாது, ஆனா பாஸ் ஏதோ சத்தம் போட்டதாக பசங்க சொன்னாங்க.. என்ன ஆச்சுண்ணே..?’

‘சூட்டிங்க் நடந்துகிட்டு இருக்குறப்ப.. ஒரு பையன் கீழே விழுந்துட்டான், அவன் எழுந்திரிக்கிறதுக்குள்ள, அவனோட பேரன்ட்ஸ் செட்டுக்குள்ள ஓடி வந்துட்டாங்க.. நான் கொஞ்சம் அப்செட் ஆகி, வழக்கம் போல கத்திட்டேன்.. அவங்க பாஸுக்கு பேமிலி பிரண்ட்டாம்.. குழந்தைங்க கிட்ட எப்படி நடந்துகிடணும்னு மொதல்ல கத்துக்ககுங்க.. அது இதுன்னு திட்டிட்டார்ரா.., எனக்கு தெரியாதா.. எப்படி நடந்துக்கிடணும்னு..’ சொல்லும் போதே கோமதியின் குரல் பிசிறடித்தது.

‘பெத்தவய்ங்களுக்கு கொஞ்சம் பதறத்தானே செய்யும்.. நீங்க கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்..’

‘ஏண்டா ஏதோ இவனுங்க மட்டும் தான் ’நோவு’கண்டு பெத்த மாதிரி சும்மா சீன் போடுறாய்ங்க..’

‘இது தாண்ணே உங்க பிரச்சனையே.. ஏற்கனவே நீங்க குழந்தைங்க கிட்ட ரஃப்பா நடந்துகிறதா.. புகார் இருக்கு. ஒங்களுக்கு குழந்தைல நேசிக்கவே தெரியலண்ணே.., முன்னாடி எல்லாம் ஒவ்வொரு ஷாட்டுக்கு முன்னாடியும் குழந்தைகளுக்கு சாக்லேட், பிஸ்கட் அது இதுன்னு எல்லாம் கொடுத்து தான் சூட் போறது வழக்கம். அதையும் நீங்க வந்து மாத்தீட்டீங்க.. உங்களுக்கு குழந்தைங்க கிட்ட எப்படி நடந்துக்கிடணும்னே தெரியலண்ணே. அதைவிட குழந்தைகளோட பேரன்ஸ்கிட்ட எப்படி நடந்துகிடணும்னு தெரியுறதில்ல.. இவ்வளவு நல்லா நிகழ்ச்சிகள் கொடுதுட்டு, நீங்க திட்டு வாங்குனதை நினைச்சா.. எனக்கே பாவமா இருக்குண்ணே..’

ரொம்ப நாளாக மனசுக்குள் கிடந்த விசயத்தை, போதையை சாக்காக வைத்து, இறக்கி வைத்து விட்டேன். சில குழந்தைகளை பார்த்த மாத்திரத்திலேயே மனசு லேசாகிப் போகும். அப்படியே அள்ளி அணைத்து முத்தமிடத்தோன்றும். ஆனால் அந்த மாதிரி சமயங்களில் கூட இவர் இறுக்கமாக இருப்பதை பார்த்திருக்கிறேன். இத்தனை குழந்தைகள் நிகழ்ச்சி நடத்தி இருந்தாலும், ஒரு நாள்கூட ஒரு குழந்தையைக்கூட இவர் கொஞ்சிப் பார்த்ததில்லை.

இப்படித்தான் கடந்த வாரம் வந்த ஒரு அழகான குழந்தையை தூக்கி கொஞ்சிக்கொண்டிருந்தான் என்பதற்காக, ஜோசப்பை, சூட்டிங் நடந்த வந்தியா, ஆயாவேலை பார்க்க வந்தியா என்று சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தார். அவன் அடுத்த ரெண்டு நாளைக்கு ஆபிஸ் பக்கமே வரவில்லை.

‘எதுக்காகவும் எவனும் என்னிடம் பரிதாபப்பட வேண்டாம்.. நீ கெளம்பு..’

‘இல்லண்ணே.. நான் சொல்ல வந்தது என்னென்னா..’ பேசாமல் இருக்கும் படி சைகை செய்தார்.

எதுவுமே பேசாமல் தட்டில் இருந்த வறுத்த முந்திரியை எடுத்து சாப்பிட்டார். அடுத்த சிகரெட்டை பற்ற வைத்தார். என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரின் பார்வை எனக்கு என்னவோ போல் இருந்தது. அவரைப் பார்ப்பதை தவிர்த்து, அடுத்த ரவுண்டுக்கு கிளாசில் ஊற்றினேன். அடுத்தடுத்த இரண்டு ரவுண்டுகளில் இருவருமே எதுவும் பேசவில்லை.

‘டேய்.. நான் எந்த குழந்தையையுடனும் இணக்கமாக இல்லாமல் இருப்பதுக்கு எல்லாம் ஒரு காரணம் இருக்குடா.. இந்த ஒலகத்துல என்னையப் பார்த்து எவனும்..’ பேசமுடியாமல் அழுகை அவரது தொண்டையை அடைத்தது. ’சரி விடு, அதெல்லாம் ஒனக்கு இப்ப புரியாது, நீ சின்னப்பையன். கிளம்பு.. காலையில் சூட்டிங்க் இருக்கு’ என்று என்னை புறப்படும்படிச் சொன்னார்.

எனக்கு என்னவோ போல் இருந்தது. அவரின் துக்கத்தை சொல்லி, தேற்றிக்கொள்ளலாம் என்று நினைத்து, என்னை அழைத்திருபாராக இருக்கும். ஆனால்.. அவரை பேச விடாமல் நான் முந்திக்கொண்டு, அதிகப்பிரசங்கி தனமாக பேசியதால்.. எதையோ சொல்ல நினைத்து, முடியாமல் முழுங்குகிறார். வழக்கம் போல கொஞ்சம் அவசரப்பட்டு பேசிவிட்டேனோ என்ற குற்ற உணர்ச்சி என்னுள் எழுந்தது. ஆறு, ஏழு ரவுண்டுக்கு பிறகும் அவரை, என் பேச்சு காயப்பத்தி இருப்பதாக உணர முடிந்தது.

‘சரிண்ணே, சாப்பிட்டு படுங்க.. நான் என்னோட அறைக்கு போறேன்’ என்று என் அறைக்கு வந்து படுத்துவிட்டேன். மறுநாள் சூட்டிங் ஸ்பாட்டில் வழக்கம் போல, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். முதல்நாள் இரவில் நான் பேசியதை காட்டிக்கொள்ளாமல் இருந்தார். ஒரு வேளை மறந்து போய் இருக்கலாம் என்று தோன்றியது.

திடீரென ஒரு நாள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு போய்விட்டார். ஏதோவொரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகச் சொன்னார்கள். கோமதியை நான் நீண்ட நாட்களுக்கு பார்க்க வில்லை. சமீபத்தில் தான் எக்மோர் ரயில் நிலையத்தில் அவரைப் பார்த்தேன். அதுவும் குடும்பத்தினரோடு பார்த்தேன். அவர் என்னை கவனிக்க வில்லை. அதுவும் ஒரு வகையில் நல்லதாகவேபட்டது. அவரின் கண்ணில் படாமல் மறைந்து நின்றுகொண்டேன். அவர்கள் என்னை கடந்து போனதும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

ட்ராலி வடிவ பெட்டியை கோமதியின் மனைவி இழுத்துக்கொண்டு நடக்க, சூழலின் பிரக்ஞையற்று, சக்கர நாற்காலியில் தலை சாய்ந்து அமர்ந்து இருந்தான், விழிகள் பெரியதாக இருந்தது. ஆனால் பார்வை எங்கோ இருந்தது. வாய் கோணி இருந்தாலும் அதில் ஒரு புன்னகை ஒட்டி இருந்தது. கைகளை அசைத்து ஆட்டிக்கொண்டிருக்கும் தன் மகனை தள்ளியபடியே பின் தொடர்ந்துகொண்டிருந்தார் கோமதி.

– ஜனவரி 28th, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *