பொய்யாய்ப் பழங்கதையாய்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 8,933 
 
 

“ஏம்மா, நீங்க படிக்கும் போதும் ஸ்பைடர் மேன் பாத்தேளா டிவில?” மூன்றாவது படிக்கும் ஆனந்த் கேட்கிறான்.

எனக்குச் சிரிப்பு வருகிறது.

“போடா! அப்பல்லாம் டிவியே கிடையாது”.

“டிவி கிடையாதா? நிஜம்மாவா?”

குழந்தை அகல விழிக்கிறது. அவனால் நம்ப முடியவில்லை. நேற்றைய நிஜம் இன்று சந்தேகத்துக்கிடமாகி விட்டது.

எங்களுக்கெல்லாம் அன்று இவ்வளவு பொழுதுபோக்கு வசதிகள் ஏது?

அப்பா ‘கல்கி’ மட்டும்தான் வாங்குவார். வியாழக் கிழமை இரவு எப்போது வரும் என்று காத்திருப்போம். போஸ்ட்மேன் நேரே மில்லில் போய்க் கொடுத்து விடுவான். மற்றக் கடிதங்கள் வீட்டு அட்ரசுக்கு வந்தாலும் கல்கி மட்டும் மில்லுக்குப் போய் விடும். அப்படி ஒரு ஏற்பாடு போலிருக்கிறது. ஆனால் அப்பா நிறைய வியாழன்களில் வெறும் கையுடன்தான் வருவார்.

“தண்டு வந்தான். எடுத்துண்டு போயிட்டான்” என்பார். எங்கள் முகம் தொங்கிப் போகும்.

“போங்கோடி! வேலையத்தவளுகளா! பொம்பளைக் கொழந்தேளுக்குக் கதை புஸ்தகம் என்னத்துக்கு?” என்பார்.

காலையில் வீட்டுக்கு வரும் தினமணியும் அப்பாவோடு சேர்ந்து காலை எட்டு மணிக்கெல்லாம் மில்லுக்குப் போய் விடும். திரும்பி வராது.அதையும் தண்டு தான் எடுத்துப் போவாரோ என்னவோ தெரியாது.

எங்களுக்குக் கல்கியை உடனே கிடைக்காமல் செய்யும் தண்டு என்கிற தண்டபாணி மாமாவின் மேல் அசாத்தியக் கோபம் வரும்.

“ஓசித் தண்டு, தண்டத் தண்டு” என்றெல்லாம் மௌனமாகத் திட்டிக் கொள்வோம். அப்பாவின் நெருங்கிய நண்பரான தண்டபாணி மாமாவுக்கும் அப்பா வயது தான் இருக்கும். ஒழிந்தாற்போல் ஞாயிற்றுக் கிழமை தான் திருப்பி தருவார்.

அதில் வரும் தொடர் கதைகளையெல்லாம் அப்பாவுக்குத் தெரியாமல் கிழித்து எடுத்து வைப்போம். அண்ணா திருச்சியிலிருந்து வரும் பொழுது கொடுத்தனுப்புவோம். அவன் பைண்ட் செய்து கொண்டு வருவான். அப்பா கண்ணில் பட்டுவிட்டால் கஷ்டம்தான்.

“இதெல்லாம் என்னடா தண்டச் செலவு!” என்பார்.

அண்ணா சிரித்துவிட்டு பேசாமல் இருந்து விடுவான். அண்ணாவுக்கு அப்பாவிடம் அவ்வளவாக பயமில்லை என்றுதான் தோன்றும். அண்ணாவுக்குப் பல்லெல்லாம் அழகாக வரிசையாக இருக்கும். சிரிக்கும் போது அழகாக இருக்கும்.

சனி ஞாயிறில் ரேடியோவில் தவறாமல் கேட்கும் முத்துக் குவியல், பாப்பா மலருக்கு நாங்கள் ஏதாவது எழுதி அனுப்ப வேண்டுமென்றாலும் எங்களுக்கு அண்ணா உதவிதான் வேண்டும். அதில் கேட்கும் விடுகதைகளுக்கு விடை எழுத வேண்டும். ஏதாவது நாலுவரிக் கவிதையோ, கட்டுரையோ, விமரிசனமோ எழுத வேண்டும். எங்களுக்கு அந்த நாலாவது, ஐந்தாவது படிக்கும் வயதில் இப்படிப் பல ஆர்வங்கள்.

எங்கள் அம்மாதான் இதற்கெல்லாம் அடிப்படை ஊக்கம் கொடுத்தது. முடிந்த போதெல்லாம் எங்களோடு சேர்ந்து குழந்தைகள் நிகழ்ச்சியைக் கேட்பாள். அதுதான் எங்களுக்குத் தலை பின்னிவிடும் நேரம். நாங்கள் மூன்று சகோதரிகளும், ஒரு தம்பியும் எண்ணெய் பாட்டிலும் சீப்புமாக உட்கார்ந்து விடுவோம்.

மழைக்குக் கூட பள்ளிக்கு கூடத்தில் ஒதுங்காத அம்மா எங்களோடு சேர்ந்து நாங்கள் படிக்கும் பாடத்தைக் கேட்டுப் படித்த அம்மா, சின்னச் சின்ன வரிகளில் அழகாகக் கவிதை சொல்வாள். விடுகதைகளை விடுவிப்பாள். அதற்கென்று ஒரு நோட்டுப் போட்டு எல்லாவற்றையும் எழுதச் சொல்வாள்.

அண்ணா அதையெல்லாம் பார்த்துவிட்டு ஒரு நாள் வானொலி நிலையத்திற்கு எப்படிக் கடிதம் எழுதுவது என்று சொல்லிக் கொடுத்தான்.

“அன்புள்ள வானொலி அண்ணா!” என்று தொடங்கும் அந்தக் கவரிங் லெட்டரைப் பார்த்துத்தான் நாங்கள் ஒவ்வொரு முறையும் கடிதமும், விடைகளும் எழுதுவோம். மறுவாரம் அகர வரிசையில் ஊர் பெயரையும் எங்கள் பெயர்களையும் ரேடியோவில் படிக்கக் கேட்கும்போது ஏதோ கோட்டையைப் பிடித்தது போல் குதூகலிப்போம். துள்ளிக் குதிப்போம். அம்மாவுக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும்.

“இல்லையா திவாகர்?”, “ஆமாம் ரேணுகா” என்று அடிக்கடி கூறிக் குழந்தைகள் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கும் குழந்தைகள் எங்கள் மனங்களைக் கவர்ந்தவர்கள். அவர்களால் படிக்கப் பெறும் எங்கள் பெயர்கள். கேட்க வேண்டுமா, சந்தோஷத்திற்கு? அந்தக் குழந்தைகள் நிகழ்ச்சியில் பாடும்
க.ஜெயஸ்ரீயின் குரலில் மயங்கியிருப்போம்.

இதெல்லாம் எந்த அளவுக்கு அப்பாவுக்குத் தெரியும் என்றோ, அவரை எந்த அளவுக்கு பாதித்தது என்றோ எங்களுக்குத் தெரியாது. அப்பாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வம் கூட எங்களுக்கு கொஞ்சமும் இருந்ததில்லை. தெரிந்திருக்கும். அம்மா சொல்லியிருப்பாள். வெளியில் காட்டிக் கொள்ள விட்டாலும் நிச்சயம் மனசுக்குள் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பர் என்று இப்போது தோன்றுகிறது.

“ஏன், உங்கள் அப்பாவிடம் சொன்னால் என்ன?” என்று கேட்கிறார்கள் குழந்தைகள்.

தங்கள் தாத்தாவையே பார்த்திராத குழந்தைகள் இவர்கள். அவரைப் பற்றி என்ன சொல்ல? எங்களுக்கு அப்பா என்றால் சிம்ம சொப்பனம். ஆனால் அது இவர்களுக்குச் சொன்னால் புரியாது. இவர்களுக்கெல்லாம் அப்பா என்றால் தன் அப்பா தான் தெரியும். மாதா மாதம் காமிக்ஸ் வாங்கித் தரும் அப்பா. வீடியோவில் பைட்டிங் பிக்சர் வாங்கிப் போடும் அப்பா. அவ்வப்போது ஹோட்டலுக்கு அழைத்துப் போகும் அப்பா.

இந்த அப்பாவோடு அந்தக் காலத்து எங்கள் அப்பாவை ஒப்பிட முடியுமா? குடுமியும், கடுக்கனுமாகக் கையில் குடையும், முரட்டுச் செருப்பும்… பார்த்தாலே பயமாயிருக்குமே! இப்போது, “ஆகா! அப்பா என்ன ஸ்மார்ட்டா இருக்கார்! இந்த மாதிரி பெல்ட் வேண்டாம்ப்பா. வேறே ஷூ போட்டுக்கோ. இன்னும் நன்றாயிருக்கும்”, என்றெல்லாம் பெண் தன் அப்பாவிடம் கமெண்ட் அடிக்கிறாள். “ஏம்பா! சாலரி வந்துடுத்தா” என்று கூடக் கேட்கிறாள். இவர்களிடம் எப்படி எங்கள் அப்பாவைப் பற்றிச் சொல்வேன்?

அப்பாவை நாங்கள் “அப்பா!” என்று அழைத்துப் பேசியதே இல்லை. அருகில் போய் நிற்போம். “பாட்டி வரச் சொன்னா” என்போம். இல்லையா? பிராக்ரஸ் ரிப்போட்டை வாயை மூடிக் கொண்டு நீட்டுவோம். வேறு ஒன்றுக்கும் அப்பாவிடம் எங்களுக்கு வேலை இருந்ததில்லை. அப்பாவும் எங்களை எப்போதாவது முதுகு சொறிந்துவிடக் கூப்பிடுவதோடு சரி.

அப்பா வீட்டில் இருக்கும் நேரங்களில் நாங்கள் பேசிக் கொள்வதற்கோ, சத்தமாகச் சிரிப்பதற்கோ தடை விதிக்கப் பட்டிருந்தது. அது எப்போது எழுதப்பட்ட சட்டமோ தெரியாது. எங்கள் பெரியக்கா, அண்ணா முதல் வழி வழியாகக் கடைப் பிடிக்கப்படுவது அது. கதை புஸ்தகம் படிப்பது, ரேடியோ கேட்பதும், அண்டை அயல் வீட்டுக்குப் போவது இதெல்லாம் அப்பா கண்முன் கூடவே கூடாது.

“ஏம்மா, இப்பகூட ரேடியோவில் முத்துக் குவியல், பாப்பா மலர் எல்லாம் வருதா?” என்று கேட்கிறான் குழந்தை.

யாருக்குத் தெரியும்? திருமணத்திற்கு முன் வரை ரேடியோவும் காதுமாக இருந்தவள், திருமணமாகிக் கணவருடன் வேற்று மாநிலத்திற்கு குடித்தனம் வந்தபின், புதிய இடம், புதிய மண வாழ்க்கை, போதும் போதாததற்குப் புதிய பாஷை, இத்தனையோடும் போராடி ஸ்திர படுவதற்குள் நான் எனக்கே புதியவளாக மாறிப் போயிருந்தேன்.

இந்த அழகில் ரேடியோவாவது ஒன்றாவது? இதையெல்லாம் குழந்தைகளிடம் சொல்ல முடியுமா, என்ன? ஒருவேளை சொன்னாலும், உடனே அவர் சொல்லி விடுவார், “உன் பழம் படலத்தைக் குழந்தைகளிடம் அவிழ்த்து விடாதே ” என்று.

அவருக்கு மட்டும் பழைய நினைவுகள் இருக்காதா, என்ன? நிச்சயம் இருக்கும். ஆண் குழந்தைகளுக்கே உரிய விஷமங்கள் எத்தனை இருக்காது? ஆற்றங்கரையில் குதித்து நீந்தியதும், மாந்தோட்டத்தில் மாங்காய் திருடி அடிபட்டதும், வாராவாரம் விளக்கெண்ணைக் கஷாயம் குடித்ததும் யாருக்குத் தான் இருக்காது?

ஆனால் கிராமாந்திர நினைவுகளையெல்லாம் பெரிதுபடுத்திப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்குச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? வேறு வேலை இல்லையா? இதெல்லாம் கூட ஒரு விஷயமா, என்ன? என்ற அலட்சியம். சிலர் மறந்து விடக் கூடும். வேறு சிலர் லட்சியம் செய்யும் மாட்டார்கள் போலும். அவர்கள் பாடு தேவலாம். இப்படி என்னைப் போல் இரண்டுங்கெட்டானாகக் திண்டாட வேண்டியிருக்காது.

எங்கள் அம்மா இப்படியெல்லாம் தன் பிள்ளைப் பிராயத்துச் சங்கதிகளைக் குழந்தைகளிடம் சொன்னதுண்டா என்று யோசித்துப் பார்க்கிறேன்.

பாவம், அம்மாவுக்கு ஏது நேரம்? கோபக்கார அப்பா. அதை விடக் கண்டிப்பான பாட்டி. நசநசவென்று சந்தானம். ஒன்று மாற்றி ஒன்று ஒண்ணுக்குப்போவதும், கொல்லைக்குப் போவதும், ஆளும், படையும், மாடும், கொல்லையும்….. ஓய்ச்சல் ஒழிவு இருந்திருக்குமா, சந்தேகம்தான். போதாக குறைக்கு வந்து கொண்டும், போய்க் கொண்டும் இருக்கும் அத்தைகள், பெரியப்பா, சித்தப்பா,விருந்தாடிகள்….கேட்க வேண்டுமா வேலைக்கு?

பேருக்குத் தான் மில் அய்யர் வீட்டு அம்மா! வேலை மட்டும் நெட்டி முறியும். இந்த அழகில் எங்களை எல்லாம் சேர்த்து வைத்துக் கதைகள் சொல்ல எப்படி முடியும்? ஆனால், பிள்ளை பெறும் படலம் முடிந்து நாங்கள் கொஞ்சம் பெரியவர்களாகிப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பின் அம்மாவுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. எங்களோடு கழிக்கும் நேரங்களும் அதிகமாயின.

எங்களுக்குத் தெரிந்து கதை சொன்னதெல்லாம் எங்கள் பாட்டிதான். பாட்டி சொன்ன “அஜாம்மாளம்” கதை இப்போது சரியாக நினைவு இல்லை.

ஆனால் எங்களிடம் கதை சொல்லி விட்டுப் பாட்டி பட்டபாடு மட்டும் நினைவிருக்கிறது. பாட்டி நார் மடிப்பு புடவை கட்டியிருப்பாள். தலையை மழித்து முட்டாக்கு போட்டிருப்பாள். சட்டை கிடையாது. காவிக் கலர் புடவை. இரண்டு தோயலுக்குப் பின் சந்தனாக் கலருக்கு வெளுத்திருக்கும். பாட்டிக்கென்று ஒரு பெரிய பெஞ்சும், மடிப் பாயும் உண்டு. அதில் படுத்துக் கொண்டு பாட்டி எங்களுக்கு கதை சொல்வாள்.

கதை முடிந்து விட்டது என்று சொன்ன போதும், விடாமல், “அப்புறம் அது என்னவாயிற்று? இது என்னவாயிற்று?” என்று ஆயிரம் கேள்வி கேட்போம்.

“அது அப்படித்தான். அவ்வளவுதான்,” என்று அலுத்துக் கொள்வாள் பாட்டி. “ஆனாலும் உங்களுக்கு மட்டு, மரியாதை தெரியலைடி குழந்தேளா! நாங்களானா இப்படிக் கேள்வி மேல் கேள்வி கேட்க மாட்டோம். பெரியவா சொன்னாள்னா சரி தானாக்கும்னு இருந்துடுவோம்,” என்பாள்.

இப்போது என் குழந்தைகளும் அப்படித்தான் கேட்கிறார்கள். எனக்குத் தான் பதில் சொல்லத் தெரியவில்லை. “பாவம், இந்த அம்மாவுக்கு ஒன்றும் தெரியவில்லை,” என்பது போல் பார்க்கிறார்கள்.

அவர்கள் பாடத்தில் கேட்கும் சந்தேகங்களுக்கு நான் சொல்லும் விளக்கங்கள் கூட அவர்களுக்குத் திருப்தியாக இருப்பதில்லை. நான் அறுநூற்றுக்கு ஐநூற்று மூன்று மார்க் வாங்கியதில் அவர்களுக்கு எந்த மலர்ச்சியும் இல்லை.”ப்பூ! இவ்வளவுதானா?” என்ற பாவனை, “என்னவோ ஸ்கூல் பர்ஸ்ட் வாங்கினேன் என்கிறாய், இது கூடாது தெரியவில்லையே!” என்ற பரிதாபப் பார்வை.

ற வுக்கும், ர வுக்கும் வித்தியாசம் தெரியாத எங்கள் அம்மா, ற் குப் பிறகு ப் போடும் எங்கள் அம்மா, எங்களுக்கு வீட்டுக்கணக்குக்கு ‘வழி’ எழுதச் சொல்லித் தருவாள். நாங்கள் படிக்கும் அறிவியல் பாடங்களில் மனித உடலைப் பற்றியும், தாவரங்களை பற்றியுமெல்லாம் படிக்கும் போது வியந்தும், மலர்ந்தும் கேட்பாள்.

“ஓகோ! அப்படியா?” என்பாள். “இது ஏன் இப்படி?” என்று எங்களிடம் சந்தேகம்கூடக் கேட்பாள். தினமும் பள்ளியில் படித்தவைகளை அம்மாவுக்குச் சொல்வதில் எங்களுக்கு அசாத்திய மகிழ்ச்சி. எங்கள் முனியப்ப சாரையும், அலமேலு டீச்சரை பற்றியும் கூட அம்மாவுக்குத் தெரிந்து போனது. எங்களுக்குச் சரியாக வராத டிராயிங்குகளைக் கை நடுக்கத்தோடு பயந்து, பயந்து அம்மா போட்டுத் தருவாள். ரொம்ப அழகாக இருக்கும்.

இப்போதோ என் குழந்தைகள், நாங்கள் படிக்காத அம்மாவுக்குக் கொடுத்த மதிப்பில் பத்தில் ஒரு பங்கைக்கூட எனக்குக் கொடுப்பதில்லை. ஏதாவது நானாகச் சொல்லித் தர வந்தாலும், “இதெல்லாம் உனக்குப் புரியாது. நீ தமிழ் மீடியம்,” என்று இடிக்க வேறு செய்கிறார்கள்.

ஆனால், பாவம். என் அருமைக் குழந்தைகளே! இன்று நீங்கள் கண் முன்னால் பார்க்கும் வீடும், ரோடும், டிவியும், அம்மாவும் நாளை உங்களுக்குத் பழங்கையாய்ப் போய் உங்கள் சந்ததியால் சந்தேகத்தோடு கேட்கப்படுவார்களாடா, கண்களா! ஆனால் அதை இப்போது சொன்னால் உங்களுக்குத் புரியாதே! ஏனென்றால் எனக்கும் இப்போது தானே புரிந்திருக்கிறது!

– “ஹைதராபாத் எழுத்தாளர்கள் சிறுகதைகள்” தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதை – காவ்யா வெளியீடு – (1990).

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *